Jump to content

ஏ.ஆர்.ரஹ்மான் இப்படித்தான் தம் இசையை உருவாக்குகிறார்: இசையமைப்பாளர் தாஜ் நூர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஏ.ஆர்.ரஹ்மான் இப்படித்தான் தம் இசையை உருவாக்குகிறார்: இசையமைப்பாளர் தாஜ் நூர்

f1820c231c741e4f12993aad151aa736.jpg

2009ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான ’ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்துக்கு ஏ.ஆர் ரஹ்மான் அவர்கள் இசையமைத்திருந்தார். ஏஆர் ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருது பெற்றுத்தந்த ‘ஜெய்ஹோ’ பாடலை அவர் கம்போஸ் செய்யவில்லை என்று இயக்குநர் ராம்கோபால் வர்மா சொல்வது, எதன் அடிப்படையில் சொல்கிறார் என்பது புரியவில்லை. பாடகர் சுக்விந்தர் சிங் அப்போது ஒரு பாடகர் மட்டும்தான். அந்தப் படத்தினுடைய கதையின் சூழல் என்ன என்பது எதுவுமே அவருக்குத் தெரியாது. படத்தினுடைய இயக்குநருக்கும் இசையமைப்பாளருக்கும்  உண்டான ஒரு கருத்துப் பரிமாற்றம் அது. அப்படி இருக்கும்போது அந்த மெட்டைப் பாடகர் சுக்விந்தர் சிங் போட வாய்ப்பே இல்லை.

‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்தில் இடம்பெற்ற ‘ஜெய்கோ’ பாடலுக்கு ஏ. ஆர். ரகுமான்தான் மெட்டு அமைத்தார் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.

பாடகர் சுக்விந்தர் சிங் ஏ.ஆர் ரஹ்மானின் இசை கூடத்திற்கு வாய்ப்புத் தேடி வந்தவர். அதன் பின்பு சென்னையில் அவர் தங்கியிருந்து ட்ராக் பாடுவதை வழக்கமாக்கிக்கொண்டார். அந்த நேரங்களில் நானும் அவரும் நல்ல நண்பர்கள். என் இருசக்கரவண்டியில் சென்னையில் சில இடங்களுக்குச் செல்வது வழக்கம். இச்சூழலில் ’சைய்யச் சைய்ய’ பாடலைப் பாட இவருடைய குரல் பொருத்தமாக இருக்கும் என்று ஏ.ஆர் ரஹ்மானும் இயக்குநர் மணிரத்னமும் முடிவெடுத்தார்கள். அவரே தமிழில் பாடினால் சிறப்பாக இருக்கும் என்று முடிவு செய்த பிறகு அவருக்குத் தமிழ் சரியாக உச்சரிக்க வரவில்லை. அந்த நேரத்தில் பாடகர் பாலக்காடு ராமுடன் இணைந்து இவரைப் பாட வைத்து, உச்சரிப்பில் ஏற்படக் கூடிய சில தவறுகளைச் சரி செய்து இவர்கள் இருவரையும் பாட வைத்து அந்தப் பாடல் வெளியானது.3a0e5653-1d90-4ca3-a7ee-1836bb952855-300

பாடகர் சுக்விந்தர் சிங் பஞ்சாபி என்பதால் கிட்டத்தட்ட அந்தப் பாடலை நாங்கள் முழுமையாகப் பதிவு செய்வதற்கு ஒரு மாத காலத்திற்கு மேல் ஆனது.
கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றி மெருகேற்றி அவரைப் பாட வைத்தோம். பாடகர் சுக்வித்தர் சிங் இங்கு ஏ. ஆர். ரகுமான் அவர்களுடைய இசைக்
கூடத்தில்தான் தன்னை ஒரு இசைக்கலைஞனாக வளர்த்துக்கொண்டார். பாடகர் சுக்விந்தர் சிங் ஒரு மிகப்பெரிய பாடகராக வளர்ந்த விதம் இதுதான்.

இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் அவர்களோடு நான் கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்கு மேல் பணி செய்துள்ளேன். அந்த அடிப்படையில் எனக்கும் அவருக்குமான உரையாடல்கள், நான் அவரிடம் பெற்ற இசை அனுபவங்கள், அவர் இசையமைக்கும் விதம், அவர் இயக்குநர்கள், பாடலாசிரியர்கள் மற்றும் பாடகர்களோடு அணுகும்முறைகள் இது சார்ந்து சில பதிவுகளை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

இதுநாள்வரை இல்லாமல், சமீபகாலமாக ஏ.ஆர். ரஹ்மான் பற்றிச் சில உண்மையற்ற கருத்துகள் சமூகத்தளங்களிலும், மக்களிடத்திலும், ஊடகங்களிலும் பரவி வருவதைப் பாக்கும்போது வருத்தமாக இருக்கிறது. உண்மையற்ற விமர்சனங்களுக்கு அவர் பொருத்தமானவர் இல்லை. ஏனென்றால் அவர் இசைத்துறையில் பல புதுமைகளைச் செய்தவர். அதனை அவருடன் பணியாற்றும் பொழுது உணர்ந்துள்ளேன். அதுமட்டுமின்றி உலக அளவில் இருக்கக்கூடிய இசைக் கருவிகள், புதுவிதமான ஒலி அமைப்புகள் மற்றும் ஓசைகளைத் தமிழ்த் திரைப்படங்களிலும், இந்தியத் திரைப்படங்களிலும் அறிமுகப்படுத்தினார்.

இசைத் துறையில் இருக்கக்கூடிய தொழில் நுட்பங்களையும் இசை மென்பொருள்களையும் பயன்படுத்தி ஒரு நவீன இசை வடிவத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்தி, மக்களுக்குப் புதிய இசையனுபவத்தைக் கொடுத்தார். இசைமென்பொருள் தயாரிக்கக் கூடிய நிறுவனமான Vienna instruments என்ற நிறுவனம் ஏ. ஆர். ரகுமான் அவர்களிடம் ஆலோசனைகள் கேட்டு ஒரு சில மென்பொருள்களை உருவாக்கினார்கள்.

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பாக Performance tool என்னும் மென்பொருள் இவருடைய கருத்திற்காகக் காத்திருந்தது. Performance tool மென்பொருள் என்னவென்றால், கணினி இசையை வரையறை செய்யப்பட்ட தொகுப்பு. இந்த மென்பொருளின் சிறப்பு என்னவென்றால் மனிதனுடைய மூளையில் எழக்கூடிய கற்பனையினை உணர்ந்து அந்தக் கற்பனையை இந்த இசை மென்பொருள் கணித்து அதற்கேற்ற மாதிரியாகத் தன்னை மாற்றி இசைக் கலைஞனின் மூளையில் ஏற்படும் கற்பனைக்கு ஈடு கொடுக்கக்கூடிய ஒரு மென்பொருள். ஓர் இசையமைப்பாளர் இசை குறியீடுகளை எப்படி இசை வடிவமாக உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறார் என்பதினை இந்த இசை மென்பொருள் உள்வாங்கித் தரக்கூடிய அளவிற்கு மேன்மைப்படுத்தப்பட்ட மென்பொருள். இதில் ஏ.ஆர். ரகுமான் அவர்களுடைய ஆலோசனை மற்றும் கருத்து என்னவென்று கேட்க அந்த மென்பொருள் நிறுவனம் காத்திருந்தது.

மிகக் குறிப்பாக அயல்நாடுகளில் இருக்கக்கூடிய இயக்குநர்கள், இசைக் கலைஞர்கள் மற்றும் பாடகர்கள் இவருடன் இணைந்து பணிபுரியக் காத்திருந்தார்கள். இதற்கெல்லாம் காரணம் அவருடைய வித்தியாசமான கற்பனை, அயராத உழைப்பு, அவர் இசையை அணுகுகியமுறை, அவர் இசையைப் புரிந்து வைத்திருக்கக்கூடிய தன்மை இவையெல்லாம்தான் காரணம் என்று எண்ணுகிறேன்.

கணினி இசை வளர்ச்சி அடைந்துகொண்டிருந்த காலகட்டத்தில்தான் நான் அவருடன் பணி செய்யத் தொடங்குகிறேன். என்னை மென்பொருள் ஒலிநுட்பத்தைக் கற்றுக்கொள்ளச் செய்தார். அவரே கற்பித்தது மட்டுமின்றி மற்ற இசையமைப்பாளர்களிடம் கணினி இசையையும் மென்பொருள் தொடர்பான தகவல்களையும், அவை சம்பந்தமான சந்தேகங்களைத் தீர்க்க, கற்றுத் தர என்னை அனுமதித்தார் (அவரிடம் நான் சம்பளம் வாங்குபவனாக இருந்தும்) அதன் வாயிலாக எனக்கு மற்ற இசையமைப்பாளர்களுடன் நல்ல நட்பு ஏற்பட்டது. இச்செயல் அவரின் பெருந்தன்மைக்கு ஒரு சான்று.

ஏ.ஆர். ரகுமான் அவர்கள் அறம் சார்ந்த மனிதர் என்பது பொதுவாக அனைவரும் அறிந்ததே. மேடைகளில் அவர் உரையாற்றும் பொழுது மிக எளிமையாகவும் பண்புடனும் நடந்து கொள்வதை நாம் பார்த்திருக்கிறோம் குறிப்பாக மேடைகளிலும் “எல்லாப் புகழும் இறைவனுக்கே” என்று தன்னடக்கத்துடன் சொல்லக்கூடிய ஆகச் சிறந்த பண்பாளர். அவர் தேர்ந்தெடுத்த மார்கத்தில் 100 சதவிகிதம் அதன் வழிமுறைகளைச் சரியாக கடைப்பிடிக்கக் கூடிய மாண்பினைக் கொண்டவர். இவ்வாறான சிறந்த பண்புகளை உடைய ஒரு மனிதரைப் பற்றி, உண்மைக்கு புறம்பான தகவல்களுக்குக் காலம் பதில் கூறட்டும்

a083a98f-64a7-4a7d-905d-7dbb531e95a5-300

 

ஏ. ஆர். ரஹ்மான் சமகால சமூக நிகழ்வுகள், பிரச்சனைகள், இளைய தலைமுறைகள் எப்படி இந்த நவீன உலகத்திற்கு ஏற்ப தங்களது எதிர்காலத்தை வடிவமைத்துக் கொள்ள வேண்டும் என்பது போன்ற கருத்துகளை விழிப்பற்ற சிலர் விழிப்படையும் வகையில் இலை மறை காயாகப் பதிவிட்டு வந்தார். தற்பொழுது சற்று வெளிப்படையாகப் பல நேர்காணங்களில் பதிவு செய்வதுதான் இச்சர்ச்சைக்குக் காரணமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் ‘ரங்கீலா’, ’Daud ‘ஆகிய இரண்டு படங்களுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரங்கீலா படம் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது. அந்தப் படத்தின் வெற்றிக்கான மிக முக்கியமான காரணம் என்னவென்றால் ஏ.ஆர். ரஹ்மானின் பாடலும், பின்னணி இசையும். இதனை யாராலும் மறுக்க முடியாது. அந்தப் படத்தைத் திரும்பவும் ஒருமுறை பார்த்தீர்கள் என்றால் புரியும்

‘ரங்கீலா’ படத்தில் இடம்பெற்ற பின்னணி இசை, பாடல்கள் அவை வெளிவந்த காலத்திலேயே இந்தித் திரையுலகில் பெரும் பேசுபொருளாக இருந்தன. காரணம் அந்த இசையினுடைய தரம். அனைவரையும் வியப்புடனும் பிரம்மிப்புடனும் ஆச்சரியத்துடனும் இரசிக்க வைத்தது.

இன்னும் சொல்லப்போனால் நான் ஒருமுறை மும்பையில் காரில் பயணிக்கும்பொழுது என்னிடம் கார் ஓட்டுநர் இயல்பாக ’’நீங்கள் யார் எங்கிருந்து வருகிறீர்கள்?’’ என்று என்னிடம் கேட்டார். “சென்னையில் இருந்து வருகிறேன். ஏ. ஆர். ரஹ்மானிடம் உதவியாளராகப் பணியாற்றுகிறேன்’’ என்றேன். உடனே ஆச்சரியத்துடன் என்னை ஒரு கணம் திரும்பிப் பார்த்து வியந்தார். அந்த வியப்புடனே என்னிடம் கேட்டார். “ஏ.ஆர். ரகுமான் சார் எப்படி இருப்பார், எங்கு இருக்கிறார், அவரைப் பார்க்க முடியுமா?” என்றெல்லாம் உற்சாகத்துடன் கேட்டார். “ரஹ்மான் சாரோடு இருக்கும் ஒருத்தர் என் வண்டியில் வர்றாருங்கிறது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு’’ என்றார் உணர்ச்சி மேலிட. ரங்கீலா படம் வந்த புதிதில் எல்லாரும் என்னிடம் சொன்ன தகவலை அந்த ஓட்டுநரும் என்னிடம் சொன்னார். “இவ்வளவு நாளா நாங்கள் சினிமா பார்த்தி ருக்கிறோம், பாடல்கள் கேட்டு ரசித்திருக்கிறோம், ஆனால் இந்தப் படத்தில் பாடல்கள், பின்னணி இசை, திடீரென்று ஓர் ஆச்சரியத்தை, ஒரு வியப்பை, புதுவித இசையை அனுபவிக்க வைத்தது. அது மட்டும் இல்லாமல் அந்தத் திரையரங்கில் இருக்கக்கூடிய எல்லா ஒலிபெருக்கிகளும் (ஸ்பீக்கரும்) வேலை செஞ்சது மாதிரி இருந்தது. இங்க இருந்து ஒலி வருது, அந்தப் பக்கம் இருந்து ஒரு சத்தம் வருது, அந்தச்சத்தம் அப்படியே இந்தப் பக்கம் மாறுது. தியேட்டரில் இதுநாள் வரையிலும் இப்படியான ஒரு இசையை நாங்கள் உணர்ந்ததே இல்லை. இந்த ரங்கீலா படத்துடைய இசைதான் புதுவித உணர்வை ஊட்டியது. நான் ஒரு நான்கு ஐந்து முறைக்கு மேல் அந்தப் படத்தைப் போய் பார்த்தேன். என் நண்பர்களை அழைத்துசென்று போய்ப் பார்த்தேன், என் குடும்பத்தில் உள்ளவர்களை அழைத்துச் சென்று போய்ப் பார்த்தேன். அதை ஒரு உணர்வுபூர்வமா அனுபவித்து நான் வியந்து பார்த்த ஒரு படம். ’’ என்று சொல்லி அந்த ஓட்டுநர் என்னை மெய் சிலிர்க்க வைத்தார்.

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த முதல் படமே மாபெரும் வெற்றி பெற்ற படம். அதற்குக் காரணம் அவருடைய இசைதான். மக்கள் தொடர்ச்சியாகக் கேட்டுக்கொண்டிருந்த இசை வடிவத்தில் இருந்து சில மாற்றங்கள் செய்து அவருக்கென்று ஒரு தனித்த பானியை உருவாக்கிப் புது இசை வடிவத்தை உருவாக்கிக் கொடுத்ததுதான் காரணம். அதைத்தொடர்ந்து தமிழ் திரையுலக இரசிகர்கள் மட்டும் இல்லாமல் இந்திய மற்றும் உலகளாவிய ரசிகர்களையும் கவர்ந்து, ஆஸ்கார் விருது பெறக்கூடிய அளவிற்கு தன்னை உயர்த்தி ஆஸ்கார் விருதும் பெற்றார்.

குறிப்பாக ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படம் மட்டும்தான் ஆஸ்கார் விருதுக்கு தேர்வாகி விருது பெற்றது என சிலர் நினைக்கக்கூடும். அவர் இசையமைத்த பல படங்கள் ஆஸ்கர் விருது பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது.‘கோல்டன் குளோபல் அவார்டு’ போன்ற விருதுகள் கிடைத்திருக்கின்றன.

வெளி நாட்டில் இருக்கக்கூடிய திரைத்துறை சார்ந்தவர்களும், மக்களும் அவருடைய இசையின் தரத்தை புரிந்து இருந்தனர். அது மட்டுமின்றி இவர் இசையமைத்த படம் எப்போது வெளியாகும் என்ற ஆவலுடன் காத்திருந்திருக்கிறார்கள். உலக அளவில் இருக்கக்கூடிய இசைக் கலைஞர்களும் இவருடைய இசை பற்றி மிக உயர்வான மதிப்பீடுகளை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் .

பாம்பே ட்ரீம்ஸ் என்கின்ற மிகப்பெரிய நாடகம் ஒரு “லைவ் டிராமா” Andrew Lloyd Webber மூலமாக ஏ. ஆர். ரஹ்மானுக்கு சர்வதேச அளவிலான இசையமைக்கின்ற வாய்ப்பு கிடைத்தது. ஏ. ஆர். ரகுமான் அவர்கள் தான் இந்தியாவிலேயே முதல் முதல்லில் சர்வதேச அளவில் இசையமைக்க கூடிய வாய்ப்பைப் பெற்ற ஒருவர் என்று எண்ணுகிறேன். அந்தச் சமயத்தில்தான் ராம் கோபால் வர்மா அவர்கள் சொல்லக்கூடிய நிகழ்வுகள் நடந்தன.

மும்பையில் ஏ.ஆர் ரகுமான் அவர்களுடைய இசைப் பதிவு மிகப் பரபரப்பாக நிகழ்ந்துகொண்டிருந்த காலம் அது. இயக்குநர் சுபாஷ் காய் மும்பையில் ஒரு மிகப்பெரிய இயக்குநர்,  சுபாஷ்காய், ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோரோடு நானும் காரில் செல்லும்போது சுபாஷ்காயைப் பார்த்தவுடன் சாலைப் போக்குவரத்து காவலர்கள், சாலையின் போக்குவரத்து நெரிசலைச் சரி செய்து மரியாதை உடன் வழியனுப்பி வைப்பதினை நேரில் பார்த்து இருக்கிறேன்.

இயக்குநர் சுபாஷ் காய் சிறந்த பண்பாளர், நாங்கள் போய்த் தங்கும்போது எங்களைச் சிறப்பாகக் கவனிப்பார். நாங்கள் இரண்டு மூன்று நாள் தங்கி அங்கே பாடல்பதிவுகள் செய்வோம், அப்படிப்பட்ட ஒரு பிரம்மாண்ட இயக்குநர் சென்னைக்கு வந்து ஏ.ஆர். ரஹ்மானின் ஒலிப்பதிவுக்கூடத்திற்கு வந்து காத்திருந்திருக்கிறார். பெரும்பான்மையாக இசைப்பதிவு இரவில்தான் நடைபெறும்.

ஒருமுறை மேல் தளத்தில் இருக்கும் இசைச் கூடத்தில் இசைப் பணி நடந்துகொண்டு இருந்தது. அப்பொழுது மணி சுமார் அதிகாலை மூன்று மணி இருக்கும். அப்போது இயக்குநர் சுபாஷ் காய் ரொம்பசோர்வாகிக் கீழே இருக்கும் இசைச் கூடத்தில் திவான் ஒன்றில் படுத்துவிட்டார். இதை நாங்கள் கவனிக்கவில்லை,. மும்பையில் இருந்து வந்த ஒரு பத்திரிக்கையாளர் இவ்வளவு பெரிய இயக்குநரை ஏ.ஆர். ரஹ்மான் இசைச் கூடத்தில் படுக்கவைத்துவிட்டார்’ என இச்செய்தியை மும்பை பத்திரிக்கையில் பெரிதாக்கிவிட்டார். இயக்குநர் சுபாஷ் காய் இதனை பெரிதாகப் பொருட்படுத்தாமல் இயல்பாக எடுத்துக் கொண்டார். காரணம் வழக்கத்திற்கு மாறாக இரவில் பாடல் பதிவு நடைபெறுவதால் சில சமயங்களில் அசௌகரியம் ஏற்படும், இறுதியில் பாடல் நல்ல தரத்துடன் கையில் கிடைக்கும் என்கின்ற நம்பிக்கையில் இயக்குநர்கள் இதனைப் பெரிதாகப் பொருட்படுத்த மாட்டார்கள்.

ஒரே நாளில் சென்னையில் இருந்து மும்பைக்கு இரண்டு முறைக்கு மேல் பயணம் செய்ததை இன்று வரை மறக்க முடியாது அவ்வளவு பிஸியாக வேலையை நடந்து கொண்டிருந்ததை எண்ணிப் பார்க்கும்போது பிரமிப்பாக உள்ளது

4-1-300x260.jpg

’முதல்வன்’ படத்தோட படப்பிடிப்பு தென்காசியில் நடந்தது, காலையில் தொழுகையை முடித்துவிட்டு, அங்கு “சைவ வெள்ளாளர்” குடிசை போட்ட சிறு ஹோட்டல் இருந்தது அந்தக் கடையில் நானும் ரஹ்மான் சாரும்,சாமித் துரையும் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு பையன் தூக்குச் சட்டியில் தேநீர் வாங்குவதற்காக அங்கு வந்தான். ஏ.ஆர். ரஹ்மானை பார்த்துவிட்டான். உணவு முடித்து நாங்கள் எழுந்தோம். அந்தக் கடைக்காரருக்கு ஏ.ஆர். ரஹ்மானைத் தெரியவில்லை “தம்பி சாப்பிட்ட இலையை எடுத்து குப்பையில் போடுங்கள்’’ என்றார். எதார்த்தமாக வாடிக்கையாளர்களிடம் சொல்வதுபோல் சொன்னதும் நாங்கள் இலையை எடுத்துக் குப்பையில் போட்டுவிட்டு கை கழுவிட்டு கடைக்கு வெளியே வந்து பார்த்தால் அந்தப் பையன் ஊரையே கூட்டிக்கொண்டு வந்து கடை வாசலில் நிற்க வைத்திருந்தான். ரகுமான் சார் எந்த இடத்திலும் தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்டவர் அல்ல.

நாங்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சென்னை சிட்டி சென்டர் எதிரில் உள்ள தஸ்தகீர்ஷாப் தர்காவிற்கு ஜும்மா தொழுகைக்காகப் போவது வழக்கமாக இருந்தது. சீக்கிரம் போய்விட்டால் அந்த மசூதிக்குள் இருந்து தொழுகைக்கான இடம் கிடைக்கும், ஒரு சில நேரம் தாமதமாக போனால் வெளிப்புறம் ஒரு ஓரமாக இடம் கிடைத்து தொழுகை செய்கின்ற நிலை ஏற்பட்டது அந்த நேரத்தில் இரண்டு சிறுவர்கள் எங்கள் இருவரையும் பார்த்து அவர்களுக்குள் பேசிச் சிரித்துக் கொண்டார்கள். அதில் ஒரு சிறுவன் என்னிடம் வந்து “அண்ணே இவரைப் போய் ஏ. ஆர்.ரஹ்மான்னு சொல்றாணே.” அப்படின்னு சொல்லிவிட்டு அந்தச் சிறுவன் சிரித்தான். இதனை ஏ.ஆர். ரஹ்மானும் கவனித்துக் கீழே குனிந்துகொண்டார். இப்படி மிக எளிமையான வாழ்க்கையைக் கொண்டவர்தான் ஏ.ஆர்.ரகுமான்.

திரைத்துறையில் முதலில் ஓர் இயக்குநர் ஓர் இசையமைப்பாளரிடம் வந்து கதை மற்றும் பாடலுக்கான சூழலைச் சொல்வார். அந்தச் சூழலுக்கு ஏற்ப பாடல்
இந்த மாதிரியாக  வேண்டும் , அந்த மாதிரி இருக்க வேண்டும் என்று இருவரும் கலந்துரையாடிக் கொள்வார்கள். சில நேரங்களில் முன்பு வெளியான பாடல்களை எடுத்துக்காட்டி இந்த மாதிரியாக வேண்டுமென்று கூறுவது வழக்கம். அதனை இசையமைப்பாளர் உள்வாங்கித் தன்னுடைய கற்பனையை இசையின் வடிவத்தில் மெட்டாக வடிவமைத்து அதனை இயக்குநரிடம் வாசித்து அல்லது பாடிக் காண்பிப்பார். அந்த மெட்டு அந்த இயக்குநருக்குப் பிடிக்கும் பட்சத்தில் பாடல் ஆசிரியரிடம் கொடுத்து அந்த மெட்டுக்கு ஏற்பகதைச் சூழலுக்குத் தகுந்தவாறு பாடலை எழுதி வாங்கிப் பாடகர்களை வைத்துப் பாடி பாடல் பதிவு செய்வார்கள். இந்த முறை பொதுவாக எல்லா மொழிகளிலும் நடக்கக்கூடிய ஒன்றுதான்.

ஒரு மெட்டு நன்றாக இருக்கிறது என்று முடிவு செய்த பிறகுதான் அந்த இசையமைப்பாளர் தன் கற்பனைக் கருவில் இருந்து உருவான அந்த இசைக்கு ஒரு வடிவத்தை அளித்து அதிலிருந்து இசைக் கலைஞர்களிடம் அதைக் கொடுத்து இந்தப் பாடலுக்கு இந்த மாதிரியான இசைக்கருவிகளின் ஒலியைச் சேர்க்கலாம் என்றும், ஒரு பாடகரிடம் அளித்து  ’’இதை நீங்கள் இப்படிப் பாடுங்கள், இந்த இடத்தில் ஒரு கமகம் கொடுங்கள், இந்த இடத்தில் ஒரு ‘ப்ரிக்கா’ கொடுங்கள், இந்த இடத்தில் பாடல் ஹை பீச் போகவேண்டும், இங்க கொஞ்சம் ‘லோ பிச்’ வரவேண்டும்’ என்றெல்லாம் அந்த இசையமைப்பாளர்தான் சொல்வார். பாட வரும் பாடகர்களும் வாசிக்க வரும் இசைக் கலைஞர்களும் அவர்களுடைய சில சிந்தனைகளை இசையமைப்பாளரிடம் தெரிவிப்பார்கள் அப்பொழுது அந்தக் கற்பனை அந்தப் பாடலுக்கு மெருகேட்டக்கூடிய வகையில் இருந்தால் சில நேரத்தில் அதைப் பயன்படுத்துவார்.

இப்படி ஒரு பாடலுக்கான எல்லாச் சிந்தனைகளும் இசையமைப்பாளரின் எண்ணத்தில்தான் உருவாகும். ஒரு பாடலை உருவாக்கும்போது ஏ.ஆர். ரஹ்மான் ‘ரிதம் (Drums) சவுண்ட்’ எப்படி இருக்க வேண்டும் ‘இன்ஸ்ட்ருமென்ட் சவுண்ட்’ எப்படி இருக்க வேண்டும், ஒவ்வொரு கருவிகளின் ஒலி அளவு எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை மிகத் துல்லியமாகக் கணிப்பார். ஒரு பாடலை மிக வித்தியாசமாக காண்பிப்பது அதன் ‘ரிதம்’ பகுதிதான். இதை .ஏ ஆர். ரஹ்மானே ப்ரோக்ராம் செய்வார். அதற்குப் பிறகு ‘லைவ் சவுண்ட்’, ‘அடிஷனல் ப்ரோக்ராமிங்’ இது எல்லாம் கை தேர்ந்த இசை வல்லுநர்களால் மெருகேற்றப்படும், அதற்கான சம்பளமாகப் பெருந்தொகை அவர்களுக்கு அளிக்கப்படும்.

ஏ.ஆர். ரஹ்மான் ‘கோரஸ்’ எடுக்கிற விதமே ஒரு வித்தியாசமாக, புது அனுபவமாக இருக்கும். ‘கோரஸ் பார்ட்ஸ்’ செய்வதற்கு மிகவும் அனுபவம் வாய்ந்த இசை வல்லுநர்கள்மும்பையில் இருந்து வந்து ‘வாய்ஸ் லேயர்’ செய்வார்கள். ‘பைனல் அவுட்புட்’ கேட்கும் பொழுது மிகவும் வித்தியாசமாக புதுமையாக இருக்கும்.

ஒரு பாடலின் வெற்றிக்கு இன்னொரு முக்கியமான நபர் யார் என்றால் அதன் பாடல் ஆசிரியர், இசையமைப்பாளர் கொடுக்கின்ற மெட்டை உள்வாங்கி இயக்குநர் சொல்கின்ற சூழலை உள்வாங்கி அதற்கு ஏற்ப வார்த்தைகளை எழுதித் தருகிற ஆற்றல் பெற்றவர்கள் பாடல் ஆசிரியர்கள். ஒரு பாடலின் ராயல்டி என்பது ஐ. பி. ஆர். எஸ். நிறுவனம் மூலமாக இசையமைப்பாளருக்கும் பாடல்ஆசிரியருக்கும் அதன் ராயல்டி வழங்கப்பட்டு வருகிறது. பாடகர்களுக்கு கூட காப்புரிமைத் தொகை கிடையாது. காரணம் பாடலை உருவாக்கியவர்கள் இசையமைப்பாளரும் பாடலாசிரியர் மட்டுமே என்ற அடிப்படையில் பாடகர்களுக்கு இந்த ராயல்டி இல்லை என்பது வருத்தமான விஷயமே.

ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுடைய பாடல் இசையமைப்பு (Composing) பற்றி முதல்முறையாகப் பகிர்கிறேன் அவர் இசையமைத்து வெற்றி பெற்ற ’சூப்பர் டூப்பர் ஹிட்ஸ்’ பாடல்கள் பல சென்னை ‘ஈ சி ஆர் நெமிலியில் உள்ள ஏ ஆர். ரஹ்மான் அவர் வீட்டில் கம்போஸ் செய்யப்பட்டவை.. முதலில் குமார் என்ற உதவியாளர் மகாபலிபுரம் சென்று மீன் மற்றும் கறி வாங்கி எங்கள் அனைவருக்கும் சமைத்து வைத்திருப்பார்.

சாமிதுரை அதன் பின்பு கிளம்புவார். அவர் இசையமைக்க தேவையான இசைக் கருவிகள் மற்றும் கணினி போன்றவற்றையெல்லாம் எடுத்துச் சென்று அங்கு ஒரு கம்போசிங்கிற்குத் தேவையான இசைக்கூடமாக எல்லாப் பொருட்களையும் ஆயத்தப்படுத்துவார். அதன் பிறகு ஏ. ஆர். ரகுமான் அவர்களும் சிவக்குமார், நோயல் ஜேம்ஸ் மற்றும் நானும் செல்வோம்.

இயக்குநர் சொன்ன சூழலுக்கு ஏற்ப நான்கு நிமிடப் பாடலுக்குக் கிட்டத்தட்ட 20 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை இருக்கும் ட்யூனைக் கம்போஸ் செய்து
ஸ்டூடியோவிற்கு வந்தவுடன் அதை எடிட் செய்து, இந்த நீளமான டியூனில் எது பல்லவி, எது சரணம் என்று முடிவு எடுத்து, இயக்குநர்களிடம் காண்பிப்போம். இப்படிக் கம்போஸ் செய்யும் முறை நான் அவரிடம் இருந்த போது நடைபெற்றது. இதில் சில சுவாரசியமான நிகழ்வுகள் உண்டு.  அதாவது Track 1 மணிரத்னம் சாருக்கு, Track 3 சங்கர் சாருக்கு, Track 6 கதிர்சாருக்கு என்று ஏ.ஆர் ரஹ்மான் ஒரு துண்டுச் சீட்டில் எழுதிக் கொடுத்துவிடுவார். அதை நாங்கள் சரியாக அந்த இயக்குநரிடம் ஒரு ஹெட்
போனில் Play செய்து காண்பிப்போம்

designer-prashanth-arr-art-02-a-300x177.

உதாரணத்திற்கு இயக்குநர் பிரவீன் காந்திக்கு Track 5 போட்டுக் காட்டுவோம், அவர் அந்த மெட்டைக் கேட்டுக்கொண்டே இருப்பார். அப்படியே அவர்கள் அடுத்த மெட்டையும் சேர்த்துக் கேட்க ஆரம்பித்து விடுவார். எட்டாவது மெட்டைக் கேட்டுவிட்டு ‘இது யாருக்குப் போட்டு இருக்காங்க?’ என்று எங்களிடம் கேட்பார். அது வேறு ஒரு இயக்குநருக்குப் போட்ட மெட்டாக இருக்கும். ‘ரொம்ப நல்லா இருக்கு இதை எனக்குக் கொடுங்க ரகுமான் ’ என்ற மாதிரி கேட்கக்கூடிய அந்த அனுபவங்களும் உண்டு. அந்த மெட்டு முடிவானதும் பிறகு பாடலாசிரியரிடம் போகும். பாடலாசிரியர் பாடல் வரிகள் கொடுத்தவுடன் பாடகருடன் பாடல் பதிவாகும்.

இந்த மாதிரியான அனுபவங்களை எல்லாம் நான் ஏ,ஆர் ரஹ்மானிடமிருந்து பெற்றதின் அடிப்படையில்தான் ‘வம்சம்’ என்கின்ற படத்துக்கு இசையமைத்தேன். இயக்குநர் பாண்டியராஜ் அவர்கள் அந்த கிராமத்துக்கே என்ன அழைத்துச் சென்று அங்கு இருக்கக்கூடிய இசைக்கருவிகள், அங்கு உள்ள கலாச்சார முறைகள், அங்கு உள்ள மக்களின் வாழ்வியல் முறைகளை அறியும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தார்.  நான் அங்கேயே தங்கி அந்த கிராமத்து மக்கள் பயன்படுத்தக்கூடிய இசைக்
கருவிகளில் இருக்கக்கூடிய இசையைப் பதிவு செய்து எடுத்து வந்து இசையமைத்தேன். ‘வம்சம்’ படத்தில் இடம் பெற்ற அனைத்துப் பாடல்களும் எனக்கு நல்ல வரவேற்பை ஏற்படுத்தித் தந்தன. அதற்குக் காரணம் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட பாடங்கள்தான். அவையே இந்த அளவிற்கு ஒரு இசையமைப்பாளராக என்னைமாற்றி உங்கள் முன் கொண்டு வரச் செய்தன.

ஆர்.பாலகிருஷ்ணன் IAS அவர்களின் “நாட்டுக்கு குரல்” என்ற Album கிராமிய பாணியில் “திருக்குறளுக்கு” இசையமைத்த அனுபவமும், ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்காக கவிஞர் பழநி பாரதியின் வரிகளில் Official Song கிற்கு இசையமைத்ததும் சமூகம், இலக்கியம் சார்ந்த நிகழ்வுகளில் அதற்கான என் உணர்வை இசை வடிவமாக பதிவு செய்ததும், பெரிய நிறுவனங்களின் 200க்கும் மேற்பட்ட AD ஜிங்கிள்ஸ் இசை அமைத்தது, “தி ஹிந்து தமிழ்” பத்திரிக்கையில் “தரணி ஆளும் கணினி இசை” என்ற நெடுந்தொடரை எழுதி அதை நூல்ஆகவெளியிட்டதும் மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட 20 படங்களுக்கு மேல் இசையமைத்து உள்ளேன் அதில் குறிப்பாக வம்சம், ஸ்ட்ராபெரி, கதம் கதம், இது கதை அல்ல நிஜம், எத்தன், வட்டகரா, ஞானக்கிறுக்கன் போன்ற படங்கள் இசையமைப்பாளராக நல்ல பெயரைக் கொடுத்தன. சில படங்கள் வெற்றி அடையவில்லை, வெளிவர இருக்கும் பயாஸ்கோப், TheBed,போன்ற படங்களை எதிர்பார்த்து இருக்கின்றேன் மேலும் புதிய வித்தியாசமான கதைக்களம் இருந்தால் இசையமைக்கக் காத்திருக்கின்றேன்.

எப்போதும் என் இசைக்கலையில் நிறைந்திருந்து வழிநடத்தும் ஆசிரியராக எனக்கு ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களே இருக்கிறார். அவர் மீது அவதூறு செய்பவர்கள் ஒரு மேதையின் ஒளியைக் காண இயலாத இருட்டில் நின்றுகொண்டிருக்கிறார்கள். துவேஷத்தால் மகத்தான கலைஞர்களை ஒருபோதும் அழிக்க இயலாது.

 

https://uyirmmai.com/article/uyirmmai-magazine-may-2024-taj-noor-aticle-01/

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகச்சிறப்பான பதிவு.........!

பகிர்வுக்கு நன்றி கிருபன்........!  👍

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.