Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

 

ஜனாதிபதி தேர்தலும் தமிழர் அரசியலும்

ஜனாதிபதி தேர்தலும் தமிழர் அரசியலும்

— வீரகத்தி தனபாலசிங்கம் —

 ஏற்கெனவே குழம்பிப்போயிருந்த  இலங்கை தமிழர் அரசியல் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வடக்கு, கிழக்கு தமிழர்கள் எத்தகைய நிலைப்பாட்டை எடு்க்கவேண்டும் என்பது தொடர்பில் தமிழ் அரசியல் கட்சிகள் மத்தியில் நிலவுகின்ற முரண்பாடுகள் காரணமாக மேலும் சிக்கலுக்கு உள்ளாகியிருக்கிறது.

தமிழ் கட்சிகள் ஐக்கியப்பட்டு செயற்படுவதில் நாட்டம் காட்டும் என்றோ அல்லது போரின் முடிவுக்கு பின்னரான இன்றைய காலப்பகுதியில்  தமிழ் மக்கள் முகங்கொடுக்கும் மனிதாபிமானப் பிரச்சினைகள் உட்பட தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வைக் காண்பதற்கு ஒன்றிணைந்த நிலைப்பாடுகளுக்கு வரும் என்றோ எதிர்பார்ப்பதிலும் அர்த்தமில்லை. சாத்தியமான அளவுக்கு முரண்பட்டு நிற்பதற்கே  தமிழ்க் கட்சிகள் கங்கணம் கட்டி நிற்கின்றன. 

  ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்க வேண்டும் என்ற யோசனை அண்மைக் காலமாக தமிழர் அரசியலை ஆக்கிரமித்து நிற்கிறது. அது தொடர்பில் சில தமிழ்க் கட்சிகள் மத்தியில் ஆரம்பத்தில் இருந்த உற்சாகத்தை இப்போது காணவில்லை. பொதுவேட்பாளர் தொடர்பில்  கட்சிகளுக்கு இடையில் மாத்திரம் அல்ல, ஒவ்வொரு கட்சிக்குள்ளும் கூட  முரண்பட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. 

  தமிழ்ப் பொதுவேட்பாளரை நிறுத்தும் யோசனைக்கு ஆதரவைத் திரட்டுவதற்காக  ‘மக்கள் மனு’ என்ற சிவில் சமூக அமைப்பே முதலில் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்தது. தற்போது அந்த முயற்சியை ‘தமிழ் மக்கள் பொதுச்சபை’ என்ற புதியதொரு  சிவில் சமூக அமைப்பு முன்னெடுக்கிறது. 

 பொதுவேட்பாளர்   தொடர்பில் வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் மக்களின் பரந்தளவிலான ஆதரவை பெறமுடியுமாக இருந்தால்  தமிழ்க்  கட்சிகளை வழிக்கு கொண்டுவரலாம் என்று தமிழ் மக்கள் பொதுச்சபையின் முக்கியஸ்தர்கள் நம்புகிறார்கள் என்று தெரிகிறது. 

  தமிழ் மக்கள் மத்தியில் கட்டுறுதியான சிவில் சமூக அமைப்புக்கள் ஒருபோதும் இருந்ததில்லை. அரசியல்வாதிகள் மீது நெருக்குதலைப் பிரயோகித்து அவர்களை  ஒழுங்காக செயற்பட வைப்பதற்கு சிவில் சமூக அமைப்பை கட்டமைக்கும்  முயற்சிகள் வரவேற்கப்படக்கூடியதே. அவற்றின் இலக்கு போரின் முடிவுக்கு பின்னரான காலப் பகுதியில் உள்நாட்டு மற்றும் சர்வதேச அரசியல் நிலைவரங்களுக்கும் வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் இன்றைய வாழ்வியல் யதார்த்தங்களுக்கும் பொருத்தமானவையாக இருப்பது அவசியம். வெறுமனே உணர்ச்சிவசமான சுலோகங்களின் பின்னால் தமிழ் மக்களை அணிதிரட்ட முயற்சிப்பதில் அர்த்தமில்லை.

தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் தற்போது  தமிழ் மக்கள் எத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை தென்னிலங்கைக்கும் உலகிற்கும் வெளிக் காட்டுவதற்காக ஜனாதிபதி தேர்தலை வடக்கிலும் கிழக்கிலும் ஒரு சர்வஜன வாக்கெடுப்பாக மாற்றும் நோக்கிலேயே தமிழ்ப் பொதுவேட்பாளர் யோசனை முன்வைக்கப்பட்டது. தமிழ்க்கட்சிகள் உறுதியான முடிவை எடுக்காமல் தடுமாறிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழ் மக்கள் பொதுச்சபை தமிழ் மக்களின் இறைமை, பாரம்பரிய தாயகம் மற்றும் மக்களை ஐக்கியப்படுத்தி ஒரு தேசமாகக் கட்டியெழுப்புதல் என்று சில கோட்பாடுகளை முன்வைத்து பிரசாரங்களை முன்னெடுத்துவருகிறது.

பொதுவேட்பாளர் யோசனையை இவர்கள் தமிழ்த்தேசியத்துடன் இறுக்கமாக  அடையாளப்படுத்தி பிரசாரங்களை செய்வதால் தமிழ் அரசியல்வாதிகள் பலரும் தங்களது எதிர்கால அரசியல் வாய்ப்புக்களை மனதிற்கொண்டு ஆதரவான கருத்துக்களை அவ்வப்போது கூறுவதற்கும் தவறுவதில்லை. 

  பொதுவேட்பாளரை நிறுத்தும் முயற்சி இறுதியில் சாத்தியமில்லாமல்  போகும் என்று நம்புகின்ற சில அரசியல்வாதிகள் அதற்கு ஆதரவாகப் பேசுவதன் மூலம் தங்களை மிகவும் சாதுரியமானவர்களாகக் காட்டிக்கொள்கிறார்கள் என்பதுவும் உண்மை.

 பொதுவேட்பாளரை நிறுத்தும் முயற்சியின் பின்னணியில் இருக்கக்கூடிய உள்நாட்டு மற்றும் வெளிச்சக்திகள் குறித்து பல்வேறு ஊகங்கள் வெளியாகின்றன. தென்னிலங்கையின் குறிப்பிட்ட ஒரு ஜனாதிபதி  வேட்பாளருக்கு தமிழ் மக்களின் வாக்குகள் கிடைக்காமல் இருப்பதை உறுதிசெய்வதற்கான ஒரு தந்திரோபாயமே இது என்று ஆரம்பம் முதலிருந்தே சந்தேகிக்கப்பட்டது.  

  தமிழ்த்தேசிய அரசியலின் சமகால மையமாக பொதுவேட்பாளரை  காட்சிப்படுத்துவதில் தமிழ் மக்கள் பொதுச்சபை முனைப்புக் காட்டுகிறது. ஆனால் அவர்கள் வெறுமனே கோட்பாடுகளைப் பற்றிப் பேசுகிறார்களே தவிர, தெளிவான அரசியல் கோரிக்கைகளை இன்னமும் முன்வைக்கவில்லை.

 தமிழ் மக்கள்  இன்று வேண்டிநிற்பது என்ன என்பதை ஜனாதிபதி தேர்தலின் மூலம் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தென்னிலங்கைக்கும் உலகிற்கும் வெளிக்காட்டிவிட்டார்கள் என்று வைத்துக் கொள்வோம். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சம்பந்தப்பட்ட சக்திகள் தமிழ் மக்களுக்கு முன்கூட்டியே கூறுவதற்கு கடமைப்பட்டிருக்கின்றன. 

 வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு பிறகு  தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் தலைவர்கள் 1977 ஜூலை பொதுத்தேர்தலை தனித்தமிழ் நாட்டுக் கோரிக்கைக்கு ஆணையைப்  பெறுவதற்கான ஒரு வாக்கெடுப்பாகவே வடக்கு,கிழக்கு தமிழ் மக்கள் முன்கொண்டு சென்றார்கள். அந்த தேர்தலில் பிரமாண்டமான வெற்றியைப் பெற்ற அந்த தலைவர்களிடம் அடுத்து என்ன செய்வது என்ற எந்த திட்டமும் இருக்கவில்லை. அதன் விளைவாக தமிழ் மக்களுக்கு நேர்ந்த அவலம் அண்மைக்கால வரலாறு. அதேபோன்ற வரலாறு மீண்டும் திரும்பிவரக்கூடிய ஆபத்தை உணர்ந்தவர்களாக பொதுவேட்பாளர் யோசனைக்கு ஆதரவாகப் பேசும் அரசியல்வாதிகளும் புதிய  சிவில் சமூக முக்கியஸ்தர்களும் மனதிற்கொள்ள வேண்டும்.

  அதேவேளை, பொதுவேட்பாளரை தெரிவுசெய்வதற்கான செயன்முறை குறித்து ஏற்கெனவே சில தமிழ் அரசியல்வாதிகளும்  சிவில் சமூக முக்கியஸ்தர்களும் வெளிப்படுத்திவரும் கருத்துக்கள் மிகவும் சுவாரஸ்யமானவையாக இருக்கின்றன.

  பொதுவேட்பாளர் ஒரு அரசியல்வாதியாக இருக்கக்கூடாது என்றும் அவர் தமிழ் மக்கள் தென்னிலங்கைக்கும் உலகிற்கும் கூறவிரும்பும் செய்தியின் ஒரு அடையாளமாக மாத்திரமே இருக்கவேண்டும் என்றும் கூறப்படுகிறது. அதேவேளை, ஜனாதிபதி 

தேர்தலுக்கு பிறகு அவர் அரசியலில் ஈடுபடுவதற்கு ஆர்வம் காட்டக்கூடாது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

  அதாவது, பொதுவேட்பாளர் ஒரு அரசியல் துறவியாக இருக்கவேண்டும். ஏற்கெனவே தமிழர்கள் மத்தியில்  துறவிகளாக  இருப்பவர்களில் சிலர்  அரசியலில் தீவிரமாக ஈடுபட்டுவரும் நிலையில், ஜனாதிபதி தேர்தலில் உத்தேச பொதுவேட்பாளர் தமிழ்  மக்கள் மத்தியில் கணிசமான வாக்குகளைப் பெறும் பட்சத்தில் அவர் அரசியலில் ஆர்வம் காண்பிக்கமாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்? அத்தகைய ஒரு ‘அரசியல் துறவியை’  தமிழ்ச்  சமூகத்தில் கண்டுபிடிக்க முடியுமா?

  ஒரு கோட்பாட்டு அடிப்படையில் நோக்கும்போது  பொதுவேட்பாளர் வடக்கு, கிழக்கில் கணிசமான வாக்குகளைப்  பெறுவாரேயானால், தமிழ் மக்களின் எதிர்கால தலைவராக அவர் அடையாளம் காணப்படக்கூடிய சாத்தியத்தையும் நிராகரிக்கமுடியாது. இது குறித்த சந்தேகம் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு இருக்கக்கூடும். அதனாலேயே அவர்களில் பலர் மத்தியில் பொதுவேட்பாளர் விடயத்தில் உற்சாகமான ஒரு மனநிலையைக் காணமுடியவில்லை.

 பொதுவேட்பாளருக்கு தமிழர்கள் மத்தியில் கிடைக்கக்கூடிய ஆதரவைப் பொறுத்து தமிழ் மக்கள் பொதுச்சபை ஒரு புதிய அரசியல் கட்சியாக மாறக்கூடிய வாய்ப்பையும் எளிதில் நிராகரித்துவிட முடியாது.

 கடந்த வாரம் கொழும்பு வந்திருந்த இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்தபோது தமிழ்ப் பொதுவேட்பாளர் விடயம் குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டதாக  தெரிய வருகிறது. 

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர்கள் மத்தியில் பொதுவேட்பாளர் தொடர்பில் நிலவும் முரண்பாடு ஜெய்சங்கர் முன்னிலையிலும் வெளிக்காட்டப்படடிருக்கிறது. மற்றைய தமிழ் கட்சிகளின் தலைவர்கள் பொதுவேட்பாளர் விவகாரம் ஒரு ஆலோசனைக் கட்டத்திலேயே இன்னமும் இருக்கிறதே தவிர,  உறுதியான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று கூறியதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சர் அது தொடர்பில் எந்த கருத்தையும் கூறவில்லை என்றும் தெரியவந்தது.

 அதேவேளை, பொதுவேட்பாளர் யோசனைக்கு எதிராக கருத்து வெளியிடுபவர்களை தமிழ்த்தேசியத்துக்கு எதிரானவர்கள் என்று வர்ணிக்கும் ஒரு போக்கும் காணப்படுகிறது. இது தமிழர் அரசியலில் காலங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டுவந்த ஒரு வக்கிரத்தனமான அரசியல் போக்கின் ஒரு தொடர்ச்சியான  வெளிப்பாடே தவிர வேறு ஒன்றுமில்லை.

 தமிழ்த் தேசியம் என்பது  வலுவானதாக இருக்கவேண்டுமானால், தமிழர்களின் பாரம்பரிய தாயக நிலப்பரப்பும் அதன்  மக்களின் இருப்பும் இன்றியமையாதவை. தங்களது சொந்தப் பிரதேசத்தில் தொடர்ந்தும் வாழ்ந்தால் தங்களுக்கும் தங்களது  சந்ததியினருக்கும் ஒரு நல்ல எதிர்காலம் இருக்கும் என்ற நம்பிக்கை தமிழ் மக்களுக்கு இருக்கவேண்டும். 

 ஆனால், துரதிர்ஷ்டவசமாக இன்று அத்தகைய ஒரு சூழ்நிலை வடக்கு, கிழக்கில் இல்லை. பெரும்பாலான தமிழர்கள் மேற்கு நாடுகளுக்கு புலம்பெயர்வதில் நாட்டம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். இந்த நிலைவரம் தமிழ்ப்பகுதிகளின் குடிப்பரம்பலுக்கு பாரதூரமான ஆபத்தை தோற்றுவிக்கக்  கூடியதாகும். 

 வடக்கு, கிழக்கில் தமிழர்களில் எத்தனை பேர் வெளிநாடுகளுக்கு செல்லாமல் சொந்த மண்ணில் தொடர்ந்தும் வாழ்வதற்கு விரும்புகிறார்கள் என்பதை அறிய ஒரு கருத்துக்கணிப்பை நடத்தினால் பயனுடையதாக  இருக்கும். பொதுவேட்பாளர் யோசனைக்கு ஆதரவை திரட்டுவதில் ஈடுபட்டிருக்கும் சிவில் சமூக அமைப்பு புலம்பெயர்வதில் தமிழர்கள் காட்டும் ஆர்வத்தின் ஆபத்தையும் மக்களுக்கு விளக்கிக்கூறுவதில் கவனம் செலுத்தினால் கூடுதல்  பயனுறுதியுடைய ஒரு பணியை செய்வதாக அமையும். 

இது இவ்வாறிருக்க, ஜெய்சங்கருடனான சந்திப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை தவிர ஏனைய கட்சிகள் மாகாணசபை தேர்தல்களை நடத்தி அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தின.

 ஜனாதிபதி தேர்தலின் பிரதான வேட்பாளர்களான எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்கவும் 13 வது திருத்தத்தை தங்களது  எதிர்கால அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் என்று அண்மையில் யாழ்ப்பாணத்தில் வைத்து உறுதியளித்திருந்தனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நெடுகவும் அந்த திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டவர். 

ஜனாதிபதி தேர்தலின் பிரதான வேட்பாளர்கள் மூவரும் 13 வது திருத்தத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் இன்றைய புதிய சூழ்நிலையை தமிழ் அரசியல் கட்சிகள் எவ்வாறு அணுகப்போகின்றன என்பது முக்கியமான கேள்வி.

 13 வது திருத்தம் தேசிய இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு அல்ல என்று கூறும் தமிழ்க் கட்சிகள் நிரந்தரமான அரசியல் தீர்வை நோக்கிய பயணத்தில் முதற்கட்டமாக அந்த திருத்தத்தை நடைமுறைப்படுத்தி மாகாணசபை தேர்தல்களை நடத்தவேண்டும் என்று அரசாங்கத்தை கோரிவருகின்றன.

 அவ்வாறு கோரிக்கையை முன்வைப்பதுடன் தங்கள் பணி முடிவடைந்துவிட்டதாக தமிழ்க்கட்சிகள் நினைக்கமுடியாது. அந்த திருத்தம் தொடர்பில்  மாத்திரமல்ல பொதுவில் அதிகாரப் பரவலாக்கம் குறித்தே தப்பபிப்பிராயத்தைக் கொண்டிருக்கும் பெரும்பான்மைச் சமூகத்தின் மத்தியில் உள்ள பிரதான அரசியல் சக்திகள் நேர்மறையான ஒரு நிலைப்பாட்டை எடுக்கும் சந்தர்ப்பத்தை சாதுரியமாகப் பயன்படுத்தும் அரசியல் விவேகம் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களிடம் இருக்கவேண்டியது அவசியம்.

  மூன்று பிரதான வேட்பாளர்களும் எடுத்திருக்கும் நிலைப்பாடு 13 வது திருத்தம் தொடர்பில் பெரும்பான்மைச் சமூகம் கொண்டிருக்கும் எதிர்மறையான அபிப்பிராயத்தை ஒரு குறிப்பிடத்தக்க அளவுக்கு மாற்றுவதற்கு உதவுமேயானால் அது  பெரிய காரியமாக இருக்கும்.

 ஜனாதிபதி தேர்தலில் இந்த மூன்று வேட்பாளர்களில் எவர் வெற்றி பெற்று அதிகாரத்துக்கு  வந்தாலும் அவர் 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும்பட்சத்தில் மற்றைய இருவரும் அதை எதிர்க்கமுடியாமல் போகும். அவர்கள் மூவரிடமும் தமிழ்க் கட்சிகள் அதற்கான உறுதிமொழியை தேர்தலுக்கு முன்னர் பெறுவது விவேகமான ஒரு அணுகுமுறையாக இருக்கும். 

 இந்த வேட்பாளர்கள் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வாக சமஷ்டி ஆட்சிமுறையை தங்களது தேர்தல் விஞ்ஞாபனங்களில் முன்வைப்பார்களா? ஒற்றையாட்சி முறையை மாற்றுவதற்கு இணங்குவார்களா? என்றெல்லாம் சில  தமிழ்க்கட்சிகள் கேள்வி எழுப்பி அறிக்கைகளை வெளியிடுகின்றன. அவர்களின் அரசியல் விவேகம் குறித்து என்ன கூறுவது என்றே புரியவில்லை. 

 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கே தயாரில்லாமல் இருக்கும் கொழும்பு அரசாங்கங்களிடம் சமஷ்டித் தீர்வை எவ்வாறு எதிர்பார்க்க முடியும் என்று முன்னைய ஒரு இலங்கை விஜயத்தின்போது ஜெய்சங்கர் தங்களிடம்  கேள்வியெழுப்பியதை தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் மறந்திருக்கமாட்டார்கள் என்று நம்புகிறோம். 

 விடுதலை புலிகள் 13 வது திருத்தத்தை எதிர்த்தார்கள் என்பதற்காக அதை தொடர்ந்தும் எதிர்ப்பது தமிழ்த் தேசியத்துக்கான தங்களின் கடமை என்று நினைக்கின்ற அரசியல்வாதிகளும்  இருக்கிறார்கள்.

அந்த திருத்தத்தை பற்றிய பேச்சுக்கே இடமில்லை என்று சில அரசியல்வாதிகளும் சிவில் சமூக முக்கியஸ்தர்களும் பேசுகிறார்கள். அந்த திருத்தத்தை ஒரு தடியினால் கூட தொட்டுப்பார்க்க மாட்டோம் என்று ஒரு காலத்தில் கூறிய மூத்த தமிழ்த் தலைவர் சம்பந்தன் ஐயா அதை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும் என்று  கோருவதில் முன்னரங்கத்தில் நிற்பவர்களில் முதன்மையானவராக விளங்குகிறார்.

 இந்த கட்டுரையாளர் ஒன்றும் 13 வது திருத்தத்தின் ரசிகர் இல்லை. ஆனால் அந்த திருத்தத்தைப் பற்றிய பேச்சுக்கே இடமில்லை என்று கூறுபவர்களிடம் ஒரேயொரு கேள்வி.

 நாம் விரும்புகின்றோமோ இல்லையோ இன்று இலங்கை அரசியலமைப்பில் இருக்கின்ற ஒரேயொரு அதிகாரப்பரவலாக்க சட்டம் என்றால் அது 13 வது திருத்தம் மாத்திரமே. அதை இலங்கை  அரசாங்கம் ஒன்று ஒழித்துவிட்டால்  எதிர்காலத்தில் குறைந்த பட்சம் அந்த திருத்தத்தைப் போன்ற ஒன்றை அல்லது அதையும் விட குறைவான ஏற்பாடு ஒன்றையாவது கொண்டுவருவதற்கு அரசாங்கங்களை நிர்ப்பந்திக்கக்கூடிய அரசியல் வல்லமை உங்களிடம் இருக்கிறதா?

 பயன்தராத பரிசோதனைகளையே மீண்டும் மீண்டும் செய்துபார்த்து வேறுபட்ட விளைவுகளை எதிர்பார்க்கும் ஒரு மக்கள்  கூட்டமாக இலங்கை தமிழர்கள் இனிமேலும் இருக்கக்கூடாது. 

 

https://arangamnews.com/?p=10904

 

 

 

  • Like 1


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.