Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அக்னி-5 ஏவுகணை முதல் சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஒரே ஏவுகணையில் பல்வேறு வெடிபொருட்களுடன் ஒரே நேரத்தில் பல இலக்குகளை தாக்கும் எம்.ஐ.ஆர்.வி. தொழில்நுட்பத்துடன் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அக்னி-5 ஏவுகணையின் முதல் சோதனை நேற்று (11) மேற்கொள்ளப்பட்டது.

இது வெற்றி அடைந்ததாக விஞ்ஞானிகளுக்கு இந்திய பிரதமர் மோடி தனது டுவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

அக்னி-5 ஏவுகணை

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘மிஷன் திவ்யாஸ்திரா திட்டத்தின் கீழ் எம்ஐஆர்வி தொழில்நுட்பத்துடன் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அக்னி-5 ஏவுகணையின் முதல் சோதனையை வெற்றிகரமாக நடத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை விஞ்ஞானிகளால் பெருமை கொள்கிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் அக்னி-5 ஏவுகணை முதல் சோதனை வெற்றி | First Successful Test Of A Missile Made In India

இந்த அக்னி1 முதல் 4 வரையிலான ஏவுகணைகள் 700 கிலோ மீற்றர் முதல் 3,500 கிலோ மீற்றர் தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டவை. அக்னி-5, சுமார் 5000 கிலோ மீற்றர் தூரம் வரை செல்லக் கூடியது.

இதன் மூலம் சீனாவின் வடக்கு பகுதி உட்பட முழு ஆசியாவையும் தாக்கும் எல்லைக்குள் கொண்டு வர முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

 

https://ibctamil.com/article/first-successful-test-of-a-missile-made-in-india-1710225591?itm_source=parsely-api

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீனாவின் வடக்கு எல்லை வரை சென்று தாக்கக்கூடிய ஏவுகணையை இந்தியா இப்போது பரிசோதித்தது ஏன்?

அக்னி-5

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,

அக்னி-5

13 மார்ச் 2024, 07:55 GMT
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

ஒரே சமயத்தில் பல குண்டுகளைச் சுமந்து சென்று பல இலக்குகளைக் குறிவைத்துத் தாக்கும் திறன்கொண்ட அக்னி-5 ஏவுகணையை வெற்றிகரமாகப் பரிசோதித்திருப்பதாக இந்தியா அறிவித்தது.

இது கடந்த திங்கள் கிழமை (மார்ச் 11-ஆம் தேதி) அன்று நிகழ்த்தப்பட்டது என்று அறிவிக்கப்பட்டிருகிறது.

இதற்கு ‘மிஷன் திவ்யாஸ்திரம்’ என்று பெயரிடப்பட்டிருக்கிறது. ஒடிஷாவில் அமைந்துள்ள டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் தீவு என்றழைக்கப்படும் சிறிய தீவில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.

அக்னி-5 ‘எம்.ஐ.ஆர்.வி’ எனப்படும் ‘மல்டிபிள் இன்டிபென்டெண்ட்லி டார்கெட்டபிள் ரீ-என்ட்ரி’ தொழில்நுட்பத்துடன் கூடியது. இது பல இலக்குகளைத் தாக்குவதற்கான ஆயுதங்களை தாங்கிச்செல்லும் ஒரே ஏவுகணையைக் குறிக்கும்.

உலகில் ஒரு சில நாடுகளே இந்தத் தொழில்நுட்பத்தை வைத்திருக்கின்றன.

இது இந்தியாவுக்கு ஒரு பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது.

இந்த தொழில்நுட்பத்தின் உதவியோடு, ஒரு நாடு நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள பல இலக்குகளை ஒரே ஏவுகணை மூலம் குறிவைத்துத் தாக்க முடியும்.

அக்னி-5 சோதனை வெற்றியடைந்தது குறித்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, தனது சமூக வலைதளங்களப் பக்கங்களில் இதில் பணியாற்றிய விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

"எம்ஐஆர்வி தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட, உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அக்னி-5-ஐ ‘மிஷன் திவ்யாஸ்திரத்தில்’ வெற்றிகரமாக சோதனை செய்ததில் டிஆர்டிஓ விஞ்ஞானிகள் பெருமிதம் கொள்கிறார்கள்," என்று பிரதமர் மோதி தெரிவித்திருக்கிறார்.

 
அக்னி-5

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,

அக்னி-5 அணு ஆயுதங்களையும் தாங்கிச் செல்லும் திறன்கொண்டது

எம்.ஐ.ஆர்.வி தொழில்நுட்பம் என்றால் என்ன?

அக்னி-5 ஏவுகணை 5,000 கிலோமீட்டர்கள் தூரம் வரை சென்று இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது.

இந்தியாவின் நீண்ட கால பாதுகாப்புத் தேவைகளைக் கருத்தில் கொண்டால் அக்னி-5 நாட்டுக்கு மிக முக்கியமானது என்று PTI செய்தி முகமை தெரிவித்துள்ளது.

அக்னி-5 கிட்டத்தட்ட முழு ஆசியாவையும், சீனாவின் முனையில் இருக்கும் வடக்குப் பகுதிகளையும், ஐரோப்பாவின் சில பகுதிகளையும் சென்று தாக்கும் அளவுக்குத் திறன்வாய்ந்தது.

முன்னதாக அக்னி-1 முதல் அக்னி-4 வரையிலான ஏவுகணைகள் 700கி.மீ முதல் 3,500கி.மீ தூரம் மட்டுமே சென்று தாக்கும் திறன் கொண்டிருந்தன.

தனது இலக்கை ஒரு சிறிய தவறும் இல்லாமல் சென்று தாக்கும் வகையில் அக்னி-5இல் சென்சார்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன என்று இந்தியா கூறுகிறது.

இந்தியாவில் 1990 முதல் அக்னி ஏவுகணைகள் உள்ளன. அப்போதிருந்து அதன் நவீன வடிவங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

அக்னி-5 ஏவுகணையில் உள்ள எம்.ஐ.ஆர்.வி தொழில்நுட்பம் 50 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது, ஆனால் இப்போது வரை அது சில நாடுகளில் மட்டுமே உள்ளது, என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் தெரிவித்திருக்கிறது.

 

அக்னி-5 அணு ஆயுதங்களையும் தாங்கிச் செல்லும் திறன்கொண்டது.

இதுவரை எம்.ஐ.ஆர்.வி தொழில்நுட்பம் கொண்ட ஏவுகணைகள் ரஷ்யா, சீனா, அமெரிக்கா, பிரான்ஸ், மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளிடம் இருப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிக்கை கூறுகிறது. இந்த ஏவுகணைகளை நிலத்தில் அல்லது கடலில் நிறுத்தப்பட்டுள்ள நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவ முடியும்.

இதே வகையான ஏவுகணை அமைப்பை உருவாக்க பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது. இஸ்ரேலிடம் இந்த ஏவுகணை அமைப்பு உள்ளது, அல்லது அதை உருவாக்க முயற்சித்து வருகிறது என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் உள்ளன.

ஆயுதக் கட்டுப்பாடு மற்றும் பரவல் தடுப்பு மையத்தின் கூற்றுப்படி, எம்.ஐ.ஆர்.வி தொழில்நுட்பத்தை உருவாக்குவது மிகவும் கடினம். அதனால்தான் சில நாடுகளிடம் மட்டுமே இது உள்ளது. இதை உருவாக்க, பெரிய ஏவுகணைகள், சிறிய குண்டுகள், சரியான வழிகாட்டுதல், மற்றும் பறக்கும் போதே குண்டுகளை விடுவிக்கும் திறன் ஆகியவை தேவை.

1970- ஆம் ஆண்டிலேயே அமெரிக்கா இந்தத் தொழில்நுட்பத்தை வைத்திருந்தது. அதன்பிறகு சோவியத் யூனியனும் இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கியது. இந்தப் படியலில் இந்தியா புதிதாக இணைந்துள்ளது.

அக்னிபுத்ரி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இந்தியாவின் பெண் விஞ்ஞானிகள் அக்னி ஏவுகணைகளை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்ததாகக் கூறப்படுகிறது. 2019-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இப்படத்தில் அக்னி-4 ஏவுகணை திட்டத்தில் பணியாற்றிய விஞ்ஞானி டெஸ்ஸி தாமஸ் இருக்கிறார். இவர் ‘அக்னிபுத்ரி’ என்று அழைக்கப்படுகிறார்.

இந்தியாவிடம் இருக்கும் அக்னி ஏவுகணைகளின் திறன் என்ன?

கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் அக்னி ஏவுகணைகள் பலமுறை வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டிருப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் கூறுகிறது.

700கி.மீ. தூரம் வரை செல்லக்கூடிய அக்னி-1 ஏவுகணையிலிருந்து, 5,000கி.மீ. வரை செல்லக்கூடிய அக்னி-5 வரை இது முன்னேறியிருக்கிறது.

கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூன் மாதம், டிஆர்டிஓ அக்னி-P (ப்ரைம்) ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதித்தது. இது 1,000கி.மீ. முதல் 2,000கி.மீ. வரையிலான தூரம் செல்லக்கூடியது. இதனை சாலையிலிருந்தோ, ரயில் தளத்தில் இருந்தோ ஏவ முடியும்.

2007-ஆம் ஆண்டு அக்னி-5-ஐ உருவாக்குவதாக இந்தியா அறிவித்திருந்தது.

அக்னி-5-இன் முதல் வெற்றிகரமான சோதனை 2012-ஆம் ஆண்டு செய்யப்பட்டது. அப்போது டிஆர்டிஓ டைரக்டர் ஜெனரல் வி.கே.சரஸ்வத், இந்தியா எம்ஐஆர்வி தொழில்நுட்பத்தில் செயல்பட்டு வருவதாகக் கூறினார்.

அக்னி-5 திட்டத்தின் வெற்றியில் பெண்கள் முக்கிய பங்கு வகித்ததாகக் கூறப்படுகிறது.

இதுவரை இந்திய பாதுகாப்புப் படைகளிடம் இருக்கும் அக்னி-1 700கி.மீ. தூரம் செல்லக்கூடியது, அக்னி-2 2,000கி.மீ. செல்லக்கூடியது, அக்னி-3 2,500 கி.மீ. தூரம் செல்லக்கூடியது, அக்னி-4 3,500 கி.மீ. செல்லக்கூடியது.

அக்னி-5 நீண்ட தூரம் செல்லக்கூடியதாலும், அணுசக்தி திறன் கொண்டிருப்பதாலும், சீனாவை மனதில் வைத்தே இந்தியா இந்த ஏவுகணையை வடிவமைக்கத்துள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

அதே நேரத்தில், பாகிஸ்தான் போன்ற நெருங்கிய இலக்குகளுக்கு பழைய அக்னி ஏவுகணைகள் போதுமானது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

 
இந்தியப் பாதுகாப்புப் படைகள்

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,

கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் அக்னி ஏவுகணைகள் பலமுறை வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டிருக்கின்றன

இந்தியாவின் நோக்கம் என்ன?

அக்னி-5 மூலம் சீனாவின் விடுக்கும் ராணுவ, பாதுகாப்புச் சவால்களை முறியடிக்க முடியும் என இந்தியா நம்புகிறது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிக்கையின்படி, ஆராய்ச்சியாளர்கள் ஜோசுவா டி வைட் மற்றும் கைல் டெமிங் ஆகியோர், இந்தியாவின் எம்.ஐ.ஆர்.வி திட்டம் சீனாவுடனான பிராந்திய போட்டியின் வெளிப்பாடு என்று கருதுகின்றனர்.

இதிலிருந்து இந்தியா மூன்று நன்மைகளைப் பெற முடியும் என்றனர்:

  • சீனாவின் நகரங்களைக் குறிவைக்கக்கூடிய ஏவுகணைகள் இந்தியாவிடம் குறைவாகவே இருப்பதாக நம்பப்படுவதால், நிலத்திலிருந்து ஏவப்படக்கூடிய ஏவுகணைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது.
  • கடலில் இருந்து இயக்கப்படக்கூடிய, அணு ஆயுதங்களைத் தடுக்கக் கூடிய தொழில்நுட்பத்தில் இந்தியா பின்தங்கி விடாமல் இருப்பது. அணுசக்தியால் இயங்கும் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல்களில் (SSBNS) இந்தியாவை விட சீனா மிகவும் முன்னேறியுள்ளது.
  • சீனா பாலிஸ்டிக் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை அதாவது பி.எம்.டி-யை (BMD) உபயோகிக்க நினைத்தால், அதற்கு அக்னி-5 மூலம் பதிலடி கொடுக்க முடியும் என்று இந்தியா கருதுகிறது.

இந்தியா 1998-இல் பொக்ரான்-2 சோதனையைச் செய்தது. அணு ஆயுதங்களைப் பொறுத்தவரை, முதலில் அதனை தாம் பயன்படுத்தப்படுவதில்லை, அதாவது முதலில் பயன்படுத்துவதில்லை (‘No First Use’) என்ற கொள்கையை கடைப்பிடிப்பதாகக் கூறுகிறது.

 
இந்தியா, சீனா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

சீனாவுக்கு எதிராக இந்தியா தனது ராணுவத் திறன்களை வெளிப்படுத்தப் போராடி வருகிறது, என்று நிபுணர்கள் கருதுகின்றனர்

சீனாவுக்கு சவால் விட முடியுமா?

‘தி ஹிந்து’ நாளிதழிடம் பேசிய அல்பானி பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறையின் இணைப் பேராசிரியர் கிறிஸ்டோபர் கிளியரி, “சீனாவுக்கு எதிராக இந்தியா தனது ராணுவத் திறன்களை வெளிப்படுத்தப் போராடி வருகிறது. சீனாவின் பல ராணுவத் தளங்கள் இந்தியாவின் எல்லைக்கு அப்பாற்பட்டவை. அக்னி-5 இந்த இலக்குகளை எட்டுவதற்கு உதவுகிறது.,” என்றார்.

அக்னி-5 சோதனை நடத்துவதற்காக வங்காள விரிகுடாவின் மீது விமானங்கள் பறக்கக்கூடாது என்று இந்தியா அறிவித்தபோது, சீனா அதைக் கண்காணித்ததாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் அறிக்கை கூறுகிறது.

அந்தச் செய்தித்தாளிடம் பேசிய மூலோபாய விஷயங்களில் நிபுணரான ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் டி.எஸ்.துத்தா, "நாங்கள் அடிக்கடி டிஆர்டிஓவை விமர்சிக்கிறோம். ஆனால் ஏவுகணைத் தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை அந்நிறுவனம் பல வெற்றிகரமான திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. சீனாவும் தனது அணு ஆயுதங்களை நவீனமயமாக்கி வருவதைப் பார்க்கிறோம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்தியா பின்தங்க முடியாது,” என்று கூறியிருக்கிறார்.

சர்வதேச அரசியல் விவகாரங்களில் நிபுணரான பிரம்மா செல்லானி, தனது சமூக ஊடகப் பக்கத்தில், "அக்னி -5 ஏவுகணை, எதிரியின் தாக்குதலுக்கு எதிராக இந்தியா தனது அணுசக்தித் திறனை வெளிப்படுத்த உதவும் பாதுகாக்க உதவும். எதிரியின் ஏவுகணை அமைப்பை மறுபக்கத்தில் இருந்து முறியடிக்க இது உதவும். இந்தப் புதிய திறனை நிலைநிறுத்துவதற்கு முன் இந்தியா மேலும் பல சோதனைகளை நடத்த வேண்டும்,” என்று எழுதியிருக்கிறார்.

தெற்காசிய ராஜதந்திர விவகாரங்களைப் பிந்தொடர்ந்து வரும் டெரெக் ஜே கிராஸ்மேன், தனது சமூக ஊடகப் பக்கத்தில், "எம்.ஐ.ஆர்.வி தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட அக்னி-5 ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்ததற்காக இந்தியாவுக்கு வாழ்த்துக்கள். ஆனால் இப்போது ஏன்? எம்.ஐ.ஆர்.வி அணுசக்தி நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைய விரும்புகிறது. மேலும் தேர்தல்கள் நெருங்கிவிட்டன,” என்று பதிவிட்டிருக்கிறார்.

https://www.bbc.com/tamil/articles/c51j2771206o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.