Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
எறும்புகள் தமது ஆன்டனா மூலம் பேசிக்கொள்வது எப்படி? அவற்றின் மொழி என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், க.சுபகுணம்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 29 ஆகஸ்ட் 2024, 03:09 GMT
    புதுப்பிக்கப்பட்டது 54 நிமிடங்களுக்கு முன்னர்

எறும்புகளின் வாழ்வியல், அவற்றின் சமூகக் கட்டமைப்பு மனிதர்களுக்கு நிகரானவை என்பதை ஆய்வாளர்கள் பல தருணங்களில் உறுதி செய்துள்ளனர். அவைதம் சகோதரிகளுடன் கொண்டிருக்கும் உறவு, பாசப் பிணைப்பு ஆகியவை பல தருணங்களில் விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அப்படிப்பட்ட ஒரு கண்டுபிடிப்பு சமீபத்தில் கிடைத்துள்ளது. ஈரப்பதம் மிக்க கட்டைகளில் கூடமைத்து வாழும் கட்டெறும்பு வகையைச் சேர்ந்த எறும்பு வகை ஒன்றில், ஃப்ளோரிடாவை சேர்ந்த விஞ்ஞானிகள் ஓர் அதிசயமான பழக்கத்தைக் கண்டறிந்தனர்.

அவை சக எறும்பின் உயிரைக் காப்பாற்ற அதன் கால் பகுதியை வெட்டியெடுப்பதை விஞ்ஞானிகள் பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்த ஆய்வை மேற்கொண்ட வுர்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தின் பூச்சி நடத்தையியல் ஆய்வாளரான எரிக் பிராங்க், “விலங்குகள் மத்தியில், ஓர் உயிரைக் காப்பாற்ற பிற சகாக்கள் ஓர் உறுப்பை உடலில் இருந்து பிரித்தெடுப்பது பதிவு செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறை,” என்று தனது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சக உயிரினத்திற்கு அறுவை சிகிச்சைக்கு நிகரான சிகிச்சையை அளிக்கும் அணுகுமுறை விலங்கு உலகில் பதிவு செய்யப்படுவது இதுவே முதல்முறை.

இருப்பினும், எறும்புகள் மத்தியில் தமது சகாக்களின் காயங்களுக்கு சிகிச்சை அளிப்பது, போரின்போது தம் உயிரைத் தியாகம் செய்து மற்றவர்களைக் காப்பது போன்ற நடத்தைகள் ஆய்வாளர்களால் பலமுறை பதிவு செய்யப்பட்டுள்ளன.

அத்தகைய நடத்தைகளை நானும் பல தருணங்களில் அவதானித்துள்ளேன். அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு சில நாட்களுக்கு முன்பும் கிடைத்தது.

 
எறும்புகள் தமது ஆன்டனா மூலம் பேசிக்கொள்வது எப்படி? அவற்றின் மொழி என்ன?

பட மூலாதாரம்,SUBAGUNAM KANNAN/BBC

படக்குறிப்பு, இருவேறு புற்றுகளைச் சேர்ந்த எறும்புக் கூட்டங்களுக்கு இடையே நடந்த போரில், பின்னங்கால்கள் உடைந்து தனியாக சிக்கிக்கொண்ட ஓர் எறும்பை இரண்டு 'எதிரிகள்' மூர்க்கமாகத் தாக்கின

வீட்டு வாசலில் நடந்த உக்கிரமான போர்

அன்றைய தினம் மாலை வேளையில் வானம் மோடம் போட்டிருந்தது. பருவநிலை இதமாக இருந்ததால் தேநீர் அருந்தலாம் என்று கடைக்குச் செல்ல வீட்டைவிட்டு வெளியேறினேன். ஆனால், அங்கு நான் கண்ட காட்சி, தேநீரை மறந்து அடுத்த இரண்டு மணிநேரத்திற்கு என்னை வாசலிலேயே இருக்கச் செய்துவிட்டது.

வீட்டு வாசலில் ஒரு கட்டெறும்பின் தலை மீதிருந்த உணர்கொம்புகளில் ஒன்றில் வேறொரு எறும்பின் தலை செருகப்பட்டிருந்தது. அதே எறும்பு தனது காலில் மற்றுமோர் எறும்பின் உயிரற்ற சடலத்தை இழுத்துக்கொண்டே நடந்து சென்றது.

போருக்கு நடுவே அந்த எறும்பு வெற்றிக் களிப்பில் தனது எதிரிகளை மகுடமாகச் சூடிச் செல்வதைப் போல் அந்தக் காட்சி இருந்தது.

ஆவலைத் தூண்டிய அந்தக் காட்சியின் விளைவாக, அங்கு என்ன நடக்கிறது என்பதை உற்றுக் கவனிக்கலானேன். அங்கு ஒரு போர் நடந்துகொண்டிருந்தது புரிந்தது. இருவேறு எறும்புப் புற்றுகளுக்கு இடையில் ஒரு மூர்க்கமான போர்.

எறும்புகள் தமது ஆன்டனா மூலம் பேசிக்கொள்வது எப்படி? அவற்றின் மொழி என்ன?

பட மூலாதாரம்,SUBAGUNAM KANNAN/BBC

படக்குறிப்பு, போருக்கு நடுவே தான் வீழ்த்திய ஓர் எறும்பின் தலையை உணர்கொம்பில் சுமந்தவாறு, மற்றோர் எறும்பின் சடலத்தை இழுத்துக்கொண்டு செல்லும் காவல்கார கட்டெறும்பு

இந்தப் போர் குறித்து அசோகா சுற்றுச்சூழல் ஆய்வு அறக்கட்டளையைச் சேர்ந்த பூச்சியியலாளர் முனைவர் பிரியதர்ஷன் தர்மராஜனிடம் பேசியபோது, எறும்புகளுக்கு இடையிலான போர் பெரும்பாலும் இரு தருணங்களில் நிகழும் என்று விளக்கினார்.

அவரது கூற்றுப்படி, ஒரே வகையைச் சேர்ந்த எறும்பாக இருந்தாலும் இருவேறு புற்றுகளைச் சேர்ந்தவையாக இருப்பின் அவற்றுக்குள் உணவு மற்றும் வாழ்விடத்துக்கான மோதல் ஏற்படும் வாய்ப்பு உண்டு. மேலே நான் குறிப்பிட்ட போருக்கு இதுகூடக் காரணமாக இருக்கலாம்.

அதேபோல் மற்றுமொரு தருணத்தில் கூன்முதுகு எறும்புகளுக்கு (Hunchback ants) இடையிலான போரைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. அவை அருகருகே இருக்கும் இருவேறு புற்றுகளைச் சேர்ந்தவை. அவற்றுக்கு இடையே நிகழ்ந்துகொண்டிருந்த அந்தப் போர் உணவுக்கான போராக இருக்கக்கூடும்.

இதுவன்றி, எறும்புகளுக்கு இடையே போர் மூள மற்றொரு காரணமும் உண்டு. எறும்புகளைப் பொறுத்தவரை, அவற்றில் பல குழுக்கள் இருக்கின்றன. அதாவது, ஒரு சில எறும்பு வகைகளுக்கு மத்தியில் இருக்கும் ஒரே மாதிரியான நடத்தைகளை அடிப்படையாக வைத்து அவையனைத்தும் உயிரியல்ரீதியாக ஒரு குழுவாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

 
எறும்புகள் தமது ஆன்டனா மூலம் பேசிக்கொள்வது எப்படி? அவற்றின் மொழி என்ன?

பட மூலாதாரம்,SUBAGUNAM KANNAN/BBC

படக்குறிப்பு, போருக்கு நடுவே காயமடைந்து, உயிரிழக்கும் நிலையில் இருந்த காவல்கார எறும்பை இழுத்துச் செல்லும் வேலைக்கார எறும்பு

அடிமைப்படுத்தும் எறும்புகள்

எடுத்துக்காட்டாக, “சில எறும்பு வகைகள் இலை, குச்சி ஆகியவற்றைச் சேகரித்துச் சென்று புற்றுக்கு உள்ளேயே பூஞ்சைகளை வளர்த்து உணவாக்கிக் கொள்கின்றன.

சிலவகை எறும்புகள், அஃபிட்ஸ் எனப்படும் பூச்சிகளுக்கு புற்றுக்கு உள்ளேயே அடைக்கலம் கொடுத்து, வளர்த்து, அவற்றில் இருந்து மில்க் டியூ (milk dew) எனப்படும் சர்க்கரைப்பாகு போன்ற ஒரு திரவத்தைக் கறந்து ஊட்டச்சத்து மிக்க உணவாக உட்கொள்கின்றன," என்கிறார் பிரியதர்ஷன்.

இந்தப் பூஞ்சை விவசாயமும் அஃபிட்ஸ் வளர்ப்பும், மனிதர்களின் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பை ஒத்த பழக்கங்களாக இருப்பதாக பூச்சியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இவற்றைப் போலவே, எறும்பு இனங்களில் அடிமைப்படுத்தும் எறும்பு (Slave-making ants) என்ற ஒரு வகை உண்டு. இவை மற்ற எறும்பு இனங்களின் புற்றுகளைச் சூறையாடி அவற்றின் இளம் லார்வாக்களை (புழுப் பருவத்தில் இருக்கும் முதிர்ச்சியடையாத எறும்புகள்) திருடி வந்து, வளர்த்து அடிமைகளாகப் பயன்படுத்துகின்றன.

எறும்புகள் தமது ஆன்டனா மூலம் பேசிக்கொள்வது எப்படி? அவற்றின் மொழி என்ன?

பட மூலாதாரம்,SUBAGUNAM KANNAN/BBC

படக்குறிப்பு, சண்டையிட்டுக் கொள்ளும் இரு கட்டெறும்புகள்

“இவை திருடி வரும் எறும்புகளுக்கும் அவற்றுக்கும் எந்தத் தொடர்பும் இருக்காது. அது முற்றிலும் தமது புற்றின் பணிகளைச் செய்துகொள்வதற்காக அவை மேற்கொள்ளும் ஓர் அடிமைப்படுத்தல் செயல்முறையே,” என்று விளக்குகிறார் எறும்புகளை நீண்டகாலமாக ஆய்வு செய்து வரும் முனைவர்.ப்ரொனோய் பைத்யா.

இந்த இரண்டு வகையான போர்களிலுமே எதிரி எறும்புகளின் காலனியை, அதாவது புற்றைச் சூறையாடுவது, அதிலிருக்கும் உணவுகளையோ சந்ததிகளையோ அபகரிப்பதே நோக்கமாக இருக்கும்.

“இந்தப் போர்களின்போது, படையெடுப்புக்கு உள்ளாகும் எறும்புப் புற்றைச் சேர்ந்த காவல்கார எறும்புகள் புற்றைத் தற்காத்து மூர்க்கமாகப் போரிடும். ஆனால், அந்தப் போரில் ஒருவேளை எதிர்த்தரப்பு முன்னேறிச் சென்று ராணியைக் கைப்பற்றிவிட்டால், படையெடுப்புக்கு உள்ளாகும் புற்றைச் சேர்ந்த காவல்கார எறும்புகள், வேலைக்கார எறும்புகள் அனைத்துமே போரிடுவதை நிறுத்திவிடும்,” என்கிறார் அசோகா அறக்கட்டளையின் ஆய்வு மாணவியான பெங்களூருவை சேர்ந்த சஹானாஸ்ரீ.

 
எறும்புகள் தமது ஆன்டனா மூலம் பேசிக்கொள்வது எப்படி? அவற்றின் மொழி என்ன?
படக்குறிப்பு, எறும்புப் புற்றில் பல்வேறு படிநிலைகள் இருக்கின்றன. அதற்குள் ராணி முட்டையிடுவதற்கு, உணவு, கழிவுகளுக்கு என்று பல்வேறு தனி அறைகள் பிரிக்கப்பட்டிருக்கும்

எறும்புகளின் சமூகக் கட்டமைப்பு எப்படிப்பட்டது?

ராணி கைப்பற்றப்பட்டால் போர் முடிவுறுவது ஏன்? ஒரு புற்றின் ராணிக்கும் மற்ற எறும்புகளுக்கும் இடையிலான தொடர்பு என்ன?

இதுவரையிலான அறிவியல் ஆதாரங்களின்படி, ராணி எறும்புதான் ஒரு புற்று, அதாவது ஓர் எறும்பு சமூகத்தை உருவாக்குகிறது. அந்த ராணியை இழந்துவிட்டால், அந்தப் புற்றே அழிந்துவிடும். அதன் காரணமாகவே, ஒரு புற்றுமீது படையெடுப்பு நிகழும்போது அதிலுள்ள பிற எறும்புகள் தம் உயிரைப் பணயம் வைத்தேனும் ராணியைக் காப்பாற்றப் போராடுவதாக விளக்குகிறார் முனைவர் ப்ரொனோய் பைத்யா.

பொதுவாக, ஒரு புற்றிலுள்ள அனைத்துமே பெண் எறும்புகள்தான். ஆனால், அவற்றில் மிகச் சில மட்டுமே இனப்பெருக்கம் செய்யும் திறன் கொண்டவை. அவையே ராணி எறும்புகள் என்றழைக்கப்படுகின்றன. அதுபோக, அவற்றோடு இனப்பெருக்கம் செய்யும் திறனுடைய ஆண் எறும்புகளும் மிகச் சொற்ப எண்ணிக்கையில் பிறக்கின்றன.

இந்த ராணி எறும்புகளும் அவற்றோடு இனப்பெருக்கம் செய்யவல்ல ஆண் எறும்புகளும், பருவகாலத்திற்கு முன்னதாகத் தங்களது புற்றைவிட்டு வெளியேறி அவற்றைப் போன்ற பிற எறும்புகளோடு ஓர் இடத்தில் கூடும். அப்போது நடக்கும் இனப்பெருக்க செயல்முறையில், ராணி எறும்பு வேறு புற்றைச் சேர்ந்த ஓர் ஆண் எறும்பைத் தேர்ந்தெடுத்து, அதனுடன் காற்றில் பறந்தபடி இணைசேரும்.

பிறகு அந்த ராணி தனக்கேற்ற ஓரிடத்தைத் தேடி, அங்கு நிலத்தடியில் சிறிய அளவில் புற்று அமைத்து, அங்கு தனது இறகுகளை உதிர்த்துவிட்டு, முட்டையிடத் தொடங்கும். அடுத்த சில வாரங்களில் அந்த முட்டைகளில் இருந்து பிறக்கும் எறும்புகளின் மூலம் தனது புற்றை, அதாவது தனது சமூகத்தை விரிவுபடுத்தும்.

 
எறும்புகள் தமது ஆன்டனா மூலம் பேசிக்கொள்வது எப்படி? அவற்றின் மொழி என்ன?

பட மூலாதாரம்,SUBAGUNAM KANNAN/BBC

படக்குறிப்பு, இருவேறு புற்றுகளைச் சேர்ந்த இரண்டு எறும்புகள் மூர்க்கமாகப் போரிட்டுக் கொள்ளும் காட்சி.

எறும்புகளின் படிநிலை

இப்படியாகப் பிறக்கும் எறும்புகளில் இனப்பெருக்கம் செய்யவல்ல ஆண் எறும்பைத் தவிர மற்ற அனைத்துமே பெண் எறும்புகள்தான். ஒரு புற்றிலுள்ள எறும்புகளில் பல படிநிலைகள் இருக்கின்றன. அவை,

  • ராணி எறும்புகள்: இனப்பெருக்கம் செய்ய வல்லவை, முட்டையிடுவதும் அவற்றைப் பராமரிப்பதும் மட்டுமே இவற்றின் பணி. அதிலும் முதல் தலைமுறை வேலைக்கார எறும்புகள் பிறந்தவுடன், சந்ததிகளைப் பராமரிக்கும் பணி அவற்றுக்குச் சென்றுவிடும். ராணியின் பணி தொடர்ந்து முட்டைகளை இட்டுக்கொண்டே இருப்பது மட்டுமே.
  • ஆண் எறும்பு: இதன் பணி, ராணியின் இனப்பெருக்கத்திற்கு உதவுவது மட்டுமே.
  • வேலைக்கார எறும்புகள்: புற்று அமைப்பது, பராமரிப்பது, உணவு தேடுவது, முட்டைகள் மற்றும் லார்வாக்களை பராமரிப்பது ஆகியவை இவற்றின் தலையாய பணியாக இருக்கும்.
  • காவல்கார எறும்புகள்: இவற்றின் பணி, புற்றைப் பாதுகாப்பது, தாக்குதலின்போது தற்காப்பது, வேறு புற்றுகள்மீது படையெடுத்து அபகரிப்பது.
எறும்புகள் தமது ஆன்டனா மூலம் பேசிக்கொள்வது எப்படி? அவற்றின் மொழி என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இப்படியாக, ஒரு ராணியில் தொடங்கும் ஒரு சமூகம் (புற்று), சில நூறு முதல் பல லட்சம் எறும்புகள் வரைகூடப் பெருகும் என்று விளக்குகிறார் பூச்சியியலாளர் பிரியதர்ஷன்.

இதில், ராணி எறும்பைத் தவிர மற்ற பெண் எறும்புகள் அனைத்துமே இனப்பெருக்கம் செய்யும் திறனற்றவை. ஆகவே அவை தமது சமூகம் பெருகுவதற்கு ராணியையே முற்றிலுமாகச் சார்ந்திருக்கின்றன. இந்நிலையில், அந்த ராணியை இழந்துவிட்டால் எதிர்காலத்தையே அவை இழந்துவிடுகின்றன.

ஆகையால்தான், ஒரு போரின்போது அந்த ராணியையும் அடுத்த சந்ததிகளையும் பாதுகாக்க, ஓர் எறும்புப் புற்றில் இருக்கும் வேலைக்கார, காவல்கார எறும்புகள் என அனைத்தும் தம் உயிரையே தியாகம் செய்து மிக மூர்க்கமாகப் போரிடுகின்றன.

 

எறும்புகளின் உயிர்த் தியாகம்

எறும்புகள் தமது ஆன்டனா மூலம் பேசிக்கொள்வது எப்படி? அவற்றின் மொழி என்ன?

பட மூலாதாரம்,SUBAGUNAM KANNAN/BBC

படக்குறிப்பு, கூண்முதுகு எறும்புகளுக்கு இடையே நடந்த போரின்போது தனியாகச் சிக்கிய எறும்பைச் சுற்றி வளைத்துத் தாக்கும் 'எதிரி' எறும்புகள்

அத்தகைய மற்றுமொரு போரை ஹரியாணாவில் சூரியன் அஸ்தமித்த நேரத்தில் கவனிக்க நேர்ந்தது. அதிலும் அப்படித்தான் நிகழ்ந்து கொண்டிருந்தது. அநேகமாக அப்போதுதான் போர் தொடங்கியிருக்க வேண்டும்.

அது தோட்டங்களில், புல்தரைகளில் அதிகம் காணப்படும் ஒரு வகைக் கட்டெறும்பு. புற்றின் வாசலில் நிகழ்ந்த தாக்குதல்களில் காவல்கார எறும்புகள், எதிரிகளை உள்ளே நுழையவிடாமல் தற்காத்துக் கொண்டிருந்தன. அதில் பல மடிந்தும் கொண்டிருந்தன.

அதேவேளையில், உணவு தேடி வெளியே சென்றிருந்த வேலைக்கார எறும்புகள் மீண்டும் வேகவேகமாகத் தமது புற்றுக்குள் சாரிசாரியாக வரிசை மாறாமல் ஓடிக்கொண்டிருந்தன.

ஆனால், எங்கோ உணவு தேடிச் சென்றிருந்த எறும்புகளுக்குத் தமது புற்றில் நிகழும் படையெடுப்பு எப்படித் தெரிய வந்தது என்ற கேள்வி எழுந்தது. அதற்குக் காரணமாக எறும்புகளின் அபாரமான தொடர்பு உத்திகளைச் சொல்கிறார் முனைவர் ப்ரொனோய் பைத்யா.

“எறும்புகளின் தொடர்பு உத்திகள் பல வழிகளில் செயலாற்றுகின்றன. இந்தத் தொடர்பு உத்திகள் மட்டுமின்றி அவை தம் உயிரைத் துச்சமெனக் கருதி புற்றைக் காக்கப் போராடுவதற்கும் அடிப்படைக் காரணமாக இருப்பது அவற்றின் சமூகநலப் பண்புதான்,” என்கிறார்.

எறும்புகள் தமது ஆன்டனா மூலம் பேசிக்கொள்வது எப்படி? அவற்றின் மொழி என்ன?
படக்குறிப்பு, இந்த விளக்கப்படத்தில் இருப்பது போல, எறும்புகள் உடலில் இருந்து வெளிப்படும் வேதிமத்தைப் பயன்படுத்தி தாம் பார்க்கும் உணவுப் பொருளின் மீது வேதிமக் குறியிட்டு அடையாளப்படுத்துகின்றன

அதாவது, தன்னைவிடத் தமது சமூகத்திற்கே முன்னுரிமை அளித்து உழைக்கும் குணம் கொண்டவை எறும்புகள்.

பொதுவாக, ஆரோக்கியமான சந்ததிகளை உருவாக்கி, தமது மரபணுவை அழியவிடாமல் அடுத்தடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதே அனைத்து உயிரினங்களின் தலையாய பணி. இனப்பெருக்கச் செயல்முறை அத்தகையதே. இதையே டார்வின் 'வலியன பிழைக்கும்' என்ற கோட்பாட்டின் மூலம் உணர்த்தினார். அதாவது, வலிய மரபணு பிழைக்கும்.

இங்கு எறும்புகளைப் பொறுத்தவரை, “ஒரு புற்றிலுள்ள அனைத்து எறும்புகளுமே சகோதரிகள். அவையனைத்தும் 75% மரபணுரீதியாக ஒத்துப் போகின்றன. அவையனைத்தின் இனப்பெருக்க மூலமாகச் செயல்படுவது ராணி மட்டும்தான். ஆக, ராணியும் அது இடும் முட்டைகளுமே அந்தப் புற்றிலுள்ள எறும்புகளின் அடுத்த சந்ததிக்கு அடிப்படை,” என்கிறார் ப்ரொனோய்.

“இதன் காரணமாகவே ராணிக்கும் லார்வாக்கள் மற்றும் வளர்ந்து வரும் எறும்புகளுக்கும் முன்னுரிமை கொடுத்து உணவூட்டுவது, பாதுகாப்பது ஆகியவை வேலைக்கார, காவல்கார எறும்புகளின் தலையாய பணியாகிவிடுகிறது,” என்கிறார் ப்ரொனோய்.

இதுவே படையெடுப்பு நிகழும்போது எறும்புகள், புற்றைக் காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்வது, உயிர்த் தியாகம் செய்வது அவற்றின் அடிப்படைப் பண்பாகிவிடுகிறது.

 
எறும்புகள் தமது ஆன்டனா மூலம் பேசிக்கொள்வது எப்படி? அவற்றின் மொழி என்ன?
படக்குறிப்பு, உணவுப் பொருளை அவை வேதிமக் குறியிட்டு அடையாளப்படுத்திய பிறகு, அவைதம் புற்றுக்குத் திரும்பிச் செல்லும்போது வழிநெடுக பாதையில் வேதிமக் குறியிட்டுக்கொண்டே செல்லும்

எறும்புகள் பேசும் மொழி என்ன தெரியுமா?

சரி, எறும்புகளின் தொடர்பு மொழிக்கு வருவோம்.

எறும்புகளுக்கு எதற்கு ஆன்டனா?

எறும்புகளின் உடலமைப்பில் ஆன்டனா எனப்படும் உணர்கொம்புகள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. அவற்றின் தலைப் பகுதியில் கண்களுக்கு மேலே, இரண்டு மெல்லிய குச்சி போன்ற அமைப்பு நீண்டிருக்கும். அவையே உணர்கொம்புகள் எனப்படுகின்றன.

இந்த உணர்கொம்புகள் இல்லையெனில், எறும்புகள் பிழைத்திருப்பதே சவாலான காரியம் என்கிறார் முனைவர் ப்ரொனோய்.

எறும்புகள் தமது ஆன்டனா மூலம் பேசிக்கொள்வது எப்படி? அவற்றின் மொழி என்ன?
படக்குறிப்பு, அப்படி வழிநெடுக இருக்கும் வேதிமக் குறியீடுகளை மற்ற எறும்புகள் தங்கள் உணர்கொம்புகளின் மூலம் உணர்ந்து பாதையைக் கண்டறிந்து உணவு இருக்கும் இடத்தை அடைகின்றன.

“எறும்புகளின் தொடர்பு மொழி என்பது வேதிம அடிப்படையிலானது. அவைதம் உடலில் இருந்து ஃபெரோமோன்ஸ் (Feromones) எனப்படும் ஒரு வகை வேதிமத்தை வெளியிடுகின்றன. அந்த வேதிமத்தை உணர்வதன் மூலமே எறும்புகள் ஒன்றுக்கொன்று தகவல் பரிமாறிக் கொள்கின்றன, தமது புற்றைச் சேர்ந்த சகாக்களை அடையாளம் காண்கின்றன,” என்கிறார் அவர்.

உதாரணமாக, உணவு தேடிச் செல்லும்போது ஓர் எறும்பு அதனால் தன்னந்தனியாக முற்றிலும் எடுத்துவர முடியாத அளவுக்கு ஓர் உணவுக் குவியலைக் காண்கிறது. அப்போது, அந்த இடத்தைத் தனது வேதிமத்தால் குறியிட்டுக் கொண்டே, அதாவது, அங்கிருந்து தனது புற்றுவரை ஃபெரொமோன்களை கசியவிட்டுக்கொண்டே வருகிறது.

பிறகு, புற்றில் இருக்கும் மற்ற எறும்புகளுக்குத் தகவல் கொடுத்து, தனது வேதிமப் பாதையை ஒரு ஜி.பி.எஸ் போலப் பயன்படுத்தி அவற்றை அந்த உணவுக் குவியலை நோக்கி அழைத்துச் செல்கிறது.

 
எறும்புகள் தமது ஆன்டனா மூலம் பேசிக்கொள்வது எப்படி? அவற்றின் மொழி என்ன?
படக்குறிப்பு, ஒரு ஜி.பி.எஸ் போல எறும்புகள் இந்த வேதிமக் குறியீடுகளை உணர்கொம்புகளைப் பயன்படுத்தி உணர்ந்து மற்ற எறும்புகள் சென்ற பாதையைக் கண்டறிகின்றன

இத்தகைய தொடர்பு உத்தியை எறும்புகள் பயன்படுத்தியே ஹரியாணாவில் நான் கண்ட போரின்போது, வேலைக்கார எறும்புகளிடம் போர் குறித்து எச்சரித்து, புற்றுக்குத் திரும்ப வைத்திருக்கலாம் என்று விளக்கினார் முனைவர் பிரியதர்ஷன்.

எறும்புகள் ஒன்றுக்கொன்று தொடர்புகொள்வதற்கும், தங்களது சுற்றத்தை, அதிலுள்ள ஆபத்துகளை உணரவும் அவற்றுக்கு உணர்கொம்புகள் மிகவும் அவசியம். அந்த உணர்கொம்புகளை வைத்தே எறும்புகள் வேதிமங்களையும் அவற்றின் மூலம் பகிரப்படும் செய்திகளையும் உணர்கின்றன.

முனைவர் ப்ரொனோயின் கூற்றுப்படி, உணர்கொம்புகளை இழந்துவிட்டால், எறும்புகள் திசை மற்றும் பாதைகளை அறிவது, தங்களது சகாக்களுடன் தொடர்புகொள்வது, ஆபத்துகளை உணர்வது என அனைத்துத் திறன்களையுமே இழந்துவிடும். எளிமையாகச் சொல்ல வேண்டுமெனில், ஓர் எறும்பு உயிர் பிழைத்திருப்பதற்கே இந்த உணர்கொம்புகள் மிக அடிப்படையான தேவை.

இதுபோக, புற்றைப் பராமரிக்க, காவல் காக்க அதிக எண்ணிக்கையிலான வேலைக்கார எறும்புகள் தேவை என்பதால், இனப்பெருக்கத் திறனற்ற எறும்புகளை அதிகளவில் இனப்பெருக்கம் செய்யுமாறு மற்றவை கட்டாயப்படுத்துவது, புதிதாகப் பிறந்த எறும்புகளுக்குத் தமது பணிகள், நடத்தைகளைக் கற்றுத் தருவது என இன்னும் பற்பல வியப்பூட்டும் வாழ்வியல் முறைகளை எறும்புகள் கொண்டுள்ளன.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.