Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
வங்கி சேமிப்பு - பங்குச்சந்தை முதலீடு

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சிராஜ்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 19 ஆகஸ்ட் 2024, 03:15 GMT

“பணத்தை வீணாக செலவு செய்யாமல், வங்கியில் ஒரு கணக்கு துவங்கி அதில் போட்டுவை. எதிர்காலத்தில் நிச்சயம் உதவும்”

முந்தைய தலைமுறைகளில், முதன் முதலாக வேலைக்குச் செல்லும் ஒரு ஆண் அல்லது பெண்ணிடம் பெரும்பாலான பெரியவர்கள் கூறிய நிதி சார்ந்த அறிவுரை இது.

ஆனால், இப்போது பலருக்கும் கூறப்படும் அறிவுரை, “நல்ல பங்குகளாக பார்த்து வாங்கு. மாதாமாதம் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்கிறாயா? மியூச்சுவல் ஃபண்ட் என்றால் நீண்ட கால முதலீடே சிறந்தது” என்பதாகும்.

கடந்த ஜூலை மாதத்தில், மும்பையில் நடைபெற்ற வங்கிகள், நிதித்துறை மற்றும் காப்பீடு (Banking, financial services and insurance- பிஎப்எஸ்ஐ) உச்சி மாநாட்டில் இந்தியர்களின் மனமாற்றம் குறித்து இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் பேசியிருந்தார்.

“நீண்டகாலமாக தங்கள் சேமிப்புகளுக்காக வங்கிகளைச் சார்ந்திருந்த இந்தியக் குடும்பங்கள், இப்போது பங்குச்சந்தைகள் மற்றும் நிதிசார் இடைத்தரகர்கள் பக்கம் அதிகளவில் திரும்புகின்றனர்” என்று கூறினார்.

இந்த மாதத்தின் தொடக்கத்தில், வங்கிகளுக்கான குறுகிய கால கடன்கள் மீதான வட்டி விகிதம் (ரெப்போ ரேட்) குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த போது, ‘மக்கள் வங்கிகளைத் தவிர்ப்பது’ குறித்து மீண்டும் பேசியிருந்தார் சக்திகாந்த தாஸ்.

பெரும்பாலான இந்தியக் குடும்பங்கள் வங்கி சேமிப்புகளைத் தவிர்த்து பங்குச் சந்தையில் முதலீடு செய்ய விரும்புகிறார்களா? நிபுணர்கள் கூறுவது என்ன? அவ்வாறு முதலீடு செய்கையில் கவனத்தில் கொள்ளவேண்டியது என்ன?

அதிகரிக்கும் எஸ்ஐபி முதலீடுகள்

எஸ்ஐபி (SIP) என்பது முறைசார் முதலீட்டு திட்டம் (systematic investment plan) என்று அழைக்கப்படுகிறது. பரஸ்பர நிதிகள் அல்லது மியூச்சுவல் ஃபண்ட்ஸ் திட்டங்களில் சிறிது சிறிதாக முதலீடு செய்வதற்கான வழிமுறையே இந்த எஸ்ஐபி.

அசோசியேஷன் ஆஃப் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் இன் இந்தியா (AMFI- ஏஎம்எப்ஐ) என்ற அமைப்பு வெளியிட்ட மாதாந்திர தரவுகளில், ‘2024, ஜூன் மாதத்தில் 21,262 கோடி ரூபாயாக இருந்த எஸ்ஐபி பங்களிப்பு, ஜூலை மாதத்தில் 23,332 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது’ என ‘தி எக்கனாமிக் டைம்ஸ்’ நாளிதழ் செய்தி கூறுகிறது.

ஜூன் மாதத்தில் 8,98,66,962 ஆக இருந்த மொத்த எஸ்ஐபி கணக்குகளின் எண்ணிக்கை ஜூலையில் 9,33,96,174 ஆக இருந்தது.

கடந்த 41 மாதங்களாக (மார்ச் 2021 முதல்) மியூச்சுவல் ஃபண்ட்ஸ் திட்டங்கள் மீதான முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏஎம்எப்ஐ என்பது, 1995இல் உருவாக்கப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற (NGO) அமைப்பாகும். இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தில் (செபி) பதிவுசெய்யப்பட்ட 44 சொத்து மேலாண்மை நிறுவனங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பெரும்பாலான மியூச்சுவல் ஃபண்ட்ஸ் நிறுவனங்கள் இதன் உறுப்பினர்களாக உள்ளன.

டீமேட் கணக்குகள் அதிகரிப்பு

அதிகரிக்கும் புதிய டீமேட் கணக்குகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இந்த நிதியாண்டில் மட்டும் (2024-2025) ஒவ்வொரு மாதமும் சராசரியாக 34 லட்சம் புதிய டீமேட் கணக்குகள் தொடங்கப்படுகின்றன

இந்தியாவில், எஸ்ஐபி முறையில் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய அல்லது பங்குகளை வாங்க, விற்க டீமேட் கணக்கு (Demat Account) என்பது அவசியம். முதலீட்டாளர்களுக்கும் இந்திய பங்குச் சந்தைக்கும் இடைத்தரகர்களாக செயல்படும் நிதிசார் நிறுவனங்கள் மூலம் ஒருவர் டீமேட் கணக்கு தொடங்கலாம்.

“ஜூன் 2024 நிலவரப்படி, இந்தியாவின் மொத்த டீமேட் கணக்குகளின் எண்ணிக்கை 16.2 கோடியாக உயர்ந்துள்ளது. குறிப்பாக ஜூன் மாதம் மட்டும் 42 லட்சம் புதிய டீமேட் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன” என மோதிலால் ஓஸ்வால் எனும் நிதிச் சேவை நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம், மொத்த டீமேட் கணக்குகளின் எண்ணிக்கை 11.4 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த நிதியாண்டில் மட்டும் (2024-2025) ஒவ்வொரு மாதமும் சராசரியாக 34 லட்சம் புதிய டீமேட் கணக்குகள் தொடங்கப்படுகின்றன என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

இதற்கு முக்கிய காரணங்களாக, கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு பிறகு பங்குச்சந்தை மீதான இளம் தலைமுறையினரின் ஆர்வம், முதலீடுகள் மீதான அதிக வருவாய், டீமேட் கணக்குகள் தொடங்குவதற்கான எளிமையான முறைகள், 2020 முதல் தொடர்ந்து அதிகரிக்கும் பெண் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை போன்றவற்றை அந்த அறிக்கை பட்டியலிடுகிறது.

 

வங்கி சேமிப்பு vs பங்குச் சந்தை முதலீடு எது சிறந்தது?

வங்கிகள் Vs பங்குச் சந்தை

பட மூலாதாரம்,GETTY IMAGES

கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி, இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) நிதிக் கொள்கைக் குழு (Monetary Policy Committee) கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ், “சில்லறை முதலீட்டாளர்கள் வங்கிகளில் டெபாசிட் செய்வது தவிர்த்து மாற்று முதலீட்டு வழிமுறைகளில் மிகவும் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர்.” என்று கூறினார்.

இது வங்கிகளின் கடன் வளர்ச்சி விகிதத்தை பாதித்துள்ளது என்றும், இதனால் வங்கிகள் குறுகிய கால வைப்பு தொகை மற்றும் கடன் தேவைகளை பூர்த்தி செய்ய வேறு வழிகளை நாட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளன என்றும் அவர் கூறினார்.

மேலும் இதனால் வங்கிகள் உள்கட்டமைப்பு பணப்புழக்க சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்த அவர், இதனை உணர்ந்து புதுமையான திட்டங்கள் மற்றும் சேவைகள் மூலமாக வங்கிகள் சேமிப்புகளைத் (Deposit) திரட்ட வேண்டும் என்று சக்திகாந்த தாஸ் கூறினார்.

வங்கிகள், பங்குச்சந்தை முதலீடு

பட மூலாதாரம்,RAJESH

படக்குறிப்பு,பொருளாதார நிபுணர் கே.ராஜேஷ்

ஆனால், இவ்வாறு மக்கள் வங்கிகளைத் தவிர்த்துவிட்டு, தங்களது சேமிப்பை பங்குச்சந்தையில் முதலீடு செய்வதில் எந்தத் தவறும் இல்லை என்கிறார் பொருளாதார நிபுணர் கே.ராஜேஷ்.

“வங்கியின் வைப்புத் தொகையில் இருந்து 7% வருமானம் கிடைத்தாலும், அந்தாண்டு பணவீக்கம் 6% என்றால் வருமானத்தின் பெரும்பகுதி அதில் கழிந்துவிடும். ஆனால், சந்தையில் இருந்து கிடைக்கக்கூடிய மியூச்சுவல் ஃபண்ட் வருமானம் 15-18% என்பதால் பணவீக்கத்தை கழித்தாலும் கூட அதன் பயன் ஓரளவுக்கு நமக்கு கிடைக்கும்” என்று கூறுகிறார் அவர்.

நீண்ட கால முதலீடுகளின் பலன்

நீண்ட கால முதலீடுகளின் பலன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

திருநெல்வேலியைச் சேர்ந்த இம்ரான் பாஷா, ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை தனது வங்கிக் கணக்கில் சேமித்து வைக்கும் பழக்கம் கொண்டவர்.

இதை அவர் பல வருடங்களாக செய்துவருகிறார். 2002ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அவர் கணக்கு வைத்திருக்கும் தனியார் வங்கியின் மேலாளர், புதிதாக சந்தையில் அறிமுகமாகும் அந்த வங்கியின் பங்குகளை (ஐபிஓ) வாங்குமாறு பரிந்துரை செய்துள்ளார்.

“எனக்கு அப்போது அதில் பெரிய நம்பிக்கை இல்லை. 10,500 ரூபாயை மட்டும் முதலீடு செய்து ஒரு பங்கு 35 ரூபாய் என்ற வகையில், 300 பங்குகளை வாங்கினேன். பிறகு அதை மறந்துவிட்டேன். 20 வருடங்கள் கழித்து, 2022 ஜூன் மாதம், பழைய அறையைச் சுத்தம் செய்த போது அந்த பங்குகள் வாங்கியதற்கான சான்றிதழ் கிடைத்தது” என்று கூறினார்.

இருபது வருடங்கள் கழிந்துவிட்டதால், அது செல்லாது என நினைத்தவர் தனது மகளிடம் ஒருமுறை காண்பித்துள்ளார்.

“அதை என் மகள் படித்துப் பார்த்துவிட்டு, இப்போது அந்த தனியார் வங்கியின் பங்கின் விலை என்னவென்று இணையத்தில் பார்த்தாள். என்னிடம் அதைக் காட்டியபோது ஆச்சரியம் தாங்கவில்லை” என்கிறார்.

ரூபாய் 35 என்று 2002இல் அவர் வாங்கிய தனியார் வங்கியின் பங்கு, 2022ஆம் ஆண்டில் 350 முதல் 400 என்ற விலையில் விற்பனையாகிக் கொண்டிருந்தது. உடனடியாக மகளின் உதவியோடு ஒரு டீமேட் கணக்கு தொடங்கிய அவர், பங்குகளை தன் டீமேட் கணக்கிற்கு மாற்றினார்.

“பின்னர் 2024 மே மாதத்தில், எனது மகளின் அறிவுரைப்படி, அந்தப் பங்கின் விலை 566 என இருந்தபோது, அவற்றை விற்று வேறு பங்குகளில் முதலீடு செய்தேன். அன்றே அந்த மேலாளர் குறைந்தது 1 லட்சம் முதலீடு செய்யுங்கள் என்றார், நான் தான் பணத்தை பங்குச் சந்தையில் இழந்துவிடுவோமோ என்ற பயத்தில் கேட்கவில்லை.” என்கிறார் இம்ரான் பாஷா.

அவர் 2002இல் பங்குச்சந்தையில் முதலீடு செய்த பணம் 10,500 ரூபாய். 22 வருடங்கள் கழித்து 2024இல் அதை அவர் விற்ற போது கிடைத்தது 1,69,800 ரூபாய். அதாவது முதலீட்டின் மீதான வருமானம் என்பது 1517.14%.

“இப்போதும் எனக்கு பங்குச் சந்தை மீது பயம் உள்ளது. அங்கு கிடைத்த லாபத்தை தான் அங்கேயே முதலீடு செய்துள்ளேன். ஆனால் என் மகளோ அவள் சம்பாதிக்கும் பெரும்பகுதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்கிறாள். நான் தடுக்கவில்லை. எனக்கு வங்கிச் சேமிப்பு கொடுக்கும் பாதுகாப்பு உணர்வு, பங்குச் சந்தையில் கிடைப்பதில்லை” என்கிறார் இம்ரான் பாஷா.

 

பங்குச் சந்தை - லாபமும் அபாயமும்

செபி (SEBI) அறிக்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,டெரிவேடிவ்ஸ் வர்த்தகத்தில் ஈடுபடும் 90 சதவீத முதலீட்டாளர்கள் நஷ்டத்தையே சந்திக்கின்றனர் என செபி (SEBI) அறிக்கை தெரிவித்திருந்தது

இம்ரான் பாஷாவுக்கு கிடைத்த முதலீட்டின் மீதான வருமானத்தைப் பார்க்கும் போது, பங்குச்சந்தை குறித்த ஒரு நேர்மறையான எண்ணம் தோன்றுவது இயல்பே. அதேசமயத்தில், அதிக லாபம் என்றால் அதிக அபாயமும் பங்குச் சந்தையில் இருப்பதாகக் கூறுகிறார் பொருளாதார நிபுணர் கே.ராஜேஷ்.

“நீண்ட கால முதலீடுகளுக்கு பங்குச் சந்தை மிகச்சிறந்த இடம். அதுவும் நல்ல பங்குகளைத் தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும். குறுகிய லாபம் பெறும் நோக்கில் பங்குகளை வாங்குவது அல்லது விலை குறைவான பங்குகளை அதிகளவில் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்” என்கிறார் அவர்.

“சில பங்குகள் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி விடும். எனவே தான் பலர் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்கின்றனர். நீங்கள் மியூச்சுவல் ஃபண்ட் போட்டுள்ள நிறுவனம் உங்களது முதலீட்டை கொண்டு பல நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதால் ஒரு நிறுவனம் கவிழ்ந்தாலும் கூட, மற்றொரு நிறுவனம் கைகொடுக்கும் போது உங்களது முதலீடு உயர்ந்துக் கொண்டே இருக்கும்” என்கிறார்.

தங்கள் சேமிப்புகளைக் கொண்டு, ஃப்யூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸில் (F&O- எஃப்&ஓ) வர்த்தகம் செய்வதைத் மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்துகிறார்.

டெரிவேடிவ்ஸ் (Derivatives) வர்த்தகத்தில் ஈடுபடும் 90 சதவீத முதலீட்டாளர்கள் நஷ்டத்தையே சந்திக்கின்றனர் என செபியின் (SEBI) சமீபத்திய அறிக்கை தெரிவித்திருந்தது.

இந்த டெரிவேடிவ்ஸ் வர்த்தகப் பிரிவில் மிகவும் பிரபலமானது தான் ஃப்யூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ் வர்த்தகம். கடந்த நிதியாண்டில் மட்டும் (2023-2024) டெரிவேடிவ்ஸ் வர்த்தகத்தில் ஈடுபட்டவர்கள் 52,000 கோடியை பங்குச்சந்தையில் இழந்துள்ளதாக செபி தனது அறிக்கையில் எச்சரித்தது.

 

இந்தியப் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்துமா?

இந்தியப் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்துமா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,வங்கிகளின் வைப்புத் திட்டம் என்பது இளைஞர்களை ஈர்ப்பதில்லை என்கிறார் பொருளாதார நிபுணரான நாகப்பன் புகழேந்தி

இளம்தலைமுறையினர் வங்கிகளைத் தவிர்த்துவிட்டு அதிகமாக பங்குச் சந்தை நோக்கி நகர்கிறார்கள் என்பது உண்மைதான். இதனால் வங்கிகள் பாதிக்கப்படலாம். ஆனால் இந்தியப் பொருளாதாரத்திற்கு பெரிய பாதிப்பு ஏதும் இல்லை” என்கிறார் பொருளாதார நிபுணரான நாகப்பன் புகழேந்தி.

இந்திய வங்கிகள் தங்களிடம் இருக்கும் சேமிப்புகளிலிருந்து பெரிய நிறுவனங்களுக்கு கடன் கொடுக்கும். அதுவே மக்கள் தங்கள் பணத்தை பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யும்போது, அது கடனாக இல்லாமல் நேரடியாக பெரு நிறுவனங்களுக்கு செல்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் அவர்.

அதிகமான முதலீடு உள்ளே வரும்போது, பங்குகளின் விலை கூடும். சந்தை உச்சத்தை நோக்கிச் செல்லும். மக்களின் பணம் இந்திய நிதிச் சந்தையை விட்டு வெளியே செல்வதில்லை எனும்போது, பொருளாதாரம் பாதிக்கப்படாது. அதுபோக பங்குச் சந்தை பரிவர்த்தனைகள் மூலம் மத்திய அரசுக்கு அதிகமான வரியும் கிடைக்கிறது” என்கிறார்.

வளரும் நாடுகளில் இளம் தலைமுறையினர் பழமையான வங்கி சேமிப்பு முறைகளைத் தவிர்த்துவிட்டு புதிய முதலீட்டு முறைகள் நோக்கி நகர்வது வழக்கமானது தான் என்றும் அவர் கூறுகிறார்.

“வங்கிகளின் வைப்புத் திட்டம் என்பது இளைஞர்களை ஈர்ப்பதில்லை, அவர்களுக்கு அதிக லாபம் தரும் பங்குச் சந்தை மிகவும் பிடித்திருக்கிறது. ஆனால் டெரிவேடிவ்ஸ் வர்த்தகத்திலிருந்து கண்டிப்பாக இளைஞர்கள் விலகி இருக்க வேண்டும்” என்று அறிவுறுத்துகிறார்.

மக்கள் நீண்ட கால முதலீட்டை மனதில் வைத்தே பங்குச் சந்தைக்குள் நுழைய வேண்டும். ஏனென்றால் இங்கு பணக்காரர் ஆவதற்கு குறுக்கு வழி என்பதே கிடையாது” என்கிறார் பொருளாதார நிபுணரான நாகப்பன் புகழேந்தி.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.