Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU   01 SEP, 2024 | 09:41 PM

image
 

நேர்காணல்: சிவலிங்கம் சிவகுமாரன்

சுதந்திர இலங்கையின்  சுதந்திரம் பறிக்கப்பட்ட மக்களின் குரல்களில் எனது குரலும் ஒன்று. சுதந்திரத்துக்குப் பின்னரான காலப்பகுதியில் வடக்கு கிழக்கு சமூகத்தினர்  எவ்வாறு முப்பது வருடங்கள் தனிநாட்டுக்காக போராடினார்களோ அதே போன்று  அதற்கு முன்னைய முப்பது வருடங்கள் நாம் இந்த நாட்டின் குடிகள் என்ற அந்தஸ்த்தைப் பெறுவதற்கு போராடினோம்.

இரண்டு தரப்பினரின் போராட்டங்களும் முக்கியமானவை. அவர்கள் நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தப் பிறகு போராடினார்கள், நாம் சுதந்திரம் கிடைத்த அதே  ஆண்டில்  குடியுரிமையையும் அடுத்த ஆண்டில் வாக்குரிமையையும் பறிகொடுத்து விட்டு போராடினோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக  பிந்திய முப்பது வருட போர் யுகம் பேசப்படுவதை போன்று அதற்கு முந்தைய  எமது முப்பது வருட போராட்டம் பேசப்படவில்லையென்பது வேதனை.

ஆகவே அது குறித்த அறிவார்ந்த  அரசியலை பேசும் அதே வேளை மலையக மக்களை இந்நாட்டின் அர்த்தமுள்ள குடிகளாக அங்கீகரிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை சக ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு சொல்வதற்காகவே நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றேன். 

 இத்தேர்தலில் நான்  நான் வெல்வதற்காக அல்ல சொல்வதற்காகவே போட்டியிடுகின்றேன் என்று தெரிவிக்கின்றார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்   மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும்  சுயேச்சை வேட்பாளருமான மயில்வாகனம் திலகராஜ் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு அவர் வழங்கிய நேர்காணல் இங்கு தரப்படுகின்றது.  

 

கேள்வி: இலங்கை மலையகத் தமிழ் மக்களின் வேட்பாளர் என்பதன்  விளக்கம் என்ன? 

பதில் : இதில் சந்தேகங்கள் இருக்க முடியாது என நினைக்கிறேன். இலங்கையில் வாழ்ந்து வருகின்றன மலையக மக்களின் பிரதிநிதியாக நான் பாராளுமன்றில் செயற்பட்டிருக்கின்றேன். அவர்களின் பல பிரச்சினைகளை பேசியிருக்கின்றேன், குரல் கொடுத்திருக்கின்றேன். ஆகவே அந்த மக்களின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ளேன். இந்த நாட்டிற்காக உழைத்த வர்க்கத்தினரின்  வாரிசாக நான் விளங்குகின்றேன். இந்த நாட்டில் எமக்கும் உரித்துண்டு என்பதில் எந்த சந்தேகங்களுமில்லை. இலங்கை எமது நாடு. அதில் தமிழர்களாகிய நாங்கள் மலையக சமூகத்தினர். அந்த அடிப்படையில் இலங்கை மலையகத் தமிழர்கள் என்ற பதம் பொருத்தமாகத்தானே இருக்கின்றது. 

கேள்வி:  மலையக அரசியல் அரங்கம் என்ற  சமூக செயற்பாட்டு இயக்கத்தின்  ஒரு அம்சம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது எனக் கூறலாமா?

பதில் :  ஆம் நிச்சயமாக. கடந்த வருடம் இந்த இயக்கத்தை நாம் ஆரம்பித்த போது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் போட்டியிட வேட்பாளர்கள் அனைவரையும் தெரிவு செய்திருந்தோம். அப்போது எமது அமைப்பின் கொள்கைகள் பற்றி நான் விளக்கமளிக்கும்  போது இந்த நாட்டில் இடம்பெறும் சகல தேர்தல்களிலும் நாம் போட்டியிடுவோம் என  தெளிவாகக் கூறியிருந்தேன். அதில் ஜனாதிபதி தேர்தல் தான் முதலாவதாக இடம்பெறப் போகின்றது.

அதில் களமிறங்கியுள்ளோம். அதில் மற்றுமொரு முக்கிய விடயம் மாவட்ட எல்லைகளை கடந்து செயற்படுவோம் என்பதாகும். ஆகவே நுவரெலியா மாவட்டத்துக்குள்ளேயே எமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்துக்கொண்டிருக்க முடியாது. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது  என்பது மாவட்ட எல்லைகளை கடந்த ஒரு செயற்பாடு தானே? ஆகவே எமது கொள்கைகளை சிறப்பான முறையில் கால மாற்றத்துக்கும் சூழலுக்கும்  ஏற்றவாறு முன்னெடுத்துக்கொண்டிருக்கின்றோம்.

கேள்வி:  களமிறங்கியிருப்பது வெல்வதற்கு அல்ல என்று கூறிவிட்டீர்கள் என்ன சொல்லப்போகின்றீர்கள்? 

பதில் : இது வரை  மலையக சமூகம் தொடர்பில் எந்த மலையக அரசியல்வாதிகளும் சொல்லாத விடயங்களை சொல்லப்போகிறேன் என்றும் வைத்துக்கொள்ளலாம். ஏனென்றால் 1977 ஆம் ஆண்டிலிருந்து  இது வரை எமது மலையக பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் சொல்லாத பல விடயங்களை நான் பாராளுமன்ற உறுப்பினராக சொல்லியிருக்கின்றேன், அதன் மூலம் சில விடயங்களை செய்யவும் வைத்திருக்கின்றேன்.

பாரம்பரிய அரசியல்வாதிகள் எல்லாம் பாராளுமன்றத்தில் சொல்ல வேண்டிய விடயங்களை அங்கு சொல்லாமல் பத்திரிகைகளுக்கு அறிக்கை விடுத்துக்கொண்டிருந்த காரணத்தினால் தான்  நாங்கள் பாராளுமன்றத்துக்கு வர வேண்டியேற்பட்டது. இப்போது நான் சொல்ல வருகின்ற விடயங்கள் பல உள்ளன. அதில் எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ள பிரதான விடயத்தை இங்கு கூற விரும்புகிறேன்.

அதாவது மலையக மக்களின் நீண்ட கால பிரச்சினைகளை பதிவு செய்வதற்கான ஒரு ஜனாதிபதி  ஆணைக்குழுவை ஸ்தாபித்தலாகும். அதை ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.

கேள்வி: ஜனாதிபதி வேட்பாளருக்கான காரியாலயம் தொடர்பில்  மலையகப் பெருந்தோட்டப்பகுதி  குடியிருப்புகள்  பற்றிய   நீண்ட கால  அவலத்தை   அம்பலப்படுத்தியிருந்தீர்கள். இது பேசப்பட்டதா? 

பதில்:  இனி அதிகமாகவே  பேசப்பட வேண்டும். இப்படியான விடயங்களை சொல்வதற்காகவே நான் களமிறங்கியுள்ளேன் என்பதை ஏனையோரும் புரிந்து கொள்ள வேண்டும். நான் பிறந்த மண் வட்டகொடை மடக்கும்பரை தோட்டத்தின்  புதுக்காடு பிரிவு.

அங்கு வசிக்கும் ஓய்வு பெற்ற  தோட்டத் தொழிலாளியான திருமதி. கருப்பன் தனபதி அவரது வசிப்பிடமான லயன் அறையை எனக்கு தற்காலிக தேர்தல் காரியாலயமாக பயன்படுத்துவதற்கு கடந்த 19 ஆம் திகதி அனுமதி தந்தார். 

ஆனால் தேர்தல்கள் ஆணைக்குழு எனக்கு அனுப்பி வைத்துள்ள சுற்றுநிருபத்தின் ( இல 06) பிரகாரம் இந்த வசிப்பிடம் திருமதி. கருப்பன் தனபதிக்கு சொந்தமானது என்றும் அந்த வசிப்பிடம் அமைந்த வளவு அரசுக்கோ வேறு நியதிச் சட்ட நிறுவனம் ஒன்றுக்கோ உரித்தானது அல்ல என்பதையும் வேட்பாளராகிய நான் உறுதி செய்தல் வேண்டும். இவற்றை உறுதி செய்ய திருமதி. கருப்பன் தனபதியிடம் எவ்விதமான ஆவணங்களும் இல்லை. ஆனால் அவரது தலைமுறையினர் கடந்த 200 ஆண்டுகளாக இந்த லயன் அறையில் வாழ்வதாக திருமதி. தனபதி வாய்மொழி மூலமாக உறுதி சொல்கிறார்.

மேலும் வேட்பாளரின் தேர்தல் காரியாலயம் (10x10) 100 சதுர அடிக்கு மேற்பட்டதாகவும் உயரம் 8 அடிக்கு மேற்பட்டதாகவும் இருக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு கோரி இருப்பதுடன் அதனை குறித்த குடியிருப்பு  அமைந்த கிராம உத்தியோகத்தர் உறுதி செய்ய வேண்டும் எனவும் சுற்று நிருபத்தில் கேட்கப்பட்டுள்ளது. ஆனால் திருமதி தனபதி அவர்களின் லயன் குடியிருப்பின் கூரையின் முகப்பு பகுதி 6 அடிக்கும் குறைவாகவே உள்ளதால் அதனை உறுதி செய்வதில் கிராம உத்தியோகத்தருக்கு சிக்கல் ஏற்படலாம்.

தோட்ட லயன் அறையில் பிறந்து வளர்ந்த நான், இத்தகைய லயன் அறைகளில் வாழும் 9 லட்சம் மலையகப் பெருந்தோட்ட மக்களின் பிரதிநிதியாக தோட்ட லயன் அறை ஒன்றிலேயே எனது தற்காலிக தேர்தல் காரியாலயத்தை அமைக்க விரும்புகிறேன். 

எனவே இந்த சுற்றுநிருப சரத்துகளை மீளாய்வு க்கு உட்படுத்தி 200 ஆண்டுகளாக தமக்கு உரித்தாவனங்கள் ஏதுமற்ற, அவை யாருக்கு உரித்தான வளவு என உறுதி செய்ய முடியாத 8 அடிக்கும் குறைவான உயரமான கூரையின் முகப்பு பகுதியைக் கொண்ட இலங்கை பெருந்தோட்டம் ஒன்றில் அமைந்த தொழிலாளியின் வாழ்விடமான லயக் குடியிருப்பை தற்காலிக தேர்தல் காரியாலயமாக   உள்ள சிக்கலை தீர்த்து வைக்குமாறு சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்தேன். அவர்கள் நுவரெலியா மாவட்ட தேர்தல் காரியாலயத்தில் உள்ள தேர்தல் முறைப்பாட்டுப் பிரிவில் இது குறித்து அறிவிக்க சொல்லியிருந்தார்கள். அது குறித்து முறைப்பாடொன்றை செய்தேன். குறித்த காரியாலயத்தை பயன்படுத்தும்படியும் மேற்கொண்டு அது தொடர்பில் பிரச்சினைகள் இருந்தால் அது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் கூறினார்கள். 

இவ்வாறான குடியிருப்பு சூழலில்தான் மலையகப் பெருந்தோட்ட மக்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்பதை ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும்  தேசிய கொள்கை வகுப்பாளர்களுக்கும், அரசுக்கும், ஐ.நாவுக்கும் சேதியை சொல்ல விரும்புகிறேன்.

கேள்வி : தோட்டத்தொழிலாளர்களின்  சம்பள விடயத்தில் என்ன  தீர்வுகளை கொண்டிருக்கின்றீர்கள்? 

பதில் : தொழிலாளர்களின்  சம்பளத்தை இது வரை தொழிலாளர்கள் கேட்டதில்லையே,  அவர்களின் பிரதிநிதிகள் தானே அதை தீர்மானிக்கின்றார்கள்? ஆகவே இங்கு ஆரம்பமே முரணாக உள்ளது. ஒன்று தொழிலாளர்களின் சம்பளத்தைப் பற்றி கதைப்பார்கள் அல்லது அவர்களை சிறுதோட்ட உடைமையாளர்களாக மாற்றுவோம் என ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் நிபந்தனைகளை முன்வைத்து யாராவது ஒரு வேட்பாளருடன் இணைந்து கொள்வார்கள்.

அவர் வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும் நடக்கப்போவது ஒன்றுமில்லை. உதாரணத்துக்கு கோட்டாபய ஜனாதிபதி வேட்பாளராக இருந்த போது அவருக்கு ஆதரவளித்த மலையகக் கட்சியானது,  தொழிலாளர்களை சிறுதோட்ட உடைமையாளராக்க இவருக்கு வாக்களியுங்கள் என்றது.

கோட்டாபய வெற்றி பெற்றும் அது நடக்கவில்லை. சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளித்த கூட்டணி இதையே முன்வைத்து ஆதரவு கேட்டது. அவர் வெற்றி பெறவில்லை. ஆனால் அது முக்கியமல்ல. இவர்கள் முன் வைத்த கோரிக்கையை எதிர்க் கட்சித் தலைவராகவாவது அவர் பாராளுமன்றத்தில் ஒரு பிரேரணையை முன்வைத்திருக்கலாமே? அவர் ஏன் அதை செய்யவில்லை? நான் இவ்விடயத்தில் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன்.

தொழிலாளர்களுக்கு நாட்கூலி முறைமை வேண்டாம். தென்மாகாண தோட்டங்களை சிங்கள மக்களுக்கு பிரித்து கொடுத்தது போன்று மலையகப் பிரதேசங்களிலும் தொழிலாளர்களுக்கு அதை பிரித்து வழங்கும் திட்டம் குறித்து பேச அனைவரும் ஒன்று சேர்ந்தால் நான் அவ்விடத்தில் முதல் நபராக நிற்பேன். 

கேள்வி:   மலையக சமூகத்தை தேசிய நீரோட்டத்தில் இணைத்துக்கொள்ள வேண்டும் என காலங் காலமாக பலரும் பேசி வருகின்றார்களே  இது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில் : எமது மக்களுக்கு சொந்தமாக ஒரு துண்டு காணியில்லை, கெளரவமாக வாழ்வதற்கான குடியிருப்பு இல்லை, அந்த குடியிருப்புக்கு ஒரு முகவரி இல்லை, தேசிய சுகாதார சேவைக்கும் இன்னும் எமது மக்கள் இணைக்கப்படவேயில்லை.

உள்ளூரிலேயே இப்படி தீர்க்கப்படாத பிரச்சினைகள் இருக்கும் போது தேசிய நீரோட்டத்துக்கு எப்படி போவது? இந்த மக்களுக்கு முகவரிகளே இல்லையென எந்த தலைவராவது பாராளுமன்றத்தில் பேசியிருக்கின்றாரா? முகவரி இல்லாத காரணங்களினால் தோட்டக் காரியாலயங்கள் தானே தபால்களை விநியோகித்து வருகின்றன? இதற்கான தீர்வை இதுவரை இந்த தலைவர்கள் கூறவில்லையே? தனி ஒருவராக சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒருவர் தனது தோட்டத்துக்கு முகவரிகளை வழங்கக் கோரி நீதிமன்றத்தை நாடினார்.

அது அந்த ஒரு தோட்டத்துக்கு மாத்திரமான தீர்வாக அமைந்தது. இங்கு பத்து இலட்சம் மக்களுக்கு அந்தப் பிரச்சினைகள் உள்ளன. அதை வெளிக்கொணர இந்த தேர்தல் காலத்தை நான் பயன்படுத்திக்கொள்ளப்போகின்றேன். எமது தேர்தல் விஞ்ஞாபனங்கள் அனைவருக்கும் சென்று சேர்வதற்கு அவற்றை இயன்றவரை  தபாலில் அனுப்புவதற்கான முயற்சியை எடுப்போம். பெருந்தோகையான தேர்தல் விஞ்ஞாபன கடிதங்கள் தோட்ட காரியாலயங்களிலேயே போய்ச் சேரும்.

ஏனென்றால் முகவரிகள் இல்லாத காரணத்தினால் அந்த பணியை தபாற்கந்தோர்கள் செய்வதில்லை. அவை தோட்டக் காரியாலயத்திலேயே ஒப்படைக்கும். அவ்வாறு நிகழும் போது தோட்ட காரியாலயங்களும், தபால்களை விநியோகிப்பது தமது வேலை அல்ல என்பதை உணர வேண்டும்.

ஆகவே இதனூடாக ஒரு செய்தியை நான் பலருக்கு சொல்லக் கூடியதாக இருக்கும். நான் ஆரம்பத்தில் கூறியது போன்று இத்தேர்தலில் நான் வெல்லப்போவதில்லையென்றாலும் சொல்லப்போகும் விடயங்கள் அழுத்தமாகவும் அனைவரையும் சிந்திக்க வைப்பதாயும் இருக்கும் என்பது நிச்சயம்.

https://www.virakesari.lk/article/192594

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.