Jump to content

தேர்தலை தனக்கும் அநுராவுக்கும் இடையிலான போட்டியாக காண்பிக்கும் முயற்சியில் ஜனாதிபதி ரணில் 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலை தனக்கும் அநுராவுக்கும் இடையிலான போட்டியாக காண்பிக்கும் முயற்சியில் ஜனாதிபதி ரணில் 

— வீரகத்தி தனபாலசிங்கம் — 

spacer.png

ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னமும் இரு வாரங்களே இருக்கின்றன. 38 பேர் போட்டியிடுகின்ற போதிலும், அவர்களில் பலரை பொதுவெளியில் காணவில்லை. பிரதான வேட்பாளர்கள் தங்களின் தேர்தல் பிரசாரங்களை நாடுபூராவும் மும்முரமாக முன்னெடுத்திருக்கிறார்கள்.

பிரதான வேட்பாளர்களாக விளங்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்கவும் தங்களது தேர்தல் விஞ்ஞாபனங்களில் பொருளாதார நெருக்கடியில்  இருந்து  இலங்கையை மீட்டெடுத்து அபிவிருத்திப் பாதையில் வழிநடத்துவதற்கு தங்கள் கொள்கைகளின் அடிப்படையில்  திட்டங்களை பெருமளவுக்கு நிதானத்துடன் முன்வைத்தார்கள். தேர்தல் தினம் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில்  அவர்கள் பிரசார மேடைகளில்   பெருவாரியான   வாக்குறுதிகளை அள்ளிவீசத் தொடங்கியிருக்கிறார்கள். அந்த வாக்குறுதிகளின்  நடைமுறைச் சாத்தியம் குறித்து பலத்த சந்தேகம் கிளம்புகிறது.

அவர்களின் தேர்தல் பிரசாரக்கூட்டங்கள் நடைபெறும் இடத்துக்கு வேற்றுக்கிரகத்தில் இருந்து எவராவது வந்து இறங்கினால், அவர் பூமியில் மிகவும் வசதிபடைத்த ஒரு நாட்டில் காலடி வைத்திருப்பதாக  ஆச்சரியப்படுவார் என்பதில் சந்தேகமில்லை.

 இரு வருடங்களுக்கு முன்னர் வங்குரோத்து நிலையை அடைந்த இலங்கையின் பொருளாதாரத்தின் இன்றைய  உண்மையான நிலைவரத்தை உணர்ந்தவர்களாக  வேட்பாளர்கள்  இந்த தடவை  நடைமுறைச் சாத்தியமற்ற வாக்குறுதிகளை வழங்குவதை பெரிதும் தவிர்க்கக்கூடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,  நடைமுறைப்படுத்த முடியுமா இல்லையா என்பதைப் பற்றி சிந்திக்காமல் ஏட்டிக்குப்போட்டியாக பொருளாதார சலுகைகள் குறித்து அவர்கள் வாக்குறுதிகளை அள்ளி வீசிக்கொண்டிருக்கிறார்கள். கடந்த காலத்தைப் போன்று மக்கள் ஏமாற மாட்டார்கள் என்று நம்புவோமாக.

 முன்னைய ஜனாதிபதி தேர்தல்களை போலன்றி இந்த தடவை ஜனாதிபதி தேர்தலுக்கு பிரத்தியேக முக்கியத்துவம் இருக்கிறது.

 மக்களின் அமோக ஆதரவுடன் ஐந்து வருடங்களுக்கு முன்னர் தெரிவான ஜனாதிபதி ஒருவரை இலங்கையின் வரலாறு முன்னென்றும் கண்டிராத வகையிலான பிரமாண்டமான மக்கள் கிளர்ச்சி ஆட்சியதிகாரத்தில் இருந்து விரட்டியதற்கு பிறகு இரு வருடங்கள் கழித்து இந்த ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. 

பாரம்பரிய அரசியல் அதிகார வர்க்கத்தின் மீதான சாதாரண மக்களின் கடுமையான வெறுப்பை தெளிவாக  வெளிக்காட்டிய அந்த மக்கள் கிளர்ச்சி ‘முறைமை மாற்றம்’ ஒன்றை வேண்டி நின்றது. அதன் விளவாக மக்களின் அரசியல் சிந்தனைகளில் ஏதாவது  குறிப்பிடத்தக்க  மாற்றம் ஏற்பட்டிருந்தால் அது நிச்சயமாக இந்த தேர்தலில் பிரதிபலிக்க வேண்டும். 

மக்கள் கிளர்ச்சிக்கு பின்னரான அரசியல் சூழ்நிலையை பயன்படுத்தி நாட்டு மக்கள் மத்தியில் பெருமளவுக்கு ஆதரவை வளர்த்துக்கொண்ட தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவம் பாரம்பரிய அரசியல் அதிகார வர்க்கத்துக்கு வெளியிலானது. அவர்களுக்கு அதிகரித்திருக்கும் ஆதரவு புதிய ஆட்சியாளர்களாக மாற்று அரசியல் தலைமைத்துவம் ஒன்று மேலெழுவதற்கு வழிவகுக்கக்கூடிய ஒரு கட்டத்தை இலங்கை அரசியல் எட்டியிருக்கிறதா இல்லையா என்பதை ஜனாதிபதி தேர்தல் வெளிக்காட்டும் என்பது   அவதானிகளின் பரவலான கருத்து.

 சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையின் பிரகாரம் கடந்த இரு வருடங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளை தவிர இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சி பெறுவதற்கு வேறு எந்த மார்க்கமும் இல்லை என்பதே ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் உறுதியான நிலைப்பாடாக இருக்கிறது. தன்னை  ஜனாதிபதியாக தெரிவுசெய்து பொருளாதார மறுசீரமைப்பை தொடர்ந்து முன்னெடுக்க வாய்ப்பைத் தராவிட்டால் மீண்டும் இரு வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்டதை விடவும் படுமோசமான பொருளாதார நெருக்கடி தோன்றும் என்று ஒரு வகையில் மக்களை ‘பணயக்கைதியாக’ வைத்திருக்கும் பாவனையில் அவரது பிரசாரம் அமைந்திருக்கிறது.

 அதேவேளை, ஜனாதிபதியின் பிரதான போட்டியாளர்களான சஜித் பிரேமதாசவும் அநுரா குமாரவும் கூட சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையை தொடர்ந்து முன்னெடுப்பதாகவே மக்களுக்கு கூறுகிறார்கள். உடன்படிக்கையில் திருத்தங்களைச் செய்வது குறித்து பேச்சுவார்த்தைகளை நடத்தப்போவதாக அவர்கள் கூறுகின்றார்களே தவிர, பொருளாதார மீட்சிக்கு முறையான  மாற்றுக் கொள்கைகளை முன்வைக்கவில்லை. 

சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனையின் பிரகாரம் அரசாங்கம் முன்னெடுத்துவரும் சிக்கன நடவடிக்கைகள் மற்றும்  கடுமையான வரி அறவீடுகளின் விளைவாக சொல்லொணா கஷ்டங்களை அனுபவித்துவரும் அதிகப் பெரும்பான்மையான மக்கள் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புடனான பொருளாதார மறுசீரமைப்பு தொடர்பிலான தங்கள் தீர்ப்பை கூறுவதற்கும் ஜனாதிபதி தேர்தல் வாய்ப்பளிக்கிறது. 

இரு பிரதான வேட்பாளர்களுக்கு இடையிலான  போட்டிகளாக அமைந்த முன்னைய  ஜனாதிபதி தேர்தல்களைப் போலன்றி இந்த தடவை  தேர்தல் மும்முனைப் போட்டியாக அமைந்திருக்கிறது. பிரதான வேட்பாளர்களில் எவருமே வாக்கு எண்ணிக்கையின் முதற்சுற்றில் 50 சதவீதமான வாக்குகளை பெறுவது சாத்தியமில்லை என்பதே பொதுவான கருத்தாக இருக்கிறது. விருப்பு வாக்குகளை எண்ண வேண்டிய அவசியம் ஏற்படலாம் என்பதால் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கூறியிருப்பதும் கவனிக்கத்தக்கது.  

சுமார் இருபது வருடங்களுக்கு பிறகு  விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார். இது அவர் போட்டியிடுகின்ற மூன்றாவது ஜனாதிபதி தேர்தலாகும். இறுதியாக 

அவர் 2005 நவம்பர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை எதிர்த்துப் போட்டியிட்டபோது 48.83 சதவீதமான வாக்குகளைப் பெற்றார். கடந்த இருபது வருடங்களில் அவரின் ஐக்கிய தேசிய கட்சி படுமோசமான அளவுக்கு மக்கள் ஆதரவை இழந்துவிட்டது. 2020 பாராளுமன்ற தேர்தலில் அந்த கட்சியினால்  நாடுபூராவும் 249, 435 வாக்குகளை மாத்திரமே  (2.15 சதவீதம் ) பெறக்கூடியதாக இருந்தது. 

ஜனாதிபதி தேர்தலில் 50 சதவீதமான வாக்குகளை விக்கிரமசிங்க பெறவேண்டுமானால் வாக்கு அதிகரிப்பு 48 சதவீதமாக இருக்கவேண்டும்.  அவரது கட்சிக்கு கணக்கில் எடுக்கத்தக்க  ஒரு வாக்குவங்கி இல்லாத நிலையில் அத்தகைய ஒரு பாரிய பாய்ச்சலை  செய்வது எவ்வாறு சாத்தியமாகும்? 

ராஜபக்சாக்களின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெருவாரியான பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்டபட வேறு கட்சிகளில் இருந்து வந்தவர்கள் ஜனாதிபதிக்கு  அமோகமாக வாக்குகளைக்  கொண்டு வரக்கூடிய அளவுக்கு  இன்னமும் தங்களது வாக்காளர்கள் மத்தியில் செல்வாக்கைக் கொண்டவர்களாக இருக்கிறார்களா என்பது முக்கியமான ஒரு கேள்வி.

சிறுபான்மைக் கட்சிகள் மற்றைய வேட்பாளருக்கு ஆதரவாக இருக்கின்ற போதிலும், சிறுபான்மைச் சமூகங்ளைச் சேர்ந்த மக்களில் பெரும்பான்மையானவர்கள் தன்னையே ஆதரிக்கிறார்கள் என்று கடந்தவாரம் விக்கிரமசிங்க கூறியிருந்தார். அத்துடன் தன்னால் முன்னெடுக்கப்படும்  பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் விளைவாக தோன்றியிருக்கும் வழமை நிலையின் சாயல் மக்கள் மத்தியில் தனது செல்வாக்கை அதிகரித்திருக்கிறது என்றும் அவர் நம்புகிறார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் பிரேமதாச 2019 ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவை எதிர்த்துப் போட்டியிட்டபோது சுமார் 42  சதவீதமான வாக்குகளைப் பெற்றார். அப்போது அவர் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து வெளியேறவில்லை. 2020 பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் பிரேமதாச ஐக்கிய மக்கள் சக்தியை அமைத்த பிறகு ஐக்கிய தேசிய கட்சியின் வாக்குவங்கி அவருடன் வந்துவிட்டது. ஆனால் கடந்த ஜனாதிபதி தேர்தலில் பெற்ற அதே சதவீத வாக்குகள் அவருடனேயே தொடர்ந்தும் இருக்கிறதா?  பொதுஜன பெரமுனவில் இருந்து வெளியேறியவர்களில் ஒரு பிரிவினர் பிரேமதாசவுடனும்  இணைந்திருக்கிறார்கள். அவர்களின் ஆதரவு அவருக்கு பெருமளவு வாக்குகளை கொண்டுவரும் என்று சொல்வதற்கில்லை.

இலங்கை தமிழரசு கட்சி  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் சில மலையக தமிழ்க்கட்சிகள் உட்பட பெரும்பாலான சிறுபான்மைச் சமூக கட்சிகள் பிரேமதாசவை ஆதரிக்கின்ற போதிலும், அவற்றின் ஆதரவாளர்கள் முழுமையாக தலைவர்களின் வேண்டுகோளுக்கு செவிமடுத்து முழுமையாக  வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

தேசிய மக்கள் சக்திக்கு அதிகரித்திருப்பதாக கூறப்படும் அமோக ஆதரவு தங்களது அரசாங்கம் தேர்தலுக்கு பிறகு உடனடியாக எடுக்கப்போகும் நடவடிக்கைகள் குறித்து அதன் தலைவர்கள் தேர்தல் மேடைகளில் பிரகடனம் செய்கின்ற அளவுக்கு அவர்களுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. 

கடந்த ஜனாதிபதி தேர்தலில் அநுரா குமாரவுக்கு 3.16 சதவீத வாக்குகள் கிடைத்தன. அவரின் தேர்தல் பிரசாரக்  கூட்டங்களுக்கு என்னதான் மக்கள் ஆயிரக்கணக்கில் அணிதிரண்டுவந்தாலும், 50 சதவீத வாக்குகளை பெறுவதற்கு 47 சதவீத பாய்ச்சலை செய்வது என்பது சாதாரணமான விடயம் அல்ல. ஆனால் அரசியல் என்பது கணிதம் அல்ல, சமூக விஞ்ஞானம் என்று கூறும் அநுரா குமார தனது வெற்றியில் முழுமையான நம்பிக்கை கொண்டவராக இருக்கிறார் என்று தோன்றுகிறது.

இலங்கையின் பாரம்பரியமான இரு பிரதான அரசியல் கட்சிகளாக விளங்கிய ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் அவற்றின் முன்னயை செல்வாக்கு நிலையில் இன்று இல்லை.  தனது கட்சியின் வேட்பாளராக போட்டியிடாமல் ஒரு சுயேச்சை வேட்பாளராக விக்கிரமசிங்க தேர்தலில் களமிறங்கியிருப்பதில்  இருந்து அதைப் புரிந்து கொள்ளமுடியும்.  அது மாத்திரமல்ல, ஜனாதிபதி  பாரம்பரியமாக தன்னால் கடைப்பிடிக்கப்பட்டுவந்த கொள்கைகளை ஏற்றுக் கொள்ளாதவர்களின் ஆதரவில்  முழுமையாக தங்கியிருப்பது இன்றைய இலங்கை அரசியல்  விசித்திரங்களில் ஒன்று.

ஐக்கிய தேசிய கட்சியின் வாக்கு வங்கியை பிரேமதாச தன்னுடன் கொண்டு்வந்ததைப்  போன்று ராஜபக்சாக்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை அமைத்து சுதந்திர கட்சியின் வாக்குவங்கியை தங்கள் வசமாக்கினார்கள்.

ஆனால் மக்கள் கிளர்ச்சியை தொடர்ந்து அவர்கள்  ஆட்சியதிகாரத்தை இழந்த பிறகு  கட்சி பெருமளவுக்கு மக்கள் ஆதரவை இழந்துவிட்டது. தங்களுக்கு இருக்கக்கூடிய வாக்கு வங்கி சிதறிவிடக்கூடாது என்பதற்காகவே நாமல் ராஜபக்சவை பொதுஜன பெரமுன தேர்தலில் களமிறக்கியிருக்கிறது.

சுதந்திர கட்சியின் ஒரு பிரிவினர் ஜனாதிபதியையும் இன்னொரு பிரிவினர் பிரேமதாசவையும் ஆதரிக்கிறார்கள். அதன் தலைவராக இருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆதரவளிக்க முன்வந்தாலும், அவரை ஏற்றுக்கொள்ள எந்த வேட்பாளரும் தயாராக இல்லை. அவரின் ஆதரவை விக்கிரமசிங்க வெளிப்படையாகவே நிராகரித்தார்.

மூன்று பிரதான வேட்பாளர்களில் எவரும் ஐம்பது சதவீதமான வாக்குகளைப் பெறுவது சாத்தியமில்லை என்று நம்பப்படும் நிலையில் அவர்கள் ஒவ்வொருவரும் பெறக்கூடிய வாக்கு வீதத்தைப் பற்றிய மதிப்பீடுகள்  பெருமளவுக்கு நம்பகத்தன்மை கொண்டவையாக இல்லை எனலாம்.

கடந்த வாரம் ஜனாதிபதி விக்கிரமசிங்க மகியங்கனையில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தெரிவித்த ஒரு கருத்து பிரதான போட்டி தனக்கும் அநுரா குமாரவுக்கும் இடையிலானதாகவே இருக்கப்போகிறது என்ற ஒரு தோற்றப்பாட்டை காண்பிப்பதற்கு அவர் முயற்சிக்கிறார்  என்பதை  உதர்த்துகிறது.

” கடந்த காலத்தில் ஜனாதிபதி தேர்தல் இருமுனைப் போட்டியாகவே இருந்து வந்தது. ஆளும் கட்சி வேட்பாளரும் எதிரணியைச் சேர்ந்த பிரதான வேட்பாளரும் போட்டியிட்டார்கள். ஆனால்,  அந்த நிலைவரம் இன்று மாற்றமடைந்து இந்த தடவை ஜனாதிபதி தேர்தலில் எதிரணியின் இரு வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.  பிரேமதாசவை அநுரா குமார வெற்றி கொள்வார். இவ்வருடம்  பிற்பகுதியில் பிரதான எதிர்க்கட்சி தலைவராகவும் அவர் வருவார்” என்று ஜனாதிபதி கூறினார். 

ஜனாதிபதி தேர்தலில் உண்மையான போட்டி தனக்கும் அநுரா குமாரவுக்கும் இடையில்தான் இருக்கப்போகிறது என்று அவர் நம்புகிறார் அல்லது மற்றவர்கள் நம்பவேண்டும் என்று எதிர்பார்க்கிறார் என்பதே இதன் அர்த்தமாகும்.

(ஈழநாடு )

 

https://arangamnews.com/?p=11220

 

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.