Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
யானை

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சிராஜ்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 15 மே 2024, 09:04 GMT
    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

யானை - மனித மோதல்களைத் தவிர்க்கவும், யானைகளை பாதுகாக்கவும் வனத்துறை சார்பாக தமிழகம் முழுவதும் 42 யானை வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டு, அது தொடர்பான 161 பக்க விரிவான அறிக்கை கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது. இதற்கு சில அரசியல் கட்சிகளும், தொடர்புடைய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவில் யானை - மனித மோதல்களால் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 500 மனிதர்களும், நூற்றுக்கும் மேற்பட்ட யானைகளும் இறப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் யானை- மனித மோதல்கள் அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக கோயம்புத்தூர், கூடலூர், சத்தியமங்கலம் மற்றும் ஓசூர் ஆகிய வனக்கோட்டங்களில் கடுமையான யானை- மனித மோதல்கள் நடந்துள்ளன என்றும், அதற்கான தீர்வு தான் இந்த புதிய யானை வழித்தடங்கள் என்று தமிழ்நாடு வனத்துறை அறிக்கை கூறுகிறது.

அடையாளம் காணப்பட்டுள்ள இந்த யானை வழித்தடங்களில் தனியார் விடுதிகள், நெடுஞ்சாலைகள், தேயிலைத் தோட்டங்கள், விவசாய நிலங்கள் மட்டுமல்லாது மக்கள் வசிக்கும் பகுதிகளும் உள்ளன. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் தொகுதியின் 46 கிராமங்கள் இதில் உள்ளன. அப்பகுதி மக்கள் வனத்துறையின் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து திங்கள்கிழமை (மே 13) தங்கள் வீடுகள், கடைகளில் கறுப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தினார்கள்.

யானைகளுக்கான வழித்தடங்கள் என்றால் என்ன? வனத்துறை அடையாளம் கண்டுள்ள யானை வழித்தடங்களால் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு பாதிப்புகள் ஏற்படுமா?

 
யானை வழித்தடங்கள்

பட மூலாதாரம்,TNFORESTDEPARTMENT

42 யானை வழித்தடங்கள்

தமிழ்நாடு வனத்துறை அறிக்கையின் படி, 2023இல் நடத்தப்பட்ட யானைகள் கணக்கெடுப்பின் மூலம் தமிழ்நாட்டின் 20 வனக் கோட்டங்களில் மொத்தம் 2,961 யானைகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இதில் முதுமலை புலிகள் காப்பகத்தின் உதகை மற்றும் மசினகுடி வனக் கோட்டங்களில் 790 யானைகள் (26.7%), சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் ஹாசனூர் மற்றும் சத்தியமங்கலம் வனக் கோட்டங்களில் 668 யானைகள் (22.6%), ஆனைமலை புலிகள் காப்பகத்தின் பொள்ளாச்சி மற்றும் திருப்பூர் வனக் கோட்டங்களில் 337 யானைகள் (11.4%), தமிழ்நாட்டின் மீதமுள்ள வனக் கோட்டங்களில் 1,166 (39.3%) யானைகள் உள்ளன.

அதிகரித்து வரும் யானை- மனித மோதல் பிரச்னைக்கு தீர்வு காணவும், யானைகளுக்கான கூடுதல் வழித்தடங்களை அடையாளம் காணவும், தமிழக அரசின் வனத்துறை கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் வி.நாகநாதன் (வனஉயிரினம்) தலைமையில் வனத்துறை மற்றும் அறிவியல் நிபுணர்கள் அடங்கிய குழு மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, தமிழக யானைகள் வழித்தட திட்ட வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இக்குழு தமிழகம் முழுவதும் 42 யானை வழித்தடங்களை அடையாளம் கண்டுள்ளது. இவை ஓசூர், தருமபுரி, ஈரோடு, மசினகுடி, கூடலூர், கோயம்புத்தூர், சத்தியமங்கலம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, ஸ்ரீவில்லிபுத்தூர், திண்டுக்கல் ஆகிய பகுதிகளின் வனக் கோட்டங்களில் அமைந்துள்ளன.

161 பக்க அறிக்கையில் பாலக்காட்டுக் கணவாய்க்கு மேற்குப் பகுதியில் உள்ள வழித்தடங்கள், தெற்குப் பகுதியில் உள்ள வழித்தடங்கள் என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

யானை வழித்தடங்கள்

பட மூலாதாரம்,AFP/GETTY IMAGES

மேலும், அந்த வழித்தடங்களைப் பயன்படுத்தும் யானைகளின் எண்ணிக்கை, அந்தப் பகுதியில் இருக்கும் வீடுகள், விவசாய நிலங்கள், நெடுஞ்சாலைகள், தேயிலைத் தோட்டங்கள், கோயில்கள், தனியார் விடுதிகள், நிறுவனங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள், அவை யானைகளுக்கு எந்தெந்த வகையில் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் ஆகிய விவரங்கள் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யானைகளைப் பாதுகாக்க அரசு சார்பாக எடுக்கப்பட வேண்டிய உடனடி நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் 2022இல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 80 யானைகள் இருப்பதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த யானைகளுக்கு இரண்டு வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அவை தேவர்சோலா- நிலம்பூர் மற்றும் ஓவேலி. தேவர்சோலா- நிலம்பூர் வழித்தடத்தில் உள்ள 7 கிராமங்களில் 34,796 குடும்பங்கள் வசிக்கின்றன. ஓவேலி வழித்தடத்தில் உள்ள 31 கிராமங்களில், 2,547 குடும்பங்கள் வசிக்கின்றன.

அதேபோல மசினகுடி வனக்கோட்டத்தில் 61 யானைகள் இருப்பதாக 2023 கணக்கெடுப்பில் தெரியவந்தது. இங்கு அடையாளம் காணப்பட்டுள்ள சீகூர் வழித்தடத்தில் உள்ள 8 கிராமங்களில் 513 குடும்பங்கள் வசிக்கின்றன.

வனத்துறை அறிக்கையின் சில பரிந்துரைகள்

  • மசினகுடி- உதகை பாதையில் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கக் கூடாது, உதகை செல்ல கூடலூர் பாதையைப் பயன்படுத்த வேண்டும்.
  • யானைகள் செல்ல அதிக பாலங்கள் கட்டப்பட வேண்டும்.
  • வழித்தடத்தில் உள்ள இரும்புக்கம்பி வேலிகள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும்.
  • பொக்காபுரத்தில் உள்ள நீலகிரி மலைச் சரிவுகள் முதல் மாயார் பள்ளத்தாக்கு வரை உள்ள பகுதிகள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக (ESA- Eco sensitive areas) அறிவிக்கப்படும்.
  • யானைகள் வழித்தடங்களில் சுதந்திரமாக நடமாடுவதற்கு இடையூறாக இருக்கும் அனைத்து நெருக்கடியான பகுதிகளும் (Bottle neck points) சரிசெய்யப்பட வேண்டும்.
  • முக்கிய நெருக்கடி பகுதிகளில் நிலங்களைக் கையகப்படுத்தி, மனித வாழ்விடங்களை அகற்ற வேண்டும்.
  • அதேபோல கூடலூரில் தனியார் நிலங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். குத்தகை காலம் முடிந்த தோட்ட நிலங்களை கைப்பற்றி, அவற்றை பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்க வேண்டும்.
  • யானை- மனித மோதல்களைத் தவிர்க்க புதிய கண்காணிப்பு அமைப்புகள் நிறுவப்பட வேண்டும்.
  • தேயிலைத் தோட்ட நிர்வாகங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ரிசர்வ் வனப்பகுதிக்கு அருகில் உள்ள செக்ஷன் 17 நிலங்களை கையகப்படுத்த வேண்டும்.
 
யானை வழித்தடங்கள்
படக்குறிப்பு,மசினகுடி அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வர்கீஸ்.

‘யானைகளின் வாழ்விடங்கள் மாறும் அபாயம்’

வனத்துறை அறிக்கையில் உள்ள பரிந்துரைகள் நிறைவேற்றப்பட்டால், இந்தப் பகுதிகள் அனைத்தும் வனத்துறை கட்டுப்பாட்டில் சென்று விடும் எனவும், பல தலைமுறைகளாக இங்கு வசிப்பவர்கள் வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்படும் எனவும் கூடலூர் மற்றும் மசினகுடி கிராம மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இந்த பிரச்னை தொடர்பாக பேசிய மசினகுடி அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வர்கீஸ், இந்த புதிய அறிக்கையின் பரிந்துரைகளை அமல்படுத்தினால் யானை- மனித மோதல்கள் அதிகரிக்கவே செய்யும் என்கிறார்.

“வழித்தடம் என்பதே இரண்டு யானை வாழ்விடங்களுக்கு இடையே செல்லக்கூடிய ஒரு குறுகிய பகுதி. அத்தகைய வழித்தடங்கள் வழியாக யானைகள் செல்லலாம், சாப்பிடலாம், தண்ணீர் குடிக்கலாம். ஆனால் அந்த இடத்தில் அவை தங்கி இனப்பெருக்கம் செய்ய முடியாது. இதுவே யானை வழித்தடத்திற்கான வரையறை." என்கிறார்.

மேலும், "நீலகிரி மலைப்பகுதியில் இருந்து மாயார் பள்ளத்தாக்கு வரை உள்ள 61,000 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட பகுதியை வழித்தடம் என கூறியுள்ளார்கள். முதுமலையும் சத்தியமங்கலமும் தான் யானையின் வாழ்விடங்கள். இவ்வளவு பெரிய பகுதியை வழித்தடமாக மாற்றும்போது, யானைகள் தங்கள் வாழ்விடங்களை மாற்றிக்கொண்டு இங்கேயே தங்கி இனப்பெருக்கம் செய்யத் தொடங்கும்" என்கிறார் வர்கீஸ்.

 
யானை வழித்தடங்கள்
படக்குறிப்பு,கூடலூர் பகுதியில் ஏற்றப்பட்டுள்ள கறுப்பு கொடி.

"யானைகளின் இயற்கை வாழ்விடங்கள் மாறினால், அது யானை- மனித மோதலை அதிகரிக்கவே செய்யும். இந்த 61,000 ஹெக்டேர் பகுதியில் 1193 ஹெக்டேர் நிலப்பரப்பில் 10 பகுதிகளில் மனிதர்கள் வசிக்கிறார்கள். முதுமலை முதல் சத்தியமங்கலம் வரை உள்ள காடுகள் வழியாக யாரையும் தொந்தரவு செய்யாமல் யானைகள் சென்று வரும். மனிதர்களும் அவற்றை சீண்டுவதில்லை. இப்படியிருக்க முழு பகுதியையும் வழித்தடம் என அறிவித்தது தவறு.” என்று கூறுகிறார் வர்க்கீஸ்.

தொடர்ந்து பேசிய அவர், “எங்கள் எதிர்ப்பை தெரிவிக்கவே இந்தப் பகுதியின் அனைத்து வீடுகள், கடைகளில் கறுப்புக்கோடி ஏற்றியுள்ளோம். மக்கள் கருத்தைக் கேட்டு அரசு முடிவெடுக்க வேண்டும், அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து யானை வழித்தடங்களை முறையாக அடையாளம் காண வேண்டும்” என்று கூறினார்.

யானை வழித்தடங்கள்
படக்குறிப்பு,கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன். ஜெயசீலன்.

'வழித்தடங்களைக் கண்டறிவதில் குழப்பம்'

யானை வழித்தடங்களை எப்படி கண்டறிய வேண்டும் என்பதில் ஒரு பெரும் குழப்பம் நீடிப்பதாகக் கூறுகிறார் கூடலூர் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக கட்சியைச் சேர்ந்தவருமான பொன். ஜெயசீலன்.

“2000ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் தமிழ்நாட்டில் 25 யானை வழித்தடங்கள் இருப்பதாக வனத்துறையினர் கூறினார்கள். பின்னர் 2017இல் மீண்டும் ஒரு கணக்கெடுப்பில் 18 வழித்தடங்கள் எனக் கூறினார்கள். அதன் பிறகு 2023இல் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் 20 என்றும் அதில் 15 தமிழ்நாட்டு எல்லைக்குள்ளும், மீதம் 5 கர்நாடகா, கேரளா எல்லைகளில் இருக்கிறது என்றும் கூறினார்கள். இப்போது 42 என்கிறார்கள்." என்று கூறினார்.

தொடர்ந்து பேசுகையில், “இந்த 161 பக்க அறிக்கையை ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளார்கள். இப்பகுதியில் உள்ள பாமர மக்கள் இதை எப்படி படித்து புரிந்துகொள்வார்கள். எனவே மக்களையும் உள்ளூர் பிரதிநிதிகளையும் அழைத்துப் பேச வேண்டும், இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்கிறார் சட்டமன்ற உறுப்பினர் பொன். ஜெயசீலன்.

 
யானை வழித்தடங்கள்
படக்குறிப்பு,சூழலியல் செயல்பாட்டாளரும், தமிழ்நாடு வன உயிரின வாரிய உறுப்பினருமான ஓசை காளிதாசன்.

யானை வழித்தடங்களின் முக்கியத்துவம்

இந்த உலகிற்கு காடுகள் வேண்டும் என்றால், காடுகளைக் காப்பாற்ற யானைகள் வேண்டும், யானைகளைக் காப்பாற்ற யானை வழித்தடங்கள் வேண்டும் என்று கூறுகிறார் சூழலியல் செயல்பாட்டாளரும், தமிழ்நாடு வன உயிரின வாரிய உறுப்பினருமான ஓசை காளிதாசன்.

“இரண்டு வாழ்விடங்களுக்கு இடையேயான குறுகிய பாதையை தான் யானை வழித்தடம் அல்லது வலசைப் பாதை என்று சொல்வார்கள். ஒரு வளர்ந்த யானைக்கு 150 கிலோ உணவு, 200 லிட்டர் தண்ணீர் வரை தேவைப்படும். உணவு தேடி அவை பயணித்துக் கொண்டே இருக்கும். இந்த வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டால் யானைகளால் ஒரு வாழ்விடத்திலிருந்து மற்றொன்றிற்கு செல்ல இயலாது.” என்கிறார் ஓசை காளிதாசன்.

தொடர்ந்து பேசிய அவர், “கடந்த சில வருடங்களாக பல பெரும் ஆக்கிரமிப்புகளால் யானை வலசைப் பாதைகள் மாறிவிட்டன. இதனால் யானைகளின் வாழ்விடங்கள் சுருங்கி விட்டதால், அவை விளை நிலங்களுக்குள் நுழைகின்றன. மக்கள் வசிக்கும் பகுதிகளால் யானைகளுக்கு பாதிப்பு இல்லை, காரணம் மக்களும் பழங்குடிகளும் பல காலமாக யானைகளோடு தான் வாழ்ந்து வருகிறார்கள். பிரச்னை யாரால் என்றால் புதிதாக முளைத்துள்ள பெரிய நிறுவனங்களின் ரிசார்டுகளாலும், ஆசிரமங்களாலும் தான். யானைகள், மக்கள் மற்றும் பழங்குடிகள், இரண்டு தரப்பையும் நாம் பாதுகாக்க வேண்டும்” என்று கூறுகிறார் ஓசை காளிதாசன்.

யானை வழித்தடங்கள்

பட மூலாதாரம்,@MMATHIVENTHAN

படக்குறிப்பு,தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன்

தமிழக அரசு கூறுவது என்ன?

யானை வழித்தடத் திட்டத்துக்கு எழுந்திருக்கும் எதிர்ப்பு குறித்து பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், “கூடலூர், மசினகுடி மக்கள் யாரும் பதற்றப்படத் தேவையில்லை. இப்போது வெளியிடப்பட்டிருப்பது ஒரு திட்ட வரைவு மட்டுமே. அது நிபுணர்களுக்காக தயாரிக்கப்பட்ட வரைவு என்பதால் தான் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் மக்களிடம் இது குறித்து கருத்து கேட்கவில்லை. தேர்தல் முடிந்ததும் ஒவ்வொரு பகுதி மக்களிடமும் சென்று கருத்து கேட்போம்." என்றார்.

எதிர்க்கட்சிகள் இதை அரசியலாக்க முயற்சி செய்வதாகக் குற்றம்சாட்டிய அமைச்சர், "யானைகளின் பாதுகாப்பு மிகவும் முக்கியம் தான், அதற்காக எடுத்தோம் கவிழ்த்தோம் என்று யாரையும் வெளியேறச் சொல்ல மாட்டோம். சில பகுதிகளில் அதற்கான தேவை ஏற்பட்டாலும் அவர்களுக்கு தகுந்த நஷ்ட ஈடும், மாற்று இடமும் வழங்கப்படும்” என்றார்.

 
யானை வழித்தடங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆனால் கூடலூர், மசினகுடி பகுதி மக்கள் இதை ஏற்பதாகத் தெரியவில்லை. கூடலூரைச் சேர்ந்த விமல் பேசுகையில், “இப்படித்தான் கூடலூரின், ஓவேலி பகுதியில் புலிகள் காப்பகத் திட்டத்திற்காக நிலங்களை கையகப்படுத்தும்போது நஷ்ட ஈடும், மாற்று இடமும் தருவதாகச் சொன்னார்கள், ஆனால் அந்த மக்களுக்கு இன்றுவரை அது கிடைக்கவில்லை. பத்து தலைமுறைக்கும் மேலாக இங்கு வாழ்ந்து வருகிறோம். ஒருபோதும் யானை வாழ்விடங்களையோ வழித்தடங்களையோ நாங்கள் ஆக்கிரமித்ததில்லை” என்று கூறும் அவர் ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறார்,

“பழங்குடிகளுக்கும் எங்களுக்கும் யானைகள் தான் பாதுகாப்பு, யானைகளுக்கு நாங்கள் தான் பாதுகாப்பு. எங்களை வெளியேற்றிவிட்டு என்ன செய்யப் போகிறார்கள்?”

https://www.bbc.com/tamil/articles/ce5llj4kr52o

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நீலகிரி: யானை வழித்தடத்தில் உள்ள விடுதியில் குடும்பத்துடன் வனத்துறை அமைச்சர் தங்கியதாக சர்ச்சை

யானை வழித்தடத்தில் உள்ள விடுதி

பட மூலாதாரம்,MATHIVENTHAN/FACEBOOK

படக்குறிப்பு, தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கட்டுரை தகவல்
  • எழுதியவர், ச.பிரசாந்த்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 10 நிமிடங்களுக்கு முன்னர்

நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தில் சட்டவிரோதமாக செயல்படும் தனியார் தங்கும் விடுதியில் தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் குடும்பத்துடன் தங்கியதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இந்த குற்றச்சாட்டை முன்வைக்கும் சூழலியாளர்கள் என்ன சொல்கிறார்கள்? அதற்கு மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு வனத்துறை மற்றும் அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் அளித்த பதில் என்ன?

யானைகள் வழித்தடத்தில் 821 கட்டுமானங்கள்

யானை வழித்தடத்தில் உள்ள விடுதி

பட மூலாதாரம்,TNFORESTDEPARTMENT

நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தில் ஆக்கிரமித்தும் அனுமதியின்றியும் கட்டப்பட்ட தங்கும் விடுதிகள், கட்டடங்களை அகற்ற வேண்டும் என்று 2018ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அந்த வழக்கு விசாரணையின் போது, நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தில் மொத்தமாக 821 கட்டுமானங்கள் இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இதில், தங்கும் விடுதிகள் மற்றும் தங்கும் விடுதியைச் சேர்ந்த கட்டுமானங்கள் 309, வீடுகள், பள்ளி, கோவில், தண்ணீர் தொட்டி போன்றவை அடங்கும்.

அனுமதியின்றி சட்ட விரோதமாக செயல்படுவதாக 27 தனியார் தங்கும் விடுதிகளுக்கு 2018ம் ஆண்டு அக்டோபரில் மாவட்ட நிர்வாகம் சீல் வைத்தது.

 

வனத்துறை அமைச்சர் செயலால் சர்ச்சை

யானை வழித்தடத்தில் உள்ள விடுதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, உதகை - மசினகுடி சாலை (கோப்பு படம்)

இந்த நிலையில், தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தனது குடும்பத்தினருடன் தங்கிய தனியார் விடுதி, மாவட்ட நிர்வாகத்தால் சீல் வைக்கப்பட்ட ஒன்று என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மசினகுடியை அடுத்துள்ள சிகூர் வனப்பகுதியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் மே 27ஆம் தேதி அவர் குடும்பத்தினருடன் தங்கியுள்ளார்.

அந்த விடுதி யானைகள் வழித்தடத்தில் கட்டப்பட்டுள்ள சட்ட விரோத தனியார் தங்கும் விடுதி என்று குற்றம் சாட்டும் சூழலியாளர்கள், அதில் தங்கியதன் மூலம் சட்ட விரோதமாக செயல்படும் தனியார் தங்கும் விடுதிகளுக்கு வனத்துறை அமைச்சரே ஆதரவாக உள்ளாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

சூழலியாளர்கள் கேள்வி

யானை வழித்தடத்தில் உள்ள விடுதி
படக்குறிப்பு, சூழலியலாளர் கே.மோகன்ராஜ்

யானைகள் வழித்தடத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தீர்பை பகிர்ந்து, நம்மிடம் பேசிய நீலகிரியைச் சேர்ந்த சூழலியலாளர் கே.மோகன்ராஜ், “யானைகளின் வாழ்விடத்தை பாதுகாக்க, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்து, சில விடுதிகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து விடுதி உரிமையாளர்கள் தொடுத்த வழக்கு நிலுவையில் உள்ளதால், அனுமதியற்ற கட்டடங்கள் முழுமையாக அகற்றப்படாமல் சில அப்படியே இருக்கின்றன,’’ என்கிறார் அவர்.

மேலும் தொடர்ந்த மோகன்ராஜ், ‘‘2023ஆம் ஆண்டு சிகூர் பகுதியில் யானைகள் வழித்தட விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி விசாரணையில் அப்பகுதியில் 12 தனியார் தங்கும் விடுதிகளில் 74 கட்டடங்கள் அனுமதியின்றி இருப்பதாக கண்டறிந்தனர். அந்த 12 தங்கும் விடுதிகளில் ஒன்றான, சிகூர் பகுதியில் உள்ள விடுதியில் மாநிலத்தின் வனத்துறை அமைச்சரே தங்கியுள்ளார்.

நீலகிரியில் தமிழக வனத்துறையின் பல விடுதிகள் இருக்கும் போது சர்ச்சைக்குரிய தனியார் தங்கும் விடுதியை அமைச்சர் தேர்வு செய்தது ஏன்? அவர் தனியாருக்கு ஆதரவாக செயல்படுகிறாரா?,’’ என கேள்விகளை முன்வைத்தார்.

 

நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூறியது என்ன?

யானை வழித்தடத்தில் உள்ள விடுதி
படக்குறிப்பு,நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா

உண்மையில் அமைச்சர் தங்கிய விடுதி யானை வழித்தடத்தில் உள்ளதா? அது ‘சீல்’ வைக்கப்பட்ட விடுதியா? என்பதை அறிய, நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணாவிடம் பிபிசி தமிழ் விளக்கம் கேட்டது.

நம்மிடம் பேசிய ஆட்சியர் அருணா, அந்த தங்கும் விடுதியின் ஒரு பகுதி ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது, அது தற்போது செயல்பாட்டில் இல்லை. சீல் வைக்கப்படாத மற்றொரு பகுதி மட்டுமே செயல்பாட்டில் உள்ளது, அங்கு தான் அமைச்சர் தங்கியுள்ளார்.

தேர்தல் நடத்தை விதிமுறை திரும்பப் பெறப்பட்ட பிறகு, நீலகிரி மாவட்டத்தில் யானை வழித்தடத்தில் அனுமதியின்றி செயல்படும் விடுதிகள், கட்டடங்களை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார் ஆட்சியர் அருணா.

ஆட்சியரின் விளக்கத்தின் மூலம், விடுதியின் ஒரு பகுதி யானைகள் வழித்தடத்தில் இருப்பதை நம்மால் உறுதிப்படுத்த முடிகிறது.

வனத்துறை கூறுவது என்ன?

யானை வழித்தடத்தில் உள்ள விடுதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானை (கோப்பு படம்)

பிபிசி தமிழிடம் பேசிய முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் அருண்குமார், அந்த குறிப்பிட்ட விடுதி முறையான அனுமதி பெற்று செயல்பட்டு வருகிறது. இருப்பினும் அந்த விடுதியில் சில கட்டடங்களுக்கு அவர்கள் அனுமதி பெறவில்லை.

யானை வழித்தடத்தில் அனுமதியின்றி உள்ள அந்த விடுதியின் சில கட்டடங்களுக்கு நாங்கள் சீல் வைத்துள்ளோம், அவை தற்போது செயல்பாட்டில் இல்லை. அனுமதி பெற்று செயல்படும் கட்டடத்தில் தான் அமைச்சர் தங்கியுள்ளார்," என்று கூறினார்.

வனத்துறை அமைச்சரின் விளக்கம் என்ன?

சூழலியலாளர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து, தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மதிவேந்தனிடம் தொலைபேசி வாயிலாக பிபிசி தமிழ் விளக்கம் கேட்டது.

நம்மிடம் பேசிய அவர், ‘‘தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால், அரசு விடுதியில் என்னால் தங்க இயலாது. ஏதாவது ஆய்வுக்காக வந்திருந்தால் நான் அரசு விடுதியில் தங்கியிருக்கலாம். நான் குடும்பத்துடன் நீலகிரிக்கு சுற்றுலா வந்துள்ளேன். இதனால், தனியார் விடுதியில் தங்கியுள்ளேன். இந்த விடுதி பல ஆண்டுகளாக உரிய அனுமதி பெற்று தான் செயல்பட்டு வருகிறது,’’ என்கிறார் அவர்.

https://www.bbc.com/tamil/articles/cl441zgen3ro



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.