Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பதினைந்தாவது மே 18: குற்றமாகிய கஞ்சி? - நிலாந்தன்

441068695_7651053001627797_7823866115662
436229899_2461866710668139_4834143902176

15 ஆண்டுகள் சென்றுவிட்டன. இப் 15 ஆண்டுகளில் தமிழரசியலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன?

இருந்த பெரிய கூட்டுக்கள் உடைந்து சிறிய கூட்டுக்கள் உருவாக்கியுள்ளன. கட்சிகளுக்குள்ளே உடைவுகள் ஏற்பட்டிருக்கின்றன. மக்கள் இயக்கங்கள் தோன்றிப் பின் மறைந்திருக்கின்றன. ஐநாவில் சான்றுகளைத் திரட்டும் ஒரு பலவீனமான பொறிமுறை இயங்கிக்கொண்டிருக்கிறது. புலம்பெயர்ந்த தமிழ்ப் பரப்பில் இனப்படுகொலைக்கு எதிரான நீதியைக் கோரும் போராட்டத்தில் குறிப்பாக கனடாவில், குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய சில வெற்றிகள் எட்டப்பட்டிருக்கின்றன. அதேசமயம் இமாலயப் பிரகடனம் போன்ற பிரகடனங்களும் அங்கிருந்துதான் உற்பத்தியாகின்றன.

இவற்றைவிட முக்கியமாக இறுதிக்கட்டப் போரின் பின், யார் உயிருடன் இருக்கிறார்கள்? யாருக்கு அஞ்சலி செய்யலாம்? செய்யக்கூடாது? என்ற விடயத்தில், புலம்பெயர்ந்த தமிழர்கள் மேலும் இரண்டாக உடைந்திருக்கிறார்கள். அதாவது 15ஆண்டுகளில் ஏற்பட்ட ஆகப்பிந்திய உடைவு அது.

இப்பொழுது தொகுத்துப் பார்த்தால் மிகத்தெளிவாக தெரியும் சித்திரம் என்னவென்றால், கடந்த 15 ஆண்டுகளிலும் தமிழ்மக்கள் உடைந்து கொண்டே போகிறார்கள். நினைவு கூர்தல்தான் தமிழ் மக்களை ஒரு உணர்ச்சி புள்ளியில் ஒன்றுகூட்டி வைத்திருக்கிறது. அதே நினைவு கூரும் விடயத்தில், தமிழ்ச் சமூகத்தில் உடைவுகள் தோன்றிக் கொண்டிருக்கின்றன.

கடந்த 15 ஆண்டுகளிலும் தாயகத்திலும் புலம்பெயர்ந்த பரப்பிலும் கட்சிகளாய்; அமைப்புகளாய்; குழுக்களாய்; கொள்கைகளாய்; பிரகடனங்களாய்; ஊர்களாய்; சங்கங்களாய்; வடக்காய்; கிழக்காய்; சமயமாய்; சாதியாய் ;இன்ன பிறவாய் சிதறிக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்தை, நினைவு நாட்கள்தான் ஓரளவுக்காவது உணர்வுபூர்வமாக ஒன்றுகூட்டி வைத்திருக்கின்றன. அதனால்தான் அரசாங்கம் நினைவுகளைக் கண்டு பயப்படுகின்றது. நினைவின் குறியீடாக தமிழ் மக்களால் உருவகப்படுத்தப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சியை அரசாங்கம் ஒரு குற்றப் பொருளாகப் பார்க்கின்றது.

15 ஆண்டுகளுக்கு முன் உணவு ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு யுத்த களத்தில், கொல்லப்பட்டவர்களை நினைவு கூர்வதற்கு “தமிழ் சிவில்சமூக அமையம்” உணவையே நினைவுப் பொருளாக உபயோகித்தது. அதுதான் முள்ளிவாய்க்கால் கஞ்சி. இப்பொழுது அந்த உணவையே அதாவது, நினைவையே ஒரு குற்றமாக அரசாங்கம் பார்க்கின்றது. சில நாட்களுக்கு முன், திருகோணமலையில் உணவு ஒரு குற்றமாகக் காட்டப்பட்டது.

இறுதிக்கட்டப் போரில் ஒடுங்கிய கடற்கரைக்குள் முற்றுகையிடப்பட்டிருந்த மக்கள் மத்தியில் கஞ்சி இருந்தது; போண்டா இருந்தது; ரொட்டி இருந்தது. இதில் கஞ்சியானது தமிழ்ப் பண்பாட்டில் வெவ்வேறு பண்பாட்டு நிகழ்வுகளோடு சம்பந்தப்படுகின்றது. அது மிக எளிமையான உணவு. ஆனால் தமிழ் வீடுகளில் காய்ச்சும் கஞ்சியும் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் ஒன்று அல்ல.ஆனந்தபுரம் சண்டையோடு தேங்காய்க்குத் தட்டுப்பாடு வந்து விட்டது. எனவே அது ஒரு பால் இல்லாத கஞ்சி. அரிசியை கிடாரத்தில் போட்டு நீர் விட்டு, உப்புப் போட்டு வேக வைப்பார்கள். அரிசி வெந்ததும் அதில் இரண்டு பால்மா பக்கெட்டுகளை உடைத்துக் கரைத்து அதில் சேர்ப்பார்கள். அதுதான் முள்ளிவாய்க்கால் கஞ்சி. அது தேங்காய்ப் பாலற்றது. பயறு இல்லாதது. ருசியற்றது.

அந்த ருசியின்மைக்குள் அதன் அரசியல் செய்தியிருக்கிறது. அந்த ருசியின்மைக்குள் ஒரு கொடிய போர்க்களத்தின் நினைவு இருக்கிறது. அந்த ருசியின்மைக்குள் இனப்படுகொலையின் பயங்கரம் இருக்கின்றது. அந்த ருசியின்மைக்குள் ஒரு சிறிய மக்கள் கூட்டத்தின் நீதிக்கான தாகம் இருக்கிறது.

அந்த ருசியின்மைதான் இனப்படுகொலையின் ருசி. அந்த ருசியின்மைதான் மரணத்தின் ருசி. கூட்டுக் காயங்களின் ருசி. கூட்டு மனவடுக்களின் ருசி. சுற்றி வளைக்கப்பட்டிருந்த; தனித்து விடப்பட்டிருந்த ஒரு சிறிய மக்கள் கூட்டத்தின் கண்ணீரின் ருசி; ரத்தத்தின் ருசி.தோல்வியின் ருசி; ஒரு யுகமுடிவின் ருசி.

அந்த ருசியை தலைமுறைகள் தோறும் கடத்தும் பொழுது ஏன் அது ருசியாயில்லை என்ற கேள்வி வரும். அந்த ருசியின்மைக்குப் பின்னால் மேலும் பல கேள்விகள் அவிழும். ஒடுங்கிய சிறிய கடற்கரையில் ஏன் அந்த மக்கள் தனித்துவிடப்பட்டார்கள்?அருகில் இருந்த தமிழகம் ஏன் அவர்களைக் காப்பாற்றவில்லை? முழு உலகமுமே ஏன் அவர்களை காப்பாற்றவில்லை? உலகப் பெரு மன்றங்களான ஐநா போன்றவை ஏன் அவர்களைக் காப்பாற்றவில்லை? அவர்களை நோக்கி அனுப்பப்பட்ட” வணங்கா மண் “என்ற கப்பல் ஏன் வந்து சேரவில்லை? என்ற கேள்விகளை  அந்த ருசியின்மை எழுப்பும்.

அந்த ருசியின்மையை தலைமுறைகள் தோறும் கடத்தும் போதுதான் நீதிக்கான போராட்டம் மேலும் வலுப்பெறும். மட்டுமல்ல, தமிழ் மக்கள் இறந்த காலத்தில் இருந்து கற்றுக் கொள்ளவும் முடியும்.

அந்த ருசியின்மைக்குள் இருக்கும் கேள்விகளை வீடுகள் தோறும் கேட்டு அதற்கு பதில் கொடுக்க வேண்டும். மூத்த தலைமுறை அதைச் செய்ய வேண்டும். தமிழ் வீடுகளில் சாப்பாட்டு மேசைகளில்; பாடசாலைகளில்; பொது இடங்களில்; என்று எல்லா இடங்களிலும் அந்தக் கேள்விகள் கேட்கப்பட வேண்டும்.அது நினைவுகளைக் கடத்தும் ஒரு பொறிமுறை மட்டுமல்ல, அதைவிட ஆழமாக அது ஓர் அறிவூட்டும் செய்முறை.அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு தோற்காமல் போராட வேண்டும் என்ற உத்வேகத்தை அது கொடுக்கும்.எனவே அந்த நினைவுகளைப் பரிமாற வேண்டும். தலைமுறைகள் தோறும் கடத்த வேண்டும்.

உலகில் பொதுவாக எல்லா மக்கள் கூட்டங்களின் மத்தியிலும் கதை சொல்லும் பாரம்பரியம் உண்டு. உறங்கும் நேரக் கதைகள்;பாட்டி செல்லும் கதைகள் என்று பலவாறாகக் கதை சொல்லும் பாரம்பரியங்கள் உண்டு. இவ்வாறு கூறப்படும் பல கதைகள் நீதிநெறிக் கதைகள். ஈழத் தமிழர்கள் அதைவிட மேலதிகமாக நீதிக்காகப் போராட வேண்டிய அவசியத்தை உணர்த்தும் கதைகளை தமது அடுத்த தலைமுறைக்குக் கூறவேண்டும். நீதிக்கான போராட்டத்தில் கடந்த 15 ஆண்டுகளாக தமிழ்மக்கள் எங்கே தேங்கி நிற்கிறார்கள்? என்பதனைச் சிந்திப்பதற்கு அவர்களைத் தூண்டவேண்டும்.எனவே கஞ்சியின்மூலம் கடத்தப்படும் நினைவுகள் அல்லது கேள்விகள் எனப்படுகின்றவை,ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை நீதிக்கான போராட்டத்தின் பிரிக்கப்படவியலாத ஒரு பகுதியாகும்.

இவ்வாறு அடுத்த தலைமுறைக்கு இறந்த காலத்தின் நினைவுகளைப்  பகிர்வது, கடத்துவது என்பது பழைய காயத்தை திரும்பத்திரும்பக் கிண்டி இரத்தம் பெருகச் செய்யும் வேலை என்று ஒரு பகுதியினர் குற்றம் சாட்டுவார்கள். காயங்களைக் கிண்டாதீர்கள். அயர் மூடிய காயங்களின் அயரை உரித்து அதை புதுப்பிக்காதீர்கள் என்றெல்லாம் கேட்கிறார்கள். அவர்களிடம் திருப்பிக் கேட்க வேண்டும். காயம் எப்பொழுது ஆறியது? காயங்கள் ஆறவில்லை. அவை எப்பொழுதும் உண்டு. புதிய காயங்களும் உண்டு. மயிலத்தமடுவில் குருந்தூர் மலையில் வெடுக்கு நாறி மலையில் புதிய காயங்கள் உண்டு. ஓர் உணவை அதாவது நினைவை குற்றமாகப் பார்க்கும் அரசியல் காயங்களை ஆற விடாது.ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை அவர்களுடைய கூட்டுக் காயங்கள் ஆறாதவை. அவை ஆறாதவை என்பதனால்தான் அவற்றைக் குறித்து உரையாட வேண்டியிருக்கிறது. அவற்றை எப்படி சுகப்படுத்துவது என்று சிந்திக்க வேண்டியிருக்கிறது. பலஸ்தீன கவிஞர் ஒருவர் எழுதினார் “குணப்படுத்தவியலாத ஒரு காயமாக” நினைவைப் பேணுவது என்று. அதுதான் உண்மை. ஈழத் தமிழர்களின் கூட்டுக் காயங்களும் கூட்டு மனவடுக்களும் குணப்படுத்தப்படாதவை.

444759641_1878189429270800_6314909850141

அதற்கான குணமாக்கல் செய்முறைகளை சிறு தொகை மருத்துவர்கள் மட்டுமே முன்னெடுக்கின்றார்கள். அதற்கும் போதிய அளவு மனநல மருத்துவர்கள் கிடையாது. அது மட்டுமல்ல,அது மருத்துவர்களால் மட்டும் சுமக்கப்படக்கூடிய ஒரு சுமை அல்ல. அது ஒரு கூட்டுச் சுமை. கூட்டுக் காயங்களுக்கும் கூட்டு மன வடுக்களுக்கும் கூட்டுச் சிகிச்சை தான் இருக்கலாம். தனிய மருத்துவர்கள் மட்டும் அதைச் சமாளிக்க முடியாது. தவிர்க்க முடியாதபடி அது ஓர் அரசியல் பண்பாட்டுச் செய்முறையாகத்தான் இருக்கலாம். அதற்குப் பொருத்தமான அரசியல் தலைமை வேண்டும். அத்தலைமையின் கீழ் குடிமக்கள்சமூகங்கள்; மதத்தலைவர்கள்; கருத்துருவாக்கிகள்; புத்திஜீவிகள்;படைப்பாளிகள் என்று எல்லாத் தரப்புக்களும் இணைக்கப்பட வேண்டும்.

கூட்டுச் சிகிச்சையானது மேலிருந்து கீழ் நோக்கியும் கீழிருந்து மேல் நோக்கியும் செய்யப்பட வேண்டும். மேலிருந்து கீழ் நோக்கி அது ஓர் அரசியல் தீர்மானமாக இருக்க வேண்டும். அது அரசியல் தீர்வாக அமைய வேண்டும். இனப் படுகொலைக்கு எதிரான நீதியாக அது அமைய வேண்டும்.

கீழிருந்து மேல் நோக்கி அந்தத் தீர்வை நோக்கி தமிழ்மக்கள் போராட வேண்டும். அந்தப் போராட்டம்தான் தமிழ் மக்களை தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுதலை செய்யும். தமிழ்மக்கள் இப்பொழுது சிதறிப் போய் இருக்கிறார்கள். ஒருவர் மற்றவரை நம்பாத ஒரு மக்கள் கூட்டமாக; ஒருவர் மற்றவரைச் சந்தேகிக்கும் ஒரு மக்கள் கூட்டமாக;எல்லாருக்கும் பின்னாலும் சதிகளையும் சூழ்ச்சிகளையும் தேடும் ஒரு மக்கள் கூட்டமாக; கட்சிகளாக; வடக்குக் கிழக்காக;சமயமாக; சாதியாக இன்னபிறவாக சிதறிப்போய் இருக்கிறார்கள்.

அதேசமயம் மூன்றாவது புலப்பெயர்ச்சி அலை ஒன்று நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு புலம்பெயரும் தமிழர்கள் மத்தியில் படித்தவர்கள், பட்டம் பெற்றவர்கள்,உயர் உத்தியோகங்களில் இருந்தவர்கள் என்ற வகையினரும் அடங்குவர். இவ்வாறாக மூளைசாலிகளும் தொழில் அனுபவம் மிக்கவர்களும் வெளியேறிக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்தைத் திரட்டுவது எப்படி? ஒருவர் மற்றவரை நம்பாமல் சமூகத்தைத் திரட்ட முடியாது. ஒருவர் மற்றவரை நம்புவதில் இருந்துதான் சமூகத் திரட்சி தொடங்குகின்றது. எனவே நம்பிக்கை முக்கியம். சமூகத்துக்கு நம்பிக்கையைக் கொடுக்க வேண்டும். புலம்பெயரும் தலைமுறைக்கு நம்பிக்கையைக் கொடுக்க வேண்டும். அவ்வாறு நம்பிக்கையைக் கொடுக்க யார் உண்டு? அந்தக் கூட்டு நம்பிக்கைதான் கூட்டுத்தோல்வி மனப்பான்மையிலிருந்தும்,கூட்டுக் காயங்களில் இருந்தும், கூட்டு மனவடுக்களில் இருந்தும் ஒரு மக்கள் கூட்டத்தை விடுதலை செய்யும்.

ஈழத் தமிழர்கள் கேந்திர முக்கியத்துவம் மிக்க ஒரு புவிசார் அமைவிடத்தில் அமைந்திருக்கிறார்கள். எல்லாப் பேரரசுகளுக்கும் அவர்கள் தேவை. தமிழ் மக்களின் இக்கேந்திர முக்கியத்துவத்தை தமிழ் மக்களே உணராதிருக்கிறார்கள். அனுமார் தன் பலத்தை தானே அறியாதிருந்ததுபோல. தமிழ் மக்களுக்கு அவர்களின் பலத்தை உணர்த்தி,அவர்களைப் பலமான திரளாக்கி,அவர்களை கூட்டு அவநம்பிக்கையிலிருந்து விடுவிப்பதுதான் கீழிருந்து மேல் நோக்கிய கூட்டுச் சிகிச்சையாக அமையும்.அதுதான் கூட்டுத் துக்கத்தை அரசியல் ஆக்க சக்தியாக மாற்றும்.அதுதான் உண்மையான நினைவு கூர்தலாக அமையும்.
 

https://www.nillanthan.com/6761/

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, கிருபன் said:

15 ஆண்டுகள் சென்றுவிட்டன

large.IMG_6503.jpeg.00d17bc201a3f06ccf29

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.