Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்க பாகிஸ்தான் செல்கிறார் (கோப்புப்படம்)

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்க பாகிஸ்தான் செல்கிறார் (கோப்புப்படம்) கட்டுரை தகவல்
  • எழுதியவர், அபய் குமார் சிங்
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஒருவர் பாகிஸ்தானுக்கு செல்கிறார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) மாநாட்டில் பங்கேற்பதற்காக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாகிஸ்தான் செல்கிறார்.

அக்டோபர் 4ஆம் தேதி, வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இதை உறுதிப்படுத்தினார். அக்டோபர் 15, 16ஆம் தேதிகளில் இஸ்லாமாபாத்தில் நடைபெறும் எஸ்சிஓ கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் இந்திய தூதுக்குழுவை வழிநடத்துவார் என்று அவர் கூறினார்.

முன்னதாக டிசம்பர் 2015இல், அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் "ஆசியாவின் இதயம்" (heart of asia) மாநாட்டில் பங்கேற்பதற்காக இஸ்லாமாபாத் சென்றிருந்தார்.

 

சில நாட்களுக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோதி "ஆச்சரியப் பயணமாக" லாகூர் சென்றார்.

இப்போது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பாகிஸ்தானுக்கு செல்வதன் அர்த்தம் என்ன?

வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வாலிடம், வெளியுறவுத் துறை அமைச்சர் பாகிஸ்தானுக்கு செல்வது இந்தியா-பாகிஸ்தான் உறவுகளை மேம்படுத்தும் முயற்சியாகக் கருதப்படுமா என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த ஜெய்ஸ்வால், “இந்தப் பயணம் எஸ்சிஓ மாநாட்டுக்காகத்தான், அதற்கு மேல் யோசிக்க வேண்டாம்” என்றார்.

பேராசிரியர் ஹர்ஷ் வி பந்த், புது டெல்லியின் அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷனின் ஆய்வுகள் மற்றும் வெளியுறவுக் கொள்கைத் துறையின் துணைத் தலைவர். அவர், இந்தப் பயணம் இந்தியா-பாகிஸ்தான் உறவுகளுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல என்று கூறுகிறார்.

அதேவேளையில், எஸ்சிஓ மாநாட்டின் பார்வையில் இது முக்கியமானது என்றும் அவர் நம்புகிறார்.

 
பத்தாண்டுகளில் முதன்முறையாக பாகிஸ்தான் செல்லும் இந்திய வெளியுறவு அமைச்சர் - உறவு மேம்படுமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

பிபிசி ஹிந்தியிடம் பேசிய பேராசிரியர் பந்த், "இந்தியாவிற்கு தற்போது அதற்கான ஊக்கம் இல்லை என்று நான் நம்புகிறேன். பாகிஸ்தானின் நிலைமையும் முழுமையாக மேம்படவில்லை. அங்குள்ள அதிகார மையம் குறித்து தெளிவு இல்லை. எனவே, பாகிஸ்தானின் தற்போதைய நிர்வாகத்துடன் இந்தியா நேரடியாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பெரிய காரணம் எதுவும் இல்லை. எனவே, இந்தப் பயணம் இருதரப்பு உறவுகளில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நான் நினைக்கவில்லை” என்றார்.

இருப்பினும், இந்தியா-பாகிஸ்தான் பிரச்னையால் எஸ்சிஓ மாநாட்டில் எந்தவிதமான இடையூறு ஏற்படுவதையும் தனது “நட்பு நாடுகள்” பார்ப்பதை இந்தியா விரும்பவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

பேராசிரியர் பந்த் கூறுகையில், "இந்தியா தனது வெளியுறவுக் கொள்கையில் எஸ்சிஓ மாநாட்டின் முக்கியத்துவத்தைக் குறைப்பதாக மற்ற எஸ்சிஓ உறுப்பு நாடுகள் உணர்வதை இந்தியா விரும்பவில்லை" என்றார்.

பிரதமரே பாகிஸ்தானுக்கு சென்றிருந்தால் அது வேறு செய்தியைச் சொல்லியிருக்கும் எனக் குறிப்பிட்ட அவர், பிரதமருக்கு பதிலாக வெளியுறவு அமைச்சர் செல்கிறார், ஆகவே "உயர்மட்டத் தலைமை அளவில் பாகிஸ்தானுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு இந்தியா தற்போது தயாராக இல்லை என்பது தெளிவாகிறது," என்றார்.

"இந்தியா எந்தவிதமான பேச்சுவார்த்தைகளையும் விரும்பவில்லை என்பதற்கு இது ஒரு தெளிவான செய்தி. ஆனால், வெளியுறவு அமைச்சர் பாகிஸ்தானுக்கு செல்வது எஸ்சிஓ போன்ற பலதரப்பு அமைப்புகளில் இந்தியா தனது பொறுப்புகளை நிறைவேற்றத் தயாராக உள்ளதைக் காட்டுகிறது” என்றார்.

வாஷிங்டன் டிசியில் உள்ள வில்சன் சென்டர் எனும் சிந்தனை மையத்தில் உள்ள தெற்காசியா நிறுவனத்தின் இயக்குநர் மைக்கேல் குகல்மேன், இருதரப்பு உறவுகளைவிட இந்தப் பயணம் எஸ்சிஓ கூட்டத்திற்கானது என்று நம்புகிறார்.

மைக்கேல் குகல்மேன் தனது எக்ஸ் பக்கத்தில், இந்தப் பயணம், இந்தியா-பாகிஸ்தான் உறவுகளை முன்னேற்றுவதற்கான விருப்பத்தைவிட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் (SCO) இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதிபலிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், "ஜெய்சங்கரின் பாகிஸ்தான் பயணம் இருதரப்பு ராஜ்ஜீய உறவைவிட பலதரப்பு ராஜ்ஜீய உறவை அதிகம் வெளிப்படுத்துகிறது என்றாலும், இந்தியா-பாகிஸ்தான் உறவுகளுக்கான இப்பயணத்தின் முக்கியத்துவத்தையும் புறக்கணிக்கக்கூடாது" எனத் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் ஒருவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாகிஸ்தான் செல்வது முக்கியம் என்கிறார் அவர். 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அமைச்சர் ஒருவர் பாகிஸ்தானுக்கு செல்வது இதுவே முதல்முறை என்று அவர் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பிரதமர் மோதி (கோப்புப்படம்)

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பிரதமர் மோதி (கோப்புப்படம்)

கடந்த 2016இல் உள்துறை அமைச்சராக இருந்த ராஜ்நாத் சிங் சார்க் கூட்டத்திற்காக பாகிஸ்தானுக்கு சென்றிருந்தார்.

பல நாடுகளுக்கு இந்திய தூதராக இருந்த முன்னாள் தூதர் ராஜீவ் டோக்ரா, ராஜ்நாத் சிங்கின் அந்தப் பயணத்தை நினைவுகூர்ந்தார்.

பிபிசி இந்தி செய்தியாளர் மோகன்லால் ஷர்மாவிடம் பேசிய அவர், வெளியுறவு அமைச்சரின் பாகிஸ்தான் பயணம் இந்தியாவின் தரப்பில் இருந்து பாராட்டுக்குரிய முயற்சி என்றும், ஆனால் பாகிஸ்தானின் நடத்தை குறித்து எதுவும் கூற முடியாது என்றும் கூறினார்.

கடந்த 2016இல் ராஜ்நாத் சிங் பாகிஸ்தான் சென்றதை நினைவுகூர்ந்த அவர், அப்போது பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சௌத்ரி நிசார் அலி கான், ராஜ்நாத்திடம் மிகவும் மோசமாக நடந்து கொண்டதாக கூறுகிறார்.

பாகிஸ்தானின் நடத்தைக்கு உதாரணமாக, கடந்த ஆண்டு இந்தியாவுக்கு வந்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ குறித்தும் ராஜீவ் டோக்ரா பேசினார்.

“பிலாவல் பூட்டோ வந்தபோது அவர் கூறிய கருத்துகள் இருதரப்பு உறவுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு ஏற்றதாக இல்லை. அதனால் பேச்சுவார்த்தை அந்த நிலையிலேயே முடிந்தது” என்கிறார்.

மற்ற நாடுகள் எப்படி எடுத்துக்கொள்ளும்?

தற்போது, உலக மக்கள்தொகையில் சுமார் 40 சதவீதம் பேர் எஸ்சிஓ-வில் அங்கம் பெற்ற நாடுகளில் வாழ்கின்றனர். உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்த நாடுகள் 20 சதவீதம் பங்கு வகிக்கின்றன. உலகின் 20 சதவீத எண்ணெய் இருப்பு இந்த நாடுகளில் உள்ளது.

இதற்கிடையே, எஸ்சிஓ நாடுகளுக்கு இடையே நிலவும் கொந்தளிப்பை உலக நாடுகள் கண்காணித்து வருகின்றன.

இந்நிலையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு பாகிஸ்தான் செல்லும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரை உலகின் பிற நாடுகள் எப்படிப் பார்க்கும்?

 
கடந்த 2017-ல் எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்க வந்த பல நாடுகளின் தலைவர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கடந்த 2017இல் எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்க வந்த பல நாடுகளின் தலைவர்கள்

இந்தக் கேள்விக்கு பதிலளித்த பேராசிரியர் பந்த், சீனா அல்லது பாகிஸ்தானுடனான அதன் உறவுகள் எதுவாக இருந்தாலும், எஸ்சிஓ கூட்டமைப்பில் தனது பங்கை சாதகமாக முன்வைப்பதே இந்தியாவின் நோக்கம் என்று கூறுகிறார்.

"இந்தப் பயணம் இந்தியாவுக்கு முக்கியமானது. ஏனெனில் எஸ்சிஓ கூட்டமைப்பில் முழுமையாக ஈடுபட்டு, நேர்மறையான செயல் திட்டத்துடன் முன்னேறும் இந்தியாவின் பங்கைத் தெளிவுபடுத்துகிறது."

மேலும், தன்னுடைய நலன்களுக்கு முன்னுரிமை அளித்து, பாகிஸ்தானுடனான உறவை இந்தியா தனது சொந்த நிபந்தனைகளில் பார்க்கும் என, உலக நாடுகளுக்கு இந்தியா தெளிவுபடுத்தி உள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

பேராசிரியர் பந்த் பிபிசியிடம் பேசியபோது, "இந்தியாவையும் பாகிஸ்தானையும் ஒரே தராசில் எடை போடுவதை உலகம் இப்போது நிறுத்திவிட்டதாக நான் நினைக்கிறேன். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பாகிஸ்தான் செல்லும்போது, இந்தியா இப்போது தன்னம்பிக்கை கொண்ட நாடாக முன்னேறி வருகிறது என்பதை உலகமே பார்க்கும். இந்தியா பொருளாதார ரீதியாக வளர்ந்து வரும் நிலையில் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி வருகிறது. காஷ்மீர் பிரச்னையும் எப்படியோ ஓரங்கட்டப்பட்டது” என்றார்.

 

'அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை' கொள்கை

எஸ். ஜெய்சங்கர்

பட மூலாதாரம்,X/DR. S. JAISHANKAR

படக்குறிப்பு,எஸ். ஜெய்சங்கர்

முன்னாள் தூதரக அதிகாரி கே.பி. ஃபேபியன், இந்தப் பயணத்தை "அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை” கொள்கையின் அடுத்த கட்டமாகப் பார்க்கிறார்.

ஏஎன்ஐ செய்தி முகமையிடம் பேசிய அவர், "அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை எனும் கொள்கை மீண்டும் புத்துயிர் பெறுகிறது. வெளியுறவு துறை அமைச்சர் மாலத்தீவில் மூன்று நாட்கள் தங்கியது நினைவிருக்கும். புதிய இலங்கை அதிபரை சந்தித்த முதல் வெளியுறவு அமைச்சர் அவர். இந்த நாடுகளுக்கு மத்திய அமைச்சர் செல்வது நல்லது" என்றார்.

இருப்பினும், பேராசிரியர் ஹர்ஷ் வி. பந்த் இந்தக் கொள்கை 'புத்துயிர் பெறுகிறது' என்பதை முழுமையாக ஒப்புக்கொண்டதாகத் தெரியவில்லை.

“இந்தியா எப்போதுமே 'அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை' எனும் கொள்கையில் இருந்துள்ளது. அண்டை நாடுகளில் இருந்து எப்படி விலகியிருக்க முடியும்? அண்டை நாடுகளுக்கான தனது பொறுப்புகளில் இருந்து இந்தியா ஒருபோதும் மாறவில்லை. ஆனால் பாகிஸ்தான் ஒருபோதும் இந்தக் கொள்கையின் ஒரு பகுதியாக இருந்ததில்லை” என்றார்.

ஜெய்சங்கர் எப்படி நடந்துகொள்வார்?

கடந்த ஆண்டு மே மாதம் பாகிஸ்தானின் அப்போதைய வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ ஸர்தாரி எஸ்சிஓ கூட்டத்தில் பங்கேற்க இந்தியா வந்திருந்தார்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தொடர்ந்து விரிசல் ஏற்பட்டிருந்த நிலையில், பிலாவல் பூட்டோவின் வருகையால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேம்படும் என்று நம்பப்பட்டது.

ஆனால், இந்த சந்திப்பு முடிந்த ஒரு நாளிலேயே இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் கூர்மையான கருத்துகளை வெளியிட்டனர்.

இப்போது வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாகிஸ்தானுக்கு செல்லும்போது, அவருடைய அணுகுமுறை என்னவாக இருக்க முடியும்?

 
எஸ்சிஓ மாநாட்டில் கலந்துகொள்ள கடந்தாண்டு பிலாவல் பூட்டோ இந்தியா வந்தார்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, எஸ்சிஓ மாநாட்டில் கலந்துகொள்ள கடந்தாண்டு பிலாவல் பூட்டோ இந்தியா வந்தார்

இதுகுறித்து பேராசிரியர் பந்த் கூறுகையில், "எஸ்சிஓ மாநாட்டுக்காக அவர் பாகிஸ்தானுக்கு செல்கிறார், இந்தியா-பாகிஸ்தான் உறவுகள் குறித்து விவாதிக்க அல்ல. அம்மாநாட்டில் இந்தியா ஆக்கப்பூர்வமான பங்கை வகிக்க வேண்டும் என்பதை ஜெய்சங்கர் வலியுறுத்துவார். எனவே, பாகிஸ்தானுடனான இருதரப்பு வேறுபாடுகளை அவர் முன்னிலைப்படுத்துவார் என நான் நினைக்கவில்லை” என்றார்.

மேற்கொண்டு பேசிய அவர், “மேற்கத்திய நாடுகளுடனான பிரச்னைகள் பேசப்படும்போது எஸ்.ஜெய்சங்கரின் ஆக்ரோஷமான அணுகுமுறை அடிக்கடி வெளிப்படுகிறது. ஆனால் நீங்கள் அண்டை நாடுகளைப் பற்றிப் பேசினால் (பாகிஸ்தான் தவிர), இந்தியாவின் ராஜதந்திரம் மிகவும் நுட்பமானது.

இதற்கு மாலத்தீவு மிகப்பெரிய உதாரணம். பிரதமர் மோதியை சமூக ஊடகங்களில் விமர்சித்து, மாலத்தீவில் கொந்தளிப்பு ஏற்பட்ட நேரத்தில், அப்போதும் இந்திய வெளியுறவு அமைச்சகமோ, தலைவர்களோ எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. இதன் விளைவாக சில மாதங்களுக்குப் பிறகு இந்தியா-மாலத்தீவு உறவுகள் இயல்பு நிலைக்கு வந்தன,” என்று கூறினார்.

அதேநேரத்தில், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நல்லுறவை மேம்படுத்துவார் என்ற நம்பிக்கையில் ராஜீவ் டோக்ரா உள்ளார். அவர் கூறுகையில், ”அனுபவம் வாய்ந்த ராஜ்ஜீய அதிகாரி மற்றும் அனுபவம் வாய்ந்த தலைவரான வெளியுறவுத்துறை அமைச்சர் பாகிஸ்தானுக்கு செல்லும்போது, அவரது அணுகுமுறை வித்தியாசமாக இருக்கும். இருநாட்டு உறவுக்கு இடையிலான சிக்கல் உடையும். எனினும் இந்தப் பயணம் எஸ்சி ஓ மாநாட்டுக்கானது என்பதை மனதில் கொள்ள வேண்டும்” என்றார்.

இந்தியா, பாகிஸ்தானுக்கு எஸ்சிஓ கூட்டமைப்பு எவ்வளவு முக்கியமானது?

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு முறைப்படி 2001இல் சீனா, ரஷ்யா மற்றும் சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருந்த கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நான்கு மத்திய ஆசிய நாடுகளால் நிறுவப்பட்டது.

 
கடந்த ஜூன் 28, 2019-ல் ஜப்பானின் ஒசாகாவில் நடைபெற்ற எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்ற ரஷ்ய அதிபர் புதின், இந்திய பிரதமர் மோதி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கடந்த ஜூன் 28, 2019-ல் ஜப்பானின் ஒசாகாவில் நடைபெற்ற எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்ற ரஷ்ய அதிபர் புதின், இந்திய பிரதமர் மோதி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங்

எனினும், முன்னதாக 1996ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஷாங்காயில் நடைபெற்ற கூட்டத்தில், சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் பரஸ்பர இன மற்றும் மத பதற்றங்களை சமாளிக்க தங்களுக்குள் ஒத்துழைக்க ஒப்புக்கொண்டன. பின்னர் அது ஷாங்காய்-ஃபைவ் (Shanghai-Five) என்று அறியப்பட்டது.

இந்தியாவும் பாகிஸ்தானும் இந்த அமைப்பில் 2017ஆம் ஆண்டில் முழு உறுப்பினர்களாக இணைந்தன. இரான் 2023ஆம் ஆண்டில் அதன் உறுப்பினரானது. இந்த வகையில் மொத்தம் 9 நாடுகள் எஸ்சிஓவில் உறுப்பினர்களாக உள்ளன.

ஆப்கானிஸ்தான், பெலாரூஸ், மங்கோலியா ஆகியவை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் பார்வையாளர் அந்தஸ்தை பெற்றுள்ளன.

இந்த அமைப்பை வழிநடத்தும் ரஷ்யா, சீனா ஆகிய இரு நாடுகளுடனும் பாகிஸ்தான் நல்லுறவைக் கொண்டுள்ளது. அதுதவிர, மத்திய ஆசிய நாடுகள் என்பதால் பாகிஸ்தானுக்கு முக்கியமானது. மத்திய ஆசியா நிலவியல் ரீதியாக முக்கியமான பகுதி என்பதால், அங்கு வர்த்தகம், இணைப்பு மற்றும் ஆற்றலை மேம்படுத்த பாகிஸ்தான் நினைக்கிறது.

அதேநேரத்தில், இது இந்தியாவிற்கு ஒரு பெரிய மூலோபாய தளமாகும். இது அண்டை நாடுகள் மற்றும் மத்திய ஆசியாவுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது.

பேராசிரியர் பந்த் கூறுகையில், "மத்திய ஆசியாவுடனான இந்தியாவின் இணைப்பு குறைவாக இருப்பதால், எஸ்சிஓ அதன் பங்கைத் தக்க வைத்துக் கொள்வது முக்கியம்" என்றார்.

"எனவே, இந்தப் பயணத்தை இருதரப்பு கண்ணோட்டத்தில் பார்க்காமல், பலதரப்பு தளத்தில் இந்தியாவின் ஈடுபாடு மற்றும் ராஜதந்திரமாகப் பார்க்க வேண்டும்."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.