Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
"காதலே கலையாதே"
 
 
உலகப் புகழ் பெற்ற காதலர்கள் என இன்று நாம் போற்றும் ரோமியோ - ஜூலியட், சகுந்தலை - துஷ்யந்தன், லைலா - மஜ்னூன், மும்தாஜ் - ஷாஜஹான், கிளியோபட்ரா - மார்க்ஆண்டனி, அம்பிகாபதி - அமராவதி, தேவதாஸ் - பார்வதி, உதயணன் - வாசவதத்தை, சங்க இலக்கிய ஆதிமந்தி - ஆட்டநத்தி இப்படி யாரை எடுத்தாலும் அங்கு காதல் வாழ்ந்ததாக முற்றும் முழுதாக சொல்லமுடியாது. பல சோகத்தில் முடிந்தன, பல மரணத்தில் முடிந்தன என்பதே உண்மை. என்றாலும் "காதலே கலையாதே" என்ற வார்த்தைக்கு அர்த்தமும் மதிப்பும் இருப்பதை காண்கிறோம். என் வாழ்வும் இப்படி ஒன்றோ என எண்ணத் தோன்றுகிறது.
 
மும்தாஜ் - ஷாஜஹான் மற்றும் உதயணன் - வாசவதத்தை காப்பியத்தில் நாலு அல்லது நாலுக்கு மேற்பட்ட மனைவிகளை காதல் திருமணம் செய்துள்ளனர்? இதில் திருமணம் செய்து கொண்ட மற்ற பெண்கள் காவிய நாயகியின் வாழ்க்கையைப் தாமும் பகிர்ந்து கொண்டவர்கள் என்பது இங்குக் கருத்ததக்கது. எனவே "காதலே கலையாதே" என்பதுக்கு இங்கு அர்த்தம் இல்லை. அதே போல அந்தோனி கடமையை மறந்து காதலின் பின்னால் சென்றதால் போரில் வீழ்ச்சி அடைந்து, உயிரை நீத்தார். இங்கு "காதலே கலையாதே" என்பதுக்கு ஓரளவு அர்த்தம் இருந்தாலும் இதுவும் எனக்கு உடன்படாத ஒன்று. மஜ்னூன் போல தகுதியற்ற, நிறைவேறமுடியாத காதலும் எனக்கு விருப்பம் இல்லை. அதனால் தானோ என்னவோ ஆதிமந்தி - ஆட்டநத்தி காப்பியத்தை நான் பலதடவை வாசித்துள்ளேன். அதன் பிரதிபலிப்போ என்னவோ ஆதிமந்தி போல ஒருவள் இப்ப என் கனவில் வரத் தொடங்கிவிட்டாள்!
 
ஆதிமந்தி ஆட்டனத்தியை தேடி பேதுற்றுப் [மயங்கி] புலம்பிக் கரை யோரமாக ஓடினாள். தன் காதலனைக் கண்டீரோ என்று கேட்டுக் கொண்டு ஊர் ஊராக அலைந்தாள். நீரோட்டத்தின் வழியே கடற்கரையிலே பின் சென்று, ""கச்சினையும் கழலினையும் தேன் ஒழுகும் மாலையணிந்த மார்பினையும் உடையவனும், பலவகை மலர்களால் தொடுக்கப்பட்டு விளங்கிய அழகமைந்த மாலையை உடையவனும் ஆகிய சுருண்ட மயிரினையுடைய அழகிய கூத்தனாகிய (பொருநனாகிய) ஆட்டனத்தியைக் கண்டிரோ?" என்று கதறினாள். "காதலே கலையாதே" என்றதின் அர்த்தத்தை அங்கு நான் அவள் கதறலில் காண்கிறேன்! அதைத்தான் இந்த நிலையற்ற வாழ்வில், நிலையான காதலாகக் காண்கிறேன்!
 
நான் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று இப்ப கொழும்பில் வேலைசெய்யத் தொடங்கியுள்ளேன். நான் இணைந்து ஒரு மாதத்தின் பின் எனக்கு நிர்வாக உதவியாளராக அவள் வந்தாள். பெயர் சுகந்தினி, விஞ்ஞான பட்டதாரி. நாம் இருவரும் ஒரே அறையில் இருந்து தான் பணிபுரிய தொடங்கினோம், அவளை விட என் அறையில், தட்டெழுத்தாளர், ஏவலாள் [பியூன்], எழுத்தர் [குமாஸ்தா] என சிலரும் இருந்தனர். ஆனால் வேலைவிடயமாக கூடுதலாக சுகந்தினியுடன் தான் பழக்கவேண்டி இருந்தது. அது தான் அவளுடன் கொஞ்சம் நெருக்கத்தை ஏற்படுத்தியது என்று சொல்லலாம்.
 
சுகந்தினிக்கு அவளுடன் பல்கலைக்கழகத்தில் படித்த ஒரு தோழியும் இருந்தாள். இருவரும் ஒரு அறை சின்ன வீட்டில் [studio apartment] ஒன்றாக இருந்தார்கள். இது நான் வாடகைக்கு இருக்கும் ஸ்டுடியோ அபார்ட்மென்ட்டில் இருந்து ஐந்நூறு மீட்டர் தான் இருக்கும். அவளின் தோழி, கொழும்பு விவேகானந்த தேசிய பாடசாலையில் ஆசிரியராக அண்மையில் பொறுப்பேற்று இருந்தார், எம் குடியிருப்புக்கள் கொட்டாஞ்சேனையில் இருந்ததால், அவளின் தோழி நடந்தே வேலைக்கு போய்விடுவார். சுகந்தினிக்கும் எனக்கும் வேலைத் தளத்துக்கு போவதற்கு அண்மையில் உள்ள பேருந்து நிலையம் புனித அந்தோனியார் திருத்தலம், கொச்சிக்கடைக்கு முன்னால் இருந்தது. எனவே பல நேரங்களில் ஒன்றாகவே பயணங்கள் இருந்தன.
 
வேலைத்தளத்தில் இருவரும் தம்தம் வேலையில் இருப்பதால், பெரிதாக தனிப்பட்ட விடயங்கள் கதைப்பது இல்லை, ஆனால் இந்த பயணத்தில் தான் நாம் ஒருவரை ஒருவர் அறியத் தொடங்கினோம். அது தான் எமக்கிடையில் ஒரு நெருக்கத்தை, அன்பை வளர்க்கத் தொடங்கியது. அவளின் அறிமுகம் வந்து ஒருமாதம் கழிய, எனக்குள் அவளைப்பற்றிய எண்ணம் தான் எந்தநேரமும். ஆனால் வேலை நேரத்தைத் தவிர. பேரறிஞர் அண்ணா சொன்ன 'கடமை, கண்ணியம் கட்டுப்பாடு' நான் என்றும் மறப்பதில்லை.
 
பெரியாரின் சீடராக வலம் வந்த போது, இவர் சி.என்.ஏ. என்ற மூன்று எழுத்தால் அறிமுகமானவர் என்பது குறிப்பிடத் தக்கது. அண்ணா ஒரு கூட்டத்தில் வெறும் ஐந்து வினாடிகள் மட்டுமே பேசிய சம்பவமும் உண்டு. அது தேர்தல் நேரம். அவர் பேசியது "மாதமோ சித்திரை, மணியோ பத்தரை, உங்களை தழுவுவதோ நித்திரை, உதயசூரியனுக்கு இடுவீர் முத்திரை"...... என்பதே அந்தப் பேச்சு. அவரின் அடுக்கு மொழியில், நேர்மையில், மக்களுக்கான சேவையில் கவரப்பட்டவர்களில் நானும் ஒருவன். இதில் அதிசயம் என்னவென்றால், என்னைவிட அண்ணாவில், தமிழில் கவரப்பட்டவள் சுகந்தினி, ஆகவே இருவரும் நல்ல நண்பர்களாக இணைய அதுவும் ஒரு தூண்டுதலாக இருந்தது!
 
சுகந்தினியும் அவளின் தோழியும் வார இறுதியில் ஒருநாள் காலிமுகத்திடல் போவது வழமை, ஆனால் என் அக்கா, அண்ணா குடும்பம் கொழும்பில் இருந்ததால், நான் அவர்கள் வீட்டிற்கு குட்டி மருமக்களுடன் விளையாட போய்விடுவேன். அவளின் அறிமுகம் கிடைத்து இது இரண்டாவது மாதம். அன்பு என்ற உணர்வு, வேறு ஒரு கோணத்தில் பரிணாமம் அடைவது போல எனக்குத் தோன்றியது? அவள் இப்ப இன்னும் நெருங்கி வர தொடங்கி விட்டாள், ஏன் நானும் கூடத்தான்! இதைத்தான் காதல் என்கிறார்களோ? நான் அறியேன் பராபரமே!
 
ஒரு நாள் என்னையும் காலிமுக திடலுக்கு வரும்படி கூறினாள், ஆனால் எனக்கு உண்மையில் ஆசை இருந்தாலும், குட்டி மருமக்கள் எனக்காக காத்திருப்பார்கள் என்பதால், நான் போகவில்லை. அடுத்தநாள் அவளின் தோழி எனக்கு முறையிடும் பொழுதுதான் அவளின் காதலின் ஏக்கத்தை முழுதாக அறிந்தேன்!
 
ஒவ்வொரு நாளும் இந்த நேரம் தனது தோழியுடன் காவேரி ஆற்றங்கரையில் உலா வரும் ஆதிமந்தியை இன்று காண வில்லை. தோழி தான் முந்தி வந்து விட்டேனோ என்று ஒரு தரம் தடு மாறினாள். வாடைக்காற்று கொஞ்சம் குளிராக இன்று வீசுகின்றது. தன்னை மேல் அங்கியால் இறுக்கமாக போர்த்துக் கொண்டு அங்கும் இங்கும் தேடினாள். அதோ .. அந்த கற்பாறைகளுக்கிடையில் காவேரியை வெறுத்து பார்த்துக் கொண்டு ஆதிமந்தி இருப்பதை தோழி கண்டாள். அந்த காவேரியே அவள் கண்களில் இருந்து ஓடுவது போல அவள் அங்கு இருந்தாள். தோழிக்கு ஒன்றுமே புரியவில்லை. மெல்ல அவளின் பட்டு போன்ற நீண்ட கூந்தலை தடவிய படி, ஆதிமந்தியை என்ன நடந்தது என்று கேட்டாள். ஓ .. என்ன வென்று சொல்வேன் என தடு மாறினவள், கொஞ்ச அமைதியின் பின், தோழி தனக்கு நல்ல பதில் ஒன்று தருவாள் என்ற ஒரு அவாவில், தோழியின் முகத்தை பார்த்த படி சொல்ல தொடங்கினாள்.
 
"மள்ளர் குழீஇய விழவி னானும் மகளிர் தழீஇய துணங்கை யானும் யாண்டும் காணேன் மாண்தக் கோனை" என, "தனக்கேற்றவனாக கருதிய தலைவனை, ஆட்டன் ஆத்தி என்பவனை, பலம் உடைய போர் வீரர்கள் விழாக் கொண்டாடும் இடங்களிலும், மள்ளர் மகளிர் தம்முள் பொழுது போக்காக தழுவி வட்டமாக நின்று கை கோத்துக் கொண்டு ஆடுகின்ற துணங்கை நடனம் ஆடும் இடங்களிலும் காண முடியவில்லை" என்று அவனை நினைத்து என் சங்கு கைவளையல் நழுவுகிறது தோழி என நாணம் கடந்து வருந்தி முறையிட்ட அந்த காட்சிதான் அப்பொழுது என் மனதில் வந்தது! எனக்கும் அவள் மேலான உணர்வு மேலும் அதிகரிக்க அது வழிவகுத்தது.
 
இப்ப நாம் இருவரும் ஒருவர்க்கு ஒருவர் காத்திருந்து பேருந்தில் ஒன்றாய் பயணிக்கிறோம், என்றாலும் வார இறுதி காலிமுகத்திடல் கொஞ்சம் பிரச்சனைதான் எனவே வாரநாளிலேயே, வேலையில் இருந்து ஒன்று இரண்டு நாள் நேரடியாக அங்கு போய் இரவு உணவும் ஒன்றாக உண்ணத் தொடங்கினோம். அப்ப தான் அவள் ஒரு நாள் மிக அருகில் நெருங்கி இருந்து, என்னை அணைத்தவாறு, 'காதலே கலையாதே' என்று திருப்பி திருப்பி சொன்னாள். எனக்கு கோபமே வந்துவிட்டது. 'ஏன் இந்த ஐயப்பாடு ?' நான் கொஞ்சம் அதட்டி கேட்டேன். அவள் பதில் சொல்லவில்லை. கண்ணீர்தான் என் கையில் விழுந்து தெறித்தன, நானும் அவளை அணைத்தவாறு அலைகள் கரை மோதுவதை பார்த்தேன். 'நாம் காதல் அலையில் மிதக்கிறோம், கட்டாயம் ஒன்றாக இருவரும் கல்யாணம் என்ற கரையில் சேருவோம், காதல் என்றுமே கலையாது' என்றேன்.
 
"திதலை மாமை தளிர் வனப்பு அழுங்க, புதல் இவர் பீரின் எதிர் மலர் கடுப்பப், பசலை பாய்ந்த நுதலேன் ஆகி, எழுது எழில் மழைக் கண் கலுழ, நோய் கூர்ந்து, ஆதிமந்தியின் அறிவு பிறிது ஆகி, பேதுற்றிசினே காதல்அம் தோழி!" என்ற அகநானூறு 135 பாடல் தான் எனக்கு ஞாபகம் வந்தது. என் மேனி தளிர் போல் வனப்புக் கொண்டது. புள்ளிகளுடன் கூடிய மாமை நிறம் கொண்டது. அந்த அழகு கெடும்படி நெற்றியில் பசப்பு பாய்ந்துள்ளது. பீர்க்கம் பூ போல மஞ்சள் நிறப் பசப்பு பாய்ந்துள்ளது. அதனால் மை எழுதிய என் கண் அழுகிறது. ஆதிமந்தி போல என் அறிவு மழுங்கிவிட்டது. பித்துப் பிடித்துக் கிடக்கிறேன். என்மீது காதல் கொண்டுள்ள தோழா ! இதனைக் கேள். என அவள் எனக்கு சொல்லுவது போல அது இருந்தது!
 
காதலை காணாமல், அனுபவிக்காமல் எவருமே பொதுவாக வாழ்க்கையில் பயணம் செய்திருக்க முடியாது, ஆனால் அந்த காதல் அவர்கள் வாழும் சூழ்நிலையை பொறுத்து வெவ்வேறாக இருக்கலாம் , ஆனால் காதலும் அது கொடுக்கும் உணர்வும் என்றுமே மாற்றமடையாத ஒன்று! காதலில் வெற்றி பெற்றால் மட்டும் தான் இன்பம் அல்ல, அவரவர் காதலை நினைத்துப் பார்த்தாலே ஒரு பெரும் மகிழ்வுதான்!
 
ஆமாம் ஒரு சமயம் கைஸைச் [மஜ்னூனை] சிலர் கல்லால் அடித்துப் பரிகசித்துக் கொண்டிருந்தனர். அச்சமயம் லைலா அவ்வழியாகப் பல்லக்கில் போய்க் கொண்டிருந்தாள். மஜ்னூனன் மீது கல் எறியும் பரிதாபக் காட்சியைக் கண்டு அவள் துடித்தாள். “அடப்பாவிகளா! என் கைஸின் உடலை இப்படிச் வதைக்கிறீர்களே; நீங்கள் செத்து மடிக” என்று குமுறினாள். அதைக் கண்ட கைஸ், “என் அன்பார்ந்த லைலாவே, இவர்கள் என்னைச் வருத்தவில்லை. உன்மேல் நான் கொண்ட ‘காதல் கலையவில்லையா’ என்று அறிய உரைத்துப் பார்க்கின்றனர், என் உடலை; அவ்வளவு தான்” என்று கூறினான்.
 
அப்படித்தான் நான் என் காதலை நினைக்கிறன். கட்டாயம் அவளும் அப்படித்தான்! "காதலே கலையாதே" என்று நான் என்றுமே நினைக்கமாட்டேன்! தன்னில் தன் காதலில் நம்பிக்கை இல்லாதவர்கள் வேண்டும் என்றால் "காதலே கலையாதே" என்று சொல்லிக்கொண்டு திரியட்டும்!
 
நன்றி
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
334684883_1194005667754025_7925812185672906733_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=102&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=heIe53iNp2oQ7kNvgF2_5dq&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYC-weTfdgJrokOyTGS-BKPX1E9RmnDRcHpKcRonMJC49g&oe=66946C7A 334780998_664818738432265_7446845668978985063_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=108&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=sd02ntkhesAQ7kNvgGMEqql&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYCZVC83H7uOhTICoe3akdsl5_aeidOWFKnvXK2M3lVJgA&oe=66946344 331157593_1491821787888061_2569357769930183185_n.jpg?_nc_cat=101&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=tiDjEmiJzxEQ7kNvgGVQjAp&_nc_ht=scontent-lhr8-2.xx&oh=00_AYDgs-gqQJSZWbZ8sDUU6Xq30imxot_00zes34IzjbaFXQ&oe=66947175 334698672_117006444571335_3021418799126365837_n.jpg?_nc_cat=100&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=NNUyOmpRl0kQ7kNvgEJVtPv&_nc_ht=scontent-lhr6-2.xx&oh=00_AYD2dN371MpdIbyavdp2_tBEGoCgzwFLk1ALGkgI4W1GNA&oe=669449B4
 
 

Edited by kandiah Thillaivinayagalingam

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.