Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை

சோம. அழகு

பிற உயிரின் துயருக்கு நெக்குருகும் கண்ணோட்டம் வாய்க்கப் பெற்ற மனங்களெல்லாம் ஆசீர்வதிக்கப் பெற்றவையா? அல்லது கொடுஞ்சாபத்திற்கு உள்ளானவையா? மிகச் சாதாரண காட்சிகளே போதுமானவையாக இருக்கின்றன, நம்மை மொத்தமாக உருக்குலையச் செய்ய. பரவலான பொருளில் பயன்படுத்தியிருக்கிறேன் எனினும் ‘சாதாரணம்’ என்பதற்கு இங்கு அளவுகோல் என்ன? உங்கள் சாதாரணங்கள் எனக்குப் பெரும்பாலும் ‘ரணங்கள்’.

உதாரணமாக, நம் தாத்தா பிறப்பதற்கு முன்பிருந்தே நிற்கும் மரம் ஒன்று ‘சாலை விரிவாக்கம்’, ‘மின்கம்பிக்கு இடைஞ்சல்’… போன்ற அற்பக் காரணங்களுக்காக வெட்டப்படுவதை யாரேனும் நேரில் நின்று பார்த்திருக்கிறீர்களா? சுருங்கிய மனங்களுடன் விசாலமான உலகைக் காண முயலும் விந்தை, ‘மண்ணோ டியைந்த மரத்தனையர்’க்கு மட்டுமே கைவந்த கொலை! யாருக்கும் எத்தீங்கும் இழைக்காத மரத்தோடான மாந்தர்களின் ஒப்பீடே இங்கு தவறு! இது survival of the fittest கோட்பாட்டினுள் வராது; வேண்டுமானால் Survival of the foolest என்று கொள்ளலாம்.  கண்களுள் சிறையிட முடியாத அளவு பெரிதாக கம்பீரமாக நின்ற மரம் பரிதாபமாகச் சாய்ந்து விழும் போது தரையுடன் சேர்ந்து நம் மனதும் ஒரு கணம் அதிர்ந்து அடங்கும். நிலத்தில் லேசாகக் கிளம்பும் புழுதியில் அம்மரத்திற்காகப் பூமியில் இருந்து எழும் விசும்பல்களைக் கேட்டிருக்கிறீர்களா? காய்ந்து கிடக்கும் நம் மனங்களுக்கும் சேர்த்துத் தன் வேர்களில் சேமித்து வைத்திருக்கும் ஈரத்தைக் காட்சிப்படுத்தி ஒரு அலட்சியப் பார்வையில் கடைசியாக ஒரு முறை நம்மை எள்ளி நகையாடும். எத்தனை மனிதர்களுக்கு நிழல் தந்திருக்கும்! எத்தனை சிறுவர்களின் விளையாட்டுத் தோழனாய் இருந்திருக்கும்! கால சுழற்சியில் மாறிப் போன மனிதர்களுக்கும் அருகிப் போன கருணைக்கும் நின்ற சாட்சி அல்லவோ இப்போது வீழ்த்தப்பட்டுக் கிடக்கிறது! இரை தேடச் சென்று மாலை வீடடையும் பறவைகள் இன்று ஸ்தம்பித்துப் போகாதா? மனசாட்சியே இல்லாமல் ஒறுத்தாற்றுபவர்களிடம் எல்லாம் எப்படி பொறுத்தாற்றும் பண்புடன் நடந்து கொள்வது? இப்படியே நீண்டு கொண்டிருக்கும் சிந்தனையிலிருந்து எங்ஙனம் மீள்வது? ‘நம்ம பொழப்ப பாப்போம்’ போன்ற வழமையான வறட்டுத்தனத்தின் பின் ஒளிந்து கொண்டா?

இது போலவே இன்னும் நிறைய…

 கிழிந்த சட்டையும் கலைந்த தலையும் காய்ந்த வயிறுமாகக் குப்பைத்தொட்டியை நிறைத்திருக்கும் மனிதத்திற்கு இடையே போனகம் தேடி ஆர்வத்தோடு துழாவும் ஒரு சக உயிர்; யாரிடமேனும் இரந்து நிற்கும் வாழ்ந்து கெட்டவர்கள்; உயிருக்கு உயிரான ஒருவரைப் போதிய பண வசதி இல்லாததால் ஒரு கொடூர நோய்க்குக் கண் முன்னரே கொஞ்சம் கொஞ்சமாக இழப்பது கண்டு செய்வதறியாது நிர்க்கதியாகிப் போனவர்கள்; குடும்பத்தினரின் வயிறு காயாமல் இருக்கவென, அவர்களுள் சிலரே தன் மகளை/சகோதரியை/மனைவியை நெறிபிறழ்ந்த வாழ்வுமுறைக்கு வற்புறுத்தும் கொடுமை அரங்கேற, அதை கனத்துக் காய்ந்து வற்றிப் போன உணர்வுகளுடன் ஏற்கத் துணியும் பெண்; விண்ணில் போர் விமானங்களின் விகாரமான சத்தத்தையும் அதனை விஞ்சும் வகையில் மண்ணில் இருந்து கிளம்பும் ஓலத்தையும் மொத்தமாகத் தன்னுள் அடக்கியபடி அமைதியாக நடு சாலையில் கிடக்கும் குருதி தோய்ந்த குழந்தையின் ஷூ (எவ்வளவு கோரமான புகைப்படம்!); பட்டாம்பூச்சியின் வண்ணத்திற்குப் பதில் பணியின் பொருட்டு கரி அப்பிய பிஞ்சு விரல்கள் – இவை போன்ற இன்னும் எத்தனையோ அவலங்களையெல்லாம் கேட்க/காண நேர்ந்த அந்நொடிக்குப் பிறகு கண்கள் காணும் எதுவும் மூளைக்குச் செல்வதில்லை.

 “ஏன் இவர்களுக்கு இப்படி நிகழ்கிறது? எனக்கு மட்டும் என்ன பெரிய தகுதி இருக்கிறது பாதுகாப்பான சூழலும் ஓரளவு நல்ல பொருளாதார நிலையும் வாய்க்கப் பெற? மனிதனின் அடிப்படைத் தேவைகளுக்குக் கூட உலகில் நிலவும் பாரபட்சம் எதன் அடிப்படையில்? இதற்கெல்லாம் சட்டையைப் பிடித்து உலுக்கி வளமான வசவுகளைப் பொழியவாவது அந்தக் கடவுள் என்ற ஒன்று இருந்து தொலைத்திருக்கலாம்……” ஒரு குமிழ் போல என்னுள் பெரிதாகிக் கொண்டே செல்லும் எண்ணவோட்டங்களை உடைக்கும் பொருட்டு ஒவ்வொரு முறையும் சிறிய கல் ஒன்று எறியப்படும் – “என்ன யோசிச்சுட்டு இருக்க?” என்னும் கேள்வியாக.

சட்டென நிகழ் உலகத்திற்குத் தரதரவென இழுத்து வரும் இக்கேள்விக்குரியவரிடம் உண்மை பதிலைத் தர நான் என்ன பித்தியா? கொஞ்சம் பித்திதான் என்றாலும் கூட உலகத்தவரின் அளவீட்டில் இன்னும் பிரகடனப்படுத்தும் அளவிற்குச் செல்லவில்லை. உண்மையில் நான் யோசித்தவற்றை அப்படியே சொன்னால் என்னவாகும்? ஏற இறங்க ஒரு பார்வை கிட்டும். மிதமிஞ்சிப் போனால் ஒரு “சரி விடு… அதுக்கு நீ என்ன செய்ய முடியும்? இப்படி எத்தனையோ பேர் இருக்காங்க”. “என்னால் ஒன்றும் செய்ய இயலவில்லை என்பதே இங்கு வெட்கக்கேடுதானே? இந்தக் குற்றவுணர்வை எப்படி அநாயசமாகத் தூக்கிப் போடுகிறீர்கள்?” என்றெல்லாம் பதிலுக்குக் கேட்டு வைக்க முடியாது. பின்னர் அக்மார்க் முத்திரையே குத்திவிடுவார்கள். எனவே ஆழ்மனதில் ஒரு நொடி மௌன அஞ்சலி செலுத்தி இந்நுண்ணுணர்வுகளில் இருந்து விடுபட இயலாத தருணங்களில் எல்லாம் Weltschmerz என்னும் வார்த்தைக்கு என்னை ஒப்புக்கொடுக்க முயல்கிறேன். முயற்சி மட்டும்தானே செய்ய முடியும்? இதற்கெல்லாம் ஆறுதல் என்று ஒன்று இருக்கவா செய்கிறது? உச்சகட்டமாக மனம் அழுந்தி பச்சாதாபத்தில் மேலெழும் கோபம் அவர்களை அந்நிலைக்குத் தள்ளிய சூழல்கள், அதற்குக் காரணமாய் அமைந்தவர்கள் ஆகியவற்றின் பக்கம் திரும்பி ஏதோ நெறிப்படுத்தப்பட்டுவிட்டதைப் போல் போலி ஆறுதலடைய முயலும். இல்லையெனில் ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்…’ல் இருந்து ‘நமக்கு இருக்குற பிரச்சனையில இதையெல்லாம்….’க்கு மனம் மடைமாறி கழிவிரக்கத்தில் முற்று பெறும். 

‘இப்படியே ஒவ்வொண்ணா பாத்துட்டு இருந்தா நம்ம வாழ்க்கைய வாழவே முடியாது’ – நடைமுறைக்கு ஒவ்வாதவை என வகுக்கப்பட்டுக் கழித்துக் கட்டப்பட்ட ‘ஒவ்வொன்று’களில்தான் நானும்  ஒரு ஓரத்தில் ஒண்டிக்  கிடக்கிறேன் போலும்.

உலகம் இப்படித்தான் இயங்கும் என்ற எதார்த்தம் எனக்கும் தெரியாமல் இல்லை. ஆனாலும் ‘கண்ணோட்டம்’ என்னும் இவ்வுணர்வு சில நேரங்களில் மனதளவில் முடக்கித்தான் போடுகிறது. கண்ணில் படுபவர்களுக்கும் ஓரளவுதான் உதவ முடிகிறது. அப்படி அவர்கள் ‘ஒவ்வொருவருக்கும்’ உதவி செய்வதென்பது ஒரு தனியாளாக சாத்தியமில்லை ஆகையால் நான் முழுமையாகச் சூடிக் கொள்ள இயலாத அக்கழிபெருங் காரிகை, நான் ‘உண்மை(உள்ளமை) நிலக்குப் பொறை’ என மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துகிறது.

மனிதத்திற்கான அச்சாரமே பச்சாதாபம் தானே? உலகின் குரூரங்களை எல்லாம் காணுற்ற பிறகும் அவற்றை மனதின் ஏதோ ஒரு இடுக்கில் அமுக்கி ஆழப் புதைத்த பின் நிகழும் இயல்பான நகர்தலில் மனித மனங்கள்(என்னுடையதும்தான்!) ரொம்பவே பயங்கரமானதாகத் தெரிகின்றன.

  • சோம. அழகு

https://puthu.thinnai.com/2024/03/17/கண்ணோட்டம்-என்னும்-கழிபெ/

  • கருத்துக்கள உறவுகள்
On 18/3/2024 at 07:41, சுப.சோமசுந்தரம் said:

ஐயா உங்களுடைய முகப்புத்தக இணைப்பினூடாகச் செல்ல புதுத்திண்ணை இணைப்பு வருகிறது, சிலர் தொடரச் சிரமப்பட்டு அருமையான ஆக்கத்தை வாசிக்காமல் விடக்கூடாது என்பதனால் நான் முழு ஆக்கத்தையும் இணைத்துவிட்டேன்.
தவறிருந்தால் மன்னிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 17/3/2024 at 19:11, சுப.சோமசுந்தரம் said:

மிகவும் அருமையான ஒரு கட்டுரை, ஆசானே. எங்களில் பலருக்கு இருக்கும் உளச் சிக்கல்களை அப்படியே சொல்லியிருக்கின்றீர்கள்.

சமீபத்தில் 'குருகு' இதழில் சடகோப முத்து ஶ்ரீநிவாசன் அவர்களுடனான ஒரு நேர்காணலை வாசித்தேன். அதில் வைணவன் என்பன் யார் என்னும் கேள்விக்கு அவர் ஒரு பதில் சொல்லியிருந்தார். எல்லா நெறிகளும் ஒன்றையே சொல்லுகின்றன என்று தோன்றியது. ஆனால், நெறிப்படி நடப்பது முடியாத ஒரு காரியமாகவே இருக்கின்றது. 

****

வைணவன் என்பன் யார்?

‘பர துக்க துக்கித்வம்’ என்றால் பிறர் துன்பத்தை தனதாகக்கொள்பவன். பிறர் என்றே இல்லாமல் இருப்பவன். ஏனெனில் இந்த உலகமாக இருப்பவனும் அவற்றில் உயிராக இருப்பவனும் பரமாத்மாவே. மரம், புழு, பூச்சி என அனைத்து உயிருக்குள்ளும் அவனே உறைகிறான்..........

  • கருத்துக்கள உறவுகள்

நினைத்து ஏங்கவைக்கும் ஒரு கட்டுரை........ என்ன சிறு வயதிலும், இளமைக்  காலங்களிலும் வீரமென நினைத்து செய்யும் சில பாவங்கள் மரங்களை முறிப்பது, சிறு உயிரினங்களை வதைப்பது போன்றவை எல்லாம் வயதாக வயதாக வந்து தலையில் அடிக்கிறது.......! 

நன்றி ஐயா .......!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

ஐயா உங்களுடைய முகப்புத்தக இணைப்பினூடாகச் செல்ல புதுத்திண்ணை இணைப்பு வருகிறது, சிலர் தொடரச் சிரமப்பட்டு அருமையான ஆக்கத்தை வாசிக்காமல் விடக்கூடாது என்பதனால் நான் முழு ஆக்கத்தையும் இணைத்துவிட்டேன்.
தவறிருந்தால் மன்னிக்கவும்.

நீங்கள் எனக்கு உதவியிருக்கிறீர்கள், ஏராளன் ! நன்றி. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரசோதரன் said:

எங்களில் பலருக்கு இருக்கும் உளச் சிக்கல்களை அப்படியே சொல்லியிருக்கின்றீர்கள்.

என் மகள் சோம.அழகு 'திண்ணை' இதழில் எழுதிய கட்டுரையை இங்கு பதிவு செய்துள்ளேன். நன்றி தோழர்.

 

2 hours ago, ரசோதரன் said:

பர துக்க துக்கித்வம்’ என்றால் பிறர் துன்பத்தை தனதாகக்கொள்பவன். பிறர் என்றே இல்லாமல் இருப்பவன்

"அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் 

தந்நோய்போல் போற்றாக் கடை"
    (குறள் 315; அதிகாரம் : இன்னா செய்யாமை)
 
(குறளின் பொருள் : பிற உயிர்களுக்கு ஏற்படும் துன்பத்தைத் தனக்கே ஏற்பட்ட துன்பமாய்ப் பாவிக்காவிட்டால், ஒருவன் பெற்ற அறிவினால் என்ன பயன் ?)
   
      மேற்கண்ட குறள் நீங்கள் சொன்ன கருத்துடன் பொருத்தி நோக்கத்தக்கது. 'பிறிதின் நோய்' என்று அஃறிணைகளுக்கு ஏற்படும் துன்பத்தையும் வள்ளுவன் குறித்தது குறளின் சிறப்பு.
 
              
       'பிறிதின் நோய் தந்நோய்' எனும் தலைப்பில் முன்னர் நமது இந்த 'யாழ்' தளத்தில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். ஆகையால் குறள் உடனே நினைவுக்கு வந்தது.
 
        தங்களின் பின்னூட்டத்திலிருந்து சற்று விலகி, ஒரு கருத்தையும் இவ்விடத்தில் கட்டுரைக்கான எனது பின்னூட்டமாகப் பதிவு செய்ய விழைகிறேன். சில நேரங்களில்  சில அழிவுகளை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாதயாததாய் அமையும் - சாலை அமைக்க மரம் வெட்டுவது போல. இருப்பினும் அவற்றைக் கேள்விக்கு உட்படுத்தாமல் கடந்து செல்வது பேரழிவுகளுக்கு வழி வகுக்கும். அவ்வாறு கேள்விக்கு உட்படுத்துவதாகவும் கட்டுரையைப் பார்க்கிறேன். இக்கண்ணோட்டமும் கட்டுரையில் குறித்த 'கண்ணோட்ட'மும் இணைந்து செல்வன என்று நினைக்கிறேன்.

Edited by சுப.சோமசுந்தரம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.