Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பிரதமர் மோதியின் பேச்சு, எதிர்க்கட்சிகளின் விமர்சனம், ஊடகங்களின் கருத்து  - மௌனம் காக்கும் தேர்தல் ஆணையம்

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி கட்டுரை தகவல்
  • எழுதியவர், வினீத் கரே
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

மக்களவைத் தேர்தல் 2024 ஏழு கட்டங்களாக நடந்து வரும் நிலையில், தேர்தல் பிரசாரங்களில் 'முஸ்லிம்களுக்கு எதிரான' கருத்துகளைப் பரப்புவது வெளிநாடுகள் உட்பட பல்வேறு தரப்பினர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பொதுத் தேர்தலில் பிரதமர் மோதி தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெறுவார் எனப் பல நிபுணர்கள் கணித்து வரும் நிலையில் பாஜக தேர்தல் பிரசார பாணி தொடர்பான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

சமீபத்திய தேர்தல் பிரசாரம் குறித்து, பெயர் குறிப்பிட விரும்பாத முன்னாள் தேர்தல் ஆணையர் ஒருவர், "இதுபோன்ற தேர்தல் பிரசாரத்தை நான் பார்த்ததே இல்லை. இவர்களின் கருத்துகள் விஷமத்தனமாக உள்ளது. இப்படியெல்லாம் பேசுவார்கள் என்று கற்பனைகூட செய்து பார்க்கவில்லை" என்று கூறினார்.

'இந்தப் போக்கு நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல'

மும்பை கலவரத்திற்குப் (1993) பிறகு அமைதியான சூழலை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட மும்பையின் சமூகம் மற்றும் மதச்சார்பின்மைக்கான ஆய்வு மையத்தின் பொறியாளர் இர்பானின் கூற்றுப்படி, ``இதுபோன்ற தேர்தல் பரப்புரைகள் மக்கள் மத்தியில் பிரிவினையை அதிகரிக்கும். நாட்டின் எதிர்காலத்திற்கு இது நல்லதல்ல.” என்கிறார்.

”இதற்கு முன்பு நடந்த 2014 மற்றும் 2019 தேர்தல்களில் `ஊழல் எதிர்ப்பு’, `இந்தியாவுக்கு நல்ல காலம் பிறக்கிறது (அச்சே தின்)’, `தேசியவாதம்’ உள்ளிட்ட வாக்கியங்களின் அடிப்படையில் தேர்தல் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது. 2024 தேர்தல் 'முஸ்லிம்களுக்கு எதிரான' கருத்துகளை முன்வைத்து நடத்தப்படுகின்றன,” என்றார்.

அமெரிக்காவில் இயங்கி வரும் வில்சன் மையத்தின் தெற்காசியா பிரிவின் இயக்குநர் மைக்கேல் குகல்மேன் கூறுகையில், ``பிரதமர் மோதியும் பாஜகவும் 400 இடங்கள் என்ற இலக்கை எட்டுவதற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதைச் செய்கிறார்கள்,” என்றார்.

ராஜஸ்தானின் பன்ஸ்வாரா மாவட்டத்தில் பிரதமர் மோதி ஆற்றிய பிரசார உரை குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் தலையங்கம் எழுதியிருந்தது , இந்தக் கட்டுரையின் தலைப்பு - "No, Prime Minister".

ராஜஸ்தானில் ஒரு தேர்தல் பிரசாரத்தில், பிரதமர் மோதி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பழைய உரையை மேற்கோள் காட்டி முஸ்லிம்களை பற்றி கருத்து தெரிவித்தார், அதில் முஸ்லிம்களை 'ஊடுருவுபவர்கள்' மற்றும் 'அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்பவர்கள்' என்று குறிப்பிட்டார்.

 

அடுத்தடுத்து வெளியான அறிக்கைகள்

பிரதமர் மோதியின் பேச்சு, எதிர்க்கட்சிகளின் விமர்சனம், ஊடகங்களின் கருத்து  - மௌனம் காக்கும் தேர்தல் ஆணையம்

பட மூலாதாரம்,ANI

இந்த பிரசார விவகாரம் இத்துடன் முடியவில்லை.

கர்நாடக பாஜக, இட ஒதுக்கீடு தொடர்பாக பதிவிட்ட ட்வீட், 'முஸ்லிம்களுக்கு எதிரான' தேர்தல் விளம்பரம் ஆகியவை சர்ச்சையை ஏற்படுத்தியது.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் அடிப்படையில் பாஜக தலைவர்கள் பேசிய கருத்துகள் தவறானவை என்றும் பிரிவினையை ஏற்படுத்துவதாகவும் எதிர்க்கட்சிகள் தரப்பில் கூறி வருகின்றனர்.

இது தவிர, ‘‘தனிப்பட்ட சட்டம் மூலம் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவோம் என காங்கிரஸ் கூறுகிறது” என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.

பாஜக தலைவர் ஜேபி நட்டா ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம், “காங்கிரஸ் தேர்தல் அறிக்கையைப் பார்த்தபோது, இது காங்கிரஸ் கட்சியின் அறிக்கையா அல்லது முஸ்லீம் லீக்கின் அறிக்கையா என்று யோசித்தேன்,” என்றார்.

பிரதமர் மோதியின் முஸ்லிம்கள் குறித்த பேச்சு, எதிர்க்கட்சிகளின் விமர்சனம்: மௌனம் காக்கும் தேர்தல் ஆணையம்

பட மூலாதாரம்,TWITTER

படக்குறிப்பு,அமித் மாளவியா

தேசிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது உரையில், "காங்கிரஸ் இம்முறை தேர்தல் அறிக்கையில், மத சிறுபான்மையினருக்கு அரசு வேலைகளில் இடஒதுக்கீடு வழங்குவதை மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளது, இது நடைமுறைப்படுத்தப்பட்டால், அவர்களை ஆயுதப்படையில் சேர்க்கலாம்," என்றார்.

மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் ஒரு பேரணியில் பேசியபோது, "காங்கிரஸ் தேர்தல் அறிக்கையைப் பார்த்தால், காங்கிரஸ் அந்நிய சக்திகளோடு கைகோர்த்திருப்பது தெரிகிறது. உங்கள் பிள்ளைகளின் சொத்துகளை முஸ்லிம்களுக்கு கொடுக்க நினைக்கிறார்கள்" என்று கூறினார்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் ஷரியா, தாலிபன் போன்ற வார்த்தைகள் எங்குமே குறிப்பிடப்படவில்லை.

பிரதமர் மோதி, பன்ஸ்வாராவில் ஆற்றிய உரை குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா செய்தியாளர் சந்திப்பில் கூறியிருப்பதாவது: “இந்தியா கூட்டணிக்கு, நாட்டு மக்களை விடவும் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தவர்கள்தான் முக்கியம்,” என்று குறிப்பிட்டார்.

 

வெவ்வேறு அரசியல் சித்தாந்தங்களை கொண்டவர்களின் கருத்து என்ன?

பாஜகவின் பிரசாரம் மீதான விமர்சனங்கள் குறித்து வலதுசாரி சுவ்ரோகமல் தத்தா பேசுகையில், "இந்த நாட்டில் உடலிலிருந்து தலை துண்டிக்கப்பட்டது இல்லையா? கஜ்வா-இ-ஹிந்த் என்ற சித்தாந்தம் இந்த நாட்டிற்குள் வரவில்லையா? ஓட்டு ஜிகாத் இந்த நாட்டிற்கு வரவில்லையா? இந்த உண்மைகளை பிரதமர் அம்பலப்படுத்துகிறார், அவர் அப்படி என்ன குற்றம் செய்துவிட்டார்?” என்றார்.

பாஜக சிறுபான்மை மோர்ச்சா தலைவர் ஜமால் சித்திக், பிரதமர் மோதியின் பிரசாரம் மீதான விமர்சனங்களை ஏற்கவில்லை.

ஜமால் சித்திக் பேசுகையில், “மோதி ஜி எப்போதும் முஸ்லிம்களின் நலன் பற்றியே சிந்தித்தவர் ஊடுருவியவர்கள் என்றால் முஸ்லிம் என்று அர்த்தம் இல்லை. அதை ஏன் முஸ்லிம்கள் மீது திணிக்கிறோம்?

பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் நாட்டை உடைக்க முயல்கின்றனர். வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் வேலை வாய்ப்புகளை மக்களிடம் இருந்து கொள்ளையடித்து வருகிறார்கள். ஆம், இந்து, முஸ்லிம் என இரு தரப்பிலும், அதிக குழந்தைகளைப் பெற்றவர்கள் இருக்கிறார்கள்," என்றார்.

 

தேர்தல் ஆணையம் 'மௌனம்' காப்பது ஏன்?

பிரதமர் மோதியின் முஸ்லிம்கள் குறித்த பேச்சு, எதிர்க்கட்சிகளின் விமர்சனம்: மௌனம் காக்கும் தேர்தல் ஆணையம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில், ஏப்ரல் 16ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

தேர்தல் ஆணையத்துக்கு சுமார் 200 புகார்கள் வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதில், 169 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. பாஜக சார்பில் 51 புகார்கள் அளிக்கப்பட்டு, அதில் 38 வழக்குகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. காங்கிரஸிடம் இருந்து 59 புகார்கள் பெறப்பட்டன, அவற்றில் 51 புகார்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், ``விஷமத்தனமான கருத்துகளை” உள்ளடக்கிய தேர்தல் பிரசாரங்கள் நடக்கும் இந்தக் காலகட்டத்தில், ஆளும் பாஜக தலைவர்கள் மீது காட்டும் கடுமையை, எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது தேர்தல் ஆணையம் காட்டுவதில்லை என்று தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. முன்னர், பாஜக தலைவர்கள் பிரசாரத்தில் இந்து மத சின்னங்களைப் பயன்படுத்தியதற்காக தேர்தல் ஆணையம் பாஜக மீது நடவடிக்கை எடுத்ததாகவும் தற்போது எதிர்க்கட்சிகள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் விமர்சனம் எழுந்துள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டெரெக் ஓ பிரையன், தேர்தல் ஆணையம் ஒரு "பாகுபாடான நடுவர்" போல் நடந்து கொள்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து தேர்தல் ஆணைய அதிகாரி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

பிரதமரின் பேச்சுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, பிபிசியிடம் பேசுகையில், "சாதி, மதம், சமூகம் குறித்த கருத்துகளுக்கு தேர்தல் ஆணையம் மௌனம் காப்பது ஏன்?" என்று கேள்வி எழுப்பினார்.

முன்னாள் தேர்தல் ஆணையர் ஒருவர் கூறுகையில், ``கடந்த காலங்களில் சர்ச்சையான பிரசார உரைகளுக்கு தேர்தல் ஆணையம் கடுமை காட்டியிருந்தால் இன்று இவ்வாறான நிலை ஏற்பட்டிருக்காது.,’ என்றார்.

தேர்தல் ஆணையத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட மாதிரி நடத்தை விதிகளின்படி, தேர்தல் பிரசாரத்தின்போது மத சின்னங்களை பயன்படுத்தி வாக்கு கேட்கக்கூடாது. மதம், சாதி அடிப்படையில் வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுக்கக்கூடாது. தேர்தல் நடத்தை நெறிகளின்படி, எந்தவொரு மத அல்லது இன சமூகத்திற்கு எதிராக வெறுப்பு பிரசாரத்தை மேற்கொள்வது அல்லது முழக்கங்களை எழுப்புவது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த விதிகளைக் காரணம் காட்டி, பிரதமர் மோதி மீது நடவடிக்கை எடுக்க எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பிரதமர் மோதியின் பன்ஸ்வாரா பிரசாரப் பேச்சுக்கான நோட்டீஸ் பிரதமருக்கு அனுப்பப்படாமல், கட்சித் தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு அனுப்பப்பட்டது கேள்விகளின் தீவிரத்தை மேலும் அதிகரித்தது. இதேபோன்று, ராகுல் காந்தியின் பேச்சு குறித்து கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது, இப்படி நடப்பது இதுவே முதல் முறை.

காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பதிவில் , “பிரதமரின் தரக்குறைவான கருத்துகளால் சாமானிய மக்கள் மத்தியில் சலசலப்பு எழுந்துள்ளது. ஆனால் தேர்தல் ஆணையத்தின் கைகள் கட்டிப் போடப்பட்டுள்ளன என்பது தெளிவாகிறது.

சமமாக நடத்துகிறோம் என்பதை நிரூபிக்க ராகுல் காந்தியின் கருத்துக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்? தேர்தல் ஆணையத்திற்கு இது அவசியமா? பாஜக தலைவர் ஹேமமாலினி குறித்து ஆட்சேபகரமான கருத்து தெரிவித்ததற்காக காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலாவை தேர்தல் ஆணையம் கண்டித்ததையும், அவரது தேர்தல் பிரசாரத்துக்கு 48 மணிநேரம் தடை விதித்ததையும் நினைவில் கொள்ள வேண்டும்.

இது தவிர, பாஜக வேட்பாளர் கங்கனா ரனாவத் குறித்து சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநெட்-ஐ குறிப்பிட்டு தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்தது,” என்று குறிப்பிட்டார்.

 

அழுத்தமான பேச்சுகளுக்கு என்ன காரணம்?

பிரதமர் மோதியின் முஸ்லிம்கள் குறித்த பேச்சு, எதிர்க்கட்சிகளின் விமர்சனம்: மௌனம் காக்கும் தேர்தல் ஆணையம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பிரதமர் மோதியின் பன்ஸ்வாரா பிரசார உரை, இரண்டாம் கட்ட வாக்குப் பதிவுக்கு முன்பாகப் பேசப்பட்டது. வாக்குப்பதிவின் இரண்டாம் கட்டமாக கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், அசாம், பிகார், சத்தீஸ்கர், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் பல தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

அமெரிக்காவில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைகழகத்தில் பணிபுரியும் இந்திய அரசியல் துறை பேராசிரியர் இர்பான் நூருதீன் கூறுகையில், “கடந்த 10 ஆண்டுகளில், சில சந்தர்ப்பங்களில் கட்சியின் முக்கிய அடிப்படைக் கொள்கைகளை நிலைநாட்டும் வகையில் மறைமுகமாக பிரதமர் மோதி செயல்பட்டார். தீவிரமாக சர்ச்சைக்குரிய கருத்துகள் பேசுவதை மற்ற பாஜக தலைவர்களிடம் ஒப்படைத்தார், ஆனால் இந்த முறை எல்லாம் மாறிவிட்டது. பிரதமர் மோதியே மயானம் மற்றும் சுடுகாடு பற்றிக் குறிப்பிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது,” என்று விவரித்தார்.

``கிராமங்கள் மற்றும் நகரங்களில் வேலையில்லா திண்டாட்டம் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் உள்ள சவால் ஆகியவை முக்கியமான பிரச்னையாக இருப்பதால் பொருளாதாரம் தொடர்பான பேச்சுகள் வாக்காளர்களை ஈர்க்கவில்லை என்பதை பாஜக புரிந்து கொண்டது என்பதற்கு இதுவொரு அறிகுறி,” என்று பேராசிரியர் நூருதீன் கூறுகிறார்.

மேலும் பேசிய அவர், ``தேர்தலுக்கு முன் அரவிந்த் கேஜ்ரிவாலை கைது செய்தது, பாஜக கட்சியினர் மத்தியில், இது ஹிட்-விக்கெட் (hit-wicket) என்று ஒருதரப்பும் தனக்குத் தானே தீங்கு விளைவித்துக் கொண்டது என்று மற்றொரு தரப்பும் நம்பியது. இந்த நடவடிக்கை எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்தது, 'ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது' என்ற முழக்கத்தை எழுப்ப வழிவகுத்தது.”

பிரதமர் மோதியின் பேச்சு, எதிர்க்கட்சிகளின் விமர்சனம், ஊடகங்களின் கருத்து  - மௌனம் காக்கும் தேர்தல் ஆணையம்

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,அரவிந்த் கெஜ்ரிவால்

கேஜ்ரிவாலின் கைது பாஜகவின் அதீத நம்பிக்கையின் விளைவு என்று அவர் கருதுகிறார். ``ராமர் கோவில் பிரதிஷ்டை விழாவின் மூலம் தேர்தலில் பலன் கிடைக்கும் என பாஜக எதிர்பார்த்தது. ஆனால் அது கிடைக்கவில்லை. மகாராஷ்டிராவில் கட்சிகள் உடைந்ததால் பலர் பாஜகவில் இருந்து விலகிச் சென்றனர்,’’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

சமீபத்திய தேர்தல் பிரசாரத்தின்போது, ராகுல் காந்தியை தாக்கும் வகையில் பேசிய பிரதமர் மோதி, அதானி மற்றும் அம்பானி பற்றிக் குறிப்பிட்டார். இதுகுறித்துப் பேசிய நூருதீன் ``பாஜக-வுக்கு நெருக்கமானவர்கள் என நம்பப்படும் நபர்களை பிரசாரத்தில் குறிப்பிடுகிறார். இதெல்லாம் நம்பும்படி இல்லை,” என்கிறார்.

மைக்கேல் குகல்மேன் கூறுகையில், ``பிரதமர் மோதி தேர்தலில் தானும் தனது கட்சியும் சிறப்பாகச் செயல்படுவதாக நம்புகிறார். அவர் தனது முக்கிய ஆதரவாளர்களைத் தாண்டி மேலும் பலரை கட்சியில் இணைக்க முயல்கிறார்.”

" இது புத்திசாலித்தனமான கொள்கை அல்ல. கட்சியில் மக்களைs சேர்க்க விரும்பினால், அவர்கள் முஸ்லிம் வாக்காளர்களை நல்ல முறையில் அணுக வேண்டும், சுதந்திர எண்ணம் கொண்ட வாக்காளர்களிடம் பேச வேண்டும், பாஜகவை சார்ந்த வாக்காளர்களை அணுக வேண்டும். நீங்கள் அவர்களை உங்கள் பக்கம் ஈர்க்க முயல்கிறீர்கள் என்றால், பயன்படுத்தும் கடுமையான மொழியைத் தவிர்ப்பது நல்லது. தற்போதைய பிரசார பாணி துரதிர்ஷ்டவசமானது,” என்று மைக்கேல் குகல்மேன் கூறுகிறார்.

பாஜகவின் கொள்கைகளை ஆதரிப்பவரான டாக்டர் சுவ்ரோகமல் தத்தா கூறுகையில், "பிரதமர் மோதி மற்றும் பாஜக தலைவர்களின் பேச்சுகள் பிரிவினை ஏற்படுத்தும் அரசியல் அல்ல, நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு, ஒருமைப்பாட்டுடன் தொடர்புடையது."

” பிரிவினை ஏற்படுத்தும் செயல்கள் செய்தது காங்கிரஸ்தான் என்று பிரதமர் மோதி தொடர்ந்து கூறி வருகிறார், இதுபோன்று மீண்டும் நடக்கக் கூடாது. இதைப் பார்த்து நாடும், சமுதாயமும் உஷாராக இருக்க வேண்டும் என்று பிரதமர் நம்மை எச்சரிக்கிறார். இந்த வார்த்தைகளைச் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் பிரதமர் இருக்கிறார்."

"மேலும், நாட்டின் தேசிய வளங்களில் சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியது வரலாற்று ரீதியாக உண்மை கிடையாது,” என்றார்.

விமர்சகர்களின் கருத்துப்படி, மன்மோகன் சிங்கின் பேச்சை முன்வைத்து பாஜக தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பகிரும் கருத்தும், சூழலும் தவறானது என்கின்றனர்.

 

அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் இதை எப்படிப் பார்க்கின்றன?

பிரதமர் மோதியின் முஸ்லிம்கள் குறித்த பேச்சு, எதிர்க்கட்சிகளின் விமர்சனம்: மௌனம் காக்கும் தேர்தல் ஆணையம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் கூறுகையில், மேற்கத்திய ஊடகங்களில் இந்தியா மற்றும் இந்திய அரசியலைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கும் செய்திகள் நல்ல தொணியில் இல்லை. இந்திய ஜனநாயகம் குறித்து வரும் செய்திகள், பாஜக தலைவர்களின் பேச்சுகள், நிஜ்ஜார் படுகொலை தொடர்பான செய்திகளைப் பார்க்கும்போது அமெரிக்காவில் இந்த விவகாரங்கள் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது தெரிகிறது.”

``செய்திகள், கட்டுரைகள் அல்லது வேறு எந்தப் பதிவாக இருந்தாலும், இந்தியாவில் ஜனநாயகம் பலவீனமடைந்து வருவதாகவும், சிறுபான்மையினரின் நிலை சரியில்லை என்றும் மேற்கத்திய ஊடகங்களில் தொடர்ந்து எழுதப்பட்டு வருகிறது. சீனாவிற்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சமீபத்திய ஆண்டுகளில் உலக அரசியலில் இந்தியாவின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்," என்கிறார்.

பேராசிரியர் இர்பான் நூருதீன் கூறுகையில், "தற்போது உலகின் கவனம் இந்தியா மற்றும் இந்திய ஜனநாயகத்தின் எதிர்மறை அம்சங்களை நோக்கியே உள்ளது. நிஜ்ஜார் கொலை வழக்கில் வாஷிங்டன் போஸ்ட் என்ற அமெரிக்க நாளிதழில் சமீபத்தில் வெளியான செய்தி அறிக்கை மற்றும் இந்திய உளவாளிகள் என்று குறிப்பிட்டு ஆஸ்திரேலியாவில் வெளியான செய்தி அறிக்கை ஆகியவை இதற்கு சான்று’’ என்று சுட்டிக்காட்டுகிறார்.

நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியாவுக்கு எந்தப் பங்கும் இல்லை என இந்தியா மறுத்து வருகிறது.

பேராசிரியர் நூருதீன் மேலும் கூறுகையில், “உலக அரங்கில் இந்தியாவுக்கு பெரும் ஆதரவாக இருக்கும் நாடுகள் அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும்தான். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பியூ ரிசர்ச் நடத்திய ஆய்வறிக்கையின்படி ஐரோப்பாவில் காலப்போக்கில் இந்தியா மீதான எதிர்மறை எண்ணம் அதிகரித்துள்ளது,” என்றார்.

மைக்கேல் குகல்மேன் கூறுகையில், "பிரதமராக நரேந்திர மோதியின் பேச்சுகளையும், தேர்தல் பிரசாரங்களையும் தனித்தனியாகப் பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால், பாஜகவின் கொள்கைகள் குறித்து பல முஸ்லிம்கள் கவலைப்பட்டாலும், பிரதமர் மோதியின் ஆட்சியில் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியா உடனான மத்திய கிழக்கு நாடுகளின் உறவுகள் வலுப்பெற்றுள்ளதால் இந்திய நிலைமைகள் பற்றி அவை எதுவும் கூறாது, இது தவிர ஏராளமான இந்தியர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிகின்றனர்,” என்றார்.

மைக்கேல் குகல்மேனின் கூற்றுப்படி, ”பாகிஸ்தான் மற்றும் சீனாவை தவிர, வேறு எந்த நாட்டின் தலைவரும் தேர்தல் பிரசாரங்களைக் குறிப்பிட்டு இந்தியாவை விமர்சிப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் வெளிநாட்டு மண்ணில் நிஜார் படுகொலை போன்ற குற்றச்சாட்டுகள் வெளிச்சத்திற்கு வரும்போது இந்த நிலைமை மாறுகிறது."

"இந்தியா மதச்சார்பின்மையில் இருந்து விலகிச் செல்கிறது என்ற கவலை நீண்ட காலமாக இருக்கிறது, தேர்தல் பரப்புரை பேச்சுகள் இந்தியாவின் போக்கைப் பற்றிய கவலையை மேலும் அதிகரிக்கச் செய்கிறது. 'வெறுக்கத்தக்க பேச்சு' என்றே சொல்லத் தோன்றுகிறது” என்றும் அவர் கூறுகிறார்.

 

குற்றச்சாட்டுகளை மறுக்கும் பாஜக தலைவர்கள்

பிரதமர் மோதியின் முஸ்லிம்கள் குறித்த பேச்சு, எதிர்க்கட்சிகளின் விமர்சனம்: மௌனம் காக்கும் தேர்தல் ஆணையம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தக் குற்றச்சாட்டுகளை பாஜக தலைவர்கள் தொடர்ந்து மறுத்து வருகின்றனர். வலதுசாரி சர்வதேச விவகாரங்களின் நிபுணர் சுவ்ரோகமல் தத்தா கருத்துப்படி, இந்தியாவை பற்றி சர்வதேச நாடுகளோ அல்லது மேற்கத்திய நாடுகளோ என்ன சொல்கிறது என்பதைப் பற்றி இந்தியா கவலைப்படவில்லை.”

அவர்கள் முதலில் அவர்கள் பிரச்னைகளைப் பார்க்க வேண்டும். சட்டவிரோத குடியேறிகள் ஸ்வீடன், பிரான்ஸில் போராட்டங்கள் நடத்தினர், பாரிஸிலும் தாக்குதல் நடந்தது, லண்டனில் வெடிகுண்டு தாக்குதல்கள், மாஸ்கோ தியேட்டர்களில் ஐ.எஸ் தாக்குதலில் மக்கள் இறந்தது எனப் பல்வேறு சம்பவங்கள் நடக்கின்றன. அமெரிக்காவில் உள்ள கறுப்பர்கள் மற்றும் ஸ்பானியர்களுக்கு செய்யப்படும் பாகுபாடுகளை அமெரிக்காவும் ஐரோப்பாவும் முதலில் சரி செய்ய வேண்டும்,” என்றார்.

பாஜக சிறுபான்மை மோர்ச்சா தலைவர் ஜமால் சித்திக் கூறுகையில், "பிரதமருக்கு முன் கேள்விகள் வரும்போது, காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையை வெளியிடும்போது, காங்கிரஸ் இளவரசர் ராகுல் பையா தனது கருத்தைத் தெரிவிக்கும்போது, மோதியை தாக்கும்போது, மோதிஜி உங்கள் கருத்தை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும்."

சமீபத்தில், டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த பிரதமர் மோதி, முஸ்லிம்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, "சுயபரிசோதனை செய்து, சிந்தித்துப் பாருங்கள், நாடு முன்னேறி வருகிறது. குறை என்று உங்கள் சமூகத்தில் உணரப்பட்டால், அது காங்கிரஸ் ஆட்சியின்போது அரசு செய்த செயல்பாடுகளின் விளைவுதான்,” என்றார்.

https://www.bbc.com/tamil/articles/c72pg37gvngo

  • கருத்துக்கள உறவுகள்

மோடி போன்ற ஆட்கள்தான் இந்தியாவிற்குத் தேவை. அவர் தனது ஆயுட்காலத்தை நிறைவு செய்வதற்குள் இந்திய சமூகங்களிடையே ஆளமான பிளவுகளை ஏற்படுத்திவிட்டுச் செல்வார். 

மாவு புளிப்பது அப்பத்திற்கு நல்லது. 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.