Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
"மாயா"
 
 
செப்டம்பர் 22, 1995 , என்னால் மறக்க முடியாத ஒருநாளாக இன்னும் என் மனதை வருத்திக்கொண்டு இருக்கிறது. அன்று தான் என் அன்பு சிநேகிதி இறந்த தினம். அவர் சாதாரணமாக இறக்கவில்லை, அந்த கொடுமையை நினைத்தால் எவருமே கதிகலங்குவார்கள். அவளும் அவளின் மாணவிகளும் புத்தரின் தர்ம போதனைக்கும் உலக நீதிக்கும் எதிராக துண்டு துண்டாக உடல்கள் சிதறி நாகர்கோவில் மகாவித்தியாலத்தில் பிற்பகல் 12.50 மணியளவில் விமானப் படையினரின் குண்டுத் தாக்குதலில் 21 - 26 மாணவர்கள் உட்பட கொல்லப் பட்ட தினம் ஆகும். அது தான் நான் இன்று, இந்த கார்த்திகை தினத்தில் நேரத்துடன் துயிலில் இருந்து எழும்பி யன்னல் வழியாக ஆகாயத்தை வெறுத்து பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.
 
அரசியல், யுத்தம், சமதானம் என்பவற்றைப் பற்றிப் புத்தர் தெளிவான கருத்துடையவராயிருந்தார். அஹிம்சையும் சமாதானமுமே பௌத்தம் உலகுக்கு விடுக்கும் செய்தி. இது எல்லாராலும் நன்கு அறியப்பட்டதொரு விஷயம். எந்தவிதமான பலாத்காரத்தையும் அது ஏற்றுக்கொள்வதில்லை. கொல்லாமையே அதன் மூலாதாரமான கொள்கை. 'நீதியான யுத்தம்' என்று சொல்லக் கூடியது ஒன்றுமில்லை. இது ஒரு போலிப் பெயர். துவேஷம், கொடுமை, இம்சை, கொலை என்பவை நேர்மையானவையெனக் காட்டும் நோக்கமாக ஆக்கப்பட்டதொரு அர்த்தமற்ற வார்த்தை.
 
பௌத்த மதத்தின்படி 'நீதியான யுத்தம்' என்று ஒன்றுமில்லை. 'இது நீதி, இது அநீதி' என்று தீர்மானிப்பது யார்? நாங்கள் துவங்கும் யுத்தம் எப்பொழுதும் நீதியானது. மற்றவர்கள் துவங்கும் யுத்தம் அநீதியானது. பௌத்தம் இந்தக் கொள்கையை ஏற்றுக் கொள்வதில்லை.
 
ரோஹினி ஆற்று நீர்ப் பிரச்சினை சம்பந்தமாகச் சாக்கியரும், கோலியரும் பிணங்கிக் கொண்டு சண்டை செய்ய முற்பட்டபோது பகவான் யுத்தகளத்துக்குப் போய் பிணக்கைத் தீர்த்துச் சண்டையை நிறுத்தினார். அஹிம்சையை அவர் போதித்தது மாத்திரமன்றி, சமாதானத்தை நிலை நாட்டக் காரிய பூர்வமான நடவடிக்கையை எடுத்தார். பகவானுடைய அறிவுரையைக் கேட்டு அஜாதசத்து என்ற மன்னன் வஜ்ஜிராச்சியத்தோடு உண்டான சண்டையை நிறுத்தினான்.
 
நான் சைவ மதத்தவன் என்றாலும் புத்த பெருமானை நேசிக்கிறேன் அவரின் இந்த கொள்கைக்காக! ஆனால் இன்று அவரின் புதல்வர்கள் என்று கூறும் பலர், இதை பின்பற்றுவதாக எனக்குத் தெரியவில்லை. அது தான் அந்த குண்டுகள் பொழிந்த ஆகாயத்தை பார்த்தபடி என் சினேகிதியை இந்த கார்த்திகை நாளில் நினைவு கூறுகிறேன்!
 
என் சினேகிதியை தற்செயலாக தற்காலிக இடமாற்றத்தை அடுத்து வேலையை பாரம் எடுக்க பருத்தித்துறைக்கு சென்ற பொழுது, பருத்தித்துறை பேரூந்து நிலையத்தில் சந்தித்தேன். அவர் ஒரு இளம் ஆரம்ப பள்ளி ஆசிரியை. அவர் தான் என் புது அலுவலகத்துக்கான பாதைக்கு வழி காட்டியதுடன், தன் வீடும் அதற்கு அருகில் என்று, கூடவே கதைத்து கொண்டும் வந்தார். ஒரு சில நிமிடங்களில் பரிமாறி கொண்ட கவர்ச்சிகரமான அப்பாவித்தனமான பார்வைகள் அவளின் குறும்புத்தனம் மிக்க இனிய குரல்கள், பெண்மையின் வளைவு நெளிவுகளை வெளிப்படுத்தும் அவளின் அழகிய கோலமும் குனிந்த நடையும் வாரம் நகர்ந்தும் என்னால் மறக்க முடியவில்லை. அவளின் பெயர் மாயாதேவி , நாகர்கோவில் மகாவித்தியால ஆசிரியை, இவ்வளவும் தான் எனக்குத் தெரியும். ஒரு சில நிமிடங்கள் தானே அவளுடன் பழக்கம். அவளை முழுமையாக அறிய அன்று ஆவல் இருந்தாலும், எடுத்தவுடன் அதுகளை கேட்டு குழப்பக்கூடாது என்று பேசாமல் இருந்துவிட்டேன்.
 
முதிர்ச்சியற்ற காதல் இப்படிச் சொல்லும்: `நான் உன்னைக் காதலிக்கிறேன். ஏனென்றால் நீ எனக்கு வேண்டும்.’ முதிர்ச்சியடைந்த காதல் இப்படிச் சொல்லும்: `எனக்கு நீ வேண்டும். ஏனென்றால், நான் உன்னைக் காதலிக்கிறேன்.’ ‘ - இதைச் சொன்னவர் அமெரிக்க சமூக உளவியலாளர் எரிக் ஃப்ரோம் (Erich Fromm). காதலுக்குத் தேவையான அடிப்படையான மனப்பக்குவம் இதுதான். அப்படித்தான் நானும் இருந்தேன்.
 
அவள் விண்ணில் இருந்து வந்த தேவதையின் உடல் எடுத்து வந்தது போல் இருந்தாள். அவளை சுற்றி ஒரு பிரகாச சூழ்நிலை நிலவிக்கொண்டு இருப்பதாய் அன்று அவதானித்தேன். அந்த அழகு எப்படி வர்ணிப்பது என்று எனக்கு தெரியவில்லை. அவளின் படைப்பில் வெறுக்கிற மாதிரி ஒரு அம்சம் கூட இல்லை. நான் சும்மா சொல்லவில்லை. அவள் மலர்ந்துகொண்டு இருக்கும் ஒரு பன்னீர் மலர்! 'பன்னீர் மலர் சொரியும் மேகங்களே எங்கள் பரந்தாமன் மெய் அழகை பாடுங்களே!' என்று ஒரு பாடல் கேட்ட ஞாபகம். உண்மையில் 'பன்னீர் மலர் சொரியும் மேகங்களே என் நண்பியின் மெய் அழகை பாடுங்களே!' என்று தான் என் உள்ளம் அசை போடுகிறது!. எப்படியும் அவளை சந்திக்கவேண்டும் என்று அன்று ஒரு நாள், அவள் பாடசாலை முடிய வரும் பேருந்துக்காக, நேரத்துடன் வேலையில் இருந்து புறப்பட்டு காத்திருந்தேன்.
 
'இளந்தளிரைப் போன்று மென்மையாகவும் தாமரைக்கொடியைப் போன்ற மெதுமெதுவென்று இருக்கும் கரங்கள் என்னைத் தழுவவேண்டும். அவளின் வசீகரமான புன்முறுவல் என் மார்பில் சாய்ந்து கொட்டிடவேண்டும். அப்பொழுது உணர்ச்சிக் கொந்தளிப்புக்கள் இன்பத்தை பொழியவேண்டும்' இப்படி என் மனம் மகிழ்ந்து கொண்டு, நான் என்னையே மறந்து கனவில் மிதந்த அந்த தருவாயில், 'ஹாய்' என்ற அந்த அவளின் இனிய குரல் என்னை மீண்டும் பூமிக்கு வர வைத்தது. 'ம்ம்ம் என்ன இன்று நேரத்துடன் வேலை முடிந்ததா ?' அவள் தான் தொடர்ந்தாள், நான் என்னை சமாளித்துக்கொண்டு, இல்லை ஒரு தனிப்பட்ட விடயமாக கொஞ்சம் வெளியே வந்தேன், இனி திரும்பவும் வேலைக்கு போகப் போகிறேன் என என் கதையை மாற்றினேன். அப்ப தான் அவளுடன் ஒன்றாய் நடக்க முடியும்!
 
கொஞ்சம் எனக்கு பசி, வாங்க தேநீரும் வடையும் சாப்பிட்டுவிட்டு போவோம் என கூப்பிட, அவள் கொஞ்சம் தயங்கினாலும், பின் ஓகே என்று வந்தாள். அது தான் என் முதல் வெற்றி! கொஞ்சம் கொஞ்சமாக அவளை அறியத் தொடங்கியதுடன் என்னைப்பற்றியும் சொன்னேன். அவள் தொடக்கத்தில் கொஞ்சம் அச்சம் நாணம் கொண்டாலும், போகப் போக அன்னியோன்னியமாக பழகத் தொடங்கினாள். அது என் இரண்டாவது வெற்றி!
 
அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல்
நிச்சமும் பெண்பாற் குரிய என்ப."
 
என்றார் தொல்காப்பியர். இது களவியலுக்கு மட்டும் தான்! ஒரு காதல் சுவைக்கு மட்டும் தான் என்ற உண்மையை அவளிடம் கண்டேன்! இப்ப நான் மட்டும் அல்ல அவளும் எனக்காக காத்திருக்கிறாள். இப்ப நான் மோட்டார் சைக்கிளில் வர ஆரம்பித்ததால், நான் காலை நேரத்துடன் வந்து அவளை பாடசாலையில் இறக்கிவிட தொடங்கினேன். அவள் என்னை கட்டிப்பிடித்துக்கொண்டு செல்லக் கதைகளும் பேச தொடங்கிவிட்டாள். அந்த சிலநிமிட பயணம், சொர்க்கம் என்று ஒன்று இருந்ததால் அங்கே போனமாதிரி இருந்தது!
 
ஒரு சில மாதம் கழிய, செப்டம்பர் 22, 1995 , அவளுக்கு என் காதலின் அடையாளமாக ஒரு அழகிய மோதிரம் எம் இருவரின் படத்துடன், அன்று அவளை, பாடசாலையில் இறக்கிவிடும் பொழுது, திடீரென ஒரு முத்தம் கொடுத்துவிட்டு, அவளின் விரலில் நானே போட்டுவிட்டேன். அவள் அப்படியே திகைத்து நின்றாள், ஒன்றுமே பேசவில்லை, ஆனந்த கண்ணீர் சொட்டு சொட்டாக அவள் கன்னத்தை நனைத்தன. அது தான் நான் கொடுத்த முதல் முத்தம் கூட. திரும்பி, சுற்றி பார்த்தாள், நாம் ஒரு மரத்தின் அடியில் நின்றதால், எம்மைக் காணக்கூடியதாக ஒருவரும் தெரியவில்லை. திடீரென அவசரம் அவசரமாக என்னை இழுத்து, வாயுடன் வாய்சேர்த்து முத்தம் தந்துவிட்டு, சட்டென அந்த மோதிர விரலை பார்த்தபடியே பாடசாலைக்குள் ஓடி விட்டாள். வழமையாக சொல்லும் 'போயிட்டு வருகிறேன்' கூட சொல்லவில்லை ?
 
அவள் இன்று ஒன்றும் சொல்லாமல் பாடசாலைக்குள் போனது எனோ எனக்கு ஒரு மாதிரி இருக்க, என் மதிய இடைவெளியில், சாப்பிடுவதை தவிர்த்து, அவளை ஒருக்கா பார்க்க வேண்டும் என்ற அவா உந்த, மோட்டார் சைக்கிளில் அவளிடம் போனேன். போகும் பொழுது, பாடசாலைக்கு கொஞ்சம் அருகில் இருந்த கடை ஒன்றில் அவளுக்கு, அவள் மிகவும் விரும்பும் இருதய அமைப்பில் அமைந்த ஆல்கஹால் பிரீ டார்க் சாக்லேட் [alcohol free dark chocolate] பெட்டி ஒன்றை வாங்கி, மீண்டும் மோட்டார் சைக்கிளில் எற, பெரும் குண்டுகள் வெடிக்கும் சத்தம் பாடசாலை பக்கம் இருந்து கேட்டது. போர்விமானமும் கூவிக்கொண்டு பறந்தன, கடைக்கார முதலாளி கடையை உடனடியாக மூடிக்கொண்டு, தம்பி, ஒரு இடமும் போகவேண்டாம் என்று என்னையும் பதுங்கு குழிக்குள் இழுத்து சென்றார்.
 
நான் ரசித்த உடல் துண்டு துண்டாக அன்று மாலை என்னால் போய் பார்க்க முடிந்தது. அவளின் மற்றும் மாணவர்களின் பெற்றோரின் அழுகுரல் ஒரே சோகமயமாக அங்கு காட்சி அளித்தது. நான் அவளின் கையை, நான் போட்டுவிட்ட மோதிரம் மூலம் அடையாளம் கண்டேன்.
 
 
"அழகான என் செல்ல நண்பியே
அன்பான ஒரே நம்பிக்கை நட்சத்திரமே
அளப்பெரும் துயரில் என்னைத் தள்ளி
அமைதியாய் சொல்லாமல் மறைந்தது ஏனோ ?"
 
"வாய் மூடி தலை குனிந்து
வான் உயர துள்ளி குதித்து
வாழ்க்கை காண கனவு கண்டவளே
வாட்டம் தந்து மௌனமாகியது எனோ?"
 
"என் அழகான காதல் செல்லமே
என்னை விட்டு போக வேண்டாம்?
என் குறும்பு இளவரசி இல்லாமல்
எனக்கு இனி மகிழ்ச்சி எனோ?"
 
"பள்ளி அறையில் புத்தகங்களுக்கு இடையில்
பகுதி பகுதியாக உன்னை கண்டுஎடுத்தேன்
பரவி இருந்த இரத்த சொட்டுக்குள்
பச்சை சேலை சிவந்தது எனோ?"
 
"மச்சம் கொண்ட உன் இளம்கால்
மல்லாந்து என்னைப் பார்ப்பதைக் கண்டேன்
மயான அமைதியில் உற்று நோக்கினேன்
மடிந்தவிரலில் மோதிரம் என்னை அழைப்பதுஎனோ?"
 
 
நேரம் இப்ப அதிகாலை இரண்டு மணி, இன்னும் நல்ல இருட்டு, பனி எங்கும் பொழிந்து கொண்டு இருந்தது. நான் இப்ப வெளிநாட்டில், மனைவி பிள்ளைகளுடன் வாழ்கிறேன். அது உலக வாழ்க்கை. ஆனால் என் மனம் இன்னும் அவளையே நினைக்கிறது. அவளுக்காக ஒரு தீபம் ஏற்ற
இப்பவே இந்த கார்த்திகை தினத்தில் எழும்பிவிட்டேன். என் மனைவி இன்னும் சரியான தூக்கத்தில், பிள்ளைகள் தங்கள் தங்கள் அறையில். யன்னலுக்கு வெளியே, இது கிராமப்புறம் என்பதால் சிறு மரப்பத்தைகள் [woods]. வானம் அமைதியாக இருந்தது. நான் கொஞ்சம் என் பார்வையை கிழே இறக்கி மரப்பத்தையை பார்த்தேன்.
 
கழுத்தில் இருந்து கால்வரை வெள்ளை நிற முழு அங்கியுடன், தனது முகத்தை நீண்ட கரும் கூந்தலால் மறைத்துக்கொண்டு, என்னை நோக்கி என் மாயாவின் உடல் அமைப்பிலேயே ஒரு பெண் உருவம் வருவதைக் கண்டேன்!
 
அருகில் அருகில் வர, தன் முடியை, தன் வலது கையால் வாரி முதுகுப் பின்னல் போட்டாள். நான் போட்டுவிட்ட அந்த மோதிரம் இன்னும் அந்த விரலில் இருப்பதைக் கண்டேன். அது ஒளிர்ந்து கொண்டு இருந்தது. அதே புன்முறுவல், அதே நாணம், அதே நடை! என்னால் நம்பவே முடியவில்லை!. 'ம்ம் வாங்க, உங்க மாயா கூப்பிடுகிறாள், நான் தான் உங்க மனைவி, உதறித்த தள்ளுங்கள் அவளை, கட்டிலில் படுத்திருப்பவளை'
 
இரண்டு கைகளையும் நீட்டி என்னை அழைத்தபடி நெருங்கி வந்து கொண்டு இருந்தது. என்னை அறியாமலே நான் யன்னலூடாக குதித்து வெளியே போக, யன்னலை அகல துறந்து, அதில் எற, ஒரு காலை தூக்கி வைத்தும் விட்டேன். மற்ற காலை தூக்க முயலும் பொழுது தான் , யாரோ என் காலை பிடித்து இழுப்பது தெரிந்தது. நான் திரும்பி பார்க்கவே இல்லை, என் மாயாவையே, அந்த அழகு தேவதையே பார்த்துக் கொண்டு ' மாயா, என் செல்லமே, நான் வாரெனடா கண்ணு' என்று சத்தம் போட்டு அலறியே விட்டேன்.
 
பிள்ளைகளும் சத்தம் கேட்டு ஓடிவந்து அப்பா, அப்பா என , மனைவியுடன் சேர்ந்து என்னை யன்னலால் குதிக்க விடாமல் உள்ளுக்குள் இழுத்துவிடார்கள். மனைவி என்னை கட்டிப்பிடித்து, உங்கள் மாயா எனக்கும் சகோதரி தான், எனக்கும் நண்பி தான். காலை நாம் குடும்பமாக இந்த , இனிவரும் ஒவ்வொரு கார்த்திகை தினத்திலும் விளக்கேற்றுவோம். இப்ப வந்து படுங்க, என பிள்ளைகளும் சேர்ந்து என்னை மீண்டும் கட்டிலில் படுக்க வைத்தனர். நான் அவர்களுக்காக கண்மூடி விடியும் மட்டும் இருந்தாலும், அந்த உருவம், என் மாயா என் மனதில் இருந்து அகலவே இல்லை !
 
"இறந்த அவளின் சூக்கும உடல்
இளமுறுவலுடன் என் முன் வந்தது
இலக்குமி போல அழகாய் தோன்றி
இதழ் குவித்து முத்தம் தந்து"
 
"பழைய மெல்லிசை முணுமுணுத்து
பதுங்கி என் கண்கள் பார்த்து
பதுமையாக என் முன் நின்று
பணிந்து அழைத்து வா என்றது"
 
"என் அழகிய குட்டி கண்மணியே
எதற்காக உன் உயிரை மாய்த்தாய்?
எழுச்சி தந்து நம்பிக்கை விதைத்து
என்னை விட்டு விலகியது எனோ?"
 
"இறந்ததாக நான் உன்னை நம்பவில்லை
இன்றும் உனக்காக நான் காத்திருக்கிறேன்
இளந் தென்றல் தொடும் அடிவானத்தில்
இரவும்பகலும் உன்னைத் தேடி அலைகிறேன் ?"
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
319148895_10222174104164349_8997124021803776260_n.jpg?stp=cp6_dst-jpg_p240x240&_nc_cat=105&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=89KOW3Ms8V4Q7kNvgF4W2qw&_nc_ht=scontent-man2-1.xx&oh=00_AYBHpdqhb-y3fV1a_f7ehm0udGnmzLHFH0zV42Z9XWNoPQ&oe=66753549 No photo description available. No photo description available.
 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் எல்லோருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக எழுதியுள்ளீர்கள் அண்ணா. மனதும் கனத்துப்போனது. எம் மனதில் ஆழமாகப் பதிந்த விடயங்கள் எம் மரணம் வரை கூடவே இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

முதற்காதல் முதல் முத்தம் என்றுமே மறக்க முடியாதது........பின்பு பல காதல் பல முத்தங்கள் கிடைத்தால் கற்பனைகள் கனவிலும் வராது.........மனமானது கையில் இருப்பதை ராசிக்காது இல்லாததை நினைத்துத்தான் ஏங்கிக் கொண்டிருக்கும்......அதுதான் படைத்தவன் குடுத்த விதி......!  

நன்றி ஐயா இணைப்புக்கு........!  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் எல்லோருக்கும்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.