Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
பதியப்பட்டது (edited)

எச்சார்புளோர் ஈழவிடுதலைப் போராட்ட வரலாற்றினை எழுதினும், ஜெனரல் அனுருத்த ரத்வத்தையை புலிகள் எதிர்கொண்டமை பற்றியோ, புலிகளை ஜெனரல் அனுருத்த ரத்வத்தை எதிர்கொண்டமை பற்றியோ எழுதாமல் இருக்க முடியாது. மூன்றாம் கட்ட ஈழப்போரில் புலிகள் எதிர்கொண்ட அரச தரப்பு இராணுவ வழிநடத்துநர்களில் அனுருத்த ரத்வத்தைக்கும் முக்கிய இடமுள்ளது.  இதனால்தான் புலிகளின் ஈழப்போராட்ட பாடல்களில் அரச தரப்பின் இராணுவ வழிநடத்துநர்களில் அனுருத்த ரத்வத்தை இடம்பிடித்திருக்கிறார். இப்பாடல்களில் எல்லா இடத்திலும் பரிகாசம் செய்யப்படும் ஒருவராகவே ஜெனரல் அனுருத்த ரத்வத்தை இடம்பெறுகிறார்.

கேணல் நிலையில் இருந்த அனுருத்த ரத்வத்தை யாழ்ப்பாணம் மீதான சூரியக்கதிர்(ரிவிரெஷ) நடவடிக்கையின் பின்னர் நேரடியாக ஜெனரல் நிலைக்கு அன்றைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்காவினால் உயர்த்தப்பட்டார். 1996ஆம் ஆண்டு ஜெனரல் அனுருத்த ரத்வத்தை பயணித்த உலங்கு வானூர்தி பழுதுபட்டு புலிகளின் ஆளுகைகொண்ட வவுனியா பகுதியில் தரையிறங்கியபோது, அதிலிருந்து தப்பித்து தரை வழியே போய்விட்டார்!

கீழ்வரும் இப்பாடல் ஈழப்போரியலின் நீண்டகாலச் சமராகிய 'ஜெய்சிக்குறு' சமர்க்காலத்தில் குறித்த சமரினை மையப்படுத்தி புலிகள் வெளியிட்ட பாடல். இப்பாடலின் அனுபல்லவியில் அனுருத்த ரத்வத்தையின் பெயர் இடம்பெறுகின்றது.

யாரென்று நினைத்தாய் எம்மை
ஏன்வந்து அழித்தாய் மண்ணை
போர் என்று வந்தாய் துணிந்து
புலிகாலில் விழுந்தாய் பணிந்து
பார்த்தாயா சிங்களத் தம்பி
இங்கு வருவாயா
அனுருத்தவ நம்பி.
(சரணங்கள் தொடர்கின்றன.)

மேல்வந்த பாடலினை கவிஞர் வேலணையூர் சுரேஷ் எழுத திருமாறன் மற்றும் திருமலைச் சந்திரன் ஆகியோர் பாடியிருந்தனர். இசை:சிறீகுகன். 
இனிவரும் பாடலில் ரத்வத்தையின் பெயர் நேரடியாகவே இடம்பெறுவதைக் காணலாம். இப்பாடலானது முல்லைத்தீவு தளத்தினை 'ஓயாத அலைகள்' நடவடிக்கை மூலம்  மீட்ட புலிகள் அதன் வெற்றியை பறைசாற்றி வெளியிட்ட 'முல்லைப்போர்' ஒலிநாடாவில் இடம்பெற்றது.

'நந்திக் கடலோரம்
முந்தைத் தமிழ் வீரம்
வந்துநின்று ஆடியது நேற்று'

எனும் பாடலின் மூன்றாவது சரணத்தில் ரத்வத்தை இப்படியாக இடம்பெறுகிறார்.

இன்னும் வலிகாமத்துள்ளே
குந்தி இருப்பாயா?
"ரத்வத்தையின்" சொல்லை நம்பி  
எங்கும் திரிவாயா?
இன்னும் இன்னும் முல்லைத்தீவை
எண்ணிக்கொள்ளுவாயா?: புலி
இன்றுவரும் என்றுவரும்
என்று முழிப்பாயா?

கவிஞர் புதுவை இரத்தினதுரை எழுதிய பாடலை தமிழீழ இசைக்குழு இசையில்  பாடகர் நிரோஜன் மற்றும் தியாகராஜா ஆகியோர் சேர்ந்து பாடியிருந்தனர்.
கீழ்வரும் இப்பாடல் உணர்ச்சக் கவிஞர் காசி ஆனந்தன் எழுதியது. இளங்கோவன் செல்லப்பா இசையில் தேனிசை செல்லப்பா பாடிய பாடலிது. 
'செல்லப்பா கொஞ்சம் நில்லப்பா, புலிகள் செய்தியிருந்தால் நீ சொல்லப்பா' எனும் பாடலில் இடம்பெறும் இச்சரணத்தில் ரத்வத்தையின் பெயர் இவ்விதம் இடம்பெறுகிறது.

பொத்துப் பொத்தென்றங்கே
சிங்களர் விமானம்
பூமியில் விழுகுதாம் மெய்யா?
செத்துப் போனாரா
உயிரோடுள்ளாரா
சிங்கள ரத்வத்தை ஐயா.

இந்தியாவில் உருவான இப்பாடலில் இராணுவத் தளபதி ஒருவரின் பெயர் இடம்பெறாமல் பாதுகாப்பு அமைச்சினை நிர்வகித்த ஒருவரான ரத்வத்தையின் பெயர் இடம்பெற்றிருக்கின்றது.

யாழ்ப்பாணத்திலிருந்து புலிகள் வன்னிக்கு பின்னகர முன்னர் அனுருத்த ரத்வத்தை கேணல் நிலையிலேதான் இருந்தார். ரிவிரெஷா எனப்படும் சூரியக்கதிர் நடவடிக்கையின் மூலம் யாழ்ப்பாணம் இலங்கைப் படைகள் வசமான பின்னர் அவர் ஜெனரல் எனும் நிலைக்கு அப்போதைய ஜனாதிபதி சந்திரிகாவினால் உயர்த்தப்பட்டார். சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கைக்கு முன்னர் சில மாதங்களுக்கு முன்னர் 'முன்னேறிப் பாய்தல்' எனும் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்ட அரச படைகள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற முயன்றன. இந்த இராணுவ நடவடிக்கைக்கு எதிராக புலிகள் 'புலிப்பாய்ச்சல்' எனும் நடவடிக்கையை மேற்கொண்டு, குறித்த இராணுவ நடவடிக்கையை முறியடித்தனர். இந்த வெற்றியின் பின்னர் இப்பாடல புலிகளால் வெளியிடப்பட்டது.

பல்லவி இது:

முன்னேறிப் பாய்வதென்ன அம்மா.
நீ
பின்னாலே ஓடுவதேன் சும்மா.
புக்காரா....எடித்தாரா
புக்காரா எடித்தாரா
போயாச்சே நிற்பாரா?

இப்பல்லவியில் இடம்பெறும் புக்காரா என்பது உக்ரெய்ன் தயாரிப்பு போர்விமானம். எடித்தாரா என்பது போர்க்கப்பல். இவையிரண்டும் இந்தச் சமரில் புலிகளால் அழிக்கப்பட்டவை. இப்பாடலில் ரத்வத்தை 'கேணல்' மற்றும் 'மாமன்' எனும் பெயர்களில் காட்டப்படுகிறார்.

மேல் வந்த பாடலின் சரணமிது:

பன்னிரெண்டு ஆயிரம் பேரம்மா - மாமன்
பந்தயக் குதிரை அநேயம்மா
தேரிழுக்க நம்பி வந்து
கேணல் கயிரை பிடிக்க
வேலி வெட்ட வந்தவனே கழுதை
புலி
பாய்கையிலே விட்டதனை உயிரை.

மாமன் என அனுருத்த ரத்வத்தை குறிப்பிடப்படக் காரணம், அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவிற்கு மாமன் முறை என்பதாலேயாம்.
ஜெய்சிக்குறு வெற்றிப்பாடலான 'சுக்குநூறானது சிக்குறு. வந்து சும்மா கிடந்து அது முக்குது' பாடலின் சரணமொன்றில்  இவ்விதம் ரத்வத்தையின் பெயர் இடம்பெறுகின்றது.

வன்னியை என்னென்று எண்ணினாய்
ரத்வத்தையின் சொல்லையா நம்பினாய்
கண்டியின் வீதியில் ஏறினாய்: வந்து
காட்டுக்குள் ஏனடா சாகிறாய்.

இன்னொரு பாடல். மூன்றாம் கட்ட ஈழப்போரில் யாழ்ப்பாணம் கைப்பற்றலினால் ரத்வத்தைக்கு எப்படி பெயர் கிடைத்ததோ,  அதே ரத்வத்தை காலத்தில் இலங்கையின் அதிமுக்கிய தளமான ஆனையிறவுப் பெருந்தளம் 2000ஆம் ஆண்டில் புலிகளால் கைப்பற்றப்பட்டது. குடாரப்பு தரையிறக்கம் எனும் தரையிறக்கம் மூலம் ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கையினால் இத்தளம் மீது நகர்வினை புலிகள் செய்தனர். இதன் வெற்றியாக 'ஆனையிறவு' எனும் ஒலிநாடா புலிகளால் வெளியிடப்பட்டது. புதுவை இரத்தினதுரை எழுதிய பாடல்களுக்கு இசையமைப்பாளர்கள் கண்ணன் மற்றும் முரளி ஆகியோர் இசை வழங்கியிருந்தார். பாடலை எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், திருமலைச் சந்திரன், நிரோஜன், மணிமொழி, தவமலர் ஆகியோர் பாடியிருந்தனர்.

'ஈடுவைத்து ஈடுவைத்து நந்தலாலா' எனத்தொடங்கும் பாடலில் அனுருத்த ரத்வத்தை இவ்விதம் காட்டப்படுகிறார்.

ஊருக்குள்ள போகப்போறம் நந்தலாலா
இப்ப
உள்ளதையும் தந்துபோறா நந்தலாலா.
மாமனையே நம்பிநம்பி
நந்தலாலா:இன்று
மாரடிச்சுக் கொள்ளுறாவாம் நந்தலாலா.

ஜனாதிபதிபதி சந்திரிகாவை பரிகாசம் செய்யும் அப்பாடலில் மாமன் ரத்வத்தையை அவர் நம்பியமையும் பதிவாகியிருக்கிறது. 
ஈழவிடுதலைப் போராட்டத்தில் இப்படியான பதிவுகள் கொண்ட பாடல்கள் பலவுள. 

1938இல் கண்டியில் பிறந்த அனுருத்த ரத்வத்தை 2011இல் மரணித்தமை  குறிப்பிடத்தக்கது.

-- > புரட்சி

Edited by நன்னிச் சோழன்


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.