Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை நடத்துவதில் சிக்கல்களைச் சந்திக்கும் நடிகர் விஜய் - என்ன நடக்கிறது?

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை நடத்துவதில் சிக்கல்களைச் சந்திக்கும் நடிகர் விஜய் - என்ன நடக்கிறது?

பட மூலாதாரம்,X/ACTORVIJAY

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சாரதா வி
  • பதவி, பிபிசி தமிழ்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பங்கேற்கவில்லை. இருப்பினும் உறுப்பினர் சேர்க்கை முன்பே தொடங்கியது.

இப்போது தேர்தல் முடிந்து தமிழ்நாடு அரசியல் மாநிலத்தை நோக்கித் திரும்பியுள்ள நிலையில் கொடி அறிமுகம், முதல் மாநாடு என்று விஜய் வேகம் காட்டத் தொடங்கியிருக்கிறார்.

இந்நிலையில், அவருக்கு எதிரான சக்திகளும் மாநாட்டிலேயே தங்கள் எதிர்ப்பைத் தொடங்கிவிட்டதாக கூறுகின்றனர் நடிகர் விஜய்க்கு நெருக்கமான நிர்வாகிகள்.

கோட் படம் வெளியான பிறகு மாநாடு தேதி அறிவிப்பா?

மாநாட்டை திருச்சியில் நடத்த முடிவு செய்திருந்த தவெகவினர் அங்கு இடம் கிடைக்காததால் சேலம், ஈரோடு எனப் பல்வேறு ஊர்களில் முயன்றனர். தற்போது விழுப்புரம் மாவட்ட விக்கிரவாண்டியில் இடம் தேர்ந்தெடுத்து அனுமதி கேட்டுள்ளனர். ஆனால் அங்கே காவல்துறை அனுமதி கிடைப்பதில் சிக்கல் உள்ளது.

விக்கிரவாண்டியில் உள்ள வி சாலையில் அமைந்துள்ள தனியாருக்குச் சொந்தமான சுமார் 80 ஏக்கர் நிலம் மாநாட்டை நடத்த வசதியாக இருக்கும் என அவர்கள் கருதுகிறார்கள்.‌ எனவே, விழுப்புரம் மாவட்ட காவல் அதிகாரிகளிடமும், ஆட்சியரிடமும் அனுமதி கேட்டு மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

“சுமார் 100 ஏக்கர் பரப்பிலான இடம் எங்கும் கிடைக்கவில்லை, அப்படியே கிடைத்தாலும் பல்வேறு அரசியல் தலையீடுகள் இருந்தன” என்றார் பிபிசியிடம் பேசிய தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி ஒருவர்.

மாநாட்டு இடத்துக்கு காவல்துறை அனுமதி கிடைக்குமா?

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு

பட மூலாதாரம்,ACTOR VIJAY/INSTAGRAM

படக்குறிப்பு,தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்

மாநாடு நடத்துவதற்கான இடம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வழங்கிய மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட நிர்வாகத்தினர் அந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

பிபிசி தமிழிடம் பேசிய விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், “மாநாடு நடத்தும் இடத்திற்கு அனுமதி கொடுக்கும் இறுதி முடிவை மாவட்ட ஆட்சியரகமே எடுக்கும். அதற்கு முன்பாக காவல்துறையில் தடையில்லாச் சான்றிதழ் கேட்கப்படும். அதற்காக ஆய்வு மேற்கொண்டுள்ளோம். இன்னும் இடம் குறித்து முடிவு செய்யவில்லை,” என்றார்.

மேலும் பொதுவெளியில் நடத்தப்படும் மாநாடுகளுக்கான அனுமதியைப் பற்றி விவரித்த அவர், தேர்வு செய்யப்படும் இடத்தில் இருக்க வேண்டிய அம்சங்கள் குறித்து விளக்கினார். அவை,

  • மாநாடு நடத்தும் இடம் விசாலமாக இருக்க வேண்டும்
  • ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் மக்கள் உடனடியாக வெளியேறுவதற்கான வழி இருக்க வேண்டும்
  • அதிக அளவிலான கூட்ட நெரிசல் ஏற்படாமல் பங்கேற்கும் அளவில் வசதியாக இருக்க வேண்டும்
  • பல்வேறு ஊர்களில் இருந்து மக்கள் வந்தால் அவர்கள் பயணிக்கும் வேன் போன்ற பெரிய வாகனங்களை நிறுத்த இடம் இருக்க வேண்டும்
  • முறையான குடிநீர், கழிவறை வசதி இருக்க வேண்டும்
  • பெண்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும்

இந்த அம்சங்களைக் கருத்தில் கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று விவரித்தார் விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பக அதிகாரி.

இப்போது தமிழக வெற்றிக் கழகத்தினர் தேர்வு செய்துள்ள இடம், சுங்கச் சாவடி கேட் அருகிலும், நெடுஞ்சாலைக்கு அருகிலும் இருக்கிறது. மேலும், அந்த இடத்தைச் சுற்றிலும் மூடப்படாத விவசாயக் கிணறுகள் அதிகம் உள்ளன. இந்தக் காரணங்களால் சிக்கல் எழுந்திருப்பதாகத் தெரிகிறது.

 

மாநாடு திங்கள்கிழமை நடப்பது ஏன்?

கட்சிக் கொடி, கட்சியின் கீதம் அறிமுகம் செய்து முடித்த கையோடு முதல் மாநாடு குறித்தும் அறிவித்தார் நடிகர் விஜய்

பட மூலாதாரம்,VIJAY MAKKAL IYAKKAM / YOUTUBE

படக்குறிப்பு, கட்சிக் கொடி, கட்சியின் கீதம் ஆகியவற்றை அறிமுகம் செய்து முடித்த கையோடு முதல் மாநாடு குறித்தும் அறிவித்தார் நடிகர் விஜய்

"நாங்கள் விடுமுறைக்குக் கூடும் கூட்டம் அல்ல, விடுதலைக்காகக் கூடும் கூட்டம் என்று காட்டுவதற்குத்தான் திங்கள் கிழமையாக இருந்தாலும் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்கிறோம்" என்றார் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் லயோலா மணி.

மேலும், "மாநாட்டை நடத்த விக்கிரவாண்டியைத் தேர்வு செய்ததில் சென்டிமென்ட் எதுவும் கிடையாது. எனினும் கட்சியின் முதல் அரசியல் நகர்வு அங்குதான் நடந்தது. அம்பேத்கருடைய பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாட தலைவர் அறிவுறுத்திய போது, எங்கள் பொதுச்செயலாளர் விழுப்புரத்தில் பங்கேற்ற நிகழ்ச்சி சிறப்பாக நடத்தப்பட்டது” என்றார் அவர்.

கட்சியின் கொடியேற்ற நிகழ்ச்சிகள், உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக முடுக்கிவிடப்பட்டு இருப்பதாகக் கூறும் லயோலா மணி கட்சியின் கட்டமைப்புப் பணிகளில் சிரமம் ஏதும் இல்லை என்றார்.

"விஜய் மக்கள் இயக்கம் ஏற்கெனவே 12 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. அதன் கட்டமைப்பு அப்படியேதான் உள்ளது. கட்சிப் பெயரைச் சொல்லிப் போட்டியிடாவிட்டாலும் 122 கவுன்சிலர்கள், 2 பஞ்சாயத்து தலைவர்கள் உள்ளாட்சிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.

மக்கள் இயக்கத்தின் மாணவர், மகளிர், வழக்கறிஞர், தொழிலாளர், மீனவர் என 10 அணிகள் உள்ளன. இவற்றில் பல நிலைகளில் நிர்வாகிகள் மட்டும் 5 லட்சம் பேர் உள்ளார்கள்."

இவைபோக, தொகுதி வாரியான பொறுப்பாளர்கள் இருக்கிறார்கள் எனக் கூறும் லயோலா மணி, கட்சிப் பொறுப்புகளை அறிவிப்பதுதான் மாநாட்டில் நடக்கும் என்று தெரிவித்தார்.

அதோடு, இந்த அறிவிப்பில் பெண்களுக்கு முக்கியத்துவம் கூடுதலாக இருக்கும் என்றும் மாநாட்டில் தங்கள் கொள்கை - செயல்பாட்டு பிரகடனத்தைத் தலைவர் அறிவிப்பார்‌ என்றும் கூறினார்.

லயோலா மணி, செய்தித் தொடர்பாளர்

பட மூலாதாரம்,LOYOLA MANI, TVK

படக்குறிப்பு, லயோலா மணி, செய்தித் தொடர்பாளர்

மேலும், பிபிசி தமிழிடம் பேசிய பெயர் குறிப்பிட விரும்பாத த.வெ.க நிர்வாகி ஒருவர், "எங்கள் தலைவர் விஜய் முதல்வராக வேண்டும். எங்கள் கொள்கைகளைச் செயல்படுத்த வேண்டும். அதற்காகக் கடுமையாக உழைப்போம்" என்றார்.

ஆனால், கூட்டணிக்கான முகாந்திரம் எதுவும் இல்லை என்று உறுதியாகக் குறிப்பிடும் நிர்வாகிகள் முதன்மை சக்தியாக தமிழக வெற்றிக் கழகம்தான் இருக்கும் என்றும் கூறினார் லயோலா மணி.

உறுப்பினர் எண்ணிக்கை மாநாட்டில் அறிவிக்கப்படும் என்றும் கூறினார் அவர்.

மேலும், "எங்கள் தலைவர் இதுவரை 2 முறை நிர்வாகிகளை நேரில் சந்தித்துள்ளார். கான்ஃபிரன்ஸ் கால் வழியாக மாவட்ட நிர்வாகிகளிடம் பேசுகிறார். இந்த மாநாட்டில் மாற்றுக் கட்சிகளில் இருந்து ஈர்க்கப்படும் நிர்வாகிகளைச் சேர்ப்பதும் இடம்பெறும்" என்றார்.

நடிகர் விஜய் திடீரென அரசியலுக்கு வரவில்லை என்றும் கூறும் லயோலா மணி, காவிரி மேலாண்மை வாரியம், நீட் தேர்வு பிரச்னை, தூத்துக்குடி படுகொலைகள், இலங்கைத் தமிழர் பிரச்னை, பண மதிப்பிழப்பு "ஆகியவற்றுக்குக் குரல் கொடுத்துள்ளதாகவும்" கூறுகிறார்.

மேற்கொண்டு பேசிய அவர், "மக்கள் இயக்கத்தில் இருந்து ரொட்டி-பால் திட்டம் போன்ற மக்கள் நலத் திட்டங்களை ஏற்கெனவே செயல்படுத்தி வருகிறோம். எங்கள் தலைவரின் சமூகநீதிப் பார்வை வெளிப்படையாகத் தெரிகிறது. எனவே எங்கள் கட்சி மீது ஈர்ப்பு உள்ளது" என்று கூறினார்‌.

 

விஜய்யின் அரசியல், மாநாட்டில் விளக்கப்படுமா?

தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியை அறிமுகம் செய்து வைத்த விஜய்

பட மூலாதாரம்,TVK HQ

படக்குறிப்பு, தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியை அறிமுகம் செய்து வைத்த விஜய்

விக்கிரவாண்டியில் மாநாட்டை நடத்துவதால் பாதகம் ஏதும் இல்லை என்கிறார் மூத்த பத்திரிகையாளர் பிரியன்.

“திமுக, மதிமுக தங்கள் மாநாடுகளை நடத்திய இடம்தான் விழுப்புரம் மாவட்டம். மாநாட்டில் அவர் என்ன பேசப் போகிறார் என்பதுதான் முக்கியம்," என்கிறார் அவர்.

தமிழ்நாட்டில் எந்தவொரு அரசியல் கட்சியும் "இளைஞர்களைத் திரட்டுவதற்குத் திணறும் நிலையில்" தற்போது கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய்க்கு, ரஜினிக்கு இணையான ரசிகர் கூட்டம் இருப்பதை மறுக்க முடியாது என்கிறார்.

அவர்களில் 15 - 35 வயதுக்குள்ளாகப் பெரும்பாலானவர்கள் இருக்கிறார்கள். விஜய்யை நடிகராக ஏற்றுக்கொண்ட இவர்கள், அரசியல் தலைவராக ஏற்றுக் கொள்வார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று கூறுகிறார் பிரியன்.

விஜய் இதுவரை சமூக நீதி குறித்து விரிவாக சில விஷயங்களைப் பேசுகிறார். ஆனால் அது மட்டுமே போதாது. நாட்டின் ஒவ்வொரு முக்கிய விஷயத்திலும் அவரது நிலைப்பாடு என்ன என்பதை மக்களிடம் விளக்க வேண்டும். "அந்த விளக்கம் இந்த மாநாட்டில் கிடைத்தால்தான் மக்கள் ஆதரவு அவருக்கு இருக்கிறதா இல்லையா என்பது தெரியும்," என்றும் அவர் மேற்கோள்காட்டினார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.