Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
ஓப்பன்ஹெய்மர்
53 நிமிடங்களுக்கு முன்னர்

ஒன்பது மாதங்களுக்கு முன்பு வெளியான ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் உலகளவில் பல்வேறு பிரிவுகளில் ஏழு விருதுகளை வென்றுள்ளது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமைதான் இந்த படம் ஜப்பானில் வெளியிடப்பட்டது.

ஆனால், இந்தப் படத்தை ஜப்பானில் வெளியிட தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் எடுத்த முடிவு அவ்வளவு எளிதானதல்ல.

பிரபல இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன், அமெரிக்க இயற்பியலாளர் ஜே. ராபர்ட் ஓப்பன்ஹெய்மரின் வாழ்க்கைக் கதையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தை இயக்கியுள்ளார். மிக ரகசியமாக வைக்கப்பட்டிருந்த மன்ஹாட்டன் திட்டத்தில் ராபர்ட் ஓப்பன்ஹெய்மரின் பங்கு என்ன என்பதும் இந்த படத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

அறிவியல் சோதனைகள் மற்றும் ஆராய்ச்சிகளின் முடிவுகள், அணுகுண்டு தயாரிப்பது, ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீதான அணுகுண்டு தாக்குதல்கள், அதன் பின்விளைவுகள் உள்ளிட்ட அனைத்தும் இந்தப் படத்தில் காட்டப்பட்டுள்ளன.

ஓப்பன்ஹைமர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஜப்பானில் வெளியிடப்பட்டுள்ள ஓப்பன்ஹெய்மர் திரைப்படம்

ஜப்பானில் ஏன் தாமதம்?

ஜூலை 21, 2023 அன்று வெளியான ஓப்பன்ஹெய்மர் உலகம் முழுவதும் சுமார் ஒரு பில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. ஆனால், இந்த படத்தின் பின்னணியைக் கருத்தில் கொண்டு, ஜப்பானில் இந்த படத்தை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது.

ஜப்பானில் இப்படத்தின் திரையிடல் குறித்து கடந்த ஆண்டு பேசியிருந்த இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் , ஜப்பானியன் சூழலுக்கு ஏற்ப "கவனமான அணுகுமுறையை" எடுத்து வருகிறோம் என்று தெரிவித்தார்.

சினிமா ப்ளன்ட் பப்ளிக்கேஷனின் இயக்குனர் இதுகுறித்து பேசுகையில்,” உலகமே இந்தப் படத்தைப் பார்த்திருக்கிறது. எனவே ஜப்பானின் திரைப்பட ஆர்வலர்கள் மற்றும் இந்த படத்தை பார்க்க ஆர்வமாக உள்ளவர்களும் இந்தப் படத்தைப் பார்க்க வாய்ப்பு கிடைக்க வேண்டும்,”என்று கூறியுள்ளார் .

1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி ஆகிய இரு நகரங்கள் மீதும் அணுகுண்டுகள் வீசப்பட்டன.

இந்த அணுகுண்டு தாக்குதலில் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் உயிரிழந்தது ஜப்பான் வரலாற்றில் பெரும் சோகமான நிகழ்வாக அமைந்தது.

இந்த படத்தை பார்த்த ஜப்பானிய பார்வையாளர் ஒருவர் பிபிசியிடம் பேசுகையில், "அவர்கள் கூட்ட அறையில் அமர்ந்து ஹிரோஷிமாவைப் பற்றியே மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டிருந்தனர். அங்குள்ள மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காதது எனக்கு வருத்தமாக இருந்தது" என்று கூறினார்.

வேறு சிலரோ கதை சொல்லும் மேற்கத்திய பாணி தங்களுக்குப் பிடிக்கவில்லை என்று கூறினார்கள்.

 
ஓப்பன்ஹெய்மர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

“இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் பாரம்பரிய கதை சொல்லும் பாணிக்கு பதிலாக புதிய சினிமா அனுபவத்தை பார்வையாளர்களுக்கு கொடுத்துள்ளார்."

வெளியீடு என்ன ஆனது?

ஓப்பன்ஹெய்மர் படத்தின் தயாரிப்பாளரான யுனிவர்சல் ஸ்டுடியோஸ் மற்றும் விநியோகஸ்தரான பிட்டர்ஸ் எண்ட் ஆகியோர் டைம்ஸ் இதழிடம், ஜப்பானில் இந்த படத்தை வெளியிடுவது குறித்து பல மாதங்கள் கருத்து ரீதியான விவாதத்தில் ஈடுபட்டதாக கூறியுள்ளனர்.

“இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் பாரம்பரிய கதை சொல்லும் பாணிக்கு பதிலாக புதிய சினிமா அனுபவத்தை பார்வையாளர்களுக்கு கொடுத்துள்ளார். இதை பார்வையாளர்களே பெரிய திரையில் தங்கள் கண்களால் பார்த்து அனுபவிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்," என்று அந்நிறுவனங்கள் கூறுகின்றன.

இருப்பினும், ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் அணுகுண்டு வீசியதால் ஏற்பட்ட பேரழிவுகளின் உண்மையான காட்சிகளை படத்தில் காட்டாதது குறித்து ஏற்கனவே நோலனை சர்வதேச பத்திரிகைகளும், பொதுமக்களும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்கு பதிலளித்த நோலன், "சில நேரங்களில் அதிகமான காட்சிகளை வைப்பதை விட, தேவையான சில காட்சிகளை வைப்பது போதுமானது என்று நம்புவதால், படத்தில் உள்ள காட்சிகளே இந்த நிகழ்வு சோகம் நிறைந்தது என்பதை தெளிவுபடுத்துவதாக கருதுகிறேன்" என்றார்.

ஆசிரியர் நவோகோ வேக் தி கன்வெர்ஷனல் போர்ட்டலில் எழுதிய கட்டுரையில், “கிறிஸ்டோபர் நோலன் குண்டுவெடிப்புகளால் ஏற்பட்ட பேரழிவை அலட்சியப்படுத்தவில்லை. ஹாலிவுட் நடிகர் சிலியன் மர்பி(ஓப்பன்ஹைமர்) ஹிரோஷிமா குண்டுவெடிப்புக்குப் பிறகு நடத்தப்பட்ட ஒரு கொண்டாட்ட உரையில் தனது நண்பர்களுடன் பேசும்போது குண்டுவெடிப்பை கற்பனை செய்வதைப் போன்ற காட்சி அமைக்கப்பட்டிருக்கும்" என்று கூறியுள்ளார்.

“ஆனால், அந்த கற்பனை காட்சியில் ஓப்பன்ஹெய்மர் ஒரு இளம் வெள்ளைப் பெண்ணின் (நோலனின் மகள் ஃப்ளோரா நடித்திருந்த பாத்திரம்) முகத்தை மட்டுமே பார்க்கிறார். அவர்கள் யாரும் உண்மையில் தாக்கப்படவில்லை இல்லையா? அங்கு ஜப்பானியர்கள், கொரியர்கள் மற்றும் ஆசிய, அமெரிக்கர்கள் மீது தான் குண்டு வீசப்பட்டது," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 
ஓப்பன்ஹெய்மர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

" மக்கள் அணுகுண்டு சோதனைகளை ரசித்ததைக் கண்டபோது நான் மிகவும் வருத்தப்பட்டேன்," என்று இந்த படத்தை பார்த்த எரிகா அபிகோ கூறியுள்ளார்.

படம் பார்த்த மக்கள் கூறியது என்ன?

ஜப்பானில் இந்த படம் வெளியானதை தொடர்ந்து பார்வையாளர்கள் சிலர் கலவையான விமர்சனங்களை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டனர்.

1945 ஆம் ஆண்டு ஹிரோஷிமாவில் அணுகுண்டு வெடித்து சிதறிய இடத்தில் இருந்து சில மீட்டர் தொலைவில் இந்த படத்தை பார்த்த சிலரிடம் பிபிசியின் ஜப்பான் செய்தியாளர் ஷைமா கலீல் பேசிக் கொண்டிருந்தார்.

அவர்களிடம் ஓப்பன்ஹெய்மர் குறித்து என்ன நினைக்கிறார்கள் என்ற கேள்வியை அவர் முன்வைத்தார்.

" மக்கள் அணுகுண்டு சோதனைகளை ரசித்ததைக் கண்ட போது நான் மிகவும் வருத்தப்பட்டேன்," என்று இந்த படத்தை பார்த்த எரிகா அபிகோ கூறியுள்ளார்.

அணுகுண்டு எதிர்ப்பு ஆர்வலரான மயூ செட்டோ, படத்தை பார்த்து விட்டு தான் அதிர்ந்து விட்டதாக தெரிவித்தார்.

“சில காட்சிகள் என்னை கோபமூட்டியது. அங்கு மீண்டும் மீண்டும் ஹிரோஷிமா குறித்தே பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அங்கிருந்தவர்களின் உணர்வுகள் குறித்து அவர்கள் சிந்திக்கவே இல்லை,” என்று அவர் கூறினார்.

ஓப்பன்ஹெய்மர்
படக்குறிப்பு,

ஜப்பானில் படம் பார்த்த பெண்

மசாடோ டெய்னாமா என்ற இளைஞர், “இந்த திரைப்படம் ஓப்பன்ஹெய்மரை ஒரு சிறந்த மனிதராக காட்டினாலும், இந்த நிகழ்வு குறித்து அவர் மனதில் இருந்த குற்றவுணர்வை மறைக்க முடியவில்லை என்று காட்டியது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.

கனேய் குமே என்ற மாணவர் படத்தைப் பார்த்த பிறகு, இந்த சம்பவத்தை வெளி உலகம் எப்படிப் பார்க்கிறது என்று புரிந்துள்ளதாக கூறினார்.

“இந்த படத்தில் அணுகுண்டுகள் பல உயிர்களைக் காப்பாற்றியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதன் வழியாக அமெரிக்கர்களும், உலக மக்களும் இந்த சம்பவத்தை எப்படிப் பார்க்கிறார்கள் என்பது எனக்கு புரிந்துள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/c6p41e6g2ego

  • Like 1


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.