Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
பதியப்பட்டது (edited)

----> பிறேமலதா பஞ்சாட்சரம்

 

 

ஈழப்போராட்டம் என்பது தமிழின வரலாற்றில் ஒப்பற்ற உன்னதமான உயிர் தியாகங்களும் பல நூற்றாண்டு காலங்களின் பின்னர் தமிழ்ர்களின் வீரத்தையும் மாற்றான் முன் மண்டியிடாத மானத்தையும் உலகுக்கு எடுத்துக்காட்டியதோடு மரபுவழியாக தமிழினம் பெண்ணுக்கு வழங்கி நின்ற பெருமையை நிலைநாட்டிய பெருமையையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த குமரிக்கண்ட நாகரிகமும் தமிழர் நாகரீகமென நிறுவவப்பட்ட சிந்துவெளி நாகரிகமும் தாய்வழி சமூகமாகவே உள்ளன என்பது தொல்லியல் ஆய்வுகள் மூலம் நிறுவப்பட்டுள்ளன. பெண்ணை பெருமைப் படுத்திய குமரிக்கண்ட எஞ்சிய சான்றாக இன்றும் நிலைத்து நிற்பது உலகின் மிகப் பழமை வாய்ந்த நகரங்களில் ஒன்றான மதுரை மாநகரில் பாண்டிய மன்னர்களால் (கடைச்சங்ககாலத்தில் ) எழுப்பட்ட மீனாட்சி அம்மன் ஆலயம் ஆகும்.பாண்டிய மன்னனுக்கு ஒரே மகளாக பிறந்து ஆண்களைப் போன்று போர்க்கலையில் சிறந்து விளக்கிய அங்கயற்கண்ணியான மீனாட்சிக்கு எழுப்பப்பட்டுள்ள இவ்வாலயம் இற்றைக்கு 2500 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. தமிழர்களின் பண்பாட்டுடன் பின்னிப்பிணைந்த பெண்களை பெருமைப்படுத்தும் நிகழ்வுகள் பற்றிய குறிப்புகள் தமிழ் இலக்கியங்களிலும் பண்டைய தமிழக கல்வெட்டுகளிலும் பரவலாக காணக்கிடக்கின்றன .

தமிழீழ விடுதலைப் போராட்டமும் பெண்களும்

தமிழீழ விடுதலைப் போராட்டமும் பிற்கால சோழப் பேரரசைப் (கி.பி. 10-12 ஆம் நூற்றாண்டுகள் ) போன்று அரசியல், நிர்வாகம், ஆட்சிமுறை, நீதிவழங்கல் , கலை இலக்கியம் போன்ற பல்வேறு துறைகளிலும் பெண்களின் பங்களிப்புக்கு இடம் கொடுத்ததோடன்றி சோழப் பேரரசு சாதிக்காத வகையில் ஆண்களுக்கு சரிநிகராக பெண்களும் போர்க்களத்தில் போர்புரியவும் புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இரும்பனை மனமொத்த கரும்புலிகளாகி எதிரியின் இலக்குகளை தகர்த்து சாதனை படைக்கவும் களமமைத்துக் கொடுத்தது.

பொதுவாக ஒரு நாட்டின் இலக்கியத்துறை வளர்ச்சியடைகின்ற காலம் அந்நாட்டில் நிலவும் அமைதியான சூழ்நிலையைப் பொறுத்தே இடம்பெறுகின்றது. உதாரணமாக பிற்கால சோழப்பேரசு விரிவடைந்து சோழ நாட்டில் அமைதி சூழ்ந்திருந்த காலப்பகுதியிலேயே இலக்கியத் துறை மிகவும் செழுமையடைந்துள்ளது. அனால் ஈழத்தில் போர் நடைபெற்றுக்கொண்டிருந்த பொழுதே இலக்கியத்துறையும் வளர்ச்சி கண்டுள்ளமையானது தமிழ் மொழியின் செவ்வியல் காலமான (classical age ) சங்க காலத்தின் போர் இலக்கியங்கள் போன்று தமிழினத்தின் தற்கால இலக்கியத் துறைக்கு பங்களிப்புச் செய்துள்ளமையை மறுதலிக்க முடியாது .

உலகில் உள்ள ஏனைய விடுதலைப்போராட்ட வரலாற்றிலில்லாதவாறு ஈழப்போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற பொழுதே விடுதலைப்புலிகள் தமது அரசியல், போரியல் , பொருளாதார,தொழிநுட்ப, மருத்துவ துறைகளைப் போன்று கலைகளையும் வளர்தெடுத்தனர். கலைகளையும் கலாச்சாரத்தையும் வளர்க்கும் நோக்குடன் கலைபண்பாட்டுக் கழகத்தை நிறுவி அதனூடாக இயல், இசை , நாடகம் போன்ற முத்தமிழின் வளர்ச்சிக்காக ஆவன செய்திருந்தார்கள். குறிப்பாக விடுதலைப்புலிகளின் கலை பண்பாட்டுக்கழகத்தினரால் 1991, 1992 ஆம் ஆண்டுகளில் முத்தமிழ் விழாக்களையும் 1995 இல் நல்லூரில் மூன்று நாட்கருத்தரங்கினையும் 1998 இல் புதுக்குடியிருப்பில் இருநாட் கருத்தரங்கினையும் 2003 இல் திருகோணமலையில் இசை, நடன, நாடக விழாவினையும் தமிழீழ விடுதலைப்புலிகளின் கலை பண்பாட்டுக் கழகம் நாடாத்தியிருந்தமையை குறிப்பிடலாம்.

போர்க்கால இலக்கியத்துறை வளர்ச்சியில் தமிழீழ பெண்களின் பங்களிப்பு

போர்க்கால இலக்கியதுறைப் பங்களிப்புக்கு தமிழீழ பெண்களின் பங்களிப்பும் முக்கியமானது. கவிதைகள், சிறுகதைகள் போன்றனவற்றில் மட்டுமன்றி தமிழீழ எழுச்சிப் பாடல்களிலும் பெண்களின் பங்களிப்பு கணிசமாக உள்ளது.

குறிப்பிடும்படியாக1985ல் சென்னை தமிழியல் பதிப்பகத்தின் வெளியீடாக வெளிவந்த “அக்கரைக்குப் போன அம்மாவுக்கு” என்ற கவிதைத்தொகுதி 1980-1985 ஆண்டுகளுக்கிடைப்பட்ட ஈழத்தமிழரின் அவல வாழ்வை பதிவு செய்திருக்கின்றது .1991 ஆம் ஆண்டு தொடுக்கப்பட்ட ஆகாய கடல் வெளிச் சமரில் வீர காவியமான கப்டன் வானதி சிறந்த போராளிக் கவிஞர். விடுதலைப்புலிகனின் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த தமிழினி அவர்கள் சிறந்த கவிஞரும் சிறுகதை எழுத்தாளருமாவார். 2004இல் வெளியிடப்பட்ட வன்னி மண்ணின் இரணையூர் பாலசுதர்சினி அவர்களின் “அனுபவ வலிகள்” என்ற கவிதைத் தொகுதி போர்கால அனுபவங்களின் வலிகளை வடித்துள்ளது.

புலிகளின்குரல் வானொலியில் பணியாற்றிய போராளி கலைஞரான தமிழ்க்கவி அவர்கள் நாடகத்துறை வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியமையையும் வெற்றிச்செல்வி, கஸ்தூரி , மலைமகள் தமிழவள் , அம்புலி போன்ற போராளிக் கலைஞர்கள் தமிழீழ இலக்கியத துறைக்கு பங்களிப்பு செய்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கவிதைகள் , சிறுகதைகள் , நாடகங்கள் போலல்லாது ஈழப்போராட்ட இலக்கியத்துறை வளர்ச்சியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடல்களின் பங்களிப்பு மிகக்கணிசமானது. இப் பாடல்கள் தனியே போராட்டத்தைப் பற்றி மட்டுமல்லாது, தமிழீழ தேசியத் தலைவர், மாவீரர்கள், போராளிகள், போர்க்கள சாதனைகள், தமிழின வரலாறு , தமிழர்களின் வீரம், பாரம்பரியம், தமிழர் தேசம் , இனவழிப்பு , போர்தந்த வடுக்கள், மாவீரரர்கள் போன்ற பல்வேறு விடையங்களை பாடுபொருட்களாக கொண்டு பாடப்பட்டுள்ளன. இப்பாடல்கள் மக்களுக்கு விடுதலை உணர்வினை ஊட்டி விடுதலைப் போராட்டத்தில் இணைந்து செயல்பட உந்துசக்தியாக இருந்துள்ளதுடன் சிறந்த போர்க்கால இலக்கியங்களாகவும் திகழ்வதற்கு அவை இசைவடிவில் கேட்போரின் இதயத்தை தொட்டுவிடும் அழகான ஆழமான கருத்துக்களையும் அழகிய மொழி நடையையும் கொண்டுள்ளமையும் காரணிகள் எனலாம்.

ஆரம்பகாலத்தில் விடுதலைப்புலிகளின் எழுச்சிப் பாடல்கள் தமிழகத்த்திலிருந்து வெளிவந்தன. அரம்பகால தமிழீ கவிஞர்களான புதுவை இரத்தினதுரை, காசி ஆனந்தன், வாஞ்சிநாதன் போன்ற கவிஞர்களும், கவிஞர் இன்குலாப் போன்ற தமிழகத்துக் கவிஞர்களும் எழுதியிருந்தார்கள். தேனிசை செல்லப்பா , டி.எம். செளந்தரராஜன், மனோ, மலேசியா வாசுதேவன், ஜெயச்சந்திரன், பி.சுசீலா, வாணிஜெயராம், சுவர்ணலதா போன்ற பல பாடகர்கள் பாடியிருந்தார்கள். 1990 களிலில் தமிழீழத்தில் இருந்தே இப்பாடல்கள் வெளிவரத் தொடங்கின. தமிழீழ தேசியக் கவிஞரான புதுவை இரத்தினதுரை, மாமனிதர் கவிஞர் நாவண்ணன் , மேஜர் சிட்டு, தமிழவள், உதயலட்சுமி, மார்ஷல், செ.புரட்சிகா, மலைமகள் போன்ற கவிஞர்களின் உருவாக்கத்திலும் எஸ்.ஜி.சாந்தன், மேஜர் சிட்டு , ஜெயா சுகுமார், வசீகரன், திருமலைச்சந்திரன், நிரோஜன், திருமதி பார்வதி சிவபாதம், மணிமொழி, தவமலர், பிறின்சி, சந்திரமோகன், இசையரசன், அருணா, கானகி, தவமலர், மாங்கனி, பிரியதர்சினி போன்ற பாடகர்களின் பங்களிப்புடனும் ஏராளமான பாடல்கள் வெளிவந்துள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை பண்ணப்பட்டுக்கழகத்தினர் இப்பாடல்களில் பெரும்பாலானவற்றை இசையமைத்து வெளியிட்டுள்ளனர்.

இசைத்துறையில் பெண்களின் பங்களிப்பை முன்னிறுத்தும் பொருட்டு தமிழீழ மகளிர் கலைபண்பாட்டுக் கழகம், தமிழீழ மகளிர் இசைக்க்ழுவினர் என்ற தனியான பிரிவுகளையும் விடுதலைப் புலிகள் ஏற்படுத்தியிருந்தனர்.

பெண்களால்பாடப்பட்டுள்ள பாடல்களில் அக உணர்வு வெளிப்பாடு

சங்க கால இலக்கிய பாடல்கள் போன்று தமிழீழ விடுதலை புலிகளின் எழுச்சிப் பாடல்களில் பொதிந்துள்ள ஆழ்ந்த கருத்துக்கள் அகவயமானவை ( “inner field” ) எவை புறவயமானவை (“outer field”) எவை என பிரித்துக் பார்க்கின்ற போது அகவுணர்வுகளை (emotional ) எடுத்துக்காட்டுகின்ற பெரும்பாலான பாடல்கள் பெண்களால் பாடப்பட்டுள்ளன. புற (material) நிலை சார்ந்த பெரும்பாலான பாடல்கள் ஆண் பாடகர்களால் பாடப்பட்டுள்ளன.

பெண்களால் பாடப்பெற்ற பல பாடல்களில் பாடுபொருள்களாக தாயன்பு, காதல், நட்பு, பிரிவு , பரிவு, கோபம், தனிமை , வீரமரணம் ஒன்றை தாங்கும் பெண்மையின் மனநிலை, கையறு நிலை போன்ற ஆழமான உணர்வுகளை பாடல்களாக பாடுகின்ற பொழுது அவை கேட்போர் மனக்கண்முன் ஈழப்போர்சூழலில் வாழ்ந்த மக்களின் பல்வேறுபட்ட இழப்புக்கள், தியாகங்கள் ஒப்புவிக்கை (அர்ப்பணிப்பு / dedication ) போன்ற உணர்வுகளை புரிந்து கொள்ள வழிவகை செய்கின்றன.

அகவுணர்வுகளின் ஆழத்தை எடுத்துக்காட்டுகின்ற சில பாடல்களையம் அவற்றின் தன்மையையும் பாப்போமாகில் தமிழீழ எழுச்சிப் பாடல்களில் மிக அரிதாக காதல் உணர்வை வெளிப்டுத்தும் பாடலான “தென்னம் கீற்றில் தென்றல் வந்து வீசும் தமிழ் தேசமெங்கும் குண்டு வந்து வீழும்” என்ற பாடலில் வருகின்ற பெண்குரலில் ஒலிக்கும் வரிகளான

“நிலவு வந்து பொழியும் நேரம் நீவரவில்லை
நான் நீண்ட நேரம் காத்திருந்தேன் பதில் வரவில்லை
ஊர்முழுதும் ஓலம் நான் உறங்கி வெகுகாலம்
உறங்கி வெகு காலம் நீ ஒடிவந்தால் போதும்..”

என்ற பாடல்வரிகளிலுள்ள கவித்துவமானது பிரிவின் வலியின் ஆழத்தை சொல்கின்றது. இவ்வரிகள் சங்ககால நூலான குறுந்தொகையிலுள்ள 138வது பாடலான “கொன் ஊர் துஞ்சினும் யாம் துஞ்சலமே-” என்ற பாடலில் தோழி யின் கூற்றாக சங்ககாலத் தலைவியின் பிரிவாற்றாமையை தலைவனுக்கு உணர்த்துகின்ற பாடல் வரிகளை நினைவு படுத்துகின்றது.

 

“கண்மணியே கண்ணுறங்கு
காவியமே நீயுறங்கு
பொன் முடி சூடிய பூச்சரமே
எந்தன் பூங்குயிலே நீயும் கண்ணுறங்கு”

என்ற தாலாட்டுப் பாடலில் தன் குழந்தையை உருவகப்படுத்தும் தமிழீழ தாய் ஒருத்தி மணிமகுடம் பூண்டு உறங்குகின்ற ஒரு இளவரசனாக தன்குழந்தையை ஒப்பிட்டு குழந்தை பிறந்தபொழுது தனக்கிருந்த செல்வச் சீர்சிறப்பை தன்பாடலூடாக வெளிப்படுத்துகின்றாள். அப்பாடலின் இரண்டாவது பந்தியில் தனது கையறு நிலைய நினைந்து

“செல்வந்த வேளையில் நீ பிறந்தாய்
இன்று ஷெல் ( Shell ) வந்து
உன்னப்பன் போய்முடிந்தான்”

என்று தாலாட்டுவதன் ஊடாக தந்தையின்றிய அவர்களுடைய எதிர்கால வாழ்வில் இழையோடியுள்ள துயரை எடுத்துக் காட்டுகின்றது. மேலும் இப்பாடலின் இறுதியப் பகுதியிலேயே அத்தாய் “ஆராரோ… ஆரிரரோ” என வழமையான தாலாட்டு பாடல் போல் தாலாட்டாது “ஆரிரரோ…ஆராரோ.”.என பாடுகின்றாள். தாலாட்டு பாடலில் ‘ஆராரோ ஆரிரரோ’ என்பதில் முன்னதைவிடப் பின்னது விரைவாகப் பாடப்படுகின்றதற்கான காரணம் ஏணையை (தூளி) அதன் இயல்பான மையத்திலிருந்து ஆட்டி விடுகின்றபோது, அது விலகிச்செல்லும் வேகத்தைவிட மீண்டுவருகின்ற வேகம் விரைவாக இருக்கும் இவ்வேணையின்ஆட்ட வேகத்திற்கு அமையவே தாலாட்டு மெட்டும் அமைகின்றது. இப்பாடலானது “ஆரிரரோ…ஆராரோ”…என முடிவதற்கான காரணம் அத்தாயின் உள்ளத்தில் தேங்கிக் கிடந்த வலியை அல்லது வெளிப்படுத்திய பொழுது அவள் தனது குழந்தை தூங்கும் ஏணையை விரைவாக ஆட்டியிருப்பாள் அதனாலேயே அது போன வேகத்தை விடவும் வந்த வேகம் குறைவானதாக இருக்கும் என்ப தனை இப்பாடலினை கேட்பவர் மனதில் பதிய வைக்க வேண்டி இப்பாடலின் வரிகளை அமைத்த ஈழகவிஞரது புலமை எத்தகையது என வியக்கத் தோன்றுகின்றது.

தமிழீழ கலைபண்பாட்டுக்கழகத்தால் வெளிப்பட்ட நெருப்பு நிலவுகள் என்ற இறுவட்டில் தன்தாயின் நினைவாக இருக்கின்ற பெண்புலி மகள் ஒருத்தி தன்நெஞ்சில் தேங்கியுள்ள தாய்ப்பாசத்தையும் தான் போராடவேண்டிவந்த சூழ்நிலையையும் விபரித்து பாடுகின்ற ஒரு பாடல் “நீரடித்து நீர் இங்கு விலகாது அம்மா நெஞ்சில் உந்தன் பாசம் என்றும் அகாலாது அம்மா” என்கிறது. அப்பாடலில் வருகின்ற ஒரு பந்தியில்

“வெற்றி மகளாய் வருவேன் பெருமைப்படு அம்மா
வீழ்ந்து விட்டால் குழியினிலே நீரை விடு அம்மா
சுற்றி வந்து தீபம் ஒன்று ஏற்றி விடு அம்மா
சூழ்ந்திருக்கும் உறவை பார்த்து கவலை விடு அம்மா”

என்று தனது தாய்க்கு கூறுவதன் ஊடக தான் போர்க்களத்தில் இருந்து வெற்றி மகளாக திரும்பி உயிருடன் வருவேனாகில் தன்சாதனையை எண்ணி பெருமை கொள்ள வேண்டும். தான் களத்தில் வீரமரணம் அடைந்துவிட்டால் தனது புனித விதைகுழியில் நீரை விட்டு தீபமேற்றி செல் என்று கூறுகின்றாள். ( பாடலை கேட்க  https://bit.ly/2spp2x5 )

தமிழீழ விடுதலைப்புலிகள் தமது மாவீரர்களின் வித்துடல்களை புதைக்கும் நிகழ்வில் “புதைத்தல்” என்ற சொல்லை பயன்படுத்துவது இல்லை மாறாக “விதைத்தல்” என்ற சொல்லையம் புதைக்கப்படும் உடலுக்கு “வித்துடல் “என்ற சொல்லையும் பயன்படுத்தினார்கள். விதையில் இருந்து மரம் மீண்டும் முளைப்பதைபோன்று மாவீரரர்கள் மீண்டும் எழுவார்கள் இதனாலே விதையை மண்ணில் இட்டபின்னர் நீர் விடுவதைப் போன்று தன்னை விதைத்த பின்னர் நீரை இட்டுச் செல்லுமாறும் தன்னையே நினைத்து வருந்திக் கொண்டிராது ஏனைய சகோதர சகோதரிகள் மற்றும் தந்தையை எண்ணி தான் மறைந்த கவலையை விடுமாறும் கூறுகிறாள் .

திருக்குறளில் வரும் பிரிவாற்றாமை கூறுகின்ற பின்வரும் குறள் வரிகள் அத்தாயினுடைய மனநிலையாக இருக்குமென்றெண்ணி அம்மகள் மேற்கண்டவாறு கூறியிருப்பாளோ என இங்கே எண்ணத் தோன்றுகின்றது.

செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை. ( குறள் எண் : 1151 )

பிரிந்து செல்லாத நிலைமை இருந்தால் எனக்குச் சொல், பிரிந்து சென்று விரைந்து வருதலைப் பற்றியானால் நீ வரும்போது உயிரோடு இருப்பார்களே அவர்களிடம் சொல் என்று அத்தாய் எண்ணி விபரீதமான முடிவேதும் எடுக்கக் கூடாது என்பதற்காக இவ்வாறு கூறியிருப்பாளோ என எண்ணத் தோன்றுகின்றது. அதாவது போர் நடந்து கொண்டிருக்கும் ஒரு சூழ்நிலையில் சாதாரணமான ஒருகுடும்பத்தின் உயிர்ப்பாதுகாப்பு அல்லது தற்பாதுகாப்பு எவ்வளவு முக்கியம் ஆதலால் தனது வீரமரணத்தை தாங்குகின்ற சக்தி அத்தாய்க்கு தனது ஏனைய பிள்ளைகளையும் தந்தையை எண்ணியும் வரவேண்டுமென்பதை இப்பாடல் ஊடக மறைபொருளாக விளக்கப்பட்டுள்ளது .

பெண்புலி போராளிகள் இருவரின் நட்பின் ஆழத்தையும் தோழிகளில் ஒருவரின் வீரமரணம் மற்றய தோழியின் மனதில் ஏற்படுத்திச்சென்றுள்ள தாக்கத்தின் வலியின் வெளிப்பாட்டினையும் சொல்லுகின்ற பாடல் “தோழி என் தோழி என் உயிரில் கலந்த தோழி” என்கின்ற பாடல். இப்பாடலை தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதர்சனம் வெளியீடுப் பிரிவினர் வெளியிட்டுள்ளனர். இப் பாடலில் பின்வரும் வரிகள்

“மண்ணில் பாசம் கொண்ட வேளை உனது பாசம் தந்தாய்
என்னில் தோன்றும் நிழலைப் போல தினமும் ஓரம் நின்றாய்”

அதாவது நிழலைபோல என்றென்னறும் பிரியாதவாறு இணைந்த உயிர் நட்பைப் பற்றி சொல்கின்றது. இத்தகைய உவமை பொருந்திய பாடல் ஒன்று அகநாநூறுறில் கபிலர் என்னும் புலவரால் பாடப்பட்டுள்ளது.

தோழி ஒருத்தி தனக்கும் தனது தலைவிக்கும் இடையிலான உறவு இருதலைப்புள்ளினைப் (இரண்டு தலை கொண்ட ஓருருவப் பறவை) போன்று பிரியாது என்றும் இணைந்திருப்பது என்று கூறுகின்றாள்.

“யாமே பிரிவு இன்று இயந்து துவரா நட்பின்
இருதலைப் புள்ளின் ஓருயிரம்மே”(பா.12, 4-5)

 

இப் பாடலில் வருகின்ற

என்னை பரிவுடன் தழுவிடும் தாயாய்
செல்லக் குறும்புகள் புரிந்திடும் சேயாய்
துன்பம் தொடர்கின்ற பொழுதினில் தோளாய்
எந்தன் இதயத்தை வருடி நீ வாழ்ந்தாய் -இன்று
என்னை தனியே தவித்திடச் சொல்லி நீயேன் பிரிந்து போனாய்

பாடல் அடிகள் தாய் தந்தை சகோதரர்கள் என்ற உறவுக்கு கூட்டுக்குளே வாழ்ந்த ஈழத்துப் பெண்கள் விடுதலை வேட்கையுடன் போராட செல்கின்ற பொழுது அப்பெண்களுக்கு அவர்களது குடும்பத்தினரின் பிரிவினை ஆற்றும் வழியாக அவர்களது தோழிகள்தான் திகழ்கின்றார்கள் என்பதை கூறி நிற்கும் சான்றாக இருக்கிறது. ( தொடரும் )

 

https://www.samakalam.com/பெண்கள்-பாடிய-தமிழீழ-எழு/

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்+
Posted

பகுதி II

 

நட்பின் ஆழத்தை கூறுகின்ற இன்னுமொரு பாடல்

எந்தன் தோழி உன்னைத் தேடிக் கண்கள் போகுது..

.எங்கே! எங்கே! என்னைப்பாரு இதயம் நோகுது..

இப்பாடலானது தமிழீழ விடுதலைப் புலிகளின்  மகளீரணி அரசியல் துறை பொறுப்பாளரும் சிறந்த சிறுகதை எழுத்தாளருமாகிய  தமிழினி அவர்கள் தனது போர்க்கள அனுபவத்தினையும் உண்மைச்சம்பவங்களையும் மையமாக வைத்து எழுதிய” மழைக்கால இரவு” என்ற சிறுகதையில் வருகின்ற இரு பெண்போராளிகளின் நட்பின் ஆழத்தையும் ஒரே போர்க்களத்திக்கு சென்ற இருவரில்  ஒருவர்  வீரமரணம் அடைகின்ற பொழுது அதனது தாக்கம் மற்றய தோழியின் மனதில் எத்தகைய பதிவுகளை விட்டுச்செல்கின்றன என்பதையும் நினைவுபடுத்துகின்றது.

இப்பாடலில் வருகின்ற பின்வரும் வரிகள்

சற்றுமுன்னர் தானே களத்தில் பாய்ந்து பகையைக் கொன்றவள்!

வெற்றி எங்கள் கையில் வந்துசேர… வீழ்ந்து போனவள்!

போரில் உந்தன் வீரம் பார்த்தேன் போற்ற வழியில்லை

வென்ற பின்னோ ஓடிவந்தேன் உயிராய் நீயில்லை !

தமிழினி அவர்களின் மழைக்கால இரவில் வருகிற சங்கவி என்ற கதாபாத்திரத்தின் வீரமரணம் அவளது தோழியின் மனதில் விட்டுச்செல்கின்ற நினைவுகளை மீள்நினைவூட்டுகின்றது. அச் சிறுகதையில் சங்கவியின் மரணத்தை தமிழினி கீழ்வருமாறு பதிவு செய்கின்றார்.

“சங்கவி தூங்கிக் கொண்டேயிருக்கிறாள். ஒரு உழவு இயந்திரம் பெட்டியுடன் வந்து நின்றது. “ கெதியா ஏத்துங்கோ… கெதியா… ” படபடவென நாலைந்து போ் கால்களிளும் கைகளிலும் பிடித்து துாக்கியெடுக்க நான் அவளின் தலையைப் பிடித்துக் கொண்டேன். ஏற்கனவே பல உடல்கள் ஏற்றப்பட்டிருந்த உழவு இயந்திர பெட்டிக்குள்ளே அவளையும் ஏற்றியாகி விட்டது, நான் கீழே நி்ன்றவாறு விலகிப்போக மனதில்லாமல் சங்கவியின் தலையை தொட்டுக் கொண்டேயிருந்தேன், அவள் முகத்தை விடாமல் உற்றுப் பார்த்துக் கொண்டேயிருக்க வேண்டும் போலிருந்தது. மெதுவாக நகர்ந்து செல்ல ஆரம்பித்தது உழவு இயந்திரம்.”

இச்சிறுகதையை வாசிப்பவர்களின் மனதில் போர்க்கள அனுபவங்கள் பெண் போராளிகளின் மனதில் எத்தகைய பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது என்பதை பல்வேறு பரிமாணங்களில் பார்க்க கூடியதாக உள்ளது.

பன்னெடுங்கால தமிழர் பண்பாட்டு  வரலாற்றை பார்க்கின்ற பொழுது ஒரு பெண்ணின் வாழ்வில் அவளது உற்ற தோழியின் வகிபாகமும் முக்கியத்துவம்  பெறுகின்றது என்பது  தமிழ் இலக்கியங்களில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.

சங்க இலக்கிய அகத்திணை நூல்களிலும் சங்க மருவியகால  இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரத்திலும் மற்றும் மணிமேகலையிலும்  தோழி என்ற பாத்திரத்திற்கு முக்கிய பங்குண்டு .

சிலப்பதிகாரத்தில் கண்ணகியின் தோழியான தேவந்தி கண்ணகி கோவலனோடு சேரவேண்டும் என்பதற்காக வழிபாடு இயற்றியதை

கண்ணகி நல்லாளுக்கு உற்ற குறை உண்டென்று

எண்ணிய நெஞ்சத்து இனையளாய், – நண்ணி  

அறுகு சிறுபூளை நெல்லொடு தூஉய்ச், சென்று

பெறுக கணவனோடு என்றாள்.  (சிலம்பு : 9: 41)

என்று  பாடல் கூறுகின்றது. மணிமேகலையில் மணிமேகலை நந்தவனத்தில் உள்ள பளிங்கு மண்டபத்தில் இருக்கின்ற போது அவள் மேல் காதல் கொண்ட சோழ இளவரசனான உதயகுமாரன்  அவளை அடைய முயல்கிறான்; முடியவில்லை, மணிமேகலையின் தோழியான  சுதமதியிடம் மணிமேகலையை அடைய முடியவில்லையே என வருந்திக் கூறுகின்ற சுதமதியோ அவனிடம், மணிமேகலை

ஊழ் தரு தவத்தள், சாப சரத்தி

காமன் கடந்த வாய்மையள்  ( மணி 05-016)

தனது தோழி தவவழிப்பட்டவள் ஆதலால் காமன் செயல்களான காதலையும்காமத்தையும்  கடந்த தூயவள் என   உரைத்து அவனது மனதை மாற்றி தனது தோழியை பாதுகாக்கின்றாள்.

ஓர் சிறந்த தோழியின் மரணம்  என்பது ஒப்பில்லா  வீரமும் ஆளுமையையம் கொண்ட  விடுதலைப் புலிகளின் மகளிரணி தளபதி  பிரிகேடியர் துர்க்கா அவர்களின்  மனதில்  மாறாத வடுவினைப் ஏற்படுத்தியிருந்ததை   கலை என்ற போராளி எழுதிய  அவரது வீரவரலாறில் பின்வருமாறு குறிப்பிடப்படுகிறது.

Brigadier-Dhurka-609x1024.jpg

“2006 சமரில் கம்பனியை (Company / படையணியை ) வழிநடத்திச்  சென்ற லெப். கேணல் ஆர்த்தி  வீரச்சாவைத் தழுவிக் கொண்டது துர்க்கா அக்காவின் மனதை வெகுவாகப் பாதித்தது. எதையும் இலகுவில் வெளிக்காட்ட மாட்டார். ஆனால் உள்மனத்தில் அவர் எவ்வளவு கண்ணீர் விட்டார் என்பது ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும்”

இத்தகைய ஆழமான வடுக்களை வெளிப்படுத்துகின்ற இன்னுமொரு பாடல்

உயிரழும் போது ஓசைகள் ஏது

ஆயுத ராகங்கள் ஆழுவதில்லை

ஆயினும் சோகம் மறைவதில்லை  

அதில் வரும் பின்வரும் வரிகள்

கூந்தல்பின்னி   மடிக்கையிலே உங்கள்  ஞாபக முடிச்சுகளே

காவல் கடமை இருட்டினிலே உங்கள் நினைவு வெளிச்சங்களே

 எங்களில் திரிந்த தோழியரே என்றினி காண்போம் தோழியரே

உங்களின் கனவை தோழியரே கண்களில் சுமப்போம் தோழியரே

பெண் போராளிகளின் வீரமரணங்கள் அவர்களின் தோழிகளை எவ்வாறு பாதித்தன என்பதை கண்முன் நிறுத்துகின்றது.

மேலும்   தமிழினி  அவர்கள் எழுதிய “அம்பகாமப் பெருங்காட்டின் போர்க்களத்தில்” என்ற கவிதையில்

மீளாப் பயணம் சென்ற தோழி

விடைபெறக் கை பற்றி

திணித்துச் சென்ற கடதாசி

செய்தி சொன்னது..

காலமாவதற்காக காத்திருக்கும்

அம்மாவின் ஆத்மா

கடைக் குட்டியவளின்

கையாலே ஒரு துளி

உயிர்த் தண்ணிக்காகத்

துடிக்கிறதாம்.

எவருக்கும் தெரியாமல்

என்னிடத்தில் குமுறியவள்

விட்டுச் சென்ற

கண்ணீர்க் கடலின்

நெருப்பலைகளில்

நித்தமும்

கருகிக் கரைகிறது

நெஞ்சம்!

31.03.2000 அன்று ஆனையிறவுத் தளத்தினைக் கைப்பற்றும் சமரில் கடற்கரும்புலியாகச்சென்ற மேஜர் ஆந்திரா அவர்களின் வரலாற்றுப் பதிவில்   தந்தையை இழந்த குடும்பமொன்றில் தாயின் ஆதரவில் மட்டுமே வளர்ந்த செல்வி விநாயகமூர்த்தி சுதர்சினி என்ற இயர்பெயருடைய  மேஜர் ஆந்திரா  இதயத்தில் ஓட்டையினால் தனது தாயார் அவதிப்பட்ட நிலையிலும் நாட்டைக் காக்க புறப்பட்டதை

“அம்மா இன்னும் சிறிதுகாலமே உயிர்வாழ்வாள் என்று தெரிந்த பின்பும் வீட்டுக்கு அழைத்துவந்து எல்லோராலும் அழத்தான் முடிந்தது. வீட்டில் இவ்வளவு ஒரு சோகம் இருந்தாலும் நாட்டு நிலைமை பற்றியே சிந்திக்கும் அவளது எண்ணம் உயர்வானது” என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

மேற்குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்களை வைத்துப் பார்க்கின்ற பொழுது  இவ்வாறான கவிதைகள் மற்றும்  போர் இலக்கியங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ள அகவுணர்வுகள்   உண்மைச் சம்பவங்களின் பின்னணியிலேயே எழுந்தன என்பதை புலப்படுத்துகின்றன .

ஒருபுறம் வீரமும் தியாகமும் நிறைந்த போராட்டமானது மறுபுறம் தனிமனித மனங்களின் ஆழமான காயங்களை இனவிடுதலை என்ற உன்னத இலட்சியத்திற்காக தாங்கி நின்றவாறே  பயணித்திருக்கின்றது என்பதை எடுத்துக் காட்டுகின்றது.

கெடுக சிந்தை கடிது இவள் துணிவே

மூதில் மகளிராதல் தகுமே

மேல்நாள் உற்ற செருவிற்கு இவள் தன்னை

யானை எறிந்து களத்து ஒழிந்தனனே

நெருநல் உற்ற செருவிற்கு இவள் கொழுநன்

பெருநிரை விலக்கி ஆண்டு பட்டனனே

இன்றும் செருப்பறை கேட்டு, விருப்புற்று மயங்கி

வேல் கைக்கொடுத்து வெளிது விரித்து உடீஇ

பாறு மயிர்க் குடுமி எண்ணெய் நீவி

ஒரு மகன் அல்லது இல்லோள்

செருமுகம் நோக்கிச் செல்க என விடுமே!” (புறம்: 279)

என்ற புறநாநூறு பாடலில்  மறக்குடியில் பிறந்த ஒரு பெண்  முதல் நாள் நடந்த போரில் தனது தந்தை யானையைக் கொன்று தானும் இறந்து போக  நேற்று நடந்த போரில் அவளது  கணவன் இறந்திருந்தும் இன்று போர்ப்பறை ஒலிப்பதைக் கேட்டு விருப்பம் கொண்டு இருநாளிலும் போர்புரிந்து இறந்துப்பட்ட தந்தையையும் தலைவனையும் நினைத்து வருந்தாது அவள் தயங்காமல் வீட்டுக்கொரு வீரன் போர்க்களம் போக வேண்டும் என்பதால் எஞ்சி நின்ற தன் சிறிய மகனை அன்போடு அழைத்து வெண்மையான ஆடையை உடுத்தித் தலையைச் சீவிமுடித்து வேலை எடுத்துக் கையிலே கொடுத்து போர்க்களத்தை நோக்கி அனுப்பி வைத்தாள் என்ற செய்திக் குறிப்புள்ளது.

அன்று பல்லாயிரமாண்டுகளுக்கு முன்னர் நடந்த  நிகழ்வுகளைப் போன்ற நிகழ்வுகள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் நிகழ்துள்ளதற்கு சான்றுகள் உள்ளன.

06.02. 2006ல்  கிளிநொச்சி அக்கராயனைச் சேர்ந்த திருமதி தியாகராசா என்ற தாய் தனது தனது மகளான ஜெனிதாவை போராட்டத்தில் இணைத்துவைத்து “தமிழீழ விடுதலைப் போராட்டம் நீடித்துச் செல்லக்கூடாது. விரைவில் தமிழீழ தனியரசை நாங்கள் அடையவேண்டும். அதற்காக எங்கள் தலைவரின் கையை நாம் பலப்படுத்த வேண்டும். அனைத்து தாய்மாரும் தமது பிள்ளைகளைப் போராட்டத்தில் முன்வந்து இணைந்து தலைவரின் கையை பலப்படுத்த வேண்டும். அதற்காகவே நான் எனது மகளை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முன்வந்து இணைக்கின்றேன்” என வலயப் பொறுப்பாளர்   குட்டிமணியிடம்  தெரிவித்திருந்தமை அக்காலத்தில் பத்திரிகைகளிலும் இணைய செய்திகளிலும் வெளியாகியிருந்தமை இங்கு குறிப்பிடத் தக்கது

இதேபோல் மன்னார் மாவட்டத்தின் பலாப்பொருமாள் கட்டு வட்டக்கண்டல் எனும் பகுதியில் வசித்து வரும் சண்முகம் காளியம்மா எனும் இத்தாயார் தனது ஆறு பிள்ளைகளில் ஒருவரை தாயக விடுதலைப் போருக்காக தானாகவே முன்வந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் இணைத்து வைத்தபோது  கூறியதாவது:

“எனக்கு ஆறு பிள்ளைகள் இருக்கின்றார்கள். எனது கணவர் மன்னார்ப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரின் தாக்குதலுக்குள்ளாகி சுகவீனமுற்றிருந்து 1997 ஆம் ஆண்டு இறந்து விட்டார். அவர் உயிரோடு இருக்கும் போது இரண்டு பிள்ளைகளை தேச விடுதலைப் போருக்கு அனுப்பவேண்டும் என்று கூறிவருவார். அவர் இறந்ததன் பின்புதான் எனது பிள்ளைகளுக்கு போராடும் வயது நிரம்பியதால் இப்போது நான் எனது மகனை இயக்கத்தில் இணைக்கிறேன். விடுதலைப் போருக்காக ஒரு பிள்ளையைப் பெற்ற பெற்றோர்கள் கூட தமது பிள்ளைகளை இணைத்துள்ளார்கள். எனவே ஆறு பிள்ளைகளைப் பெற்ற நான் ஒரு பிள்ளையையேனும் போராட்டத்திற்கு அனுப்பாவிட்டால் தேசம் என்னை மதிக்காது. எனது மகனும் என்னுடைய இலட்சியத்தையும் எனது கணவரின் இலட்சியத்தையும் நிறைவேற்றுவான் என்பதில் எனக்கு பூரண நம்பிக்கை உண்டு”  என  அத் தாயார் தெரிவித்தமையை ஆகஸ்ட்  2006ல் புதினம் பத்திரிகை  வெளியிட்டிருந்தது .

இந் நிகழ்வானது சங்ககால தாயொருத்தி தனது மகனை பெற்று பாதுகாத்தல் தன் கடமைதான் ஆயினும் மகனின் கடமையானது  போர்க்களத்திலே  யானையை எதிர்க்கும் ஆற்றலுடன் போரிடுவது என்பதை உணர்ந்து போருக்கு அனுப்புகின்றாள். இப் பாடலை பொன்முடியார் எனும் சங்ககாலப் பெண் புலவர் பாடியமை ஓர் தாயின்  போர்க்கால கடமை  என்ன என்பதை உணர்த்தி நிற்கின்றது.

ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே;
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே,
ஒளிறு வாள் அருஞ் சமம் முருக்கி,
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே. (புறம் 312)

இந் நிகழ்வுகளை எடுத்துக்கூறும்  தமிழீழ எழுச்சிப்பாடல்

"மகனே மகனே போய்வாடா மண்ணை மீட்கப் போய்வாடா

 அன்னைதேசம் அயலார் கையில் இருப்பது சரியல்ல 

 புயலென போரிட போய் வாடா பூமி அதிரட்டும்  போய்வாடா"

என்பதாகும்.


இவ்வாறு தனது கடமையை உணர்ந்து மகனை போருக்கு அனுப்பிவைத்த தாய்மானம் பின்னர் பிள்ளையை நினைத்து நினைத்து எப்படி தவிக்கின்றது என்பதை பெண்கள் பாடிய தமிழீழ எழுச்சிப் பாடல்கள் கோடிட்டுக் காட்டத்  தவறவில்லை என்பதற்கு ஆதாரமாக இப்பாடலில் வருகின்ற பின்வரும் வரிகளை எடுத்துக் காட்டலாம்.

"அன்னையிடத்தில் பால் குடித்த ஈரம் உதட்டில் காயவில்லை

உன்னை போருக்கு அனுப்பிவிட்டு உள்ளம் ஏனோ தாங்கவில்லை"

இங்கு நாம் சங்க கால இலக்கியமோ,  தமிழீழ  போர்க்கால இலக்கியமும் காட்டாத ஒரு மேன்மையான தியாகச் செயலின் உச்சத்தை இறுதிபோரின் சமர்களத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தில் காணலாம். தமிழீழ விடுதலைப் போராட்ட வலராற்றில் விடுதலைப் புலிகளின் ஓர்மத்துக்கும், விடாமுயற்சியையும் காட்டிநின்ற  ஆனந்தபுர பெரும் சமருக்கு மகளிர்படையணிகள்  சார்பாக தலைமை தாங்கிய மாலதி  படையணியின் சிறப்புத் தளபதி  பிரிகேடியர் விதுசா , சோதியா படையணி சிறப்புத் தளபதி பிரிகேடியர் துர்க்கா அவர்களுடன் போர்க்களத்திற்கு சென்ற மாலதி படையணித் தளபதி கேணல் தமிழ்ச்செல்வி அவர்கள் தனது  சிறு குழந்தையை போராளியான தனது  கணவர் பூவண்ணனிடம் விட்டுவிடு போர்க்களத்துக்குச் சென்றார். அவரது வீர வலராறு பற்றி ஆனந்தபுர சமர் வரலாற்றுப்பதிவுகள் பின்வருமாறு பதிவிடுகின்றன:

“04.04.2009ல் அதிகாலையில் இடம்பெற்ற பெரும் உடைப்புச் சமரில் பிரிகேடியர் விதுசா, பிரிகேடியர் துர்கா உள்ளிட்ட பெரும் தளபதிகள் வீரமரணமடைய அன்றைய தினம் இரவே எஞ்சிய போராளிகள் அனைவரையும் ஒருங்கிணைத்துக் கொண்டு மீண்டும் ஒரு உடைப்புச் சமரை மேற்கொள்ள தளபதிகளும் போராளிகளும் தயாராகினர். அந்த உடைப்புச் சமருக்கு எஞ்சிய மகளிர் போராளிகளையெல்லாம் ஒருங்கிணைத்துக்கொண்டு தமிழ்ச்செல்வி களம் இறங்கினாள். எப்படியாவது பெட்டி முற்றுகைக்குள்  இருக்கும் போராளிகளைக் காப்பாற்றி முற்றுகையை உடைத்து அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவள் மனதில் இருந்தது. இறுதியாக ஒரேயொருவார்த்தை ”என்ர பிள்ளையைப் பத்திரமாகப் பாருங்கோ…” அது தான் அவளது கடைசித் தொடர்பாடலாக இருந்தது.

அந்த உடைப்புச்சமர் உக்கிரமாய் நடந்து பச்சைப்புல்மோட்டைக் கடல் நீரேரியூடாக ஒரு உடைப்பொன்றை ஏற்படுத்தி போராளிகள் நகர்ந்து கொண்டிருக்கும் போதுதான் தற்துணிவும் விடாமுயற்சியும், வைராக்கியமும் கொண்ட தமிழ்ச்செல்வி என்கின்ற பெருமலை எதிரியின் குண்டேந்தி அந்த இடத்திலேயே சரித்திரமாய் வீரவரலாற்றின் பக்கங்களில் இடம்பிடித்துக்கொண்டாள்.”

இவ்வாறாக வீரம்நிறைந்த பெண்கள் தமிழீழத்தில் வாழ்ந்தார்கள் என்பது உலகே  கண்டு வியந்த உண்மை என்பதுடன் அவர்கள் தமது அக உணர்வுகளை போர்க்கால இலக்கியங்கள் வாயிலாக வெளிப்படுத்தவும் பூரண சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தது. இதற்கெல்லாம் காரணம் அப்பெண்களுக்கான சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் வழங்கிய தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் ஆழ்ந்த  சிந்தனையே ஆகும்  .

 

-------> பிறேமலதா பஞ்சாட்சரம் -சமகளம்

  • Like 1


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.