Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பால், மனித உடலுக்கு ஏற்ற பானமா

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சிராஜ்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 6 மார்ச் 2024, 02:40 GMT
    புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்

'எங்கள் நிறுவனத்தின் பிஸ்கட்டில் அதிக பால் உள்ளது, எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பை பாலில் கலந்து குடித்தால் உங்கள் பிள்ளைகள் பல சாதனைகளைப் புரிவார்கள்' போன்ற பால் தொடர்பான பல விதமான விளம்பரங்களை பல வருடங்களாக தொலைக்காட்சியில் பார்த்திருப்போம்.

உலகிலேயே அதிகமாக பால் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா தான். 2022-23ஆம் ஆண்டில் இந்திய நாட்டின் மொத்த பால் உற்பத்தி 230.58 மில்லியன் டன்களாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று மத்திய அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன.

மாட்டுப்பால் என்பது மனித உடலுக்கு மிகவும் அத்தியாவசியமான, ஆரோக்கியமான ஒரு பானம் என்ற கருத்து இந்திய சமூகத்தில் பரவலாக உள்ளது. இரவில் ஒரு கிளாஸ் பால் குடித்துவிட்டு தூங்குவதை பலர் ஒரு தினசரி பழக்கமாக கடைபிடிக்கின்றனர்.

ஒரு குறிப்பிட்ட குழந்தைப் பருவத்தைக் கடந்த பிறகு, மனிதனைத் தவிர வேறு எந்த மிருகமும் வாழ்நாள் முழுவதும் பால் குடிப்பதில்லை, குறிப்பாக வேறு மிருகத்தின் பாலை.

பால் என்பது தினமும், எல்லோரும் குடிக்கக்கூடிய ஒரு பானம் தானா? அதிலுள்ள சத்துக்கள் என்ன? தினசரி எவ்வளவு பால் எடுத்துக்கொள்ளலாம்? யாரெல்லாம் பால் குடிக்கக்கூடாது? போன்ற பல கேள்விகளுக்கான பதிலே இந்தக் கட்டுரை.

 
பால், மனித உடலுக்கு ஏற்ற பானமா

பட மூலாதாரம்,GETTY IMAGES

அசைவம் சாப்பிடுவோருக்கு பால் அவசியமா?

பால் என்பது கால்சியம், புரதம் போன்ற அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்த ஒரு பானம் தான், ஆனால் அசைவ உணவை போதுமான அளவு எடுத்துக் கொள்பவர்களுக்கு பாலை உணவில் சேர்த்துக் கொள்ளாவிட்டாலும் எந்த பிரச்னையும் ஏற்படாது என்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் உணவு ஆலோசகர் அருண் குமார்.

"புதிய கற்காலத்தின் போது மனிதர்களுக்கு பல விதமான சத்துக் குறைபாடுகள் இருந்தன. எனவே அதை பூர்த்தி செய்ய, கால்நடைகளை அதிகம் வளர்த்து, கிடைக்கும் பாலை தினமும் அருந்தும் வழக்கம் தோன்றியது. அந்த காலத்தில் விவசாய பொருட்களை மட்டுமே நம்பி இருக்க முடியாத நிலை இருந்ததால் தோன்றிய இந்த பழக்கம், 10,000 வருடங்களாக சமூகத்தில் தொடர்கிறது. இப்போது நமது டயட்டை சரியாக திட்டமிட்டால், பால் அவசியமில்லை" என்கிறார் மருத்துவர் அருண் குமார்.

"சைவ உணவுகளை மட்டுமே உண்பவர்கள் கண்டிப்பாக பால் எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பிட்ட அளவு உள்ளது. எல்லோருக்கும் பால் ஒத்துக்கொள்ளுமா என்று கேட்டால், இல்லை. காரணம் பாலில் லாக்டோஸ் எனும் சர்க்கரை உள்ளது. அதை ஜீரணிக்க நமது குடலில் லாக்டேஸ் எனும் என்சைம் இருக்க வேண்டும். இந்த என்சைம் இல்லையென்றால் பல உடல்நலக் கோளாறுகள் உண்டாகும்" என்கிறார் மருத்துவர்.

 
பால், மனித உடலுக்கு ஏற்ற பானமா

பட மூலாதாரம்,DOCTORARUNKUMAR/FACEBOOK

படக்குறிப்பு,

குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் உணவு ஆலோசகர் அருண் குமார்

பாலில் உள்ள சத்துக்கள் என்ன?

"பொதுவாக பால் என்றாலே அதிகமாக எடுத்துக்கொள்ளப்படுவது பசும்பால் தான். அதற்கடுத்து எருமைப் பால். கலோரிகளைப் பொறுத்தவரை நூறு கிராம் பசும்பாலில் 67 கலோரிகள் உள்ளது, ஆனால் எருமைப் பாலில் 117 கலோரிகள் உள்ளது. இதனால் தான் எருமைப் பால் தொடர்ந்து குடித்தால் உடல் எடை கூடுகிறது" என்கிறார் மருத்துவர் அருண் குமார்.

"நூறு கிராம் பசும்பாலில் கால்சியம் சத்து 120 என்ற அளவிலும், எருமைப் பாலில் 210 என்ற அளவிலும் உள்ளது. புரதங்களைப் பொறுத்தவரை பசும்பாலில் 3.2 என்ற அளவிலும், எருமைப் பாலில் 4.3 என்ற அளவிலும் உள்ளது. ஆனால் இது கேசின் புரதம், அதாவது இவ்வகை புரதங்கள் ஜீரணத்திற்கு உகந்தவை அல்ல. இதனால் தான் நமது குடலில் லாக்டேஸ் என்சைம் இல்லையென்றால் பல உடல்நலப் பிரச்னைகள் உண்டாகும் என முன்னர் கூறியிருந்தேன்.

அதே போல கொழுப்பைப் பொறுத்தவரை பசும்பாலில் 4.1, எருமைப் பாலில் 6.5. எனவே எருமைப்பாலில் தான் சத்துக்கள் அதிகமாக உள்ளன" என்கிறார் மருத்துவர்.

பால், மனித உடலுக்கு ஏற்ற பானமா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இயற்கையாக பால் என்பது பெரியவர்கள் குடிக்கக்கூடிய பானமாக இருந்ததில்லை என்கிறார் மருத்துவர் அருண் குமார்.

யாரெல்லாம் பால் குடிக்கக்கூடாது?

தொடக்கத்தில் இந்த லாக்டேஸ் என்சைம் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளிடம் மட்டுமே இருந்ததாகவும், ஆனால் மனிதனின் தினசரி பால் அருந்தும் பழக்கத்தால் காலப்போக்கில் மனித உடல் தன்னை மாற்றிக்கொண்டது எனவும், எனவே இயற்கையாக பால் என்பது பெரியவர்கள் குடிக்கக்கூடிய பானமாக இருந்ததில்லை என்கிறார் மருத்துவர் அருண் குமார்.

"பால் என்பது அஜீரணக் கோளாறுகளுடன் நேரடி தொடர்புடையது. சிலர் மிகவும் சாதாரணமாக தினமும் ஒரு லிட்டர் பால் வரை குடிப்பார்கள். ஆனால் லாக்டோஸ் அலர்ஜி இருப்பவர்களுக்கு அரை கிளாஸ் பால் குடித்தால் கூட வாயுத்தொல்லை, நெஞ்செரிச்சல், வயிற்றுப்போக்கு மற்றும் பிற வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படலாம். இவர்கள் பாலை தவிர்க்க வேண்டும்." என்கிறார் மருத்துவர்.

"மாட்டுப்பாலில் அதிகளவு சத்துக்கள் உள்ளதால் இதை குழந்தைகளுக்கு கொடுப்பதால் எடை கூடும் தான், ஆனால் அதை மட்டுமே கொடுப்பது நல்லதல்ல. சில குழந்தைகள் மாட்டுப்பாலை குடித்துவிட்டால் வேறு உணவுகளை தவிர்த்து விடுவார்கள். அது ஆபத்தானது, ஏனென்றால் மாட்டுப்பாலில் இரும்பு சத்து மிகவும் குறைவாக உள்ளது."

"ஒரு குழந்தை 13 லிட்டர் பால் குடித்தால் தான் ஒரு நாளுக்கு தேவையான இரும்பு சத்தைப் பெற முடியும். அவ்வளவு பால் குடிப்பது சாத்தியமில்லை. அது மட்டுமில்லாது பாலில் இருக்கும் அதிகப்படியான கால்சியம் கிடைக்கும் சிறிதளவு இரும்பு சத்தையும் பாதியாக குறைத்து விடும். எனவே ரத்தசோகை ஏற்படும்" எனக் கூறுகிறார் மருத்துவர் அருண் குமார்.

"ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தாய்ப்பாலை தவிர சிறந்த உணவு வேறு எதுவும் இல்லை. ஆனால் சில குழந்தைகளுக்கு நான்கு மாதத்தில் கூட மாட்டுப்பால் கொடுக்கிறார்கள். இதனால் புரதம் சார்ந்த அலர்ஜி ஏற்பட்டு, வயிற்றில் இரத்தக் கசிவு ஏற்படும் வாய்ப்பு கூட உள்ளது. நீர்சத்து குறைபாடு முதல் சிக்கல்கள் உண்டாக வாய்ப்புள்ளது. 2 வயதுக்கு மேல் தான் மாட்டுப்பாலை நன்றாக ஜீரணிக்கும் சக்தி அவர்களுக்கு வரும்" என்கிறார் மருத்துவர் அருண் குமார்.

 
பால், மனித உடலுக்கு ஏற்ற பானமா
படக்குறிப்பு,

ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன்

தினசரி எவ்வளவு பால் குடிக்கலாம்?

சில ஆண்டுகளுக்கு முன்பு 'கிரிக்கெட் வீரர் தோனிக்கு மிகவும் பிடித்த பானம் பால். தினமும் நான்கு லிட்டர் பசும்பால் குடிப்பதால் தான் அவரால் எளிதாக ஹெலிகாப்டர் ஷாட்களை அடிக்க முடிகிறது' என்ற செய்தி இணையத்தில் பரவியது. இதற்கு ஒரு பேட்டியில் பதிலளித்த தோனி, தான் ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் பால் வரை மட்டுமே எடுத்துக்கொள்வதாக கூறியிருந்தார்.

"தோனியைப் போல அனைவராலும் 1 லிட்டர் பாலை தினசரி எடுத்துக்கொள்ள முடியாது. அவர் செய்யும் உடற்பயிற்சிக்கு அது சரியாக இருக்கலாம். சராசரி மனிதர்களுக்கு அது ஆரோக்கியமானது அல்ல, ஆனால் 400 மில்லி வரையிலான பால் அல்லது 400 கிராம் தயிர் நிச்சயமாக எடுத்துக்கொள்ளலாம்" என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன்.

"இப்போது பல குடும்பங்களில் வாரத்தில் இரண்டு அல்லது ஒரு நாள் மட்டும் தான் அசைவ உணவு எடுத்துக்கொள்கிறார்கள். எனவே அவர்களுக்கு தினமும் பால் எடுத்துக்கொள்வது நல்லது தான். ஆனால் முதியவர்களுக்கு பால் தொடர்பான அஜீரணக் கோளாறுகள் இருந்தால், மோராக 400 மில்லி வரை எடுத்துக்கொள்ளலாம்." என்கிறார் அவர்.

பால், மனித உடலுக்கு ஏற்ற பானமா

பட மூலாதாரம்,SARAVANAKUMARM/FACEBOOK

படக்குறிப்பு,

ஹோமியோபதி மருத்துவர் சரவண குமார்.

பாலுடன் சர்க்கரை சேர்த்து குடிக்கலாமா?

"காலையில் 200 மில்லி, இரவில் 200 மில்லி என ஒரு நாளுக்கு 400 மில்லி வரை பாலை எடுத்துக்கொள்வது பாதுகாப்பான அளவு. ஆனால் பாலில் சர்க்கரை கலந்து குடிப்பதை தவிர்க்க வேண்டும். பாலில் ஏற்கனவே போதுமான அளவு கலோரிகள் உள்ளதால், தொடர்ந்து பல வருடங்களுக்கு பாலில் சர்க்கரை சேர்த்து குடிப்பது உடலுக்கு ஆபத்தாக மாறிவிடும்" என எச்சரிக்கிறார் ஹோமியோபதி மருத்துவர் சரவண குமார்.

"உதாரணமாக ஒரு ஸ்பூன் சர்க்கரை கலந்து இருவேளை பால் குடிக்கிறோம் என்றால், ஒரு நாளுக்கு 40 கிராம் சர்க்கரை. அதுவே ஒரு மாதத்திற்கு என கணக்கு போட்டால் பாலுடன் மட்டுமே ஒரு கிலோவுக்கு அதிகமான சர்க்கரையை நாம் உட்கொள்கிறோம். குழந்தை பருவத்திலிருந்தே இதை செய்கிறோம் என்றால் சற்று யோசித்து பாருங்கள். எனவே சர்க்கரை இல்லாமல் பால் குடிப்பது ஒரு நல்ல வழியாக இருக்கும்"

"அல்சர், லாக்டோஸ் அலர்ஜி இருந்தால் கண்டிப்பாக பாலை தவிர்க்க வேண்டும். அஜீரணக் கோளாறுகள் இருந்தால் பால் அருந்தக் கூடாது. கால்சியம் சத்து பெறுவதற்கு பால் தவிர்த்து பார்த்தால், அசைவம் உண்பவராக இருந்தால் ஆட்டுக் கால் சூப், முட்டையின் வெள்ளைக் கரு, ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம். நெய், வெண்ணெய், நிலக்கடலை, கீரைகள் ஆகியவையும் கால்சியம் நிறைந்த உணவுகள்" என்று கூறுகிறார் ஹோமியோபதி மருத்துவர் சரவண குமார்.

 
பால், மனித உடலுக்கு ஏற்ற பானமா

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஏ1 அல்லது ஏ2 பால், எது சிறந்தது?

நாட்டு ரக மாடுகளின் ஏ2 ரக பால் புரதம் நிறைந்தது என்றும் ஏ1 ரகம் சார்ந்த வெளிநாட்டு மாடுகளின் பாலை தொடர்ந்து பருகி வந்தால் சர்க்கரை நோய் உட்பட பல நோய்களுக்கு வழிவகுக்கும் என்ற கருத்து உண்மையா என மருத்துவர் அருண்குமாரிடம் கேட்டோம்.

"இது தொடர்பான ஆராய்ச்சிகள் உலகமெங்கும் நடந்துள்ளன. பாலில் உள்ள சில புரத அமைப்புகளில் வேறுபாடுகள் இருக்கிறது, ஆனால் ஏ1 பால் உடலுக்கு நல்லதல்ல என்பதற்கு எந்த வலுவான ஆதாரமும் இல்லை. நம் நாட்டு மாடுகளில் 98% ஏ2 ரக பாலை தரக்கூடியவை தான். எருமைப் பால் என்பது 100% ஏ2 தான். வெளிநாட்டு மாட்டினமான ஜெர்சி மாடுகள் கூட ஏ2 பாலை தான் கொடுக்கின்றன. சில வெளிநாட்டு இனங்கள் மட்டுமே ஏ1 ரக பாலைக் கொடுக்கின்றன." என்கிறார் மருத்துவர் அருண்குமார்.

இது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணனிடம் கேட்ட போது, "ஏ1 பாலா, ஏ2 பாலா என ஆராய்ச்சியெல்லாம் செய்யத் தேவையில்லை. கடைகளில் அல்லது பண்ணைகளில் கிடைக்கும் பாலை நன்கு காய்ச்சி குடித்தாலே போதும்" என்று கூறினார்.

https://www.bbc.com/tamil/articles/cn3mg8rkxypo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.