Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
பதியப்பட்டது

போர்க்காலத்தில் இயல்பான வழக்குடைய இலக்கணச் சொற்களிலேயே பெருவீதமான பாடல்கள் வெளிவந்தன. மிகச்சொற்பமான பாடல்களே வட்டார வழக்குச் சொற்களையும், காலச்சூழல் அமைவுச் சொற்களையும் கொண்டமைந்தன. உதாரணமாக இன்றைய காலத்தில் 'நன்றாக உள்ளது' என்பதற்கு 'சட்டப்படி' எனச் சொல்வர். இது காலச்சூழல் அமைவுச் சொல். அக்காலத்தில் 'அந்தமாதிரி' என்பர். இதை வைத்தும் ஈழப்பாடலுண்டு. இப்பதிகையிலே ஈழவிடுதலைப் போராட்ட காலத்தில் வெளிவந்த பாடல்களில் 'எங்கட', 'நம்மட' போன்ற சொற்கள் உள்ளடங்கும் பாடல்களை நோக்கலாம். சினிமாவும், போரல்லா இலக்கியமும் என அதிகமான உள்ள இக்காலத்தில் இவ்விதமான பதிவுகளுக்காக தேடலும், நினைவுப் பதிவும் மிக அவசியமாம்.

 ஆயிரமான ஈழப்பாடல்களில் 'எங்கட', 'நம்மட' எனும் சொல் இடம்பெறும் பாடலைக் கண்டுபிடிப்பதற்காக,  போகையிலும் வருகையிலும் நிறையவே சிந்திக்க வேண்டிதாயிற்று.  முதலில் 'நம்மட' எனும் சொல் வருகின்ற பாடல். பாடலின் பல்லவி இது.

என்னடா தம்பி கதைக்குறானுகள் 
சந்திவெளியில.
எப்படியாண்டாம் நேற்றைய அடி
கதிரவெளியில.
வாகரைப் போடியார் சொல்லுறாரு
அடியென்ன அடியாம்.
வழிசலுகள் வந்த பீரங்கி
பொடியாம் பொடியாம்.

இப்பாடல் ஈழவிடுதலைப் போராட்ட காலத்தில் அதிகமாக இரசிப்பிற்குட்பட்ட பாடல். உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் எழுதிய பாடலை தேனிசை செல்லப்பா பாடியிருந்தார். 

பாடலின் மொழி வழக்கு மட்டக்களப்பு பிரதேசம் சார்ந்த வட்டார வழக்கு. இங்கே இயல்பான இலக்கண வழக்கு இல்லை. இதில் வரும் மானிடப் பெயர்கள், ஊர்ப்பெயர்கள், பேச்சு வழக்கு யாவுமே மட்டக்களப்பிற்குரியவையே.

'ஒரு தலைவனின் வரவு' இறுவட்டிற்காக இளங்கோவன் செல்லப்பா இசையமைத்த இப்பாடலின் சில வரிகளை காலச்சூழல் கருதி தவிர்க்கிறோம். 
பாடலில் மூன்று சரணங்கள். முதற் சரணம் 'கொடிய...' என தொடங்குகிறது. காலச்சூழல் கருதி அதனை முற்றுமாக பதிய இயலவில்லை. மூன்றாம் சரணம் 'காலம் காலமாக நம்மள அழிச்சவெயலவா...' எனத் தொடங்குகிறது. 

இடைச் சரணத்திலேயே 'நம்மட' சொல் இடம்பெறுகின்றது. இவ்வெழுத்தின் நோக்கே இச்சொற்கள் பற்றியதாகையால் அச்சரணத்தை முற்றுமாய் இதிற் பதிதல் நன்றெனவுணர்ந்து பதிகிறோம். இடைச் சரணம் இதுதான்.

காலங்காலமாக நம்மள
அழிச்சவெயளவா
கழுசரை "நம்மட" பெண்டுகள் உடம்ப
கிழிச்சவெயளவா.
நாலைஞ்சி கோயில பள்ளியக்கூட
இடிச்சவயளவா
"நம்மட" பொடியள் இவன்ட கதைய
முடிச்சவெயளவா

பார்த்தீர்களா? 'நமது' எனும் இயல்பான இலக்கண வழக்கு 'நம்மட' எனும் பிரதேச வழக்காக அமைகின்றது. கவிஞர் காசி ஆனந்தன் அவர்களின் திறமையே தனிதான். மலையக வழக்குகளிலும் அவர் பாடல் புனைந்திருக்கிறார். ஏனெனில் வடக்கு, கிழக்கு, மலையகம் என சகலருக்கும் பொருந்தும் இலக்கண வழக்கு உள்ளது. ஆனால் பிரதேச வழக்குகள் வித்தியாசமானவை. 

பாடலின் இறுதிச் சரணத்தில் கடைசி வரிகளிலும் வேறு வட்டாரச் சொற்களை நோக்கலாம். சரணத்தின் தொடக்கத்தை காலச்சூழல் கருதி தவிர்க்கிறோம்.

அக்கா நேத்துத்தான் கதிரவெளி
பக்கம் போயிருக்கு
அவ வரட்டுண்டா தம்பி மறுகா
இன்னும் கதை இருக்கு

'மறுகா' போன்ற சொற்கள் கிழக்கு வட்டார வழக்கு.

இனி 'எங்கட' எனும் சொல் இடம்பெறும் பாடலை நோக்குவோம். கல்யாணி உமாகாந்தன் பாடிய, இளங்கோவன் செல்லப்பா இசையமைத்த பாடலிது.

புலிகள் மீண்டும் யாழ்ப்பாணத்துக்கு
படையெடுப்பினம்: 'எங்கட'
பொடியள் சிங்களப் படையளுக்கு
முறையா கொடுப்பினம்.
வாங்கிக் கட்டுவினம்
உவையள் வாங்கிக் கட்டுவினம்.

இப்பாடல் போர்க்காலத்திலே யாழ்ப்பாணத்தை மீளவும் கைப்பற்ற புலிகள் எத்தனித்த நாட்களில் பிரபலம். இன்றைய அருங்காட்சியம் அமைந்துள்ள நாவற்குழி கடந்து அரியாலை வரை புலிகள் நகர்ந்தனர். பின்னர் முகமாலை வரை பின்னே நகர்ந்தனர். பிரதேச, மத பாகுபாடின்றி இந்தப் பகுதிகளில் புலிகளின் போராளிகள் அநேகர் மடிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப்பாடலில் வரும் சொற்கள் யாவுமே யாழ்ப்பாண பிரதேச வழக்குகளே. 'எமது', 'எங்கள்' எனும் இலக்கண வழக்குகளின் வட்டார வழக்காக 'எங்கட' என்பதனைக் குறிப்பிடலாம். எடுப்பினம், குடுப்பினம் என்பதெலாம் பிரதேச வழக்குகளே. 

இப்பாடலில் சில வரிகளை காலச்சூழல் கருதி தவிர்க்கிறோம். இரண்டாம் சரணத்தின் பிரதேச வழக்கினை நோக்குவோம்.

கள்ளத்தோணி என்டு எங்கள
நேத்து கழிச்சவ.
வடை, தோச என்டு எங்கள
உவையள் பழிச்சவ
முல்லைத்தீவில அடிவாங்கி
முழியா முழிச்சவ.
பொடியள் உவைய கிளிநொச்சியில
கிழியா கிழிச்சவ

இப்படியாக இப்பாடலில் முழுமையாக யாழ்ப்பாணத்திலே பேசப்படும் பேச்சு வழக்காக சொற்கள் அமைகின்றன. இவையெல்லாமே அக்காலத்திலே பிரபலமாக ஒலித்த பாடல்களே. 'மெய்யே!' போன்ற ஆச்சரிய வெளிப்படுத்துகைச் சொற்களும் இப்பாடலில் உள்ளன. 

இன்னுமொரு பாடல். கிட்டுப் பீரங்கிப் படையணி, குட்டிச்சிறி மோட்டார் படையணி பற்றிய 'வரும்பகை திரும்பும்' இறுவட்டில் இடம்பெற்றது. இசைப்பிரியனின் இசையில் தமிழ்க்கவி, சீலன், மேரி உள்ளிட்டோர் பாடிய பாடல். 

கிட்டுப் படை பீரங்கிக்கு
கிட்ட நிக்க யாருமில்லை
குட்டிச்சிறீ மோட்டாரோட
முட்டி நிக்க ஜீவனில்ல

என்பதே பல்லவி. இப்பாடலில் பொதுவாக கிராமிய வழக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. பாடலின் தொகையறாவின் தொடக்கத்தில் மலையக வழக்கிற்கு ஒப்பான வழக்கு உள்ளது.  இப்பாடலிலும் 'எங்கட' எனும் சொல் உள்ளது. முதற்சரணத்தைத் தவிர பிற சரணங்களைத் தவிர்க்கிறோம்.

நெல்ல வெதைச்ச 'எங்கட' மண்ணில
செல்லை வெதச்சான் கேளு மச்சான்
புல்லையும் பூவையும் பிஞ்சையும் தேய்ச்சி
தொல்லை கொடுத்தான்....... ....

இதிலே 'எங்கட' சொல் வந்ததனை நோக்கலாம்.

காலச்சூழல் கருதி இப்பகுதி கட்டுப்பாடாகிறது. இப்பாடல் பொதுவான கிராமிய வழக்கிலே வந்ததே.  

இப்படியாக போர்க்காலப் பாடல்கள் பன்முக நோக்கோடு சகல பகுதிகளையும் உள்ளடக்கி பல விதங்களில் வெளியாகி உள்ளமை நோக்கத்தக்கது. ஈழவிடுதலைப் போராட்ட காலத்தில் பிரதேச வழக்குச் சொற்கள் கொண்ட பிற பாடல்களை வாய்ப்பிருப்பின்  பிறிதொரு பொழுதில் நோக்கலாம்.

-->புரட்சி

  • நன்னிச் சோழன் changed the title to 'எங்கட' மற்றும் 'நம்மட' சொற்கள் இடம்பெறும் தமிழீழ விடுதலைப் பாடல்கள் பற்றிய நோக்கு


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.