Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

                                                நூலறிவு வாலறிவு

                                                                                              ---சுப.சோமசுந்தரம்

 

             சான்றாண்மையின் தாக்கம் பாமரர் முதல் சான்றோர் வரை உணரப்படுவது. ஒரு புலவர் கூற்றை மற்றொரு புலவர் வழிமொழிவது சங்க காலந்தொட்டுக் காலங்காலமாய் நிகழ்வது; அஃது முன்னவரின் சான்றாண்மைக்கான அங்கீகாரமும் கூட. இதனை முன்னொரு சமயம் 'முன்னோர் மொழி பொன்னே போல்' எனும் தலைப்பில் சிறு கட்டுரையாய் வரைந்ததுண்டு. அதில் சுட்டப்பெற்ற பாடல்களோடு 'இயல் வழி நாடகம்' எனும் தலைப்பில் வேறொரு சூழலில் குறிக்கப்பட்ட சில பாடல்களையும் கொண்டு சற்றே பெரிய கட்டுரையாக வரையலாமே; மேற்கண்ட கருதுகோளின்பால் வாசிப்போரின் கவனத்தை ஈர்க்கலாமே எனும் எண்ணமதின் விளைவே இக்கட்டுரை. இதில் தனிப்பட்ட முறையில் எனக்கொரு இலாபமும் உண்டு. நான் ஆங்காங்கே எழுதியவற்றில் வெட்டி ஒட்டி, சில இடங்களில் மட்டும் சிறிது விளக்கம் தந்து மேனி நோகாமல் எழுதிச் செல்வதே அந்த லாபம். இந்த வெட்டி ஒட்டுதலைச் செய்பவன் அடியேன் மட்டுமே ! நான் குறிக்க வரும் புலவர் பெருமக்களில் எவரும் அவ்வாறு செய்யவில்லை. அச்சான்றோரில் ஒருவர் முன்மொழிய மற்றொருவர் வழிமொழிதல், ஒரு கருத்தை இருவர் கூறி மேன்மையுடன் செழிக்கச் செய்தல், இருவர் சேர்ந்து பாற்கடலைக் கடைந்து மானுடத்தின் எல்லையற்ற வாழ்வு சிறக்க அமுது எடுத்தல் எனும் உயரிய நோக்கங்கள் கொண்டவை அப்புலவர் தம் படைப்புலகம்.

 

            எடுத்துக்காட்டுதலில் வரும் பாடல்களைத் தந்தோரில் முன்னவர் யார், வழிமொழிந்த பின்னவர் யார் என்று நாம் சொல்லவில்லை. காலச்சக்கரத்தில் சிக்கித் தொலைந்த அவ்விவரம் தொலைந்ததாகவே இருக்கட்டுமே ! நமது வரிசைப்படுத்தலில், முதலில் வரும் ஒன்று காலத்தால் முன்னது என்ற பொருள் இல்லை

 

         இக்கட்டுரையின் தலைப்பு பற்றி ஒன்றிரண்டு சொற்கள் - 'வால்' எனுஞ் சொல் சிறந்த, தூய எனும் பொருள் தருவது. வள்ளுவன் இறைவனை 'வாலறிவன்' எனக் குறிப்பது அங்ஙனமே. தமக்கு முன்னோரின் பொன் மொழியை வழிமொழியும் புலவரின் நூலறிவு ஒப்பற்ற சிறைப்புடைத்து என மொழிவதே இத்தலைப்பு.

 

            சங்ககாலம் சென்று முதலில் புறநானூறு பேசி நிற்போமே ! காக்கை பாடினியார் நற்செள்ளையார் தரும் புறநானூற்று பாடல் :

"நரம்புஎழுந்து உலறிய நிரம்பா மென்தோள்

முளரி மருங்கின் முதியோள் சிறுவன்

படைஅழிந்து மாறினன் என்றுபலர் கூற

மண்டமர்க்கு உடைந்தனன் ஆயின் உண்டஎன்

முலைஅறுத் திடுவென்  யான்எனச் சினைஇக்

கொண்ட வாளொடு படுபிணம் பெயராச்

செங்களம் துழவுவோள் சிதைந்துவே றாகிய

படுமகன் கிடக்கை காணூஉ

ஈன்ற ஞான்றினும் பெரிதுஉவந் தனளே"

                         (புறநானூறு 278)

பாடற் குறிப்பு :

போரில் தனது மகன் புறமுதுகிட்டு இறந்தனன் என்ற (பொய்யான) செய்தி கேட்ட தாய் அவனை இழந்ததை விடத் துயருற்றதும், களத்திலேயே சென்று பார்த்து அவன் மார்பில் விழுப்புண் ஏந்தி வீரமரணம் எய்தினான்  எனக் கண்டு அவனைப் பெற்ற பொழுதை விட மகிழ்வுற்றதுமான மறம் (வீரம்) இப்பாடலில் வரையப் பெறுகிறது.

பாடற் பொருள் :

நரம்பு தெரிய வாடிய சிறிய மெல்லிய தோள்களும், தாமரை (முளரி) போன்ற விலாப் பகுதியும் (மருங்கு) உடைய முதியவள், தன் மகன் (சிறுவன்) படையின் திசை அழிந்து மாறினான் (அதாவது, புறமுதுகிட்டான்) என்று பலர் கூறக் கேட்டு, "பகை நெருங்கி வந்த போரில் (மண்ட - நெருங்கிய; அமர் - போர்) முறை உடைந்தான் (புறமுதுகிட்டான்) என்றால், அவன் பால் உண்ட முலையினை அறுத்திடுவேன் நான்" என்று சினந்து, வாளொடு சென்று (போர் நின்றிருந்த இரவில் அக்களம் சென்று), பிணங்கள் அகற்றப்படாத (படுபிணம் பெயரா) அக்குருதிக் களத்தில் (செங்களம்) தேடினாள் (துழவுவோள்). சிதைந்து உருக்குலைந்து கிடந்த மகனின் உடலைக் கண்டதும், அவனை ஈன்ற பொழுதை விட (ஈன்ற ஞான்றினும்) பெரிதும் மகிழ்ந்தாள் (பெரிது உவந்தனளே). (தானே விளங்கி நிற்பது - அவன் மார்பில் புண்பெற்று மாண்டதைக் கண்டாள்).

 

           ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்த மற்றுமொரு தாயினை நம் கண்முன் நிறுத்துகிறார் பூங்கண் உத்திரையார் எனும் புறநானூற்றுப் புலவர் :

"மீன் உண் கொக்கின் தூவி அன்ன

வால் நரைக் கூந்தல் முதியோள் சிறுவன்

களிறு எறிந்து பட்டனன் என்னும் உவகை

ஈன்ற ஞான்றினும் பெரிதே கண்ணீர்

நோன் கழை துயல்வரும் வெதிரத்து

வான் பெயத் தூங்கிய சிதரினும் பலவே"

                           (புறநானூறு 277)

பொருள் விளக்கம் :

மீன் உண் கொக்கின் தூவி அன்ன - மீனை உண்ணும் கொக்கின் இறகினைப் போன்ற;

வால்நரைக் கூந்தல்தூய்மையாகவும் நரைத்தும் இருக்கும் கூந்தலை உடைய;

முதியோள் சிறுவன் - முதியவளின் மகன்;

களிறு எறிந்து பட்டனன் என்னும் உவகை - ஆண்யானையை வேல் எறிந்து வீழ்த்திய பின்னரே தான் விழுந்தான் என்னும் செய்தி அறிந்த மகிழ்ச்சி;

ஈன்ற ஞான்றினும் பெரிதே - அவனைப் பெற்ற பொழுது அடைந்த மகிழ்ச்சியை விடப் பெரிதே;

வெதிரத்து - புதரில்;

துயல்வரும் - அசைந்தாடும்;

நோன் - வலிய;

கழை - மூங்கில் கழியில்;

வான் பெய - மழை பெய்யும் போது;

தூங்கிய - தங்கிய;

சிதரினும் பலவே - மழை நீரை விட அதிகமானது (அவளது கண்ணீர்).

           முதலில் நாம் குறித்த காக்கைபாடினியார் தாயின் வீரம் பற்றிப் பேசுவதோடு நிறுத்திக் கொண்டார். மகனை இழந்த துயரத்தை உலகோர்க்குக் காட்டாத அளவு அத்தாய் நெஞ்சுரம் கொண்டு இருக்கலாம் அல்லது மகனை இழந்த தாயின் அவலம் சொல்லில் வடிக்கவொண்ணாததாகப் புலவர்க்குத் தோன்றியிருக்கலாம். பூங்கண் உத்திரையாருக்கோ அந்த அவலச் சுவையை உணர்வுபூர்வமாய் வடிக்கத் தோன்றியது. எது எப்படியோ, ஈன்ற ஞான்றினும் பெரிது உவத்தல் என்று ஒருவரிடம் தோன்றிய கோட்பாடு மற்றொருவரை ஈர்த்தது என்னவோ உண்மைதானே ! அஃது வள்ளுவனிடத்தும் வெளிப்பட்டு நிற்கிறதே !

"ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய்"

                 (குறள் 69; அதிகாரம் : மக்கட்பேறு)

          சங்ககாலத்தில் (குறளோனின் சங்கமருவிய காலத்திலும் இருக்கலாம்) வீரனைக் குறித்த 'சான்றோன்', பிற்காலத்தில் (வள்ளுவத்திற்கு உரை தரப் போந்த காலம் எனக் கொள்ளலாம்) கற்றவனையும் கற்ற வழி நின்ற பண்பாளனையும் குறித்தது ஈண்டு குறிக்கத்தக்கது. பொருகளத்தில் போர் அறம் அறிந்து நிற்றலும், கல்விக் களத்தில் அறிவறிந்து நிற்றலும் சான்றாண்மையின் பாற் பட்டதில் வியப்பென்ன !

 

           அடுத்து மணிவாசகரின் கோவை இலக்கியமான திருக்கோவையாரில் ஒரு பாடல். தலைவன்-தலைவி உடன்போக்கு சென்ற பின் செவிலித்தாய் அவர்களைத் தேடிச் செல்வது மரபு. அவ்வாறு செல்லுகையில் எதிரே அதே போல் உடன்போக்கு எனும் ஒழுக்கம் மேற்கொண்டு வரும் வேறொரு தலைவன்-தலைவி இணையரைத் தூரத்தே கண்டு தன் மக்கள்தானோ என முதலில் மயங்கி, அவர்கள் அருகில் வரவும் தெளிந்து அவர்களுடன் உரையாடுகிறாள்.

"மீண்டார் என உவந்தேன் கண்டு நும்மை இம்மேதகவே

பூண்டார் இருவர் போயினரே புலியூரெனை நின்று

ஆண்டான் அருவரை யாளிஅன் னானைக் கண்டேனயலே

தூண்டா விளக்கனையாய் என்னையோ அன்னை சொல்லியதே".

(திருக்கோவையார், பாடல் 244)

உரையாடல் வருமாறு :-

செவிலித்தாய் : உம்மைக் கண்டதும் (கண்டு நும்மை) மீண்டனர் (எனது மகளும் அவளது தலைவனும்) என மகிழ்ந்தேன். இம்மேதகு ஒழுக்கம் (உடன்போக்கு) பூண்ட இருவர் முன்னால் போயினரே !

எதிர் வந்த தலைவன் (செவிலித் தாயிடம்) : திருப்பாதிரிப்புலியூரில் நின்று எனை ஆட்கொண்ட இறைவனது (ஆண்டான்) அரிய மலையின் (அருவரையின்) யாளி போன்ற கம்பீரத் தோற்றமுடையவனைக் கண்டேன்.

எதிர்வந்த தலைவன் (தன் தலைவியை நோக்கி) : தூண்ட வேண்டாத விளக்கினைப் போன்றவளே! அவனது அருகில் (அயலே) சென்றவளைப் பற்றி அன்னை (செவிலித்தாய்) சொல்லிய விவரம் பொருத்திக் கூறுவாயாக !

         இக்காட்சியினைப் பதினோறாம் திருமுறையில் வரும் திருஏகம்பமுடையார் திருவந்தாதி பாடல் 73 ல் பட்டினத்தார் கூறக் கேட்கலாம் :

"துணையொத்த கோவையும் போலெழில்

பேதையும் தோன்றலுமுன்

இணையொத்த கொங்கையொ டேயொத்த

காதலொ டேகினரே

அணையத்தர் ஏறொத்த காளையைக்

கண்டனம் மற்றவரேல்

பிணையொத்த நோக்குடைப் பெண்ணிவள் தன்னொடும் பேசுமினே"

பொருள் :

துணையொத்த கோவையும் போல் எழில் பேதையும் - உன் துணைவியான தலைவியின் கொடி (கோவை) போன்ற அழகினை (எழில்) உடைய பேதை நிலை பெண்ணும்;

உன் இணையொத்த - உன் தலைவியைப் போன்ற;

கொங்கையொடே - முலையொடும் (திகழும் அப்பேதையும்);

தோன்றலும் - தலைவனும்;

ஒத்த காதலொடு - (உங்களைப்) போன்ற காதலோடு

ஏகினரே - சென்றனரே;

அணையத்தர் - அவ்வாறான;

ஏறொத்த காளையைக் கண்டனம் - ஏறுபோன்ற இளைஞனைக் கண்டேன்;

மற்றவரேல் - மற்றபடி அப்பெண்ணைப் பற்றி என்றால்

பிணையொத்த நோக்குடைபெண்மானின் (மருண்ட பார்வையுடைய);

பெண்ணிவள் தன்னொடும் பேசுமினே - பெண்ணிவளிடம் பேசுவீர்களாக !

        திருக்கோவையாரில் "இம்மேதகவே பூண்டார் இருவர் முன் போயினரே" என்று முடியும் செவிலியின் கூற்று, இங்கு "ஒத்த காதலொடு ஏகினரே" என்று முடியக் காணலாம். அங்கு "யாழி அன்னானைக் கண்டேன்" என்று செவிலித் தாயை நோக்கி எதிர் வந்த தலைவன் கூறுவது, இங்கு "ஏறொத்த காளையைக் கண்டனம்" என்று கூறக் கேட்கலாம்."என்னையோ அன்னை சொல்லியதே" என்று எதிர் வந்த தலைவன் தன் தலைவியிடம் கேட்பதாய் திருக்கோவையாரில் வருகிறது. இது மட்டும் சற்று மாறாக "பெண்ணிவள் தன்னொடும் பேசுமினே" என்று மீண்டும் செவிலித்தாயிடமே தலைவன் கூறுவதாய் திரு ஏகம்பமுடையார் திருவந்தாதியில் வருகிறது. ஆனாலும் ஒரே செய்திதான். பேசும் இடம் மட்டும் இறுதியில் சற்று மாறியது. நாடகக் காட்சியமைப்பும் ஒன்றுதான்.

 

            புறநானூறு கண்டோம்; கோவை எனும் சிற்றிலக்கியம் கண்டோம்; பக்தி இலக்கியத்தை விட்டு வைப்பானேன் ?

      இப்போது நாம் காட்சிப்படுத்த நினைப்பது மீண்டும் மணிவாசகரின் நாடகத்தை. இம்முறை திருவெம்பாவைக் காட்சி  :

"ஒள் நித்தில நகையாய், இன்னம் புலர்ந்தின்றோ   

வண்ணக் கிளி மொழியார் எல்லாரும் வந்தாரோ

எண்ணிக் கொண்டு உள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்   

கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே

விண்ணுக்கு  ஒருமருந்தை வேத விழுப்பொருளைக்   

கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்து உள்ளம்

உள் நெக்கு நின்று உருக யாம் மாட்டோம் நீயேவந்து   எண்ணிக் குறையில் துயில் ஏல் ஓர் எம்பாவாய்".

       (திருவெம்பாவை பாடல் 4)

          மார்கழியில் பாவை நோன்பு மேற்கொண்ட பாவையர் பாவை ஒருத்தியைத் துயில் எழுப்புகின்றனர். "ஒளி பொருந்திய முத்தினைப் (நித்தில) போன்ற சிரிப்பினை உடையவளே! இன்னும் உனக்குப் புலரவில்லையா?" எனப் பாவையர் கேட்க, உள்ளே உறங்கிக் கொண்டிருந்த பாவை, "வண்ணக்கிளி மொழியினுடைய எல்லோரும் (தோழியர்) வந்து விட்டார்களா?" என்று வினாவெதிர் வினாவினைக் கூவுகிறாள். தோழியர், "அவ்வளவும் எண்ணிக் கொண்டு தான் வந்தோம். உள்ளதைத் தான் சொல்கிறோம். தூங்கி வீணில் காலத்தைப் போக்காதே ! விண்ணுலகினர்க்கு அமுதம் போன்றவனை, வேதத்தின் உண்மைப் பொருளானவனை, கண்ணுக்கு இனியனானவனைப் (சிவபெருமானை) பாடிக் கசிந்துருகும் நாங்கள் பொய் சொல்லோம். நீயே வந்து எண்ணிக்கொள். (எண்ணிக்கை) குறைந்தால் மீண்டும் துயின்று கொள், எம் பாவையே !" என்று பதிலிறுக்கின்றனர். நாடகப் பாங்கில் உரையாடலில் யார், யாரிடம் பேசுகின்றனர் என்பது தானே விளங்கி நிற்கக் காணலாம்.

           திருவெம்பாவையில் உள்ளவாறே இக்காட்சி திருப்பாவையில் :

"எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ

சில்லென்று அழையேன்மின் நங்கைமீர் போதர்கின்றேன்

வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்

வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக

ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை

எல்லோரும் போந்தாரோ போர்ந்தார் போர்ந்து எண்ணிக்கொள்

வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க

வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்"

             (திருப்பாவை பாடல் 15)

பொருள் விளக்கம் :-

துயிலெழுப்பும் பாவையர் கூற்று :

எல்லே - 'அடி பெண்ணே, என்ன இது ?' எனக் கேட்பது போன்ற வழக்கு

இளங்கிளியே - கிளி போல் கொஞ்சுமொழி பேசும் இளம் பெண்ணே

இன்னமும் உறங்குதியோ - இன்னும் உறங்குகிறாயா

துயிலெழுப்பப்படும் பாவையின் கூற்று :

சில்லென்று அழையேன் - 'சில்' எனக் கூச்சலிட்டு அழையாதீர்

மின் நங்கைமீர் - மின்னல் போன்று ஒளிரும் தோழியரே;

போதர்கின்றேன் - இதோ வருகின்றேன்;

பாவையர் கூற்று :

வல்லை - திறமையானவளே;

பண்டே - முன்பிருந்தே

உன் கட்டுரைகள் - உன் உறுதிமொழிகளையும்

உன் வாயறிதும் - உன் பேச்சுத்திறனையும் யாம் அறிவோம்;

பாவையின் கூற்று :

வல்லீர்கள் நீங்கள் - நீங்களே (பேச்சுத்) திறனுடையவர்கள்;

நானே தானாயிடுக - (நீங்கள் சொன்னவாறே) நான் (வாயாடியாக) இருந்து விட்டுப் போகிறேன்;

பாவையர் கூற்று :

ஒல்லை - விரைவாக

நீ போதாய் - நீ வருவாயாக;

உனக்கென்ன வேறுடையை - உனக்கு (இப்போது) வேறு என்ன வேலை உண்டு ?

பாவையின் கூற்று :

எல்லாரும் போந்தாரோபாவையர் எல்லோரும் வந்து விட்டார்களா ?

பாவையர் கூற்று :

போந்தார் - வந்து விட்டனர்;

போந்து எண்ணிக்கொள்வந்து எண்ணிக்கொள்

வல் ஆனைக் கொன்றானைவலிய யானையைக் கொன்றவனை

மாற்றாரை மாற்றழிக்க வல்லானை - பகைவரை, அவர்தம் அகந்தையை அழிக்க வல்லவனை;

மாயனை - மாயச் செயல்கள் புரிபவனை (கண்ணனை);

பாடேலோர் எம் பாவாய்பாடுவாயாக எம் பாவையே !

            திருவெம்பாவையில் "வண்ணக்கிளி மொழியார் எல்லாரும் வந்தாரோ" என்றது திருப்பாவையில் "எல்லாரும் போந்தாரோ" எனவும், அங்கு "நீயே வந்து எண்ணிக் குறையில் துயில்" என்றது இங்கு "போந்தார் எண்ணிக் கொள்" எனவும் மொழி மாறியது. காட்சி மாறவில்லை.

 

             இனி சில சங்கப் பாடல்களும் தொடர்புடைய குறள்களும் காணலாம். முதலில் நம் நினைவுக்கு வருவது நற்றிணையில் 355 ஆவது பாடலின் ஒரு பகுதி :

"முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்

நஞ்சும் உண்பர் நனிநா கரிகர் "

பொருள் : முன்பிருந்தே (தேர்ந்து தெளிந்த) நண்பர் கொடுப்பது நஞ்சாக இருந்தாலும் சிறந்த பண்பாளர் (நனி நாகரிகர்) அதனை உண்டு அமைவர்.

       இங்கு 'நஞ்சினை உண்டு' என்பதை நேர்ப் பொருளாய் (Literal meaning) எடுப்பது இல்லை என்பதை இலக்கியம் அறிந்தோர் அறிவர். 'உணவானாலும் கருத்தானாலும் தாம் விரும்பாதவற்றைத் தாம் தேர்ந்து தெளிந்த தம்மைச் சார்ந்தோர் அளிக்கையில், சூழலைக் கருத்தில் கொண்டு ஏற்று அமைதல்' எனப் பொருள் கொள்வதே இங்கு சாலப் பொருத்தம்.

மேற்கூறிய கருத்து அச்சு எடுத்தாற்போல் திருக்குறளில் கண்ணோட்டம் எனும் அதிகாரத்தில்,

"பெயக் கண்டு நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க

நாகரிகம் வேண்டுபவர்" என அமையக் காணலாம்.

        நற்றிணையின் 'நனி நாகரிகம்' வள்ளுவத்தில் 'நயத்தக்க நாகரிகம்' ஆனது. பெயப்படும் நஞ்சு என்னவோ ஒன்றுதான்.

 

          பிரிவாற்றாமையினால் தலைவியின் மேனியில் பசலை தோன்றுவதும், மேனி இளைத்துக் கை வளையல்கள் பிறர் அறிய நிலத்தில் கழன்று விழுவதும் அகப்பாடல்களில் எங்கும் விரவி நிற்கக் காணலாம். ஆனால் தலைவி உயிர் துறப்பது (மிகைப்படுத்தலாகவே இருப்பினும்) என்பது இலக்கியங்களில் அருகி நிற்பது. பின்வரும் நற்றிணைப் பாடல் (19) அவ்வாறான அரிய பாடல் :

"வருவை யாகிய சின்னாள்

வாழா ளாதல்நற் கறிந்தனை சென்மே"

[வருவை ஆகிய சின்னாள் (சில நாள்)

வாழாள் ஆதல் நன்கு அறிந்தனை சென்மே (செல்வாயே)]

அஃதாவது "சில நாட்களில் வருவாய் எனினும், அவள் வாழாள் என்பது நன்கு அறிந்து செல்வாயே" என்பதாம்.

          நற்றிணையில் தோழி கூற்றாக வரும் செய்தி வள்ளுவத்தில் தலைவி கூற்றாகவே வருகிறது :

"செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின் 

வல்வரவு வாழ்வார்க் குரை"

          (குறள் 1151; அதிகாரம்: பிரிவாற்றாமை)

          சிறிது காலம் போர்க்களத்திற்கோ தொழில் மேற்கொண்டோ பிரியப் போகும் தலைவன் உற்றாரிடம் விடை பெற்றுத் தலைவியிடம் விடைபெற வருகிறான். "சில மாதங்களில் வந்து விடுவேனே, ஏன் கவலை கொள்கிறாய் ?" என ஏற்கனவே அவளைத் தேற்ற முயன்று தோற்றுப் போனவன் அவன். தலைவி அவனிடம் சொல்கிறாள், "ஏதாவது மாற்றம் ஏற்பட்டு நீ செல்லவில்லை என்றால் மட்டும் என்னிடம் சொல். அதுதான் சீக்கிரம் வந்து விடுவேனே எனும் உன் (வல்)வரவு பற்றிய செய்தியை நீ வரும்பொழுது யார் உயிருடன் இருக்கப் போகிறார்களோ அவர்களிடம் சொல் !". பொதுவாக எவரது வரவையும் நல்வரவாகக் கொள்வதே தமிழர் மாண்பு, மரபு. ஆனால் இங்கு வல்வரவு என்று வள்ளுவன் சொல்லாக்கம் தருவது, தலைவன் வரப்போவது தலைவியை இழந்த இழவு வீட்டிற்கு என்பதால். சொற் சிக்கனத்திற்கும் வள்ளுவனே ஆசிரியன்.

 

        அடுத்து வரும் குறுந்தொகைப் பாடலில், "எப்பிறவியிலும் நீயே என் கணவனாய் அமைத்தல் வேண்டும்" என்று தன் காதலின் திறம் கூறுகிறாள் தலைவி:

"இம்மை மாறி மறுமை ஆயினும்

நீயாகியர் என்கணவனை

யானாகியர் நின்நெஞ்சு நேர்பவளே "

          (குறுந்தொகை பாடல் 49)

       வள்ளுவனின் திரைக்கதை கூட இதுவே. காட்சியமைப்பில் மட்டும் சிறிது மாற்றம் செய்தான் :

"இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்

கண்நிறை நீர்கொண் டனள்"

           (குறள் 1315; அதிகாரம்: புலவி நுணுக்கம்)

"இப்பிறவியில் பிரிய மாட்டோம் என நான் சொன்னதும் தலைவியின் கண்கள் குளமாயின" என்பதே தலைவன் கூற்று. அஃதாவது "ஏனைய பிறவிகளில் பிரிய நினைத்தாயோ ?" என்பதே தலைவியின்  கண்ணீருக்கான ஏதுவாய் அமைந்தது. வள்ளுவனின் 'சுருங்கச் சொல்லி விளங்க வைத்தலு'க்கு மற்றுமொரு சான்று.

 

          இங்ஙனம் தமிழ்ச் சான்றோரின் நூலறிவிற்கான சான்றுகள் எண்ணிலடங்கா. நம் கட்டுரைக்கு எங்காவது முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமே ! சரி, கட்டுரைக்குதானே முற்றுப்புள்ளி ! இதனை வாசித்தோர் தம் இலக்கிய வாசிப்பில் இத்தகைய முன்னோர் மொழிகளைக் கடந்து செல்லுகையில் ஒரு கணம் நின்று அசைபோட்டு இன்புறுவர்; மொழிக்கு மேலும் செறிவூட்டுவர்.

 

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அருமையான சங்ககாலப் பாடல்களும் சிறப்பான விளக்கங்களும் வாசிக்கும் போதே மனதினுள் ஒரு அமைதியும் சிறு புன்முறுவல் உண்டாகின்றது ஐயா ........!

பாவையும் கோதையும் பல இடங்களில் சேர்ந்து பயணிப்பதை ஆழ்ந்து படிக்கையில் உணரலாம்.......இரண்டும் அதிகாலையில் நண்பர்களை துயிலெழுப்பி அழைத்துச் செல்வதால்.......!

"பெயக் கண்டு நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க

நாகரிகம் வேண்டுபவர்"

இந்தக் குறளுக்கு ஏற்ற ஒரு சம்பவத்தை பேராசிரியை பர்வீன் சுல்தானா ஒரு பேச்சரங்கத்தில் குறிப்பிட்டு இருந்தார்..... மிகவும் எளிமையாக இருந்தது...... அதை கொஞ்சம் இங்கு குறிப்பிட விழைகின்றேன் பிழையாயின் பொறுத்தருள்க.....!

இந்தக் குறளில் அவவுக்கு ஒரு சந்தேகம் ..... அதெப்படி வேண்டிய ஒருத்தர் நஞ்சைத் தந்தாலும் நாகரீகத்துக்காக அதை வாங்கி சாப்பிட்டு விட்டு சாக வேண்டுமா என்று......!

அது தெளிவாகிறதுக்கு அவருக்கு ஒரு சந்தர்ப்பம் அமையுது.......அவருடைய சக ஆசிரியை ஒருத்தர் யார் எது கொடுத்தாலும்  யாரிடமும் ஒன்றும் வாங்கி உண்ண மாட்டார் ...... அன்று அவர்கள் ஆசிரியர்களுடைய ஓய்வறையில் இருக்கும் போது ஒரு சிறுமி தனது பிறந்தநாளுக்கு இனிப்புகள் எல்லோருக்கும் குடுத்துக் கொண்டு வருகின்றா ....... பர்வீன் அவர்களிடமும் இனிப்புத் தர வந்தபொழுது இவவும் சற்று தூரத்தில் இருக்கும் அந்த ஆசிரியையைக் காட்டி நீ சென்று அவரிடம் இனிப்பைக் குடுத்தால் உனக்கு இந்தப் பொருளை பரிசாகத் தருகின்றேன் என்று சொல்கின்றார்.......அதை பார்த்ததும் அந்த சிறுமிக்கு அதன்மீது ஆசை வந்து அந்த ஆசிரியையிடம் சென்று இனிப்பைத் தர அவ மறுக்கிறா ....சிறுமியோ அவரிடம் வாங்க சொல்லி கெஞ்சுகின்றாள் துடர்ந்து ஆசிரியை மறுக்க சிறுமிக்கு இனி தனக்கு பரிசு கிடைக்காது என்னும் ஏக்கம் கோபமாக மாறுகின்றது, அழுகையும் வருகின்றது.......அந்த ஆசிரியையைப் பார்த்து கத்திவிட உடனே அந்த ஆசிரியை எழுந்து எனக்கு நீரிழிவு நோய் இருக்கு நான் இனிப்பு சாப்பிடுவதில்லை என்று சொல்லி சிறிதளவு எடுத்துக் கொள்கிறார்........!

அப்போதுதான் ஆசிரியை பர்வீனுக்கு புரிந்ததாம் இனிப்பானபோதிலும் அது நீரிழிவு நோய்க்கு நஞ்சு ஆனாலும் நாகரீகம் கருதி சிறிது எடுக்கலாம் என்று........!

(கொஞ்சம் "போரடித்து" விட்டேனோ பொறுத்தருள்க).....!  🙏

 

 

 

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...



இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.