Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
குடியுரிமை திருத்தச் சட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

11 மார்ச் 2024
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமலுக்கு கொண்டு வந்தது பாஜக அரசு. இச்சட்டத்தின் மூலம் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து 2014, டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவுக்குள் நுழைந்த, முஸ்லிம் அல்லாத மதப்பிரிவினர் சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட மாட்டார்கள்; மேலும் இந்திய குடியுரிமை பெறவும் வழிவகை செய்கிறது.

கடந்த வருடத்தின் இறுதியில் கொல்கத்தாவில் நடைபெற்ற ஒரு பேரணியில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ - Citizenship Amendment Act)' என்பது நாட்டின் சட்டம். இந்த சட்டத்தை எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றனர். ஆனால், குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தும். அதை அமல்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது," என்று கூறியிருந்தார்.

இன்று நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலாகியுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இதுதொடர்பான அறிவிப்பு அரசிதழில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது.

சர்ச்சைக்குரிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, 2019ஆம் ஆண்டு மக்களவையில் நீண்ட விவாதத்துக்கு பிறகு நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 311 உறுப்பினர்களும், எதிராக 80 உறுப்பினர்களும் வாக்களித்தனர். மசோதா நிறைவேறியது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும், ஆதரவளித்த எம்.பி.க்களுக்கு நன்றி எனவும் அப்போது பிரதமர் நரேந்திர மோதி கூறியிருந்தார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் என்றால் என்ன? மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு அரசியல் தலைவர்கள், எதிர்க்கட்சிகளின் கருத்து என்ன?

 
குடியுரிமை திருத்தச் சட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டம்

1955ஆம் ஆண்டில் அமலில் இருந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவில் 2019இல் சில மாற்றங்களைச் செய்தது மத்திய அரசு. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத ரீதியான இன்னல்களுக்கு உள்ளாகி, 2014 டிசம்பர் 31க்கு முன்பாக இந்தியாவில் தஞ்சம் புகுந்த கிறிஸ்தவர்கள், இந்துக்கள், பார்சிகள், பெளத்தர்கள், சீக்கியர்கள் உட்பட 6 மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையில் இதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதில் முஸ்லிம்கள் சேர்க்கப்படவில்லை.

இந்த சட்டத்தின்படி அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவில் தஞ்சம் அடைந்த மேற்குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள், தங்களிடம் எந்தவித ஆவணமும் இல்லாத போதிலும், இங்கு 6 ஆண்டுகள் தங்கியிருந்தாலே அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும். 2019இல் இந்த சட்டத்திற்கான மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டு, அதற்கு இந்திய குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்தது.

ஆனால் இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான போராட்டங்கள் நடைபெற்றன. குறிப்பாக, இஸ்லாமிய மக்கள் இந்தியா முழுவதும் இந்த சட்டத்துக்கு எதிராக பெரிய அளவிலான போராட்டத்தில் ஈடுபட்டனர். மற்ற மதங்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் போது இஸ்லாமியர்களுக்கு மட்டும் ஏன் வழங்கக் கூடாது? எனக் கேள்விகள் எழுப்பப்பட்டன. இந்த போராட்டங்களின் போது நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர். இதனால் இந்த சட்டத்தை அமல்படுத்துவதை ஒத்திவைத்திருந்த மத்திய அரசு, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று முதல் அமல்படுத்தப்படும் என அறிவித்துள்ளது.

இது அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமை வழங்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் 14வது பிரிவை மீறும் செயல் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூறுகின்றன. மதத் துன்புறுத்தலுக்கு ஆளாகும் சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் முயற்சி என்று மத்திய அரசு கூறினாலும், இதன் மூலம் இஸ்லாமிய மக்களை நாடற்றவர்களாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று முஸ்லிம்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

 
குடியுரிமை திருத்தச் சட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

உள்துறை அமைச்சகம் கூறுவது என்ன?

இந்த சட்டத்தின் கீழ் குடியுரிமை பெற, ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் இதற்கான இணையதள போர்டல் விரைவில் தொடங்கப்படும் என்றும் உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

மேலும் தனது எக்ஸ் பக்கத்தில், "குடியுரிமை திருத்தச் சட்டம், 2019இன் விதிகள் குறித்து உள்துறை அமைச்சகம் இன்று அறிவிப்பை வெளியிடும். இதன் மூலம், சிஏஏ-2019இன் கீழ் தகுதியுள்ள எந்தவொரு நபரும் இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்" என பதிவிட்டுள்ளார்.

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் பக்கத்தில், “பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து மத ரீதியிலான இன்னல்கள் காரணமாக இந்தியாவுக்கு வந்த சிறுபான்மையினரை அனுமதிக்கும் குடியுரிமை திருத்த விதிகள், 2024இன் அறிவிப்பை மோதி அரசு வெளியிட்டுள்ளது.

"இந்த அறிவிப்பின் மூலம், இந்த நாடுகளில் வாழும் சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜைனர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு அளிக்கப்பட்ட மற்றொரு வாக்குறுதியை பிரதமர் திரு நரேந்திர மோதி நிறைவேற்றியுள்ளார். அவர்களுக்கு நீங்கள் இங்கேயே இருங்கள் உங்களுக்கான குடியுரிமை கிடைக்கும் என பிரதமர் நம்பிக்கை அளித்துள்ளார்," என்று கூறியுள்ளார்.

 
குடியுரிமை திருத்தச் சட்டம்

பட மூலாதாரம்,HINDUSTAN TIMES VIA GETTY IMAGES

அரசியல் தலைவர்கள் கூறுவது என்ன?

"தேர்தல் பத்திர விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கடுமை காட்டியுள்ள நேரத்தில், அதை திசைதிருப்பவே இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் இதை அமல்படுத்துவதன் மூலம், அஸ்ஸாம், மேற்கு வங்க மாநிலங்களில் பிரித்தாளும் சூழ்ச்சி மூலம் தேர்தல் ஆதாயம் அடையப் பார்க்கிறது பாஜக," என விமர்சித்துள்ளார் காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ்.

மேலும், "நாடாளுமன்றத்தில் 2019ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவை அமல்படுத்த மோதி அரசுக்கு நான்கு ஆண்டுகள் 3 மாதங்கள் தேவைப்பட்டுள்ளன. தனது அரசு மிகவும் நேர்த்தியாகவும் சரியான நேரத்திலும் செயல்படுகிறது என்று மோதி கூறிவருகிறார். சிஏஏ அமல்படுத்துவதற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நேரம் என்பது பிரதமர் மோதியின் பொய்க்கு மற்றொறு சிறந்த உதாரணம்," என்று அவர் கூறினார்.

"குடியுரிமை திருத்தச் சட்டத்தில் நல்லவை இருந்தால் அதை ஆதரிப்போம். கெட்டவை இருந்தால் கண்டிப்பாக அதை திரிணாமுல் காங்கிரஸ் எதிர்க்கும். ரமலான் மாதம் தொடங்கும் சமயத்தில் இதை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது என நான் அறிவேன். மக்கள் அமைதி காக்க வேண்டும், வதந்திகளை நம்பக் கூடாது" என கூறியுள்ளார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "குடியுரிமை என்ற மனிதநேயக் கொள்கையை மதம், இனத்தால் வேறுபடுத்தும் பிளவுவாதக் கொள்கையாக மாற்றியது ஒன்றிய பா.ஜ.க. அரசு. இசுலாமிய மதத்தவரையும், இலங்கைத் தமிழரையும் வஞ்சிக்கும் சிஏஏ சட்டத்தை இயற்றியது ஒன்றிய பா.ஜ.க அரசு. அதனை திமுக உள்ளிட்ட ஜனநாயகச் சக்திகள் கடுமையாக நாடாளுமன்றத்தில் எதிர்த்தன.

ஆனால் பா.ஜ.க.வின் பாதம் தாங்கியான அ.தி.மு.க. ஆதரித்து வாக்களித்ததால் தான் அச்சட்டம் நிறைவேறியது. மக்கள் எதிர்ப்பு காரணமாக அந்தச் சட்டத்தை இதுநாள் வரையில் அமல்படுத்தாமல் வைத்திருந்தது பா.ஜ.க.

திராவிட முன்னேற்றக் கழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் நாள், இந்திய நாட்டின் ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும் போற்றிப் பாதுகாக்கவும், அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மதச்சார்பின்மைக் கோட்பாட்டினை நிலைநிறுத்தவும், இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டம் - 2019-ஐ ரத்து செய்திட ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் அரசினர் தனித் தீர்மானத்தை நிறைவேற்றினோம்.

இப்போது, தேர்தலில் தனது அனைத்து அஸ்திரங்களும் எடுபடாமல் போன நிலையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதன் மூலமாகக் கரையேற முயற்சிக்கிறார் பிரதமர் மோதி. தேர்தல் நேரத்தில் மக்களின் உணர்ச்சிகளைச் சீண்டி அரசியல் ஆதாயம் அடையப் பார்க்கிறார் பிரதமர்.

அமைதிமிகு இந்தியாவில் பிளவுமிகு சட்டத்தைக் கொண்டு வந்த பாஜகவையும், அந்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த அடிமை அ.தி.மு.க.வையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்! தக்க பாடம் புகட்டுவார்கள்!" என்று பதிவிட்டுள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/cxez838np93o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குடியுரிமை திருத்தச் சட்டம் என்றால் என்ன? ஓர் எளிய விளக்கம்

குடியுரிமை திருத்தச் சட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

12 மார்ச் 2024, 03:37 GMT
புதுப்பிக்கப்பட்டது 12 மார்ச் 2024, 04:31 GMT

குடியுரிமை திருத்தச் சட்டத்தை இந்தியா முழுவதும் அமலுக்கு கொண்டு வந்திருக்கிறது மத்தியில் ஆளும் பாஜக அரசு. இச்சட்டத்தின் மூலம் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து 2014, டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன்பு இந்தியாவுக்குள் நுழைந்த, முஸ்லிம் அல்லாத மதப்பிரிவினர் சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட மாட்டார்கள்; மேலும் அவர்களுக்கு இந்திய குடியுரிமை பெறவும் வழிவகை செய்கிறது.

குடியுரிமை திருத்தச் சட்டம் என்றால் என்ன?

பொதுவாக வெளிநாடுகளிலிருந்து வந்து இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் இந்தியக் குடிமகனாக முடியாது.

அவர்கள் பொதுவாக நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவார்கள் அல்லது சிறையில் அடைக்கப்படுவார்கள்.

ஆனால், இந்தச் சட்டத் திருத்தம் இதில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. அவர்களை இந்தியக் குடிமகனாக அங்கீகரிக்க வழிவகை செய்யப்படுகிறது.

கடந்த 1955ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத்தில் 11 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டவருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்று விவரிக்கப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தச் சட்டத்தில் திருத்தத்தின்படி, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஹிந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள்,பார்சி இனத்தவர், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும், இந்தியாவில் குறைந்தது 6 ஆண்டுகள் வசித்தாலே அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம்.

மேலும், கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன் குடியேறியவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்றும் இந்த சட்டத்தில் உள்ளது.

 
குடியுரிமை திருத்தச் சட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் கூறுவது என்ன?

மதச்சார்பின்மை எனும் இந்தியாவின் அடித்தளத்தையே இது சிதைத்துவிடும் என்கிறார்கள் இந்தச் சட்டத்தை எதிர்ப்பவர்கள்.

மதத்தை அடிப்படையாகக் கொண்டு குடியுரிமை வழங்கப்படுவதை இந்தியாவின் எதிர்க்கட்சிகள் எதிர்கின்றன.

"இந்திய அரசமைப்பு மதத்தின் பெயரால் ஒருவரை பாகுபாட்டுடன் நடத்தக் கூடாது என்கிறது. அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என்றும் குறிப்பிடுகிறது. ஆனால், இந்தச் சட்டம் மதபாகுபாட்டிற்கு சட்ட அங்கீகாரம் தருகிறது" என்கிறார்கள் இதனை எதிர்ப்பவர்கள்.

"சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு வழங்குவதற்காகத்தான் இந்த சட்டம் என்றால் இதில் இஸ்லாமியர்களையும் சேர்த்து இருக்க வேண்டும். ஏன் பாகிஸ்தான் அகமதியாக்களையும், மியான்மர் ரோஹிஞ்சாகளையும் விட்டுவிட்டார்கள்" என கேள்வி எழுப்புகிறார்கள் அவர்கள்.

டெல்லியை சேர்ந்த வழக்கறிஞர் கெளதம் பாட்டியா, வெளிப்படையாகவும் அப்பட்டமாகவும், மத பாகுபாட்டிற்குச் சட்ட அங்கீகாரம் தருகிறது இந்த சட்டத் திருத்தம் என்றார்.

இலங்கையில் இன்னல்களை சந்தித்த இலங்கை தமிழர்களை ஏன் இந்த பட்டியலில் சேர்க்கவில்லை என்ற கேள்வியையும் முன் வைக்கிறார்கள்.

 
குடியுரிமை திருத்தச் சட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

எந்தெந்தக் கட்சிகள் எதிர்க்கின்றன?

காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சி, சிபிஎம், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி, மக்கள் ஜனநாயகக் கட்சி, மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகள் இதனை எதிர்கின்றன.

இந்தச் சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டபோது, இது கண்களுக்குப் புலப்படாத வகையில் இந்து-முஸ்லிம் பிரிவினைவாதத்தை முன்னெடுப்பதாக சிவ்சேனா சாம்னாவில் தலையங்கம் எழுதியது.

ஆனால், நாடாளுமன்றத்தில் இதனை ஆதரித்து இருக்கிறது சிவசேனா.

நாடாளுமன்றத்தில் இந்த சட்டத்திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, இதனைக் கடுமையாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்தார்கள். ஆனால், அதிமுக இந்தச் சட்டமசோதவை ஆதரித்தது.

 
குடியுரிமை திருத்தச் சட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?

இரண்டுக்கும் நெருக்கமான தொடர்பு உள்ளது. அஸ்ஸாமில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களைக் கண்டறியும் நோக்கில், தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதற்கான நிர்ணயிக்கப்பட்ட தேதி, 1971-ஆம் ஆண்டு மார்ச் 24-ஆக இருந்தது. என்ஆா்சி நடவடிக்கையின்படி, அஸ்ஸாம் மக்கள் மேற்குறிப்பிட்ட காலகட்டத்துக்கு முன்னதாக இந்தியாவில் வசித்து வந்தவா்கள் என்பதை நிரூபிக்க வேண்டும்.

இந்த நடவடிக்கை மதத்தை அடிப்படையாகக் கொண்டது அன்று. அதே வேளையில், குடியுரிமை திருத்தச் சட்டம் மதத்தை அடிப்படையாகக் கொண்டது.

அதேநேரம் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் விலக்கப்பட்ட வங்கதேச இந்துக்களுக்குக் குடியுரிமை வழங்க இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் வழிவகை செய்கிறது.

அப்படியானால், தேசிய குடிமக்கள் பதிவேட்டில் விலக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குடியேறிகள் இந்திய குடியுரிமை பெற்று அஸ்ஸாம் மாநிலத்திலேயே தங்க முடியும்.

இதன் காரணமாக வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த பல அமைப்புகள் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்கின்றன.

குடியுரிமை திருத்தச் சட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
குடியுரிமை திருத்தச் சட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

விலக்கப்பட்ட பகுதிகள் என ஏதேனும் இருக்கிறதா?

நுழைவு அனுமதிப் படிவம் (இன்னா்-லைன் பொ்மிட்) மூலம் பாதுகாக்கப்பட்டு வரும் அருணாசலப் பிரதேசம், நாகாலாந்து, மிசோரம் ஆகிய பகுதிகளுக்கும் சட்டத் திருத்த மசோதாவில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரிப்பவர்கள் என்ன சொல்கிறார்கள்?

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளும் இஸ்லாமியப் பெரும்பான்மை நாடுகள். ஒன்று அரசே இஸ்லாமிய அரசாக இருக்கிறது, அல்லது அங்கு இஸ்லாமிய ஆயுதக்குழுக்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. அவர்கள் அங்குள்ள சிறுபான்மை மக்களைக் குறிவைத்துத் தாக்குகிறார்கள். அவர்களுக்குப் பாதுகாப்பு தேவை என சிவராஜ் இதழின் ஆசிரியர் ஆர் ஜெகநாதன் இந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை ஆதரித்து இருந்தார்.

 
பிரதமர் மோதியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும்

பட மூலாதாரம்,GETTY IMAGES

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பாஜக அரசு என்ன சொல்கிறது?

குடியுரிமை பெறக் குறிப்பிட்ட பிரிவினா் அனுபவிக்கும் துயரங்களைப் போக்குவதற்கு இந்த மசோதா வழிவகுக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த சட்ட மசோதாவை அறிமுகப்படுத்தியபோது பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "காங்கிரஸ்தான் மதத்தின் பெயரால் நாட்டை பிரித்தது. அதனை சரி செய்யவே இந்த சட்டமசோதா" என்றார்.

"ஏற்கெனவே வங்கதேச பிரிவினையின் போதும், உகாண்டாவில் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்கள் தாக்கப்பட்ட போதும் சில சட்டப்பிரிவுகளை பயன்படுத்தி அங்கிருந்து வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டு இருக்கிறது," என்றும் அவர் அப்போது அவையில் தெரிவித்தார்.

"இது .001 சதவீதம் கூட சிறுபான்மை மக்களுக்கு எதிரானது இல்லை. இது ஊடுருவல்காரர்களுக்கு எதிரானது," என்றார்.

இந்த சட்டதிருத்த மசோதாவை ஆதரித்து 293 நாடாளுமன்ற உறுப்பினர்களும் , எதிர்த்து 82 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

https://www.bbc.com/tamil/articles/cev9g79kvgqo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்தாமல் இருக்க தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் உண்டா?

சட்டத்தை மாநில அரசுகள் அமல்படுத்தாமல் இருக்க முடியுமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

2019-ல் சிஏஏவுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்

கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 12 மார்ச் 2024

குடியுரிமை திருத்தச் சட்டத்தை தங்கள் மாநிலத்தில் செயல்படுத்தப்போவதில்லை என இந்தியாவின் சில மாநிலங்கள் அறிவித்திருக்கின்றன. குடியுரிமை மத்திய அரசின் சட்டமியற்றும் அதிகாரத்தின் கீழ் வரும் நிலையில், அது சாத்தியமா?

குடியுரிமை திருத்தச் சட்டம் கடந்த 2019ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதற்கான விதிகளை மத்திய உள்துறை அமைச்சகம் திங்கட்கிழமையன்று வெளியிட்டது.

பாகிஸ்தான், வங்கதேசம், அஃப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த இந்து, பௌத்தம், பார்சி, கிறிஸ்தவர், சமணம் ஆகிய மதங்களைச் சேர்ந்தவர்கள் 2014ஆம் ஆண்டிற்கு முன்பாக இந்தியாவிற்குள் நுழைந்திருந்தால், அவர்கள் இந்திய குடிமகனாக மாறுவதற்கு விண்ணப்பிக்கலாம். அவர்கள் இந்தியாவிற்குள் நுழைந்த தேதியை நிரூபிக்க தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து இந்த விண்ணப்பத்தைச் செய்யலாம்.

பிரிவு 1 A, பிரிவு 1 B என இரண்டு பிரிவுகளில் இதற்கான ஆவணங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. 1 A-வைப் பொறுத்தவரை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் வழங்கிய பிறப்புச் சான்றிதழ், வாடகை வீட்டிற்கான ஒப்பந்தம், அடையாள அட்டைகள், ஓட்டுநர் உரிமங்கள், கல்விச் சான்றிதழ்கள் போன்றவை ஆவணங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன. 1 B-ஐப் பொறுத்தவரை, இந்திய அரசு வழங்கிய விசா, மக்கள் தொகை கணக்கெடுப்பில் பதிவுசெய்யப்பட்ட ஒப்புகைச் சீட்டு, ஓட்டுநர் உரிமம், பொது விநியோக அட்டை, PAN அட்டை, திருமணச் சான்றிதழ் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. இவை அனைத்துமே 2014க்கு முன் பெறப்பட்டவையாக இருக்க வேண்டும்.

இந்த ஆவணங்கள் இருக்கும்பட்சத்தில் இந்த மூன்று நாடுகளைச் சேர்ந்தவர்கள், குடியுரிமைக்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதற்கென உள்ள https://indiancitizenshiponline.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து, தங்கள் சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

 

'தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட மாட்டாது'

சட்டத்தை மாநில அரசுகள் அமல்படுத்தாமல் இருக்க முடியுமா?

பட மூலாதாரம்,MK STALIN / FACEBOOK

இந்தச் சட்டத்தை இந்திய தேசிய காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகம், திரிணாமூல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாடி கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தேசியவாத காங்கிரஸ் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி, மக்கள் ஜனநாயகக் கட்சி, மதசார்பற்ற ஜனதாதளம் ஆகியவை எதிர்கின்றன.

முன்னதாக இந்தச் சட்டத்தை ஆதரித்த அ.தி.மு.கவும் இப்போது இதனை எதிர்ப்பதாகத் தெரிவித்திருக்கிறது.

இன்னும் சில வாரங்களில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வருமென சில வாரங்களுக்கு முன்பாக மத்திய அமைச்சர் ஷாந்தனு தாக்கூர் தெரிவித்தபோது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதற்குக் கண்டனம் தெரிவித்ததோடு, அந்தச் சட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட மாட்டாது என்று கூறினார்.

 
சட்டத்தை மாநில அரசுகள் அமல்படுத்தாமல் இருக்க முடியுமா?

பட மூலாதாரம்,@MKSTALIN/X

பினராயி விஜயன் எதிர்ப்பு

அதேபோல மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் மேற்கு வங்கத்தில் இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட மாட்டாது எனக் கூறினார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கான விதிகள் திங்கட்கிழமையன்று வெளியிடப்பட்ட நிலையில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் அதே கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.

"இஸ்லாமியச் சிறுபான்மையினரை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கேரளாவில் செயல்படுத்த மாட்டோம் என இடது ஜனநாயக முன்னணி அரசு பல முறை தெரிவித்திருக்கிறது. அந்த நிலையை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம். இந்த வகுப்புவாத, பிரிவினைவாத சட்டத்தை எதிர்ப்பதில் கேரளா ஒற்றுமையுடன் செயல்படும்," என தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருக்கிறார் பினராயி விஜயன்.

 
பினராயி விஜயன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

பினராயி விஜயன்

மாநில அரசுக்கு அதிகாரம் உண்டா?

ஆனால், குடியுரிமை வழங்குவது என்பது மத்திய அரசின் அதிகார வரம்பின் கீழ் வரும் நிலையில், மாநில அரசு ஒன்று குடியுரிமை தொடர்பான சட்டங்களை அமல்படுத்த முடியாது என அறிவிக்க முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது பிரிவு எந்தெந்த விவகாரங்கள் மத்தியப் பட்டியலிலும் மாநிலப் பட்டியலிலும் பொதுப் பட்டியலிலும் வருகின்றன என்பதை வரையறுக்கின்றது.

இதில் மத்தியப் பட்டியலில் மொத்தம் 97 விவகாரங்கள் இருக்கின்றன. இதில் 17வது அம்சமாக குடியுரிமையைக் குறிப்பிடும் 'Citizenship, naturalisation and aliens' என்ற விவகாரம் வருகிறது. இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து சட்டமியற்றும் உரிமை முழுக்க முழுக்க நாடாளுமன்றத்திற்கே உரியது. மத்தியத் தொகுப்பில் உள்ள இந்திய நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்களை மாநிலங்கள் மீற முடியாது.

 
கபில் சிபல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

கபில் சிபல்

மாநில அரசு தடுக்க முடியுமா?

காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரும் நாட்டின் குறிப்பிடத்தகுந்த வழக்கறிஞர்களில் ஒருவருமான கபில் சிபல், 2020ஆம் ஆண்டில் இதனைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

கேரள மாநிலத்தில் நடந்த கேரள இலக்கியத் திருவிழாவில் கலந்துகொண்ட அவர், "சிஏஏ நிறைவேற்றப்பட்டுவிட்டால், நான் அதைச் செயல்படுத்த மாட்டேன் என எந்த மாநிலமும் சொல்ல முடியாது. நீங்கள் எதிர்க்கலாம். சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரலாம், அந்தச் சட்டத்தைத் திரும்பப் பெறும்படி மத்திய அரசை வலியுறுத்தலாம். ஆனால், அதைச் செயல்படுத்த மாட்டேன் எனச் சொல்வது அரசியல்சாசன ரீதியாக சிக்கலானது," என்று தெரிவித்தார்.

மேலும், குடியுரிமை கோருபவர்கள் இதற்கென மத்திய அரசு வடிவமைத்துள்ள இணையதளத்தில் முன்பே பெற்ற ஆவணங்களோடு நேரடியாக விண்ணப்பிப்பார்கள் என்பதால், இதனை மாநில அரசு எப்படித் தடுக்க முடியும் அல்லது செயல்படுத்தாமல் இருக்க முடியும் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

 

'இது அரசியல் ரீதியான எதிர்ப்பு'

சட்டத்தை மாநில அரசுகள் அமல்படுத்தாமல் இருக்க முடியுமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

கோப்புப்படம்

இதனை ஒரு வகையான அரசியல் எதிர்ப்பு என்றுதான் புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியான ஹரி பரந்தாமன்.

"இது ஒரு அரசியல் ரீதியான எதிர்ப்பு, அவ்வளவுதான். இந்தியாவில் குடியுரிமை என்பது அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் இருக்கிறது. இது தொடர்பான சட்டங்களை நாடாளுமன்றம்தான் சட்டம் இயற்றும். இந்திய குடியுரிமை தொடர்பான சட்டம் 1955இல் இயற்றப்பட்டுவிட்டது. அதில்தான் இப்போது திருத்தம் செய்யப்படுகிறது. இதில் மாநிலங்கள் ஏதும் செய்ய முடியாது என்றாலும், இப்படிச் சொல்வது ஜனநாயக ரீதியில் ஆரோக்கியமானதுதான். இது ஒருவகையான எதிர்ப்புதான்.

"மத்திய அரசின் அலுவல் மொழி விவகாரம்கூட இப்படித்தான். மத்திய அரசு இந்தியை தன் அலுவலில் முழுமையாகப் பயன்படுத்தலாம் என்றாலும் மாநிலங்கள் தங்கள் எதிர்ப்பின் மூலம் அதனைத் தடுத்து வைத்திருக்கின்றன. அப்படித்தான் இதையும் பார்க்க வேண்டும்," என்கிறார் ஹரி பரந்தாமன்.

 

'இதை முழுமையாகச் செயல்படுத்த முடியாது'

சட்டத்தை மாநில அரசுகள் அமல்படுத்தாமல் இருக்க முடியுமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

கோப்புப்படம்

குடியுரிமை என்பதும் குடியுரிமை வழங்காமல் இருப்பதும் மத்திய அரசின் கீழ்தான் வருகிறது என்றாலும் மாநில அரசின் உதவியில்லாமல் எதையும் செய்ய முடியாது என்கிறார் தி.மு.கவின் செய்தித் தொடர்பாளரான கான்ஸ்டன்டீன்.

"சிஏஏ, தேசிய குடிமக்கள் பதிவேடு போன்ற எல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதுதான். குடிமக்கள் பதிவேட்டை மாநில அரசின் உதவியின்றி உருவாக்கிவிட முடியுமா? உதாரணமாக, இந்த சிஏஏ சட்டத்தில் இலங்கைத் தமிழர்கள் குடியுரிமை பெற முடியாது. அதற்காக, தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழர்களை வெளியேற்ற வேண்டும் என சொன்னால், அதை மாநில அரசுதானே செய்ய வேண்டும்? அதற்கு நாங்கள் ஒப்புக்கொள்ள மாட்டோம்," என்கிறார் கான்ஸ்டைன்டீன்.

ஆனால், இதுபோன்ற சட்டங்களை மத்திய அரசு அரசியலுக்காகத்தான் உருவாக்குகிறது என்கிறார் அவர்.

"இது பா.ஜ.கவின் மற்றும் ஒரு ஜும்லா. வட இந்தியாவில் இந்துத்துவ சக்திகள் வலுவாக உள்ள பகுதிகளில் தாங்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராக இருப்பதாகக் காட்டி, மத பிரிவினையைச் செய்ய முயல்கிறார்கள். இதையெல்லாம் அவர்களால் முழுமையாகச் செயல்படுத்த முடியாது," என்கிறார் அவர்.

 
சட்டத்தை மாநில அரசுகள் அமல்படுத்தாமல் இருக்க முடியுமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

கோப்புப்படம்

'இதற்கான தேவை என்ன?'

இதனை சட்ட ரீதியாகப் பார்ப்பதைவிட, இதற்கான தேவை என்னவெனப் பார்க்க வேண்டும் என்கிறார் மூத்த வழக்கறிஞரான கே.எம். விஜயன்.

"1947- 48-இல் இந்தியாவுக்கு வந்தவர்கள், 50களில் இந்தியாவில் வசித்தவர்கள் இந்தியக் குடிமக்கள் என ஏற்கனவே வரையறுக்கப்பட்டுவிட்டது. இப்போது புதிதாக இதைச் செய்வதற்கான நோக்கம், இஸ்லாமியர்களை ஒதுக்குவதாகக் காட்டுவதற்குத்தான். தேசிய குடிமக்கள் பதிவேட்டையெல்லாம் மாநில அரசுகளின் உதவியோடுதான் செய்ய வேண்டும். அதெல்லாம் எப்படி நடக்கும் என்பதைப் பார்க்க வேண்டும்," என்கிறார் விஜயன்.

ஆனால், இந்தியாவின் எல்லைப் பகுதிகள் மூடப்பட்டவை அல்ல என்பதால், அசாம் போன்ற மாநிலங்களில் உள்ள எதிர்ப்பை வேறு மாதிரி பார்க்க வேண்டும் என்கிறார் அவர்.

https://www.bbc.com/tamil/articles/c2v9xvxepq5o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.