Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தோல், பாக்டீரியா, ஆரோக்கியம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஜாஸ்மின் ஃபாக்ஸ்-ஸ்கெல்லி
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 23 செப்டெம்பர் 2024, 10:58 GMT
    புதுப்பிக்கப்பட்டது 12 நிமிடங்களுக்கு முன்னர்

நம் தோலின் மேற்பரப்பில் பல நூறு கோடிக்கணக்கான பாக்டீரியாக்கள், பூஞ்சைகள், மற்றும் வைரஸ்கள் வாழ்கின்றன. நமது ஆரோக்கியம் மற்றும் நலனில் அவை வகிக்கும் முக்கிய பங்கை சமீப காலமாக தான் நாம் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்து கொள்ளத் தொடங்கி இருக்கிறோம்.

நமது தோலின் மேற்பரப்பின் ஒரு சதுர சென்டிமீட்டரை எங்கு ஸூம் செய்து பார்த்தாலும் அங்கு 10,000 முதல் 10 லட்சம் பாக்டீரியாக்கள் வரை இருக்கும். உங்கள் உடல் முழுவதும் ஒரு செழிப்பான நுண்ணுயிரிகளின் உலகமே உள்ளது. இது மிகவும் அருவருப்பானது என்று கூட தோன்றலாம்.

ஆனால் இதில் அருவருப்படைய ஒன்றுமேயில்லை.

ஏன் தெரியுமா?

நமது தோல் ‘மைக்ரோபயோட்டா’ நம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதற்கான ஆய்வு ரீதியான ஆதாரங்கள் அதிகரித்து வருகின்றன.

எனவே ஆன்டி-பாக்டீரியா சோப்புகளின் பக்கமே போகாதீர்கள்.

உங்கள் குடலில் வசிக்கும் நுண்ணுயிரிகள் பற்றி நீங்கள் ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கலாம். பாக்டீரியா, பூஞ்சை, வைரஸ்கள், மற்றும் பிற ஒற்றை செல் உயிரினங்களின் இந்தக் குழுவின் பன்முகத்தன்மை, நீரிழிவு நோய் முதல் ஆஸ்துமா மற்றும் மனச்சோர்வு உள்ளிட்ட நோய்களின் வரம்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பது நன்கு நிரூபிக்கப்பட்டுள்ளது.

 
தோல், பாக்டீரியா, ஆரோக்கியம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, நமது தோல் பாக்டீரியா, பூஞ்சை மற்றும் வைரஸ்களுக்கு வாழ்விடத்தை வழங்குகிறது

நோய்க்கிருமிகளுக்கு எதிரான முதல் பாதுகாப்புக் கவசம்

இதே போன்று நமது தோலில் சவாரி செய்யும் நுண்ணுயிரிகள் நமக்கு நன்மை பயக்கும். இது நமது தோலின் மேற்பரப்பு வழியாக ஊடுருவி தீங்கு விளைவிக்கும் நோய்க் கிருமிகளுக்கு எதிராக முதல் பாதுகாப்பு கவசமாக விளங்குகின்றன. அதுமட்டுமின்றி, அன்றாட வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் சில ரசாயனங்களை உடைக்கவும், நமது நோயெதிர்ப்பு மண்டலத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கவும் அவை உதவுகின்றன.

நமது குடலுக்கு அடுத்தபடியாகத், தோலில் பாக்டீரியாக்கள் மிக அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன. இது ஆச்சர்யமளிக்கும் விஷயம் தான். நமது வாய் அல்லது குடல் பகுதியில் பாதுகாப்பான, சூடான மற்றும் ஈரமான சூழல் இருக்கும். அதனை ஒப்பிடும்போது, நமது தோல், பாக்டீரியாக்களுக்கு உகந்த இடமாக இருக்காது என்று தோன்றலாம்.

“உடலின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும்போது பாக்டீரியாக்களுக்கு தோல் உகந்த சூழலாக இருக்காது,” என்று பிரிட்டனில் உள்ள ஹல் பல்கலைக்கழகத்தில் ஹுலிங் விரிவுரையாளர் ஹோலி வில்கின்சன் கூறுகிறார்.

“தோல் பகுதி வறண்ட, தரிசு பகுதியாக இருக்கும். வெளிச்சூழல்களுக்கு அதிகம் வெளிப்படும். தோலில் வாழும் பாக்டீரியாக்கள் இந்த அழுத்தங்களைச் சமாளிக்க பல லட்சம் ஆண்டுகளாகத் தங்களைத் தகவமைத்துக்கொண்டு தங்கள் தன்மையை மாற்றிக் கொண்டு உருவாகியுள்ளன," என்று அவர் விளக்குகிறார். மேலும், இந்தப் பரிணாமம் நமக்கு பல நன்மைகளை தந்துள்ளது.

அதே சமயம், நமது தோலின் அனைத்துப் பகுதிகளிலும் பாக்டீரியாக்கள் சமமாக வசிப்பதில்லை. பாக்டீரியாக்களுக்கு வசிக்க மிகவும் குறிப்பிட்ட விருப்பத்தேர்வுகள் உள்ளன. உங்கள் நெற்றி, மூக்கு, அல்லது முதுகில் பஞ்சை வைத்து சாம்பிள் எடுத்து ஆய்வு செய்து பாருங்கள். இந்தப் பகுதிகளில் க்யூட்டிபாக்டீரியம் (Cutibacterium) என்ற வகை பாக்டீரியா நிறைந்துள்ளது என்பதை நீங்கள் கண்டறிவீர்கள்.

க்யூட்டிபாக்டீரியம் என்ற பாக்டீரியா இனம், நமது சரும செல்களால் உருவாக்கப்பட்ட எண்ணெயை உண்பதற்காக உருவாகியுள்ளது. இது, நமது உடலின் வெளிப்புற அடுக்கை ஈரப்பதமாக்குவதற்கும் பாதுகாப்பதற்கும் உதவுகிறது.

தோல், பாக்டீரியா, ஆரோக்கியம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சில பாக்டீரியாக்கள் நமது சரும செல்களைத் தூண்டி, நீர் இழப்பைத் தடுக்கும் `sebum' உற்பத்தி செய்யத் தூண்டுகிறது

மனித-பாக்டீரியா உறவு

வெப்பத்தன்மை கொண்ட, வியர்வை அதிகம் சேரும் அக்குளில் பஞ்சை ஸ்வாப்பை பயன்படுத்தி ஒரு மாதிரியை எடுத்துப் பார்த்தால், அங்கு ஸ்டேஃபிளோகோகஸ், மற்றும் கோரினேபாக்டீரியம் ஆகிய பாக்டீரியாக்களைக் காணலாம்.

கால்விரல்களுக்கு இடையில் ப்ரோபியோனி பாக்ட்ரியம் என்ற இனத்தைச் சேர்ந்த பாக்டீரியா ஏராளமாக இருப்பதைக் காணலாம். அவற்றில் சில பரந்த அளவிலான பூஞ்சைகளுடன் சீஸ் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகின்றன.

கைகள் மற்றும் கால்கள் போன்ற தோலின் வறண்ட பகுதிகள், பாக்டீரியாக்கள் வாழ உகந்த சூழலாக இருக்காது. எனவே, இங்கு வாழும் நுண்ணுயிரி இனங்கள் இங்கு அதிக காலம் தங்க முனைவதில்லை.

இந்த நுண்ணுயிரிகளும் மனிதர்களும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒரு வகையான கூட்டுவாழ்வு தொடர்புகளை உருவாக்கியுள்ளனர். நமது தோலில் வசிக்கும் பாக்டீரியா, பூஞ்சை, மற்றும் ‘மைட்’ எனும் சிறு பூச்சிகள் தோலில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் மூலம் உயிர் வாழ்கின்றன. அதே சமயம் நாமும் இந்த நுண்ணுயிரிகளின் இருப்பை சார்ந்துள்ளோம். அவை தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களுடன் சண்டையிடுகின்றன. அவை பெருகுவதைத் தடுக்க உதவுகின்றன.

 

இளமையான தோற்றத்தைத் தரும் பாக்டீரியாக்கள்

"இந்த பாக்டீரியாக்கள் அனைத்தும் ஏற்கனவே நம் தோலில் இருப்பதால், நோய்க்கிருமிகள் ஊடுருவுவது மிகவும் கடினம்," என்று வில்கின்சன் கூறுகிறார்.

தோல் பாக்டீரியாக்கள் நோய் கிருமிகளின் வளர்ச்சியைத் தடுக்கும் ரசாயனங்களை உற்பத்தி செய்வதன் மூலம் அவற்றுக்கு எதிராக போரை நடத்தும், அல்லது அவற்றை நேரடியாகக் கொல்லும். எடுத்துக்காட்டாக, ஸ்டஃபைலோகாக்கஸ் எபிடெர்மிடிஸ் (Staphylococcus epidermidis) மற்றும் ஸ்டஃபைலோகாக்கஸ் ஹோமினிஸ் (Staphylococcus hominis) ஆகிய பாக்டீரியா இனங்கள் மனிதர்கள் மற்றும் விலங்குகளையும் சார்ந்திருக்கக் கூடியவை. தோல் நோய்த்தொற்றுகளின் பொதுவான காரணியான ஸ்டஃபைலோகாக்கஸ் ஆரியஸ் (Staphylococcus aureus) என்ற பாக்டீரியா இனத்தைத் தடுக்க இந்த இரண்டு பாக்டீரியா இனங்களும் நுண்ணுயிர எதிர்ப்பு மூலக்கூறுகளை உருவாக்குகின்றன.

சில விஞ்ஞானிகள், நமது குடல் நுண்ணுயிரியைப் போலவே, தோல் நுண்ணுயிரிகளும் குழந்தை பருவத்தில் நமது நோயெதிர்ப்பு மண்டலத்தைப் ‘பயிற்சி’ செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்றும், எந்த நுண்ணியிரியைத் தாக்க வேண்டும், எதைப் புறக்கணிக்க வேண்டும் என்பதைக் கற்பிப்பதாகவும் நம்புகிறார்கள். என்வே தோலில் உள்ள சில பாக்டீரியாக்களின் பன்முகத்தன்மையால் ஒவ்வாமைகள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

தோல் நுண்ணுயிரிகள் மற்ற முக்கியச் செயல்பாடுகளையும் கொண்டுள்ளன. உதாரணமாக, சில பாக்டீரியாக்கள் ஈரப்பதத்தைத் தக்கவைத்து, நமது சருமத்தை மிருதுவாகவும், மென்மையாகவும் வைத்திருப்பதன் மூலம் இளமையான தோற்றத்தைத் தக்கவைக்க உதவும் என்று கருதப்படுகிறது.

நச்சுப் பொருட்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் நோய்க்கிருமிகள் உள்ளே வருவதைத் தடுக்கவும், நீர்ச் சத்து வெளியேறுவதைத் தடுக்கவும், நமது தோல் பல அடுக்குகளைக் கொண்டுள்ளது. அதன் மேல்புறம் எளிதில் ஊடுருவக்கூடிய வகையில் உள்ளது. மேல் அடுக்கு ‘ஸ்ட்ராட்டம் கார்னியம்’ (stratum corneum) என்று அழைக்கப்படுகிறது. கார்னியோசைட்டுகள் எனப்படும் இறந்த செல்களில் உருவாகிறது. இது லிப்பிடுகள் எனப்படும் கொழுப்பு மூலக்கூறுகளுடன் அமைந்துள்ளது.

"தோலின் மேல் அடுக்கு மிகவும் கடினமானது, நீர் புகாதது. அதனால் தான் நாம் மழையில் செல்லும்போது நம் தோல் கரைவதில்லை," என்கிறார் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் தோல் மருத்துவத்தின் பேராசிரியரான கேத்தரின் ஓ'நீல்.

தோல், பாக்டீரியா, ஆரோக்கியம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, நாம் பயன்படுத்தும் அழகுசாதனப் பொருட்கள் மற்றும் நம்மைச் சுற்றியுள்ள சூழல் அனைத்தும் நமது தோலின் நுண்ணுயிரியை பாதிக்கும்

ஸ்ட்ராட்டம் கார்னியத்திற்கு அடியில், கெரடினோசைட்டுகள் எனப்படும் நேரடி தோல் செல்கள் அடுக்கடுக்காக இருக்கும். இந்தத் தோல் செல்களுக்கு இடையே சிறிய இடைவெளிகள் உள்ளன. இவற்றின் மூலம் நீர் கசியும். இதைத் தடுக்க, கெரடினோசைட்டுகள் லிப்பிட்களை (கொழுமியம்) உருவாக்குகின்றன. இது ஈரப்பதத்தைத் தக்க வைக்க உதவுகிறது.

"இது ஒரு செங்கல், சிமெண்ட் அமைப்பை போன்றது," என்று வில்கின்சன் கூறுகிறார். "உங்கள் செல்களுக்கு இடையில் இந்த லிப்பிடுகள் இருக்கும். அவை எல்லாவற்றையும் ஒன்றாக வைத்திருக்கும் பசை போல செயல்படுகின்றன," என்கிறார் அவர்.

இந்தத் தோல் அமைப்பில் பாக்டீரியாக்களின் பங்கு என்ன?

நமது தோலில் வாழும் சில பயனுள்ள பாக்டீரியாக்கள் லிப்பிட்களை தாங்களே உற்பத்தி செய்வது மட்டுமல்லாமல், அதிகக் கொழுப்புகளை உற்பத்தி செய்ய நமது சரும செல்களுக்கு சமிக்ஞைகளை அனுப்புகின்றன.

எடுத்துக்காட்டாக, க்யூட்டிபாக்டீரியம், லிப்பிட் நிறைந்த சருமத்தை உற்பத்தி செய்ய தோலைத் தூண்டுகிறது. இது நீர் இழப்பைக் குறைக்கிறது, ஈரப்பதத்தை அதிகரிக்கிறது.

முகப்பரு முதல் பொடுகுத் தொல்லை வரை

ஒருவேளை தோல் நுண்ணுயிரியின் மென்மையான சமநிலை சீர்குலைந்தால் என்ன நடக்கும்?

இந்த நிலையை தோல் ‘டிஸ்பயோசிஸ்’ என்பார்கள். இதனால் அடோபிக் டெர்மடிடிஸ் (ஒரு வகை எக்ஸீமா - eczema - எரிச்சல், வறண்ட தோல் ஆகிய பிரச்னைகள்) முதல் ரோசாசியா என்ற முகப்பரு மற்றும் தடிப்புத் தோல் அழற்சி போன்ற தோல் பிரச்னைகள் ஏற்படும்.

உச்சந்தலையில் பொடுகு இருப்பது கூட ஒரு குறிப்பிட்ட வகை பூஞ்சை இனத்துடன் தொடர்புடையது. Malassezia furfur மற்றும் Malassezia globosa ஆகிய பூஞ்சை இனங்கள் ‘ஒலிக் அமிலம்’ எனப்படும் ரசாயனத்தை உற்பத்தி செய்கின்றன. இது உச்சந்தலையில் உள்ள ஸ்ட்ராட்டம் கார்னியம் செல்களைத் தொந்தரவு செய்கிது, அரிப்பை ஏற்படுத்துகிறது.

இருப்பினும், இதுபோன்ற சந்தர்பங்களில், நோய் நிலை தோல் நுண்ணுயிரிகளால் உண்டாகிறதா அல்லது நோயின் விளைவாக தோல் நுண்ணுயிரி மாறியதா என்பதை நிறுவுவது கடினம்.

 

நமக்கு வயதான தோற்றம் ஏற்படுவது ஏன்?

பாக்டீரியாக்களால் ஏற்படும் ஒரு மோசமான விளைவு, தோல் வயதான தோற்றம் பெறுவது.

நமக்கு வயதாகும்போது, தோலில் வாழும் பாக்டீரியாக்களின் வகைகள் மாறுகின்றன. நோய்த்தொற்றுகளிலிருந்து பாதுகாக்கும் மற்றும் சருமத்தை ஈரப்பதமாகவும் நீர் வற்றாமலும் வைத்திருக்க உதவும் ‘நல்ல’ பாக்டீரியா இனங்கள் குறையும். அவற்றுக்குப் பதிலாக தீங்கு விளைவிக்கும் நோய்க்கிருமி பாக்டீரியாக்கள் சருமத்தில் அதிக அளவில் உருவாகும். இவை தோலின் குணப்படுத்தும் தன்மையில் தாக்கங்களை ஏற்படுத்தும்.

"பொதுவாக, வயதானவர்கள் வறண்ட சருமத்தைக் கொண்டுள்ளனர். இது கொழுப்பு உற்பத்திக்கு உதவும் பாக்டீரியா வகைகள் குறைவதால் ஏற்படும் நிலை," என்று வில்கின்சன் கூறுகிறார். "இது தோலில் நோய்த்தொற்றுகள் அதிகரிக்கும் அபாயத்திற்கு வழிவகுக்கிறது. ஏனெனில், இது தோலின் இறுக்கமான நிலையை மாற்றி, அதனைத் தளர்வடைய வைக்கிறது. வயதானவர்கள் சருமத்தின் உறுதியான தன்மையை இழக்க நேரிடுவதால், தன்னிச்சையான காயம் தோன்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம்," என்கிறார் அவர்.

துரதிருஷ்டவசமாக, தீங்கு விளைவிக்கும் தோல் பாக்டீரியாக்கள் காயம் ஆறுவதைத் தாமதப்படுத்தக் கூடும். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் தோல் மருத்துவம் மற்றும் நுண்ணுயிரியல் பேராசிரியரான எலிசபெத் க்ரைஸின் ஆராய்ச்சியில், காயமடைந்த எலிகளின் தோலில் நல்ல நுண்ணுயிரி இல்லாத பட்சத்தில் அவை குணமடைய அதிக நேரம் எடுக்கும் என்பதைக் காட்டுகிறது.

தோல், பாக்டீரியா, ஆரோக்கியம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, தோலில் உள்ள பாக்டீரியா இனங்களின் சமநிலை, சருமத்தின் தோற்றத்தை பாதிக்கிறது

இதற்கிடையில், ஹல் யார்க் மருத்துவப் பள்ளியில் வில்கின்சனின் சக ஊழியர்களின் ஆய்வு, ஒரு நபரின் நாள்பட்ட காயம் குணமாகுமா இல்லையா என்பது தோல் பாக்டீரியாக்களை சார்ந்திருப்பதாக காட்டுகிறது. தோலின் பாக்டீரியா அளவை வைத்து இதனை கணித்து விட முடியும் என்கின்றனர்.

நாள்பட்ட, குணமடையாத காயங்கள் உயிருக்கு ஆபத்தான தோலின் நிலையாகும். இந்தப் பிரச்னை நான்கு நீரிழிவு நோயாளிகளில் ஒருவரையும், 65 வயதுக்கு மேற்பட்ட 20 பேரில் ஒருவரையும் பாதிக்கிறது.

"எதிர்காலத்தில் எந்த நோயாளிகளுக்கு குணமடையாத காயங்களை உருவாகும் அபாயம் இருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பதற்கும், அது வருவதற்கு முன்பே வருமுன் காக்கும் தலையீட்டை வழங்குவதற்கும் இதுபோன்ற உத்திகளைப் பயன்படுத்த முடியும் என்று நம்புகிறோம். குறிப்பாக, நீரிழிவு நோயாளிகள் கால் நீக்கப்பட வேண்டிய நிலை அல்லது மிகவும் மோசமான தொற்று நோயை உருவாக்கும் சூழலில் இருந்து மீட்கலாம்," என்று வில்கின்சன் கூறுகிறார்.

புற ஊதா கதிர்வீச்சு அபாயத்தை பாக்டீரியாக்கள் தடுக்குமா?

சில ஆய்வுகள் தோல் நுண்ணுயிரிகள் உண்மையில் தோலின் குணப்படுத்தும் ஆற்றலை அதிகரிக்கின்றன என்று கண்டறிந்துள்ளன.

புற ஊதா கதிர்வீச்சின் (ultraviolet radiation) சில தீங்கு விளைவிக்கும் விளைவுகளிலிருந்து தோல் நுண்ணுயிரி நம்மைப் பாதுகாக்கும் என்பதற்கு சில சான்றுகள் உள்ளன. புற ஊதா கதிர்வீச்சு, தோலைத் தாக்கும் போது அது டி.என்.ஏ-வைச் சேதப்படுத்தும். இருப்பினும், தோல் செல்கள் ஒரு உள்ளமைக்கப்பட்ட பாதுகாப்பு பொறிமுறையைக் கொண்டுள்ளன.

"புற ஊதா கதிர்வீச்சு தோலைத் தாக்கும் போது. நுண்ணுயிரிகள் பெருகுவதை நிறுத்திவிடுகின்றன. சேதமடைந்த செல்களை அவை சரிசெய்ய முனைகின்றன," என்று ஓ'நீல் கூறுகிறார். "அதைச் சரிசெய்ய முடியாவிட்டால், செல்கள் தாமாகவே அழிந்துவிடும்," என்கிறார் அவர்.

இதற்கு நேர்மாறாக, ஒரு ஆய்வில், தோலில் இருந்து நுண்ணுயிர் நீக்கப்பட்டால், சேதமடைந்த டி.என்.ஏ-வைக் கொண்டுள்ள செல்கள் தொடர்ந்து பெருகிகின்றன என்று கண்டறியப்பட்டது என்கிறார் ஓ'நீல்.

"இந்தச் செயல்முறை தான் புற்றுநோய் போன்ற கட்டிகளுக்கு எதிரான மிகவும் முக்கியமான பாதுகாப்பு பொறிமுறை," என்று ஓ'நீல் கூறுகிறார். "மேலும் இதில் தெளிவாக நுண்ணுயிர் ஒரு பெரிய பகுதியாக செயல்படுகிறது," என்கிறார்.

குடல் ஆரோக்கியம் தோலின் தோற்றத்தை பாதிக்குமா?

தோல் நுண்ணுயிரிகள் குடலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கு சில சான்றுகள் உள்ளன.

எடுத்துக்காட்டாக, தோல் காயங்கள் குடல் நுண்ணுயிரியில் குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு வழிவகுக்கும், சமீபத்திய ஆய்வின்படி, இது ஒரு நபருக்கு குடல் அழற்சியை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது. தோல் நுண்ணுயிரிகளின் பூஞ்சை இனமான 'Malassezia restricta’, ‘கிரோன்’ என்னும் குடல் அழற்சி நோயுடன் தொடர்புடையது மற்றும் பெருங்குடல் அழற்சியை அதிகரிக்கலாம் என்றும் ஆய்வுகள் காட்டுகின்றன.

"குடல்-தோல் இரண்டுக்கும் நேரடித் தொடர்பு உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். அதாவது, மோசமான உணவுப் பழக்கம் கொண்டிருப்பவர்கள் மோசமான சருமத்தை கொண்டிருப்பார்கள். ஆனால் நமது சரும நுண்ணுயிரியில் ஏதேனும் சமநிலை பாதிக்கப்பட்டால் அது நமக்கு வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் என்ற எண்ணம் முற்றிலும் தவறு," என்கிறார் பெர்ன்ஹார்ட் பேட்ஸோல்ட். இவர் எஸ்-பயோமெடிக் என்னும் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை அறிவியல் அதிகாரி. இந்த நிறுவனம் தோல் நுண்ணுயிரியை மீட்டெடுப்பதன் மூலம் முகப்பரு போன்ற நிலைகளுக்கு சிகிச்சை அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

"இருப்பினும், மிக சமீபத்தில், தோல்-குடல் தொடர்பு உண்மையில் உள்ளது என்பதை நாங்கள் புரிந்து கொள்ள ஆரம்பித்தோம்," என்கிறார் அவர்.

தோல் நுண்ணுயிர்கள் பற்றியும் ஆரோக்கியம் மற்றும் நமது நலனில் அவற்றின் பங்கு பற்றியும் மேலும் அறிந்து கொண்டதால் விஞ்ஞானிகளிடையே உற்சாகம் அதிகரித்து வருகிறது.

சிகிச்சை முறைகள்

நமது தோலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் கொண்டு மாற்றுவதன் மூலம் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியுமா என்று பலருக்கு சந்தேகம் எழலாம். நீங்கள் விரும்பினால், ஒரு வகையான நுண்ணுயிர் தோல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம். இருப்பினும், அவ்வாறு செய்வது உங்கள் உடலில் ஏற்கனவே இருக்கும் மைக்ரோ பயோட்டாவை அழிக்க நேரிடும். இது ஆண்டிபயாடிக் தன்மையின் வளர்ச்சி போன்ற பிற சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

நமது தோல் நுண்ணுயிரிகளும் நமது சுற்றுச்சூழலால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. எனவே நம் உடலில் உள்ள பல்வேறு பாக்டீரியாக்கள், பூஞ்சைகள், மற்றும் வைரஸ்களின் பன்முகத்தன்மைக்கு நம்மைச் சுற்றியுள்ள சூழல் எவ்வாறு பங்களிக்கிறது என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். நாம் பயன்படுத்தும் அழகுசாதனப் பொருட்கள் கூட, நமது சரும நுண்ணுயிரிகளின் தன்மையை மாற்றியமைக்க முடியும்.

சில நிறுவனங்கள் ‘ஆரோக்கியமான’ நுண்ணுயிரிகளின் வளர்ச்சியைத் தூண்டுவதற்கு ‘ப்ரீபயாடிக்குகள்’ மற்றும் ‘ப்ரோபயாடிக்குகள்’ மூலம் நல்ல பாக்டீரியாக்களுக்கு உணவளிப்பதன் மூலம் அல்லது உங்கள் முகத்தில் பாக்டீரியா புரதங்கள் அல்லது லிப்பிட்களை நேரடியாக சருமத்தில் பயன்படுத்துவதன் மூலம் சாத்தியமாகும் என்று நம்புகின்றன.

இது எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதற்கு சிறிய அளவில் வெளியிடப்பட்ட சில சான்றுகள் உள்ளன. ஆனால், இது பல்வேறு தோல் பாக்டீரியாக்களின் சமநிலையை மாற்றும் அபாயம் உள்ளது.

பாக்டீரியாவைத் தாக்கும் வைரஸ்கள் ‘பாக்டீரியோபேஜ்கள்’ என அறியப்படுகிறன. அவை நல்ல நுண்ணுயிரிகளுக்குத் தீங்கு விளைவிக்காமல், ஸ்டேஃபிளோகோகஸ் ஆரியஸ் போன்ற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழிக்கப் பயன்படுமா என்று கூட வில்கின்சன் ஆராய்ந்து வருகிறார்.

"நோய்க்கிருமி பாக்டீரியாவைக் குறைப்பதன் மூலமும், இயற்கையான மைக்ரோபயோட்டாவை மீட்டெடுக்க அனுமதிப்பதன் மூலமும், நீங்கள் காயத்தை சரிசெய்வதை துரிதப்படுத்தலாம்," என்று அவர் கூறுகிறார். "எனவே, இது எங்களுக்கு மிகவும் உற்சாகமானது. மேலும் இது இறுதியில் இந்த நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கும் விதத்தில் ஒரு மாற்றத்திற்கு வழிவகுக்கும்," என்கிறார்.

[இது பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு]

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.