Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தமிழகத்தில் வணிகம் செய்த யூதர்கள்
படக்குறிப்பு, 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெண் ஒருவரின் கல்லறையில் வைக்கப்பட்டிருந்த கல்வெட்டு என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. கட்டுரை தகவல்
  • எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

ராமநாதபுரம் அடுத்த பெரியபட்டினம் மரைக்காயர் நகர் பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் துணி துவைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த ஹீப்ரூ மொழிக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டதையடுத்து தொல்லியல் துறையினர் அதை ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.

அந்த கல்வெட்டு 13-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெண் ஒருவரின் கல்லறையில் வைக்கப்பட்டிருந்த கல்வெட்டு என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ள நிலையில், அக்கல்வெட்டு குறித்து முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என பெரியபட்டினம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமநாதபுரத்தில் இருந்து 20கி.மீ., தொலைவில் உள்ளது பெரியபட்டினம் கடற்கரை கிராமம். பெரியபட்டினம் தமிழகத்தில் பாண்டிய நாட்டுக் கடற்கரைப் பகுதியில் சிறப்பு பெற்று விளங்கிய துறைமுகங்களில் ஒன்று. இங்கு தமிழ் மற்றும் அரபு மொழியில் எழுதப்பட்ட பழங்காலக் கல்வெட்டுகள் அடிக்கடி கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.

பதிமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தக் கல்வெட்டின் வரலாறு மற்றும் பின்னணி என்ன?

பவளப் பாறையால் ஆன கல்வெட்டு

பவளப் பாறையால் ஆன கல்வெட்டு

வரலாற்றில் முக்கிய துறைமுக வர்த்தக நகரமாக இருந்தது பெரியபட்டினம்.

அங்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு மரைக்காயர் நகர் பகுதியைச் சேர்ந்த பாலு என்பவரின் தென்னந்தோப்பில் 80 செ.மீ நீளமும் 60 செ.மீ அகலமும் கொண்ட துணி துவைக்கும் கல்லில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்ததை அப்பகுதியைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர் ஹத்தீம் அலி என்பவர் கண்டுள்ளார்.

இதையடுத்து அவர் உடனடியாக இது குறித்து ஆராய முற்பட்டபோது அந்தக் கல்வெட்டில் உள்ள எழுத்துக்கள் அரபு அல்லது தமிழ் மொழியில் இல்லை என்பதால் அந்த கல்வெட்டு படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார்.

அதனைப் பார்த்து துபாயில் பணியாற்றி வரும் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் ஜக்ரியா என்பவர் இது குறித்த தகவல்களைச் சேகரித்த போது அந்த கல்வெட்டில் இருந்தது ஹீப்ரு மொழி என தெரிய வந்தது.

அதைத் தொடர்ந்து அந்த கல்வெட்டில் ஹீப்ரூ மொழியில் பொறிக்கப்பட்ட வார்த்தைகளை படித்துப் பார்த்ததில் ‘நிகி மிய்யா’ என்ற பெண்ணின் கல்லறையில் வைக்கப்பட்டிருந்த கல்வெட்டு எனவும் அதில் செலூசிட் யுகம் (Shvat Seleucid era) 1536-37 என்றும், கிக்ரோபியன் காலண்டர் கிபி 1224-25 என குறிப்பிடப்பட்டுள்ளதாக முதல் தகவல் கிடைத்துள்ளது.

மேலும் அந்தக் கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருந்த சில எழுத்துகள் சிதைந்து போய் உள்ளதால் முழுமையான தகவல்களைப் பெற முடியவில்லை. இருப்பினும் தற்போது கிடைத்துள்ள தகவலின் அடிப்படையில் பெரியபட்டினம் பகுதியில் வாழ்ந்த ஒரு யூதப் பெண்மணியின் கல்லறையில் பொறிக்கப்பட்டிருந்த கல்வெட்டு என்பது மட்டும் தெரியவந்துள்ளது.

 

கல்வெட்டைக் கைப்பற்றிய ராமநாதபுரம் தொல்லியல் துறை

பாலு
படக்குறிப்பு, நிலத்தின் உரிமையாளர் பாலு

இதுகுறித்து தகவல் அறிந்த ராமநாதபுரம் தொல்லியல் துறை அதிகாரிகள் கீழக்கரை வருவாய் துறை அதிகாரிகளுடன் இணைந்து பெரியபட்டினம் அடுத்த மரைக்காயர் நகர் பகுதியில் உள்ள தென்னந்தோப்பிற்கு சென்று நிலத்தின் உரிமையாளர் அனுமதியுடன் துணி துவைப்பதற்கு பயன்படுத்தப்பட்டு வந்த அந்தக் கல்வெட்டை பத்திரமாக ராமநாதபுரம் தொல்லியல் துறை அலுவலகத்திற்கு எடுத்து சென்றனர்.

அந்தக் கல்வெட்டில் ரசாயனம் தடவி சுத்தம் செய்து கல்வெட்டில் எழுதப்பட்டுள்ள வார்த்தைகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

இந்தக் கல்வெட்டு, பவளப்பாறைகளால் ஆனது. இந்த வகை கல் ராமேஸ்வரம் அடுத்த பிசாசுமுனை மற்றும் இலங்கை கடல் பகுதிகளில் அதிகளவு இருக்கும் என்பதால், அங்கிருந்து கொண்டு வரப்பட்டதாக இருக்கும் என்கின்றனர் தொல்லியல் ஆர்வலர்கள்.

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய நிலத்தின் உரிமையாளர் பாலு, “பல ஆண்டுகளாக இந்த தென்னந்தோப்பில் வசித்து வருகிறோம். இங்கு பெரிய கிணறு ஒன்று பல ஆண்டுகளாக இருந்தது. அந்த கிணற்றுக்கு அருகே இந்தக் கல் நீண்ட காலமாக இருந்தது. காலப்போக்கில் நீர் வற்றியதால் அதை மூடிவிட்டு இங்கு ஆழ்துளை கிணறு அமைத்து பயன்படுத்தி வருகிறோம்.

"கிணற்றுக்கு அருகே கிடந்த கல்லை துணி துவைக்கப் பயன்படுத்தி வந்தோம். ஆனால் அந்தக் கல்லில் பழங்கால எழுத்துக்கள் இருப்பதாகக் கூறி வருவாய்த்துறை அதிகாரிகள் கேட்டதால் அவர்களிடம் கல்லை ஒப்படைத்தேன்,” என்று கூறினார்.

‘போர்ச்சுகீசியர்கள் வாணிபம் செய்ததற்கான சான்றுகள்’

ரியாஸ் கான்
படக்குறிப்பு, பெரியபட்டினத்தின் ஊராட்சி மன்றத் தலைவர் ரியாஸ் கான்

பெரியபட்டினத்தின் ஊராட்சி மன்றத் தலைவர் ரியாஸ் கான் நம்மிடம் பேசுகையில், “பெரியபட்டினம் கடற்கரை கிராமத்தில் இருந்து போர்ச்சுகீசியர்கள் வாணிபம் செய்ததற்கான சான்றுகள் அதிகம் கிடைத்துள்ளன, பல்வேறு நாடுகளுக்கு இங்கிருந்து வர்த்தகம் நடைபெற்றதற்கு ஆதாரமாக நாணயங்கள், கல்வெட்டுகள் கிடைத்த வண்ணம் உள்ளன,” என்கிறார்.

சமீபத்தில் கடற்கரையில் கிடைத்த பழங்காலக் கல் நங்கூரம் தற்போது பெரியபட்டினம் பஞ்சாயத்து அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

மேலும், பெரியபட்டினம் பகுதியில் அகழாய்வு நடத்தினால் பல நூறு ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் கடல் வழி வர்த்தகம் செய்ததற்கான சான்று மற்றும் அருகில் உள்ள அழகன்குளம் இரண்டுக்குமான தொடர்பு குறித்து தெரிந்து கொள்ளலாம் என்று அவர் கூறுகிறார்.

 

‘ஏமன் நாட்டு கல்வெட்டுகள் உடனான தொடர்பு’

ஜகாரியா
படக்குறிப்பு,கேரள மாநிலத்தை சேர்ந்த ஜகாரியா

பெரியபட்டினத்தில் கிடைத்த கல்வெட்டு ஹீப்ரு மொழியில் இருப்பதைக் கண்டறிந்த ஜகாரியா, அது குறித்து பிபிசி தமிழிடம் விரிவாக பேசினார்.

“நான் கேரள மாநிலத்தை சேர்ந்தவன். கடந்த பத்து ஆண்டுகள் துபாயில் வேலை செய்து வருகிறேன். சிறுவயதிலிருந்தே யூதர்கள் குறித்தும், ஹீப்ரு மொழி குறித்தும் கற்று கொள்வதில் தனி ஆர்வம் இருந்தது. என்னுடைய 11 வயதில் கேரள மாநிலம் கொச்சியில் இருந்த 11 யூதர்களிடம் ஹீப்ரு படிக்க கற்றுக் கொண்டேன்,” என்கிறார்.

அரபி மொழிக்கும் ஹீப்ரு மொழிக்கும், ஒற்றுமைகள் இருந்ததால் தன்னால் எளிதில் கற்று கொள்ள முடிந்தது என்றும், கல்லூரியில் யூதர்கள் குறித்து ஆய்வும் மேற்கொண்டதாகவும் கூறுகிறார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட ஹீப்ரு மொழி கல்வெட்டு தொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண்ட அவர், அது ஹீப்ரு மொழி தான் என்பதை உறுதிசெய்துள்ளார்.

“அந்த கல்வெட்டு இறந்தவர்கள் கல்லறையில் வைக்கப்படும் கல்வெட்டு என அதில் எழுதி இருந்த வார்த்தைகள் அடிப்படையில் தெரிந்து கொண்டேன். ஏமன் நாட்டில் இதே போன்ற கல்லறையில் வைக்கப்பட்டு இருந்த கல்வெட்டுகளை பார்த்துள்ளேன,” என்கிறார்.

பெரியபட்டினத்திற்கு நேரில் வந்து அந்த கல் குறித்து ஆய்வு செய்தபோது அது 1224-25 இடைப்பட்ட காலத்தில் வைக்கப்பட்டது என அதில் பொறிக்கப்பட்ட எழுத்துகளை வைத்து தெரிந்து கொண்டதாகவும் ஜகாரியா கூறுகிறார்.

“கல்வெட்டில் இருந்த முதல் மற்றும் இரண்டாவது வரியில் இறந்தவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தனை செய்வதாக எழுதப்பட்டிருந்தது. மூன்றாவது வரியில் இறந்தவரின் பெயர் எழுதப்பட்டிருந்தது.”

“ஆனால் அந்த வரிசையில் சில எழுத்துக்கள் சிதைந்திருந்ததால் கல்வெட்டில் இருந்த பெயர் என்னவென முழுமையாக கண்டறிய முடியவில்லை,” என்கிறார் ஜகாரியா.

கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு ஆண் கல்லறையா அல்லது பெண் கல்லறையா என்பது மூன்றாவது வரியில் உள்ள சிதைந்த வார்த்தைகளை ஆய்வு செய்தால் தெரியவரும் என்றும், இதற்காக மீண்டும் அக்டோபர் மாதம் இந்தியா வரவிருப்பதாகவும் அவர் கூறினார்.

தொடர்ந்து பேசுகையில், “கேரள மாநிலத்தில் ஹீப்ரூ மொழியில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டில் 1269-ஆம் ஆண்டு என குறிப்பிடப்பட்டிருந்தது எனவே அடிப்படையில் இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட மிகவும் பழமையான கல்வெட்டு கேரளாவில் உள்ளது என கூறப்படுகிறது.

“இந்நிலையில் பெரியபட்டினத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு 1224-25 காலகட்டங்களில் எழுதப்பட்டுள்ளது என்பது உறுதி செய்யப்பட்டால் இந்தியாவில் கண்டெடுக்கப்பட்டுள்ள மிக பழமையான கல்வெட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் தான் உள்ளது என்பது உறுதியாகும்,” என்கிறார் ஜகாரியா.

 

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட ஹீப்ரு மொழி கல்வெட்டு

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட ஹீப்ரு மொழி கல்வெட்டு

இது குறித்து தஞ்சை தமிழ் பல்கலைக்கழக கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறை தலைவர் செல்வக்குமார் பிபிசி தமிழிடம் பேசுகையில், “பெரியபட்டினம் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு ராமநாதபுரம் தொல்லியல் துறை அலுவலகத்தில் வைத்து பார்த்தேன். எனக்கு ஹீப்ரு மொழி தெரியாததால் அதை முழுமையாக என்னால் படிக்க முடியவில்லை. இருப்பினும் ஹீப்ரு மொழி தெரிந்த சில நிபுணர்களுக்கு அனுப்பி வாசிக்க சொல்லி உள்ளேன்,” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “பெரியபட்டினம் அருகே வாலாந்தரவை என்ற பகுதியில் யூதக் கல்வெட்டு ஒன்று சமீபத்தில் கிடைத்தது. தென்னிந்தியா முழுவதும் கொங்கன் கடற்கரையில் மேற்காசியாவில் இருந்து வந்த வணிகர்கள் வணிகம் செய்துள்ளனர்,” என்கிறார்.

“யூதர்கள் தமிழகத்தில் வணிகம் செய்தது போல் தமிழர்கள் சீனா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வணிகம் செய்துள்ளனர். தாய்லாந்தில் உள்ள ஒரு கல்வெட்டின் மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளது,” என்று தெரிவித்தார்.

பிற மொழிகள் பேசிய, பிற சமயங்களைச் சேர்ந்த வணிகர்களை அஞ்சு வண்ணத்தார் என்று குறிப்பிட்டுள்ளதாகக் கூறிய செல்வக்குமார், “பெரியபட்டினத்தில் இஸ்லாமிய சமயம், யூத சமயம், சைவம், வைணவம் உள்ளிட்டவற்றை பின்பற்றும் வணிகர்கள் வாழ்ந்ததற்கான சான்றும் கிடைத்துள்ளது,” என்று கூறினார்.

 
பெரியபட்டினத்தில் அகழாய்வு

பெரியபட்டினத்தில் அகழாய்வு நடத்திய ஜப்பான் பேராசிரியர்கள்

இதற்கு முன்னரும் பெரியபட்டினத்தில் பல அகழ்வாவுகள் நடந்துள்ளன. அவற்றில் பல முக்கியமான சான்றுகள் கிடைத்துள்ளன.

தமிழ்ப் பல்கலைக்கழக கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை சார்பில் 1987-ஆம் ஆண்டு மார்ச் மாதம் பேராசிரியர் ஏ.சுப்பராயலு தலைமையில் பெரியபட்டினத்தில் அகழாய்வு நடத்தப்பட்டது.

இந்த அகழாய்வில் ஜப்பான் நாட்டில் உள்ள டோக்கியோ பல்கலைக்கழக பேராசிரியர்கள் இணைந்து பெரியபட்டினத்தில் நடைபெற்ற அகழாய்வைப் பார்வையிட்டனர்.

கி.பி., பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று பெரியபட்டினத்தைப் 'பராக்கிரம பட்டினம்' என குறிப்பிடப்படுகிறது.

மேலும் கி.பி., 11-ஆம் நூற்றாண்டில், பெரிய பட்டினம் ‘பவித்திர மாணிக்கபட்டினம்’ என்று அழைக்கப்பட்டுள்ளது என பெரிய பட்டினத்திற்கு அருகே உள்ள திருப்புல்லாணி கோவிலில் கி.பி 1225-ஆம் ஆண்டு உள்ள கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முத்து குளித்தலில் இப்பகுதி அக்காலத்தில் சிறப்புப் பெற்றிருந்தது. சிறந்த துறைமுகமாகவும் இருந்த இப்பகுதி ‘பவித்திர மாணிக்கப்பட்டினம்’ எனப் பெயர் பெற்று, பின்னர் ‘பராக்கிரம பட்டினமாக’ மாற்றம் பெற்று, தற்போது பெரியபட்டினம் என அழைக்கப்படுகிறது.

அகழாய்வில் என்ன கிடைத்தது?

பெரியபட்டினத்தில் நடைபெற்ற அகழாய்வில் கிடைத்த சீன மண் கலங்கள், செப்புக் காசுகளில் பாண்டிய மன்னர்களின் பட்டப் பெயர்கள் பொறிக்கப்பட்ட நாணயங்கள், மற்றும் மேற்பரப்பில் கண்டெடுக்கப்பட்ட சில பொன் நாணயங்கள் ராமநாதபுரம் தமிழ்நாடு தொல்லியல் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், 1946-ஆம் ஆண்டு பெரியபட்டினத்தில் தாவீதின் மகள் மரியம் என்பவர் கல்லறையில் ஹீப்ரு மொழியில் எழுதப்பட்ட கல்வெட்டு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கல்வெட்டில் 'ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனையும், அங்கு யூதக் கோவில் இருந்ததாகவும்' குறிப்பிடப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில் இந்தியாவின் முதல் யூதக் கோவில் பெரியபட்டினத்தில் இருந்தது என்பது அந்த கல்வெட்டு மூலம் தெரியவந்தது. அந்தக் கல்வெட்டு ராமநாதபுரம் வருவாய் துறையினர் வசம் உள்ளது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.