Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இக்கட்டுரையின் முதற் பகுதி முன்பே பதிவு செய்யப்பட்டது. அதன் இணைப்பு இறுதியில் தரப்பட்டுள்ளது - அதனை வாசித்த பின்னர் இந்த இரண்டாம் பகுதிக்கு வர ஏதுவாக.
 
                                                               பொருநைக் கரையினிலே - 2
                                                                                                                 - சுப.சோமசுந்தரம்
 
 
            முதல் பகுதியில் அறிவித்தது போல இன்றைய பாளையங்கோட்டையை உருவாக்கிய கிறித்தவ மத போதகர்களின் வரலாற்றிலேயே இன்றைய ஊரின் வரலாறு அடங்கியுள்ளது எனலாம். திருநெல்வேலிச் சீமையில் முதல் முதலில் (1778 ல்) கிறித்தவ மதத்திற்கு மாறியவர் தஞ்சாவூரில் இருந்து இங்கு வந்து குடியேறிய மராட்டிய பிராமணப் பெண்ணான கிளாரிந்தாவாகிய கோகிலா (1746 - 1806). ஒருவகையில் நெல்லைச் சீமையில் தென்னிந்திய கிறித்தவ திருச்சபைக்கு வித்திட்டவரும் அவரே எனச் சொல்வதும் மிகையாகாது. அவர் தஞ்சை மண்ணில் ஒரு மராட்டிய பிராமணக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். அவரது இயற்பெயர் கோகிலா. இளம் பருவத்திலேயே பெற்றோரை இழந்து தமது தாத்தாவின் வளர்ப்பில் ஓரளவு கல்வி அறிவு பெற்று, துணிச்சலும் அன்புள்ளமும் கொண்ட பெண்ணாக வளர்ந்தவர். அக்காலத்தில் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னரின் அரண்மனையில் உயர் பதவி வகித்த ஒரு மராட்டிய வயோதிக செல்வந்தருக்குத் திருமணம் செய்விக்கப்பட்டார். மணமான சிறிது காலத்திலேயே கணவர் இறந்ததால் அக்காலத்தில் அவர்களது சமூக வழக்கப்படி வலுக்கட்டாயமாக உடன்கட்டை ஏற்றி வைக்கப்படும் நேரத்தில், அதனைக் கேள்விப்பட்டு  அங்கே சென்ற ஹேரி லிட்டில்டன் (Harry Lyttleton) என்னும் ஆங்கிலேய இராணுவ அதிகாரியால் காப்பாற்றப்பட்டார் என்பதும், அதன்பின் அவர்கள் இருவரும் காதல் வயப்பட்டு ஒன்றாய் வாழ்ந்தனர் என்பதும் பின்னர் கோகிலாவுக்கு ஞானஸ்நானம் செய்வித்த பாதிரியார் ஷ்வார்ட்ஸின் குறிப்புகளில் இருந்தும், செவிவழிச் செய்திகளில் இருந்தும் அறியப்படுவன. இவை அ.மாதவையா எழுதிய 'கிளாரிந்தா' எனும் ஆங்கில நாவலில் குறிக்கப் பெறுகின்றன. லிட்டில்டன் பாளையங்கோட்டைக்கு அதிகாரியாக மாற்றலாகி வரும்போது கோகிலாவும் அவருடன் வந்தார். அதன்பின் தமது வாழ்நாள் முழுவதும் பாளையங்கோட்டையே கோகிலாவின் ஊரானது. லிட்டில்டன் தமது பெருஞ்சொத்துகளை கோகிலாவிற்கு அளித்துவிட்டு மறைந்தார். பின்னர் கோகிலா பெரிய அளவில் சமூக சேவையில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டார். இதற்காகத் தமது சொந்தப் பணத்திலிருந்தும் செலவு செய்தார். உதாரணமாக, மக்களின் பயன்பாட்டிற்காகக் கோட்டையின் கிழக்கு வாசல் அருகில் ஒரு கிணறு வெட்டினார். அது இன்றளவும் பாப்பாத்திக் கிணறு என்று மக்களால் வழங்கப்படுகிறது. பாளையங்கோட்டை எனும் ஊரோடு மட்டுமல்லாமல் சுற்று வட்டாரங்களிலும் அவர்தம் மக்கள் சேவையினால் பெரிதும் அறியப்பட்டார். ஹேரி லிட்டில்டனுடன் மணம் புரியாமல் வாழ்ந்தமையால் கோகிலாவுக்கு ஞானஸ்நானம் அளிக்க மறுத்த பாதிரியார் ஷ்வார்ட்ஸ், பின்னர் லிட்டில்டன் மறைவுக்குப் பின் கோகிலாவின் அளப்பரிய சமூக சேவையை மனதிற் கொண்டு அவருக்கு ஞானஸ்நானம் வழங்கினார். கோகிலா குளோரிந்தா அல்லது கிளாரிந்தா ஆனார். திருநெல்வேலியில் முதன் முதலாகக் கிறித்தவத்திற்கு மாறியவராக கிளாரிந்தா அம்மையார் அறியப்படுகிறார். கோட்டையின் கிழக்கு வாசல் அருகே அவர் கட்டமைத்த தேவாலயமும் பள்ளிக்கூடமும் இன்றும் அவர் பெயர் கூறி விளங்குபவை. சமயப் பணியிலும் சமூகப் பணியிலும் நிவந்து விளங்கிய அவரது வரலாற்றில் இருந்துதான் நெல்லையில் கிறித்தவ திருச்சபையின் வரலாறு தொடங்க முடியும். 1806 இல் மறைந்த அவரது கல்லறை அவர் கட்டிய அந்த தேவாலயத்தின் உள்ளேயே அமையப் பெற்றுள்ளது.
               நெல்லையில் தென்னிந்திய திருச்சபைக்கும் கல்வி நிலையங்களுக்கும் அடித்தளமிட்டவர் கிளாரிந்தா அம்மையார் என்றால், அக்கட்டிடத்தை வலுவாக எழுப்பியவர் ஜெர்மனியில் இருந்து கிறித்தவ மத போதகராகப் பாளையங்கோட்டைக்கு 1820இல் வந்த சார்லஸ் தியோஃபிலஸ்  இவால்ட் இரேனியஸ் (C.T.E. Rhenius) அவர்கள். அவர் திருநெல்வேலிப் பகுதியில் கிறித்தவ சபையின் சுமார் 370 கிளைகளை நிறுவினார்; 107 பள்ளிகளை ஆரம்பித்தார். பாளையங்கோட்டையின் முருகன்குறிச்சி பகுதியில் அவர் 1826 இல் கட்டிய சிறிய ஆலயம் இன்று ஊசிக்கோபுரம் என்று மக்களால் பரவலாக அறியப்படும் தூய திருத்துவப் பேராலயமாக (Holy Trinity Cathedral), பாளையங்கோட்டையின் ஒரு முகவரியாக (Landmark) வளர்ந்து நிற்கிறது. அதன் அருகில் அவர் ஆரம்பித்த பெண்களுக்கான பள்ளி இன்று மேரி சார்ஜன்ட் மேல்நிலைப் பள்ளியாக இயங்கி வருகிறது. இந்தியாவிலேயே விடுதியுடன் பெண்களுக்காக தொடங்கப்பட்ட இரண்டாவது பள்ளி என்ற சிறப்புக்குரியது. அவர் தொடங்கிய பள்ளிகளைத் தொடர்ந்தே நெல்லை மற்றும் பாளையில் ஏனைய பள்ளிகள் உருவெடுத்தன. எனவே பாளையங்கோட்டை தென்னகத்தின் ஆக்ஸ்ஃபோர்ட் எனப் போற்றப்பட்டதில் இரேனியஸ் அவர்களின் பங்களிப்பு அபரிமிதமானது.
             அன்றைக்கு சமூகத்தில் ஆதிக்க சக்தியாக விளங்கிய வேளாளர்களை மதம் மாற்றுவதன் மூலம் தமிழ்ச் சமூகத்தில் ஒரு வலுவான தொடக்கத்தை உருவாக்க எண்ணிய திருச்சபைக்கு மாறாக, ஆதிக்க சக்திகளால் புறக்கணிக்கப்பட்ட நாடார் சமூகத்தினரை மதம் மாற்றி அவர்களைச் சமூக ஒடுக்குமுறையில் இருந்து விடுவிப்பதில் மும்முரம் காட்டினார் இரேனியஸ் ஐயர் (ஐயர் என்பது தலைமைப் பண்பைக் குறிக்கும் சொல். கிறித்துவ மத குருமார்களை ஐயர் என அழைப்பது வழக்கம்). உயர் சாதியினர் மதம் மாறிய பிற்படுத்தப்பட்டோரைத் (குறிப்பாக நாடார் சமூகத்தினரை) துன்புறுத்துவதிலிருந்து அவர்களைப் பாதுகாக்க பல கிறித்தவ கிராமங்கள் இரேனியஸ் காலத்தில் அமைக்கப்பட்டன - நல்லூர், மெய்யூர், சமாதானபுரம், ஆரோக்கியபுரம், இரட்சணியபுரம் என்று பல. குறிப்பாக, ஜெர்மனியைச் சார்ந்த டோனா பிரபு என்பவரின் நிதியுதவியோடு இரேனியஸ் அமைத்த ஊர் டோனாவூர் என வழங்கலாயிற்று. மதம் மாறிய பிற்படுத்தப்பட்டோர் தாங்கள் முன்னர் கொண்டாடிய குரங்கணி அம்மன் கொடை விழா சமயத்தில் அவர்களுக்கு மாற்று விழாவாக மாம்பழச் சங்கத்தை ஆரம்பித்தார். இது நெல்லை திருமண்டலத்தில் அனைத்து திருச்சபைகளையும் ஒருங்கிணைக்கும் தோத்திரப் பண்டிகையாக பாளை நூற்றாண்டு மண்டபத்தில் இன்றளவும் கொண்டாடப்படுகிறது.
                கொண்ட கொள்கையில் உறுதிப்பாடு மிக்கவர் இரேனியஸ். அவர் ஆரம்பித்த ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் உயர் சாதியினர் எதிர்ப்பையும் மீறி, அனைத்து சாதியினரும் ஒன்றாக அமர வேண்டும், விடுதியில் ஒன்றாக அமர்ந்து உண்ண வேண்டும் என்பதை நிலைநாட்டினார். இதற்கெல்லாம் சமூகத்திலும் திருச்சபையிலும் எதிர்ப்பு வலுக்கவே, பயிற்சிப் பள்ளியை இரண்டு ஆண்டுகள் இழுத்து மூடிவிட்டார். அவர் மத போதகர் மட்டுமல்ல, சமூகப் புரட்சியாளரும் கூட. அவர் காலத்தில் இந்தியா வந்த யூத மதப் போதகர் உல்ஃப், "புனிதர் பால் அவர்களுக்குப் பின் தோன்றிய மிகப்பெரிய அப்போஸ்தலர் இரேனியஸ்" என்று புகழாரம் சூட்டினார்.
                 கிறித்தவ சமயப் பணியுடன் அவரது தமிழ் இலக்கியப் பணியும் போற்றத்தக்கது. சென்னையில் முகவை ராமானுஜ கவிராயரிடம் நன்னூல் போன்ற இலக்கண நூல்களையும், நெல்லையில் திருப்பாற்கடல்நாதன் கவிராயர் என்னும் தமிழறிஞரிடம் பதினான்கு வருடங்கள் இலக்கண, இலக்கியங்களையும் கற்றார். பின்னர் வேதாகம மொழியாக்கங்கள், 'தமிழ் இலக்கணம்', 'பூமி சாஸ்திரம்' என்னும் அறிவியல் நூல் எனப் பல படைப்புகளைத் தந்தவர் இரேனியஸ் ஐயர். உரைநடையில் அக்காலத்தில் இருந்த கூட்டெழுத்து முறையை மாற்றித் தற்கால வடிவில் எழுத்துகளுக்கு இடையில் இடம் விட்டு எழுதும் வழக்கத்திற்கு வித்திட்டவர் இரேனியஸ். இத்தகு தமிழ்ப் பணியால் வீரமாமுனிவர், ஜி.யு. போப், இராபர்ட் கால்டுவெல் வரிசையில் நிற்பவர் இரேனியஸ்.
              சமூகப் புரட்சியாளரான இரேனியஸ் தமது உறுதியான சமூக நிலைப்பாட்டின் காரணமாக திருச்சபையின் எதிர்ப்புக்குப் பெருமளவில் ஆளாகி சபையில் இருந்து 1835இல் விலக்கப்பட்டார். புரட்சியாளர்களை எந்தச் சமூகமும் எக்காலத்திலும் விட்டு வைப்பதில்லையே ! ஆனாலும் போராளிகள் தோற்பதில்லையே ! அவருக்குப் பெருமளவில் கிடைத்த ஆதரவாளர்களின் உதவியுடன் புதியதொரு சபையை நிறுவி சமூகப் பணியும் திருமறைப் பணியும் செய்து வந்தார். அவர் 1838 இல் மறைந்த போது பாளையங்கோட்டை அடைக்கலாபுரம் கல்லறைத் தோட்டத்திலிருந்து சற்று தூரத்தில் வெளியே - இன்று மக்கள் குடியிருப்புப் பகுதியில் நடுநாயகமாக -  அடக்கம் செய்யப்பட்டார். கல்லறைத் தோட்டத்தில் பத்தோடு பதினொன்றாக இல்லாமல் அவர் தனித்துவமான பெருமை பெறுவதற்கே அத்தனையும்  நிகழ்ந்தனவோ என்னவோ ! அந்தக் கல்லறை தோட்டமே அவர் திருச்சபை பொறுப்பில் இருந்தபோது ஆங்கிலேய மாவட்ட நிர்வாகத்திடம் மனுச் செய்து திருநெல்வேலி தென்னிந்திய திருச்சபைக்கு அவர் பெற்றுத் தந்தது. அவர் சபையில் இருந்து விலக்கப்பட்டதால் அங்கு அவருக்கு இடமில்லாமல் போனது. வெகு காலம் கழித்து 1980களில் இரேனியஸின் பெருமையுணர்ந்து தென்னிந்திய திருச்சபை அவரையும், அவர்தம் அளப்பரிய சமூக, சமயப் பணிகளையும் அங்கீகரித்தது.
                பொருநை நதிக்கரை வரலாற்றில் இரேனியஸ் ஐயரைப் பற்றி இவ்வளவு நீளமாக நான் எழுதியதற்குக் காரணங்கள் இரண்டு. இன்றைய கல்வி நகரம் பாளையங்கோட்டையின் உருவாக்கத்தில் அவரது பங்களிப்பு முதன்மையானது என்பதும், அவரது பெருமையான வரலாறு இன்றைக்கு தென்னிந்திய திருச்சபை மக்களிலேயே பலருக்கும் தெரியவில்லை என்பதும்.
                இரேனியஸ் அவர்கள் திருநெல்வேலியிலும் சுற்று வட்டாரங்களிலும் விதை போட்டு ஆரம்பித்து வைத்த கல்வி நிலையங்களுக்குப் பின்னர் ம. தி. தா இந்து பள்ளி/கல்லூரி, தூய யோவான் பள்ளி/கல்லூரி, தூய சவேரியார் பள்ளி/கல்லூரி, சாராள் தக்கர் பெண்கள் பள்ளி/கல்லூரி, புனித இஞ்ஞாசியார் பள்ளி/கல்வியியல் கல்லூரி என்று நெல்லை, பாளையில் தோன்றி இப்போது நூறு முதல் நூற்றைம்பது ஆண்டு விழாக்களைக் கொண்டாடி வருகின்றன. ஆஸ்க்வித் நினைவு கண் தெரியாதார் பள்ளி, ஃபிளாரன்ஸ் ஸ்வைன்ஸன் காது கேளாதார் பள்ளி என அக்காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டு தென்னிந்திய திருச்சபையின் கீழ் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. இவையே தமிழ்நாட்டில் முதன் முதலாகத் தொடங்கப்பட்ட கண் தெரியாதார், காது கேளாதார் பள்ளிகள் ஆகும். இப்பள்ளிகளை ஆரம்பிக்கக் காரணமான சாராள் தக்கர், ஆஸ்க்வித், ஃபிளாரன்ஸ் ஸ்வைன்ஸன் இவர்களது வள்ளன்மையும் சமூக சிந்தனையும் பெரும் போற்றுதலுக்குரியன.  இம்மேதகு கல்விச் செயல்பாடுகளால் பாளையங்கோட்டை தென்னிந்தியாவின் ஆக்ஸ்ஃபோர்ட் என்று அக்காலத்தில் வழங்கலாயிற்று.
               ஜெர்மனியிலிருந்து வந்த இரேனியஸ் ஐயரின் தமிழ்த் தொண்டு பற்றிப் பேசிய நாம் நெல்லை மண்ணின் தமிழ்ச் சான்றோரான எம்.எல்.பிள்ளை என்று அழைக்கப்பட்ட கா.சு. பிள்ளை (கா. சுப்ரமணிய பிள்ளை), சொல்லின் செல்வர் ரா.பி. சேதுப்பிள்ளை, ச. வையாபுரி பிள்ளை, புதுமைப்பித்தன் ஆகியோரை நினைவு கூராமல் கடந்து செல்ல இயலாது. ஒவ்வொருவரின் தமிழ்ப்பணி பற்றி விலாவாரியாக எழுத ஒரு புத்தகமே போதாது. மேலும் அவர்கள் ஒட்டுமொத்தமாகத் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கே உரித்தாகிப் போனதால், நெல்லை மண் மட்டுமே அவர்களைச் சொந்தம் கொண்டாட இயலாது. இச்சான்றோர் பெருமக்களும் இனி நாம் காணப்போகும் சில பண்பாளர்களும் வேளாளர் குலத்தவராகவே திகழ்வது தற்செயல் நிகழ்வு என்று சொல்வதற்கில்லை. நெல்லையிலும் சுற்று வட்டாரங்களிலும் அவர்கள் கணிசமான எண்ணிக்கையில் அமைந்ததும் அவர்களில் பலர் கற்றலில் சிறந்து விளங்கியமையும் காரணம் எனலாம்.
             ஆதிக்க சாதியினராய், அவர்கள் சில சாதியினர் - குறிப்பாக நாடார் பெருமக்கள் - மீது நிகழ்த்திய ஒடுக்குமுறைக்கு எதிராக இரேனியஸ் போன்றோர் போராடிய வரலாறு கண்டோம். அதே ஆதிக்க சாதியிலும் புரட்சிகர சிந்தனையாளர்கள் தோன்றியதை மறுப்பதற்கில்லை. உதாரணமாக, சுயசாதி விமர்சனமாக 'நாசகாரக் கும்பல்' என்ற சிறுகதையை அன்றைய நாளில் படைக்கும் துணிவு புதுமைப்பித்தனிடம் இருந்தது. ஜவுளி வணிகத்தில் கோலோச்சிய ஆர்.எம்.கே. விஸ்வநாத பிள்ளை துணிகளுக்குப் பஞ்சம் ஏற்பட்ட இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் ஒவ்வொரு வாடிக்கையாளரும் வாங்கும் துணிகளுக்கு அதிகபட்ச அளவு வகுத்து, எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் சாதிப் பாகுபாடின்றி அக்காலத்திலேயே நியாய விலையில் வழங்கினார்; வணிகத்தில் அறம் தலையாயது என்று நிலைநாட்டினார். நெல்லை நகரில் குமார விலாஸ் உணவகம் நடத்திய திராவிட இயக்க சிந்தனையாளரும் பெரியாரின் சீடருமான பிரமநாயகம் பிள்ளை தமது உணவகத்தில் சாதி பேதமின்றி எல்லோரும் ஒன்றாகத்தான் அமர்ந்து உணவருந்த வேண்டும் என்றும், அதனை ஏற்காதார்க்குத் தமது உணவகத்தில் இடமில்லை என்றும் அறிவிப்பு பலகை வைத்து உயர் சாதியினரின் பலத்த எதிர்ப்புக்கிடையே சமூக நீதியை நிலைநாட்டினார். இவ்வாறு ஆன்றவிந்து அடங்கிய  கொள்கைச் சான்றோர் பலர் வாழ்ந்தது எம் ஊரே !
             பதிவு செய்யப்பட்ட தரவுகளானாலும் செவிவழிச் செய்திகளானாலும் நினைவலைகளில் (Nostalgia) மூழ்கித் திளைப்பது திருநெல்வேலிக்காரனுக்கு, அவன் ஊர் அல்வாவை அவனே ரசித்துச் சுவைப்பது போன்றது. கட்டுரையை முடித்தே ஆவது என்று முடிவெடுத்த தருணத்திலும் கூட அந்நினைவலைகள் புதிது புதிதாகத் தோன்றி ஆர்ப்பரிக்கின்றன. கட்டுரை என ஆரம்பித்ததே இரண்டு பகுதிகளாய் வந்து நிற்கின்றது. புத்தகம் எழுதும் ஆசையும் துணிவும் எப்போதாவது ஏற்பட்டால் அந்த அலைகளில் மென்மேலும் இறங்கலாம்; இப்போதைக்குக் கால் நனைத்ததோடு கரை திரும்பலாம். நான் எழுதாவிட்டாலும் வேறு திருநெல்வேலிக்காரன் வந்து எழுதுவான். 
 
         

Edited by சுப.சோமசுந்தரம்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சுப.சோமசுந்தரம் said:
 பதிவு செய்யப்பட்ட தரவுகளானாலும் செவிவழிச் செய்திகளானாலும் நினைவலைகளில் (Nostalgia) மூழ்கித் திளைப்பது திருநெல்வேலிக்காரனுக்கு, அவன் ஊர் அல்வாவை அவனே ரசித்துச் சுவைப்பது போன்றது. கட்டுரையை முடித்தே ஆவது என்று முடிவெடுத்த தருணத்திலும் கூட அந்நினைவலைகள் புதிது புதிதாகத் தோன்றி ஆர்ப்பரிக்கின்றன. கட்டுரை என ஆரம்பித்ததே இரண்டு பகுதிகளாய் வந்து நிற்கின்றது. புத்தகம் எழுதும் ஆசையும் துணிவும் எப்போதாவது ஏற்பட்டால் அந்த அலைகளில் மென்மேலும் இறங்கலாம்; இப்போதைக்குக் கால் நனைத்ததோடு கரை திரும்பலாம். நான் எழுதாவிட்டாலும் வேறு திருநெல்வேலிக்காரன் வந்து எழுதுவான். 
 
         

நீங்கள் இதன் அடுத்த பகுதியை இன்னமும் எழுதவில்லையே என்று சில தடவைகள் நினைத்திருக்கின்றேன்...... நீங்கள் தான் அலைகளுக்குள்ளும் இறங்க வேண்டும்...........🙏

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.