Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
நீயா நானா: 17 ஆண்டு காலம் ஒளிப்பரப்பாகும் ‘டிவி ஷோ’ அடிக்கடி பேசுபொருளாவது ஏன்?

பட மூலாதாரம்,VIJAY TELEVISION/YOUTUBE

கட்டுரை தகவல்
  • எழுதியவர், அஷ்ஃபாக்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 4 பிப்ரவரி 2024

“அப்பா டீக்கடைல வேலை பாக்குறாங்க... அம்மா பீடி சுத்துவாங்க. எனக்கு பீடி சுத்த அந்தளவுக்கு தெரியாது. டாக்டர் ஆகணும்னு ஆசை. கட் ஆஃப் 196.25 இருக்கு. இப்போ 198 கிட்ட கேக்குறாங்க.”

கடந்த 2016ஆம் ஆண்டு நீயா நானா நிகழ்ச்சியில் சங்கவி இதைச் சொல்லி முடிப்பதற்குள்ளேயே அவரது கண்கள் குளமாகிவிடும். சங்கவியை 2022இல் மீண்டும் நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தது நீயா நானா குழு. அப்போது அவர் பயிற்சி மருத்துவர்.

“இவ்வளவு சிரமத்திலும் ஏன் கட்டாயம் படிச்சிடணும்னு நினைச்சீங்க?” என வினவினார் நெறியாளர் கோபிநாத்.

“படிப்பு ஒன்னுதான் சார் எல்லாருக்கும் கிடைக்குது... ஏழையா இருந்தாலும் பணக்காரரா இருந்தாலும் கல்வி கிடைக்கும். படிச்சா மட்டும்தான் குடும்பம் நல்ல நிலைமைக்கு வரும். நான் படிச்சதால மட்டும்தான் இப்போ என் குடும்பமே நல்லா இருக்கு,” என யோசிக்காமல் பதிலளித்து முடித்தார் மருத்துவர் சங்கவி.

நீயா நானா கடந்த 17 ஆண்டுகளாக தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் டாக் ஷோ. பல முகங்களை இந்த நிகழ்ச்சி வெளிக்கொணர்ந்துள்ளது. சமூக ரீதியான பிரச்னைகளைப் பேசியிருக்கிறது. மிக நுணுக்கமான கருத்துகளும் சிந்தனைகளும் உணர்வுப்பூர்வமான கலந்துரையாடல்களும் பல நேரம் அதிர்வுகளைக் கிளப்பியுள்ளன. அதேநேரம், நீயா நானாவுக்கு எதிர்ப்புக் குரலும் எழாமல் இல்லை.

நீயா நானா இத்தனை ஆண்டுகள் தொடர்ச்சியாக இயங்குவது எப்படி? இந்த நிகழ்ச்சி எப்போதும் பேசு பொருளாவதன் பின்னணி என்ன? விரிவாக அலசுகிறது இந்தக் கட்டுரை.

 

நீயா நானா உருவான கதை

நீயா நானா: 17 ஆண்டு காலம் ஒளிப்பரப்பாகும் ‘டிவி ஷோ’ அடிக்கடி பேசுபொருளாவது ஏன்?

பட மூலாதாரம்,VIJAY TELEVISION/TWITTER

கவனிக்க வைக்கும் இசையுடன் ஒரு ஓபனிங். இன்று எதைப் பற்றி நிகழ்ச்சி விவாதிக்கப் போகிறது என்பதை நறுக்கென எடுத்துச் சொல்லும் நெறியாளர். அதன் பிறகு சூடுபிடிக்கும் விவாதம். இதுதான் நீயா நானா.

நீயா நானா என்கிற நிகழ்ச்சியை உருவாக்கியவரும், இன்று வரை அதைத் தயாரித்து வரும் மெர்குரி ப்ரொடக்சன்ஸ் நிறுவனத்தின் நிறுவனருமான ஆண்டனியிடம் பிபிசி தமிழ் பேசியது.

“தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் நீயா நானா போன்றதொரு நிகழ்ச்சி அப்போது இல்லை. டாக் ஷோ என்பது வெறும் அரட்டை எனச் சொல்வதே எனக்கு அசிங்கமாக இருந்தது. தமிழ் மக்கள் அறிவுக்கூர்மை உடையவர்கள். நீண்ட திட்டமிடலுக்குப் பிறகு ஒரு டாக் ஷோவை அறிமுகப்படுத்த நினைத்தோம். 2006 மே மாதம் நீயா நானா தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சி இத்தனை ஆண்டுகள் கடந்தும் தொடர்ந்து பேசப்படுவதற்குக் காரணம் இங்குள்ள மக்கள்தான்.

மிகச் சிறந்த கருத்துகளை, நுட்பமான சிந்தனைகளை தமிழர்களால் எளிதாகச் சொல்லிவிட முடியும். ஆங்கிலத்தில் வரும் டாக் ஷோவில் பங்கேற்பவர்கள் சாமானியர்கள் அல்ல. மொழிப்புலமை, குறிப்பிட்ட துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பார்கள்.

ஆனால் தமிழகத்தில் அறிவார்ந்த கூட்டம் நிரம்பியுள்ளது. சாமானிய மக்களிடமும் கூர்மையான பார்வை உள்ளது. அதனால்தான் எங்கோ ஒரு கிராமத்தில் இருந்து வந்தவரால்கூட நீயா நானாவில் கருத்துகளை எடுத்து வைக்க முடிகிறது,” என்றார் ஆண்டனி.

மேலும், சமூகத்தைத் தொடர்ந்து கவனிப்பதாகவும் அதைப் பேசவேண்டும், கேள்வி கேட்க வேண்டும் என நினைப்பதாகவும் கூறும் ஆண்டனி, "உதாரணமாக, இங்கு நவீன ஏழைகள் அதிகமாகிவிட்டனர். இங்கு பல இளைஞர்களின் வருமானம் 15,000 ரூபாயைத் தாண்டுவதாக இல்லை.

அவன் பிரச்னைகளைக் கவனிக்கிறோம். அது பேசப்பட வேண்டும் என நினைக்கிறோம். அதுதான் நீயா நானா நிகழ்ச்சியாக மாறுகிறது. சமநிலையுடன் பேசுகிறது,” எனக் குறிப்பிட்டார்.

 

பிற மொழிகளில் நீயா நானா?

நீயா நானா: 17 ஆண்டு காலம் ஒளிப்பரப்பாகும் ‘டிவி ஷோ’ அடிக்கடி பேசுபொருளாவது ஏன்?

பட மூலாதாரம்,VIJAY TELEVISION/TWITTER

“நீயா நானா நிகழ்ச்சியை வெளி மாநிலங்களுக்குக் கொண்டு சென்று, இதர மொழிகளில் ஒளிபரப்ப திட்டமிட்டு அது தோல்வியில் முடிந்தது. அதற்குக் காரணம் அங்குள்ள சாமானிய மக்களால் பெரியளவில் தங்கள் கருத்துகளை, சிந்தனைகளை வெளிக்கொணர முடியவில்லை. அப்படி இருந்தால் ஷோவை நகர்த்த முடியாது,” என ஆண்டனி கூறுகிறார்.

இதேபோல நீயா நானாவை ‘காப்பி கேட்’ செய்ய முடியாது எனவும் நம்புகிறார் ஆண்டனி.

“ஒரு நிகழ்ச்சியை ‘காப்பி கேட்’ செய்பவர்களால் ஜெயிக்க முடியாது. இதற்குப் பின்னால் பலரது உழைப்பும், அறிவுப்பூர்வமான தேடலும் அடங்கியிருக்கிறது. உதாரணமாக, எங்கள் நிகழ்ச்சி அரங்கைக் குறிப்பிடலாம். நீயா நானா தொடங்கிய காலத்திலேயே அது தனித்துவமாக வடிவமைக்கப்பட்டது. சாதாரண பட்டிமன்ற, விவாத நிகழ்ச்சிகளைப் போல மண்டபத்தை தேர்வு செய்யாமல், மக்களுக்காகவே பிரத்யேகமான அரங்கை அமைத்தோம். இந்த யோசனையை தலைமை தயாரிப்பாளர் பிரதீப் முன்வைத்தார்.

மக்களுக்கான நிகழ்ச்சியைத் தொடங்க வேண்டும் என்ற சிந்தனையில் இருந்தபோதுதான் கோபியும் கிடைத்தார். அவரும் நாம் எதை யோசிக்கிறோம், என்ன செய்ய நினைக்கிறோம் என்பதை விரைவாகவே புரிந்துகொண்டார். ஒரே நேர்கோட்டில் நீயா நானா குழு பயணிக்கத் தொடங்கியது,” என்றார் ஆண்டனி.

ஆண்டனி
படக்குறிப்பு,

ஆண்டனி

'இது மக்களுக்கான மேடை'

கடந்த 2006ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்ட நிகழ்ச்சியை 17 ஆண்டுகளாக நெறியாள்கை செய்து வருகிறார் கோபிநாத். முன்பு பத்திரிகையாளராகப் பணியாற்றிய கோபிநாத், இன்று வரை நீயா நானாவுடன் பயணித்து வருவதோடு பிரபல தொகுப்பாளராகவும் அறியப்படுகிறார்.

 
நீயா நானா: 17 ஆண்டு காலம் ஒளிப்பரப்பாகும் ‘டிவி ஷோ’ அடிக்கடி பேசுபொருளாவது ஏன்?

பட மூலாதாரம்,GOBINATH CHANDRAN/FB

படக்குறிப்பு,

கோபிநாத்

"அடிப்படையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி என்பதையும் கடந்து நீயா நானா பார்க்கப்படுகிறது. இது வெறும் டாக் ஷோ என்பதையும் தாண்டி மக்கள் வாழ்வின் ஓர் அங்கமாக மாறிவிட்டது" என்கிறார் இந்த நிகழ்ச்சியின் முகமாகத் திகழும் கோபிநாத்.

“நீயா நானா பார்க்கவில்லை எனில் அந்த நாளே முழுமையடையாது என்ற அளவுக்கெல்லாம் சிலர் என்னிடம் சொல்வதுண்டு. இதைத் தங்கள் வாழ்வியலோடு மக்கள் ஒப்பிடுகின்றனர். பெரிய நிபுணர்கள் யாரும் வந்து தங்களுக்குள் பேசி கலைந்து செல்லும் நிகழ்ச்சி அல்ல இது. முழுக்க முழுக்க இது சாமானியர்களுக்கான நிகழ்ச்சி என்பதால் எப்போதும் பேசப்படுகிறது,” என்கிறார் கோபிநாத்.

சமூக ஊடகங்களில் இந்த நிகழ்ச்சி குறித்த காணொளிகள் அதிகம் பகிரப்படுவதுண்டு. சில நேரம், இந்த வைரல் காணொளிகள் அதிகார மட்டத்திலும் எதிரொலித்திருக்கிறது.

வடமாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் 2023ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் கிடைத்த மருத்துவ சேவை குறித்து இந்த நிகழ்ச்சியில் பேசியிருந்தார். அதே ஆண்டு மார்ச் மாதம் வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்தி பரவியபோது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் இந்த நிகழ்ச்சியையும் வடமாநில பெண் பேசியதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

“எதையும் நாங்கள் வைரலாக்குவதில்லை. சமூக ஊடகங்களில் ஒரு சிலர் தாமாக முன்வந்து நிகழ்ச்சியின் ஒரு சிறிய பகுதி குறித்துப் பேசுகின்றனர், காணொளிகளைப் பரப்புகின்றனர். அப்படியெனில், அவர்கள் இந்த நிகழ்ச்சியை விரும்பிப் பார்க்கிறார்கள் என்றுதானே அர்த்தம்,” என்கிறார் கோபிநாத்.

 

நீயா நானா எப்படி தயாராகிறது?

திலீபன்
படக்குறிப்பு,

திலீபன்

"இதர நிகழ்ச்சிகளைக் காட்டிலும் நீயா நானா தனித்து தெரிவதற்கு, நாங்கள் எப்போதும் முன்னோக்கியே யோசிப்பதும் ஒரு காரணம்" என்கிறார் இணை இயக்குநர் முத்து.

“நீயா நானா இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்கிற விவாதத்தை உருவாக்கியது. திருநங்கைகளுக்கான உரிமைகள் குறித்துப் பேசியது. இப்படி யாரும் பேசாத, பேச முன்வராத விஷயங்களை விவாதிப்போம்,” என முத்து கூறினார்.

நிகழ்ச்சியின் தயாரிப்புப் பணிகள் குறித்து தற்போதைய இயக்குநர் திலீபனிடம் பேசினோம். நீயா நானாவுடனான திலீபனின் பயணம் மிக நீண்டது. 2006இல் உதவி இயக்குநராகப் பணியாற்றத் துவங்கிய அவர், 2 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தற்போது வரை நீயா நானா நிகழ்ச்சிக்காகப் பணியாற்றி வருகிறார். 2017 முதல் நீயா நானாவின் இயக்குநராகச் செயல்படுகிறார்.

"ஒரு மாதத்திற்கு முன்பே தலைப்பை முடிவு செய்துவிடுவோம். தலைப்பையொட்டி ஆய்வுகளை மேற்கொள்வோம். அதற்கேற்ப பேசுவோரை அழைக்கிறோம். பெரும்பாலும் நிகழ்ச்சியில் பேச ஆர்வம் உள்ளவர்கள் எங்களைத் தொடர்பு கொள்வார்கள். சில நேரங்களில் எங்கள் செய்தியாளர் குழு பொருத்தமானவர்களை நிகழ்ச்சிக்கு அழைத்து வருவார்கள்.

ஒரேநாளில் 2 எபிசோட்கள் வீதம் வாரத்தில் 6 எபிசோட்களை ஷூட் செய்துவிடுவோம். நிகழ்ச்சி 3 முதல் 4 மணிநேரம் வரை செல்லும். படத் தொகுப்பில் ஒரு மணிநேரமாக சுருக்கிக்கொள்வோம்," என திலீபன் கூறினார்.

 

நீயா நானாவும் சர்ச்சைகளும்...

நீயா நானா: 17 ஆண்டு காலம் ஒளிப்பரப்பாகும் ‘டிவி ஷோ’ அடிக்கடி பேசுபொருளாவது ஏன்?

பட மூலாதாரம்,VIJAY TELEVISION/TWITTER

ஜூலை 2022இல் சமூக ஊடகங்களில் பிரபலமாக விரும்புவோருக்கும் பொதுமக்களுக்கும் இடையே விவாதம் நடந்தது. இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானதைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் சில விமர்சனங்களும் எழுந்தன.

நீயா நானா நிகழ்ச்சி நடந்த விதம் குறித்து அதிருப்தி தெரிவித்து யூடியூபர்கள் சிலர் காணொளிகளை வெளியிட்டனர்.

"தலைப்பைக் குறிப்பிடாமலேயே நிகழ்ச்சியில் பேச அழைத்தனர். நிகழ்ச்சி தாமதமாகத் தொடங்கியது. நாங்கள் பேசியது நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகவில்லை," என்பது அவர்களின் குற்றச்சாட்டாக இருந்தது.

நிகழ்ச்சிக்கு எதிராகப் பேசியவர்களைத் தற்போது தொடர்பு கொண்டோம். ஆனால் பதிலளிக்கவில்லை.

Twitter பதிவை கடந்து செல்ல
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு

"யாருக்கும் நாம் சார்புடையவர்கள் அல்ல. இது மக்களுக்கான மேடை என்பதால் எதிரெதிர் திசையில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் கருத்துகளைப் பறிமாறிக்கொள்ள வாய்ப்பளிக்கிறோம்.

தலைப்புக்கு ஏற்றவாறும் நெறியாளரின் கேள்விக்குத் தகுந்த பதிலை அளிப்பவர்களுக்கும் முன்னுரிமை வழங்குகிறோம். சிலர் சம்பந்தம் இல்லாமல் பேசிக்கொண்டே செல்வார்கள். அதை படத்தொகுப்பில் சரி செய்துவிடுவோம்," என்றார் இயக்குநர் திலீபன்.

கடந்த 2017ஆம் ஆண்டில் தமிழ் – கேரளா பெண்கள் இருவருக்கு இடையிலான விவாத நிகழ்ச்சியும் கடுமையான சர்ச்சைக்கு வித்திட்டது. நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியானதும், மகளிர் அமைப்புகள் இந்த நிகழ்ச்சி, பெண்களை அழகுப் பொருளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. எதிர்ப்பு வலுத்ததால் அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகாமலேயே நிறுத்தி வைக்கப்பட்டது.

 

'நீயா நானாவே தெரியாது; ஆனால் வாழ்க்கை மாறுச்சு'

விஜய் டிவி சங்கவி

பட மூலாதாரம்,VIJAYTV

கடந்த 2016ஆம் ஆண்டின் ஒரு நீயா நானா நிகழ்ச்சியில், மருத்துவராக வேண்டும் என கண்ணீரோடு நா தழுதழுக்கப் பேசி, தற்போது மருத்துவராகவே ஆகிவிட்ட சங்கவியிடம் பேசினோம்.

“நீயா நானா என்கிற நிகழ்ச்சி பற்றி எனக்கு அப்போது எதுவுமே தெரியாது. வீட்டில் தொலைக்காட்சி இல்லாததும் ஒரு காரணம். பக்கத்து வீட்டு அண்ணன் மூலமாகத்தான் நிகழ்ச்சிக்குச் சென்றேன். நான் பேசியது இந்தளவுக்கு ’ரீச்’ ஆகும் என நினைக்கவில்லை. நாங்கள் நினைத்துப் பார்த்திராத அளவுக்கு அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. என் வாழ்க்கையை மாற்றிய தருணம் அது,” என்றார் சங்கவி.

“பேசுவதற்கு நேரம் இல்லை என்கிற குறையும் அவ்வப்போது எழுவதுண்டுதான். ஆனால் எல்லோரும் கலந்துகொள்ளும் இடமாக நீயா நானா இருந்திருக்கிறது,” என பெண்கள் செயற்பாட்டாளரும் பத்திரிகையாளருமான கவின் மலர் கூறுகிறார்.

“நீயா நானா தேர்வு செய்யும் தலைப்புகள் சில நேரங்களில் மேலோட்டமாகவும் இருந்திருக்கிறது. சமூகத்தில் பேச வேண்டியது நிறைய இருக்கும்போது இதை ஏன் விவாதிக்கிறார்கள் என்றுகூட விமர்சனங்கள் எழும்.

தமிழ் பெண்கள் vs கேரள பெண்கள் நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகவிருந்த சமயத்தில் அதைக் கடுமையாக விமர்சித்தவர்களில் நானும் ஒருவர். அதேநேரம், விமர்சித்தவர்களாக இருந்தாலும் பின்னாட்களில் நிகழ்ச்சியில் பங்கேற்க நீயா நானா குழு அழைத்திருக்கிறது,” என கவின் மலர் கூறுகிறார்.

'கூடுதல் பொறுப்புணர்வுடன் செயல்படுவது அவசியம்'

Kavin Malar

பட மூலாதாரம்,KAVIN MALAR/FB

படக்குறிப்பு,

கவின் மலர்

“வடமாநில தொழிலாளர்கள், திருநங்கைகள் எனப் பலருக்கும் மேடை அமைத்துக் கொடுத்திருக்கிறது. திருநங்கை சார்ந்த உரையாடல்கள் மட்டுமின்றி இதர தலைப்புகளில் விவாதிக்கும்போதுகூட அனைவரையும் உள்ளடக்கிய நிகழ்ச்சியாக, திருநங்கைகள் பேச இடமளித்திருக்கிறது.

ரியாலிட்டி ஷோக்கள் பெரும்பாலும் செயற்கைத்தனமாக ஒருவரை அழ வைத்து, பின்னணி இசையில் ஒளிபரப்பும். ஆனால் நீயா நானா இதில் விதிவிலக்கு.

சாதித் திமிருடன், மத துவேசத்துடன், பெண்களைப் பற்றி இழிவாக, பிற்போக்குத்தனமான அல்லது ஆட்சேபகரமான கருத்துகளை பங்கேற்பாளர்கள் கூறினால், கோபிநாத் மெளனம் காக்காமல் உடனடியாக பதில் பேசி தெளிவுபடுத்துவது நல்ல விஷயம் என நினைக்கிறேன்.

நீயா நானா நிகழ்ச்சியை மக்கள் குடும்பமாக அமர்ந்து பார்க்கின்றனர். கூடுதல் பொறுப்புணர்வுடன் குழுவினர் செயல்பட வேண்டியது அவசியம்,” என்கிறார் கவின் மலர்.

https://www.bbc.com/tamil/articles/cd1le9qwgjlo

  • கருத்துக்கள உறவுகள்

நான் பார்க்கும் சில நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று........ பார்க்க நன்றாக இருக்கின்றது.......!   👍

  • கருத்துக்கள உறவுகள்

சிறு வர்களில்  இருந்து வயதானவர் வரை எல்லோரையும் இணைக்கிறார்கள்  . சில சமயம் கணவன் எதிர் மனைவியை கூப்பிடும் போது அவர்கள் பிரச்சினையை உலகத்துக்கே பறை சாற்றுவது   போல இருக்கும்

.சில விடயங்கள் வீட்டிலேயே பேசித் தீர்த்து  கொள்ளலாம். ஒருவர் மற்ற்வரை சந்தி சிரிக்க வைப்பது போல "மல்லாக்க படுத்து  எச்சி உமிழ்வது போல"  என்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்த நிகழ்ச்சியின் சில குறுகிய காணெளிகளை எனது நட்புவட்டத்தில் பகிரப்படும் பொழுது பார்த்திருக்கிறேனே தவிர முழுமையாக பார்த்தது இல்லை. ஆனாலும் பேசப்படும் தலைப்புகள் சமூகத்தில் பேச தயங்கும் தலைப்புகளும், விழிப்புணர்வுகளுமாகவே உள்ளதை அவதானித்திருக்கிறேன். 

இந்த நிகழ்ச்சியில் வந்த சில தலைப்புகளில் பேசும் இன்றைய இளையதலைமுறையின் எதிர்பார்ப்புகள் என்ன என்பதை பார்க்கும் பொழுது வியப்பாகவும் சிலருடைய கருத்துகளை கேட்கும் பொழுது சலிப்பு ஏற்படுகிறது.. ஆனாலும் அதனைப் பார்க்கும் பார்வையாளர்களுக்கு இது சரியா பிழையா என தன்னைத் தானே கேட்கமுடியும் என நம்புகிறேன். 

இப்பொழுதெல்லாம் தொடர் தொலைகாட்சி நாடகங்களைவிட இந்த மாதிரி நிகழ்ச்சிகள் பரவாயில்லை என நினைப்பதுண்டு. அது மட்டுமல்ல சில நேரங்களில் சில பிரச்சனைகளை வெளிப்படையாகப் பேசுவதன் மூலம் பல நன்மைகள் உள்ளது என நம்புகிறேன். 

Edited by P.S.பிரபா
வசனம் சேர்க்கப்பட்டது

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.