Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
"வாழ்வைப் பற்றிய சைவ நோக்கம்"
 
 
சைவசமயம் [தற்காலத்தில் இது இந்து சமயத்துக்குள் உள்வாங்கப் பட்டு இருந்தாலும், உண்மையில் இவை இரண்டு வேறுபட்டவை. எனவே இதை இந்து சமயத்துடன் குழப்பவேண்டாம்] "அன்பே சிவம்", "தென்னாடுடைய சிவனே போற்றி; என்னாட்டவர்க்கும் இறைவ போற்றி" என்று அது எங்களுக்கு போதிக்கிறது.
 
அதாவது ஆண்டவனும் அன்பும் வேறு வேறு இல்லை. இரண்டும் ஒன்றே! இந்த முதுமொழி, தமிழ் இலக்கியத்திலும் சமுதாய எண்ணங்களிலும் பொசிந்து புகுந்து எல்லா இடங்களிலும் பரவி இருப்பதுடன் இது அன்பே கடவுளை அடையும் மார்க்கம் என்ற தற்கால சிந்தனையில் இருந்து வேறுபடுகிறது. அதாவது அன்பு தான் கடவுள் என்று இது போதிக்கிறது.
 
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, வாழ்வைப் பற்றிய எமது சைவ நோக்கம் உலகளாவியன. "யாதும் ஊரே, யாவரும் கேளீர்" என புறநானுறு கூறுகின்றது. "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்று எம்மை அது வழி காட்டுகின்றது. எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அன்றி வேறொன்றும் அறியேன் என்று திரும்ப திரும்ப சைவ சமயம் எதிர் ஒலிக்கிறது. "என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே" என்கிறார் இக்காலப் பகுதியில் வாழ்ந்த திரு மூலர்.
 
பல வகைப்பாடான கடவுள் தன்மையை [இறைமையை] புராண இலக்கியங்களில் ஒருவர் எதிர்கொள்ள நேர்ந்தாலும், தேவாரங்களை மிக நுணுக்கமாக படிக்கும் போது, அவை அதற்கு எதிர் மாறானதே உண்மை என சுட்டிக் காட்டும். எல்லா நாயன்மார்களும் ஒப்புயர்வற்ற கடவுளின் தனித்தன்மை [ஒருமை] ஒன்றையே உறுதியாக்கு கிறார்கள். உதாரணமாக மாணிக்கவாசகர் தமது திருத்தெள்ளேணத்தில் "ஒரு நாமம், ஓர் உருவம், ஒன்றும் இல்லாற்கு, ஆயிரம் திருநாமம் பாடி, நாம் தெள்ளேணம் கொட்டாமோ!" என்கிறார். அதாவது ஒரு பெயரும், ஒரு வடிவமும், ஒரு தொழிலும் இல்லாத இறைவனுக்கு, ஆயிரம் திருப் பெயர்களைக் கூறி நாம் ஏன் துதிக்கிறோம்?. என கேள்வி கேட்கிறார்.
 
சாதிப் பாகுபாடு சைவம் செய்தது அன்று. சாதிவெறி சைவநெறி அன்று. `குலம் ஒன்று; இறைவர் ஒருவர்’ என்பது சைவத்தின் அடிப்படைக் கொள்கை. இக்கொள்கைக்கு மாறான எக் கொள்கையும் சைவத்துக்கும் புறம்பான கொள்கையே ஆகும். சாதிப் பாகுபாட்டைச் சைவம் நெடுகிலும் எதிர்த்தே வந்துள்ளது. உதாரணமாக, தென்ஆப்பிரிக்க இன வெறிக் கொள்கை போல வேத இந்து சமயத்தால், சாதிக்கொள்கையும் தீண்டாமையும் எமது பண்பாட்டை சீரழிக்க புகுத்தப்பட்டது. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த சைவ சமய குரவரான திருநாவுக்கரசர், ‘சாத்திரம் பல பேசும் சழக்கர்காள் / கோத்திரமும் குலமும் கொண்டு என்செய்வீர்?’ என்று வினவுகிறார். பொதுவாக தனி மனிதனைக் கடந்து அண்டத்தை உணர்த்தி நிற்கும் அல்லது ஒன்றை (கடவுள், இறைவன்) உணரும் வழிமுறையின் கட்டமைப்பே “சமயம்“ என்பர். எங்கு அன்பு உள்ளதோ அங்கு வாழ்வு உண்டு!
 
உதாரணமாக, திருமூலரின் திருமந்திரம் 252 இல்,
 
“யாவார்க்கும் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவார்க்கும் பசுவிற்கு ஒரு வாயூரை
யாவார்க்கும் உண்ணும் போது ஒரு கைபிடி
யாவார்க்கும் பிறர் இன்னுரை தானே…”
 
என்று பாடுகிறார். அதாவது இறைவனுக்குப் படையல் போட்டுத்தான் வணங்க வேண்டும் என்பதில்லை; எளிமையாகப் பச்சிலை கொடுத்து வணங்கினாலே போதும். கோபூசை செய்ய வேண்டும் என்பதில்லை, பசுவுக்கு ஒரு கைப்பிடி புல் கொடுத்தாலும் போதும். பசித்திருப்பவர்க்கு அறுசுவை உணவு கொடுக்க வேண்டும் என்பதில்லை; உண்ணும்போது தான் உண்கிற உணவில் ஒரு கைப்பிடி கொடுத்தாலும் போதும். பதாகைகள் வைத்துப் புகழ்ந்துரை செய்து முதுகு சொறிய வேண்டும் என்பதில்லை; யாருக்கும் இன்னுரை சொன்னாலே போதும் என்று எல்லார்க்கும் இயல்கிற வழிமுறை சொல்கிறார் திருமூலர். பகட்டல்ல; பற்றுதலும் பரிதவிப்புமே கணக்கில் வரும் என்பது திருமூலர் கருத்து. அவர் மேலும்
 
"படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா;
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே."
(திருமந்திரம். 1857)
 
படம்போல எழுப்பி வைத்திருக்கிற மாடக் கோயிலின் இறைவனுக்கு ஒன்றைக் கொடுத்தால், அது நடமாடுகிற கோயிலாகிய நம்மவர்களுக்குப் போய்ச் சேராது. ஆனால் நடமாடுகிற கோயிலாகிய நம்மவர்களுக்கு ஒன்று கொடுத்தால், அது படமாடக் கோயிலின் இறைவனுக்கு மிக உறுதியாய்ப் போய்ச் சேரும்.
 
இன்றைக்கு பல இடங்களில் நடக்கும் பிரார்த்தனை கூட்டங்களில் எல்லா மதங்களுக்கும் பொதுவான ஒரு பாடல் பாடவேண்டுமாயின், என் கருத்தின் படி அது:
 
“ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவுவேண்டும். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமைவேண்டும்” என்ற பாடல்தான். இதை 5-10-1823-ம் ஆண்டு பிறந்த அருட்பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்பட்ட ராமலிங்க அடிகளார் பாடியுள்ளார். மேலும் இவர்:
 
“வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன். பசியால் இளைத்தே வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன். நீடிய பிணியால் வருந்துகின் றோர்என் நேர்உறக் கண்டுளம் துடித்தேன். ஈடில் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சு இளைத்தவர் தமைக் கண்டே இளைத்தேன்” இப்படி சைவ சமயத்தில் அமைதிக்கான வழியை பல அருளாளர்களும் கவிஞர்களும் வலியுறுத்தி உள்ளனர்.
 
புரட்சி கவிஞர் பாரதிதாசனோ:
 
“அறிவை விரிவு செய்; அகண்டமாக்கு விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை அனைத்துகொள் உன்னை சங்கமமாக்கு மானிட சமுத்திரம் நானென்று கூவு”
 
என்று அறிவுரை கூறுகிறார். இக்கருத்துகள் உலக உள்ளங்களில் பதிந்து நடைமுறையில் வெளிப்படுமானால் உலகில் அமைதி பூக்கும். அன்பு, உண்மை, நீதி, சகோதரத்துவம் உடைய சமூகம் உருவாகும்.
 
சைவ சமயத்தின் வேர் சுமேரியா இலக்கியத்தில் ஈனன்னா பாடலில் இருந்து, சிந்து வெளி நாகரிக தொல்பொருள்களில் காணப்பட்டு, தமிழகத்தில், வளர்ந்த ஒரு சமயம். எனவே சைவ சமயம் காலத்தால் முந்தியது , இதை வரலாறு செப்புகிறது. ஆகவே அது தமிழர் அல்லது பழம் தமிழரின் ( திராவிடரின்) வரலாற்றுடன் பரிணமித்தது. தனி ஒருவரால் ஆக்கப் பட்டது அல்ல. அது மட்டும் இல்லை , பெண் தெய்வமே முதன்மை தெய்வமாக தோன்றி பின் ஆண் தெய்வம் ஒன்றிணைக்கப் பட்டது வரலாறு (மலை மகள் மகனே , கொற்றவை சிறுவ ), மற்ற எல்லா சமயமும் ஆணையே முதன்மையாகக் கொண்டது. வேட்டுவ சமுதாயத்தில் இருந்து, ஓரிடத்தில் குடியேறி விவசாய சமுதாயமாக மாறும் பொழுது, ஆண் முதன்மை பெறுகிறான். அது ஆண் ஆதிக்க சமூகமாக மாறியது என்பதால் ஆகும். பெண்ணை மதிக்கும் பொழுது தான் சமாதானம் தானாக பிறக்கிறது என்பது ஒரு உண்மையாகும்.
 
ஆகவே சைவ சமயத்துக்கு மற்றைய சமயங்களைப் போல இது மட்டும்தான் கடவுள், இப்படி மட்டும் தான், இந்த நாளில் தான், இந்த முறையில் தான் வணங்கவேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை.
 
சைவத்தில், கேள்வியே கேட்க முடியாத ஆளுமை செலுத்தும் உயர் ஆணையாளர் இல்லை. தீர்க்க தரிசிகள் இல்லை. எதிர்வு கூறல்கள் இல்லை. ஆகவே இது தான் தெய்வீகப் புனித நூல் என்று ஒன்று திணித்து வைக்கப்படவில்லை.
 
ஒவ்வொரு காலத்திற்கும் ஒத்துப் போகுமாறு வழிபாட்டு வழிமுறைகளை அப்பப்போ அவதரிக்கும் நாயன்மார்கள் மற்றும் ஆன்மீக குருமார்கள் காலத்திற்கும் நடைமுறைக்கும் ஏற்றவாறு தங்கள் பாடல்கள் மூலம் [தேவாரம், திருமந்திரம்] தெளிவு படுத்திக்கொன்டே இருந்தார்கள். அவர்களுடன் சேர்ந்து அல்லது அவர்களுக்கு முன்பே [சங்க இலக்கியம், திருக்குறள் ] தமிழர் சமுதாயமும் தங்கள் நம்பிக்கைகளை, வாழ்க்கை முறைகளை பதிவிட்டு உள்ளார்கள் அல்லது தெளிவு படுத்திக்கொன்டே இருக்கிறார்கள். சைவ சமயம் ஒரு தமிழர் சமயம் என்பது குறிப்பிடத் தக்கது.
 
மேலும் வரலாற்றில் இருந்தும், மற்றும் பாடல்களிலும் இருந்தும் கட்டாயம் ஆழமாக சமாதானத்துக்கு, ஒற்றுமைக்கு, நீதிக்கு, அன்புக்கு தேவையான உன்னத கருத்துக்களை நடைமுறைக்கு ஒத்துப்போகும் நிலையில் உணர முடியும்.
 
அதைத்தான் நான் மேலே பாடல் வரிகளுடனும் வாசகங்களுடனும் கூறினேன். மற்ற சமயங்கள் எல்லாம் இரண்டாயிரம் ஆண்டு அளவில், அல்லது அதற்குப் பின்பு ஏற்கனவே இருந்த எதாவது சமய நம்பிக்கையில் இருந்து பிரிந்து அல்லது புரட்சி செய்து ஒரு தனிப்பட்ட ஒருவரால் ஏற்படுத்தியது. ஆகவே மக்களை அதில் இருந்து பிரித்து எடுக்க அல்லது தன்னை பின் தொடர சில, பல கட்டுப்பாடுகள் நிறுவி, ஒரு கட்டளையை அல்லது மனித வாழ்க்கைக்கான வழிகாட்டும் பிரகடனம் ஒன்றை அந்த தனிப்பட்ட நபர் செய்தார். அதையே புனித நூல் என்கிறார்கள். ஆனால் சைவமதம் அப்படியான ஒன்று அல்ல, அது தமிழர் அல்லது பழம் தமிழர் [திராவிடர்] வரலாற்றுடன் பரிணமித்த ஒன்றாகும். எனவே, திருமந்திரம் , திருக்குறள், தேவாரம் , சங்க இலக்கியம் மற்றும் பிற்கால தமிழ் இலக்கியம் முதலியவற்றில் இருந்து, கடலில் முத்து குளிப்பது போல பொறுக்கி எடுக்கவேண்டும். காரணம் அவர்கள் வேறு ஒன்றில் இருந்து ஒரு தனி நபரால் பிரிந்து நிறுவியது அல்ல.
 
எனவே புனித வாசகம் இது தான் என அறுதியிட்டு கூற முடியுமா என்பது எனக்கு சந்தேகமே !!
 
நன்றி
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
No photo description available. No photo description available. No photo description available.No photo description available. No photo description available. No photo description available. No photo description available. No photo description available. 
 
 
 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.