Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நியதிக்கொள்கை (determinism)

Featured Replies

நியதிக் கொள்கை தொடர்பாக நீண்டநாட்களாகவே கருத்துக்களத்தில் ஒரு தலைப்பைத் தொடங்கவேண்டும் என்கிற அவா இருந்தது. இந்த உலகத்தில் பல வகையான நம்பிக்கைகள், கோட்பாடுகள் உள்ளன. அவை எல்லாம் சரியா பிழையா என்பதற்கப்பால், அவை பற்றி அறிந்திருத்தல், கருத்தாடல் செய்தல் என்பது புதிய சிந்தனைகள் நோக்கி எம்மை உந்தித்தள்ளும்.

அந்தவகையில் இந்த நியதிக் கொள்கையும் அறிந்துகொள்வதற்கு அவசியமான ஒன்றே. "அனைத்துமே ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டவை", "இந்த பிரபஞ்சத்தின் இயக்கம் என்பது ஓர் ஒழுங்கமைப்பின் படி நிகழ்வது" என்று நியதிக் கொள்கை சொல்கிறது. இது தொடர்பாக தமிழில் ஆக்கங்கள் வந்துள்ளனவோ என்று தேடியபோது, இராம.கி அவர்கள் எழுதிய ஒரு கட்டுரை அகப்பட்டது. அதனை இங்கே இணைக்கிறேன். Determinism அதாவது நியதிக்கொள்கை தொடர்பாக நீங்கள் அறிந்தவற்றையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

"சோதிடம், நிமித்தகம், ஆரூடம் இவை மூன்றுக்கும் உள்ள ஒற்றுமை மற்றும் வேற்றுமை என்ன?" என்று ஒரு நண்பர் அண்மையில் என்னுடைய வேறொரு பதிவிற்கான பின்னூட்டில் கேட்டிருந்தார். அதற்கான மறுமொழி அவ்வளவு சுருக்கமாகச் சொல்லக் கூடியது அல்ல. தவிரவும் இந்தக் கேள்வி பலருக்கும் பொதுமையானது என்பதால் என் மறுமொழியை ஒரு தனிப்பதிவாகவே இடுகிறேன். இது போன்ற மற்ற சில பின்னூட்டுக் கேள்விகளுக்கு இன்னும் மறுமொழி சொல்லாமல் இருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது சொல்லுவேன்.)

முதலில் சோதிடம் என்பதைப் பார்ப்போம்.

சொல்+தி = சொல்தி>சோதி = ஒளிவிடுகிற நெருப்பு. சோதி என்ற இந்தச் சொல் தமிழில் ஒளி, சொலிப்பு, நெருப்பு என்று பொதுவாகக் குறித்தாலும் (பார்க்க: கொன்றையும் பொன்னும் என்ற இராம.கி. கட்டுரை), விதப்பாக, வானில் சொலிக்கின்ற கோள்களையும், விண்மீன்களையும் குறிக்கிறது. (அதே நேரத்தில் சொலிப்பு என்ற தமிழ்ச் சொல்லையே ஜொலிப்பு என்று பலுக்கும் அளவிற்கு நம்மில் ஒரு சிலருடைய வடமொழி விருப்பம் போயிருக்கிறது.)

சோதி என்பதன் வழிச் சொல்லான சோதியம் (விண்ணில் ஒளிவிட்டு இருக்கும் விண்மீன்கள், கோள்களை வைத்துக் கணித்தல்) என்ற சொல் முதலில் வான நூலையே (Astronomy) குறித்தது. காட்டாக, புறநானூற்றில் 30-ஆவது பாட்டு, சோதியம் என்னும் வானியலையே குறிக்கிறது.

செஞ்ஞாயிற்றுச் செலவும்

அஞ்ஞாயிற்றுப் பரிப்பும்

பரிப்புச் சூழந்த மண்டிலுமும்

வளிதிரிதரு திசையும்

வரிது நிலைஇய காயமும் என்றிவை

சென்று அளந்து அறிந்தார் போல

என்றும் இனைத்து என்போரும் உளரே

(புறம் 30)

(தமிழர் அறிந்த வானவியல் பற்றி ஒரு தொடரைக் காலங்கள் என்ற தலைப்பில் முன்பு மடற்குழுக்களில் எழுதத் தொடங்கினேன். இந்த வலைப்பதிவின் தொடக்க காலத்தில் கூட, அந்தத் தொடர் தகுதரத்தில் (TSCII) மீள்பதிப்பாய் வெளியானது; என்னுடைய தனிக் காரணத்தால் பாதியோடு நின்று போன அந்தத் தொடரை என்று முடிப்பேன் என்று இப்பொழுது சொல்ல முடியவில்லை.)

சோதியம் என்ற தமிழ்ச் சொல்லே வடக்கே போய் சோதிஷம்>ஜோதிஷம்>ஜ்யோதிஷம் என்றாகிப் பின்னால் மீண்டும் தமிழில் சோதிடமாக வந்து சேர்ந்திருக்கிறது. ஒருகாலத்தில் வானியல் என்ற அறிவியலாய் நின்ற சோதியம், பின்னால் நிமித்திகத்தோடு சேர்ந்து கொண்டு, "கோள்நிலை, கோள்களுக்குப் பின் நிற்கும் விண்மீன்கள் நிலை ஆகியவற்றை வைத்து, மாந்தருக்கு வருங்காலத்தில் என்ன நடக்கும்?" என்று சொல்லும் கலையாக, வான்நிமித்திகமாக (astrology) உருமாறிப் போனது. (இப்படி அந்த நூலின் குறிக்கோளே மாறிய பின்னும் கூடச் சோதிடம் என்ற சொல்லே புழக்கத்தில் இருந்தது. தொடக்க காலத்தில் அது வான நூலைக் குறித்தது என்றால் இன்றைக்குப் பலரும் வியக்கவே செய்வர். அதே நேரத்தில், சோதியம் என்ற சொல்லையே மூடநம்பிக்கை என்று உணர்ந்து அதனுள் இருக்கும் பழைய தமிழர்/இந்திய வானியல் அறிவை பெரும்பாலோர் புறக்கணிக்கிறோம்.)

இந்திய வானியல் என்பது, இன்றைக்குப் பெரிதும் வடமொழிக் கலைச்சொற்களால் குறிக்கப் பட்டு, தன்னுடைய கருதுகோள்கள், கணக்கெடுப்புகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது. [அது குத்தர்(குப்தர்) காலத்தில் ஓர் இயக்கமாகவே, தமிழ் போன்ற வழக்கு மொழிகளில் இருந்து வடமொழி என்ற படிப்பு மொழிக்குப் பெயர்ப்புச் செய்ததால் உருவான விளைவு.] அதே பொழுது, சங்க இலக்கியங்களில் அறிவர் / கணியர் / வள்ளுவர் என்ற வல்லுநர்கள் (திருக்குறள் எழுதிய வள்ளுவர் பற்றிய அடையாளக் கேள்வி சட்டென்று எழலாம்; இப்போதைக்கு அதைத் தேக்கி வைத்துக் கொள்ளுங்கள்; பின்னால் ஒருமுறை பார்க்கலாம்.) பற்றியும், அவர்களுடைய வானியல் அறிவைப் பற்றியும், அங்கொன்றும் இங்கொன்றுமாய்க் குறிப்புக்கள் பரக்க இருக்கின்றன. கூடவே, வடமொழியில் இருக்கும் வானியற் கலைச்சொற்களை அலசிப் பார்த்து அவற்றின் வேரைத் தேடினோமானால், வடமொழி வேர்கள் ஏற்றுக் கொள்ளும்படியாகக் கிடைக்காமலும், ஆழமாய்ப் பார்க்கும் போது தமிழ்வேர்களே கிடைப்பதும் நம்மை வியக்க வைக்கின்றன.

இந்த அறிவர்கள் / கணியர்கள் / வள்ளுவர்களின் மெய்யியலாக, அவர்களுக்குப் பின்னால் ஆசீவகம் என்ற தமிழ்நெறி இருப்பதும் கூர்ந்து அறியத் தக்கது. (இன்றைக்கு ஆசீவக நெறி அழிந்து போயிருந்தாலும், அவற்றின் மிச்ச சொச்சங்கள் செயின நெறி, சிவ நெறி, விண்ணவ நெறிகளில் ஓரளவு கலந்தே கிடக்கின்றன. ஆசீவகத்தின் பங்களிப்பை முற்றிலும் மறைத்து ஆசீவகப் பள்ளிகளையும், அவர்களின் ஆக்கங்களையும் செயினரின் பங்களிப்பாகவும், சமணர் என்ற பொதுச்சொல்லில் அவரை ஆட்படுத்துவதும் கால காலத்திற்கும் நடந்திருக்கிறது.) பொதுவாக, அணுவியம் (atomism), ஊழியல் எனப்படும் நியதிக் கொள்கை (determinism), வினைமறுப்பியம் (முன்பிறவியின் தாக்கம் இந்தப் பிறவிக்கு உண்டு என்ற கருமத்தை மறுப்பது) என்னும் மூன்று கொள்கைகளின் வழி ஆசீவகம் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும். சங்க காலத்தில் இந்தக் கொள்கைகள் பரவியிருந்ததற்குச் சான்றாக பல பாடல்களைக் கூறமுடியும். (அதைச் சொன்னால் இங்கு நீண்டு போகும். எனவே அதற்குள் நான் இப்பொழுது போகவில்லை.)

ஆசீவகத்தின் கொள்கைகளில் முகன்மையானது நியதிக் கொள்கை. அந்தக் கொள்கையின் படி, "இந்த உலகம் என்பது ஓர் ஒழுங்கின்பால் கட்டுப் பட்டது. இந்த ஒழுங்கும் கூட, நமக்கு முன்னாலேயே கட்டப் பட்டது (pre-ordained)". இந்தக் கட்டுதலை, இயற்கை என்ற ஒன்று தானாகக் கட்டியதா, அன்றி கடவுள் என்ற ஒரு கருத்தா கட்டியதா என்ற கேள்விக்குள் நாம் போக வேண்டியதில்லை (இருவேறுபட்ட கருத்தாளர்களும் இருந்திருக்கிறார்கள். ஆசிவகம் கடவுள் மறுப்பாகவும் இருந்திருக்கிறது. மாறாக அதிலிருந்து, முன்னே சொன்னது போல, கடவுளை நம்பும் மதங்களும் சிந்தனைகளை எடுத்தாண்டிருக்கின்றன.) "ஏற்கனெவேயே எல்லாம் ஒழுங்கு செய்யப் பட்டபிறகு, நடப்பது என்பது நடந்தே தீரும்" என்ற நிலையை, நியதி என்று தமிழில் சொல்லுவார்கள். "ஊழில் பெருந்தக்க யாவுள" என்ற குறள் கருத்து ஆசீவகத்தின் அடிப்படை உள்ளதே. "ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்" என்பது சிலம்பின் அடிக்கருத்துகளில் ஒன்று. (சிலம்பைச் சமணநூல் என்று சொல்லுவதா என்ற கேள்வி எழுவது இந்த ஊழ்வினை காரணம் பற்றியே.) பொதுவாக, ஊழ்வினை என்பதை முன்பிறப்பு வினை என்று பொருள் கொள்ளுவது பிறழ்ச்சியானது. அந்த ஊழ்வினை என்பது pre-ordained action என்பதையே குறிக்கிறது. அதற்கும் முற்பிறப்பிற்கும் தொடர்பு இல்லை. ஆசீவகம் ஊழோடு வினைமறுப்பியத்தையும் சேர்த்துச் சொல்லுகிறது.

இந்தக் கால அறிவியல், நுட்பியற்காரர்களுக்கு கணித வழி சொன்னால் ஊழ், நியதிக் கொள்கை என்பது இன்னும் புரிபடக் கூடும். நியதிக் கொள்கை என்பது கலன (calculus) நூலில் தொடக்க மதிப்புப் புதிரிகளைப் (initial value problems) போன்றது. ஒரு வருதையான வகைப்புச் சமன்பாடும் (ordinary differential equation), அதற்கான தொடக்க மதிப்பும் (initial value) கொடுத்துவிட்டால், கால காலத்திற்கும் அந்த இயக்கம் நடந்து கொண்டே இருக்கும் என்று கலன இயலில் புரிந்து கொள்ளுகிறோம் அல்லவா? காட்டாக, மக்கள்தொகைப் பெருக்கத்தின் ஓர் எளிமையான மாதிரியாக (simple model)

dx/dt = kx; x(0)= a

என்ற சமன்பாட்டைச் சொல்லுவார்கள். அதாவது, பெருகு வளர்ச்சியின் கண நேர வீதம் (instantaneous rate of growth), அந்தப் பொழுதில் வளர்ந்திருக்கும் தொகையைப் பொறுத்தது என்று இந்தச் சமன்பாட்டின் அடிப்படையைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தச் சமன்பாட்டை வழக்கமான தொகைக் கலன (integral calculus) முறையில் இனம்பிரித்து தொகையேற்றிச் (if integrated) சுளுவி எடுத்தால் (solve)

x = a*exp (kt)

என்ற சமன்பாடு கிடைக்கும். இதில் exp(kt) என்பது kt என்பதன் இயல்மடக்கைக் (natural exponentiation or exponentiation of the number e) குறிக்கும். மேலும், k என்ற புறமதிப்பை (parameter) அல்லது நிலையெண்ணைப் (constant) பொறுத்து, a என்னும் தொடக்க மக்கள் தொகை, மடங்கி மடங்கிப் (exponential) பெருத்துக் கொண்டே போகும். இந்த அடிப்படையைப் புரிந்து கொண்டால், நியதி அல்லது ஊழ்க் கொள்கையின் அடிப்படை புரியும்.

"இன்றைக்கு இருக்கும் உலக நிலை, நடப்புக்கள் என்பவை என்றோ தீர்மானிக்கப் பட்டவை. உலகத்தில் இருக்கும் ஒவ்வொன்றின் வளர்ச்சியும் கோள்நிலைகளையே பொறுத்தது (அதாவது k என்ற புறமதிப்பைப் போல.) என்று நியதிக் கொள்கை கருதிக் கொள்கிறது. அதன் விளைவால், எந்தவொரு மாந்தனும் பிறக்கும் போது இருந்த கோள்நிலைகளைக் கணித்து வைத்துக் கொண்டால், அவன் வாழ்க்கையின் வெவ்வேறு கால நிலைகளில் "குறிப்பிட்ட நிகழ்வுகள் நடக்குமா, நடக்காதா?" என்று சொல்லிவிடலாமாம்.

அதே நேரத்தில், இதழுக்கும், கோப்பைக்கும் நடுவில் எவ்வளவோ துளிகள் சிந்தலாம் என்ற மொழிப்படி, இது போன்ற நியதிக் கொள்கையை மீறி எத்தனையோ நடக்கலாம் என்றும் நமக்குத் தோன்றுகிறது; ஆனாலும் நியதிக் கொள்கை மாந்த வரலாற்றை வெகுகாலம் நடத்தியிருக்கிறது. அண்மையில் இழுனாச் செயற்பாடுகளைப் (non-linear processes) பற்றியும், கசகு (chaos) பற்றியும், வண்ணத்துப்பூச்சி விளைவு (butterfly effet) பற்றியும், இன்னும் இதுபோன்றவை பற்றியும் அறியாத மட்டும், அறிவியலின் முகன்மைப் பகுதியான பூதியல் கூட நியதிக் கொள்கையின் படிதான் வேலை செய்து கொண்டிருந்தது.

இந்திய நியதிக் கொள்கையின் படி, ஊழ் என்பது நான்கு நிலைகளில் இயங்குமாம். (கீழே வரும் செய்திகள் தமிழக ஆய்வரண் வெளியிட்ட வெங்காலூர் குணா எழுதிய வள்ளுவத்தின் வீழ்ச்சி என்ற நூலை ஒட்டியது. இந்திய மெய்யறிவியல் பற்றிய, குறிப்பாக ஆசீவகம், விதப்பியம் (வைஷேடிகம்) பற்றிய, அருமையான நூல் அது. நூல் கிடைக்குமிடம்: பஃறுளி பதிப்பகம், 183, வேங்கடரங்கம் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 600 005.)

அவை

------------------------

ஆவதாம் (அதுவாம் அது)

ஆமாங்காம் (அதுவாம் வகை)

ஆந்துணையாம் (அதுவாம் துணை)

ஆங்காலத்தாம் (அதுவாம் பொழுது)

சினை (முட்டை) கருவாகி, கரு குழந்தையாகி, குழந்தை அரிவையாகும் (20 முதல் 25 அகவையாகும் பெண்) எவ்வளர்ச்சி (evolution), ஈன்களில் (genes) அமைந்துள்ள செய்திக் கோவையின் (message) படி ஏற்படும் இயற்கையைத் தான் "அதுவாம் அது (this is it)" என்று கூற்று சுட்டிக் காட்டுகிறது.

"இந்தச் சினை அரிவைப் பெண்ணாகும், இன்னொரு சினை அப்படிப் பெண்ணாகாது" என்று வகைப்பதும் இயற்கையே (அதுவாம் வகை - classification).

"அரிவையாக வேண்டுமானால் இவ்வளவு திரட்சி, இன்னின்ன சூழ்நிலைகள் இருக்க வேண்டும்" என்று துணைகளை விதிப்பதும் இயற்கையே (அதுவாம் துணை - auxillary conditions).

அரிவையாவது இன்ன பருவத்தில் என்பதும் இயற்கையே (அதுவாம் பொழுது - timing).

---------------------------------

நிமித்திகத்தின் அடித்தளமும் கூட இது தான். அதாவது நியதிக் கொள்கை (determinism). "நியந்து கொள்ளப் பட்ட உலகில் ஓரளவு தான் நீங்கள் உங்கள் வாழ்வை மாற்ற முடியும்" என்ற புரிதல் நியதிக் கொள்கையின் வழியாய் அறியப் படுவது. இன்றைய அறிவியலின் படி நியதிக் கொள்கையைப் பல கேள்விகளுக்கு உள்ளாக்க முடியும்.

வான்நிமித்திகத்தின் படி, நாம் பிறந்த போது கோள்கள் இருந்த நிலையை வான நூலின் படி ஒரு படமாகப் பிடித்து, ஒரேவிதமான படப்பிடிப்புகளை எல்லாம் ஒரு தனி வகையாகப் பார்த்து, அந்த வகையில் இருப்பவருக்கு இன்னவிதமான வாழ்க்கை இருக்கும் என்று சொல்லுவது வான்நிமித்திகம். [அந்தப் படப்பிடிப்பைத் தான் சூல்தகம்>*சொல்தகம்>சாதகம் என்று சொல்லுவார்கள். சூல்தல் = கருவுறுதல். சூல்த்தல் = கருவாக்குதல் (பிறவினை); சூலி, சூற்பெண்டு = கருவுற்ற பெண். கரு வளர்ச்சியுற்றுப் பிறக்கும் செயலை சூனித்தல்>சினைத்தல் என்று சொல்லுவார்கள். இதே போல கனித்தல் என்ற சொல்லும் பருவநிலை எய்தி உருவாதலைக் குறிக்கும். கனித்தல் / ஈனித்தல் / சினைத்தல் என மூன்று வினைகளுமே ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டவை. சினை என்ற சொல் பொதுவாக அஃறிணையில் கன்று, மகவு என்பதைக் குறிக்க, சூனு என்ற சொல் வடமொழியிலும், sun/sonne என்ற சொற்கள் இந்தையிரோப்பிய மொழிகளிலும் மகனைக் குறிக்கப் பயன்படும். இதே போல, சூல்த்தம்>சூத்தம்>சூத்ரம் = சொல்ல வருவதை சுருக்கமாய், எல்லாம் அடங்கிய கருப் போலச் சொல்லுதல்.]

இனி நிமித்தம் என்பதைப் பார்ப்போம். நிமித்தம் என்பதற்குக் காரணம், சகுனம் என்று பலபொருள் சொல்லுவார்கள். தொல்காப்பியத்தில் ஒரு சில இடங்களில் இந்தச் சொல் ஆளப் படுகிறது. குறிப்பாக, அகத் திணையியலில் உரிப்பொருள் பற்றிப் பேசும்பொழுது 960 ம் நூற்பாவில்,

புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்

ஊட்ல் இவற்றின் நிமித்தம் என்று இவை

தேருங் காலை திணைக்கு உரிப் பொருளே

என்று வரும். இங்கே நிமித்தம் என்பதற்குக் காரணம் என்ற முதற்பொருள் குறிக்கப் பெறும். இதே போல 1037ம் நூற்பாவில்,

நாளும் புள்ளும் பிறவற்றின் நிமித்தமும்

காலங் கண்ணிய ஓம்படை உளப்பட

ஞாலத்து வரூஉம் நடக்கையது குறிப்பில்

காலம் மூன்றொடு கண்ணிய வருமே.

சகுனம் என்ற பொருள் குறிக்கப் படும். மேலும், 1050 ம் நூற்பாவில் "பாங்கன் நிமித்தம் பன்னிரண்டு என்ப" என்னும் போது காரணம் என்ற பொருளும், 1123ம் நூற்பாவில், "ஆவொடு பாட நிமித்தம் கூறலும்" என்னும் போது மீண்டும் சகுனம் என்ற பொருளும் வரும். தொல்காப்பியத்திற்குப் பிறகு வந்த சங்க நூல்களிலும் கூட இந்தச் சொல் காரணம், சகுனம் என்று பொருள்களில் ஆளப்பட்டிருக்கிறது.

நிமித்தம் என்ற சொல்லாட்சி வடமொழியில் இருந்துதான் வந்திருக்க வேண்டும் என்று பலரும் எண்ணுகிறார்கள். ஆனால் நிமித்த என்பதின் சொற்பிறப்பு அறிய மோனியர் வில்லியம்சு வடமொழி சொற்பிறப்பு அகரமுதலிக்குப் போனால், வழக்கம் போல சொல்லை உடைத்து, நி-மித்த என்று பிரித்து, மித்த என்னும் பகுதி மா என்னும் வேரில் இருந்து எழுந்திருக்கலாம் என்று ஊகமாகப் போட்டிருக்கிறார்கள். விளக்கத்தை முழுதும் படித்தால் நம்மால் ஏற்க முடிய வில்லை. "சரி, தமிழில் பிறந்து திரிந்து கிடக்குமோ?" என்ற அய்யம் உடன் எழுகிறது.

நிமித்தம் என்பதற்கு, திவாகரத்தில் நிபம், பொருட்டு, ஏது, திறன், வாயில் என்று சொற்களை இணையாகக் கொடுத்து "காரணந் தெரி சொல்" என்று பொருள் சொல்லுவார்கள். [பின்னால் வருகின்ற நிகண்டுகளில் நிபம் என்ற சொல்லையே காணோம்.]

காரணம் என்ற சொல் கரு என்னும் சொல்லடியின் நின்று பிறந்தது என்ற சொல்லறிஞர் ப.அருளியார் கருதுவார். கருவின் அணம் காரணம் என்று ஆகும். அதாவது கருவிற்கு நெருங்கியது காரணம். கருத்தல் என்பது தோன்றுதல் பொருளைக் குறிக்கும். காரணம் தமிழாக இருக்கும் போது, கருவில் இருந்து ஏற்பட்ட காரியம் என்னும் சொல்லோ ஓர் இருபிறப்பிச் சொல். கருமம் என்பது அதற்கு இணையான தமிழ்ச்சொல்.

இதே போல இயல் என்னும் சொல்லடியில் இருந்து பிறந்த வினைச்சொல் இயல்தல்; இதற்குப் பொருள் ஏற்படுதல், உண்டாகுதல் என்பதாகும். இயல்தலின் திரிவு ஏல்தல். ஏல் என்னும் அடியில் இருந்து கிளைத்தது தான் எற்படுதல் என்ற கூட்டு வினைச்சொல். இனி, ஏல்து என்னும் சொல்லடி ஏல்து>ஏது என்று ஆகும். ஏது என்ற சொல் காரணம் என்ற பொருளைத் தருவது இப்படித்தான். ஏது சாற்றம் என்ற கூட்டுச்சொல் hethusAsthra என்று வடமொழியில் திரியும். Logic என்று பொருள். இதைக் கற்கக் காஞ்சிபுரத்திற்கு புத்தர் காலத்தில் வந்திருக்கிற செய்தி புத்த நூல்களில் தெரிகிறது.

காரணத்தோடு தொடர்புடைய பொருட்டு என்ற சொல்லை இரண்டு மூன்று வகையாய்ப் பயன்படுத்துகிறோம். "எதன் பொருட்டு இவர் இப்படிக் கத்துகிறார்?" என்னும் போது காரணம் என்ற பொருளும், "அப்படி எல்லாம் அவர் நினைத்தால் எனக்குப் பொருட்டு இல்லை" என்னும் போது "மதிப்பிற்குரியது" என்ற பொருளும் காணப் படுகிறது.

"ஒன்றின் வாயிலாய் இன்னொன்று பிறக்கும்" என்னும் போது, வாயில் என்ற சொல்லும் காரணப் பொருளைப் பெறுகிறது. திறவு/திறன் என்ற சொல்லும் கூட வாயில்/கதவு என்ற பொருளின் வழியாகக் காரணத்தை உணர்த்துகிறது.

இனி நிமித்தத்திற்கு வருவோம். தமிழில் தன்வினைச் சொல்லான நிற்றல் என்பதன் பொருளை நாம் அறிவோம். அதைப் பிறவினையாக்கும் போது நிருவுதல்>நிறுவுதல், நிருமுதல்>நிருமித்தல், நிற்பு+ஆட்டுதல் = நிற்பாட்டுதல்>நிப்பாட்டுதல் என்றெல்லாம் வட்டாரத்திற்கு ஏற்பச் சொற்கள் எழும். இவை எல்லாவற்றிற்கும் நிற்க வைத்தல் என்றே பொருள் கொள்ளுகிறோம். இதே பொருட்பாட்டில் தான் ஏல் + படுதல் = ஏற்படுதல் என்ற கூட்டு வினைச்சொல் எழும். ஏற்படுதல் என்பது தன்வினையாகும் போது, அதன் பிறவினையாய் ஏற்படுத்தல் என்ற சொல் எழும். நிருமித்தல் என்பதும் ஏற்படுத்தல் என்பதும் ஒரே பொருட்பாடு உடையவையே.

ஒன்றை ஏற்படுத்தினால், இன்னொன்று விளையும் என்ற பொருளில் ஏற்பாடு என்ற சொல் காரணமாயும், ஏற்படுவது விளைவாயும் கொள்ளப் படுகிறது. சிலபோது இந்த விளைவை நிருமானம்>நிருமாணம் என்று சொல்லுகிறோம். நிருமித்தம், ஏற்பாடு போன்ற சொற்களுக்குக் காரணப் பொருள் உண்டாவதை மேலே கூறிய கருத்துக்களின் வழியாகப் புரிந்து கொள்ள முடியும். இனி பெருநை>பெண்ணை என்று ஆவது போல, பெருமான்>பெம்மான் என்று ஆவது போல, நிருமித்தம் என்பது நிம்மித்தம்>நிமித்தம் என்று திரியும். [இந்த நிருவுதல் என்பதன் வழியாக, நிருபாதானம் = முதற்காரணம் இன்மை, நிருபாதி = காரணம் இன்மை, நிருபாதிகம் = காரணம் அற்றது என்ற இருபிறப்பிச் சொற்களும் உருவாகி இருக்கின்றன.]

வாழ்வின் ஒவ்வொரு விளைவுகளுக்கும் நிமித்தம்(=காரணம்) கண்டுபிடித்துச் சொல்லுவதும், இந்த நிமித்தம் ஏற்பட்டுவதால், இன்னது விளையும் என்பதும் நிமித்திகத்தின் புலனம் ஆகும். இந்த நிமித்திகத்தில் செய்கணம் (=சகுனம்) என்பதும் ஆழ்ந்து பார்க்கப் படுகிறது. எப்படி இலக்கியத்திற்கு இலக்கணம் ஆதாரமோ, எப்படிக் கருமத்திற்குக் காரணம் ஆதாரமோ, அதே போல செய்கைக்கு அணம் செய்கணம்>செகுணம்>செகுனம்>சகுனம் ஆதாரம் என்று முன்னோர் நம்பினார்கள். (இந்தச் செகுனம் என்பது இன்றைய அறிவியலில் signal என்று சொல்லப் படும்.) பலநேரம் இது அறிவியலின்படி இருந்தாலும், ஓரோவழி மூட நம்பிக்கையாயும் இது அமைந்துவிடுவது உண்டு.

மேகம் கருத்தால், மழை வரும் என்பது பட்டறிவு. இதில் மழை என்பது செய்கை. கருத்த மேகம் என்பது செய்கணம் அல்லது நிமித்தம். கருத்தமேகத்தைப் பார்த்து மழை வரும் என்று சொல்லுவது நிமித்திகம். இன்னொரு எடுத்துக்காட்டையும் கூற முடியும். ஒரு இடத்தில் பெரும் நில அதிர்வு ஏற்படப் போகிறது; அந்த அதிர்வு ஓர் அலையுயரம் (amplitude), அல்லது பருவெண் (frequency) காட்டினால் தான் மாந்தர்களால் அறியமுடிகிறது. அதற்குள் பெரும் அழிவுகள் ஏற்பட்டுவிடக் கூடும். மாறாக ஒரு சில பறவைகள் (புள்கள்), நுண்ணுயிரிகள், குறுவிலங்குகள் போன்றவை, மிகச் சிறிய அதிர்வுகளால் கூட அங்கும் இங்கு ஓடத் தொடங்குகின்றன அல்லது பறக்கத் தொடங்குகின்றன. அதைக் கவனித்து இன்னும் இத்தனை மணி நேரத்தில் பெரிய நில அதிர்வு ஏற்படப் போகிறது என்று சொல்லுவதும் நிமித்திகம் தான். அதே போல மழை வரப் போகிறது என்று கணித்துச் சொல்லுவது, இந்த முறை வெய்யில் கூட வாட்டும் என்று முன்கூடிச் சொல்லுவது, கடல் பொங்கும் என்று ஆருடம் சொல்லுவது என்பவை எல்லாமே நிமித்திகம் தான்.

நாளாவட்டத்தில், பல்லி கவுளி சொல்லுவது, பூனை குறுக்கே போவது என்று மூடநம்பிக்கைகளுக்குப் போய்ச் சேர்ந்தாலும். தொடக்கத்தில் நிமித்திகத்தில், இயற்கையைக் கூர்ந்து கவனிக்கும் ஈடுபாடு இருந்தது புலப்படுகிறது.

நிமித்திகத்திற்குப் பக்க வலுவாக சோதியத்தைச் சேர்த்துக் கொண்டு வான்நிமித்திகம் வந்தது எப்பொழுது என்று தெரிந்து கொள்ள முடியவில்லை; ஆனால் சங்க காலத்தில் இந்தக் கலை ஏற்பட்டுவிட்டது என்பது பல பாடல்களால் தெரிகிறது. காட்டாக, "எரிமீன் விழுந்தது; சேர அரசன் இறக்கப் போகிறான்" என்று நிமித்திகம் கூறும் புறநானூற்றின் 229ம் பாடல்,

ஆடியல் அழற்குட்டத்து

ஆரிருள் அரைஇரவில்

முடப்பனையத்து வேர்முதலாக்

கடைக்குளத்துக் கயங்காயப்

பங்குனிஉயர் அழுவத்துத்

தலைநாள்மீன் நிலைதிரிய

நிலைநாள்மீன் அதன் எதிர் ஏர்தரத்

தொல்நாள்மீன் துறைபடியப்

பாசிச் செல்லாது ஊசி முன்னாது

அளக்கர்த் திணை விளக்காகக்

கனைஎரி பரப்பக் காலெதிர்பு பொங்கி

ஒரு மீன் விழுந்தன்றால் விசும்பி னானே

(புறம் 229)

வழியாக, வான்நிமித்திகத்தின் தாக்கம் சங்க காலத்தில் இருந்ததைத் தெளிவாகவே அறிகிறோம். இது போன்ற பாடல்களில் இருக்கும் வானியல் அறிவு ஒருபக்கம் நம்மை வியக்க வைக்கும் போது, இன்னொரு பக்கம் நிமித்திகத்தின் ஊடுருவலையும் எண்ணிப் பார்க்க வேண்டியிருக்கிறது.

இனி மூன்றாவது சொல்லுக்கு வருவோம். ஆரூடம் என்ற சொல்லிற்கும் வடமொழியில் வேர் கிடையாது.ஆரூடம் என்பது முதலில் வான்நிமித்திகத்தின் ஒரு விதப்பான முறையாகவே உணரப் பட்டது. அதாவது சூல்தகம் (=சாதகம்) பார்க்காமல், கேட்கவரும் நேரத்தில் "ஓரைகள் (ராசிகள்) எந்த அளவிற்கு உச்சம் பெற்றிருக்கின்றன; இந்த நேரத்தில் கோள்கள் எப்படிப் பாதிக்கும்?" என்று கணித்து நிமித்திகம் சொல்லுவதே ஆரூடம் என்று அறியப் பட்டது. நாளாவட்டத்தில் எல்லாவிதமான ஊக வேலைகளையும் (guesswork) கூட ஆரூடம் என்று சொல்லத் தொடங்கினார்கள். எண் சோதிடம் கூட இன்னொரு கிளையாகப் பிரிந்தது. ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு பலனைச் சொல்லி, அந்த எண்களுக்குக் கோள்நிலைகளோடு தொடர்புறுத்தி, எண்களை தாயக் கட்டைகள், சோழிகள் மூலம் போடவைத்து, மொத்தத்தில் பெரிய ஊகவேலைகள் நடந்து கொண்டிருந்தன.

ஆரூடம் என்பதை ஆர்+ஊடம் என்ற கூட்டுச் சொல்லாகப் பிரித்தே சரியான சொற்பிறப்பு காண்கிறார்கள். ஏர்தல்>ஏறுதல், ஊர்தல் = ஏறிநகருதல்; ஏகாரம்/ஊகாரம் போன்றவை ஆகாரமாய்த் திரிவது தமிழில் இயற்கையே. ஏறிவந்து ஒருவர் நிமித்திகரிடம் ஆரூடம் கேட்கும் போது, கோள்கள் ஓரைகளின் உச்சநிலையில் இருப்பதை ஒட்டி, அதன் ஊடாகப் பலன் சொல்லுவது ஏரூடம்>ஆரூடம். இதைப் ப்ரசன்ன சோதிடம் என்றும் வடமொழிப் படுத்திச் சொல்லுவார்கள். அண்மையில் கேரளாவில் அய்யப்பன் கோவிலில் சோழிகளைப் போட்டு ப்ரசன்னம் பார்த்த குழப்பம் செய்தித் தாளில் படித்திருப்போமே? இந்த ஆரூடம், ப்ரசன்னம் பார்ப்பது கேரளத்தில் மிகுதியானது. தமிழகத்தில் குறைவு.

இப்படிச் சோதியம், நிமித்திகம், ஆரூடம் போன்றவை சற்றே வேறுபட்டாலும், எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து ஒன்றிற்கு மாற்றாக இன்னொரு சொல்லைப் புழங்குவது இன்றைக்கு வழக்கமாகிப் போனது.

இந்தக் கட்டுரை நெடுகிலும், நிமித்திகம், ஆரூடம் போன்றவை சரியா, மூட நம்பிக்கையா என்ற கேள்விக்குள் நான் போகவில்லை.

அன்புடன்,

இராம.கி

.

இளைஞன், நல்ல ஒரு பதிவை தொடக்கி இருக்கிறீர்கள்.

முதலில், பேரண்டம் என்பது (Universe) ஒன்றல்ல. பல இருக்கலாம். தற்போது ""ப்ரேன் தியறி" மூலம் big-bang நிகழ்வை விளக்க முனைகிறார்கள். பேரண்டத்தின் இயக்கத்தை நாம் மூன்று படிநிலைகளில் பார்க்கலாம்.

1. மிகப்பெரும் அளவு (cosmological scale - ஒளியாண்டுகள்)

2. சாதாரண அளவு (ordinary / Newtonian - நாம் அன்றாட வாழ்க்கையில் காண்பது)

3. மிகக் குறுகிய அளவு (Quantum scale - 10^(-9) மீட்டர் )

இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த பேரண்டத்தின் இயக்கம் "ஏலவே தீர்மானிக்கப் பட்டதல்ல". அது ஒவ்வொரு கணத்திலும் உள்ள "மிகச் சரியான தெரிவுகளின் அடிப்படையில்" நிகழ்வது (most appropriate choice). இராம.கி அவர்கள் எடுத்தாண்ட வகையீட்டு சமன்பாடு உதாரணம் bifurcation புள்ளிகள் இல்லாதவிடத்து பொருந்தும். ஆனால் பேரண்டத்தின் இயக்கம் அவ்வாஅறான ஒன்றல்ல.

எனவே நியதிக் கொள்கை என்பது கேள்விக்கு இடமின்றி விலகிவிடுகிறது. இதில் நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு விடயம் இருக்கின்றது. மிகப் பெரும் அளவுகளில், உதாரணமாக பால்வெளிகளின் இயக்கம், ஒரு ஒழுங்கில் நடைபெறுகிறது. கவனிக்கவும்: இவை தீர்மானிக்கப் பட்ட இயக்கம் அல்ல. ஆனால் குவாண்டம் நிலையில் எந்தவித ஒழுங்கமைவும் இல்லை. அதனை கயோஸ் (chaos) என அழைப்பர்.

இந்த நேரத்தில், நான் இன்னொன்றையும் எழுத வேண்டும். எம்மிடம் இருக்கும் பல தியறிகள் மேற்கூறிய இயக்கங்களை எவ்வாறு கையாளுகின்றன என அறிந்துகொள்ளுதல் மிக அவசியம்.

1. Quantum mechanics

2. Statisticial mechanics

3. Continuum mechanics

4. Newtonian Mechanics

5. Relativistic mechanics

இதில் 1ல் இருந்து 5 வரை அதன் பிரயோக எல்லை விரிகிறது. இதை விளக்கமாக எழுதுவதென்றால், பொறியியற் துறையில் நாம் பயில்வது எல்லாம் வகை 3 ஆகிறது. அன்றாட வாழ்க்கையில் பயன்படும் இயக்க விதிகள் வகை 4 ஆகிறது. பால்வெளிகள், பேரண்டம் என்பவற்றின் இயக்கம் 5 ற்குள் வந்துவிடுகிறது (கருந்துளைகள் அல்ல). அண்மையில் வகை 2ஐ அறிமுகப் படுத்தி இருக்கின்றனர். குவாண்டம் தியறியில் வெப்ப நிலை பங்களிப்பதில்லை என்பதால் வகை 1, 3 இற்கு இடையில் வெப்ப நிலையையும் சேர்த்து வகை 2ஐ உருவாக்கி உள்ளனர்.

மேலும் வானசாஸ்த்திரம் (astronomy) என்பதற்கும் சோதிடம் (astrology) என்பதற்கும் தொடர்புகள் எதுவும் இல்லை. வான சாஸ்த்திரம் ஒரு விஞ்ஞானம். சோதிடம் ஒரு வியாபாரம் (இங்கு கோள்களின் நிலையை வானசாஸ்த்திர நுட்பங்களினால் கணிக்கிறார்கள் என்பது வேறுவிடயம்). மற்றபடி இதில் விஞ்ஞானம் இருப்பதாக தெரியவில்லை. இதில், சோதிடத்துக்கு விஞ்ஞான முலாம் பூசுபவர்கள் ஒரு விடயத்தை முன்வைப்பார்கள். அதாவது கோள்களின் ஈர்ப்பு விசை மனிதனில் தாக்கம் செலுத்துகிறது என்று.

ஈர்ப்பு (Gravity) என்பது ஒரு விசை அல்ல. அது வெளி-நேர பரிமாணத்தின் வளைவினால் தோற்றப்படுவது. இதை ஆங்கிலத்தில் எழுதினால் கருத்து சிதையாமல் இருக்கும் என நினைக்கிறேன் ( Gravity is the manifestation of space-time curvature). அத்தோடு ஈர்ப்பு என்பது மின்காந்த அலையின் வேகத்தில் பயணிக்க கூடியது. திணிவுள்ள எவையும் ஈர்ப்பு அலைகளை உருவாக்க வல்லன. கணிதவியல் மூலம், கோள்கள் தரும் ஈர்ப்பு சக்தியையும் சூரியன் மற்றும் பால்வெளிகள் தரும் ஈர்ப்பு சக்த்தியையும் ஒப்பிட்டு பார்த்தால், கோள்கள் தருவன மிக மிக மிகச் சிறிய பங்கே. இந்த சோதிடம் உண்மையானால், விமானம் 0.1g (g = 9.81 ms^{-2})ஈர்ப்புடன் பயணிக்கும் போது விமானியின் தலைவிதியும் அல்லவா மாறியிருக்க வேண்டும் :rolleyes::lol:

எனவே, மிகச் சுருக்கமாக சொல்வதானால், பேரண்டங்களின் இயக்கமானாலும் சரி, மனிதர் உட்பட அனைத்து ஜீவராசிகளின் இயக்கமானாலும் சரி ஒவ்வொரு கணத்திலும் உள்ள மிகச் சிறந்ததென தென்படும் தெரிவுகளின் அடிப்படையிலேயே நிகழ்கின்றன.

ஈழத்திருமகன்,

நீங்கள் சொன்ன சாவோச் chavos தியரியும் ஒரே நேரெத்தில் பல உலகங்கள் இருக்கும் என்பதையும் ஏற்கனவே இந்து சமயத்தில் சொல்லப்பட்டிருக்கு என்பதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளவும்.... :rolleyes:

சும்மா இப்படி எல்லாத்தையும் அங்க இருந்திச்சு இங்கு இருந்திச்சு எண்டு எவனோ ஒருத்தன் கண்டு பிடிக்க உரிமை கொண்டாடுறதே பிழைப்பாப் போச்சு.....

அது சரி உந்த parallel universe, மற்றும் இந்த time as the fifth dimension இவை பற்றி உங்களுக்கு விளக்கம் இருந்தா எழுதுங்களேன்.

A Brief history of time வாசிச்சுக் குழம்பிப் போயிருகிறன்... :lol:

அடாட a brief history of time வாசிச்சு 5 வருடங்களாக குழம்பிப்போயியுள்ள பக்தர்களில் நானும் ஒருவன். :rolleyes:

பேசாமல் அயோத்தியில போய்; சமஸ்கிரதத்தில ஆய்வு செய்திருந்தா மனநிம்மதியாவது கிடைச்சிருக்கும். :lol:

நாரதர் மற்றும் குறுக்ஸ். !!

மிகவும் நல்லது. பௌதீக துறையில் உங்களுக்கு உள்ள ஆர்வம் மெச்சத்தக்கது. நீங்கள் எழுதிய parallel universe, dimensionality of time and Stephen's book பற்றி எழுதலாம். முழுமையாக எல்லோரும் வாசிக்கும் வண்ணம் எழுதி தொகுப்பதென்பது என்னால் முடியாத காரியம். அவ்வளவுக்கு மொழிசார் புலமையும் இல்லை, நேரமும் கிட்டாது. எனவே நீங்கள் கேள்விகளை எழுதினால், என்னால் இயன்றளவு சுருக்கமாக பதில் எழுத ஆர்வமாக இருக்கிறேன்.

"நேரம்" (Time) மற்றும் "காலம்" (Period) என்பன மிகவும் சிக்கலானவை. அரிஸ்டோட்டில், கலிலியோ என்பவர்களின் கைகளில் இருந்து நழுவி, நியூட்டனின் கைகளில் சிக்கிவிட்டது என அறியப்பட்ட "நேரம்" ஐன்ஸ்டைன் காலத்தில் வேறொரு பரிமாணம் எடுத்தது. அதிலும் சுவாரஸ்யமாக, "மறைக்கப்பட்ட கணித மேதை" கோடெல் அவர்கள், ஐன்ஸ்டைனின் field equations களுக்கு நேரத்தில் தங்கியிராத தீர்வுகளை தந்தார். அதாவது "நேரம்" என்று எதுவும் இல்லை. அது ஒரு மனப் பிரமையே என வாதிட்டார். அதாவது "நேரம்" என்பது மீண்டும் நழுவிச் சென்றுவிட்டது.

Stephen's புத்தகம், விவரிக்கும் விடயங்களில் தேவையானது என நீங்கள் கருதும் பகுதிகளில் விவாதங்களை தொடங்கலாம்.

எனக்கு ஒரு குழப்பம் இருக்கிறது... அதுவும் கீழ இருக்கும் கட்டுரைகளை படித்த பின்னதான்...

நீங்கள் நியூட்டன் பற்றி ஆரம்பித்ததினாலும் ((தலைப்போடு சம்பந்தம் இருப்பதனாலும்) கேட்க்கலாம் எண்டு முடிவு செய்தேன்...

http://naalainamathae.blogspot.com/2007/08/blog-post_25.html

தமிழர்களுக்கோ இல்லை இந்தியர்களுக்கோ இருந்த அணு அறிவு என்பது பற்றி...

http://www.thinnai.com/?module=displaystor...amp;format=html

http://www.thinnai.com/?module=displaystor...amp;format=html

இதை பற்றி என்ன சொல்கிறீர்கள்....??

தயா !!

முதலில் நுண்கணிதம் (Calculus) என்பது பற்றி எனது கருத்தை தெரிவித்து விடுகிறேன். லெபினிஸ்ற் அல்லது நியூட்டனோ நுண்கணிதத்தினை கண்டுபிடித்தவர்கள் அல்ல. மிகச் சரியாக சொல்வாதானால், கி.மு 1800 அளவில் எகிப்திய நாட்டவர் வட்டத்தின் பரப்பளவை கணிப்பதற்காக அதனை சிறு சிறு முக்கோணிகளாக மையத்தில் இருந்து பிரித்து

வட்டத்தின் பரப்பளவு = முக்கோணிகளின் பரப்பளவுகளின் கூட்டுத் தொகை

என integral calculus ஐ பயன்படுத்தி விட்டனர். நியூட்டன், லெபினிற்ஸ், கவுஸ், றீமான் போன்றவர்கள் நுண்கணித்த்தை மிக ஒழுங்காக செழுமைப் படுத்துவதில் முக்கிய பங்காற்றினர். கணிதவியலின் இளவரசன் என அழைக்கப்படும் கவுஸ் அவர்களின் "Gauss Theorem" இல்லாவிட்டால் பல பௌதீக விதிகளை, பொறியியற் பிரயோகங்களை கணிக்க முடியாது போயிருக்கும்.

இந்தியர்களானாலும் சரி, அரேபியர்கள் ஆனாலும் சரி எண்கணிதத்தில் (Arithmetic) வல்லவர்களாக இருந்தனர். இதனை மறுப்பதற்கில்லை. இன்று "0" என்பதை தந்திருக்காவிட்டால் கணனியும் இல்லை, கணிப்பீடும் இல்லை. இந்த எண்கணிதம் "அளவு" முறைகளுக்கே பெரிதும் பயன்படும். நீட்டல், நிறுத்தல், நேரம் என்பன அலகுகளாக பிரிக்கப் பட்டு எண்கணிதமூலம் அளவிடப் படுகின்றன. ஒரு பௌதீக கணியமும், அது சார்ந்த "அடி" (base) யும் அமைத்துவிட்டால் மிகுதி எல்லாம் பெருக்கல் தான். எமக்கு தெரிந்த எண்ணிக்கை வரை பெருக்கிக் கொண்டே போகலாம். உதாரணத்திற்கு 8 இன் மடங்குகள். இவை எண்ணிக்கையை தவிர வேறெதனையும் தரா.

மற்றது கணிதவியலில் உள்ள சட்டகங்களும் (structure of mathematics), அவற்றின் manipulations களும். இவை அட்சர கணிதம் எனும் வகைக்குள் வந்து விடுகின்றது. மிகப் பெரும் விஞ்ஞான நியதிகள் எழுதப்படுபவை algebraic forms இல் தான். எனவே விஞ்ஞானத்தின் எழுத்து வடிவமான கணிதத்தின் மையம் அட்சர கணிதமே. இந்த அட்சர கணிதத்தினையும், ஏலவே கூறிய எண்கணிதத்தையும் ஒருங்கிணைத்து Numerical Methods என பயன் படுத்துகிறோம். என்னுடைய மிக விருப்பத்துக்குரிய பகுதியான Finite Element Analysis ஒரு numerical procedure. இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டியது, அட்சர கணிதத்தின் கணிப்பீட்டு வடிவமே Numerical Methods. இன்று விஞ்ஞானத்தின் அனேகமான எந்தவித பிரசினங்களும் Numerical Methods மூலம் தீர்க்கலாம்.

இப்போது விடயத்திற்கு வருவோம். வெறும் அலகு பெருக்கங்களை வைத்துக் கொண்டு ஒரு விஞ்ஞான கணியத்தை அறிந்துவிட்டோம் என கூறுவது ஏற்புடையதல்ல. உதாரணமாக நீட்டலளவையின் அதிகூடிய அளவாக யாராவது (186,000*365 *24*3600) என்ற எண் வரை பெருக்கி எழுதியிருந்தால், அவர்கள் ஒளியாண்டு பற்றியோ அல்லது ஒளியின் வேகம், மின்காந்த அலைப் பண்பு பற்றியோ அறிந்துவிட்டார்கள் என்பது அர்த்தமல்ல. உண்மையில் அட்சர கணித ரீதியில், இவற்றை manipulate செய்திருந்தால் அதுவே போதுமானது. அவர்கள் அந்த பௌதீக கணியத்தின் அளவை கணிக்கக் கூட வேண்டியதில்லை.

மற்றது சொற்கள்: எண்ணங்கள் (thoughts) இல்லாமல் சொற்கள் (words) இல்லை என நம்புகிறேன். ஆனால் சொற்கள் இல்லாமல் எண்ணங்கள் இருக்கின்றன (non verbal thoughts). உதாரணத்துக்கு "அணு"எனும் சொல்லை எடுத்துக் கொள்வோம். அணு என்ற சொல்லை உருவாக்கியவர் "மிகச் சிறிய" என்பதன் பொருள் தரும் வண்ணம் (அதாவது மிகச் சிறிய என்னும் பொருள் தரக்கூடிய எண்ணம்) அதனை ஆக்கினர். தற்போது இந்த "மிகச் சிறிய" என்பது டால்ட்டனின் " Atomic Theory " வந்தவுடன் "அணு" என்பதை "atom" என்பதற்கு பயன்படுத்துகின்றோம். இந்த தமிழில் உள்ள "அணு" என்ற பதமும், ஆங்கிலத்தில் குறிக்கப்படும் "atom" என்ற பதமும் அந்த சொற்கள் உருவான கணம் " இன்று அவை சுட்டும் ஒரே பௌதீக கணியத்தை" குறித்தனவா என்றால் இல்லை என்பதே பதில். உண்மையில் கிரேக்க பதமான "atomos" என்பது பகுக்க முடியாத என்பதான பொருளை தருகிறது. இதற்காக கிரேக்கர்கள் அணு பற்றி அறிந்துள்ளனர் என்று பொருளல்ல.

எனவே நாமே உருவாக்கிக் கொண்ட சொற்களையும், அவை தரும் மயக்கத்துக் குரிய பொருள்களையும் நுணுகி ஆராய வேண்டியது அவசியம்.

நண்றி...

எனக்கு இன்னும் ஒரு சந்தேகம் முக்கோணி அல்லது வட்டதின் பரப்பளவுகளையும் எகிப்தியர்களையும் தொடர்பு படுத்தியதால் கேட்க்க தோண்று கிறது...

அது "அரியம்" பற்றியது... ஒரு pyramid க்கு அடியில் இருக்கும் பொருள் கெட்டு போவதில்லை எண்று சொல்ல படுகிறது...

ஒரு அட்டையில் செய்த அரியத்தின் அடியில் உடைந்த பிளேட் துண்டை வைத்து, பிரிதொரு பிளேட் துண்டை பெட்டிவடிவான தின் கீழ் தனியாக வைத்து இரண்டையும் சிலநாட்களின் பின் எடுத்து பார்த்த போது அரிதரத்துக்கு கீழே இருந்த பிள்ளேட் துருவின் அளவு குறைவாகவும், மற்றது அதுகமான துருவோடும் இருந்ததை பாடசாலை ஆராச்சி கூடத்தில் செய்து காண்பித்தார்கள்...

இப்ப எனது சந்தேகமே கணக்கியலின் அடிப்படையில் அமைக்கப்பட்ட (பிழையான வடிவம் சரியான பலனை கொடுக்க மாட்டது எண்று அறிந்தேன்) அரியம் ['pyramid' ] இறந்த உடல்களை பழுதடையாமல் செய்தனவா..?? அல்லது அந்த உடல்களோடு சேர்க்க பட்ட மூலிகைகளும் , மூலகங்களும் பாதுகாக்கின்றனவா...?? இல்லை இரண்டுமேவா...???

நிச்சயமாக எனக்கு இது விளங்கவில்லை....!

Edited by தயா

நாரதர் மற்றும் குறுக்ஸ். !!

மிகவும் நல்லது. பௌதீக துறையில் உங்களுக்கு உள்ள ஆர்வம் மெச்சத்தக்கது. நீங்கள் எழுதிய parallel universe, dimensionality of time and Stephen's book பற்றி எழுதலாம். முழுமையாக எல்லோரும் வாசிக்கும் வண்ணம் எழுதி தொகுப்பதென்பது என்னால் முடியாத காரியம். அவ்வளவுக்கு மொழிசார் புலமையும் இல்லை, நேரமும் கிட்டாது. எனவே நீங்கள் கேள்விகளை எழுதினால், என்னால் இயன்றளவு சுருக்கமாக பதில் எழுத ஆர்வமாக இருக்கிறேன்.

"நேரம்" (Time) மற்றும் "காலம்" (Period) என்பன மிகவும் சிக்கலானவை. அரிஸ்டோட்டில், கலிலியோ என்பவர்களின் கைகளில் இருந்து நழுவி, நியூட்டனின் கைகளில் சிக்கிவிட்டது என அறியப்பட்ட "நேரம்" ஐன்ஸ்டைன் காலத்தில் வேறொரு பரிமாணம் எடுத்தது. அதிலும் சுவாரஸ்யமாக, "மறைக்கப்பட்ட கணித மேதை" கோடெல் அவர்கள், ஐன்ஸ்டைனின் field equations களுக்கு நேரத்தில் தங்கியிராத தீர்வுகளை தந்தார். அதாவது "நேரம்" என்று எதுவும் இல்லை. அது ஒரு மனப் பிரமையே என வாதிட்டார். அதாவது "நேரம்" என்பது மீண்டும் நழுவிச் சென்றுவிட்டது.

Stephen's புத்தகம், விவரிக்கும் விடயங்களில் தேவையானது என நீங்கள் கருதும் பகுதிகளில் விவாதங்களை தொடங்கலாம்.

இப்போது புத்தகம் கையில் இல்லை.முன்னர் வாசிச்சவற்றில் எனக்கு விளங்காது இருந்தவை .எப்படி நேரம் என்பது ஒரு பரிமாணமா இருக்கும் என்பதுவும், நேரம் என்பதைதயே சுரிக்கியும் விரிக்கவும் முடியும் என்பதுவும் , ஒரே நேரத்தில் பல உலகங்கள் இருக்கமுடியும் என்பதுவும், மற்றும் பிரபன்சத்தை சிறிங் தியரியின் மூலம் உருவகப்படுதலாம் என்பதுவும் கிரகிக்க கஸ்டமான விடயமாக இருந்தது.உங்களுக்கு விளங்கிய முறையில் ஆங்கிலம் கலந்த தமிழ் எண்டாலும் பறுவாயில்லை ஒருக்கா விளகுங்கோ.பிரியோசனமா இருக்கும்.

இதில் அடிப்படையான குவான்ரம் மெக்கனிக்ஸ் பவுதீகம் மூன்றில ஒரு இருபது வருசத்துக்கு முன்னர் படிச்சது.அப்ப விளங்கின மாதிரி இருந்தது உந்த ஸ்வாடின்ச்சர் Schuvadingers cat பூனை uncertinity principal பற்றியெல்லம் படிச்சது.பின்னர் இப்படி புத்தகங்களை வாசிச்சு பொது அறிவைப் பெருக்கிக் கொண்டாலும் இதன் பவுதீக அடிப்படைகள் இன்னும் வடிவா விளங்குதில்லை.உங்களை மாதிரி இப்பவும் படிச்சுக் கொண்டிருகிறவர் விளக்கினா விளங்கும் எண்டு நினைக்கிறன். :(

FEM, numerical analysis எல்லாம் நாபகம் வருகுது, இதில நீங்கள் என்ன செய்யிறியள்? FEM S/W பாவிச்சு stress analysis செய்யிறது தெரியும். நீங்கள் இதில எதாவது செய்யிறனியளோ?

Edited by narathar

நாரதர் !!

உங்கள் ஊக்கப்படுத்தலுக்கு மிகவும் நன்றி. இந்த சனி, ஞாயிறு கிழமைகளில் எழுத நேரம் கிடைக்கும் என நினைக்கிறேன். ஆங்கிலம் கலந்தாவது எழுத முயற்சிக்கிறேன். :)

விஞ்ஞான தத்துவங்களை அறிந்துகொள்ளும் போது அவற்றுடன் அந்த விஞ்ஞானி பற்றியும் சிறிது எழுதிவிட்டால் வாசிக்கும் நண்பர்களுக்கு அது உந்துசக்தியாக இருக்கும் என நம்புகிறேன். முயற்சிப்போம்.

தயா !!

பிரமிட்டுக்களினுள் பாதுகாக்கப்பட்ட உடலங்களில் தேன் போன்ற கிருமித் தொற்றுக்களை ஏற்படாமல் பாதுகாக்கும் பண்டங்கள் பாவிக்க பட்டிருக்கின்றன. பக்ரீரியாவின் பிரிகைத் தொழிற்பாடு இல்லாவிட்டால் உடலங்கள் பழுதாகமல் வைத்திருக்கலாம். உதாரணமாக பனிமலைகளில் புதையுண்ட ஆதிகால மனிதர்களினதும், விலங்குகளினதும் உடலங்கள் அப்படியே இருப்பதற்கான காரணமும் அதுவே. இன்னொரு உதாரணம் "ஹேக்குலேனியம்" நகர பேரழிவு (கி.மு 79 இல் எரிமலை விழுங்கிய ஒரு இத்தாலிய நகரம்) , இங்கு பனிக் கட்டிகளல்ல , ஆச்சரியமாக எரிமலை விசிறியடித்த தூசிப்படலம் நகர் முழுவதையும் பல அடி உயரத்துக்கு மூடிய படியால் கி.மு 79 இல் தயாரித்த உணவு பண்டம் கூட இன்றும் பழுதடையாமல் எடுத்திருக்கிறார்கள்.

அத்துடன், பிரமிட்டின் geometric property மற்றும் அது அலைகள் (ஒலி, மின்காந்த ) மீது எவ்வகை தாக்கங்களை செலுத்துகின்றது என நான் இன்னும் திட்ட வட்டமாக அறிந்துகொள்ளவில்லை.

தயா !!

பிரமிட்டுக்களினுள் பாதுகாக்கப்பட்ட உடலங்களில் தேன் போன்ற கிருமித் தொற்றுக்களை ஏற்படாமல் பாதுகாக்கும் பண்டங்கள் பாவிக்க பட்டிருக்கின்றன. பக்ரீரியாவின் பிரிகைத் தொழிற்பாடு இல்லாவிட்டால் உடலங்கள் பழுதாகமல் வைத்திருக்கலாம். உதாரணமாக பனிமலைகளில் புதையுண்ட ஆதிகால மனிதர்களினதும், விலங்குகளினதும் உடலங்கள் அப்படியே இருப்பதற்கான காரணமும் அதுவே. இன்னொரு உதாரணம் "ஹேக்குலேனியம்" நகர பேரழிவு (கி.மு 79 இல் எரிமலை விழுங்கிய ஒரு இத்தாலிய நகரம்) , இங்கு பனிக் கட்டிகளல்ல , ஆச்சரியமாக எரிமலை விசிறியடித்த தூசிப்படலம் நகர் முழுவதையும் பல அடி உயரத்துக்கு மூடிய படியால் கி.மு 79 இல் தயாரித்த உணவு பண்டம் கூட இன்றும் பழுதடையாமல் எடுத்திருக்கிறார்கள்.

Iceman, எனும் ஆங்கில படம் வெளி வந்தது... Ape ஏனப்படும் ஆதிகால மனிதன் இப்போ வந்தால் எனும் Caveman பற்றிய படம்.... இதை சுமாரான விஞ்ஞான விளக்கத்தோடும் தந்து இருந்தார்கள்.... தெரியாத பல உண்மைகளை அறிய முடிந்தது....

சந்தர்பம் கிடைத்தால் நீங்களும் அதன ஓருதரம் பாருங்கள்...

அத்துடன், பிரமிட்டின் geometric property மற்றும் அது அலைகள் (ஒலி, மின்காந்த ) மீது எவ்வகை தாக்கங்களை செலுத்துகின்றது என நான் இன்னும் திட்ட வட்டமாக அறிந்துகொள்ளவில்லை.

உங்களுக்கு அறிய கிடைத்தால் எங்களோடும் பகிர்ந்து கொள்ளுங்கள்.....

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.