Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
பதியப்பட்டது (edited)

https://www.facebook.com/puratchi2100/?locale=fr_CA

 

போர்க்காலப் பாடல்களில் 'தாலாட்டுப் பாடல்கள்'

 

தேனிசை செல்லப்பா இசையில் சுவர்ணலதா பாடிய இப்பாடலே போர்க்கால தாலாட்டுப் பாடல்களில் முதற்பாடல் என வரையறுக்கக்கூடியது.

தாலாட்டு பாடமாட்டேன்
தாலாட்டு பாடமாட்டேன்
தமிழ் பிள்ளை என்பிள்ளை
அவன் தலைசாய்த்து தூங்க
இது நேரம் இல்லை.

புல்லாங்குழலிசை அள்ளிவரும் இப்பாடலை உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் எழுதிருந்தார் 'இது புலிகளின் காலம்' இசைநாடா.

இப்பாடலின் சரணங்கள் எல்லாமே போர் கொடுத்த இழப்புகளையும், சம்பவ பதிவுகளையும் சொல்லி வைப்பதாக அமைகின்றது. இப்பதிவுகளில் முகநூல், சூழல் நிலைகருதி சில வரிகள் தவிர்க்கப்பட்டு இலக்கிய பதிவாகவும், மறக்கப்படாதபடி காலக்கண்ணாடியான இலக்கியம் ஆவணப்படுத்தப்படவும் பதிவாகின்றது. தொட்டில்கூட இல்லாத அவலம் இப்படி சொல்லப்பட்டிருக்கிறது.

எதிரியின் கொடிய குண்டுவீச்சிலே தொட்டில் எரிந்தது
என் பிள்ளை விளையாடும் முற்றத்தில் நின்ற பந்தல் சரிந்தது.
உறங்கக்கூடாது என் மகன் என்றொரு உண்மை புரிந்தது.(2)

தாலாட்டு எனும் சொல் எப்படி ஆனது? தால் என்றால் நாக்கு ஆட்டு என்றால் நாவினை ஆட்டி அசைத்தல் என்பர். ஆக தாலாட்டு என்பது நாட்டுப்புற பாடலாக இயல்பிலேயே தோன்றியதெனலாம். இதனை சங்கீதமே கற்காதோரும் பாடினர். போர்க்காலத்தில் இதனை புதிய விதமாக எழுச்சிக்கும், பரப்புரைக்கும் பயன்படுத்தினர்.
பி.சுசீலா பாடிய போர்க்காலப் பாடல்களில் 'கண்மணியே கண்ணுறங்கு காவியமே நீயுறங்கு' தாலாட்டுப்பாடல் ஒரு காலப்பதிவு எனலாம். இப்பாடல் இப்போது கேட்டாலும் ஒரு காலத்தை காண்பிக்கும் கண்ணாடியாகவே தெரியும். இந்திய இராணுவத்தினர் இலங்கையில் நிலைகொண்டிருந்த காலத்தையும் ஒரு சரணத்தில் கவிஞர் பதிவாக்குகிறார். ஒரு கொடூரமான போர்க்காலத்திலே அதில் சிக்கியிருக்கும் தாயொருத்தி வரலாற்றோடு வாழ்வையும் தாலாட்டிலே சொல்லிக் கொடுக்கிறாள். புதுவை இரத்தினதுரை எழுதி தேவேந்திரன் இசையில் 'களத்தில் கேட்கும் கானங்கள்' ஒலிநாடாவில் வெளியான பாடல். இப்பாடல் காலத்தில் ஒலிநாடாக்களே பாவனையில் இருந்தன. 
முதற்சரணம்:

நாய்கள் குரைக்குது ராவினிலே - இந்தி
ராணுவம் போகுது வீதியிலே.
வாய்கள் திறக்கவும் கூடாதாம் - எங்கள்
வாசலில் தென்றலும் வீசாதாம்.
தீயினில் தாயகம் வேகுது பார் - எட்டு
திக்கிலும் ஓர்குரல் கேட்குது பார்.
பாய்ந்திடும் வேங்கைகள் வீரத்தையே - நான்
பாலுடன் ஊட்டுவேன் வாயினிலே.

என்று தொடர்கின்றன. 

'கண்மணியே கண்ணுறங்கு காவியமே நீயுறங்கு, 
பொன்முடி சூடிய பூச்சரமே எந்தன் பூங்குயிலே நீயும் கண்ணுறங்கு' 

எனும் பல்லவி அக்காலத்தில் அதிக பிரபலம். புவனா இரத்தினசிங்கம் அவர்களின் குரலுக்கென யாருக்குமில்லா தனித்துவம் உண்டு. பார்வதி சிவபாதம் போலவே புவனா இரத்தினசிங்கம் அவர்களின் குரலையும் கேட்ட மாத்திரத்திலேயே பகுத்தறியலாம். 'தீயினில் எரியாத தீபங்களே' போன்ற பாடல்களைப் பாடியவர். இவர் பாடிய போர்க்கால தாலாட்டுப் பாடலொன்று.

பஞ்சவர்ணத் தொட்டிலிலே
பள்ளிகொள்ள வந்தவனே
வஞ்சமற்ற உன்மனதில்
வாழ்வதுதான் தெய்வமடா(2)
ஆராரோ கண்ணே ஆரிரரோ
ஆராரோ கண்ணே ஆரிரரோ.

முல்லை செல்லக்குட்டி என்ற முல்லைச்செல்வன் போர்க்காலத்தில் மக்கள் மனதில் நின்றுநிலைக்கும் பாடல்களை வார்த்தவர். 'ஆதியாய் அநாதியாய் அவதரித்த செந்தமிழ்' போன்ற பாடல்களின் சொந்தக்காரர். இவர் இரண்டு போர்க்காலத் தாலாட்டுப் பாடல்களையும் எழுதியுள்ளார். இப்பாடலும் போரில் தமிழ்த்தாய் பட்ட கொடூர வலியை சொல்லிற்று. முதலாவது சரணத்தில் புவனா இரத்தினசிங்கம் இப்படிப் பாடுகிறார்.

தாயகத்தில் அமைதியின்றி 
தாய்மனசு தவிக்கையிலே
பூமியிலே நீ பிறந்தாய்
பொன்மகனே கண்மணியே!
நீதியென்ற பாதையிலே வீறுநடை போட்டிடடா
நீ பிறந்த தாய்நாட்டின்
வேதனையை நீக்கிடடா.
ஆராரோ கண்ணே ஆரிராரோ.

மேற்படி பாடலில் இனப்பற்றும், படை பலப்படுத்தல் பற்றி இரண்டாம் சரணத்தில் குறிப்பிடும் கவிஞர் மூன்றாவது சரணத்தில் நற்பழக்கத்தையும் சொல்லி வாழ்வியல் தத்துவத்தையும் வைத்தார்.

நெஞ்சமெனும் கோவிலிலே
நஞ்சை வைத்து வாழுகின்ற நீசர்களின் பாதையிலே
நீ மயங்கிப் போகாதே
மஞ்சமொடு மாளிகையும் மடிந்தால் வருவதில்லை
மானமது காத்திடவே ஆரமுதே வாழ்ந்திடடா
ஆராரோ கண்ணே ஆரிரரோ

இப்பாடல்கள் இரண்டும் இடம்பெற்ற யாகராகங்கள் இசைநாடாவிற்கு இசையமைப்பாளர் கண்ணன் இசை வழங்கியிருந்தார். முல்லை செல்லக்குட்டி அவர்களின் இன்னுமொரு தாலாட்டுப் பாடலை இந்திராணி பாடியிருக்கிறார். இதோ அப்பாடல்.

கண்ணே கண்ணே கதைகேளு
அன்னை பெற்றாள் பெரும்பேறு
கரும்புலி பிறந்த இந்நாட்டிலே
கதிரவனே நீ பிறந்தாய்
எந்தன் வீட்டிலே.
என்பதே பல்லவி.
காலனவன் கலங்கிட
கண்டவர்கள் நடுங்கிட
கடற்படை கலமிங்கு சிதறுதடா

என்று தொடரும் முதற்சரணமும்,

பெற்றமண்ணை அந்நியர்க்கு
விற்றுவிட எண்ணுகின்ற
அத்தரின் தயவை என்றும் நாடாதே.
சத்தியத்தை காத்திடவே
நித்தம் களம் ஆடிவரும்
உத்தம புலியைவிட்டு ஓடாதே.

என இரண்டாம் சரணத்தோடு மூன்று சரணங்கள் கொண்டமைந்த பாடலிது.

அகநானூற்றிலும் தாலாட்டுப் பாடல்கள் உள. கொற்றங்கொற்றனாரின் தாலாட்டுப்பாடலை தமிழுலகில் அறியப்பட்ட முதற்தாலாட்டு பாடலென்பர். முன்னேயும் இருந்திருக்கலாம்.

பாடகி சுனந்தா தமிழ்ச்சினிமாவில் நன்கு அறியப்பட்டவர். 'நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப்பார்க்குதே' போன்ற பாடல்களைப் பாடியவர். போர்க்கால 'புயல் அடித்த தேசம்' இறுவட்டில் காந்தன் இசையில் சுனந்தா பாடிய பாடலும் போர்க்காலப் பாடல்களில் அதிகம் ஒலித்த பாடல். குஞ்சுரம்மா அவர்களும் இணைந்து குரல் கொடுத்திருக்கிறார். பாடலின் பெரும்பகுதி சுனந்தா குரலே.

செந்தமிழ் தூளியிலே சிரிக்கும் வெண்ணிலவே
செவ்வள்ளி கண்சிமிட்டி
துள்ளி குதிக்கும் பொன்மலரே!
நான் நினைத்த தமிழீழம் வேண்டும் உனக்கு
நீ அதனை அரசாள
வீரம் இருக்கு.
அன்னை நினைத்ததை முடித்துக்காட்டடா.

காந்தன் அவர்கள் இப்பாடலில் புல்லாங்குழலினை பயன்படுத்தி இருந்தார்.

வாணி ஜெயராம் அவர்கள் பிள்ளைக்காக போர்க்காலத்தில் பாடிய 'தலைவாரி பூச்சூடினேன்' பாடலை பாடியிருந்தார். அப்பாடல் தாலாட்டுப் பாடல் என வகைப்படுத்த முடியாதது. போர்க்காலம் இலக்கியம் தமிழ் இலக்கியப்பரப்பில் தனித்துவமானது. அதன் வகைகளை ஆய்வாக்குதலின் தொடரே இப்பதிவாம்.

நன்றி
யோ-புரட்சி-
 

Edited by நன்னிச் சோழன்
  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

டியர் நன்னிச் சோழன்

யுகசாரதியின் ஈழத்தாய் சபதம் நூலிலும் பக்கம் 91  இல் தூயவரிப்புலியே நீ தூங்கிடு என்மகனே! கல்லறை மெத்தையிலே நீகண்துயில்வாய் மகனே! ஆராரோ1 ஆராரோ ! ....என்று தொடங்கும் பாடலொன்று உண்டு.  முடிந்தால் அதையும் தங்கள் லிஸ்டில் சேர்த்துக் கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்+
Posted
7 hours ago, S. Karunanandarajah said:

டியர் நன்னிச் சோழன்

யுகசாரதியின் ஈழத்தாய் சபதம் நூலிலும் பக்கம் 91  இல் தூயவரிப்புலியே நீ தூங்கிடு என்மகனே! கல்லறை மெத்தையிலே நீகண்துயில்வாய் மகனே! ஆராரோ1 ஆராரோ ! ....என்று தொடங்கும் பாடலொன்று உண்டு.  முடிந்தால் அதையும் தங்கள் லிஸ்டில் சேர்த்துக் கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

 

 

நன்றி... சேர்த்துவிடுகிறேன்

  • Like 1


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.