Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

இலங்கை- கண்ணால் காண்பதும் பொய் – இரா. முருகவேள்

JVP-MAY-DAY-9i.jpg

இலங்கை சிவந்தது. மார்க்சீயவாதிகள் ஆட்சியைக் கைப்பற்றிவிட்டனர். இலங்கை ஒரு மார்க்சீய சார்பு கொண்ட ஜனாதிபதியைத் தேர்தெடுத்துள்ளது. புதிய ஜனாதிபதி சே குவேராவால் உத்வேகமூட்டப்பட்டவர் என்றெல்லாம் இந்திய, பன்னாட்டு ஊடகங்கள் போட்டி போட்டுக் கொண்டு செய்தி வெளியிட்டன. ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்ட இடதுசாரி அமைப்பு தேர்தலில் நின்று வெற்றி கண்டது சிறப்பானது என்று இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட் ) தோழர்கள் கொண்டாடினர்.

இவையெல்லாம் முழுவதும் பொய் என்று சொல்லிவிட முடியாது. ஜேவிபி ஒரு சோஷலிச இலங்கையை உருவாக்கத்தான் தோற்றுவிக்கப்பட்டது. இலங்கை இடதுசாரிகள் போதுமான அளவுக்கு புரட்சிகரமாக இல்லை. மக்களைத் திரட்டவும் அரசியல் படுத்தவும் அவர்கள் முயலவில்லை என்று கருதிய ரோஹன விஜயவீரா என்ற இளைஞரும் அவரது தோழர்களும் 1965 வாக்கில் மக்கள் விடுதலை முன்னணி என்னும் ஜனதா விமுக்தி பெரமுனாவை உருவாக்கினர். 1971 ஆம் ஆண்டு இந்த புதிய கட்சி தன்னை ஒரு அரசியல் கட்சியாக அறிவித்துக் கொண்டது. இதன் வளர்ச்சி இலங்கை அரசுக்கும் பழைய பாணி இடதுசாரி கட்சிகளுக்கும் அதிர்ச்சியளித்தது. இந்தப் புதிய அமைப்பின் மீது அடக்குமுறைகள் ஏவி விடப்பட்டன.

1971 ஆம் ஆண்டு ஏப்ரலில் கடும் அடக்குமுறைகளை ஆயுத எழுச்சி கொண்டு எதிர்கொள்ள ஜேவிபி முடிவு செய்தது. போதுமான ஆயுதங்களும் பயிற்சியும் இல்லாமலிருந்தும் ஜேவிபியினர் தென்னிலங்கையின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றினர். இரண்டு வார போராட்டத்துக்குப் பிறகு இந்தியாவின் ராணுவ உதவியுடன் இலங்கை அரசு கிளர்சியை ஒடுக்கியது. 20,000 ஜேவிபியினர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பின்பு ஜேவிபிக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. அந்தக் கட்சி தேர்தலில் நின்றாலும் பெரிய வெற்றியோ வாக்குகளோ பெறவில்லை. இருந்த போதிலும் ஜேவிபி மக்களிடையே நல்ல செல்வாக்கு பெற்றிருந்தது என்பதை அறிய முடிகிறது. சாஸ்திரி சிரிமாவோ ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமிழ் நாட்டின் கூடலூர், வால்பாறை போன்ற பகுதிகளுக்கு வந்த இலங்கை மலையகத் தமிழர்களில் சிலர் ஜேவிபி ஆதரவாளர்களாக இருந்ததைப் பார்த்து தமிழ் நாட்டு தொழிற்சங்கவாதிகள் வியப்படைந்தனர்.

2024-06-14-Sri-Lanka-IMF-300x200.jpg

1983 ஆண்டில் தமிழர்களுக்கு எதிராக நடந்த படுகொலைகளுக்கும் கலவரங்களுக்கும் பிறகு யாழ்ப்பாணத்தில் நிறுத்தப் பட்ட சிங்கள ராணுவ வீரர்களில் இளநிலை அதிகாரிகள் பலர் ஜேவிபி ஆதரவாளர்களாக இருந்தனர். செ. கணேசலிங்கனின் நாவல்களிலும் இதைக் காண முடியும்.

1987 ஆம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டதையடுத்து, இந்திய  விரிவாதிக்கத்தை எதிர்ப்பதை நோக்கமாகக் கொண்டிருந்த ஜேவிபி பெரும் வளர்ச்சி கண்டது. வட இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் இந்திய ராணுவத்துக்கும் கடும் போர் நடந்து வந்த நேரத்தில் தென்னிலங்கையில் ஜேவிபிக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையே உக்கிரமான மோதல்கள் நடந்து வந்தன. ஜேவிபி பெரும்பாலும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் போன்றவர்களை தனிநபர் அழித்தொழிப்பு செய்தது. போலீஸ், ராணுவத்தினர் மீது தாக்குதகள் நடத்தியது. பதிலுக்கு ராணுவம் பல்லாயிரம் ஜேவிபியினரை எரித்தும் சுட்டும் கொன்றது. சுமார் 60000 பேர் கொல்லப்பட்டதாக கணக்குகள் கூறுகின்றன. இந்த எழுச்சியில் மலையகத்தில் தலைமறைவாகவிருந்த ரோஹன விஜயவீர உள்ளிட்ட ஜேவிபியின் எல்லா தலைவர்களும் பிடிக்கப்பட்டு போலி மோதல்களில் கொல்லப்பட்டனர். தப்பிய சோமவன்சா அமரசிங்கே என்ற தலைவர் இலங்கை அரசின் வேட்டையால் பலநாடுகளில் சுற்றியலைந்து இறுதியில் பிரிட்டனில் தங்கி  ஜனதா விமுக்தி பெரமுனாவை மீளக் கட்டியமைத்தார். இவர் 1990 லிருந்து 2014 வரை தலைவராக இருந்தார்.  1994 ஆம் ஆண்டு இலங்கை திரும்பினார்.

இந்தக் காலகட்டத்தில் ஜேவிபி ஆயுதப் போராட்டத்தை முற்றிலும் கைவிட்டது. பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து இலங்கை தேர்தல்களில் பங்கெடுத்துக் கொண்டது. சந்திரிகா குமாரதுங்கா ஜனாதிபதியாகவிருந்த சுதந்திரா கட்சி அரசில் ஜேவிபி பங்கு கொண்டது. அப்போது இப்போதைய ஜனாதிபதியான அனுரா குமார திசனாயகே விவசாய அமைச்சராக இருந்தார். அப்போதுதான் விடுதலைப்புலிகள் ஓயாத அலைகள் என்ற பெயரில் அடுத்தடுத்து நடத்திய பெரும் தாக்குதல்களில் வட இலங்கையில் முல்லைத்தீவு, ஆனையிறவு, பரந்தன், போன்ற மிகப் பெரிய ராணுவ முகாம்கள் துவம்சம் செய்யப்பட்டன. திரிகோணமலை தவிர தமிழ் ஈழம் என்றழைக்க்கப்பட்ட பகுதியில் 90 சதவீதம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பட்டின் கீழ் வந்தது.

ராணுவம் பலத்த பின்னடைவைச் சந்தித்ததை அடுத்து  சந்திரிகா விடுதலைப் புலிகளுடன்  பேச்சு வார்த்தையைத் தொடங்கினார். சுனாமி வந்த போது நிதியை புலிகளுடன் பகிர்ந்து கொள்வது பற்றிப்  பேசப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அனுரா குமார திசநாயகே தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

2014 ஆம் ஆண்டு  ஜேவிபியின் தலைவரான சோமவன்சா அமரசிங்கே கட்சியுடன் ஏற்பட்ட முரண்பாடுகளால் பதவிவிலகி தனிக்கட்சி உருவாக்கினார். அதற்குப் பின்பு அனுரா குமார திசநாயகே தலைவரானார். அவர் தலைவரானதுமே முன்பு நடந்த எழுச்சிகளுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இதன் மூலம் இன்னொருமுறை இப்படியொரு எழுச்சி நடக்காது என்று இலங்கை ஆளும் வர்க்கங்களுக்கு உறுதியளித்தார். ஜேவிபி தன்னை இலங்கையை ஆண்டு வரும் இரண்டு மூன்று குடும்பங்களுக்கு வெளியாள் என்று கூறிக் கொண்டாலும் மேலும் மேலும் இலங்கையின் ஆளும் நிறுவனங்களுக்குள் ஐய்க்கியப் பட்டது.

அனுரா குமாரா திசநாயககே மேலும் மேலும் ரோஹன விஜயவீராவின் புரட்சிகர மார்க்சீய அரசியலில் இருந்து விலகிச் சென்றார். அந்த ஆண்டுகள் சிங்கள தேசியவாதமும், புத்தமத அரசியலும் உச்சத்திலிருந்த ஆண்டுகள். ஜேவிபியின் இடத்தை புத்த மத அரசியல் பிடித்துக் கொண்டது. ஜேவிபி பல இடதுசாரி கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள், என் ஜி ஓக்களைக் கொண்டு தேசிய மக்கள் சக்தி என்ற கூட்டமைப்பை ஏற்படுத்தினார். 2019 ஆம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தலில் நின்ற திசநாயகே பெற்றது வெறும் 3 சதவீத வாக்குகள் தான்.

2022 ஆம் ஆண்டு இலங்கையின் பொருளாதாரம் திவாலானது. கொரொனா முழு அடைப்புகளை ஒட்டி இலங்கையின் சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்தது. ஏற்கெனவே தடுமாறிக் கொண்டிருந்த பொரு ளாதாரம் மேலும் நொறுங்கியது. அதனால் உலக வங்கி போன்றவர்களிடமிருந்து வாங்கிய கடன்களைத் திருப்பித் தர முடியவில்லை. எனவே உணவு, பெட்ரோல், மருந்துகள் போன்றவற்றை இறக்குமதி செய்ய முடியவில்லை. கடும் உணவுத் தட்டுப்பாடு, அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டதையடுத்து அரகலயா என்ற பேரெழுச்சி ஏற்பட்டது. மிகவும் வலிமை வாய்ந்த ராகபக்‌ஷே குடும்பம் அரசியலில் வீழ்ச்சியடைந்தது.  அதற்கு முன்பிருந்தே சுதந்திரா கட்சியும், ஐய்கிய தேசிய கட்சியும் அதிலிருந்து உடைந்த பிரிவுகளும் மேலும் மேலும் உடைந்து இலங்கை அரசியலில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தின.

image_b869b33332-300x234.jpg

 

இலங்கையை காலங்காலமாக ஆண்டு வந்த ஜெயவர்த்தனே, பண்டாரநா்யகா குடும்பங்களின் மேலுள்ள வெறுப்பு, திசநாயகாவின் ஏழைகளுக்கு ஆதரவான பேச்சுக்கள், 2022 இல் ஏற்பட்ட வீழ்ச்சி எல்லாம் சேர்ந்து ஒரு மார்க்சீயவாதியை ஜனாதிபதியாக உட்கார வைத்துள்ளன. ஏழை மக்களின் விருப்பமே இலங்கையில் வெற்றி பெற்றுள்ளது.  இனி எல்லாம் நலமே நடக்கும் என்று முடிப்பது கட்டுரைக்கு நல்ல முடிவாக இருக்கும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அப்படி முடிக்க முடியாத வண்ணம் சில சிக்கல்கள் உள்ளன.

——————————————-

எழுத்தாளர் சுஜாதாவின் கதை ஒன்று உண்டு. ஒரு கிரிக்கெட் போட்டி நடைபெறும். ஒரு அம்ப்பையர் மிகவும் நேர்மையானவர். அவரிடம் கிரிக்கெட் சூதாட்டக்காரர்கள் வந்து ஒரு முக்கியமான பேட்ஸ்மேனுக்கு தவறாக அவுட் கொடுக்க கோடிக் கணகில் பேரம் பேசுவார்கள். அம்ப்பையர் மறுத்துவிடுவார். பின்பு போட்டியில் அந்த பேட்ஸ்மேன் இரண்டே ரன்னில் தானாகவே அவுட் ஆகிவிடுவார். அம்ப்பையர் சூதாட்டக்காரணை ஒரு விடுதியில் பார்ப்பார். பேட்ஸ்மேன் தானாகவே அவுட் ஆகிவிட்டாரே உங்கள் பணம் மிச்சம் என்பார்.

சூதாட்டக்காரன் சிரித்துக் கொண்டே எங்கே மிச்சம். உங்களுக்கு பேசிய தொகையை விட இரண்டு மடங்கு நேரடியாக அந்த பேட்ஸ்மேனுக்கே கொடுத்து விட்டேன் என்பான். பேட்ஸ்மேன் அபத்தமாக அவுட் ஆன ரகசியம் அம்ப்பையருக்கு புரியும்.

————————————-

2022 ஆம் ஆண்டு கோத்தபய ராஜபக்‌ஷே அரசு திவாலாகி, கோத்தபய நாட்டை விட்டு ஓடியதும் இலங்கை முன்னால் இரண்டு வழிகள் இருந்தன.

  1. நாட்டை சூறையாடி வந்த ஆளும் வர்க்கங்களின் சொத்துக்களை அரசுடமை ஆக்கி, அன்னிய நிறுவனங்களை வெளியேற்றி, அநீதியான வெளிநாட்டு ஒப்பந்தங்களை ரத்து செய்து பொருளாதாரத்தை மீட்பது.
  2. ஐ எம் எஃப் இடம் பெரும் கடன் வாங்கி நெருக்கடியில் இருந்து மீள்வது. அதற்கு பதிலாக நாட்டின் செல்வ வளங்களை தனியார்மயமாக்குவது, மக்கள் சேவைக்கு ஒதுக்கப்படும் பணத்தை ரத்து செய்வது ஆகியவையே இந்த இரண்டு வழிகள்.

அமெரிக்கா தனது செல்வாக்கைப் பயன்படுத்தி ரனில் விக்ரமசிங்கேவை அதிபர் ஆக்கியது. இலங்கை சட்டப்படி அதிபர் தேரதலில் நின்று வெற்றி பெற வேண்டும். ஆனால் ரனில் பாராளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்காவின் விருப்பமான தேர்வு ரனில் என்று பேசப்பட்டது. ரனில் ஆட்சியில் ஐ எம் எஃப் இடம் கடன் வாங்கி இலங்கையின் பொருளாதாரம் மீட்கப்பட்டதாகக் கருதப்பட்டது. ஆனால் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவில்லை. மேலும் மேலும் நாசமாகி வந்தது. 2022 ஐ போன்ற இன்னொரு எழுச்சி ஏற்படும் என்ற சூழ்நிலை உருவாகி வருகிறது என்பதை இலங்கை ஆளும் வர்க்கங்களும், அமெரிக்காவும் அறிந்திருந்தன.

மார்க்சிய கட்சி என்று கருதப்பட்ட ஜேவிபியின் செல்வாக்கு அதிகரித்து வந்தது. ஆரம்பத்தில் அமெரிக்கா, ரனில் இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுத்து வருகிறார் என்று தனது கைத்தடிகள் மூலம் பிரச்சாரம் செய்தது. ஆனால் ஒரு நல்ல அம்ப்பையரைப் போல மக்கள் மயங்கவில்லை. அவர்கள் மேலும் மேலும் மார்க்சீயம், ஏழைகளின் நலன் என்று பேசிய ஜேவிபி பக்கம் சாய்ந்து வந்தனர்.  எனவே சிறந்த கிரிக்கெட் சூதாடியைப் போல அமெரிக்கா பேட்ஸ்மேனான ஜேவிபியையே அணுகி காரியத்தை சாதித்து விட்டது.

ஜேவிபி வென்று அனுரா குமார திசநாயகே அதிபர் ஆனார். ஆனால் ஒரு தூய மார்க்சீயவாதியாக ஐ எம் எஃப் ஐ நாட்டை விட்டு துரத்தாமல் அதனோடு பேச்சு வார்த்தை நடத்தி நிபந்தனைகளின் கடுமையை குறைக்கும் படி கேட்டுக் கொள்வேன் என்று கூறினார். அன்னிய முதலீட்டாளர்கள் அச்சப்பட வேண்டாம் என்று உறுதியளித்தார். இந்தியா மற்றும் சீனாவின் உறவு மதிக்க்ப்படும் என்றார்.

சோஷலிச லட்சியங்கள் பற்றிப் பேசாமல் எல்லா முதலாளித்துவ அரசியல்வாதிகளையும் போல ஊழல் ஒழிப்பு, தூய ஆட்சி பற்றியே பேசினார். பேட்ஸ்மேன் கிளீன் போல்ட் ஆனார்
———————

புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி என்று சொல்லப்பட்ட ஜனதா விமுக்தி பெரமுனாவுக்கு என்ன நேர்ந்தது, எப்படி நேர்ந்தது என்பது ஒரு சுவாரஸ்யமான கதை.

திசநாயகேவின் வெற்றிக்கு இரண்டு காரணங்கள் உள்ளன என்று JVP/NPP leader elected as new president of sri lanka- Saman gunadasa Jayasekera – World socialist web site கட்டுரை கூறுகிறது. பொருளாதார நெருக்கடி அது ஏற்படுத்திய சமூக பிரச்சினைகள் ஆகியவை ஒரு காரணம்.

இலங்கை ஆளும் வர்க்கத்தின் ஒரு பகுதி ஜேவிபியை ஆதரித்தது என்பது இன்னொரு காரணம். 2022 இல் நடந்த எழுச்சி திரும்பவும் நடக்கமல் தடுக்கவே ஆளும் வர்கத்தின் ஒரு பிரிவு ஜே வி பியை ஆதரித்தது என்கிறது மேற்சொன்ன கட்டுரை. ஜேவிபி ஆட்சிக்கு வருவது என்பது சோஷலிசம் நிலைநாட்டப்பட்டு விட்டது. எழுச்சி முடிவடைந்து விட்டது என்ற எண்ணத்தை மக்களிடம் ஏற்படுத்தும் என்பதே இலங்கையின் ஆளும் வர்க்கங்கள், மற்றும் அமெரிக்காவின் கருத்தாகும்.

திசநாயக பொருளாதாரத்தை மீளக் கட்டியமைத்து, ஏழை மக்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்தி, ஊழலையும், பணம் படைத்த வர்க்கங்களின் சலுக்கைகளையும் ஒழிப்பதாக சொல்லி ஓட்டுக் கேட்டார். p02bp03l-300x169.jpg

அதே நேரம் அவர் ஐ எம் எஃப் சொல்லும் பொருளாதார சீர்திருத்தங்களைச் செய்யப் போவதாகவும் உறுதியுமளித்தார். அதற்கு பதிலாக அமெரிக்கா  3 பில்லியன் டாலர் நிதியுதவி அளிக்கும். இதற்காக அரசு நிறுவனங்களை விற்பனை செய்தல், பொதுத்துறை வேலைகளை இல்லாமல் செய்தல், சுகாதாரம், கல்வி போன்றவற்றில்

தனியார் துறையை ஊக்குவித்தல் ஆகியவற்றைத் தொடர்ந்து செய்ய வேண்டியிருக்கும். இதுபற்றி திசநாயகே எதுவும் பேசவில்லை. கடன் வேண்டாம் என்று சொல்லவும் இல்லை. நிபந்தனைகளுக்கு உடன்பட முடியாது என்றும் சொல்லவில்லை.

திசநாயக தான் ஐ எம் எஃப் உடன் கடனுக்கான நிபந்தனைகளின் கடுமையைக் குறைப்பது குறித்து பேச்சு வார்த்தை நடத்தப்போவதாக கூறியுள்ளார். ஆனால் ஐ எம் எஃப் அதற்கு இடமே இல்லை என்று கூறிவிட்டது.

செப்டம்பர் 4 ஆம் தேதி தொழிலதிபர்கள், பெருவணிகர்களுக்கான மாநாட்டில் பேசிய திசநாயகா அவர்களுக்கு முழு பாதுகாப்பு அளிப்பதாகவும், அன்னிய முதலீட்டாளர்களை ஆதரிப்பதகவும் உறுதியளித்தார். The wizaedry of Anura Kumara Dissanayake, sri lanks’s new president – R.K. Radhakrishnan, Frontline, the hindu.com

அனுரா குமார திசனாயகே குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றது ஒரு மாயாஜாலம் என்கிறது மேற்கண்ட கட்டுரை. 2019 ஆம் ஆண்டிலிருந்து ஏராளமான இலங்கை மக்கள் வறுமையில் தள்ளப்பட்டனர். திசனாயகே தன்னை இவர்களது குரலாக முன்னிலைப் படுத்திக் கொண்டார். 2022 முதல் 2024 வரை திசனாய்கே தான் இலங்கை ஆளும் வட்டங்களை சேர்ந்த ஆள் அல்ல. சாதாரணன் வெளியாள் என்று மக்களை நம்ப வைத்ததில் வெற்றி பெற்றார்.

பலவிதங்களில் இவரது அணுகுமுறை மோடியைப் போலிருக்கிறது என்கிறது பிரண்ட்லைன் கட்டுரை. திசனாயகேவின் தாயார் வாக்களிக்க இலங்கையில் டக் டக் என்று அழைக்கப்படும் ஆட்டோ ரிக்‌ஷாவில் வந்தார். ஆனால் திசநாயகே ஆடம்பரமான சொகுசு காரில் வந்தார். விக்ரமசிங்கே இது ஒரு நாடகம் என்று எக்ஸ் தளத்தில் கிண்டல் செய்தார்.

உண்மையில் திசநாயகே ஆளும் வர்க்கங்களுக்கு வெளியாள் அல்ல.  2001 ஆம் ஆண்டு பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004 லிருந்து 2005 வரை விவசாய அமைச்சராக இருந்தார். அது சந்திரிகா குமாரதுங்காவின் அப்பட்டமான முதலாளித்துவ அரசு. அதில் விவசாய அமைச்சராக இருந்த போதும் திசநாயகே விவசாயிகளின் நலனுக்கான திட்டங்கள் எதையும் செயல்படுத்தியதாகத் தெரியவில்லை. அது முழுவதும் சந்திரிகா அரசாகவே இருந்தது. எனவே அரசு நிர்வாகம், ஆளும் வர்க்க தொடர்புகள், பதவிகள் எல்லாம் ஜேவிபிக்கு பழக்கம் தான். பிடிவாதமாக தனது கொள்கைகளில் நிற்காமல் ஆளும் வர்க்கங்களுக்கு ஏற்ப வளைந்து கொடுப்பதும் திசநாயகேவின் ஜேவிபிக்கு வழக்கம் தான். இதில் இறுதி ஆணியை அடித்தது அமெரிக்கா.

2023 ஆம் ஆண்டு அக்டோபர் 19 அன்று அமெரிக்க தூதர் ஜூலி சுங் ஜெவிபியின் தலைமை அலுவலகம் வந்து திசநாயகேவை சந்தித்தார்.

விமல் வீரவன்சா என்ற சிங்கள தேசியவாத பாரளுமன்ற உறுப்பினர் ஒரு விவாத மேடையில் இலங்கை அரசியலில் அமெரிக்கா தலையிடுகிறது. அமெரிக்கா ரனில் விக்ரமசிங்கேவை அதிபர் ஆக்க விரும்புகிறது. முடியாத நிலையில் அனுரா குமார திசநாயகேவை அதிபர் ஆக்க உறுதி கொண்டிருக்கிறது என்றார். அந்த வீடியோ மர்மமாக இணையத்தில் இருந்து மறைந்து விட்டது என்கிறது Tamil Guardian – Weerawansa caims US ambassador is interfering in Sri. Lankan elections  என்ற கட்டுரையில்.

ஜூலி சுங் பலமுறை  தேசிய மக்கள் சக்தி அலுவலகத்துக்கு வந்துள்ளார். யுஎஸ் எய்ட் அட்மினிஸ்ட்ரேட்டர் சம்ந்தா பவர்,  ஹரிணி அமரசூர்யவை சந்தித்தார் என்கிறார் விமல். ஜூலி சுங் இலங்கைக்கான அமெரிக்க தூதராக இருந்தார். அவரது பதவி காலம் முடிந்தும் இலங்கையில் இருந்து இந்த வேலைகள் செய்து வருகிறார். இதில் அதிர்ச்சிகரமாக 2022 போராட்டங்களிலும் ஜூலி சுங் பங்கு வகித்தார் என்கிறார் விமல். அதாவது திவாலான கோத்தபய அரசை கவிழ்ப்பதிலும் அமெரிக்கா பங்கு வகித்தது என்கிறார் விமல். வங்கதேசத்தில் ஷேக் அஸீனாவின் அரசுக்கு ஏற்பட்ட பொருளாதாரப் பிரச்சினைகளுக்குக் காரணமான அமெரிக்காவே அவரது அரசைக் கவிழ்த்தது நினைவிருக்கும்.

இந்த சந்திப்பிற்குப் பிறகு அனுரா அமெரிக்கா சுற்று பயணம் மேற்கோண்டார்.  இதற்கான செலவுகளை அமெரிக்க தூதரகம் செய்தது என்ற வதந்தி பரவலாக இருந்தது. அதை அமெரிக்க மறுத்தது. அதன் பின்பு  அனுரா முதலாளித்துவம், ஏகாதிபத்தியம், உலகமயம் தாராளமயம் பற்றியெல்லாம் பேசுவதே இல்லை.

Rajpakche_b_14-300x205.jpg

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியா வரும்படி அனுராவுக்கு மோடி அரசு அழைப்பு விடுத்தது.  அனுரா திசநாயகே இந்தியா வந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் போன்றோரை சந்தித்தார். பின்பு இலங்கை திரும்பிச் சென்ற அனுரா அமுல் குழுமத்தின் வெற்றியை இலங்கையிலும் செயல்படுத்தப் போவதாகக் கூறினார். இந்திய விரிவாதிக்கத்துக்கு எதிரான அரசியலை முழுமையாகக் கைவிட்டு இலங்கை இந்திய உறவுகளைப் பேணுவதைப் பற்றிப் பேசினார். இந்தியாவுடனான உறவை மேலும் வலிமைப்படுத்த உறுதி கொண்டிருப்பதாகவும் கூறினார்.

எனவே அமெரிக்கா, இந்தியா, ஐ எம் எஃப், இலங்கையில் முதலீடு செய்துள்ள நிறுவனங்கள், ஆகியோரின் ஒப்புதலைப் பெற்ற பிறகு அனுரா குமார திசநாயகே இலங்கையின் அதிபர் ஆவது உறுதி செய்யப்பட்டது. ஜே வி பி தன்னிடம் மிச்சம் மீதியிருந்த சோஷலிச லட்சியங்களை முழுதாகக் கைவிட்டுவிட்டு இலங்கையின் முதலாளித்துவ அமைப்பு முறைக்கு உள்ளே வந்த பின்பே அனுர குமார திசநாயகே அதிபர் ஆக மேற்சொன்ன நாடுகளும், அதிகார மையங்களும் ஒப்புதலளித்தன.

அதாவது எதுவுமே மாறாது என்பதை இந்த நாடுகளும் நிறுவனங்களும் உறுதிப் படுத்திக் கொண்ட பின்பே இந்த மாற்றத்தை ஏற்படுத்தின.

இலங்கை சிவந்தது. இலங்கையின் உழைக்கும் மக்கள் தங்கள் அரசை ஏற்படுத்தியுள்ளனர் என்று கூறப்படுவதை அமெரிக்க, இந்திய, இலங்கை ஆளும் வர்க்கங்கள் கைதட்டி ஆமோதிக்கின்றன. இப்போது இருப்பது உங்கள் அரசு என்று இவர்கள் உழைக்கும் மக்களிடம் சொல்கின்றனர். இன்னொரு நாடகம் அரங்கேறுகிறது.
 

 

https://uyirmmai.com/article/uyirmmai-magazine-october-2024-ra-murugavel-article-02/

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, கிருபன் said:

புதிய ஜனாதிபதி சே குவேராவால் உத்வேகமூட்டப்பட்டவர் என்றெல்லாம் இந்திய, பன்னாட்டு ஊடகங்கள் போட்டி போட்டுக் கொண்டு செய்தி வெளியிட்டன.

இந்தியாவிலும் அனுரகுமார திசநாயக்கவுக்கு புகழ்பாடுதல் நடந்ததா  🤣 தகவலுக்கு நன்றி
ஈழதமிழர்களின் அனுரகுமார திசநாயக்கவுக்கான புகழ்பாட்டு அலம்பல்கள் மிகவும் ஓவர்



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.