Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஜம்மு, தீவிரவாதத் தாக்குதல்
கட்டுரை தகவல்
  • எழுதியவர், ராகவேந்திர ராவ்
  • பதவி, ஜம்முவிலிருந்து திரும்பிய பிபிசி நிருபர்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

ரியாசி, கதுவா, ரஜோரி, டோடா – இவை ஜம்முவில் சமீபத்தில் தீவிரவாதத் தாக்குதல்கள் நடந்த பகுதிகள்.

ஜம்மு காஷ்மீர் சட்டசபைத் தேர்தலை செப்டம்பர் மாத இறுதியில் நடத்த மத்திய தேர்தல் ஆணையம் தயாராகி வரும் வேளையில் இந்தத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, சமீபத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இந்தப் பிரச்னை விரைவில் கட்டுப்படுத்தப்படும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

கதுவாவை தவிர, இந்தத் தாக்குதல்களுக்குக் காரணமானவர்கள் பிடிபடவோ, கொல்லப்படவோ இல்லை.

கடந்த சில ஆண்டுகளாக ஜம்முவில் நடக்கும் தீவிரவாத சம்பவங்களைக் கூர்ந்து கவனித்தால், தாக்குதல் நடத்தியவர்கள் பிடிபடாமல் இருப்பது ஒரு புதிய போக்காக வெளிப்படுகிறது.

இந்தப் போக்கு, 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஜம்முவின் பூஞ்ச் மற்றும் மெந்தார் பகுதிகளில் தீவிரவாதிகளுடனான என்கவுன்டரில் மொத்தம் ஒன்பது ராணுவ வீரர்கள் இறந்தபோது துவங்கியது.

இந்த இரண்டு என்கவுன்டர்களுக்கு பிறகு இந்திய ராணுவம் காடுகளில் ரோந்துப் பணிகளைத் துவங்கியது. ஒரு மாதத்துக்கும் மேலாக ராணுவத்துக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே அடர்ந்த காடுகளில் மோதல்கள் நடப்பதாகச் செய்திகள் வந்துகொண்டே இருந்தன.

இது இன்று வரை நீடிப்பதாகக் கருதப்படுகிறது. ஆனால் பல வாரங்களுக்குப் பிறகும், தீவிரவாதிகள் குறித்த எந்தத் தடயமும் கிடைக்கவில்லை.

ஜம்மு, தீவிரவாதத் தாக்குதல் படக்குறிப்பு,ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் முன்னாள் டி.ஜி.பி-யான எஸ்.பி வைத்

உத்தியில் மாற்றமா?

தீவிரவாதிகளின் உத்தியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் முன்னாள் டி.ஜி.பி-யான எஸ்.பி.வைத் கூறுகிறார்.

இதுகுறித்துப் பேசிய அவர், "முதலில், அவர்கள் (தீவிரவாதிகள்) காட்டுப் போர், மலைப்போர் ஆகியவற்றில் பயிற்சி பெற்றவர்கள். அவர்களுக்கு நவீன ஆயுதங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை மிகவும் சக்தி வாய்ந்தவை. அவர்கள் கிட்டத்தட்ட துப்பாக்கி சுடும் வீரர்களைப் போலவே செயல்படுகிறார்கள். இந்த ஆயுதங்கள் ‘நைட் விஷன்’ கொண்டவை. எனவே அவற்றை இரவிலும் பயன்படுத்தலாம்," என்கிறார்.

"இரண்டாவதாக, ராணுவத்தைக் கண்காணித்து, அவர்களது நடமாட்டத்தைக் குறித்து வைத்து, அவர்களைத் தாக்கிவிட்டு தப்பிக்க வழி தேடுமாறும் அவர்களுக்குக் கூறப்பட்டுள்ளது," என்கிறார்.

ரஜோரி மற்றும் பூஞ்ச் போன்ற எல்லைப் பகுதிகளில் ஊடுருவல் மற்றும் தாக்குதல்கள் ஒரு பொதுவான விஷயம். ஆனால், தாக்குதல் நடத்தியவர்கள் தடயமே இல்லாமல் மறைந்து விடுவதும், பாதுகாப்புப் படையினருக்கு இது பெரும் தலைவலியாக மாறுவதும் புதிய விஷயம்.

இதனால், பொதுமக்களிடையே அச்சமும், பதற்றமும் நிலவி வருகிறது. டாக்டர் ஜம்ருத் முகல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள பூஞ்ச் பகுதியில் வசித்து வருகிறார்.

"அவர்கள் (தாக்குதல் செய்பவர்கள்) வருகிறார்கள், குற்றங்களைச் செய்து பின்னர் மறைந்துவிடுகிறார்கள். அவர்கள் எங்கே போகிறார்கள்? சில நிமிடங்களிலோ அல்லது நொடிகளிலோ அவர்களால் எல்லையைத் தாண்ட முடியாது. எனவே அவர்கள் எங்காவது இருக்கிறார்கள் என்று அர்த்தம். இங்கு காடுகள் எவ்வளவு அடர்ந்துள்ளன என்பதை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். பெரிய மலைகளும் உள்ளன. இது மிகவும் கடினமான பகுதி,” என்கிறார் அவர்.

"காஷ்மீருடன் ஒப்பிடும்போது இந்தப் பகுதியில் தீவிரவாதிகளைக் கண்டுபிடிப்பது கடினம் என்பதால் இங்கு இப்படி நடப்பதாக," அவர் கூறுகிறார்.

பூஞ்சில் வசிக்கும் வழக்கறிஞர் முகமது ஜமான், ‘பீர் பஞ்சால் மனித உரிமைகள் அமைப்பை’ நடத்தி வருகிறார்.

அவர், “இந்தச் சம்பவங்களின் முழு உத்தியும் மாறிவிட்டது என்று நாங்கள் எண்ணுகிறோம். ஒருவகையில், கொரில்லா போரைப் பற்றி நாங்கள் கேள்விப்பட்டோம். அதே வழியில் அவர்கள் வந்து வாகனங்கள் மீதும், பாதுகாப்புப் படையினர் மீதும் தாக்குகிறார்கள். இது கவலைக்குரிய விஷயம். தாக்குதலுக்குப் பிறகு அவர்களின் எந்தத் தடயமும் இருப்பதில்லை. அவர்கள் காடுகளில் மறைந்திருக்கிறார்கள்," என்கிறார்.

 

பயத்தின் நிழலில் வாழ்க்கை

ஜம்மு, தீவிரவாதத் தாக்குதல்
படக்குறிப்பு,மே 5ஆம் தேதி இந்திய விமானப்படையின் கான்வாய் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்

ஜம்முவில் சமீபத்தில் நடந்த ஒரேயொரு தாக்குதலில் அதற்குக் காரணமானவர்கள் இருவரும் கொல்லப்பட்டனர். கதுவாவின் சுஹால் கிராமத்தில் ஜூன் 11ஆம் தேதி இரண்டு தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது இந்தத் தாக்குதல் நடந்தது.

இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட ஒருவர் தனது சொந்த கையெறி குண்டு வெடித்ததாலும் மற்றவர் பாதுகாப்புப் படையினருடனான என்கவுண்டரிலும் கொல்லப்பட்டார்.

அன்றைய தினம் சுஹாலில் என்ன நடந்தது என்பதை நேரில் பார்த்த அக்கிராமத்தின் மக்கள் சிலர் பேசினார்கள்.

இந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஓர் இளைஞர், "அவர் எங்களை உரக்க அழைத்தார். குடிக்கத் தண்ணீர் கொடுங்கள் என்றார். நீங்கள் யாரென்று சொல்லுங்கள் தண்ணீர் தருகிறேன் என்று நான் சொன்னேன். அதற்கு 'முதலில் எங்களுக்குத் தண்ணீர் கொடுங்கள், பிறகு சொல்கிறேன்' என்றார். முதலில் அவரது பெயரையும் ஊரையும் கேட்டேன். அவர் அமர்ந்து பேசலாம் என்றார். அவர் பஞ்சாபியும் டோக்ரியும் கலந்த மொழியைப் பேசினார். அவர் முன்னோக்கி வந்ததும், தனது முதுகில் தொங்கிய ஆயுதத்தை எடுத்து சுடத் தொடங்கினார்," என்றார்.

தாக்குதல் நடத்திய இருவரும் தன்னிடம் வந்து குடிக்கத் தண்ணீர் கேட்டதாக சுஹால் கிராமத்தைச் சேர்ந்த வயதான கடைக்காரர் ஒருவர் தெரிவித்தார்.

“தண்ணீர் குடித்துவிட்டு, திறந்த வெளியில் நான்கைந்து முறை துப்பாக்கியால் சுட்டனர். அதன் பிறகு கடையின் ஷட்டரை மூடிவிட்டு காலை வரை உள்ளேயே கிடந்தேன்,” என்றார் அவர். இந்தக் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் சுவர்களில் தோட்டாக்கள் சுடப்பட்ட இடங்களைக் கண்டோம்.

 
ஜம்மு, தீவிரவாதத் தாக்குதல்
படக்குறிப்பு,ஓம்கார் நாத்தின் தாயார் ஞானோ தேவி, தாக்குதல் நடத்தியவர்கள் மீண்டும் வரக்கூடும் என்று மக்கள் அச்சத்தில் உள்ளதாகக் கூறுகிறார்

ஓம்கார் நாத் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் துப்பாக்கியால் சுட்டதில் அவரது கையில் காயம் ஏற்பட்டது. 90 வயதான அவரது தாயார் ஞானோ தேவி கூறுகையில், "தீவிரவாதிகள் வந்ததாகக் கூறினர். வெடிகுண்டு வீசினர். ஓம்கார் வெளியே சென்று பார்த்தார். அவர் அங்கு சென்றவுடன் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்," என்றார்.

"நான்கு தோட்டாக்கள் சுடப்பட்டன. நாங்கள் பயந்து போயிருக்கிறோம். மாலை ஆறு மணிக்கு கிராமம் வெறிச்சோடி விடுகிறது. அவர்கள் மீண்டும் வரக்கூடும் என்று மக்கள் பயப்படுகிறார்கள்," என்றார்.

சுஹால் கிராமத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரும் கொல்லப்பட்டனர். ஆனால் கிராம மக்கள் இன்னும் கவலையில் உள்ளனர்.

இந்தக் கிராமத்தில் வசிக்கும் ரிங்கு ஷர்மா கூறுகையில், "இன்னும் மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. ஏனென்றால் அவர்கள் இன்னும் சுற்றத்தில் எங்கோ இருப்பதாக மக்கள் நினைக்கிறார்கள். இது காட்டுப் பகுதி என்பதால் இப்போது தாக்குதல்கள் நடக்கின்றன. அதனால் மக்கள் மத்தியில் பீதி நிலவுகிறது,” என்கிறார் அவர்.

சுஹால் கிராமத்தைப் போலவே ஜம்முவின் பல பகுதிகளும் அடர்ந்த காடுகளால் சூழப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் இருந்து 20கி.மீ., தொலைவில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சர்வதேச எல்லை உள்ளது. இந்த அடர்ந்த காடுகளுக்குள் பதுங்கியிருந்து தீவிரவாதிகள் எல்லை தாண்டி இந்தியாவுக்குள் நுழைவதாகப் பாதுகாப்பு அமைப்புகள் கூறுகின்றன.

ஜூன் 11ஆம் தேதி சுஹால் கிராமத்தில் நடந்த வன்முறை சம்பவத்திற்குப் பிறகு, இங்குள்ள மக்களிடையே பாதுகாப்பு குறித்த கவலை அதிகரித்துள்ளது. இப்பகுதி மக்கள் தொடர்ந்து அச்சத்தின் நிழலில் வாழ்ந்து வருகின்றனர்.

 

ஆறாத பழைய காயங்கள்

ஜம்மு, தீவிரவாதத் தாக்குதல்
படக்குறிப்பு,தீவிரவாத தாக்குதலில் சரோஜ் பாலா தனது இரண்டு மகன்களை இழந்தார்

ஜம்மு பகுதியில் சமீபகாலமாக நடந்த சம்பவங்களால் மக்கள் மத்தியில் அச்சம் நிலவி வரும் நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்த வன்முறையின் காயங்கள் இன்னும் ஆறாமல் உள்ளன.

ரஜோரியின் தாங்ரி கிராமத்தில் உள்ள ஒரு வீடு இப்போது துணை ராணுவப் படையினரால் எப்போதும் பாதுகாக்கப்படுகிறது. இதே இடத்தில்தான் 2022ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி இரவு இரண்டு தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். மறுநாள் இந்த வீட்டின் அருகே வெடிகுண்டு வெடித்தது.

இந்த இரண்டு சம்பவங்களிலும் மொத்தம் 7 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் இரண்டு குழந்தைகளும் அடங்குவர். இந்தத் தாக்குதலில் சரோஜ் பாலாவின் இரண்டு இளம் மகன்கள் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்தியவர்கள் தப்பியோடிவிட்டனர்.

சரோஜ் இன்னும் நீதிக்காக காத்திருக்கிறார்.

சரோஜ் பாலா, "யாரால் தங்கள் குழந்தைகளை மறக்க முடியும்? கிராமத்தில் கார்கள் வரும்போது, என் குழந்தைகள் வருவதாக உணர்கிறேன். என் குழந்தைகள் இன்னும் உயிருடன் இருப்பதாக உணர்கிறேன். என் வீட்டில் செங்கற்கள் மட்டுமே உள்ளன. என் குழந்தைகள் மறைந்து பதினெட்டு மாதங்கள் ஆகின்றன. அவர்கள் பல பெரிய புலனாய்வு அமைப்புகளை இங்கே வரவழைத்தனர். ஆனால் எதுவும் நடக்கவில்லை. ஒருநாள் கடவுள் எங்கள் குழந்தைகளுக்கு நீதி வழங்குவார்,” என்றார்.

தனது மகன்களைக் கொன்றது யார், ஏன் அவர்களைப் பிடிக்கவில்லை என்ற கேள்விக்கான பதிலைத் தேடுகிறார் சரோஜ் பாலா.

"இவ்வளவு பேர் பாகிஸ்தானில் இருந்து வந்தவர்கள் என்று சொன்னால், நமது ஏஜென்சிகள் என்ன செய்கின்றன? அவர்களது கடமை என்ன? எல்லா எல்லைகளும் மூடப்பட்டால், அவர்கள் வருவதற்கு ஏதாவது வழி இருக்க வேண்டும். நாம் அந்த வழியை மூடவேண்டும்,” என்கிறார்.

 
ஜம்மு, தீவிரவாதத் தாக்குதல்
படக்குறிப்பு,தீவிரவாத தாக்குதல் நடந்த சரோஜ் பாலாவின் வீடு

மேலும், உள்ளூர்வாசிகளின் உதவியின்றி இதுபோன்ற தாக்குதல்கள் நடக்காது என்று அவர் நம்புகிறார்.

"அவர்களுக்கு உள்ளூர் மக்களின் ஆதரவு கிடைக்கவில்லை என்றால், அவர்கள் எங்கு தங்குவார்கள்? எங்கே உணவு சாப்பிடுவார்கள்? அவர்கள் கொண்டு வரும் பொருட்கள், ஆயுதங்கள் போன்றவற்றை எங்கே வைத்திருப்பார்கள்? அவர்கள் வாழ்வதற்கு ஒரு இடம் வேண்டும், அவர்களுக்கு உடுத்த உடைகள் தேவை,” என்கிறார்.

ரஜோரியில் இருந்து 90கி.மீ., தொலைவில் உள்ள பூஞ்ச் என்ற இடத்தில் நாங்கள் இதே போன்ற ஒரு குரலைக் கேட்டோம்.

பூஞ்சில் உள்ள அஜோத் கிராமத்தில் வசிக்கும் முகமது ரஷித்தின் மகானன ‘ஹவில்தார்’ ராணுவ வீரர் அப்துல் மஜீத், 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ரஜோரி காடுகளில் நடந்த தேடுதல் நடவடிக்கையின் போது தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார். சமீபத்தில் அவருக்கு மரணத்திற்குப் பின் கீர்த்தி சக்ரா விருது வழங்கப்பட்டது.

முகமது ரஷீத் கூறும்போது, “இது இங்கிருப்பவர்களின் ஒத்துழைப்பின்றி நடக்காது. என் வீட்டுக்கு அந்நியர் வந்தால், வீட்டில் யார் எங்கே அமர்ந்திருக்கிறார்கள், யார் எங்கே தூங்குகிறார்கள் என்று அவருக்குத் தெரியாது. அது நம் பக்கமிருக்கும் யாராவது சொன்னால்தான் தெரியும். இதனால் ராணுவத்தினர் கொல்லப்படுகிறார்கள், வீரர்கள் இறக்கிறார்கள், சிறு குழந்தைகள் இறக்கிறார்கள்,” என்றார் அவர்.

 

ஜம்மு குறிவைக்கப்படுவது ஏன்?

ஜம்மு, தீவிரவாதத் தாக்குதல்
படக்குறிப்பு,ஜம்மு நகரம் (கோப்புப் படம்)

சமீபத்திய சம்பவங்களுக்குப் பிறகு, முக்கியமான கேள்வி இதுதான்: ஜம்முவின் பகுதிகள் ஏன் குறிவைக்கப்படுகின்றன? காஷ்மீர் பள்ளத்தாக்குக்குப் பதிலாக ஜம்முவை குறிவைப்பது தீவிரவாதிகளின் புதிய உத்தியா?

ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் முன்னாள் டி.ஜி.பி-யான எஸ்.பி.வைத், "ஜம்மு பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாகப் பார்த்தால், சுமார் 2007-08க்குப் பிறகு தீவிரவாதம் இங்கு முடிவுக்கு வந்தது. தேவைக்கேற்ப பாதுகாப்புப் படைகள் அனுப்பப்படுகின்றன. லடாக்கில் இந்தியா-சீனா எல்லையில் மோதல் ஏற்பட்டபோது, ஜம்முவில் இருந்து ராணுவம் மற்றும் ராஷ்டிரிய ரைபிள்ஸ் படைகள் அங்கு அனுப்பப்பட்டன,” என்கிறார்.

"அதேபோல், ஜம்முவில் மத்திய ஆயுதப் படைகளின் இருப்பு குறைக்கப்பட்டு, அவர்கள் காஷ்மீருக்கு அனுப்பப்பட்டனர். ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் சிறப்பு நடவடிக்கை குழுக்களும் தளர்ந்துவிட்டன. கிராமப் பாதுகாப்புக் குழுக்களும் செயலிழந்தன. இந்தச் சூழலை பாகிஸ்தான் சாதகமாக்கிக் கொண்டது என்று நினைக்கிறேன். ஜம்முவின் பகுதிகளைக் குறிவைக்கத் தொடங்கியது.

ஜம்மு-காஷ்மீரின் லெப்டினன்ட்-கவர்னர் மனோஜ் சின்ஹா கூறுகையில், இந்த நிலைமை துரதிர்ஷ்டவசமானது, ஆனால் இது மிகவும் கவலைக்குரியது அல்ல என்கிறார்.

சமீபத்தில் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளிதழுக்குப் பேட்டியளித்த சின்ஹா, "இதைத் திறம்படச் சமாளிப்போம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இதுவும் பாகிஸ்தானின் சதிதான். மிகப்பெரிய சவால் உள்ளூர் ஆட்சேர்ப்பு. அது இப்போது முற்றிலும் இல்லை. ராணுவமும், காவல்துறையும் இதை கவனித்துக் கொள்வார்கள், விரைவில் பயங்கரவாத எதிர்ப்புக் கட்டம் அமைக்கப்படும்,” என்றார்.

மேலும், “சில ஊடுருவல்கள் நடந்ததாக எங்களிடம் உள்ளீடுகள் உள்ளன. படைகள் நிலைகொள்ளத் தொடங்கியுள்ளன. வியூகம் தயாராக உள்ளது, பயங்கரவாத எதிர்ப்புக் கட்டம் விரைவில் நிறுவப்படும் என்று நான் நம்புகிறேன். ஜம்மு மக்கள் தீவிரவாதத்திற்கு எதிராகப் போராடியுள்ளனர். உள்துறை அமைச்சர் இதை உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்” என்றார்.

ஜம்மு-காஷ்மீர் சட்டசபைத் தேர்தலை நடத்த மத்திய அரசுக்கு செப்டம்பர் 30ஆம் தேதி வரை உச்சநீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது.

இந்தக் காலக்கெடுவுக்குள் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையமும் ஆயத்தங்களைச் செய்து வருகிறது.

இத்தனைக்கும் நடுவில், ஒரே ஒரு சந்தேகம் எழுப்பப்படுகிறது: இந்தத் தாக்குதல்களின் நோக்கம் ஜம்முவை குறிவைத்து, வரவிருக்கும் தேர்தலை நிறுத்துவதா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.