Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
அமெரிக்கா: மார்க் ஜூக்கர்பெர்க் பெற்றோர்களிடம் மன்னிப்பு கேட்டது ஏன்? என்ன நடந்தது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

5 மணி நேரங்களுக்கு முன்னர்

அமெரிக்க செனட் சபையில் நடத்தப்பட்ட தீவிர விசாரணையின்போது, சமூக ஊடகங்களால் தங்கள் குழந்தைகள் பாதிக்கப்படுவதாகப் புகாரளித்த குடும்பத்தினரிடம், மெட்டா நிறுவன தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் மன்னிப்பு கோரினார்.

இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கை நிர்வகிக்கும் ஜூக்கர்பெர்க், புகாரளித்த குடும்பத்தினரை நோக்கி நீங்கள் பட்ட துயரத்தை வேறு யாரும் படக்கூடாது என்றார்.

மார்க் ஜூக்கர்பெர்க் மற்றும் டிக்டாக், ஸ்னாப், எக்ஸ், டிஸ்கார்ட் நிறுவனங்களின் தலைவர்களும் செனட் சபையின் இரு கட்சிகளைச் சேர்ந்த செனட்டர்களால் கிட்டத்தட்ட நான்கு மணிநேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

குழந்தைகள் பாதுகாப்பு குறித்து ஆன்லைன் தளங்களில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பதை அறிய அமெரிக்க சட்டமியற்றுபவர்கள் விரும்பினர்.

சமூக ஊடகங்களில் பதிவிடப்படும் விஷயங்களுக்கு அந்தந்த நிறுவனங்களே பொறுப்பேற்கும் விதமாக ஒரு சட்டத்தை இயற்ற தற்போது அமெரிக்க காங்கிரஸ் பரிசீலித்து வருகிறது.

கடந்த புதன்கிழமை அன்று தொழில்நுட்ப நிறுவன தலைவர்களைக் கேள்வி கேட்பதற்கான ஓர் அரிய வாய்ப்பு அமெரிக்க செனட்டர்களுக்கு கிடைத்தது.

 

அமெரிக்க செனட் சபை விசாரணை

அமெரிக்க செனட் சபை விசாரணை, மெட்டா நிறுவன தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க்

மார்க் ஜூக்கர்பெர்க் மற்றும் டிக்டாக் தலைமை நிர்வாக அதிகாரி ஷௌ ஜி செவ் ஆகியோர் தானாக முன்வந்து சாட்சியமளிக்க ஒப்புக்கொண்டனர். ஆனால் ஸ்னாப், எக்ஸ் (முன்னர் ட்விட்டர்), மெசேஜிங் தளமான டிஸ்கார்டின் தலைவர்கள் முதலில் செனட் சபை விசாரணைக்கு வர மறுத்தனர். பின்னர் கண்டிப்பாக விசாரணைக்கு வர வேண்டுமென அரசு ஆணைகள் அவர்களுக்கு அனுப்பப்பட்டன.

விசாரணையின்போது ஐந்து தொழில்நுட்ப தலைவர்களின் இருக்கைகளுக்குப் பின்னால், சமூக ஊடக பதிவுகளின் விளைவாக தங்கள் குழந்தைகள் தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொண்டதாக அல்லது தற்கொலை செய்துகொண்டதாகப் புகாரளித்த குடும்பங்கள் அமர்ந்திருந்தனர்.

நிறுவன தலைவர்கள் உள்ளே நுழைந்தபோது அவர்களிடம் இருந்த எரிச்சல், சட்டமியற்றுபவர்கள் நிறுவன தலைவர்களிடம் கடினமான கேள்விகளைக் கேட்டபோது கைதட்டியது என அந்தக் குடும்பங்கள் தங்கள் உணர்வுகளை முழுமையாக வெளிப்படுத்தினர்.

பெரும்பாலும் விசாரணையின்போது ஆன்லைன் பாலியல் சுரண்டலில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது குறித்து அதிக கேள்விகள் கேட்கப்பட்டன. ஐந்து சக்தி வாய்ந்த நிறுவனங்களின் நிர்வாகிகள் எடுத்துக்கொண்ட உறுதிமொழியை சாதகமாகப் பயன்படுத்தி செனட்டர்கள் பல்வேறு கடினமான கேள்விகளையும் கேட்டனர்.

சீன நிறுவனமான பைட் டான்ஸுக்கு சொந்தமானது டிக்டாக். அதன் தலைவர் ஷௌ ஜி செவ்விடம் அமெரிக்க பயனர்கள் குறித்த தரவுகள் சீன அரசாங்கத்துடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறதா என்று கேட்கப்பட்டது, அதை அவர் மறுத்தார்.

அமெரிக்க செனட் சபை விசாரணை, மெட்டா நிறுவன தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க்
படக்குறிப்பு,

உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் தொழில்நுட்ப நிறுவன தலைவர்கள்

சிங்கப்பூரை சேர்ந்த செவ்விடம், "எப்போதாவது நீங்கள் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருந்ததுண்டா?" என அமெரிக்க செனட்டர் டாம் காட்டன் கேட்டார். அதற்கு செவ் "இல்லை செனட்டர், என் நாடு சிங்கப்பூர்" எனக் கூறினார்.

"நீங்கள் எப்போதாவது சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஏதேனும் தொடர்பில் இருந்ததுண்டா?" என காட்டன் மீண்டும் கேட்டார். அதற்கு செவ், "இல்லை செனட்டர். மீண்டும் சொல்கிறேன், என் நாடு சிங்கப்பூர்" எனக் கூறினார்.

மூன்று இளம் குழந்தைகளின் தந்தையாக, இந்த விசாரணையில் விவாதிக்கப்படும் பிரச்னைகள் "மோசமானவை மற்றும் ஒவ்வொரு பெற்றோரின் கொடுங்கனவாகவும் அவை உள்ளன" என்று தனக்குத் தெரியும் என்றும் செவ் கூறினார்.

சிங்கப்பூரில் உள்ள 13 வயதுக்கு உட்பட்டவர்கள் டிக்டாக் கணக்குகளை உருவாக்குவதைத் தடுக்கும் விதிகளின் காரணமாக, தனது சொந்த பிள்ளைகள் டிக்டாக் பயன்படுத்துவதில்லை என்பதை அவர் ஒப்புக்கொண்டார். காங்கிரஸில் எட்டாவது முறையாக சாட்சியமளிக்கும், மெட்டாவின் தலைமை நிர்வாகி மார்க ஜூக்கர்பெர்க் தான் அதிக கேள்விகளுக்கு உட்படுத்தப்பட்டார்.

"எச்சரிக்கை: குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான உள்ளடக்கங்கள் இதில் இருக்கலாம். ஆனால் பயனர்கள் விரும்பினால் இதைப் பார்க்கலாம்," என்ற ஒரு இன்ஸ்டாகிராம் அறிவிப்பை ஜூக்கர்பெர்கிடம் காட்டி, குடியரசுக் கட்சியின் செனட்டர் டெட் குரூஸ், "மிஸ்டர் ஜூக்கர்பெர்க், நீங்கள் என்ன நினைத்து இதைச் செய்தீர்கள்?" என்றார்.

"இத்தகைய அறிவிப்புக்குப் பின்னால் இருக்கும் அடிப்படை அறிவியலானது, அதைத் தடுப்பதற்குப் பதிலாக, அதை நோக்கிப் பயனர்களை வழிநடத்துவதற்குப் பெரும்பாலும் உதவியாக இருக்கிறது" என்றார். மார்க் ஜூக்கர்பெர்க், "தனிப்பட்ட முறையில் இதை பரிசீலிப்பதாக" உறுதியளித்தார்.

குடியரசுக் கட்சியின் செனட்டர் ஜோஷ் ஹவ்லி உடனான மற்றொரு விவாதத்தின்போது, பின்னால் அமர்ந்திருக்கும் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்க அழைக்கப்பட்டார் மார்க் ஜூக்கர்பெர்க்.

அவர் எழுந்து, பார்வையாளர்களை நோக்கி, "நீங்கள் கடந்து வந்த அனைத்திற்கும் நான் வருந்துகிறேன், இது பயங்கரமானது. உங்கள் குடும்பங்கள் அனுபவித்த துயரங்களை யாரும் அனுபவிக்கக் கூடாது," என்றார்.

 

ஆன்லைன் பாதுகாப்பில் முன்னேற்றம் இல்லாததால் செனட்டர்கள் விரக்தி

அமெரிக்க செனட் சபை விசாரணை, மெட்டா நிறுவன தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க்
படக்குறிப்பு,

டிக்டாக் தலைமை நிர்வாக அதிகாரி ஷௌ ஜி செவ்

தற்போது அமெரிக்க காங்கிரஸில் உள்ள ஆன்லைன் பாதுகாப்பு சட்டத்திற்கு நிறுவனங்களின் அணுகுமுறை என்ன என்பதே இந்த விசாரணையின் முக்கிய அம்சமாக இருந்தது. டிஸ்கார்டின் தலைவர் ஜேசன் சிட்ரான் மற்றும் குடியரசுக் கட்சியின் செனட்டர் லிண்ட்சே கிரஹாம் ஆகியோருக்கு இடையிலான பதற்றமான விவாதத்தில் இது வெளிப்பட்டது.

கிரஹாம், ஆன்லைன் பாதுகாப்பு தொடர்பான காங்கிரஸின் பல மசோதாக்களை பட்டியலிட்டு, சிட்ரான் அவற்றை ஆதரிக்கிறாரா இல்லையா என்று கேட்டார். இந்தக் கேள்வி உட்பட வேறு சில கேள்விகளுக்கும் பதிலளிப்பதில் டிஸ்கார்ட் தலைவர் சிட்ரானுக்கு தயக்கம் இருந்தது.

அதே நேரத்தில் அவர் பதிலளிக்கப் போதுமான வாய்ப்பையும் கிரஹாம் கொடுக்கவில்லை. இறுதியாக "நீங்கள் இங்கே விசாரணையில் இருக்கிறீர்கள். பிரச்னையைத் தீர்க்க இவர்களுக்காக (நிறுவன தலைவர்கள்) நாம் காத்திருந்தால், சாகும் வரை காத்திருக்க வேண்டியது தான்," என்று கிரஹாம் கூறினார்.

விசாரணைக்கு முன்னதாக, மெட்டா புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிவித்தது. சிறார்களுக்கு இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சரில் அந்நியர்கள் யாரும் செய்திகளை அனுப்ப முடியாது என்ற புதிய விதியும் அதில் இருக்கிறது.

சமூக ஊடகத் துறை ஆய்வாளர் மாட் நவர்ரா பிபிசியிடம், "பல அமெரிக்க அரசியல் பிரமாண்டங்கள்" மற்றும் ஜூக்கர்பெர்க் மன்னிப்பு கேட்டதன் மூலம் கிடைத்த சரியான வாய்ப்பு போன்ற பல நிகழ்வுகள் இந்த விசாரணையில் நடந்ததாகக் கூறினார்.

சமூக தளங்களை ஒழுங்குபடுத்துவதற்கு இருதரப்பு சட்ட ஒத்துழைப்பின் அவசியத்தை செனட்டர்கள் ஒப்புக்கொண்ட போதிலும், அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்விக்கான பதில் தெளிவாக இல்லை என்றும் அவர் கூறினார்.

"இதுபோன்ற விசாரணைகளை மீண்டும் மீண்டும் பார்த்துவிட்டோம். அவை பெரும்பாலும், குறிப்பிடத்தக்க அல்லது கணிசமான ஒழுங்குமுறைகளை இதுவரை உருவாக்கவில்லை. நாம் 2024இல் இருக்கிறோம். சமூக ஊடக நிறுவனங்களைப் பொறுத்தவரை, விசாரணைகளின்போது சுட்டிக்காட்டப்பட்டபடி, அமெரிக்காவில் நடைமுறையில் எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை," என்று அவர் கூறினார்.

நிறுவன தலைவர்கள் தங்கள் தளங்களில் உள்ளடக்கத்தைத் தணிக்கை செய்வதற்கு எத்தனை பேரை வேலைக்கு அமர்த்தினார்கள் என்பதையும் வெளிப்படுத்தினர்.

 

'குழந்தைகள் ஆன்லைன் பாதுகாப்புச் சட்டத்தை' நிறைவேற்ற வலியுறுத்தல்

அமெரிக்க செனட் சபை விசாரணை, மெட்டா நிறுவன தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க்

இணையத்தில் மிகப்பெரிய அளவு பயனர்களைக் கொண்டுள்ள மெட்டா மற்றும் டிக்டாக், தங்களிடம் தலா 40,000 உள்ளடக்க மதிப்பீட்டாளர்கள் இருப்பதாகவும், ஸ்னாப் 2,300 என்றும், எக்ஸ் 2,000 என்றும், டிஸ்கார்ட் சிறிய நிறுவனம் என்பதால் "நூற்றுக்கணக்கில்" மட்டுமே மதிப்பீட்டாளர்கள் இருக்கிறார்கள் என்றும் கூறியது.

டிஸ்கார்ட் என்பது ஒரு மெசேஜிங் தளம். இது எவ்வாறு அதன் தளம் முழுவதும் "சிறார் துஷ்பிரயோகத்தை" கண்டறிந்து தடுக்கிறது என்பது குறித்து முன்னர் கேள்வி எழுப்பப்பட்டது. விசாரணைக்குப் பிறகு, அறையில் இருந்த சில பெற்றோர்கள் வெளியே பேரணி நடத்தினர். சமூக ஊடக நிறுவனங்களைப் பொறுப்பேற்கச் செய்யும் சட்டத்தை அவசரமாக நிறைவேற்றுமாறு பலர் சட்டமியற்றுபவர்களுக்கு அழைப்பு விடுத்தனர்.

"நான் நினைத்ததைப் போலவே, இன்று நாம் பேசும் இந்தத் தீங்குகள் தங்கள் குடும்பங்களைப் பாதிக்காது என்று பல பெற்றோர்கள் தொடர்ந்து நினைக்கிறார்கள்," என்று ஜோன் போகார்ட் கூறினார். மே 2019இல் ஒரு டிக்டாக் டிரெண்டில் பங்கேற்றதன் மூலமாகத் தனது மகன் மேசன் இறந்தார் என அவர் கூறினார்.

"இந்தத் தீங்குகள் எங்கள் குழந்தைகளைப் பாதிக்கிறது, எங்களிடம் சாட்சியங்கள் உள்ளன. 'குழந்தைகள் ஆன்லைன் பாதுகாப்புச் சட்டத்தை' சட்டமன்ற உறுப்பினர்கள் நிறைவேற்றுவதற்கான நேரம் இது.

நவம்பர் 2023இல் காங்கிரஸ் சபையில் சாட்சியமளித்த முன்னாள் மூத்த ஊழியர் ஆர்டுரோ பெஜரும் அங்கு இருந்தார். அவர் பிபிசியிடம், "பதின்ம வயதினருக்கான பாதுகாப்பான சூழலை வழங்கும் பொறுப்பில் இருந்து மெட்டா நிறுவனம் தப்பிக்க முயல்கிறது. பதின்பருவ பிள்ளைகள் தாங்கள் சந்தித்த கொடுமைகளைச் சொல்ல அந்தத் தளத்தில் வசதி இல்லை. அது இல்லாமல் பதின்ம வயதினருக்கு மெட்டா எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும்?" எனக் கூறினார்.

இன்றைய விசாரணையின்போது, ஆன்லைனில் பதின்ம வயதினருக்கான பாதுகாப்பான சூழலை ஆதரிக்க "30க்கும் மேற்பட்ட புதிய கருவிகளை" அறிமுகப்படுத்தியுள்ளதாக மெட்டா கூறியது.

https://www.bbc.com/tamil/articles/cek721xpxlno

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.