Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
 
 
தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!
 
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
 
உதாரணமாக ,சோதிடர் நம் எதிர்காலத்தைப் பற்றி சொல்வது உண்மை என்று வைப்போம். அதனால் என்ன பயன் என்று யோசிக்க வேண்டும். சோதிடத்தை நம்புகிறவர்கள் சொல்லும் ஒரு உதாரணம் - இருட்டில் போகிறவனுக்கு ஒரு விளக்கு இருந்தால் கொஞ்சம் வழி நன்றாகத் தெரியும். வழியில் குண்டு குழிகளில் விழாமல் தப்பிக்கலாம். அப்படி எல்லாத் தடங்கல் களையும் சோதிடம் மூலம் தாண்டி விடலாம் என்று. அப்படி என்றால் சோதிடத்தை நம்புகிறவர்களுக்கு கஷ்டம் ஏன் வருகிறது?
 
இதற்கு அவர்கள் பொதுவாக சொல்லும் பதில், சோதிடன் சொன்ன பரிகாரத்தை சரியாகச் செய்யவில்லை என்பதாகும். சோதிடம் பார்க்கும் எல்லோருடைய கஷ்டங்களையும் பரிகாரங்கள் மூலம் விலக்கி விட முடியும் என்றால் அனைத்து மக்களும் கஷ்டங்கள் இல்லாமல் வாழலாமே?சோதிடம் சொல்லுகிறவன் உட்பட? சோதிடத்தை பிறருக்கு சொல்லி அன்றாடம் தன் வயிரையும் குடும்பத்தின் வயிரையும் நிரப்புகிறவன், அதில் இருந்து தான் மீள ஏன் தன் சோதிடத்தைப் பார்ப்பதில்லை?
 
இந்த மாதிரி கேள்விகளும் விளக்கங்களும் இருந்து கொண்டே தான் இருக்கும். ஆகவே மனது உறுதியாக இருப்பவர்கள் நடப்பது நடந்தே தீரும் என்று ஒரே கொள்கையில் நிற்பார்களை சோதிடம் ஏமாற்ற முடியாது. அது அவர்களுக்கு தேவையும் இல்லை. மன உறுதி இல்லாதவர்கள் எப்பொழுதும் ஏதாவது ஊன்று கோலைத் தேடிக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் இருக்கும் மட்டும் இந்த ஏமாற்றுகளும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
 
தமிழன் சங்க காலத்திலேயே இதை நம்ப தொடங்கி விட்டான். சங்கத் தமிழ் நூல்களில் அக்காலத் தமிழரின் மாறு பட்ட நம்பிக்கைகள் பரவிக்கிடக்கின்றன. இடி ஓசை கேட்டால் பாம்பு நடுங்கும் அல்லது இறந்துவிடும் என்றும், மயிரை இழந்துவிட்டால் கவரிமான் உயிர் வாழாது என்றும், புலி வேட்டையாடுகையில் இடப்பக்கம் விழும் இரையை உண்ணாது என்றும் சங்கத் தமிழ் நூல்களிலும் தொல்காப்பியத்திலும் இது போல எண்ணற்ற குறிப்புக்களைக் காண முடியும்.
 
மேலும் சங்ககாலத் தமிழர்கள் பறவைகள் பறக்கும் திசை, எழுப்பும் ஒலி ஆகியவற்றைக் கொண்டு ஆருடம் கூறினார்கள். பல்லி சொல்லுக்குப் பலன் கண்டனர். இடது கண் துடிப்பதைக் கொண்டு சகுனம் பாரத்தனர். பெண்ணின் மனநோயைக் (உண்மையில் காதல் நோய்) குணப்படுத்த கட்டுச்சிவியைக் கொண்டு “விரிச்சி” கேட்டனர். வேலனைக் கொண்டு வெறியாடினர். நல்லநாள் பார்த்துத் திருமணம் செய்தனர். சில பெண் சோதிடர்கள், அவர்கள் பையிலுள்ள கழங்கு என்னும் காய்களைக் கொண்டு வருங்காலம் உரைத்தனர்.
 
கண் துடிப்பதற்கு நரம்பியல்க் கூறுகள் காரணமாகின்றது. ஆனால் வலக்கண் துடித்தால் ஒரு பலன், இடக்கண் துடித்தால் ஒரு பலன் என இவர்கள் படும் பாடு கொஞ்சமல்ல. பெண்ணின் இடது புருவமும், ஆணின் வலது புருவமும் துடிக்குமானால் நல்லது நடக்கும் என்றும், பெண்ணிற்கு வலது புருவமும், ஆணிற்கு இடது புருவமும் துடித்தால் ஏதோ துன்பத்திற்கு அறிகுறி என்றும் நம்பி வருகின்றனர்.
 
”கண்ணகி கருக்கணும் மாதவி செங்கணும்
உண்ணிறை கரந்து அகத்து ஒளித்து நீர் உகுத்தன
எண்ணும் முறை இடத்திலும் வலத்திலும் துடித்தன
விண்ணவர் கோமான் விழவுநாள் அகத்தென”
 
என்று இளங்கோவடிகள் இந்திரவிழா நாளில் கண்ணகி கருங் கண் இடத்திலும், மாதவி செங்கண் வலத்திலும் துடித்தன என்கிறார். கண்ணகி தன் கணவனை, மாதவியிடமிருந்து பெறப் போகின்றாள், மாதவி கோவலனின் நட்பை இழக்கிறாள் என்பதையே இவ்விரு பெண்களின் கண்துடிப்புகளும் இங்கு குறிப்பிடுகின்றன?
 
எந்த பத்துப் பொருத்தங்களை பார்த்தார்கள் என்பதில் தான் திருமணத்தின் மகிமை தங்கி உள்ளது என்று பத்துப் பொருத்தங்களைத் தொல்காப்பியப் பொருள் அதிகாரம் பாடல் 273 பட்டியலிடுகிறது.
 
"பிறப்பே, குடிமை, ஆண்மை, ஆண்டொடு
உருவு, நிறுத்த, காம வாயில்
நிறையே, அருளே, உணர்வொடு திருவென
முறையுறக் கிளத்த ஒப்பினது வகையே"
 
குடிப் பெருமை, குடி ஒழுக்கம் வழுவாமை, ஊக்கம், ஆணின் வயது கூடியிருத்தல், உருவப் பொருத்தம், இன்ப நுகர்ச்சி உணர்வு சமமாக அமைந் திருத்தல், குடும்பச் செய்தி காத்தல், அருளும், உணர்வும் ஒத்திருத்தல், செல்வச் சமநிலை ஆகிய பத்தைக் குறிக்கின்றது. அதே போல இல்வாழ்க்கைக்குப் பொருந்தாத பத்துத் தன்மைகளையும் தொல்காப்பியம் மேலும் கூறுகிறது.
 
"நிம்புரி, கொடுமை வியப்பொடு புறமொழி
வன்சொல், பொச்சாப்பு மடிமையொடு குடிமை
இன்புறல் ஏழைமை மறப்போடொப்புமை
என்றிவை இன்மை என்மனார் புலவர்."
 
தற்பெருமை, கொடுமை, (தன்னை)வியத்தல் புறங்கூறாமை, வன்சொல், உறுதியிலிருந்து பின் வாங்குதல், குடிப்பிறப்பை உயர்த்திப் பேசுதல், வறுமை குறித்து வாடக்கூடாது, மறதி, ஒருவரையொருவர் ஒப்பிட்டுப் பார்த்தல், பேசுதல் ஆகிய பத்துத் தன்மைகளும் இருக்கக் கூடாதவை என்கிறது. ஒத்த அன்பு, ஒன்றிய உள்ளங்களின் உயர் நோக்கு ஆகியவை இங்கு காணக்கிடைக்கிறது குறிப்பிடத்தக்கது.
 
திருமணம் என்று சொல்லப்படுவதெல்லாம் ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து ஒருவர்க்கொருவர் கட்டுப்பட்டு அவர்களது வாழ்க்கையைக் கூட்டுப் பொறுப்பில் நடத்துவதற்குப் பலர் அறியச் செய்து கொள்ளும் சடங்கே ஆகும். ஆகவே அதற்கு சாட்சி கட்டாயம் கிரகங்களாக இருக்காது. எல்லா திசையிலும் அவர்களை சுற்றி வாழும் வயதில் முதிர்ந்த உறவினரும் நண்பர்களுமே ஆகும். அது தான் அவர்களை ஒன்றாக முறியாமல் வைத்திருக்க உதவும்.  திருமணத்திற்கான சாட்சியாக மூன்று முடிச்சோ அல்லது மோதிரமோ இருக்கலாம். ஆனால் உண்மையில் தேவைப்படுவது இரு மனங்கள் ஒன்று சேருவதே. இதை குறுந்தொகையில் 40 இப்படி கூறுகிறது.
 
"யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ் வழி அறிதும்?
செம் புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே."
 
இப்படி அமையாத திருமணங்கள் விவாகரத்திலும், கள்ள தொடர்பிலும் தொங்கி நிற்பதில் வியப்பில்லை. மேலே கூறிய வாறு தனிச்சிறப்பு கொண்ட தமிழர், பிற்காலத்தில் ஏற்பட்ட கெட்ட விளைவால் பத்து வகைப் பொருத்தங்கள் - தினம், கணம், மகேந்திரம், பெண் தீர்க்கப் பொருத்தம், யோனி, ராசி, வசியம், ரஜ்ஜூ, வேதை, நாடிப் பொருத்தம் என மாறியது. கணித்துக் கூறுபவன் ஜோசியன்.  ஜாதகக் கட்டங்களைப் போட்டு கூறி விடுவான். பத்தில் ஒன்பது பொருத்தங்கள் நன்றாக அமைந்திருக்கின்றன என்பான் அவன். கல்யாணம் நடந்த பின்னர்தான் தெரியும் பொய்களும் புரட்டுகளும்!!
 
ஒருவர் எந்த நட்சத்திரத்தின் கீழ்ப் பிறந்தாரோ அதைக் கொண்டு அவருக்கு ஜாதகம் கணிக்கும் வழக்கம் பழந் தமிழகத்திலும் இருந்தது; புறம் 24-ம் பாடலில் பிறந்த நாள் நட்சத்திரம் பற்றிய குறிப்பு உள்ளது. திரண்ட நெல் விளையும் முத்தூர்க் கூற்றத்தையும் வென்ற வெற்றி பொருந்திய உயர்ந்த குடையும், கொடியாற் பொலிந்த தேரினையும் உடைய செழிய! உனது நட்சத்திரங்கள் நிலைத்து வளரட்டும்! என்று அந்த பாடல் அவனை வாழ்த்துகிறது.
 
"குப்பை நெல்லின், முத்தூறு தந்த
கொற்ற நீள் குடை, கொடித் தேர்ச் செழிய!
நின்று நிலைஇயர் நின் நாள்மீன்;"
 
இடைக்காட்டுச் சித்தர் வறட்சி ஏற்படப்போவதை அறிந்துகொண்டு ஆடு மாடுகளுக்கு எருக்க இலைகளைத் தின்பதற்குப் பழக்கியதாக ஒரு வரலாறு உண்டு. இவர் 60 தமிழ் ஆண்டுகளின் பலன்களையும் பா வடிவில் தந்துள்ளார்.
 
மழைக்கும் வெள்ளி கிரகத்திற்கும் உள்ள தொடர்பைச் சங்கப் புலவர்கள் பாடியுள்ளனர். வெள்ளி எனப்படும் சுக்கிரன் தெற்குத் திசைக்குச் சென்றால் பஞ்சமும் வறட்சியும் ஏற்படும் என்று பழந்தமிழர்கள் கருதினர்.
 
"வசையில்புகழ் வயங்குவெண்மீன்
திசைதிரிந்து தெற்கேகினும்
தற்பாடிய தளியுணவிற்
புட்டேம்பப் புயன்மாறி"
[பட்டினப்பாலை]
 
இப்படியாக கண்களை மூடியபடி எல்லாவிதமான அசட்டு நம்பிக்கைகளுடனும் மனிதன் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறான்?
 
 
கந்தையா தில்லைவிநாயகலிங்கம், 
அத்தியடி, யாழ்ப்பாணம்
338360482_206678248652944_2502518881068882108_n.jpg?_nc_cat=110&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=sNa2TuQxP8EQ7kNvgHEbPXH&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYBwi073zEj4hC6eo8S9R8yGyxNtPKjyorxxrsMDkzc-xA&oe=66459FB1  No photo description available. 12803228_10205946631967686_3177245347199596514_n.jpg?_nc_cat=102&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=9VJdqUphr8MQ7kNvgENnaoW&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYBssn3TnreRXJIdWKUarlYd1RM8K0-pdZb8XY55D8mPIw&oe=66673899 No photo description available.
 
 
  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சோதிடதுக்கு இடம் இருக்கிறது.

அதை உதாரணத்துடன் சொல்வது தான், அதன் இடத்தை எப்படி எனது பார்வையில் இருக்கிறது என்பதை சொல்ல முடியும்.

உ.ம். ஆக சோதிடம் வாகனத்தை ஓட்டும் போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும் (சோதிடம் சொல்லும் விளக்கம் கிரக பெயர்ச்சி) என்பது ஒருமுறை வாகனம் ஓட்டும் முறையை மீளாய்வுக்கு உட்படுத்த தூண்டும்.

அதே போல, வாகனத்தை ஓட்டும் போது மிகுந்த சிரத்தை எடுக்கவும்  தூண்டும்.

மற்றது, வாழ்க்கையில் கடின காலத்தில், கடினத்தை கடந்து செல்ல முயல  வைக்கும் உத்வேகத்தை (நம்பிக்கையை) அளிப்பதிலும் பங்கு வகிக்கிறது.

அனால், இப்போது சோதிடம் சொல்லுபவர்கள், யதார்த்தத்தை மையப்படுத்தியே சொல்லுகிறர்கள்.


அண்மையில் பொழுதுபோக்காக சோதிடம் youtube இல் பார்த்தேன். உங்களுக்கு நல்ல காலம் (விளக்கம் கிரக பெயர்ச்சி), ஆனால் அதை அறுவடை செய்வது உங்கள் பொறுப்பு, அதாவது முயல வேண்டும், முயற்சிகளின் பரந்த திசை பற்றியும் சொல்லப்பட்டது, எனவே அதை ஓர் ஒப்பீடு செய்யலாம் மனவோட்டம், மதியோட்டம், எண்ணங்கள், அனுபவம் போன்றவற்றுடன்.

எனவே, சோதிடத்துக்கு இடம் இருப்பது இப்படியான (யதார்த்தத்தை மையப்படுத்தி ) முறையாலோ தெரியவில்லை.
 

  • Like 1
  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சங்க இலக்கியங்களில் தங்களின் புலமை வியக்க வைக்கிறது. நீங்கள் வெளிக்கொணர்பவை அநேகமாக, பேசாப் பொருட்கள். எனவே வியப்பூட்டும் பயனுள்ள தகவல்கள். நன்றி ஐயா.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சகலகலா வல்லவன் தில்லை எதை எடுத்தாலும் நன்றாக எழுதுகிறார்.

பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)


சித்தர்கள் ஆக்கிய நூல்களில் கவனமாக இருக்கவும்.

ஏனெனில், சில நூல்கள் சாபம் கொண்டவை.

காரணம், அந்த நூல்கலில் உள்ளவை உரிய முறையில் அனுட்டானம் செய்தால், சித்தர்களை,சித்துக்களை அடையலாம்  என்பதால், துர்பிரோயோகம் செய்யப்படாமல் இருக்கவே அந்த கவசம்.  

சாபம் நீக்கியே, பின் அந்த நூல்களில் உள்ளவற்றை வாசிக்க வேண்டும் என்று இருக்கிறது.

சாபம்  நீக்குவதற்கும், அந்த நூல்களில் இருக்கிறது எப்படி செய்யப்பட வேண்டும் என்று.

எந்த சித்தரானாலும், இதனாலேயே, சித்தர் (நூல்கள்) என்றால் குரு வழிகாட்டல் அவசியம் என்பது பொதுவாக வேண்டப்படுவது.

அநேகமாக நூலிலேயே செய்யுள் இருக்கும், நூலே குருவாக இருக்கும்தன்மை கொண்டதா அல்லது குரு  வழிகாட்டல் வேண்டுமா  என்று. 

நூலே குருவாக இருக்கும் என்றால் பொதுவாக எல்லோரும் (புரிந்தால்) வாசிக்கலாம்.

விஞ்ஞான அடிபடையில் விளக்கம் இல்லை - அதற்கும் அப்பாற்றப்பட்டது.  

Edited by Kadancha
add info.


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.