Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திப்பு சுல்தான்: கொல்லப்பட்ட இறுதி நாளில் ஆங்கிலேயர்களால் வீழ்த்தப்பட்டதன் முழு பின்னணி

திப்பு சுல்தானின் இறுதி நாட்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

பதினெட்டாம் நூற்றாண்டில் மைசூர் ராஜ்ஜியத்தை ஆண்டு, ஆங்கிலேயர்களுடனான போரில் வீழ்ச்சியடைந்த திப்பு சுல்தான், போர்க்களத்தில் மரணமடைந்த நாள் இன்று. திப்பு சுல்தானின் கடைசித் தருணத்தில் என்ன நடந்தது?

பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் மைசூர் நாட்டை ஆட்சிசெய்த திப்பு சுல்தான், தான் ஆட்சியில் இருந்த 17 ஆண்டுகளிலும் தொடர்ந்து ஆங்கிலப் படைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. 1799இல் நடந்த நான்காவது மைசூர் போரில் கொல்லப்பட்ட திப்பு சுல்தான் இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகும் பல உணர்வுகளை எழுப்பக்கூடியவராக இருக்கிறார்.

திப்பு சுல்தானின் வாழ்க்கை வரலாறு பல வரலாற்று ஆசிரியர்களால் விரிவாக எழுதப்பட்டிருக்கிறது. இவற்றில், கொல்கத்தா பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத் துறை பேராசிரியரான மொஹிபுல் ஹசன் எழுதிய 'History of Tipu Sultan', அவரைப் பற்றி எழுதப்பட்ட வரலாறுகளில் மிக முக்கியமானது.

இந்த நூலில், திப்பு சுல்தானின் கடைசி நாட்கள் மிக விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

 

திப்பு சுல்தானுக்கு எதிரான கூட்டணி

திப்பு சுல்தானின் இறுதி நாட்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

திப்பு சுல்தானுக்கு எதிராக 1787வாக்கிலேயே மெல்ல மெல்ல ஒரு பெரிய கூட்டணி உருவாக ஆரம்பித்திருந்தது. ஆங்கிலேயர்கள் - மராத்தியர்கள் - நிஜாம் ஆகியோர் ஒன்றாக இணைந்திருந்தனர். இதனால், பிரான்ஸ் அரசிடம் உதவிகோரி ஒரு தூதுக்குழுவை அனுப்பினார் திப்பு. ஆனால், சாதகமான பதில் வரவில்லை. ஆங்கிலேயர்களுடனான வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையை மீற, பிரான்ஸ் விரும்பவில்லை.

இதற்குப் பிறகு இந்தியாவின் கவர்னர் ஜெனரலான கார்ன்வாலிஸுடன் கடிதங்களின் மூலம் சமாதானத்திற்கு அழைப்பு விடுத்துக்கொண்டே இருந்தார் திப்பு. ஆனால், கார்ன்வாலிஸ் இதில் பெரிய ஆர்வம் காட்டவில்லை.

இதுபோலவே தொடர்ந்து ஆண்டுகள் கழிந்தன. 1799ஆம் ஆண்டில் நிலவரம் உச்சகட்டத்தை எட்டியிருந்தது. அந்த ஆண்டு மீண்டும் அமைதிக்கு அழைப்பு விடுத்தார் திப்பு. இந்த முறை அவர் பேச்சு வார்த்தையை ஆங்கிலேயத் தளபதியான ஹாரிசுடன் நடத்த வேண்டியிருந்தது.

திப்புவின் அழைப்பிற்கு ஹாரிஸ் அனுப்பிய பதில் கடிதத்தில் திப்பு தனது ராஜ்ஜியத்தில் பாதியை கம்பனிக்கு வழங்க வேண்டும் என்றும் இரண்டு கோடி ரூபாயை பிணைத் தொகையாகத் தர வேண்டும் என்றும் அதில் ஒரு கோடியை உடனடியாகவும் மீதி ஒரு கோடியை ஆறு மாதங்களிலும் தர வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

அதுவரை திப்பு தனது நான்கு மகன்களையும் நான்கு தளபதிகளையும் ஹாரிஸிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த ஒப்பந்தத்தை ஏற்பதானால், அதை 24 மணிநேரத்திற்குள் செய்ய வேண்டும் என்றும் 48 மணிநேரத்திற்குள் எட்டுப் பேரையும் ஒரு கோடி ரூபாயையும் தர வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த நிபந்தனைகள் மிக மோசமானதாக திப்புவுக்கு தோன்றின. ஏப்ரல் 28ஆம் தேதி ஒரு கடிதத்தை ஹாரிசுக்கு அனுப்பினார் திப்பு. அதில், ஆங்கிலப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகச் சொன்னார் அவர். ஆனால், 29ஆம் தேதி மதியம் 3 மணிக்குள் ஏற்கெனவே சொன்ன நிபந்தனைகளை ஒப்புக்கொள்ள வேண்டுமெனக் கூறினார் ஹாரிஸ்.

இதற்கிடையில் ஸ்ரீரங்கப்பட்டனத்தின் கோட்டையைத் தகர்க்கும் பணிகளும் துவங்கியிருந்தன. ஏப்ரல் 28ஆம் தேதியிலிருந்தே கோட்டையை நோக்கி குண்டுகள் வெடிக்கப்பட்டன. மே 3ஆம் தேதி கோட்டையில் முதல் உடைப்பு ஏற்பட்டது. அந்தப் பிளவைப் பார்வையிட்ட ஆங்கில கம்பனி அதிகாரிகள், அடுத்த நாள் நண்பகலில் தாக்குதல் நடத்த முடிவு செய்தனர்.

அடுத்த நாள் நண்பகல், அந்த உடைப்புப் பகுதியை திப்பு சுல்தான் வந்து பார்வையிட்டார். அதைச் சரிசெய்ய உத்தரவிட்டுவிட்டு, அரண்மனைக்குச் சென்றார். அங்கு அவரைச் சந்தித்த ஜோதிடர்கள் அன்றைய தினம் நல்ல நாளில்லை என்று கூறினர். அவர்களது ஆலோசனைப்படி பலருக்கு தானங்களைச் செய்தார் திப்பு.

 

திப்பு சுல்தானின் இறுதித் தருணங்கள்

திப்பு சுல்தானின் இறுதி நாட்கள்

பட மூலாதாரம்,ULLSTEIN BILD DTL.

படக்குறிப்பு,சித்தரிப்புப் படம்

இதற்குப் பிறகு தனது முகாமிற்கு வந்த திப்பு சுல்தான், சாப்பிடுவதற்காக அமர்ந்தார். அப்போதுதான், கோட்டையின் மேற்குப் பகுதிக்குப் பொறுப்பாக இருந்த சயீத் கபார் பீரங்கிக் குண்டு தாக்கி உயிரிழந்த தகவல் வந்து சேர்ந்தது.

மிகுந்த விசுவாசியான சயீத்தின் மரணம் திப்புவை வெகுவாகப் பாதித்தது. அவர் உடனடியாக குதிரை மீதேறி உடைப்பு ஏற்பட்டிருந்த இடத்தைச் சென்றடைந்தார். ஆனால், அவர் அங்கு வந்து சேரும் முன்பே ஆங்கிலேயர்கள் அதைக் கைப்பற்றிக் கொடியேற்றியிருந்தனர்.

திப்புவின் வருகை அங்கிருந்த மைசூர் வீரர்களுக்கு உத்வேகமளித்தது. ஆனால், சிறிது நேரத்திலேயே ஆங்காங்கு வைக்கப்பட்டிருந்த தீயைப் பார்த்து, வீரர்கள் சிதறி ஓடத் துவங்கினர். அவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் வெற்றி பெறவில்லை. இருந்தபோதும் முழுக்க முழுக்க ஒரு சாதாரண வீரனைப் போல களத்தில் நின்றார் திப்பு.

தொடர்ந்து வீரர்கள் சிதறி ஓடவே, நகரத்தை நோக்கிச் செல்லும் பாதையை நோக்கி நகர்ந்தார் திப்பு. அந்தப் பாதை மூடப்பட்டிருந்தது. அந்தப் பகுதியில் படைத் தலைவனாக இருந்த மீர் நதீம் ஏற்கெனவே ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக மாறியிருந்தார். அவர், அந்தப் பாதையைத் திறக்க மறுத்துவிட்டார். அப்போதே திப்புவுக்கு காயம் ஏற்பட்டிருந்தது.

அதற்குப் பிறகு, கோட்டை வாசலை நோக்கி முன்னேறினார் திப்பு. அப்போது இரண்டாவது காயம் ஏற்பட்டது. தொடர்ந்து மைசூர் வீரர்களைத் தாக்கி அழித்தபடி வந்த ஆங்கிலேயப் படை மூன்றாவது காயத்தை ஏற்படுத்தியது.

அவரது இடது நெஞ்சின் பக்கம் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது. அவரது குதிரை கொல்லப்பட்டது. அந்த நேரத்தில் அவரை நெருங்கிய அவரது உதவியாளர் ரஜா கான், ஆங்கிலேயர்களிடம் அவர் யார் என்பதைச் சொல்லலாம் என்றார். ஆனால், திப்பு மறுத்துவிட்டார். அவர்களிடம் கைதியாக இருப்பதைவிட இறப்பதே மேல் எனக் கருதினார் திப்பு.

அப்போது ஒரு ஆங்கில வீரன் அவரது இடையிலிருந்த வாளின் உறையைப் பிடுங்க முயன்றார். வீறுகொண்டு அதைப் பறித்தார் திப்பு. அந்த வீரன், தனது துப்பாக்கியை எடுத்து திப்புவைச் சுட்டார். நெற்றியில் குண்டுகள் பாய்ந்து கீழே விழுந்தார் திப்பு. அவர் உயிர் பிரிந்திருந்தது.

 

திப்பு சுல்தானின் இறுதி ஊர்வலம்

திப்பு சுல்தானின் இறுதி நாட்கள்

பட மூலாதாரம்,BONHAMS

இதற்குப் பிறகு மைசூர் படையின் வீரர்கள் அனைவரும் கொன்று குவிக்கப்பட்டனர். திப்பு இறந்துவிட்ட தகவல் ஆங்கிலேயப் படைக்குத் தெரியவில்லை. அரண்மனையைக் கைப்பற்றிய ஆங்கிலேயர்கள் அவரை அங்கே தேடினார்கள். அரண்மனையில் இருந்த இளவரசர்கள் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து தேடுதல் நடந்தபோது, அங்கு வந்த படைத் தலைவர் ஒருவர், திப்பு வடக்கு வாசலில் இறந்து கிடப்பதைச் சொன்னார்.

அதிகாரிகள் அங்கு சென்று பார்த்தபோது, சடலங்கள் குவியலாகக் கிடந்தன. ஒருவழியாக திப்புவின் பல்லக்கு இருந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அருகில் ரஜா கான் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அவர், திப்புவின் உடல் இருந்த இடத்தைக் காட்டினார்.

மறுநாள் திப்புவின் இறுதி ஊர்வலம் துவங்கியது. திப்புவின் உடல் இருந்த சவப்பெட்டியை அவரது தனி உதவியாளர்கள் சுமந்து வந்தனர். இளவரசர் அப்துல் காலிக் சவப்பெட்டியைப் பின்தொடர்ந்து வந்தார். ஊர்வலம் சென்ற தெருக்களில், மக்கள் விழுந்து வணங்கினர். லால் பாக் கல்லறையில் இறக்கி வைக்கப்பட்ட திப்புவின் உடலுக்கு ராணுவ மரியாதை செய்யப்பட்டது. மரியாதைகள் முடிந்த பிறகு ஹைதர் அலியின் உடலுக்கு அருகில் திப்புவின் உடலும் புதைக்கப்பட்டது.

இதற்குப் பிறகு ஸ்ரீரங்கப்பட்டனமும் அரண்மனையும் சூறையாடப்பட்டன. மே 6ஆம் தேதி கர்னல் வெல்லெல்ஸி அங்கு வந்து கோட்டையின் அதிகாரத்தைக் கையில் எடுக்கும்வரை இது தொடர்ந்தது. அவ்வளவு சூறையாடல்களுக்குப் பிறகும் அரண்மனையில் அதிகளவிலான செல்வம் மீதம் இருந்தது. நேர்த்தியான அரியாசனம், வெள்ளியிலும் தங்கத்திலும் செய்யப்பட்ட தட்டுகள், விலை உயர்ந்த தரை விரிப்புகள், விலை மதிப்பற்ற நகைகள் உள்ளிட்டவை இருந்தன.

இவற்றில் ஒரு வைர நட்சத்திரம், நகைகள், திப்புவின் வாட்களில் ஒன்று ஆகியவை வெல்லெல்ஸிக்கு பரிசாக அளிக்கப்பட்டன. சுல்தானின் சிம்மாசனத்தில் இருந்த தங்க முலாம் பூசப்பட்ட புலித் தலை வின்ஸர் கோட்டையின் அருங்காட்சியகத்திற்கு அனுப்பப்பட்டது, திப்புவின் தலைப்பாகை, மற்றொரு வாள் ஆகியவை கவர்னர் ஜெனரல் கார்ன்வாலிஸுக்கு அனுப்பப்பட்டன.

 

திப்பு சுல்தானின் தோல்விக்கான காரணம்

திப்பு சுல்தானின் இறுதி நாட்கள்

பட மூலாதாரம்,DD NEWS

மிகப்பெரிய வீரராக அறியப்பட்டிருந்த திப்பு சுல்தான், ஆங்கிலப் படையிடம் தோல்வியைச் சந்திக்கக் காரணம் என்ன?

"வங்காளத்திலும் பிரெஞ்சுக்காரர்களுக்கு எதிரான போர்களிலும் வெற்றி பெற்றிருந்த ஆங்கிலேயர் தென்னகத்தில் முதலில் ஹைதர் அலியிடமும் பின்னர் திப்பு சுல்தானிடமும் கடுமையான சவாலைச் சந்திக்க வேண்டியிருந்தது.

கிழக்கிந்திய கம்பனி மிகப்பெரிய வல்லமையைக் கொண்டிருந்ததால் மராத்தியர், ஐதராபாத் நிஜாம் இரண்டாம் ஆசப் ஷா, ஆவாத்தின் நவாப் சூஜா-உத்-தவுலா ஆகியோர் இணைந்து ஆங்கிலேயருடன் போரிட விரும்பினார்கள். ஆனால், அந்தத் தருணத்தில் ஹைதர் அலியின் செல்வாக்கு தொடர்ந்து பெருகி வருவதை விரும்பாத ஆசப் ஷாவும், சூஜா உத்-தவுலாவும் ஹைதர் அலிக்கு ஒத்துழைக்க மறுத்தனர்.

மராத்தியர்களும் ராஜபுத்திரர்களும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள ஆங்கிலேயருக்கு ஒத்துழைத்தனர். இவையெல்லாம் மைசூர் அரசுக்கு எதிராக மாறியது. முடிவில், ஆங்கிலேயருடன் இணைந்து இந்திய அரசர்களுக்கு எதிராகப் போரிடுவதில்லை என உறுதி ஏற்றிருந்த திப்பு சுல்தான் இறுதிவரை ஆங்கிலேயருடன் போரிட்டு மடிய வேண்டியதாயிற்று," என்கிறார் மணிக்குமார்.

திப்பு சுல்தானுக்கு 12 குழந்தைகள் வரை இருந்தனர். அவர்களில் இரு இளவரசர்களுக்கு ஆண்டுக்கு 2,24,000 பகோடாக்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது.

ஆனால், அவர்கள் அங்கிருக்கக்கூடாது என்றும் வேலூர் கோட்டைக்குள் சென்று வசிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. வேலூர் கோட்டையில் வெடித்த 1807ஆம் ஆண்டின் கலகத்தில் அவர்களுக்கு பங்கிருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டு, கொல்கத்தாவுக்கு நாடு கடத்தப்பட்டனர்.

https://www.bbc.com/tamil/articles/c0klj2xxppgo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.