Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையில் அனைத்துலக சுயாதீனமான மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவை அமைக்க லூயிஸ் ஆர்பரிடம் மனோ கணேசன் வலியுறுத்தல்

Featured Replies

இலங்கையில் கொழும்பு மற்றும் தமிழர் தாயகப் பிரதேசங்களில் அனைத்துலக சுயாதீனமான மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையர் லூயிஸ் ஆர்பரிடம் மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

இலங்கையில் அனைத்துலக சுயாதீனமான மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவை அமைக்க லூயிஸ் ஆர்பரிடம் மனோ கணேசன் வலியுறுத்தல்

[வியாழக்கிழமை, 11 ஒக்ரொபர் 2007, 18:28 ஈழம்] [சி.கனகரத்தினம்]

mano20070618.jpg

இலங்கையில் கொழும்பு மற்றும் தமிழர் தாயகப் பிரதேசங்களில் அனைத்துலக சுயாதீனமான மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையர் லூயிஸ் ஆர்பரிடம் மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தில் காணாமல் போனோரின் குடும்பத்தினரை லூயிஸ் ஆர்பர் இன்று வியாழக்கிழமை மாலை சந்தித்துப் பேசினார்.

ஐ.நா. மனித உரிமை ஆணையாளருடனான இந்த சந்திப்பில் மக்கள் கண்காணிப்புக்குழுவின் சார்பில் அதன் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின

இலங்கையில் அனைத்துலக சுயாதீனமான மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவை அமைக்க லூயிஸ் ஆர்பரிடம் மனோ கணேசன் வலியுறுத்தல்

ஏற்கனவே நோர்வே மத்தியஸ்தத்தில் நியமிக்கப்பட்ட போர்நிறுத்த கண்காணிப்புக் குழு இறந்துபோய் கிடக்கும் நிலையில் இன்னுமொரு கண்காணிப்புக்குழு உண்மையில் உபயோகமானதா? இதனால் மக்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்குமா?

யாராவது விளக்க முடியுமா?

Edited by சாணக்கியன்

சர்வதேசம் தனது நலன்களை கறந்து கொள்ள பயன்படுத்தும் வழிமுறைகளில் மனிதஉரிமையும் ஒன்று. அதற்கான ஆதாரங்களைச் சேர்க்க அப்படி ஒரு கண்காணிப்புக் குழு அவசியம். இறைமையுள்ள ஒரு நாட்டினுள் யாரும் எந்தக் கண்காணிப்புக்குழுவையும் அந்தந்த நாட்டு அரசாங்கங்களின் அனுமதியில்லாது அனுப்ப முடியாது. இங்கு தான் தமிழர்களின் அவலமும் அது பற்றிய பிரச்சாரமும் சர்வதேசத்திற்கு உதவுகிறது.

ஏனைய பல நாடுகளில் நடந்தது தான் சிறீலங்காவில் நடக்கிறது. உள்நாட்டு யுத்தம் தீவிரம் அடையும் பொழுது பொருளாதாரம் பாதிப்படைகிறது. அதனால் அதிகரிக்கும் கடன் போன்றவை சர்வதேசம் தனக்கு சாதகமான நிபந்தனைகளின் அடிப்படையிலான வர்த்தக உடன்படிக்கைகள் இயற்கை வளங்களை பெற்றுக் கொள்ளவுதற்கான மற்றும் ஏனைய அபிவிருத்தி திட்டங்களைத் திணிக்க முடிகிறது.

இங்கு சர்வதேசம் என்றதை சில முன்னணி அரசுகளும் அவர்கள் மீது கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வர்த்தக நிறுவனங்களையும் கொள்ளலாம்.

இவ்வாறு பொருளாதார சீரழிவுகளை மாத்திரம் வைத்து ஒரு நாட்டிடம் இருந்து நலன்களை பெறுவதற்கான எல்லை என்பது ஒரு குறித்த அளவுதான் இருக்கும். இதை ( escalate பண்ணி) அடுத்த படி நிலைக்கு உயர்த்தி மேலும் இராணுவ வர்த்தக சலுகைகளை (access for bases & other facilities) பெற மனித உரிமை விவகாரங்கள் கைய்யில் எடுக்கப்படுகிறது.

இதை சிறீலங்காவே அல்லது இப்படி ஒரு நிலையை எதிர்கொள்ளும் எந்த நாடும் பல்வேறு முனைகளில் எதிர்கொள்ளும். அந்தப் பேரம் பேசலில் தமிழர்களும் மறைமுகமாகப் பந்தாடப்படலாம்.

சர்வதேசம் தனது நலன்களிற்காக சிங்களத்தை நெருக்குவதற்குவதற்கு சட்டரீதியாக தீர்மானங்களை எடுக்கும் நிலைக்கு இன்னமும் செல்லவில்லை. இதற்கு சிங்களத்தின் இராஜதந்திர வெற்றி என்பது சிறிய அளவிலும் தமிழர்களின் பலவீனமான (அல்லது இல்லை என்றே சொல்லக் கூடிய) இராஜதந்திர அணுகுமுறை தான் காரணம்.

கவனிக்கவும் சர்வதேசம் எப்படிப்பட்ட தீர்மானங்களை எங்கு எப்போ நிறைவேற்றினாலும் அதற்கு அவர்களது நலன் சார்ந்த காரணங்கள் தான் தூண்டு கோலாக இருக்கிறது. அதற்கான ஆதாரங்கள் கருவிகளை நீண்ட கால நோக்கில் திட்டமிட்டு சேகரித்து வழர்த்தெடுத்து அரவணைத்து வைத்திருப்பார்கள்.

அப்படிப்பட்ட ஒரு சர்வதேச நிகழ்ச்சி நிரலில் தமிழர்கள் தமது நலன் சார்ந்த இராஜதந்திர அணுகுமுறைகளிற்கான சந்தர்ப்பங்களை இனங் கண்டு வழர்த்தெடுப்பது தான் ஒரே வழி.

காலம் வரும் பொழுது சர்வதேசம் அதைப் பயன்படுத்தி சிங்களத்திடம் இருந்து தனது நல்களைப் பெற தேவைக்கு ஏற்ப முயற்சிக்கும். அதற்காக சர்வதேசம் விடும் அறிக்கைகள் நிறைவேற்றும் தீரமானங்கள் வரலாற்றில் பதிவாகி தமிழர்களின் அங்கீகாரத்திற்கு பலம் சேர்க்கும். ஆனால் அவற்றைச் சரியாக அறுவடை செய்து எமக்கு நிரந்தர தீர்வைப் பெற எமது இராணுவ பொருளாதார தொழில்நுட்ப பலத்தால் மாத்திரம் தான் முடியும்.

பலவீனமான தமிழர் தரப்பு என்பது தமது அவலங்கள் அழிவுகள் மூலம் சர்வதேசத்திற்கு அவர்கள் நலன் சாரந்த சலுகைகளை சிங்களத்திடம் கறப்பதற்கு பலியாடுகளாக மாறியதாக மாத்திரம் தான் இருக்கும். சிங்களம் தனது மிலேச்சத்தனமான அணுகுமுறைகளிற்கு சில மட்டுப்படுத்த விலையைக் கொடுத்ததோடு தனது படிப்பினைகளை பெற்றது மட்டுமில்லாது தமிழரை நிரந்தரமாக தீவில் இருந்து அழிப்பதற்குரிய திட்டத்திற்கான சட்டரீதியான அங்கீகாரத்தையும் பாதுகாப்பையும் சர்வதேச மட்டத்தில் பெற்றுவிடும்.

Edited by kurukaalapoovan

நன்றி குறுக்ஸ்,

அடிக்கடி சர்வதேச மாபியாக்களில் (ஊடங்களில்) உபயோகிக்கப்படும் பிரபலமான சொற்பதங்களுக்கான உண்மையான வரைவிலக்கணங்கள்.

சர்வதேசம்:

"சில முன்னணி அரசுகளும் அவர்கள் மீது கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வர்த்தக நிறுவனங்களையும் கொள்ளலாம்"

சர்வதேச மனிதாபிமானம்:

"பொருளாதார சீரழிவுகளை கொண்டுள்ள யுத்தத்தில் ஈடுபட்டுள்ள நாட்டிடம் இருந்து நலன்களை பெறுவதற்காகவும் மேலும் இராணுவ வர்த்தக சலுகைகளை (access for bases & other facilities) பெற்றுக் கொள்ள உபயோகிக்கப்படும் அழுத்தம் அல்லது கோசம்"

தமிழ் மக்களின் நியாயமான உரிமைகள் அல்லது கோரிக்கைகள்:

"தமிழர் தரப்பு பலவீனமாக இருக்கும்வரை சர்வதேசத்திற்கு அவர்கள் நலன் சார்ந்த சலுகைகளை சிங்களத்திடம் கறப்பதற்கு உபயோகப்படும் துருப்புச் சீட்டு"

ஜனநாயக வழிமுறைகள்:

தனது வழிக்கு வராத நாடுகள் அமைப்புகள் மீது (நேரடியாக அல்லது மறைமுகமாக ) கட்டவிழ்த்து விடப்படும் அரசுகளின் கூட்டுப் பயங்கரவாதம்.

  • கருத்துக்கள உறவுகள்

அரச தரப்பிலிருந்து வந்த அழுத்தங்கள்!

-டிட்டோ குகன்-

கடத்தப்பட்டோர், காணாமல்போனோரின் உறவினர்களின் கதறல்களும் கண்ணீரும் வேண்டுகோள்களும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான உயர்ஸ்தானிகரான லூயிஸ் ஆர்பருக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக மக்கள் கண்காணிப்புக் குழுவின் ஏற்பாட்டாளரும் மேலக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோ கணேசன் எம்.பி. சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் மனித உரிமை நிலைவரங்கள் தொடர்பாக ஆராய வந்திருந்த ஐ.நா. உயர்ஸ்தானிகர் லூயிஸ் ஆர்பருடனான சந்திப்பு தொடர்பாக "தினக்குரலுக்கு" வழங்கிய விசேட பேட்டியிலேயே மனோ கணேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் எமக்கு வழங்கிய பேட்டியை கேள்வி, பதில் வடிவில் இங்கே தருகிறோம்.

கேள்வி: ஐ.நா. மனித உரிமைகள் விவகாரங்களுக்கான உயர்ஸ்தானிகர் லூயிஸ் ஆர்பருடனான கடத்தப்பட்டோர் காணாமல்போனோரின் குடும்ப உறவினர்கள் சந்திப்பு தொடர்பாக அரசாங்கத் தரப்பினால் அழுத்தங்கள் ஏற்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. யாரால் எந்த வகையான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன?

பதில்: அரச தரப்பிலிருந்து தான் இந்த அழுத்தங்கள் வந்தன. இதற்கென பல நாடகங்கள் அரங்கேறின. இதில் பிரதான பாத்திரமாக இருந்தவர் ஜனாதிபதிதான். அத்துடன் அமைச்சர் ராஜித சேனாரட்ண, பிரதி அமைச்சரான பெருமாள் பிள்ளை ராதாகிருஷ்ணன் ஆகியோரும் துணைப் பாத்திரங்களாக செயற்பட்டனர். இவர்களுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான தி.மகேஸ்வரனும் இதில் ஈடுபட்டார் என்றுதான் கூறவேண்டும். அரசாங்கத்துக்கு வெளியில் ஜே.வி.பி.யின் தலைவரான சோமவன்ச அமரசிங்கவும் இதில் மும்முரமாக செயற்பட்டார். இவர்கள் அனைவரும் இணைந்து ஐ.நா. அதிகாரிகள் எவரும் இலங்கைக்குள் வந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் அக்கறையாக செயற்பட்டனர். அப்படி வந்தாலுமே நாட்டின் உண்மை நிலைமைகளை ஐ.நா. அதிகாரிகள் தெரிந்துகொள்ளக்கூடாது என்பதிலும் அவதானமாக இருந்தனர்.

இலங்கை அரசின் அழைப்பை ஏற்றுத்தான் லூயிஸ் ஆர்பர் இங்கு வந்தார். எனினும், இலங்கை அரசாங்கம் அவரை விரும்பி அழைக்கவில்லை. கடந்த வருடமே இலங்கை வர அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இருந்தபோதிலும் லூயிஸ் ஆர்பரின் வருகையைத் தடுக்க இலங்கை அரசாங்கம் பாரிய முயற்சியில் ஈடுபட்டது. எனினும், எமது போராட்டம் உட்பட உள்நாட்டு மற்றும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளின் போராட்டங்கள் காரணமாக பாரிய பரப்புரை கொண்டு செல்ல முடிந்ததனால், இம்முறை ஆர்பரின் வருகையை அரசுக்கு தட்டிக்கழிக்க முடியவில்லை. எனினும், விரும்பாதவொரு விருந்தாளியை அழைக்க வேண்டிய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டது.

அவர் வந்த பிறகும் இலங்கையில் யதார்த்தங்களை அறிந்துகொள்ளக்கூடாது என்பதில் மிகவும் அக்கறையாக இருந்தனர். அதற்காக பல அவசர முயற்சிகளை முன்னெடுத்து, இலங்கையில் அனைத்தும் நியாயமாக நடக்கிறது. கடத்தல், காணாமல்போதலுக்கும் அரசாங்கத்துக்கும் தொடர்பில்லை. அரசாங்கத்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் பொருட்டு பாதாள உலகத்தினரே இவ்வாறு செயற்படுகின்றனர் போன்ற தோற்றப்பாடுகளை உருவாக்கும் பிரயத்தனங்களிலும் ஈடுபட்டனர்.

கேள்வி: லூயிஸ் ஆர்பர், மக்கள் கண்காணிப்புக் குழுவுக்கு ஏதாவது உறுதிமொழிகளை வழங்கினாரா?

பதில்: லூயிஸ் ஆர்பரிடம் எந்தவிதமான உறுதிமொழிகளையும் எதிர்பார்த்து நாம் அவரை சந்திக்கவில்லை. அவர் உடனடியாக எமது கோரிக்கைகளை ஏற்று உறுதிமொழிகளை வழங்கி விடுவாரென நாம் எதிர்பார்க்க முடியாது. ஆனால், அவரிடம் எங்களது அவல நிலைமைகளை அதாவது இன்று மக்கள் மத்தியில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் பாரிய மனித உரிமை மீறல்களை, கொடுமைகளை எடுத்துக் கூற வேண்டுமென்று சென்றோம். அந்த முயற்சிகள் திருப்தி அடையுமளவுக்கு வெற்றியடைந்திருக்கின்றன.

கேள்வி: உங்களுடனான சந்திப்பின்போது இலங்கையில் மனித உரிமைகள் நிலைமைகள் தொடர்பாக ஐ.நா. உயர்ஸ்தானிகர் ஆர்பரின் கருத்து என்னவாக இருந்தது?

பதில்: லூயிஸ் ஆர்பர் என்பவர் தனிப்பட்ட முறையில் கனடாவில் பிரெஞ்சு மொழி பேசும் சிறுபான்மை இனமான கியூபெக் இனத்தைச் சேர்ந்தவர். எனவே, சிறுபான்மை மக்களின் மன அபிலாஷைகள், அவலங்கள் அவருக்குத் தெரியாததொன்றாக இருக்க முடியாது. அந்த அடிப்படையில் பார்க்கும் போது, அவர் இலங்கையில் சிறுபான்மை இனமாக இருக்கும் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் மனித உரிமை மீறல்களையும் அதற்கு மூல காரணமாகவிருக்கும் தேசிய இனப் பிரச்சினை தீராத தன்மையையும் புரிந்துகொண்டிருப்பார் என்று தான் நினைக்கிறேன். அதற்குரிய சமிக்ஞைகளை அவரிடமிருந்து என்னால் அவதானிக்க முடிந்தது. அத்துடன், ஆர்பர் ஒரு அடிப்படை இராஜதந்திரி என்பதால் அவரிடமிருந்து உடனடியாக எதையும் எதிர்பார்க்க முடியாது.

கேள்வி: கடத்தப்பட்டோர், காணாமல்போனோரின் உறவினர்களை லூயிஸ் ஆர்பருடன் சந்திக்க ஏற்பாடு செய்ததால் உங்களுக்கு ஏதேனும் அழுத்தங்கள் அல்லது அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டனவா?

பதில்: லூயிஸ் ஆர்பரை இலங்கைக்கு வரவழைத்த பின்னர் அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட பயணமொன்றையே அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்தது. பாதுகாப்பை காரணமாகக் காட்டி அவரை வன்னிக்குச் செல்ல வேண்டாம் என்றும் கூறிவிட்டார்கள். யாழ்ப்பாணத்திலும்கூட மக்களை சந்திப்பதற்கு ஆர்பருக்கு அனுமதியளிக்கப்படவில்லை. மக்களை சந்திக்கவிடாமல் தடுப்பதில் பாதுகாப்புத் தரப்பினர் மிகவும் சிரத்தையுடன் செயற்பட்டுள்ளனர். எனவேதான் ஆர்பர் மக்களை சந்திக்கக்கூடிய ஒரே இடம் கொழும்பு என்று தெரிந்தே நாம் அவர் வரும் முன்னரே திட்டமிட்டு செயற்பட்டிருந்தோம்.

அரசியல் தலைவர்களுக்கு அப்பால் பாதிக்கப்பட்ட மக்களையும் ஆர்பருடன் சந்திக்க வைக்கவேண்டுமென நாம் கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்திடம் கோரியிருந்தோம். அதற்கு அவர்கள் சம்மதித்திருந்தபோதும் நாட்கள் நெருங்க நெருங்க அதில் சிக்கல்கள் ஏற்பட்டன. மக்கள் சந்திப்பதை தடுப்பதில் அரசு ஆர்வமாக இருந்தது. இதையடுத்து தான் உறுதியளிக்கப்பட்டவாறு மக்களைச் சந்திக்க அனுமதிக்கவில்லை எனில் ஐ.நா. அலுவலகத்துக்கு முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டம் செய்வோமென எச்சரிக்கை விடுக்கவேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டோம். அந்த எச்சரிக்கை நிச்சயமாக பதிலளித்திருக்கிறது. அரசின் அழுத்தம் காரணமாக ஐ.நா. உயர்ஸ்தானிகர் ஒரு சிலவேளை மக்களை சந்திக்காமல் இருந்திருந்தால் நாம் நிச்சயமாக அந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடத்தியிருப்போம்.

இதைத்தவிர, இந்த விடயத்தில் குறிப்பிட்டுச் சொல்வதற்கு நான் தயாராக இல்லை. ஆனால், பல்வேறு அழுத்தங்கள் வந்துகொண்டுதான் இருந்தன. தொடர்ச்சியாக வந்துகொண்டும் தான் இருக்கின்றன என்ற அளவில் இதை முடித்துக் கொள்ளவிரும்புகின்றேன்.

கேள்வி: லூயிஸ் ஆர்பர் சந்திப்பில் கடத்தப்பட்டோர், காணாமல்போனோர் தொடர்பாக எம்மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருந்தது?

பதில்: ஐ.நா. உயர்ஸ்தானிகர் ஆர்பரைச் சந்திக்கச் சென்றபோது, அங்கு வந்திருந்த அனைத்து மக்களையும் சந்திக்க வைப்பது யதார்த்தப்பூர்வமாக சாத்தியமில்லை என்பதால் 40 குடும்பங்களைச் சேர்ந்தவர்களை மட்டும் நேரடியாக சந்தித்துப் பேச வைத்தோம். தேவையான மொழி பெயர்ப்புகளும் உடனுக்குடன் செய்யப்பட்டன. அத்துடன், மக்கள் கண்காணிப்புக் குழுவிற்குக் கிடைத்த முறைப்பாடுகள் தொடர்பான விபரங்களும் ஆர்பருக்கு நேரடியாகவே கையளிக்கப்பட்டது. கூட்டம் முடிந்ததும் லூயிஸ் ஆர்பரை அழைத்துவந்து வெளியில் பதாகைகளுடன் நின்றுகொண்டிருந்த மக்களை காட்டியபோது, அது அவர் மனதில் பாரிய தாக்கமொன்றை ஏற்படுத்தியதை எம்மால் உணர முடிந்தது. உண்மையில் வெளியே நின்று கதறி அழுது தங்களது அவலங்களை எடுத்துக் கூறிய மக்களை சந்தித்த பிறகு உள்ளே சென்ற லூயிஸ் ஆர்பர் சிறிதுநேரம் அமைதியாக அமர்ந்திருந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டதாகவும் கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலக அதிகாரிகள் பின்னர் என்னிடம் தெரிவித்தனர். எனவே, நாம் எதிர்பார்த்த அந்தத் தாக்கத்தை ஏற்படுத்த முடிந்தது.

கேள்வி: லூயிஸ் ஆர்பர் யாழ்.குடாநாட்டுக்கு சென்றபோது, ஏன் மக்கள் கண்காணிப்புக் குழு ஏற்பாட்டாளர் என்ற முறையில் நீங்கள் அங்கு சென்று அங்கு கடத்தப்பட்டவர்கள், காணாமல்போனவர்களின் உறவினர்களுடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்யவில்லை?

பதில்: மக்கள் கண்காணிப்புக் குழு என்பது நாடு முழுவதும் தழுவி, தமிழ் மக்கள், தமிழ் பேசும் முஸ்லிம் மக்கள், அனைத்து மக்களுக்குமாக செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் இரண்டு கருத்துகளுக்கு இடமில்லை. நாம் கொழும்பில் பலமாக செயற்பட்டு வருவதால் எமது பார்வை கொழும்பைச் சார்ந்ததாக இருக்கிறது. இதேநேரம், யாழ்.குடாநாட்டில் அம்மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் நாம் தன்னிச்சையாக சென்று யாழ்ப்பாணத்திலோ அல்லது மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற மாவட்டங்களிலோ செயற்படுவது முறையானதாக இருக்காதென்ற எண்ணம் எனக்கு இருக்கிறது. எனவே, அவர்களுடன் கலந்துபேசி அவர்களின் ஒத்துழைப்புடன் தான் அங்கு செல்ல வேண்டுமென்பதே நியாயமானதாக இருக்கும். அதைவிடுத்து யாழ்ப்பாணத்துக்கு செல்லக்கூடாது என்பது இதன் அர்த்தமாகிவிடாது.

கேள்வி: மக்கள் கண்காணிப்புக் குழுவின் பணிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒத்துழைப்புகள் கிடைப்பதில்லையென்ற குற்றச்சாட்டொன்று இருப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றி உங்களது கருத்தென்ன?

பதில்: அப்படி எதுவுமில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சுரேஷ் பிரேமச்சந்திரன் மக்கள் கண்காணிப்புக் குழுவில் அந்தக் கட்சியின் அதிகாரபூர்வ பிரதிநிதியாக இருக்கிறார். அவர் தன்னால் இயன்ற ஒத்துழைப்புகளை எமக்கு வழங்கி வருகிறார் என்பது எமக்கு நன்றாகத் தெரியும். அதற்கும் மேலாக ஒத்துழைப்புகளை வழங்குவதை பொறுத்த வரையில் அவர்களுக்குப் பாரிய பாதுகாப்புப் பிரச்சினைகள் இருப்பதும் நான் அறிந்த விடயம். ஏற்கனவே, அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த ஜோசப் பரராஜசிங்கம், நடராஜா ரவிராஜ் இருவரும் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேருவும் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். இவ்வாறான பல சிக்கல்கள் மிகுந்த சூழ்நிலைக்கு மத்தியிலும் அவர்கள் தங்களால் இயன்ற ஒத்துழைப்புகளை எமக்கு வழங்கி வருகின்றனர்.

-தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.