Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தகவல் துளிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடல் வாழ் பாலூட்டி உயிரினங்களில் ஒன்று திமிங்கிலம். இவை தங்கள் குட்டிகளுக்குப் பால் ஊட்டுவது நில வாழ் விலங்குகளைப் போலல்ல. இவை நீரின் அடியில் சென்று பாலை வெளிவிடும். வெளிவிடப்பட்ட பால், நீரின் மேல்மட்டத்திற்கு வரும். அவ்வாறே வந்த பாலையே குட்டிகள் குடித்துப் பசியாறும்.

  • Replies 67
  • Views 31.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பூநீறு அறிவியல் ஆய்வு

டாக்டர் எலிசா பி.எஸ்.எம்.எஸ்.,பிஎச்டி.,

நினைவுக்கெட்டாத காலத்திலிருந்து சித்தர்கள் பின்பற்றி வந்த, மரபு வழியில் பயன்பட்டு வந்திருக்கும் 'பூநீறு' என்னும் சித்த மருத்துவத்தைச் சார்ந்த மருந்து பலவேறுபட்ட பெயர்களில் வழங்கப்பட்டு வந்திருக்கிறது. சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் எந்த மருந்தாக இருந்தாலும் அந்த மருந்தோடு இந்தப் 'பூநீறு' என்னும் மருந்து சேர்த்துக்கொள்ளப்படுமானால

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1. ஆற்றின் ஒரு கரையில் இருந்து ஒலி எழுப்பினால் அது மறு கரையில் இரு முறை ஒலி ஏற்படுத்துவது ஏன்?

நீர் ஓர் ஒலி கடத்தி, காற்றைவிட வேகமாக ஒலியைக் கடத்தும் சக்தி வாய்ந்தது. எனவே ஒரு கரையில் எழுப்படுகிற ஒலி மறு கரையில் நீரின் மூலமாக முதலாவதாகவும் காற்றின் மூலமாக இரண்டாவதாகவும் ஒலிக்கிறது.

2. தண்ணீரை விட அதன் நுரை வெண்மையாகத் தெரிவது ஏன்?

தண்ணீரின் மேல் விழும் ஒளிக் கதிர்கள் நீரில் ஊடுருவி உள்ளே சென்றுவிடும். ஆனால் நீரின் நுரை மீது விழும் ஒளிக்கதிர் பிரதிபலிக்கிறது. எனவே நீரின் நுரை வெண்மையாகத் தொ¢கிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நினைவாற்றல் வளர்ந்திட....1

ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. பேசுபவர் உங்கள் உறவினர். தமது புதிய தொலைபேசி எண்ணை அவர் உங்களுக்குத் தெரிவிக்கிறார். உடனடியாகத் தாள், எழுதுகோல் எதுவும் கையில் கிடைக்காதால் அவர் ஒவ்வொரு எண்ணாகச் சொல்லச் சொல்ல நினைவில் வைத்துக் கொள்கிறீர்கள். பேசி முடித்ததும் எண்ணைத் தாளில் வடிப்பதற்குள் அடுத்தடுத்த பணிகள் உங்களை ஆக்கிரமிக்கின்றன. எல்லா வேலைகளையும் முடித்து எண்ணை எழுத ஆரம்பிக்கும் போது அது மறந்து போகிறது.

மறக்காமலே இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். ஏன் இந்த மறதி என்று நம் மீதே கோபம் வருகிறது. ஆனால் மறதி என்பது நமக்குக் கிடைத்த நல்ல வரம் என்று சற்று சிந்தித்தால் புரியும். நேற்று சாப்பிட்ட உணவு அதற்கு முந்தைய நாள் உடுத்திய உடை என்றெல்லாம் மறக்காமல் நினைவில் வைத்திருந்து ஆகப் போவதென்ன. பயனற்றவை நமது நினைவில் இருந்து நீக்கப் படத்தான் வேண்டும். பயனுள்ளவை தொடர்ந்து நிலைத்திருக்கவும் வேண்டும்.

பயனுள்ளவை தொடர்ந்து நினைவில் இருக்க நாம் சில எளிய பயிற்சிகளை மேற்கொள்ளலாம். அதற்காகத் தான் இந்தத் தொடர்.

நினைவாற்றலைத் தற்காலிக நினைவாற்றல் என்றும் நிரந்தர நினைவாற்றல் என்றும் இரண்டு வகைப் படுத்துகிறார்கள். தொலைபேசி எண், மளிகைக் கடையில் வாங்க வேண்டிய பொருட்கள் இவையெல்லாம் சிறிது நேரம் மட்டும் (குறித்த வேலை முடியும் வரை) நம் நினைவில் இருப்பதால் தற்காலிகமானவை. வாழ்வில் நடந்த நல்ல அல்லது துயர நிகழ்வுகள் நாம் பெற்ற பாராட்டு அல்லது வசை... நிரந்தரமானது.

ஒரு மனிதனால் ஒரு நேரத்தில் 5 முதல் 9 எண் வரை அவனது தற்காலிக நினைவில் வைத்திருக்கலாம். இதைத் தெளிவுபடுத்திக் கொள்ள ஒரு சிறிய வேடிக்கை விளையாட்டு விளையாடலாம்.

இருவர் விளையாடும் எண் விளையாட்டு இது. உங்களோடு நண்பர் .. வாழ்க்கைத் துணைவர் .. போன்ற யாரையாவது உடன் அழைத்துக் கொள்ளுங்கள். இருவரிடமும் ஒவ்வொரு தாளும் எழுதுகோலும் தேவை. விளையாட ஆரம்பிக்கலாமா?

முதலில் உங்கள் தாளில் 4 இலக்க எண் ஒன்றை எழுதிக் கொள்ளுங்கள்.

உதாரணமாக 7382.

இதை எழுதிய பிறகு நண்பரிடம் ஒவ்வொரு எண்ணாகச் சொல்லுங்கள்

7 .. 3 .. 8 .. 2

நீங்கள் சொல்லி முடித்த பிறகு நண்பர் இந்த எண்ணைத் தம் தாளில் எழுத வேண்டும். சரியாக எழுதியிருக்கிறாரா என்று பார்த்துக் கொள்ளுங்கள். நான்கு இலக்க எண்ணை அனைவரும் சரியாக எழுதி விடுவார்கள்.

பிறகு உங்கள் தாளில் 5 இலக்க எண் ஒன்றை எழுதிக் கொள்ளுங்கள்.

(உ..ம்) 94361

முன்பு போல நண்பரிடம் ஒவ்வொரு எண்ணாகச் சொல்லுங்கள் சொல்லி முடித்த பிறகு அவர் எழுத ஆரம்பிக்கட்டும்.

இப்படியே 6, 7, 8, 9 இலக்கங்களுடைய எண்களைக் கொண்டு விளையாட்டைத் தொடருங்கள். ஏதாவது ஒரு நிலையில் அவர் நினைவு படுத்த முடியாமல் தடுமாறக் காணலாம். பலரும் 8, 9 இலக்கங்களை நினைவு கூற முடிவதில்லை. 9 இலக்கங்களைத் தாண்டி 10 அல்லது 11 இலக்கம் வரை நினைவில் கொள்வாரானால் அவருக்குப் பெரிதாகப் பாராட்டு விழா நடத்தலாம்.

இப்போது அவரிடம் சவால் விடுங்கள்.. உங்களால் 16, 24, 32 இலக்கங்களுடைய எண்ணைக் கூடத் தவறின்றி நினைவில் இருந்து சொல்ல முடியும் என்று.

அவரை 16 இலக்க எண் ஒன்றை எழுதி வைத்துக் கொண்டு படிக்கச் சொல்லுங்கள். அவர் படிக்கும் போது எண்களை ஒவ்வொன்றாக இல்லாமல் இரட்டை இலக்க எண்ணாக மனதில் வாங்கிக் கொள்ளுங்கள். சான்றாக அவர் 3 .. 7 .. 9 .. 1 .. 2 .. 5 .. 6 .. 8 .. என்று படிக்கும் போது மனதில் 37 .. 91 .. 25 .. 68 என்று சொல்லிக் கொள்ளுங்கள். உங்களால் 16 இலக்கங்களையும் தவறின்றி எழுத முடியும்.

அல்லது 379... 125 ... என்று சொல்லிக் கொள்ளுங்கள். உங்களால் 24 இலக்கங்களையும் தவறின்றி எழுத முடியும்.

இதில் உள்ள மறைபொருள் (இரகசியம்) இதுதான்: தற்காலிக நினைவாற்றலுக்கு 8 இடங்கள் தான் காலியாக உள்ளன. அவற்றைச் சரியாகப் பயன்படுத்தினால் 8ன் மடங்காகிய எத்தனை இலக்கங்களை வேண்டுமானாலும் பொதிந்து வைக்கலாம். நீங்கள் நினைவில் வைப்பது இரட்டைப் படை எண்ணா மூன்றிலக்க எண்ணா என்பது பொருட்டில்லை. நல்ல பயிற்சி இருந்தால் 40 இலக்கங்களைக் கூட நினைவு படுத்தலாம். (கணித மேதைகள் வேறு என்ன செய்கிறார்கள்.? இதுதான் அவர்களது தந்திரம்)

இப்போது தொலைபேசி அழைப்புக்கு வருவோம். உங்கள் உறவினர். தமது புதிய தொலைபேசி எண்ணை உங்களுக்குத் தெரிவிக்கிறார். உடனடியாகத் தாள், எழுதுகோல் எதுவும் கையில் கிடைக்காதால் அவர் ஒவ்வொரு எண்ணாகச் சொல்லச் சொல்ல மூன்றிலக்க எண்ணாக நினைவில் வைத்துக் கொள்கிறீர்கள். பேசி முடித்ததும் எண்ணைத் தாளில் வடிப்பதற்குள் அடுத்தடுத்த பணிகள் உங்களை ஆக்கிரமிக்கின்றன. எல்லா வேலைகளையும் முடித்த பிறகும் எண் பாதுகாப்பாக நினைவில் இருக்கிறது. சரிதானா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒளியாண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஒளியாண்டு என்பது ஒளியானது ஓராண்டுக் கால அளவில் செல்லும் தொலைவைக் குறிக்கும் ஒரு நீள அளவு அலகு. விண்வெளியில் உள்ள விண்மீன்கள் (நட்சத்திரங்கள், நாள்மீன்கள்) முதலியன இருக்கும் தொலைவை அளக்க வானியலில் அளக்கப் பயன்படுத்தும் அலகு. வானியலில் அளக்கப்படும் தொலைவுகள் (தூரங்கள்) மிகவும் பிரம்மாண்டமானவை. நட்சத்திரங்கள், மிகப்பெரும் விண்மீன்களின் கூட்டங்களாகிய நாள்மீன்பேரடைகள் மற்றும் அண்டவெளியில் பரந்துகிடக்கும் பலவகைப் பொருட்களிடையேயான தூரங்கள் மீட்டர், கிலோமீட்டர் போன்ற சாதாரண நீள அளவைகளால் அளப்பது வசதியாய் இராது. இதனாலேயே மிக மிகப் பெரும் தொலைவுகளைக் (பாரிய தூரங்களை) குறிப்பதற்காக ஒளியாண்டு எனப்படும் புதிய நீள அலகு உருவாக்கப்பட்டது. ஒளியாண்டு என்பது ஒரு கால அளவல்ல, ஒளியாண்டுத் தொலைவு என்னும் ஒரு நீள அலகு.

ஒளியாண்டில் குறிக்கப்பெறும் ஆண்டானது ஒரு ஜூலியன் ஆண்டாகும். ஒரு ஜூலியன் ஆண்டில் 86400 நொடிகள் (செக்கன்கள்) கொண்ட 365.2 நாட்கள் உள்ளன. ஒளியாண்டின் துல்லியமான வரையறை பின்வருமாறு கூறப்படும். ஒளித்துகளாகிய ஓர் ஒளிமம் (photon), எவ்வித ஈர்ப்பும் இல்லாமல் எவ்வித விசைப்புலங்களுக்கும் உட்படாமல், தன்னியல்பால் அணுக்கள் இல்லாப் புறவெளியில் ஓரு ஜூலியன் ஆண்டுக்காலம் செல்லும் தொலைவே ஓர் ஒளியாண்டு எனப்படுகின்றது. ஒளியின் வேகம் (விரைவு) ஒரு நொடிக்கு (செக்கனுக்கு) 299,792,458 மீட்டர்களாகும். எனவே ஓர் ஆண்டில் ஒளி பயணம் செய்யும் தொலைவு, அண்ணளவாக 9.46 × 1015 மீ = 9.46 பேட்டா மீட்டர் ஆகும்.

ஒளியாண்டோடு தொடர்புள்ள அலகுகளான ஒளி-நிமிடம், ஒளி-நொடி என்பன ஒளி, வெற்றிடத்தில் முறையே ஒரு நிமிடம், ஒரு நொடி (செக்கன்) என்னும் கால இடைவெளிகளில் செல்லும் தொலைவைக் குறிக்கின்றன. ஒரு ஒளி-நிமிடம் 17,987,547,480 மீட்டர்களுக்குச் சமனானது. ஒளி-நொடி 299,792,458 மீட்டர்களாகும்.

சில துணுக்குத் தகவல்கள்:

சூரியனிலிருந்து ஒளி பூமிக்கு வந்துசேர 8 நிமிடங்கள் எடுக்கிறது. எனவே சூரியன் பூமியிலிருந்து 8 ஒளி-நிமிட தொலைவில் உள்ளதாகக் கூறலாம்.

மாந்தைன் மிக மிகத் தொலைவான விண்வெளி ஆய்வுப்பயணம், வொயேஜர் 1, ஜனவரி 2004 ல், 12.5 ஒளி-மணித் தொலைவில் இருந்தது.

பூமிக்கு மிக அண்மையிலுள்ள நாள்மீனான (நட்சத்திரமான) புரொக்சிமா செண்டோரி (Proxima Centauri) 4.22 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. பால்வெளி என்று அழைக்கப்படும், நாம் வாழும் நாள்மீன்பேரடையின் குறுக்களவு 100,000 ஒளியாண்டுகளாகும்.

நாம் கண்ணாலும், தொலைநோக்கிகளாலும், பிற துணைக்கருவிகளாலும் உணரக்கூடிய அண்டம் அண்ணளவாக 15,000,000,000 ஒளியாண்டுகள் ஆரம் அல்லது ஆரையைக் (radius) கொண்டது. இந்த ஆரையின் நீளமானது ஒரு நொடிக்கு ஓர் ஒளி-நொடி வீதம் அதிகரித்துச் செல்லுகிறது.

"http://ta.wikipedia.org

நல்ல தகவல்கள். தொடருங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி மணிவாசன் .

உங்களுக்கும் தெரியுமா

1. மனிதன் இறக்கும் போது உடலில் இருந்து கடைசியாக விலகும் புலன் கேட்டல் ஆகும். பார்வையே முதலில் பிரியா விடை பெறும் புலனாகும்.

2. ஸ்டோபரி பழங்களில் மட்டுமே விதைகள் பழத்திற்கு வெளியே முளைக்கின்றன.

3. ஆனைக்கொய்யா (Avacado) விலேயே பழங்களில் அதிக கலோரிகள் உள்ளன. ஒவ்வொரு 100 கிராமிலும் 167 கலோரிகள் உள்ளன.

4. ஆகாயப்பரபில் இருந்து விழும் தூசு துணிக்கைகளால் பூமியின் எடை ஆண்டொன்றுக்கு 100 தொன்களால் அதிகரிக்கின்றது.

5. புவியீர்ப்பு விசைகாரணமாக பூமியில் உள்ள மலைகள் 15,000 மீற்றருக்கு மேல் உயரமாக இருப்பது சாத்தியப்படாது.

6. விண்வெளியில் மேலதிகமாக எடுத்துச் செல்லப்படும் ஒவ்வொரு கிலோ எடைக்கும் 530 கிலோ கிராம் மேலதிக எரிபொருள் தேவை.

7. ஒவ்வொரு ஆண்டும் சந்திரன் பூமியை விட்டு இரண்டு அங்குலம் அப்பால் விலகிக் செல்கிறது.

8. மனித உடலில் உள்ள குருதிக் கலன்களை அடுத்தடுத்து ஒவ்வொன்றாக அடுக்க முடிந்தால் அதனை 12,000 மைல்கள் நீளத்திற்கு நீட்ட முடியும்.

9. பௌர்ணமி முழு நிலவில் பிரகாசம் அரை நிலவிலும் 9 மடங்கு அதிகம்.

10. உலகில் உள்ள மூன்றில் இரண்டு பங்கு மக்கள் ஒரு முறையேனும் தொலைபேசியில் பேசியதில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகிலேயே உயரமான மனிதர் சீனாவில் சீஃபெங்கில் இருக்கிறார். பெயர் ஜை ஷன். இவரது உயரம் 7 அடி 8.95 அங்குலம்.

நீளமான கூந்தல் உடையவர் ஜீ கிப்பிங் என்ற சீன பெண்மணி. இருப்பது சினாவில் உள்ள கௌன்சி மாகாணத்தில். கூந்தலின் நீளம் 18 அடி 5.54 அங்குலம்!

கனமான பொருளை இழுத்தவர் டேவிட் ஹக்ஸ்லி! ஆஸ்திரேலியாவில் சிட்னியில் 187 டன் எடையுள்ள விமானத்தை 298.5 அடி தூரம் 1 நிமிடம் 27.7 விநாடிகளில் இழுத்தார். 1995ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி இந்த நிகழ்ச்சியை அவர் செய்தார்.!

கனமான பொருளைத் தலைக்கு மேலே தூக்கியவர் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜான் ஈவான்ஸ்! 159.6 கிலோ எடையுள்ள காரைத் தன் தலைக்கு மேலே தூக்கி 33 விநாடிகள் வைத்திருந்தார். மிகவும் அபாயகரமான இந்தச் செயல் உலகம் முழுவதும் பரபரப்பான செய்தியாகப் பேசப்பட்டது. இந்த நிகழ்ச்சி நடந்த தேதி 1999ம் ஆண்டு மே மாதம் 24ம் தேதி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான்கெழுத்து

'உலகம்' நான்கெழுத்து!

உலகில் வாழுகின்ற 'மக்கள்' நான்கெழுத்து!

வாழ்க்கையின் 'பிறப்பு' நான்கெழுத்து!

பெற்றோர் பெறும் 'குழந்தை' நான்கெழுத்து!

பள்ளி செல்லும் 'மாணவன்' நான்கெழுத்து!

மாணவன் 'இளைஞன்' ஆவது நான்கெழுத்து!

இளைஞர்களின் 'கல்லூரி' நான்கெழுத்து!

கல்லூரியில் பயிலும் 'படிப்பு' நான்கெழுத்து!

படிப்பு தருகின்ற 'பட்டம்' நான்கெழுத்து!

பட்டத்தினால் கிடைக்கின்ற 'ஊதியம்' நான்கெழுத்து!

ஊதியம் தருகின்ற 'மதிப்பு' நான்கெழுத்து!

மதிப்புடன் பெண்ணுக்குக் 'கணவன்' ஆவது நான்கெழுத்து!

கணவன் 'தலைவன்' ஆவதும் நான்கெழுத்து!

தலைவன் முதுமையினால் 'கிழவன்' ஆவது நான்கெழுத்து!

இறுதியில் தூக்கிச் செல்லும் 'நால்வர்' நான்கெழுத்து!

நால்வர் கொண்டு சேர்க்கும் இடம் 'சுடுகாடு' நான்கெழுத்து!

சுடுகாடு உள்ள இடமோ 'உலகம்' என்னும் நான்கெழுத்து!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகில் மிகப் பெரிய புத்தகம்

ஆரம்ப காலத்தில் மக்கள் "பப்பைரஸ்' எனப்படும் ஒருவகை நாணல் காகிதத்தில் தகவல்களை எழுதி சுருளாக வைத்து பாதுகாத்தனர். இவ்வாறான முறையை ரோமானியர் "வால்யு மன்' என்று கூறியதாகவும், இதில் இருந்துதான் "வால்யூம்' எனும் சொல் பிறந்ததாகவும் கூறப்படுகின்றது.

பின் 5 ஆம் நூற்றாண்டு அளவில் ஆட்டின் தோலைப் பதப்படுத்தி அதில் இருந்து பெற்ற வரைத் தோலிலும் (Parchment), பசுக்கன்று தோலில் இருந்து பெற்ற மெல்லிய தோலிலும் (Vellum) எழுத்துக்களை பதிவு செய்து பாதுகாத்ததாக தகவல்கள் கூறப்படுகின்றது.

அதன் பின்னர் மத்திய காலப் பகுதியில் காகிதத்தின் தரம் உணரப்பட்டு வந்ததுடன் அச்சுக்கலையும் வளரத் தொடங்கியது. இதன் பயனாக பெரும்பாலான புத்தகங்கள் வடிவ மைக்கப்பட்டதுடன் வேண்டிய வடிவில், வேண்டிய வண்ணங்களிலும் புத்தகங்கள் வடிவ மைக்கப்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றன.

ஆரம்பத்தில் பெரும்பாலான புத்தகங்கள் இலத்தின் மொழியில் மட்டுமே காணப்பட்ட தாகவும், முதன் முதல் வடிவமைக்கப்பட்ட புத்தகம் இலத்தீன் மொழியிலேயே காணப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

உலகில் மிகப் பெரிய புத்தகமாக பிரித்தானிய பாராளுமன்றத்தின் நடவடிக்கைகளை விபரிக்கும் "த லிட்டில் ரெட்'' (The Lettal Rad) எனும் நூல் காணப்படுகின்றது. இதனை எழுதியவர் "வில்லியம் பி. உட்'' என்பவராவார்.

1800 முதல் 1900 வரையிலான நடவடிக்கைகளை கூறும் இந்த நூல் 7 அடி இரண்டு அங்குலம் உயரம் கொண்டதாக உள்ளதாம். இப்புத்தகத்தை விரித்தால் அது பத்தடி நீளத்துக்கு விரித்து பார்க்க முடியுமாம். இதனை ஐரிஸ் பல்கலைக்கழக அச்சகம் 1200 பகுதிகளாக வெளியிட்டதாக சொல்லப்படுகிறது.

இவ்வுலகிலேயே மிகப் பெரிய புத்தகமாக இப்புத்தகம் கூறப்படுவதுடன் இதன் எடை 364 மெற்றிக் தொன் கொண்டதாக காணப்படுகின்றதாம். 1967 - 1971 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வெளியான இப்புத்தகம் படித்து முடிப்பதற்கு ஆறு, ஏழு ஆண்டுகள் தேவைப்படுமாம். அதேநேரம் இப்புத்தகத்தின் விலை என்ன தெரியுமா?

5 இலட்சம் ரூபா.

என்ன ஆச்சரியமாக இருக்கிறதா...?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகில் பல இடங்களில் வழங்கும் பல மொழிகளிடையே எத்தனையோ ஒற்றுமைகள் உள்ளன .. மொழிகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாய் இல்லாமல் இருக்கும்போது இந்த ஒற்றுமைகள் வியக்க வைக்கின்றன .. இதைப் பற்றி அலசுவதே இப்பகுதியின் நோக்கம் .. முதலில் தமிழையும் ஆங்கிலத்தையும் எடுத்துக்கொள்வோமா .. ?

தமிழின் முதலெழுத்து " அ " - ஆங்கிலத்தின் முதலெழுத்து A .. தனியே எழுத்தை வாசிக்கும்போது " ஏ " என்று உச்சரிக்கப்பட்டாலும் அது ஒரு சொல்லில் வரும்போது அதன் உச்சரிப்பு " அ " தான் .. ( ஜெர்மன் போன்ற சில மொழிகளில் A வைத் தனியே உச்சரிக்கும்போதுகூட மிகச்சரியாய் " அ " என்று தமிழ் உச்சரிப்பிலேயே உச்சரிக்கிறார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.. )

தமிழின் ஒன்பதாவது எழுத்து ஐ .. - ஆங்கிலத்தின் ஒன்பதாவது எழுத்து I

இன்னும் இதுபோல் நிறைய அதிசய ஒற்றுமைகள் உள்ளன ..

உதாரணமாய் ..

தமிழில் ஒரு , ஓர் என்ற வார்த்தைகளை எப்படிப் பயன்படுத்துகிறோமோ அதேபோல் ஆங்கிலத்தில் a , an என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள் ..

தமிழில் உயிரெழுத்தில் ஆரம்பிக்கும் சொல்லைக் குறிப்பிடும்போது ஓர் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறோம் ..

உதாரணம் . ஓர் ஊர் ... ஓர் இலை என்பன ( ஒரு ஊர் , ஒரு இலை என்று சொல்வது இலக்கணப்படி தவறானதல்லவா .. ?.)

இதேபோல் ஆங்கிலத்தில் உயிரெழுத்தின் உச்சரிப்பில் ஆரம்பிக்கும் வார்த்தைகளைக் குறிக்கும்போது an என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார்கள் ..

எடுத்துக்காட்டாக:

Apple - an apple

இங்கே மிகவும் கவனிக்கத்தக்க , சுவையான கருத்து ஒன்று உண்டு .. நம்மில் பலருக்கு ஆங்கிலத்தில் எழுதும்போது a , an குழப்பம் வரலாம் .. ஏனென்றால் ஆங்கிலத்தில் ஆங்கில உயிரெழுத்தில் ஆரம்பிக்கும் சொற்களுக்கு மட்டும் என்று an பயன்படுத்துவதில்லை .. அச்சொல்லின் துவக்க உச்சரிப்பு உயிரெழுத்துப்போல் இருந்தாலே an பயன்படுத்துவார்கள் ..

இந்தக் குழப்பங்களுக்கு ஒரு எளிய தீர்வு உண்டு .. இதைக் கேட்டல் நீங்கள் ஆச்சரியப்படலாம் ... அந்த வார்த்தையைத் தமிழில் அப்படியே எழுதுங்கள் .. எழுதும்போது முதலில் தமிழ் உயிரெழுத்துவந்தால் அங்கு an போடுங்கள் .. சரியாக இருக்கும் ..

உதாரணமாக : honest man

இதற்கு a போடுவதா அல்லது an போடுவதா என்ற குழப்பம் வந்தால் அந்த உச்சரிப்பைத் தமிழில் எழுதுங்கள் ஆனஸ்ட் மேன் ..

முதலெழுத்து ஆ - தமிழ் உயிரெழுத்து எனவே நீங்கள் an பயன்படுத்தவேண்டும் ..

University .. இதற்கு a போடுவதா அல்லது an போடுவதா சந்தேகமா ..? உடனே தமிழில் எழுதுங்கள் யுனிவர்சிட்டி .

முதலெழுத்து யு தமிழ் உயிரெழுத்து இல்லை .. எனவே a போட வேண்டும்... இவை சிறிய உதாரணம் மட்டுமே .. இன்னும் நிறைய வார்த்தைகளை எடுத்துச் சோதித்துப் பாருங்கள் ...

இது எப்படிச் சாத்தியம் .. ? ஆச்சரியமாக இல்லை .. ? எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது ... உங்களுக்கு ... ?

இதுபோல் இன்னும் நிறைய இருக்கிறது .. தமிழில் ஒரு வினைச்சொல்லுடன் அன் அல்லது அர் என்று சேர்த்தால் அந்த வினையைச் செய்பவரைக் குறிக்கும். உதாரணமாக வண்டியை ஓட்டுபவரை ஓட்டுநர் என்கிறோமல்லவா.. ? அதுபோல .

ஓட்டு + அர் = ஓட்டுநர்

இதேபோல் ஆங்கிலத்திலும் நம்மால் காணமுடியும் ..

drive + அர் = driver .

cut + அர் = cutter

இவ்வாறு வினைச்சொல்லுடன் ( verb) அர் அல்லது அன் சேர்த்தவுடன் அது அதனைச் செய்யும் நபரையோ அல்லது அந்தத் தொழிலைச் செய்யும் பொருளையோ குறிக்கும் ..

இப்போது குறிப்பிட்டவை மிகச்சில உதாரணங்கள் மட்டுமே ...

நாம் சற்றே சிந்தித்தால் இன்னும் எத்தனையோ சொற்களை இதுபோல் காணலாம் ...

இன்னும் சில அதிசய ஒற்றுமைகள் ..

ஞாயிற்றுக் கிழமை - Sun day

ஞாயிறு என்றால் தமிழில் சூரியன் ... Sun என்றாலும் சூரியன் ..

திங்கள் கிழமை - Mo(o)n day

திங்கள் என்பது நிலவைத்தானே குறிக்கும் .. moon என்பதும் நிலவுதான் ..

சனிக் கிழமை - satur(n) day

சனிக்கிரகத்தைத் தான் நாம் ஆங்கிலத்தில் saturn என்கிறோம் ..

இவை தவிர இன்னும் எத்தனையோ சொல்லும் பொருளும் ஒத்த சொற்கள் ஆங்கிலத்தில் உள்ளன ...

catamaran - கட்டுமரம்

curry - கறி (ச்சாறு) ( குழம்பு )

curryleave - கறியிலை ( கறிவேப்பிலை )

anaconda ( snake ) - ஆனைக்கொன்றான் பாம்பு ( யானையையே கொல்லும் பாம்பு )

தமிழில் இருந்து ஆங்கிலத்துக்குச் சென்ற , மிகவும் பிரபலமான , அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட , சில சொற்களே நாம் மேலே பார்ப்பவை ..

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விவேகானந்தர்தான் சொன்னார்

பசு பாதுகாப்பு பிராச்சாரகர் ஒருவரிடம், “மனிதர்கள் பசியாலும், பட்டினியாலும் செத்துக் கொண்டிருப்பதைக் கண்டு அவர்களின் உயிரைக் காப்பாற்ற ஒரு பிடி சோறுகூடத் தராமல் விலங்குகளையும், பறவைகளையும் காப்பாற்றுவதற்காக உணவை வாரி வாரித் தரும் சங்கங்களிடம் எனக்கு சிறிதுகூட அனுதாபம் கிடையாது. மனிதன் பட்டினியால் சாவதற்கு அவனது கருமங்கள் காரணம் என்று கரும நியதிக்கு நீங்கள் வக்காலத்து வாங்குவதாக இருந்தால் இந்த உலகத்தில் எதற்காகவும் முயற்சி செய்வதோ, போராடுவதோ பயனற்ற வேலை. பசுக்களைக் காப்பாற்றும் உங்கள் வேலையும் அப்படிப்பட்டதுதான்” என்றார் விவேகானந்தர்.

இதைக் கேட்ட பசு பாதுகாப்பு பிராச்சாரகர் கொஞ்சம் வெட்கம் அடைந்தவராகத் தடுமாறினார். பிறகு சமாளித்துக் கொண்டு “நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால், பசு நமது தாய் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றனவே” என்றார். சுவாமிஜி லேசாகச் சிரித்தபடி “ஆமாம். பசு நம் தாய்தான். எனக்குப் புரிகிறது. வேறு யாருதான் நம்மைப் போன்ற இவ்வளவு புத்திசாலிகளான பிள்ளைகளைப் பெற முடியும்” என்றார்.

(ஆதாரம்: ‘எனது சிந்தனைகள் - விவேகானந்தர்')

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சூரியனின் மொத்த வாழ்நாள் 1000 கோடி ஆண்டுகள். இதில் ஏற்கனவே 500 கோடி ஆண்டுகள் முடிந்து விட்டன. மீதி இருப்பது 500 கோடி ஆண்டுகள் தான். நமது கார் ஓடுவதற்கு எரிபொருள் ஊற்றுகிறோமே,அது போல சூரியனுக்கும் எரிபொருள் உண்டு. அது தான்

ஹைட்ரஜன்+ஹீலியம் மற்றும் கார்பன் கலவை. வாகனத்தில் எரிபொருள் தீருவது போல சூரியனுக்கும் எரிபொருள் ஒரு நாள் தீரும். என்ன வித்தியாசம்? வாகனத்தில் எரிபொருள் மீண்டும் ஊற்றமுடியும். ஆனால் ஐந்நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் சூரியனில் ஹைட்ரஜன்+ஹீலியம் மற்றும் கார்பன் கலவையோ வேறு எந்த மாற்று திரவமோ ஊற்ற முடியாது. சூரியனில் எரிபொருள் தீரும் போது வீங்கி, அதன் வெம்மைத் தாங்காமல் மற்ற கிரகங்களும், முக்கியமாக பூமி வெந்து சாம்பலாகிவிடும். ஒரு புல் பூண்டு கூட அதன்பின் மிஞ்சாது என்பது தான் உண்மை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தெரியுமா உங்களுக்கு..?

அனல் மின் நிலையங்களில் நாளொன்றுக்கு பத்தாயிரம் டன் நிலக்கரியை எரித்து சில ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை தான் தயாரிக்க முடியும்.

அதற்குப் பதிலாக சிறிய ஏரியில் இருக்கும் தண்ணீரில் உள்ள டியூட்டீரியம் மற்றும் டிரிஷியத்தை பிரித்தெடுத்து அவற்றை பிணைத்து மின்சாரம் தயாரித்தால் இந்த உலகத்துக்கே பல நூறு ஆண்டுகளுக்கு தாராளமாக மின்சாரத்தை தயாரித்துக் கொடுக்கலாம். இந்த முறையில் கதிரியக்க ஆபத்தும் இல்லை.

ஆனால், இதற்கான தொழில் நுட்ப சாத்தியம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. தற்போது இதற்கான ஆய்வுக்கு ஆயிரம் கோடி யூரோ ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.

http://kmdfaizal.blogspot.com/2006/12/blog-post.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இயற்பியலில் சில அடிப்படையான அனுமானங்கள் உண்டு. குவாண்டம் இயற்பியலில் ஆரம்ப காலத்திலேயே , பிளாங்க்ஸ் மாறிலியும், பின்னர் ஒளியின் வேகம் ஒரு மாறிலி என்றும் நிறுவப்பட்டன. இதன் பின்னணி குறித்து பல விளக்கங்கள் மிக எளிமையாகவும் காணக்கிடைக்கின்றன.

இடம் போலவே, காலமும் சார்பு கொண்டது என குவாண்டம் இயற்பியல் கருதுகிறது. காலம் சார்பு கொண்டது என்பதால் ஒளியின் வேகத்தில் ஒரு பொருள் செல்லுமானால், அதன் தளத்தில் காலம் நீள்கிறது, இடம் குறுகுகிறது என்றும் கூறப்படுகிறது. நீள்தல், குறுகுதல் என்பது ஒரு நிலையினைச் சார்ந்தது; அதனோடு ஒப்பிடுதலின் விளைவே என்பதை இங்கு கருத்தில் கொள்ளவேண்டும்.

Theory of Relativity-யின் படி ஒளியின் வேகம் ஒரு மாறிலி. இரு வேறு வேறு தளங்கள் ஒன்றிலிருந்து மற்றொன்று விலகிச் செல்வதாக அனுமானிப்போம். ஒளியின் வேகம் ஒன்றிலிருந்து மற்றொன்றில் நோக்கும்போது, அதிகரிக்கவேண்டும் (பேருந்தில் போகும்போது, எதிரே வரும் வாகனம் படுவேகமாகப் போவது போலத் தோன்றுமே- அதாவது நமது வேகமும் அவ்வண்டியின் வேகமும் கூடிவருவதால்- அதுபோல). ஆனால் குவாண்டம் அளவில் இது ஒளியின் வேகத்திற்கு சாத்தியமில்லை. அது c என்னும் மாறிலியாகவே இருக்கவேண்டும் என்கிறது ரிலேட்டிவிடி கோட்பாடு. இதனை கடு கட்டியான கணக்கியல் சமன்பாடுகள் மூலம் , மூளையைக் கலக்கி நம்மை ஒத்துக்கொள்ள வைத்துவிடுவார்கள்.

அப்படியே ஒளியின் வேகம் மாறுகிறது என்றால், ஒரு செயலின் விளைவுகள், செயலை விட முன்னே நடக்கவேண்டும்... செயலும், அதன் விளைவும் அடுத்தடுத்தே நடக்குமென்பது Causality Principle என்கிறார்கள்.

ஒரு பொருள் ஒளியின் வேகத்திற்கு மேலாக பயணிக்க முடியாது என்பது குவாண்டம் இயற்பியலின் விதி. ஒளியினை மின்காந்த கதிரியக்கம் என 1800களின் இறுதியில் மாக்ஸ்வெல் சமன்பாடுகள் மூலம் நிரூபித்து, மின்சாரப் புலம், காந்தப் புலம், அணுக்கருவின் மெலிய, வலிய விசைகள் என்னும் அடிப்படை விசைகள், புலங்கள் இணைக்கப்பட்டன. விடுபட்டு இருப்பது பொருள்களின் ஈர்ப்பு விசை மட்டுமே. இதனை பிற விசைகளுடன் இணைத்து பெரும் விசை இணைப்புக் கோட்பாடு ஒன்று உருவாக்க பல முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன.

குவாண்டம் இயற்பியலின் ஒளியின் வேகம் ஒரு எல்லை என்னும் கோட்பாட்டை அனைவரும் ஏற்றுக்கொண்டுவிடவில்லை, இன்னும். இது தவறு என நிரூபிக்க பல முயற்சிகள் நடைபெற்றன. இன்னும் தொடர்கின்றன. இன்னும் சொல்லப் போனால், ஒளியின் வேகத்தை மிஞ்சிய வேகத்தில் துகள்கள்/அலைகள் பயணிக்க முடியும் என்று காட்டுவது ஒளியின் வேகம் ஒரு மாறிலியென்றும் அது ஒரு எல்லை என்பதையும் மறுதலிக்கும்.

இதுபோல மற்றொரு சவாலாக அமைந்தது- நுண்துகள்கள் ஒரு விசை அல்லது புலத் தடையைத் தாண்டி மறுபுறம் காணக்கிடைப்பது. எதிர் மின்புலம் கொண்ட ஒரு துகளை எடுத்துக் கொள்வோம். மற்றொரு எதிர் மின்புலம் அதற்குத் தடையாக அமையுமானாலும், அத்தடையை மீறி அத்துகள் காணக் கிடைக்கிறது. இதற்கு நியூட்டனின் இயற்பியல் விதிகள் பதில் அளிக்க முடிவதில்லை. குவாண்டம் இயற்பியல் இதனை துளைத்தல் (tunneling) என்கிறது. இரண்டிற்கும் முடிச்சுப்போட்டார் ஒரு ஜெர்மன் விஞ்ஞானி. நுண்ணலைகளை ஒரு அலை கடத்தி (wave guide) மூலம் செலுத்தினார். அக்கடத்தியின் விட்டம் நுண்ணலையின் அலைநீளத்திலும் குறைவாக வைத்தார். அதனால் அந்நுண்ணலை அதன்மூலம் செல்லத் தடையேற்பட்டது. இந்நுண்ணலை தடையில் சிக்கி மெதுமெதுவாக அழிந்து வர, இவ்வலைகள் மறுபுறம் வந்திருக்கக் கூடாது. ஆனால் அவை காணக் கிடைத்தன. குவாண்டம் துளைதல் என இக்கசிவினை முடிவு செய்தார்.

அக்கடத்தியின் மறுபுறம் மெதுவாக கசிந்து வரும் அலையின் வீச்சினைப் பெருக்கி அதன் அலைநீளத்தைக் கண்டறிந்தார். கசிந்த அலையின் முகடுகள் வரும் நேரத்தையும், தடைநீக்கியபின் வருகின்ற அனுப்பப்பட்ட நுண்ணலையின் முகடுகள் வரும் நேரத்தையும் ஆராய்ந்தார். கசிந்த அலைகளின் முகடுகள் நேரத்தில் முன்னரே வந்துவிடுவதால் அவ்வலை தடையினைக் குடைந்து ஒளியின் வேகத்தினும் மிஞ்சிய வேகத்தில் ஊடுபரவி வந்திருக்கிறது என நிரூபிக்கிறார்.

இது ஒரு பித்தலாட்டம் என்கிறார்கள் சில விஞ்ஞானிகள். நுண்ணலைகள் மாக்ஸ்வெல் சமன்பாடுகளைப் பொருத்து அமைவதால், ஐன்ஸ்டீனின் செயலையும் விளைவையும் குறித்தான கோட்பாட்டை மீறவில்லை என்கின்றனர். இதனை ஒரு கிராஃபிகல் சிமுலேஷன் மூலம் நிரூபிக்க முயல்வதைத்தான் இச்சுட்டியின் வீடியோவில் காண்கிறீர்கள். http://atdotde.blogspot.com/2005/09/faster...ght-or-not.html

"சரி. இதனால் என்ன லாபம்?" என சாவகாசமாய் பல் குத்திக் கொண்டு கேட்பவர்களுக்கு- இதன் விளைவுகள் குவாண்டம் கோட்பாடு போலவே மற்றொரு புரட்சியாக அமையும்.

ஒளியின் வேகத்தைவிட வேகமாக ஒரு பொருள் பயணிக்க முடியுமானால், கால அச்சின் சீரான ஓட்டத்தை விட வேகமாகச் சென்று எதிர்காலத்தை எட்டிப் பார்த்துவிட முடியும். ஒரு செயலின் பின்னரே அதன் விளைவு அமையும் என்னும் யதார்த்தத்தினை உடைக்க முடியும். கிளி ஜோசியக்காரர்கள், "எதிர்காலம் பார்ப்பதுதான் நாங்க முன்னாடியே செய்யிறோமே சாமி!" என்று காலரைத் தூக்கிவிட்டுக்கொள்ளலாம். கால வளைவில் பயணம் என்னும் அறிவியல் புனைகதை ஜல்லிகள் நிஜமாகலாம்.

இன்னும் இது முழுதுமாக நிரூபிக்கப் படவில்லை. ஒரு சோதனை முயற்சி மூலம் மட்டும் நிரூபணம் வந்துவிட முடியாது என்றாலும், இந்தச் சோதனையை பலரும் படு சீரியசாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

http://www.maraththadi.com/article.asp?id=2761

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பயனுள்ள தகவல்கள். தொடர்ந்து தாருங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்ரி சகீவன்.நன்றி சகீவன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலக அதிசயம்

உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்கிய கலங்கரை விளக்கம்

கடலில் செல்லும் கப்பல்களுக்கு துறைமுகம் மற்றும் கடற்கரைப்பகுதி எங்குள்ளது என்பதை இரவு நேரத்தில் தெரிந்துகொள்ள கலங்கரை விளக்கம் உதவுகிறது. இதிலிருந்து வெளிப்படும் அதிக சக்தி வாய்ந்த வெளிச்சம் இரவு நேரத்தில் நடுக்கடலில் வரும் கப்பல்கள் எளிதில் கரைக்கு வர உதவியாகவிருக்கும்.

இது போன்ற ஒரு கலங்கரை விளக்கம் 3 ஆவது நூற்றாண்டில் கட்டப்பட்டது. அந்தக் காலத்தில் மிக உயரமான கட்டிடம் என்ற சிறப்புடன் உலக அதிசயங்களில் ஒன்றாகவும் அது திகழ்ந்தது. பண்டையகால 7 அதிசயங்களில் ஒன்றான, இதன் பெயர் `தி போரஸ் ஒப் அலெக்சாண்ரியா'.

கட்டிடக்கலை மற்றும் விஞ்ஞானத்திறமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய இந்தக் கலங்கரை விளக்கத்துக்கு, பின்னணியில் பல அதிசயத் தகவல்கள் மறைந்து இருக்கின்றன.

`அலெக்சாண்டர் தி கிரேட்' என்று அழைக்கப்படும் மாவீரர் அலெக்சாண்டர் , தனது வீரத்தின் மூலம் பல நாடுகளை வென்று வெற்றிக்கொடி நாட்டினார். மத்திய தரைக் கடல் பகுதியிலுள்ள பெரும்பாலான நாடுகள் அவரது ஆட்சியின் கீழ் வந்தன. இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் அலெக்ஸாண்டிரியா என்ற பெயரில் நகரங்களை உருவாக்க முன்வந்தார்.

அதன்படி எகிப்து நாட்டின் கடற்கரைப் பகுதியில் அலெக்ஸாண்டிரியா என்ற பெயரில் ஒரு புதிய நகரை உருவாக்க அவர் திட்டமிட்டார். இதற்காக எகிப்து மற்றும் பல பகுதிகளில் அலெக்ஸாண்டிரியா என்ற பெயரில் புதிய நகரங்கள் உருவாக்கப்பட்டன.

அவ்வாறு உருவாக்கப்பட்ட நகரங்களில் ஒன்றுதான் எகிப்து நாட்டின் மத்திய தரைக்கடல் பகுதியிலுள்ள அலெக்ஸாண்டிரியா நகரம். இது துறைமுக நகரமாகும். கி.மு. 270 ஆம் ஆண்டுவாக்கில் இந்த துறைமுக நகரில் கலங்கரை விளக்கம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதையொட்டி இது தொடர்பான பணிகள் தொடங்கியது. ஆனால் கலங்கரை விளக்கம் முழுவதும் கட்டி முடிக்கப்படும் முன்பு அதாவது தனது 33 ஆவது வயதில் அலெக்சாண்டர் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு பிறகு எகிப்து நாட்டை அவரது தளபதிகளில் ஒருவரான டோமிலி என்பவர் ஆட்சி செய்தார்.

அவர் அலெக்சாண்டரின் கனவு முயற்சியான மிகப்பெரிய கலங்கரை விளக்கம் ஒன்றை அமைக்கும் முயற்சியில் முனைப்புடன் ஈடுபட்டார். பிறப்பால் மாசிடோனியா நாட்டைச் சேர்ந்த இவர், மன்னர் சோட்டர் என்ற பெயரில் ஆட்சி புரிந்தார். இவரது கடுமையான முயற்சியின் பேரில் கலங்கரை விளக்கத்தின் கட்டிடப் பணிகள் தொடர்ந்தன. இது 3 அடுக்கு கொண்டதாக முழுக்க முழுக்க வெள்ளைநிறப் பளிங்குக் கற்களால் உருவாக்கப்பட்டன. இந்த கலங்கரை விளக்கத்தில் கிரேக்க கடவுள்களின் உருவங்கள் மற்றும் அலெக்சாண்டரின் வீர சாகசங்கள் சிலைகளாக, ஓவியங்களாக இடம்பெற்றன. இந்த கலங்கரை விளக்கத்தை கட்டி முடிக்க பல ஆண்டுகள் ஆனது.

இந்தக் கலங்கரை விளக்கத்துக்கு `தி போரஸ் ஒப் அலெக்ஸாண்டிரியா' என்று பெயர் சூட்டப்பட்டது. போரஸ் என்றால் பிரெஞ்ச், கிரேக்கம், லத்தீன், ஸ்பானிஷ் மொழிகளில் கலங்கரை விளக்கம் என்று பொருளாகும். அதாவது, அலெக்ஸாண்டிரியாவின் கலங்கரை விளக்கம் என்று இதற்கு பெயரிடப்பட்டிருந்தது.

3 ஆவது நூற்றாண்டு காலத்தில் உலகிலேயே மிக உயரமான கட்டிடமாக இதுதான் இருந்தது. மேலும், இந்தக் கட்டிடத்தின் உச்சியில் மிகப் பெரிய கண்ணாடி ஒன்றும் வைக்கப்பட்டு இருந்தது. சுழலும் தன்மை கொண்ட இந்தக் கண்ணாடியில் சூரியஒளி விழுந்து அதன் ஒளி சுமார் 35 மைல் தூரத்துக்கு தெரிந்தது என்று கூறப்படுகிறது.

மேலும், இதில் இருந்து வெளிப்படும் ஒளியை தொடர்ந்து ஒரு பொருள்மீது பாய்ச்சினால் அந்த வெப்பம் தாங்காமல் அந்தப் பொருள் எரிந்து சாம்பலாகிவிடும் என்று கூறப்பட்டது. இந்த அதிசய கண்ணாடி மூலம் தனது நாட்டை நோக்கிவரும் எதிரி நாட்டு கப்பல்மீது சூரிய ஒளியை பாய்ச்சி தீப்பிடிக்கவைத்து எரித்து சாம்பலாக்கியதாக கதைகளும் கூறப்படுகின்றன.

பகலில் சூரியஒளி என்றால் இரவில் இந்த கலங்கரை விளக்கத்தின் உச்சியில் கொப்பரை அடுப்புகளை ஏற்றி அதன் மூலம் தீ உண்டாக்கி அந்த ஒளியை பல மைல் தூரத்துக்குத் தெரியும்படி செய்தனர். இவ்வாறு இரவு பகலாக இந்தக் கலங்கரை விளக்கம் பயணிகளுக்கும் கப்பல்களுக்கும் வழிகாட்டியாக விளங்கியது. சுமார் 1,500 ஆண்டுகாலம் இந்தக் கலங்கரை விளக்கம் முக்கிய சுற்றுலாத்தலமாக உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்கியது.

இந்த நிலையில் 956,1303 மற்றும் 1323 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட பூகம்பங்கள் காரணமாக இந்தக் கலங்கரை விளக்கம் கொஞ்சம் கொஞ்சமாக இடிந்து விழத்தொடங்கியது. இதைப் பழுதுபார்க்கும் பணிகள் நடந்து முடிந்த சில ஆண்டுகளுக்குள் மீண்டும மீண்டும் பூகம்பம் ஏற்பட்டதால் இந்த உலக அதிசயம் கொஞ்சம் கொஞ்சமாக கடலில் மூழ்கியது.

பூகம்பம் காரணமாக கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு அதனால் அலெக்ஸாண்டிரியா கலங்கரை விளக்கம் இடிந்து விழுந்து கடலில் மூழ்கி இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.

1480 ஆம் ஆண்டு எகிப்தை மாமேலோக் சுல்தான் என்ற மன்னன் ஆட்சி செய்தார். இவர் தனது காலத்தில் அலெக்ஸாண்டிரியா கலங்கரை விளக்கத்தை புதுப்பிக்க முயன்றார். அது முடியாமல் போகவே அந்த இடத்தில் புதிய கோட்டை ஒன்றைக் கட்டும் முயற்சியில் அவர் ஈடுபட்டார். அலெக்ஸாண்டிரியா கலங்கரை விளக்கத்தில் இருந்து இடிந்து விழுந்த பளிங்குக் கற்களைக் கொண்டு இந்தக் கோட்டை கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

1166 ஆம் ஆண்டு அபூ ஹகாக் அல் அன்டாலூசி என்ற அரேபிய பயணி, அலெக்ஸாண்டிரியா கலங்கரை விளக்கத்தைப் பார்வையிட்டார். மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள முக்கிய நகரங்களைச் சுற்றிப்பார்த்து அது பற்றிய புத்தகம் எழுதியவர் இவர். அலெக்ஸாண்டிரியா கலங்கரை விளக்கம் குறித்து இவர் தனது புத்தகத்தில் விரிவாக விளக்கமாக எழுதி வைத்துள்ளார். இந்தப் புத்தகத்தின் அடிப்படையில் தற்போது அங்குள்ள கடல் பகுதியில் கடல் அகழ்வாராய்ச்சிகள் நடந்து வருகிறது. கடந்த 15 ஆண்டுகளாக இங்கு நடந்து வரும் கடல் ஆராய்ச்சியின் மூலம் பல அரிய பொருட்கள் கிடைத்துள்ளன. அலெக்ஸாண்டிரியா கலங்கரை விளக்கத்தில் இருந்ததாக கருதப்படும் பளிங்குக் கற்களும் கிடைத்துள்ளன.

தற்போது அங்கு தொடர்ந்து கடல் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்தக் கலங்கரை விளக்கத்தில் பயன்படுத்திய அதிசய கண்ணாடி என்ன ஆனது என்று தெரியவில்லை. ஒருமுறை இதை பழுது பார்க்க உச்சியில் இருந்து கீழே இறக்கியதாகவும் அதன்பிறகு அதை மேலே கொண்டுபோக முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. இன்னொரு சாரார் அது கண்ணாடி அல்ல என்றும் பித்தளை மற்றும் செம்பு உலோகத்தால் தயாரிக்கப்பட்ட தகடு தான் அது என்றும் கூறுகின்றனர். சூரிய ஒளியை இந்தத் தகட்டில் குவித்து அதை ஒரு இலக்கு மீது பிரதிபலிக்கச்செய்து வெப்பத்தை உருவாக்கி, அதன் மூலம் எதிரி நாட்டு கப்பல்கள் மற்றம் படைகளை எரித்தனர் என்றும் கூறப்படுகிறது.

கலங்கரை விளக்கத்தின் உயரம் மற்றும் பிற அளவுகள் குறித்த தகவல்கள்

அடித்தளத்தின் உயரம் - 55.9 மீற்றர் (183.4 அடி)

நடுப்பகுதியின் உயரம் - 18.30 மீற்றர் (60 அடி)

மேல்பகுதியின் உயரம் - 7.30 மீற்றர் (24 அடி)

தரையில் இருந்து உச்சி வரை கலங்கரை விளக்கத்தின் மொத்த உயரம் - 117 மீற்றர் (384 அடி)

இது இப்போதுள்ள 40 மாடி கட்டிடத்தின் உயரத்திற்கு சமமாகும்.

Thanks Thinakkural

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒளி உமிழும் டையோடுகள் (Light Emitting Diodes)

திங்கள், 20 நவம்பர் 2006

ஒளி உமிழும் டையோடுகள் அல்லது LED (Light Emitting Diodes) என்பன சாதாரண குறைகடத்தி (Semiconductor) டையோடுகள் தான். இவற்றின் வழியே குறை அழுத்த மின்சாரம் பாய்ச்சப்படும் போது இவை தன்னிச்சையான ஒளியை உமிழ்கின்றன (Spontaneous Emission). இவற்றில் சிலிக்கனுடன் காலியம், ஆர்சனைடு, இண்டியம் நைட்ரைடு போன்ற மாசுக்கள் (impurities)கலக்கப்படுவதால் ஒளித்துகள்கள் (photons) உமிழப்படுகின்றன.

சாதாரண குமிழ் விளக்குகளில் மின்னிழை சூடாவதாலும், குழல் விளக்குகளில் பாதரசம் அல்லது சோடிய ஆவி மின்னிறக்கம் (Electric discharge) செய்யப்படுவதாலுமே ஒளி உமிழப்படுகிறது. ஆனால் LED -களில் மின்சாரம் பாய்ச்சும் போது நேரடியாகவே ஒளி வெளிப்படுகிறது.

சற்று முந்தைய காலம் வரை இவ்வகை LED-கள் கார்கள் மற்றும் வீடுகளில் பொம்மைகளுக்கு பச்சை, சிவப்பு, மஞ்சள் போன்ற கவர்ச்சிகரமான வண்ணங்களில் சிறிய மின்விளக்குகளை அழகாக ஓடும் வகையிலோ அல்லது அணைந்து அணைந்து எரியும் வகையிலோ ஓர் எளிய அழகுப் பொருளாக மட்டுமே பயன்பட்டன. மேலும் இசைக்கேற்ப நடனமாடும் விளக்குகளாகவும் இவை பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வந்தன.

தற்போது இவை கார்களில் முன்பக்க, பின்பக்க விளக்குகளாகச் (Head and tail lamps) செயல்பட வல்லன. இது போன்ற பயன்பாட்டிற்குக் கடும் தரக்கட்டுப்பாட்டுடன் தயாரிக்கப்பட்ட LED-களுக்குத் தேய்மானம் என்பதே கிடையாது. ஒருமுறை இதனைக் காரில் பொருத்திவிட்டால், அது காரின் வாழ்க்கைக்காலம் முழுவதும் பயன்தர வல்லது.

இவற்றின் இன்னொரு பெரிய பயன் இவற்றின் குறைந்த விலையாகும். சிறு மின்னணு விற்பனைக் கடைகளிலும் கிடைக்கக் கூடிய சாதாரண அலங்கார LED-களின் விலை மிகக் குறைவே. இவை 1 ரூபாய் முதல் 5 ரூபாய்க்குள் கிடைககின்றன. ஒரே LED இரண்டு வண்ணத்தில் ஒளிரக் கூடிய வகையும் இவற்றில் உண்டு.

ஆனால் இது போன்ற சிறிய LEDகள் வீடுகளுக்கும், அலுவலகங்களுக்கும் தேவையான ஒளியளவை ஏற்படுத்திக் கொடுக்க முடியாது. ஆனால் தற்போது வீடுகள் மற்றும் அலுவலக உபயோகத்திற்கான சிறப்பு LEDகள் தயாரிக்கப்பட்டு விட்டன.

இது மட்டுமல்லாது இவற்றில் இன்னொரு கவர்ச்சியும் உள்ளது. இவ்வகை LEDகள் மிக மிகக் குறைவான மின்சாரத்தை மட்டுமே பயன்படுத்தக் கூடியன. எனவே மின் பயன்பாட்டில் மிகப்பெரும் சிக்கனத்தைத் தரவல்லன இவை. இதன் மூலம் மின்சாரத் தேவைக்கான அழுத்தம் குறைவதால் சுற்றுப்புறச் சூழலுக்குக் ஏற்படும் கேடு குறைகிறது.

இவற்றின் விலை தற்போதைக்குச் சற்று அதிகமாக இருந்தாலும் மிக வேகமாக குறைந்து வருகிறது. பயன்பாடு அதிகரிக்கும் போது இவற்றின் விலை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவற்றின் வாழ்நாள் மிக அதிகம் அதாவது LED ஒன்றை 24 மணி நேரம் தொடர்ந்து எரிய விட்டாலும் 4166 நாட்களுக்கு, அதாவது சுமார் 11 ஆண்டுகளுக்கு மேல் செயல்படக் கூடியவை என்று வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இவற்றில் சாதாரணக் குமிழ் விளக்குகள் போல் அல்லாமல் வெப்பம் வெளியிடப்படாததால் அதுவும் சுற்றுப்புறசூழல் கேடு அடையாமல் இருக்க உதவுகிறது.

மின் தேவை அதிகம் உள்ள US-ன் மின் உபயோகத்தில் 22 விழுக்காடு மின்விளக்குகளின் பயன்பாடுகளால் ஏற்படுவதாக US அரசு தகவல் ஒன்று தெரிவிக்கிறது. இதுபோன்ற வளர்ந்த நாடுகளில் மட்டுமின்றி இந்தியா, சீனா போன்ற மக்கள் நெருக்கடி மிகுந்த நாடுகளிலும் இந்த புதிய வகை விளக்குகள் மின்சிக்கனத்திற்கு பேருதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

ஆக்கம்: அபூஷைமா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தாவரங்களும் பிற உயிரினங்களைப் போன்றே வாழ்க்கை நடத்துவன என்று உலகப் புகழ் பெற்ற இந்திய அறிவியல் அறிஞர் டாக்டர் ஜகதீஷ் சந்திர போஸ் (1858-1937) நிறுவிய போது இவ்வையகமே அவரைக் குழப்பத்துடன் நோக்கியது.

மற்ற உயிரினங்களைப் போன்று தாவரங்களும் துன்ப, துயரங்களுக்கும், அதிர்ச்சிக்கும் ஆளாகின்றன என அவர் கண்டறிந்தார். சில போதைப் பொருள்களுக்கு உள்ளாகும்போது தாவரங்களும் தம் நினைவை இழந்து மயக்கமுறுகின்றன என்றும் டாக்டர் போஸ் ஆய்வு செய்து வெளியிட்டார்.

டாக்டர் போஸின் முடிவுகள் அறிவியல் உலகையே குழப்பமடையச் செய்தன; தாவர உலகம் என்னும் புத்தம் புதியதோர் உலகமே கண்டறியப்பட்டது. தாவர உயிரினங்கள் பற்றிய தமது ஆய்வுகளையும், ஆய்வு முடிவுகளையும் ஆராய்ச்சிக் கட்டுரைகளாக ஒரு நூல் வடிவில் டாகடர் ஜகதீஷ் சந்திர போஸ் 1902ஆம் ஆண்டு வெளியிட்டார். அந்நூலின் பெயர் "The Reaction of Living and Non-living" என்பதாகும்.

தாவரங்களின் செயற்பாடுகளுள் பல மனிதர்களின் மற்றும் விலங்குகளின் செயற்பாடுகளை ஒத்தனவே என்பதை நிரூபிக்கும் ஆய்வுகளை போஸ் மேற்கொண்டார். நுரையீரல்கள் இல்லாவிட்டாலும், தாவரங்கள் சுவாசிக்கின்றன; வயிறு இல்லாவிடினும் தாவரங்கள் உணவைச் செரிக்கின்றன; தசைகள் இல்லாவிடினும் அவை பல செயல்களை மேற்கொள்ளுகின்றன; நரம்பு மண்டலம் இல்லாவிட்டாலும் தாவரங்கள் உணர்ச்சித் தூண்டல்களுக்கு உள்ளாகின்றன; இவற்றை நிரூபிப்பதற்கான சோதனைகள் பலவற்றை அவர் நடத்தினார்.

டாக்டர் போஸ் தாவரங்கள் சுருங்குவதைப் பதிவு செய்யும் கருவி ஒன்றைக் கண்டுபிடித்தார்; அதற்கு "ஒளியிழை நாடிப்பதிவி (Optical Pulse Recorder)" எனப் பெயர். இக்கருவியின் உதவியோடு தாவரங்களின் உள் செயற்பாடுகளைப் பதிவு செய்ததுடன், பல்லிகள், தவளைகள், ஆமைகள், பழங்கள், காய்கறிகள் தாவரங்கள் ஆகியவற்றின் நடவடிக்கைகளுக்கு இடையேயான ஒற்றுமைகளை அவர் விளக்கிக் காட்டினார். தாவரங்கள் மின் அலைகளை உற்பத்தி செய்கின்றன என்பதையும், பிற உயிரினங்களைப் போன்று அவையும் களைப்படைந்து போகின்றன என்பதையும் கண்டறிந்தார்.

அவர் தமது ஆய்வுகளுள் ஒன்றை மேற்கொண்டிருக்கும் போது, இறந்து போகும் தாவரம் ஒன்று வலிமை மிக்க மின்னோட்டத்தை வெளிப்படுத்துவதைக் கண்டறிந்தார். அளவுக்கு அதிகமான கரியமில வாயுவை உட்கொள்ளும்போது தாவரங்களும் மற்ற உயிரினங்களைப் போன்றே இறந்து விடுகின்றன என போஸ் நிரூபித்தார். அதே வேளையில் உயிர்வளியின் உதவியுடன் அவை பிற உயிரினங்களைப் போன்று உயிர் பெற இயலும் என்பதையும் அவர் கண்டுபிடித்தார்.

டாக்டர் போஸ் அவர்களின் மிகச் சிறந்த கண்டுபிடிப்புகளுள் ஒன்று என்னவெனில், போதைப் பொருள்களின் தாக்கத்தால் தாவரங்களும் மயக்க நிலையை அடைகின்றன என்பதாகும். இதற்கான சோதனையின் போது தாவரங்கள் மயக்க நிலை காரணமாக, ஆழ்துயில் கொள்வதையும், பின்னர் மெதுவாக மயக்க நிலை நீங்கி அவை இயல்பு நிலைக்குத் திரும்புவதையும் அவரால் கவனிக்க முடிந்தது.

தாவரங்களின் செயற்பாடுகள், அவற்றின் வளர்ச்சி முறை, அவற்றுள் உள்ள திரவம் மேல் நோக்கிப் பாய்தல் போன்ற பலவும், அவை சுற்றுச் சூழலில் இருந்து பெறும் ஆற்றலின் காரணமாகவே நிகழ்கின்றன என்றும், இந்த ஆற்றலை அவை தம்முள் சேமித்து வைத்துக் கொள்கின்றன என்றும் போஸ் நிறுவினார்.

போஸ் 1918ஆம் ஆண்டு "கிரெஸ்கோகிராஃப் (Crescograph)" என்னும் கருவி ஒன்றை வடிவமைத்தார். இக்கருவியின் வாயிலாகத் தாவரங்களின் இயக்கங்களைப் பல்லாயிரம் மடங்கு உருப்பெருக்கத்தில் காண முடிந்தது. மேலும் தாவரங்களில் ஒரு நிமிடத்திற்குள் நிகழும் மாற்றங்களையும் இக்கருவி பதிவு செய்யக்கூடியதாக விளங்கியது. ஒரு சில தாவரங்களைத் தொட்டாலே அவற்றின் வளர்ச்சி தடைபடுவதாகவும் அவர் கண்டுபிடித்து வெளியிட்டார்.

டாக்டர் போஸ் அவர்களின் சிறப்பு வாய்ந்த ஆய்வுகளையும், கண்டுபிடிப்புகளையும் பற்றிப் புகழ் மிக்க பிரெஞ்சு சிந்தனையாளர் ஹென்ரி பெர்க்சன் இவ்வாறு பாராட்டிக் கூறினார்: "டாக்டர் போஸ் செய்த சோதனைகளும், கண்டுபிடித்த கருவிகளும் ஊமைத் தாவரங்களுக்குப் பேசும் ஆற்றலை வழங்கி உள்ளன."

தாவரங்களின் விருப்பு வெறுப்புகள் என்ன, அவற்றின் துன்ப துயரங்கள் யாவை, அவை கூற விரும்புவது என்ன, அவற்றுக்கு இன்னலும், இடரும் விளைவிப்பன யாவை, அவற்றிற்கு மகிழ்ச்சி ஊட்டுவன எவை, என்பன பற்றிய விவரங்களை எல்லாம் ஜகதீஷ் சந்திர போஸின் கண்டுபிடிப்புகள் விளக்கிக் கூறின. தாவரங்களின் சுவாசிப்பையும், குரல் ஒலியையும் ஒரு கருவியால் உணரச் செய்யலாம் எனவும், தாவரங்கள் உயிர் வாழ்வன, சுவாசிப்பன எனவும் தமது கண்டுபிடிப்புகள் வாயிலாக போஸ் அவர்கள் நிரூபித்தார். மலர் ஒன்றைப் பெண் ஒருத்தியின் மீது எறிந்தால், அதிகத் துன்பம் உண்டாவது பெண்ணுக்கா அல்லது மலருக்கா என ஓர் அறிவியல் அறிஞர் போஸின் ஆய்வுகள் குறித்துப் பேசும் போது வினவினார்.

உலக இயற்பியல் மாநாடு 1900ஆம் ஆண்டு பாரிசில் நடைபெற்றது; அதில் போஸ் "பன்முகத்தன்மை கொண்ட இயற்கையில் அடிப்படை ஒருமைப்பாடு" என்ற தமது ஆய்வுக் கட்டுரையை வாசித்தார்; அதனைச் செவிமடுத்த அறிஞர்கள் போஸின் கருத்துகளைக் கேட்டு திகைத்து நின்றனர். "இயற்பியல் நிகழ்ச்சிகள் ஒரு வரம்புக்குக் கட்டுப்படாதவை; குறிப்பிட்ட எல்லைக்குள் இயற்பியல் நிகழ்வுகளை அடக்க இயலாது; உயிருள்ளவைக்கும், உயிரற்றவைக்கும் இடையேயான வேறுபாடுகள் நாம் நினைப்பது போல் அதிகமல்ல, ஆய்வுக்கு அப்பாற்பட்டதுமல்ல;" இவை போன்ற கருத்துகள் அவரால் விளக்கப்பட்டன.

டாக்டர் போஸின் கருத்துகள் அக்கால மக்களால் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை; அவரது கருத்துகளைப் பொருளற்றவை எனக் கூறியோரும் உண்டு. ஆனால் தமது முடிவுகளை 1902ஆம் ஆண்டு போஸ் வெளியிட்டு, செயல்முறை விளக்கம் செய்து காட்டிய போது மக்கள் பெரும் வியப்பில் ஆழ்ந்து போயினர்.

பிரிட்டிஷ் அரசு 1917ஆம் ஆண்டு "சர்" பட்டம் அளித்து அவரைப் பாராட்டியது. தமது 59ஆம் அகவையின் போது கலகத்தாவில் ஓர் ஆய்வு நிறுவனத்தை போஸ் நிறுவினார். போஸின் கண்டுபிடிப்புகளைப் பற்றி ஜெர்மன், ஆஸ்திரிய விஞ்ஞானிகள் பாராட்டிப் பேசும் போது, இந்தியா அறிவியல் துறையில் பன்மடங்கு முன்னேறியுள்ளதாக ஒப்புக்கொண்டனர்.

இயற்கை முழுதும் உயிர்ப்பும், உணர்வும் நிரம்பி, கிளர்ச்சியுடன் துடித்துக் கொண்டு இருப்பதாக ஜகதீஷ் சந்திர போஸ் கூறி வந்தார். இயற்கை தன்னைப் பற்றிய பல புதிர்களை வெளியிட்டு வருவதாகவும், உரிய முறையில் அவற்றைப் புரிந்து கொண்டால் இயற்கையுடன் உறவாடுவதும், உரையாடுவதும் கடினமல்ல என்பதும் அவரது கருத்தாகும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

8வெப்பத்தினால் பிளாஸ்டிக் உருகுவது போன்று மரக்கட்டை ஏன் உருகுவதில்லை?

ஒவ்வொரு பொருளும் ஒரு குறிப்பிட்ட மூலக்கூறு அமைப்பைக் (Molecular structure) கொண்டுள்ளது; இவ்வமைப்பில் மூலக்கூறுகள் அல்லது அணுக்கள் எளிய விசையினால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. ஒரு பொருள் உருக வேண்டுமெனில், அதனை அதன் உருகுநிலை (Melting point) அளவுக்குச் சூடுபடுத்த வேண்டும். ஒரு பொருளைச் சூடுபடுத்துவதன் வாயிலாக, அப்பொருளின் மூலக்கூறுகளை இணைத்து வைத்திருக்கும் எளிய விசை முறிக்கப்படுகிறது. அதாவது வெப்பநிலை உயர்வினால் இம்மூலக்கூறுகள் ஆற்றல் பெற்று தம்மை இணைத்து வைத்திருக்கும் அமைப்பை அழித்துவிடுகின்றன. எடுத்துக்காட்டாக பிளாஸ்டிக்கைச் சூடுபடுத்தினால் அது உருகுவதற்குக் காரணம் அதன் மூலக்கூறுகளைப் பிணைத்து வைத்திருக்கும் எளிய விசைகள் முறிக்கப்படுவதேயாகும். ஆனால் மரக்கட்டை போன்ற பொருட்கள் உருகுநிலைப் புள்ளி நிலையை (Melting point stage) அடைவதற்கு முன்பே உயிர்வளியுடன் (Oxygen) கலந்து எரிந்துவிடுகின்றன. எனவே இத்தகைய பொருட்களை உருகவைப்பது இயலாததாகும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உயிருள்ள உடல் தண்ணீரில் மூழ்குவதும், இறந்த உடல் நீரில் மிதப்பதும் ஏன்?

இறந்த உடலை நீரில் எறிந்த உடனே, முதலில் அதுவும் மூழ்கத்தான் செய்யும். இறந்த உடலில் வளர்சிதைமாற்றம் (Metabolism) நின்றுபோய் உடல் சிதையத் (Decomposition) துவங்குகிறது. இந்நிலையில் சில வாயுக்கள் (Gases) இறந்த உடலின் பள்ளமான குழிவுப் பகுதிகளில் சேர்கின்றன. இதன் விளைவாக உடல் எடை குறைந்து இலேசானதாகிறது. ஆனால் உடல் ஊதிப்போகும். இப்போது இறந்த உடலால் வெளியேற்றப்படும் தண்ணீரின் எடை அவ்வுடலின் எடையைவிட மிகுதியாக இருப்பதால், அது நீர்ப் பரப்புக்கு மேலே வந்து மிதக்கிறது. ஆனால் உயிரோடிருப்பவர் தண்ணீரில் இருக்கும்போது அவர் உடலின் எடையைவிட வெளியேற்றப்படும் தண்ணீரின் எடை குறைவாக இருப்பதால் உடல் நீரில் மூழ்குகிறது. எனவே மூழ்குவதைத் தவிர்ப்பதற்கு உயிரோடிருப்பவர் நீச்சலடித்து நீர்ப் பரப்புக்கு மேலே மிதக்கக் கற்றுக்கொள்ள வேண்டியதாகிறது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பதியம் செய்யப்பெற்ற உறுப்புகளை (transplanted organs) உடல் ஏற்க மறுப்பது ஏன்?

தனிப்பட்ட ஒவ்வொருவரின் உடலிலும் சில சிறப்புப் புரோட்டின் மூலக்கூறுகள் (molecules) உள்ளன. இவையே பதியம் செய்யப்பெற்ற சிறுநீரகம் போன்ற உறுப்புகள் நிராகரிக்கப் படுவதற்குக் காரணமாக அமைகின்றன. எதிர்ப்புப் பொருள்கள் (anti-bodies) என அழைக்கப்பெறும் மேற்கூறிய மூலக்கூறுகள், அயல் உறுப்புகளை அவற்றிலுள்ள எதிர்ப்புத் தூண்டிகள் (antigens) வாயிலாக எளிதில் இனம் கண்டு கொள்ளுகின்றன. நோயாளி ஒருவருக்குப் பதியம் செய்யப்படவேண்டிய உறுப்பு மற்றொருவர் உடலில் இருந்து பெறப்படுவதாகும். இவ்வாறு பெறப்படும் உறுப்பில் உள்ள எதிர்ப்புத் தூண்டிகள் நோயாளியின் உடலில் இருப்பதில்லை. எனவே நோயாளிக்கு உறுப்பு பதியம் செய்யப்பட்டவுடன், அவரது உடலில் எதிர்ப்புப் பொருள்கள் தோன்றுகின்றன; அவை பதியம் செய்யப்பட்ட உறுப்பிலுள்ள எதிர்ப்புத் தூண்டிகளை எதிர்த்துப் போரிடத் துவங்கும். இதனால் கொடையாகப் பெறப்பட்ட உறுப்பு அழிக்கப்படுகிறது அல்லது நிராகரிக்கப்படுகிறது. இதைத் தவிர்ப்பதற்கு நெருங்கிய உறவினர்களிடமிருந்து உறுப்புகளைப் பெற்றுப் பதியம் செய்தல், அல்லது மாற்றுக் குருதியை விரவிக்கும் (blood transfusion) போது கடைபிடிக்கப்பெறும் திசு ஒத்திசைவு (tissue matching) முறையைக் கையாளுதல் ஆகியவற்றை மேற்கொள்ளலாம். மேலும் பதியம் செய்யப்பெற்ற பிறகு தகுந்த மருந்துகளை நோயாளிக்கு அளிப்பதன் வாயிலாகவும் உறுப்புகள் நிராகரிக்கப்படுவதைத் தவிர்க்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சமீபத்தில் யோர்க் பல்கலைக்கழகத்தைச்(கனடா) சேர்ந்த பேராசிரியை நடத்திய ஒரு ஆய்வின்படி, சிறு வயதினருக்கு ஞாபகமறதி, கவனக்குறைவு போன்ற பிரச்சினைகள் குறைவாகவே ஏற்படுவதாக கண்டறிந்திருக்கிறார். American Psychological Association (APA)-இன் Journal of Psychology and Aging-இல் இரண்டு மொழிகள் பேசத் தெரிந்தவர்கள்/பேசுபவர்களை Alzheimer's disease (தமிழில்?) மற்றும் dementia ("பைத்தியம்") போன்ற வியாதிகள் அணுகாவண்ணம் பாதுகாக்கின்றன (சிறிதளவேனும்) என்று எழுதி இருக்கிறார்கள்.

கனடாவைச் சேர்ந்தவர்களும், தமிழகத்தைச் சேர்ந்தவர்களுமாக, இந்த ஆய்விற்கு 30-இலிருந்து 59 வயதுக்குட்பட்ட 104 பேர்களும் 60-இலிருந்து 88 வயதுக்குட்பட்ட 50 பேரும் உட்படுத்தப்பட்டனர். இவர்களில் சிலர் ஒரு மொழி மட்டுமே பேசுபவர்கள். மீதிப்பேர் தினமும் ஆங்கிலமும் தமிழும் பேசுபவர்கள். அனைவரும் கல்லூரிப்படிப்பை முடித்திருந்தார்கள். தமிழும் ஆங்கிலமும் ஏறக்குறைய பத்துவயதில் இருந்து பேசி வருபவர்களே இரண்டு மொழி பேசுபவர்களாக கருதப்பட்டார்கள். தினமும் ஆங்கிலம் தமிழ் இரண்டு மொழிகளையும் பயன்படுத்தாமல் அவ்வப்போது மற்ற மொழியில் பேசுபவர்களைத் தாங்கள் கணக்கில் எடுக்கவில்லை என்றும், அவர்களைப் பற்றி தம்மால் ஏதும் சொல்ல முடியாது என்றும் பேராசிரியர் Dr.Ellen Bialystok தெரிவித்திருக்கிறார்.

இந்த ஆய்விற்கு Simon Task என்ற சோதனை பயன்படுத்தப்பட்டது. Simon Task பற்றி மேலும் தெரிந்துகொள்ள http://users.fmg.uva.nl/wvandenwildenberg/task.html சுட்டுங்கள்.

60-இலிருந்து 88 வயதுக்குட்பட்ட இரண்டு மொழி பேசுபவர்கள், ஒரேயொரு மொழி மட்டும் தெரிந்த அந்த வயதினரை விட நன்றாகச் செய்தார்களாம். அது மட்டுமல்ல அவர்கள், 30-இலிருந்து 59 வயதுக்குட்பட்ட ஆங்கிலம் அல்லது தமிழ் மட்டுமே தெரிந்தவர்களைப் போலவே Simon Task சோதனையில் மதிப்பெண் வாங்கியதாகத் தெரிகிறது.

மேலும் தெரிந்துகொள்ள:

http://www.psych.yorku.ca/ellenb/research/AgingPaper.htm

Thanks to:

American Psychological Associationn (APA) - http://www.apa.org/releases/bilingual_aging.html

Journal of Psychology and Aging - http://www.apa.org/journals/pag/press_rele.../pag192290.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பல ஆண்டுகள் விண்வெளியில் மிதக்கும் விண்கலங்களுக்கு (Space crafts) வேண்டிய ஆற்றல் எவ்வாறு அளிக்கப்படுகிறது?

கோள்களுக்கு அனுப்பப்படும் விண்கலங்கள் மற்றும் துணைக்கோள்கள் (Satellites) ஆகியவற்றிற்குத் தேவையான ஆற்றல் பொதிகள் (Energy packages) அவைகளுடன் சேர்த்தே அனுப்பப்படுகின்றன. இப்பொதிகள் கதிரியக்க ஐசோடோப் வெப்ப மின் இயற்றிகள் (Radioisotope thermoelectric generators) வடிவத்தில் இருப்பவை. புளுடோனியம் (Plutonium), ஸ்ட்ரோண்டியம் (Strontium) போன்ற கதிரியக்கத் தனிமங்களைச் (Radioactive elements) சிதைத்து வெப்பம் உண்டாக்கப்படுகிறது; இவ்வெப்பத்தைப் பயன்படுத்தி ஈய-டில்லுரைட் கலப்புலோகம் (lead-telluride alloy), சிலிகான்-ஜெர்மானியம் கலப்புலோகம் (silicon-germanium alloy) போன்ற வெப்ப இரட்டை வரிசைகளில் (Thermo couple series) மின் ஆற்றல் பெறப்படுகிறது. ஸ்ட்ராண்டியம் _ 90 போன்ற கதிரியக்க ஐசோடோப்புகளின் ஆயுள் பத்தாண்டுக்கும் மேற்பட்டது; பல ஆண்டுகள் தொடர்ந்து மின்னியற்றியாகப் (Generators) பணி புரியக்கூடியது. எனவே தொடர்ந்து பல ஆண்டுகட்குத் தேவையான ஆற்றல் இதன் வாயிலாகப் பெறப்படுகிறது. ஆளில்லாத விண்கலமாக இருப்பின் இவற்றிற்கு மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் தேவைப்படுவதில்லை. கதிரவனுக்கு அருகில் இருக்கும் செவ்வாய், புதன் போன்ற கோள்களுக்கு அனுப்பப்படும் விண்கலங்களாக இருப்பின் அவற்றிற்குத் தேவையான ஆற்றலை கதிரவ மின்கலங்கள் (Solar cells) வாயிலாக சூரியக் கதிர்களைப் பயன்படுத்திப் பெற்றுக்கொள்ள முடியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.