Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

பூமிக்கு வந்த ராக்கெட் பாகத்தை 'கேட்ச்' பிடித்த ஏவுதளம்: ஈலோன் மஸ்க்கின் நிறுவனம் சாதனை

ஸ்டார்ஷிப் பூஸ்டரை 'கேட்ச்’ பிடித்த ஏவுதளம் : ஈலோன் மஸ்க்கின் நிறுவனம் செய்த உலக சாதனை

பட மூலாதாரம்,SPACEX

கட்டுரை தகவல்
  • எழுதியவர், எஸ்மி ஸ்டாலார்ட்
  • பதவி, காலநிலை மற்றும் அறிவியல் நிருபர், பிபிசி நியூஸ்
  • 14 அக்டோபர் 2024, 09:43 GMT
    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஈலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

ஸ்பேஸ் எக்ஸ் ஏவிய ஸ்டார்ஷிப் ராக்கெட் பூஸ்டர் பூமியில் அது ஏவப்பட்ட இடத்திற்கே மீண்டும் திரும்பிய நிலையில், அதன் ஒரு பகுதியை லான்ச்பேட் 'கேட்ச்’ பிடிப்பது போல கைப்பற்றியது. உலகளவில் நடத்தப்படும் விண்வெளி ஆராய்ச்சிகளில் இப்படி நடப்பது இதுவே முதல்முறை.

ஸ்பேஸ்எக்ஸ் ஏவிய ராக்கெட்டின் கீழ் பாதி அதன் ஏவுதள கோபுரத்திற்கு அருகில் மீண்டும் வந்தடைந்த போது, பிரமாண்ட இயந்திர கைகளால் அது கைப்பற்றப்பட்டது. உலகிலேயே மிக சக்திவாய்ந்த ராக்கெட் ஆக கூறப்படும் ஸ்பேஸ்க்எக்ஸ்-இன் ஸ்டார்ஷிப் விண்கலத்தின் ஐந்தாவது சோதனையின் ஒரு பகுதியாக இது நிகழ்ந்துள்ளது.

இதன் மூலம், முழுமையாக மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டை உருவாக்குவதற்கான ஸ்பேஸ்எக்ஸ்-இன் லட்சியம் ஒருபடி முன்னேறியுள்ளது.

'வரலாற்றுப் புத்தகங்களில் இடம்பெறும் நாள் இது' என்று குறிப்பிட்டு, ஸ்பேஸ்எக்ஸ் பொறியாளர்கள் ராக்கெட்டின் ஹெவி பூஸ்டர் பகுதி பாதுகாப்பாக தரையிறங்கிய செய்தியை அறிவித்தனர்.

ஸ்டார்ஷிப் பூஸ்டரை 'கேட்ச்’ பிடித்த ஏவுதளம் : ஈலோன் மஸ்க்கின் நிறுவனம் செய்த உலக சாதனை

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, ஸ்டார்ஷிப் டெக்சாஸில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டது

ஏவுதளத்தை நோக்கித் திரும்பிய பூஸ்டர்

'சூப்பர் ஹெவி பூஸ்டர்' எனப்படும் ராக்கெட்டின் அடிப்பகுதி, முதல் முயற்சியிலேயே முழுமையாக மீண்டும் கைப்பற்றப்படும் வாய்ப்புகள் குறைவாகவே இருந்தது.

ராக்கெட் ஏவப்படுவதற்கு முன்னதாக, ஸ்பேஸ்எக்ஸ் குழு, பூஸ்டர் மீண்டும் ஏவுதளத்திற்கு திரும்பாமல் மெக்சிகோ வளைகுடாவில் தரையிறங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று கூறியது.

கடந்த இரண்டு சோதனையின் போதும் சில அசாதாரண சாதனைகளை ஸ்பேக்ஸ் எக்ஸ் நிகழ்த்தி உள்ளது.

விண்வெளி வீரர்களை சந்திரன், செவ்வாய் மற்றும் அதற்கு அப்பால் அனுப்ப வடிவமைக்கப்பட்ட ஸ்டார்ஷிப் விண்கலம் 2023-இல் அதன் முதல் சோதனையின்போது, மேலே பறந்த சில நிமிடங்களிலேயே வெடித்துச் சிதறியது.

இந்தச் சம்பவம் நடந்து பதினெட்டு மாதங்களுக்குப் பிறகு தற்போது வெற்றிகரமான சோதனை நடத்தப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் நிகழ்ந்த தோல்விகளை அதன் வளர்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாகவே ஸ்பேஸ்எக்ஸ் கருதுகிறது. விண்கலம் வெடித்துச் சிதறிய பின், அது தொடர்பான தரவுகளைச் சேகரித்து, அதன் அமைப்புகளை விரைவாக உருவாக்க முடியும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

ஐந்தாம் கட்டச் சோதனையின் போது, ஏவப்பட்ட இரண்டே முக்கால் நிமிடங்களுக்குப் பிறகு ஸ்டார்ஷிப் விண்கலம், ராக்கெட் பூஸ்டரில் இருந்து பிரிந்தது.

ஸ்டார்ஷிப் பூஸ்டரை `கேட்ச்’ பிடித்த ஏவுதளம்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, ஸ்டார்ஷிப்

அதன் பின்னர் அந்த பூஸ்டர் டெக்சாஸின் போகா சிகாவில் உள்ள தனியார் ஸ்பேஸ்எக்ஸ் விண்வெளி நிலையத்தில் இருக்கும் ஏவுதளத்தை நோக்கித் திரும்பத் தொடங்கியது.

தரையிறங்குவதற்கு இரண்டு நிமிடங்களே இருந்த நிலையில், ஏவுதள கோபுரத்தை இயக்கும் குழுவினரால் இறுதிச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. சரியாக நடக்குமா என்று பொறியாளர்கள் குழப்பத்தில் இருந்தனர்.

ஸ்டார்ஷிப் திட்டத்தின் இயக்குனர் 'எல்லாம் சரியாக நடக்கிறது, go-ahead’ என்று அறிவித்த பின்னர் முழு ஸ்பேஸ் எக்ஸ் குழுவும் உற்சாகமடைந்தது.

சூப்பர் ஹெவி பூஸ்டர் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைந்த போது அதன் வேகம் குறைந்துவிட்டது.

146மீ உயரம் (480 அடி) கொண்ட ஏவுதள கோபுரத்தை அது நெருங்கியபோது, அதன் தரையிறக்கத்தைக் கட்டுப்படுத்த, ராப்டார் இயந்திரங்கள் இயக்கப்பட்டன. அது ஏறக்குறைய மிதப்பது போல் தோன்றியது, ஆரஞ்சு நிறத் தீப்பிழம்புகள் பூஸ்டரைச் சூழ்ந்தன, மேலும் அது சாமர்த்தியமாக பிரமாண்ட இயந்திரக் கரங்களுக்குள் புகுந்தது. இந்தச் செயல்பாடு கிரிக்கெட் போட்டியில் பந்தை 'கேட்ச்' பிடிக்கும் வீரர்களை நினைவுப்படுத்தியது.

"எங்கள் விண்கலம் அதன் இலக்கை அடைந்துவிட்டது! எங்கள் இரண்டு இலக்குகளில் இரண்டாவதை அடைந்துவிட்டோம்," என்று ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ஈலோன் மஸ்க் X-இல் பதிவிட்டுள்ளார்.

 

ஈலோன் மஸ்க் vs அமெரிக்க அரசாங்கம்

ஏவுதளத்தில் தரையிறங்குவதற்குப் பதிலாக பூஸ்டரை கைப்பற்றுவதால், தரையில் செய்ய வேண்டிய சிக்கலான வன்பொருளின் தேவையைக் குறைகிறது. மேலும் எதிர்காலத்தில் விண்கல பாகங்களை விரைவாக மறுஉபயோகம் செய்யவும் இந்தச் செயல்பாடு உதவும்.

ஈலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், மனிதர்களை சந்திரன், செவ்வாய் மற்றும் அதற்கு அப்பால் அனுப்பும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவும் விண்கலம் திட்டமிட்டபடி செயல்பட்டது குறித்து மகிழ்ச்சியடையும். 2026-ஆம் ஆண்டுக்குள் மனிதர்களை மீண்டும் நிலவுக்குக் கொண்டு செல்லக்கூடிய ஒரு லேண்டராக ஸ்டார்ஷிப்பை உருவாக்க ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு நாசா $2.8 பில்லியன் (இந்திய மதிப்பில் சுமார் 23,500 கோடி ரூபாய்) வழங்கியுள்ளது.

அமெரிக்க அரசாங்க முகமையான ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA), ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் அனுமதிகளை மறுபரிசீலனை செய்து நவம்பருக்கு முன்னதாக இந்தச் செயல்பாடுகளைத் துவங்கக் கூடாது எனக் கூறியது. இதனை மீறி ஈலோன் மஸ்க் ராக்கெட் சோதனைகளை நடத்தினார்.

எஃப்.ஏ.ஏ மற்றும் ஈலோன் மஸ்க் இடையே கடந்த மாதம் பிரச்னை ஏற்பட்டது. அதன் உரிமத்தின் விதிமுறைகளை மீறியதற்காகவும், முந்தைய சோதனைகளுக்கான அனுமதி பெறாததாலும் எஃப்.ஏ.ஏ, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திற்கு $633,000 (இந்திய மதிப்பில் சுமார் 5.3 கோடி ரூபாய்)அபராதம் விதித்தது.

இதுபோன்ற விண்வெளிப் பயணத் திட்டங்களுக்கு உரிமம் வழங்குவதற்கு முன், எஃப்.ஏ.ஏ முகமை அதன் தாக்கத்தை, குறிப்பாகச் சுற்றுச்சூழலில் அது ஏற்படுத்தும் தாக்கத்தை மதிப்பாய்வு செய்கிறது.

 
ஸ்டார்ஷிப் டெக்சாஸில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டது

‘தவறான புகார்’

அபராதம் விதித்த எஃப்.ஏ.ஏ முகமைக்கு பதிலளிக்கும் விதமாக, அதன் மீது வழக்குத் தொடரப்போவதாக மஸ்க் அச்சுறுத்தினார். ராக்கெட்டின் ஒரு பகுதி சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது என்ற 'தவறான புகாருக்கு' எதிராக ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் சமூக ஊடகத்தில் அறிக்கை வெளியிட்டது.

"எஃப்.ஏ.ஏ முகமை சுற்றுச்சூழலில் உமிழ்வுகளின் பரவலான தாக்கங்களைக் காட்டிலும் தற்போது ராக்கெட் ஏவுதல்களால் சுற்றுச்சூழலில் ஏற்படும் தற்காலிக பாதிப்பை மட்டுமே கருதுகிறது,” என்று அதில் கூறப்பட்டிருந்தது.

லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியின் வளிமண்டல வேதியியல் பேராசிரியர் டாக்டர் எலோயிஸ் மரைஸ், "மற்ற போக்குவரத்து முறைகளுடன் ஒப்பிடுகையில் ராக்கெட்டுகளில் இருந்து வெளிவரும் கார்பன் உமிழ்வுகள் குறைந்த அளவில் தான் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால் கிரகத்தை வெப்பமாக்கும் அதன் வேறு மாசுக்கள் பற்றி இன்னும் பரிசீலிக்கப்படவில்லை," என்றார்.

"கருப்பு கார்பன் என்பது மிகப்பெரிய பிரச்னைகளில் ஒன்று. ஆனால் ஸ்டார்ஷிப் ராக்கெட் திரவ மீத்தேன் பயன்படுத்துகிறது. இது ஒப்பீட்டளவில் புதிய உந்துசக்தியாகும். மேலும் திரவ மீத்தேனில் இருந்து வரும் உமிழ்வுகளின் அளவு பற்றிய சரியான தரவுகள் எங்களிடம் இல்லை," என்று அவர் கூறினார்.

மரைஸ் மேலும் கூறுகையில், "ராக்கெட்டுகளில் இருந்து வெளியாகும் கருப்பு கார்பன் பற்றிய கவலை என்னவென்றால், அவை விமானங்களை விட நூற்றுக்கணக்கான மைல்கள் உயரத்தில் வளிமண்டலத்தில் உமிழ்வை வெளியிடுகின்றன. அங்கு அது நீண்ட காலம் நீடிக்கும்,” என்று கூறினார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காணொளி.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.