Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

"மதமும் மரணமும்" [ சைவ மதம் / இந்து மதம்]


உலகின் மிக பழமையான மதமான, சைவ / இந்து மதத்தின் படி, மரணம் என்பது இயற்கையானது. முற் பிறப்பிலே செய்த பாவ, புண்ணியத்தின் படி அல்லது அதன் கர்மாவின் படி, தொடர்ந்து உயிர் வாழ பல பிறப்புக்களை அல்லது மறுபிறப்புகளை ஒரு ஆன்மா [soul] எடுக்கும். ஒரு மனிதனை அவனுக்குள் இருந்து இயங்க வைப்பது ஆன்மா என்கிற இந்த இறைசக்தி (அல்லது சக்தி / ஆற்றல்) ஆகும். சக்தி கொள்கை என்ன சொல்கிறது தெரியுமா ? சக்தியாகிய ஆற்றல் என்பது அழிவற்றது. அது வேறு ஒரு ஆற்றலாக உருமாறுமே அன்றி அழிவு என்பது ஆற்றலுக்கு என்றுமே கிடையாது என்கிறது ["Energy can neither be created nor destroyed"].


உடலினின்று செயல் பட முடியாத ஒரு நிலைக்கு நோயினால் உடல் மிகவும் தளர்ந்து விடும் போது அல்லது ஏதாவது காரணத்தால் உடல் முறிந்து விடும் போது அல்லது விபத்தில் சிக்கிக் கொள்ளும் போது அல்லது குடித்துவிட்டு கல்லீரலை அழித்துக் கொள்ளும் போது அல்லது காதல் தோல்வியால் இதயம் முறிந்து போகும் போது அல்லது மிகவும் வயதாகி விட்டதால் உடல் தளர்ந்து விடும் போது, உயிரை தக்கவைத்துக் கொள்ள, இந்த உடலால் முடியாது போனால், ஆன்மா பிரிந்து சென்று, வேறு ஒரு தகுதியான உடலைத் தேர்ந்தெடுத்து, மீண்டும் வாழ்க்கைச் சுழற்சியை ஆரம்பிக்கிறது. இப்படி பல சுழற்சியின் பின், இறுதியில் வீடுபேறு என்னும் மோட்சத்தை, அதாவது மறுபிறவி இல்லாத நிலையினை, அடைகிறது என்கிறது இந்து சமயம். 


இன்றைய இந்து சமயத்தின் கிளை நெறிகளில் ஒன்றாக உள்வாங்கப் பட்ட சைவம், எல்லா மதமும் சம்மதம் [எம்மதமும் சம்மதம்!] என்கிறது!. நீர், மழைத்துளியாக விழுந்து, வெள்ளமாக பெருகி, நதியில் கலந்து, கடலில் சங்கமித்து, ஆவியாகி மீண்டும் மழைத்துளியாக நீர் பூமியில் விழுகிறது. ஆத்மாவின் பிறப்பும் அப்படித்தான். நன்றாக படிக்காத பிள்ளையை ஒரே வகுப்பில் முழு நிலை அல்லது நிறைவு வரும் வரை உட்கார வைக்கிறார்கள். அப்படியே ஆத்மாவும் முழு நிலையை அல்லது பரிபூரண நிலையை அடையும் வரை மீண்டும் மீண்டும் பிறப்பு எடுக்கிறது. நமது சைவ நூல்கள் (சாஸ்திரங்கள்) ஆத்மா பிறக்கவும் இல்லை, இறக்கவும் இல்லை. எப்பொழுதும் இருந்து கொண்டேயிருக்கிறது என்று சொல்கிறது. அதாவது பிறப்பு, இறப்பு என்ற சக்கரம் சுழன்று கொண்டேயிருக்கிறது. அது ஒரு ஜீவன் கடவுளிடம் ஐக்கியமாகும் வரை நடைபெறுகிறது. இந்த உண்மையை மாணிக்க வாசகர் சிவபுராணத்தில் அழகாக பாடுகிறார்.


"புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்"


இங்கு, மாணிக்கவாசகர் தாம் இயற்றிய சிவபுராணத்தில் புல்லாய், பூடாய், புழுவாய், மரமாய், மிருகமாய், பறவையாய், பாம்பாய், கல்லாய், மனிதராய், பேயாய், கணங்களாய், அசுரராய், முனி வராய் , தேவராய் இவ்வுலகில் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் என்று கூறுகின்றார். ஆகவே மரணம் என்பது ஒரு பெருந்துன்பம் [great calamity] அல்ல. ஒரு முடிவும் அல்ல. உதாரணமாக, மகாபாரதத்தில், மிகவும் கலங்கி, தவிக்கும் அருச்சுனனை பார்த்து கண்ணன் கூறுகிறான்: ' ஓ ! அர்ஜுனா, உன் துயரம் நியாயம் அற்றது. போர்க்களத்தில் வெற்றி, தோல்வி சகஜம். மரணம் என்பது ஒரு நியதி ... உடல் தான் மரணமடையும், ஆன்மா அழியாதது.' என்கிறான். மேலும் இல்வாழ்க்கையில், வினைப் பயன்களுக்கு ஏற்ப மக்கள் வாழ்ந்து மடிகிறார்கள். இளமை, மூப்பு போல, இறப்பும் நிச்சயமானது. மரணம் என்பது உடலை துறப்பதே ... ஆன்மா என்றும் இருப்பது! மரணத்திற்குப் பின் ஆன்மா புதிய உடலைப் பெறுகிறது என்கிறான் கண்ணன். 

அதாவது மரணத்தால் தனது செல்வழியை சரிபடுத்தி மீண்டும் இவ்வுலகில் திரும்பி வந்து தனது பயணத்தை தொடர்கிறது எனலாம்.
அப்பர் என அழைக்கப்பட்ட கி.பி ஏழாம் நூற்றாண்டை சேர்ந்த திருநாவுக்கரசு நாயனார் கூறுகிறார் "நாங்கள் நல்ல மனிட பிறவியை எடுத்துள்ளோம். அதை நாம் மதிப்போம்" என்று ."பிறவி பாவமானது அல்ல". "இது கடவுளால் தந்த கொடை." , "இந்த அருமையான மானிட பிறப்பை, நாம் சரியாக பயன்படுத்த வேண்டும். அதற்கு இந்த பிறவி தந்ததிற்கான [எடுத்ததிற்கான], அவரின் நோக்கத்தை நாம் அறியவேண்டும்" என்று மேலும் கூறுகிறார்.


இடைக்காலத்தில் ஏற்பட்ட சமண சாக்கிய சமயங்கள் மக்களிடையே மறுபிறவி, கர்மாக் கொள்கைகளைப் பரப்பின. உதாரணமாக, மாதவி தன் மகள் மணிமேகலையைப் பத்தினித்தெய்வம் கண்ணகியின் மகள் என்று தன் தோழி வயந்தமாலைக்குக் கூறி, அவளை அறவண அடிகளிடம் அடைக்கலப்படுத்துகிறாள். அப்போது பிறந்தவர்க்குப் பெருந்துன்பம், பிறவாதவர்க்குப் பேரின்பம், பற்றால் பிறவி வரும் என்று அடிகள், தனது அருளுரையை.


"பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்
பிறவார் உறுவது பெரும்பேர் இன்பம்
பற்றின் வருவது முன்னது பின்னது
அற்றோர் உறுவது அறிகென்று அருளி"
(மணிமேகலை, ஊர் அலர் உரைத்த காதை)


என வழங்குகிறார். மேலும் உதயகுமரன் இறந்ததற்காகப் புலம்பும் மணிமேகலை, உலகில் பிறந்தோர்கள் இறத்தலும் இறந்தோர்கள் பிறத்தலும், உறங்குவதும் உறங்கி விழிப்பதும் போல்வதாக உள்ளதால், நல்ல அறங்களைச் செய்கின்றவர்கள் இன்ப மெய்தற்குரிய மேலுலகங்களை யெய்துதலும், தீவினைகளை இயற்றுகின்றவர் பொறுத்தற்குரிய துன்பத்தைச் செய்யும் நிரயத்தை [நரகத்தை] அடைதலும், உண்மை என்று உணர்தலினால் அறிஞர்கள் அவற்றை நீக்கினர் என


"பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும்
உறங்கலும் விழித்தலும் போன்ற துண்மையின்
நல்லறஞ் செய்வோர் நல்லுல கடைதலும்
அல்லறஞ் செய்வோர் அருநர கடைதலும்
உண்டென உணர்தலின் உரவோர் களைந்தனர்"
(மணிமேகலை, ஆதிரை பிச்சையிட்ட காதை)


என்று வாழ்க்கைச் சக்கரத்தைப் பற்றி இங்கு எடுத்துரைக்கப் பட்டுள்ளது. இந்த கருத்தை முதன்மையாக வலியுறுத்தி அவர்கள் பரப்புரை [பிரசாரம்] செய்தனர். இச்சமயங்களைத் தழுவியவர்கள் மட்டுமில்லாது, எல்லோரையுமே பொதுவாக இந்தக் கொள்கைகள் கவர்ந்தன. 


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]


இரண்டாம் பாகம் [சைவ மதம் /இந்து மதம்] தொடரும் 

337267606_808235090648483_8582823974546295960_n.jpg?_nc_cat=100&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=Dy62aTXXyWkQ7kNvgFEajnh&_nc_ht=scontent-lhr6-2.xx&_nc_gid=A6c4oz586b95ZFumn75vV4K&oh=00_AYAz1-BWcjs0nABCw1-OSCNBLjKQoSMxfoMAvjh5a07rbg&oe=67086F89337253103_775955430818936_7549239219017177605_n.jpg?_nc_cat=104&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=cVm1AKOFCjgQ7kNvgHfqsQb&_nc_ht=scontent-lhr6-2.xx&_nc_gid=A6c4oz586b95ZFumn75vV4K&oh=00_AYDAIoCNjsEzqev5AxZLK6WMqrcCV4Zjmh8HhtCB9drPVQ&oe=6708A13C  337264973_1227951907829366_6180357070161153157_n.jpg?_nc_cat=104&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=CZLWSFJupwMQ7kNvgHfWBwF&_nc_ht=scontent-lhr6-2.xx&_nc_gid=A6c4oz586b95ZFumn75vV4K&oh=00_AYDpW0h2hfWy7eSKLF1GfGLlBUnm7AaC45R99Me-oEnPfg&oe=67087694

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
"மதமும் மரணமும்" [ சைவ மதம் / இந்து மதம்]இரண்டாம் பாகம்
 
 
அப்பர், ஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய தேவாரம் பாடிய மூவருடன் மற்றும் மணிவாசகர் பாடல்களில் வாழ்க்கைச் சக்கரத்தின் அழுத்தமான தாக்கத்தைக் காணலாம். இந்த நால்வரும் உடலை இழுக்கென்று கருதி, அதிலிருந்து விடுபட்டுப் பிறவா நிலை அடைவது தான் வாழ்க்கையின் குறிக்கோள் என்று கருதினர். உதாரணமாக, சுந்தரர் தனது தேவாரத்தில், மதத்தையுடைய யானையின் மீது ஏறி சிற்றரசர்கள் புடைசூழ உலாவருகின்ற பேரரசர்களே, நீவிர் இறந்தால், அப்போது உம்மோடு துணையாய் வருவார் இவர்களுள் ஒருவரும் இலர்; இறைவன் ஒருவனே அத்தகையனாய் உளன் ; இதனை உங்கள் மனத்தில் நன்கு பதிய வைத்துக் கொள்ளுங்கள் என
 
"மத்த யானை யேறி மன்னர் சூழவரு வீர்காள், செத்த போதில் ஆரும் இல்லை சிந்தையுள் வைம்மின்கள்"
 
என்று பாடுகிறார். மேலும் இன்னும் ஒரு பாடலில், மனிதனாக மட்டும் அல்ல, இவ்வுலகில் ஓர் உயிராக தோன்றி விட்டாலே, மரணம் என்பது நிச்சயம் என்று
 
"தோற்றம் உண்டேல் மரணம் உண்டு துயரமனை வாழ்க்கை, மாற்றம் உண்டேல் வஞ்சம் உண்டு நெஞ்சமனத் தீரே"
 
என்று பாடுகிறார். ஆனால், “சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய முடியும்” என்பது ஒரு பல மொழி, அது போல உடம்பு இல்லாமல் எந்த செயலையும் எம்மால் செய்ய முடியாது என்பது உண்மை, எனவே இன்றய காலகட்டத்தில் உடலினைப் பேணி பாதுகாப்பது என்பது அவசியமானது மட்டுமல்ல ஆரோக்கியமானதும் கூட. எனவே, திருமூலர் இதை வலியுறுத்தி,
 
“உடம்பார் அழியில் உயிரார் அழிவர், திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்,உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே,உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த்தேனே.”
 
என்கிறார். அதாவது, உடல் அழிந்தால் உயிர் அழிவதுடன் அறிவும் வளராது எனவே உடலை வளர்க்கும் முறையை அறிந்து, உடலை வளர்த்து உயிரையும் வளர்த்தேன் என்கிறார். மேலும்
 
“உடம்பினை முன்னம் இழுக்கென்றிருந்தேன், உடம்பினுக் குள்ளேயுறுபொருள் கண்டேன், உடம்புளே உத்தமன் கோயில்கொண்டான் என்று உடம்பினை யானிருந் தோம்புகின்றேனே.”
 
என்கிறார். அதாவது உடலினை இழுக்கென்றிருந்தேன், பிறகு அதனில் கடவுள் கோயில் கொண்டுள்ளார் என்பதைப் புரிந்து கொண்டு உடலை பாதுகாத்தேன் என்கிறார் சைவ சித்தாந்தம் தந்த திருமூலர். இந்த உலக வாழ்வு எந்த ஒரு நோக்கமும் இன்றி கடவுளால் ஏற்படுத்தி இருக்க முடியாது. எமக்கு இங்கு ஏற்படும் நல்லவையும் தீயவையும் காரணம் இன்றி நடைபெறாது. இந்த துயர்மிகுந்த / பரிதாபத்துக்குரிய உலகில் கடவுள் எம்மை காரணம் இன்றி வைத்திருக்கிறார் என்றால், நாம் எப்படி அவரை அருளிரக்க முடையவனே / மன்னிக்குமியல் புடையவனே ["Merciful"] என அழைப்போம் எனவும் சைவம் வினாவுகிறது.
 
மனிதன் இறந்த பிறகு எல்லோரும் கூடி அழுதுவிட்டுப் பின்பு அவனுக்குப் பிணமென்று பெயர்வைத்து, அதை எடுத்துப்போய் சுடுகாட்டிலே வைத்து எரித்துவிட்டு ஆற்றிலோ அல்லது குளத்திலோ மூழ்கி எழுந்து, அவனைப்பற்றிய நினைவை ஒழித்துவிடுகிறார்களாம் - திருமூலர் தமது திருமந்திரத்தில் இப்படி கூறுகிறார். இன்று கூட ஒருவர் இறந்துவிட்டால் அன்னாரின் பூதவுடல் மயானத்துக்கு எடுத்துச் சென்று தகனம் செய்யப்படும் என்று தான் சொல்கிறோம். அவரது பெயரைச் சொல்வதில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
 
"ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டு
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப் பொழிந்தாரே!"
[திருமந்திரம்]
 
இன்னும் சற்று ஆராய்ந்த போது இந்த உலகத்தில் நல்லவராக வாழ்ந்தவரும் ஒரு நாள் மரணிக்கிறார். கெட்டவரும் மரணிக்கிறார். இறந்த பின்பு என்ன நடக்கிறது என்ற இந்த கேள்விக்கும் பதில் புரியாத புதிராகவே இருக்கிறது. ஆகவே, பிறப்பு, இறப்பு - இந்த இரு விடயங்களும் எப்படி இந்து மதத்தின் பகவத் கீதையில் சொல்லியிருக்கிறது என்று பார்ப்போம்.
 
"தேஹினோ' ஸ்மின் யதா தேஹே ,கௌமாரம் யௌவனம் ஜரா,ததா தேஹான்தரப் ப்ராப்திர்,தீரஸ் தத்ர ந முஹ்யதி"
(பகவத் கீதை 2.13 ),
 
இதன் கருத்து
 
"உடல்பெற்ற ஆத்மா, சிறுவயதிலிருந்து இளமைக்கும், இளமையிலிருந்து முதுமைக்கும் மாறுவது போலவே மரணத்தின் போது வேறு உடலுக்கு மாறுகின்றது. தன்னை உணர்ந்த ஆத்மா, இது போன்ற மாற்றத்தால் திகைப்பதில்லை"
 
என்கிறது. மேலும் கண்ணன்,“என் மனசுக்கு பிடிச்ச அர்ஜுனா !" என்று அழைத்து ,கவலையோட அழுதுக்கிட்டு உட்கார்ந்த அர்ஜுனனைப் பார்த்து ,
"ந ஜாயதே ம்ரியதே வா கதாசிந்,நாயம் பூத்வா பவிதா வா ந பூய:।,அஜோ நித்ய: ஷாஷ்வதோ அயம் புராணோ,ந ஹந்யதே ஹந்யமாநே ஷரீரே॥ 2.20 ॥,"
 
அதாவது,
 
ஆத்மாவுக்கு பிறப்பு இறப்பு கிடையாது ! ஒரு சமயம் இருந்து அப்புறம் அழிஞ்சு போவது இல்லை இந்த ஆத்மா! உடல் அழியும் போது ஆத்மா அழிவதில்லை !
 
என்று கூறுகிறான். சொர்க்கம் மற்றும் நரகம் பற்றி எல்லா மதங்களிலும் கூறப்படுகிறது. அது போல, சைவ சமயமும் சொர்க்கம் மற்றும் நரகம் என்பது நாம் செய்யும் நன்மை தீமையினை பொறுத்தே கிடைக்கின்றதாக கூறுகிறது. தனது உடலில் இருந்து லிங்கம், விபூதி, மோதிரம், கடிகாரம் என பொருட்களை வரவழைத்து பக்தர்களுக்கு கொடுத்தவரும்
 
"நான் 96 வயதில் இந்த அவதாரத்தை முடித்துக் கொள்வேன்"
 
என்று பக்தர்களுக்கு உறுதிபட ஆருடம் கூறிய வரும், அதன் பின் எட்டு ஆண்டுகளின் பின்,
 
‘கர்நாடக மாநிலம், மாண்டியா நகரில் பரத்வாஜா கோத்ரத்தில் பிரேம சத்ய சாய்பாபாவாக எனது அடுத்த பிறவி இருக்கும்’
 
என்று ஆருடம் கூறிய வரும்,
 
‘நான்தான் சாய்பாபா. ஷீரடி சாய்பாபா வின் அவதாரம்’
 
என தனது இன்றைய வாழ்க்கையை கூறிய வரும், அப்படியான அவரும் வெறும் மனிதப் பிறவிதான் என்பதை குறிக்கும் வகையில் 85 வயதிலேயே அவருக்கு தெரியாமலே மரணமானார், இதில் இருந்து நாம் அறிவது என்ன? மரணமானது நாம் கருவில் உருவாகிய கணத்தில் இருந்தே எம்மை நோக்கி நடக்க ஆரம்பிக்கிறது. அது எம்மை எப்போ வந்தடைகிறது என்பதை எவராலும் ஊகிக்க முடியாது என்பதாகும்.
 
மேலும் பட்டினத்தார் "காயமே இது பொய்யடா காற்றடைந்த பையடா" என்றும், சுந்தரமூர்த்தி நாயனார், உலகீர், பசிநோயை உண்டாக்குகின்ற உடம்பு நிலைத்திருத்தல் என்பது பொய் ; இது மண்ணாய் மறைந்தொழிவதே மெய் ; ஆதலின், இல்லாது ஒழிய வேண்டுவது பிறவியாகிய கடலே ; என
 
"வாழ்வாவது மாயம்மிது
மண்ணாவது திண்ணம்
பாழ்போவது பிறவிக்கடல்
பசிநோய்செய்த பறிதான்"
 
என்று பாடுகிறார். என்றாலும் இன்று ஆஸ்பத்திரிகளில் கூட்டம். ஆலயங்களில் கூட்டம். சோதிடர்களிடமும் கூட்டம், சுவாமிகளின் ஆச்சிரமத்திலும் கூட்டம். எல்லா கூட்டத்தினரின் நோக்கமும், மரணத்தை தள்ளி வைத்து விட்டு, நிம்மதியாக நீண்ட நாள் வாழ வேண்டும் என்பது ஆகும்!
 
மரண பயமும் மரணத்திற்குப் பின் என்ன? என்பது பற்றிய அச்சமும் மனிதனை ஆட்டிப்படைத்தன. சமயங்கள் அதற்குப் பதில் சொல்ல முயன்றன. சமயம் அளித்த விளக்கங்களைத் தான் புரிந்து கொண்ட அளவிலும் ஏற்றுக்கொண்ட அளவிலும் மரணத்தை ஒருவாறு எதிர்கொண்டான் மனிதன். மலர்வதாகவும் உதிர்வதாகவும் பிறப்பு, இறப்பைக் குறித்தத்துடன், அவன் பயன் படுத்திய வார்த்தைகள் அவன் புரிந்து கொண்ட அளவை நமக்குச் சொல்கின்றன. மரணத்திற்குப் பின் என்ன என்ற கேள்விக்கு மனிதன் புரிந்துகொண்ட பதில்களின் அடிப்படையில்தான் மரணம் குறித்த சொற்கள் அவர்களுக்கிடையில் அமைந்தன. அந்தப் புரிதலை அவனது சமய நம்பிக்கைகள் அல்லது அவநம்பிக்கைகள் உருவாக்கின எனலாம். அது பண்பாட்டு உருவம் கொள்ளும் போது பல்கிப் பெருகும் சொற்களாயின.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
339093472_186433474141873_55095311988817528_n.jpg?_nc_cat=104&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=6nCl_tgH2RoQ7kNvgFDu7ai&_nc_ht=scontent-lhr6-2.xx&_nc_gid=AXP7Udlt0UTddhHJ9JA7s8g&oh=00_AYA3_l7WXHWkLUrpvJiPMP0sPpayU7sFaGAlrtykDlBFNA&oe=67094469 339117507_1300886770528218_7519860843998001903_n.jpg?stp=dst-jpg_p526x395&_nc_cat=101&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=1SRVUodEhsEQ7kNvgEfUx1f&_nc_ht=scontent-lhr8-2.xx&_nc_gid=AXP7Udlt0UTddhHJ9JA7s8g&oh=00_AYCJo4Y6SGDoY7WqynL2HaimJ9RoaaC5xbi9zOBS1zsZ7g&oe=6709770B
 


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.