Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொட்டுக்காளி விமர்சனம்: வினோத்ராஜின் மற்றொரு சமரசமற்ற கலைப் படைப்பு!

1299120.jpg  

 

பி.எஸ்.வினோத்ராஜ் இதற்கு முன்னால் இயக்கிய ‘கூழாங்கல்’ சர்வதேச அளவில் பல விருதுகளை வென்ற படம். மட்டுமின்றி ஆஸ்கர் வரை சென்று திரும்பிய படம் என்பதால், அவரது அடுத்தப் படமான ‘கொட்டுக்காளி’ முதல் அறிவிப்பிலிருந்தே சினிமா ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. அத்துடன் ஹீரோவாக தனக்கென ஒரு முத்திரையை பதித்துவரும் சூரி, சிவகார்த்திகேயன் தயாரிப்பு என்பதால் கமர்ஷியல் ரசிகர்கள் மத்தியில் இதன் ட்ரெய்லர் உள்ளிட்ட விஷயங்கள் கவனம் பெற்றிருந்தன. இந்த இரு தரப்பை இப்படம் திருப்திபடுத்தியதா என்பதை பார்க்கலாம்.

மதுரையில் உள்ள ஒரு குக்கிராமத்தில் இருக்கும் மீனாவுக்கு (அன்னா பென்) பேய் பிடித்திருப்பதாக அவரது குடும்பத்தினர் நம்புகின்றனர். எந்நேரமும் எதையோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் அவரை, வருங்கால கணவரான பாண்டியும், (சூரி) அவரது குடும்பத்தினரும் ஒரு பேய் ஓட்டும் சாமியாரிடம் அழைத்துச் செல்கின்றனர். அவர்கள் செல்லும் வழியில் சில சம்பவங்கள் நடக்கின்றன. அவை என்ன? உண்மையில் நாயகி அன்னா பென்னுக்கு என்ன பிரச்சினை? - இதற்கான விடையே ‘கொட்டுக்காளி’.

காலையில் ஒரு ஷேர் ஆட்டோவில் ஏறி மாலையில் இன்னொரு இடத்தில் போய் இறங்குவதுதான் கிட்டத்தட்ட கதை. மொத்தக் கதையையும் ஒரு சின்ன துண்டுச் சீட்டில் எழுதிவிடக் கூடிய மிக மிக சிம்பிளான ஒரு களம். எனினும் தன்னுடைய முந்தைய படமான ‘கூழாங்கல்’ போலவே ஆழமான, அடர்த்தியான ஒரு படத்தை கொடுத்துள்ளார் பி.எஸ்.வினோத் ராஜ்.

ஓரிடத்தில் தொடங்கி இன்னொரு இடத்தில் முடியும் ஒரு சிறிய ஆட்டோ பயணத்தில் கதாபாத்திரங்களுக்கு இடையே நடக்கும் உரையாடல்கள், அவர்களின் எண்ண ஓட்டங்கள் மற்றும் செயல்களை இயல்பை மீறாமலும் எந்தவித சமரசமும் இல்லாமலும் அப்படியே பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். கிராமங்களில் நிலவும் சாதி ஆதிக்கம், ஆணாதிக்கம், மூடநம்பிக்கைகள், பெண் வீட்டார் மீது மாப்பிள்ளை வீட்டார் இந்த காலத்திலும் செலுத்தும் அதிகாரம் என படம் போகிற போக்கில் பல விஷயங்களை வசனங்கள் வழியே தொட்டுச் செல்கிறது.

 

 

தெருவில் உள்ள ஒரு ஸ்பீக்கரில் பாடும் ‘ஒத்தையடி பாதையிலே’ பாட்டை அன்னா பென் முணுமுணுப்பதும், அதைத் தொடர்ந்து சூரி, அன்னா பென் தொடங்கி மாமியார், மாமனார், அப்பா என அனைவரையும் அடித்து, தகாத வார்த்தைகளைக் கொண்டு திட்டும் காட்சி இந்த படத்தின் ‘பீக்’ தருணம். அந்த காட்சி முழுவதும் பார்க்கும் நமக்கு பதைபதைப்புடனே நகரும்படி காட்சிப்படுத்தப்பட்டிருப்பது சிறப்பு.

படத்தின் பெரிய பலம் அதன் நடிகர்கள். சூரி, அன்னா பென் தவிர யாரும் தெரிந்த முகங்கள் கிடையாது. எனினும் படத்தில் நடித்த அனைவருமே மிக இயல்பான நடிப்பை வழங்கியுள்ளனர். நடிப்பில் ‘விடுதலை’, ‘கருடன்’ படங்களை காட்டிலும் சூரிக்கு இது மிக முக்கியமான படம். தொண்டையில் பிரச்சினை இருக்கும் நபராக படம் முழுக்க கரகரத்த குரலில் பேசுவதும், குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே நபராக அவர் காட்டும் அதிகாரமும் என ஒவ்வொரு காட்சியிலும் வியக்க வைக்கிறார்.

 

அன்னா பென்னுக்கு படத்தில் ஒரே ஒரு வசனம் மட்டும்தான். மற்றபடி வசனமே இல்லாமல் வெறித்து பார்த்தபடி மிரட்டலான நடிப்பை வழங்கி அவரும் ஸ்கோர் செய்கிறார். இவர்கள் தவிர சூரியின் சொந்தக் காரர்களாக பைக்கில் பின்னாலேயே வரும் இருவர், சூரியின் தங்கை மகனாக வரும் சிறுவன் என அனைவரும் சிறப்பான நடிப்பை தந்துள்ளனர்.

படத்தில் இசை கிடையாது. எனினும் கதாபாத்திரங்களை சுற்றி நடப்பவற்றிலிருந்து வரும் சத்தங்களே அந்த குறை தெரியாமல் காப்பாற்றுகின்றன. பின்னணி இசை இருந்திருந்தால் கூட படத்தோடு நம்மால் முழுமையாக ஒன்றியிருக்க முடியுமா என்று தெரியவில்லை. சமரசமே இன்றி பின்னணி இசையை கூட சேர்க்காமல் தன்னுடைய திறமை நம்பிக்கை வைத்த இயக்குநரை பாராட்டலாம். குறிப்பிட்டு பாராட்டப்பட வேண்டியது சக்தியின் ஒளிப்பதிவு. கிராமத்தில் கரடுமுரடான சாலைகளில் சென்று கொண்டிருக்கும் அந்த ஆட்டோவில் நாமும் பயணிப்பதைப் போன்ற ஓர் உணர்வு ஏற்படுகிறது.

17243200731138.png

படத்தின் நீளம் வெறும் 1 மணி நேரம் 40 நிமிடங்கள் தான். ஆனால் அதில் முக்கால்வாசி நேரத்தை நீள நீளமாக வைக்கப்பட்ட ஷாட்களே நிரப்பியிருக்கும் என்று தெரிகிறது. தேவை இருக்கிறதோ இல்லையோ, கதாபாத்திரங்கள் நடந்து கொண்டே இருப்பதை காட்டுவது, திரையின் ஒரு ஓரத்தில் கிளம்பும் ஆட்டோ மற்றொரு ஓரத்தை அடையும் வரையும், திரையை விட்டு மறைந்த பிறகும் கூட ஷாட் அப்படியே இருப்பது, என அளவுக்கு அதிகமாக வைக்கப்பட்ட நீளமான ஷாட்கள் பல இடங்களில் சற்றே சலிப்பை ஏற்படுத்துவதை தவிர்க்க முடியவில்லை.

எந்தவொரு தீர்வும் இல்லாமல் சூரியின் கோணத்திலிருந்து முடியும் க்ளைமாக்ஸ் ஆடியன்ஸின் பார்வைக்கே விடப்பட்டாலும், திரையரங்குக்கு வரும் பொதுவான பார்வையாளர்களால் அது ரசிக்கப்படுமா என்று தெரியவில்லை.

மொத்தத்தில், நுணுக்கமான காட்சியமைப்புகள், கிராமத்தின் வாழ்வியலை மிக இயல்பாக காட்டிய விதம் என ஒரு முக்கியமான சர்வதேச கலைப் படைப்பை எந்தவித சமரசமும் செய்யாமல் கொடுத்துள்ள இயக்குநரையும், இதனை தயாரித்த சிவகார்த்திகேயனையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

கொட்டுக்காளி Review: வினோத்ராஜின் மற்றொரு சமரசமற்ற கலைப் படைப்பு! | Kottukkaali Movie Review - hindutamil.in

Edited by பிழம்பு

  • பிழம்பு changed the title to கொட்டுக்காளி விமர்சனம்: வினோத்ராஜின் மற்றொரு சமரசமற்ற கலைப் படைப்பு!
  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

"கொட்டுக்காளி" இயக்குநரிடம் சில கேள்விகள்

AVvXsEgHarwPNLg2agAVaS4Iyi0bKWfXxK_zoe2jfAut0FjAJHFdUcWbu6FZfgKjvJ4fcl4pHzitzHySaTt4_6Yga1IVVo-CP6KoQyLCtiBKwgpCOybE1LACQWXn5T_uitb0oFOEcyYRgQUe8cZTFzlcG_o1RnUHe76M2YbqsrLwo8wtaoIgJiENRQjUZHwYIoPf
 
"கொட்டுக்காளி" படத்தின் மையச் சேதி இந்த ஒரு வரிதான் - ஆண்கள் எல்லாரும் கொடூரமானவர்கள், கேவலமானவர்கள், படுபயங்கரமானவர்கள்.
 
நாம் இயக்குநரிடம் கேட்க வேண்டியது ஒரே ஒரு கேள்வியைத்தான்; அதற்கு அவர் பதிலளிக்கும்வரை பலவிதங்களில் கேட்க வேண்டியுள்ளது - ஐயா, இந்தப் படத்தை எடுத்த நீங்கள் ஆண் அல்லவா?
 
இயக்குநர்: அது வந்துங்க நான் ஆம்பளதான், ஆனால் கெட்ட ஆம்பிளை இல்ல. முற்போக்கு முகாமை சேர்ந்த ஆம்பள. நாங்க அடிப்படையிலே ரொம்ப நல்லவங்க.
 
நம் கேள்வி: ஏன் உங்கள மாதிரி நல்ல ஆண்கள் உங்க படத்தில வரதில்ல?
 
இயக்குநர்: என் படம் கிராமத்துல நடக்குது. அங்க எல்லா ஆம்பளங்களும் இப்படித்தான்.
 
நம் கேள்வி: நீங்க கிராமத்தை சேர்ந்தவர் இல்லையா?
 
இயக்குநர்: ஆமாங்க, ஆனா நாங்கல்லாம் படிச்சி சிந்திச்சு வித்தியாசமா நல்லவங்களா இருப்போம். 
 
நம் கேள்வி: உங்களை மாதிரி ஆம்பளைகளை வச்சு எதிர்காலத்தில படமெடுப்பீங்களா?
 
இயக்குநர்: நாங்க சிறுபான்மையானவங்க. பெரும்பான்மை ஆண்களைப் பத்தி தானே படம் எடுக்க முடியும்?
 
நம் கேள்வி: பெரும்பான்மையின்னா நீங்க அதுக்கு எதாவது ஆய்வு பண்ணியிருக்கீங்களா? புள்ளி விபரம் இருக்குதா?
 
இயக்குநர்: என் வாழ்க்கையில நான் பார்த்த ஆண்களை வச்சு எடுத்திருக்கேன்.
 
நம் கேள்வி: அவங்க நீங்க பார்த்த ஒருசிலர் தானே?
 
இயக்குநர்: இலக்கியத்தில, சினிமாவில இந்த மாதிரி படுகேவலமான கொடூரமான ஆண்கள் பற்றி சொல்லப்பட்டிருக்கே...
 
நம் கேள்வி: அவை தனிப்பட்ட பதிவுகள், கற்பனை. சரி விடுங்க, நமது முதல்வர் ஸ்டாலின் இப்படி கொடூரமான கேவலமான மட்டமான ஆம்பளையா?
 
இயக்குநர்: இல்லீங்க.
 
நம் கேள்வி: நமது துணை முதல்வர் உதயநிதி, நமது பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர், முப்படைத் தளபதிகள், தமிழ்நாட்டு சட்டசபையிலும் நாடாளுமன்றத்திலும் கணிசமாக உள்ள ஆண்கள்?
 
இயக்குநர்: இல்லீங்க.
 
நம் கேள்வி: உங்களுக்கு ஆதரவளித்த இயக்குநர் ராம்? உங்கள் படங்களின் தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், வெற்றிமாறன், சூரி...
 
இயக்குநர்: சத்தியமா இல்ல பாஸ். 
 
நம் கேள்வி: அப்போ யாரைப் பத்தித்தான் படம் எடுக்கிறீங்க?
 
இயக்குநர்: பெரும்பான்மை ஆண்களுங்க.
 
நம் கேள்வி: யாரு உங்க படத்தை திரையரங்கிலும், ஒ.டி.டியிலும் பார்க்கிறவர்களா?
 
இயக்குநர்: ச்சேச்சே!
 
நம் கேள்வி: அப்போ யாருதாங்க அது?
 
இயக்குநர்: ஆணினமின்னு பொதுவா சொல்லலாம்.
 
நம் கேள்வி: மேற்சொன்னவர்கள் எல்லாரும் ஆணினம் தானே?
 
இயக்குநர்: இல்லீங்க.
 
நம் கேள்வி: சரி அந்தக் கொடூரமான பயங்கரமான படுகேவலமான ஆண்கள் யார்?
 
இயக்குநர்: பாஸ், இப்படி ஆம்பளைத் திட்டிப் படமெடுத்தா அவார்டு கெடைக்குன்னு சொன்னாங்க. அதான் எடுத்தேன். என்னை விட்டிருங்க.
 
நம் கேள்வி: யாருங்க சொல்லித் தந்தது? முற்போக்கு சிந்தனைகளைப் படித்தும் எழுதியும் தேர்ந்த சிந்தனையாளராக இருந்துகொண்டே தன் குடும்பத்தை சேர்ந்தவர்கள் இளைஞர்களை பலாத்காரம் செய்தால், சுரண்டினால் அக்குற்றங்களைத் தெரிந்தும் எதிர்க்காமல் நைசாக இருந்துவிட்டு வெளியே பெண்ணியம் பேசுகிறவர்களின் முற்போக்கு முகாமா? படித்தும் தீமைக்குத் துணைபோகிறவர்கள் படிக்காத முரட்டு ஆண்களை விடக் கேவலம் அல்லவா?
 
இயக்குநர் தலைதெறிக்க ஓடுகிறார்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.