Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிந்து சமவெளி- 5000 ஆண்டு திராவிடப் பண்பாடு. : சூர்யா சேவியர்

640px-Shiva_Pashupati.jpg

1922ம் ஆண்டு தொல்லியல் ஆய்வாளர் ஜான்மார்ஷல் நடத்திய அகழ்வாய்வில் மொகஞ்சதாரோ, ஹரப்பா என்ற இரு நகரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இப்போது இந்நகரங்கள் இரண்டும் நிலப்பரப்பின் அடிப்படையில் பாகிஸ்தானில் உள்ளன. உலக வரலாறு குறித்த சிந்தனைப் போக்கில் பெரும் மாற்றத்தை இக்கண்டுபிடிப்புகள் உருவாக்கியது. இவற்றின் கட்டமைப்புகள் கி.மு.2500 ல் நாகரிகத்தின் உச்சநிலையை அடைந்திருந்ததை உலகிற்கு உணர்த்தியது. இதில் ஆச்சரியமான ஒரு விசயம் யாதெனில் அங்கு கண்டுபிடிக்கப்பட்ட செங்கலின் அளவு இன்று வரை மாறாமல் இருப்பது தான்.

அங்கிருந்த மிகப்பெரும் தானியக் களஞ்சியம் தனியுடமை இல்லாத கூட்டு வாழ்க்கையைப் பறைசாற்றியது. எகிப்தின் மன்னராட்சி முறையும், சுமேரியாவின் நாடு போன்ற அமைப்பும் இங்கு இல்லை. ஆனால் அவர்களை விட நாகரிகத்தில் உயர்ந்து இருந்தார்கள். அதற்கு இங்குள்ள பாசன மேலாண்மையே முக்கியக் காரணமாக இருந்தது.

இதன் எல்லை மிகவும் குறுகியது. இதையொட்டிய வேறு நகரங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. எகிப்து, சுமேரியா போன்று பெரும் பாசனக் கால்வாய்கள் இங்கு இல்லை. அணை கட்டி அதன் அருகிலேயே விவசாயம் செய்துள்ளனர். இவர்கள் இரும்பு காலத்திற்கு முந்தையவர்கள். எனவே கலப்பையை இவர்கள் பயன்படுத்தவில்லை.

ஆற்று வெள்ளம் கொண்டு வந்த வண்டலைப் பயன்படுத்தியே விவசாய முறை இருந்தது. தங்கள் தேவை போக மீதி உணவுகளை எகிப்து, சுமேரியாவுக்கு விற்றுள்ளனர். தற்போதைய பஹ்ரைன் அன்று முக்கியமான வணிகச் சந்தையாக இருந்துள்ளது. தங்கள் தேவைக்கான உணவை உற்பத்தி செய்து, அனைவரும் பங்கிட்டு வாழ்ந்த உயர்ந்த நாகரிகம் கொண்ட இந்த மக்கள் அழிந்தது எப்படி என்பதே கேள்வி?

இதற்கான விடையை ரிக்வேதம் தருகிறது. ரிக்வேதத்தில் 10,552 செய்யுட்கள் உள்ளன. இதில் 1028 செய்யுட்களே மெட்டமைத்துப் பாடும் வடிவில் உள்ளன. இப்பாடல்களில் பெரும்பாலான பாடல்கள் முடிவே இல்லாமல் சோறு வேண்டும் என்றே புலம்புகிறது.3-s2.0-B9780080970868130193-f13019-01-97

நதிகளை விடுவித்த இந்திரன் ரிக் வேதத்தில் மீண்டும் மீண்டும் போற்றப்படுகிறான். வான் மேகமாக குவிந்த மழையை அவன் விடுவிக்கிறான். இந்திரனால் விடுவிக்கப்பட்ட நீரை செயற்கையான தடுப்பு போட்டு தடுத்திருந்தனர். அரக்கனாகிய விரித்திரன் ஒரு பாம்பு போல மலைச்சரிவில் ஆற்றின் குறுக்கே படுத்திருக்கிறான். ” குறுக்கே படுத்து ஆற்றின் வேகத்தைத் தடுத்துக் கொண்டு இருந்த அரக்கனைக் கொன்று ஆற்றை விடுவித்ததால் இந்திரனை ‘விரித்ராகரன்’ என்று ரிக்வேத வரிகள் போற்றுகிறது. விரித்ரன் என்றால் அடைப்பு என்று பொருள்.

அரக்கனை இந்திரன் கொன்றதும் இந்த அசுரனின் மூச்சற்ற உடல் மீது நீர் பிரவாகமாக ஓடியது. வண்டிச் சக்கரங்கள் போல் கற்கள் உருண்டன என்ற ரிக்வேத வரிகள் ஓர் அணையை உடைத்ததையே கவிதை நயத்தோடு விவரிக்கிறது. வேளாண்மை அறியாத நாடோடிக் கூட்டமான ஆரியர்களின் படையெடுப்பில் சிந்து சமவெளி நாகரிகம் அழிந்தது”( டி.டி. கோசாம்பி-“பண்டைய இந்தியா).

சிந்துசமவெளியில் தீப்பற்றி எரிந்த தடயங்களும் கரிமப் படிவ ஆய்வில் கண்டறியப்பட்டன.இம்மக்களின் தேவைக்கான காடுகளை ஆரியர்கள் அழித்ததும் கூட இதற்கான காரணமாக இருக்கலாம் என ஆய்வில் கண்டறியப்பட்டது. ஆரியர்களின் இந்தியப் படையெடுப்பே அழித்தொழித்த வரலாற்றிலிருந்தே தொடங்குகிறது.

இந்தியா வேதங்களின் நாடு, சிந்துசமவெளி நாகரிகம் என்பதை சிந்து சரஸ்வதி நாகரீகம் என சங்பரிவார் அமைப்புகள் நிறுவ முயற்சிக்கிறார்கள்.

வேத நாகரீகம் இந்தியாவில் தான் தோன்றியது என சங்பரிவார் வாதிடுவார்கள். தங்களின் கருத்திற்கு வலு சேர்க்கவே, வேதத்தில் கூறப்பட்டுள்ள சரஸ்வதி நதி என்ற ஒன்றைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.அதற்கு ஆதாரம் என்ன? சரஸ்வதி என்ற சொல்லுக்கே நதி என்று தான் பொருள்.

ஆரியர் வருகை எனும் கோட்பாடு ஒன்று இங்கு உண்டு. இக்கோட்பாடு வெள்ளையர்களால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு ஏற்பாடு என்றும், வேதங்கள் இந்தியாவில் தான் உருவானது என்றும் சங்பரிவார் அமைப்புகள் கூறிக் கொண்டிருக்கும். ஆரியர் வருகை எனும் கோட்பாடு எப்படி உருவானது? ஒரு சொல்லின் பிறப்பியலில் இருந்தும், மொழிகளை ஒப்பிட்டு நோக்கும் ஒப்பீட்டு மொழியியல் ஆய்வுகளிலிருந்துமே இக்கோட்பாட்டை உருவாக்கினர். அது என்ன ஒப்பீட்டு மொழியியல்?

ஒரு மொழி தோன்றியதும், அம் மொழியைப் பேசுபவர்கள் இடம் பெயர்வதாலோ,அல்லது ஒரு மொழி பேசுவோர் வேறு வகையான மொழி பேசுவோரின் பண்பாட்டுத் தாக்கத்திற்கு உட்பட்டாலோ புதிய கிளை மொழி ஒன்று உருவாகும் என்பதே மொழியியல் ஒப்பீட்டின் அளவுகோல். இதற்கு ஏராளமான உதாரணங்கள் உண்டு.

மனிதன் என்ற அடிப்படையில் எல்லோரும் ஒரு இனம் தான். மனித இனம் தான். தொடர்ந்த இடப்பெயர்வின் காரணமாகவே புதிய, புதிய மொழிகள் உருவாகின. உலகம் முழுமையும் மொழியின் பிறப்புகள் குறித்த ஆய்வுகள் நடைபெற்றன. இதுபோல் இந்தியாவில் உள்ள மொழிகளை ஆய்வு செய்யும் போது திராவிடம் மற்றும் வடமொழி என்ற இருபெரும் மொழித் தொகுதிகள் இருப்பது அறியப்பட்டது.

ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயரும் பொழுது புதிய கிளை மொழிகள் தோன்றும். அப்படித் தோன்றிய புதிய கிளை மொழியில் சில பொதுவான சொற்கள் தொடர்ந்து வந்திருப்பதை அறிய முடியும். அதாவது ஒரு சொல்லின் வேர்ச்சொல் ஒன்று போலவே இருக்கும். உச்சரிக்கும் ஒலிப்பு முறையில் மட்டுமே மாற்றங்கள் இருக்கும். தமிழில் ‘எங்கு’ என்ற சொல் மலையாளத்தில் ‘எங்கன’ என்று ஒலிக்கும். இதுபோல் பல உதாரணங்கள் உண்டு.

உறவுகள் சார்ந்த பெயர்கள் தாய் மொழியிலும், அதிலிருந்து பிரிந்த கிளை மொழியிலும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டிருக்கும். அதோடு தாய்மொழி உருவான பகுதிகளின் நில அமைப்பு, இயற்கைச் சூழல், பயன்படுத்தும் பொருட்கள், உடலின் பாகங்கள், ஆகியவற்றில் உள்ள சொற்களில்  பெரும்பாலும் ஒப்புமை இருக்கும். அதே நேரத்தில் இங்கு உருதுச் சொற்கள் புழக்கத்தில் உள்ளன. அதுவும் தமிழின் கிளை மொழி என்று கூற இயலாது. அது கடன் பெற்று பயன்படுத்துவதே. நீதிமன்றங்களில் பயன்படுத்தப்படும் ஆஜர், வாய்தா உள்ளிட்ட பெரும்பாலான சொற்கள் உருது தான்.

மொழி ஒப்பியல் குறித்த ஆய்வுகள் பல உண்டு. அதில் உலகளவிலான ஆய்வுகளில் முக்கியமானது லத்தீன், கிரேக்கம்,வடமொழி குறித்த ஆய்வுகள். இம்மூன்று மொழிகளிலும் உள்ள பல சொற்கள் ஒன்றோடு ஒன்று ஒத்துப் போவதை மொழியியல் அறிஞர்கள் அறிந்தனர். உதாரணமாக லத்தீனில் ஆகாயக் கடவுளுக்கு ‘ஜூப்பிட்டர்’ என்றும், கிரேக்கத்தில் ‘தேயூஸ் பட்டர்’ என்றும், வடமொழியில் ‘தேயூஸ் பித்தர்’ என்றும் வழங்கப்படுகிறது.

எண் சார்ந்த சொற்களிலும் இந்த ஒப்புமை ஏராளம் உண்டு. ஒன்று என்பதற்கு லத்தீனில் உன்னஸ், கிரேக்கத்தில் ஒய்ஸ், வடமொழியில் இக்கஸ், ஏழு என்பதற்கு லத்தீனில் ஸட்பம், கிரேக்கத்தில் ஹப்தா, வடமொழியில் ஸப்தா, நூறு என்பதற்கு கிரேக்கத்தில் எக்கடன், லத்தீனில் சென்டம், வடமொழியில் ஸதம். இதுபோல் அவெஸ்தா மற்றும் ஜெர்மன் ஆகிய மொழிகளும் மேற்கண்ட மூன்றோடும் ஒப்புமை கொள்ளும்.

குதிரைக்கு ஈரானின் அவெஸ்தா மொழியில் அஸ்பா, கிரேக்கத்தில் ஹப்போஸ், லத்தீனில் இக்கியுஸ், ஜெர்மனியில் கோத்திக்கிஸ், வடமொழியில் அஸூவ எனப்படுகிறது. லத்தீனில் ரோட்டா, ஜெர்மனியில் ராட், வடமொழியில் ரத( ரதம்) எனப்படுகிறது. இதுபோன்ற பல மொழி ஒப்பியல் ஆய்வுகள் மூலம் கிரேக்கம், லத்தீன், வடமொழி ஆகியவை ஒரே குடும்பத்தைச் சார்ந்தவையென்றும், இக்குடும்பத்தினை இந்தோ-ஐரோப்பிய மொழிகள் என்றும் ஆய்வாளர்கள் அழைத்தனர். இம்மொழிக் குடும்பாத்தாரே “ஆரியர்கள்” என வகைப்படுத்தப்பட்டனர்.

மொழியியல் ஆய்வுகள் மூலம் தான் அவர்கள் ஆரியர்கள் என்று அழைக்கப்பட்டனர். வேதங்களில் சொல்லப்படுவது போல குதிரைகளில் வந்தவர்கள். குதிரையின் பலனை அறிந்தவர்கள். இங்கிருந்த பூர்வ குடிகளின் மீது ஆதிக்கம் செலுத்தினர் என்ற கருத்து உருவானது.

கிரேக்கம், லத்தீன், ஜெர்மன், ரோமானிய மொழிகளின் குடும்ப மொழியாக  வடமொழி இருக்குமென்றால், அது இங்கு தோன்றி அதன் பிறகு அங்கெல்லாம் பரவி இருக்கலாமே என்ற கேள்வி எழும். இப்போதுதான் இந்திய நிலப்பரப்பில் இருக்கும் மற்றொரு பெரும் மொழியான திராவிடக் குடும்ப மொழி இக்கேள்வியை இடைமறித்து நிற்கிறது.

marshalls-mohenjodaro-2_0-300x300.jpg
 

இந்தியாவில் ஆரியமொழி தோன்றியிருந்தால் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட திராவிடம் எப்படித் தோன்றியது? ஐரோப்பா வரை பரவிய ஆரியமொழி அருகிலேயே இருக்கும் தென்பகுதியில் ஏன் பரவவில்லை? எனவே வட இந்தியாவில் ஆரியம் பரவியது. தென்னிந்தியாவில் திராவிடம் தொடர்ந்து இயங்கியது என்ற கருத்திற்கு வந்தனர்.மத்திய கிழக்கு ஆசியாவிலிருந்து ஆரியம் பல்வேறு திசைகளுக்கும் பரவியது. அவ்வாறு பரவிய ஒரு கிளை மொழியே வடமொழி என அறியப்படுகிறது.

ஆப்கானிஸ்தானின் ஒரு பகுதியில் இன்றளவும் பேசப்படும் பிருஹி மொழி திராவிடக்குடும்ப மொழியாகவே இருக்கிறது. இந்திய தீபகற்பத்தின் வடபகுதியிலும், அதையும் தாண்டியும் பரவிய ஆரியம் ஆப்கனின் ஒரு பகுதியில் பரவவில்லை. பிருஹி பேசும் மக்கள் ஒரு தனித்தீவாகவே உள்ளனர். இது போன்ற பல சான்றுகள் உள்ளன. மொழி ஒப்பியல் மற்றும் சொற்பிறப்பியல் ஆய்வுகளின் படியே 19 ம் நூற்றாண்டில் ஆரியவருகை எனும் கருத்து உருவாக்கப்பட்டது.

ஆரிய வருகை எனும் கருத்தை பலரும் தங்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பயன்படுத்திய பல நிகழ்வுகள் அப்போது நடந்தேறின. இந்தியாவில் ஆட்சி செலுத்திய ஐரோப்பியர்கள் இங்கிருந்த ஆரியக் கொள்கையைப் பயன்படுத்திக் கொண்டு, இந்தியாவின் வரலாற்றுச் சாதனைகள் முழுமையுமே ஐரோப்பிய நாகரீகத்தின் விளைவுதான் என வாதிட்டனர். தூய ஆரியர்களைக் கொண்ட மத்திய ஐரோப்பா பண்பாட்டில் உயர்ந்திருப்பதாகவும், ஆரியர்களிடமிருந்து பிரிந்த கிளையானதால் தாழ்வானதாக இருப்பதாகவும், ஆரியர்களுடன் தொடர்பே இல்லாத கருப்பர்கள் குரங்குகள் என்றும் வாதிட்டு வந்தனர்.

இங்கிருந்த ஆரியர்கள் ஐரோப்பிய வெள்ளையர்களை தங்களின் பிரிந்து போன சகோதரர்கள் என்ற ரீதியில் அணுகி, ஆரியக் குடும்பத்தின் இருபெரும் கிளைகளின் சந்திப்பு என்றே ஆரவாரமுற்றனர். எனவே தான் ஆர்.எஸ்.எஸ் ஆங்கிலேயர்களை ஆதரித்துக் கிடந்தது. வெள்ளையர்களும், நாமும் ஒரு குலமே என்று அவர்களோடு இணைந்து சமூக அந்தஸ்தை உயர்த்திக் கொள்ள முயன்றனர்.

ஆனால் மராட்டியத்தின் சமூகசீர்திருத்தவாதி ஜோதிபாபூலே போன்றவர்கள் இதை கடுமையாக எதிர்த்தார். உயர்சாதி ஆரியர்கள் அந்நியர்கள், ஆங்கிலேயர்களைப் போலவே நம்மை அடக்குகிறார்கள். எனவே இருவரையும் எதிர்த்து போராட வேண்டுமென முழங்கினார். ஆரியர்களின் பூமி இந்தியா. இங்கிருந்து தான் உலகம் முழுமையும் ஆரியர்கள் பரவினர் என்று ஒரு பிரிவினர் கூறி வந்தனர்.

ஆரியம் இங்கு உருவாகவில்லை என்பதற்குச் சான்றாக ஒரு பெரும் நிகழ்வு அப்போது அவர்களுக்கு பேரிடியாக வந்து சேர்ந்தது. தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்ட மொகஞ்சதாரோ புதைநகரம் அதுவரை இருந்துவந்த கருத்துகளை, தற்போது கீழடியைப் போல தலைகீழாகப் புரட்டிப் போட்டது. சிந்தி மொழியில் மொகஞ்சாரோ என்றால் “இறந்தவர்கள்மேடு” என்று பொருள்.

1921 ம் ஆண்டு புத்தமத வரலாற்றுச் சின்னத்தை ஆராய ரக்கால் தாஸ் பானர்ஜி என்பவர் முற்பட்டபோது தான், அவ்விடத்தின் அடியில் ஒரு நாகரிகத்தின் அடிச்சுவடு இருப்பதை அறிந்தார். அதுவே மொகஞ்சதாரோ. உருவங்கள், முத்திரைகள்,வில்லைகள் பல கிடைத்தன. அதுவரை பாபிலோனிய, எகிப்து நாகரீகங்களே தொன்மையானது என்றும், ஆரிய வருகைக்குப் பிறகே இந்திய நாகரீகம் தோன்றியது என்றும் கருதியவர்களுக்கு சிந்துசமவெளி நாகரீகம் பேரிடியாய் அமைந்தது.

மொகஞ்சதாரோவின் சிந்துசமவெளி நாகரீகம் கி.மு.3000 ஆண்டுகளைச் சார்ந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டது. இது வளர்ந்த வேதநாகரீகத்துக்கு வெகு முன்பே இந்தியாவில் நாகரீகம் இருந்ததை வெளிக்கொணர்ந்தது. 1944 ல் ஹரப்பா விரிவாக ஆராயப்பட்டது. மொகஞ்சதாரோ, ஹரப்பா கி.மு. 3000 த்தைச் சார்ந்தது. அதற்கு முன்பு ஏதுமில்லை என்று கருதிக் கொண்டிருந்த போது மேலும் ஒரு ஆய்வு அதற்கும் முந்தைய காலத்திற்கு அழைத்துச் சென்றது.

1974 ல் பாகிஸ்தானின் கட்ச் பகுதியில் உள்ள மெகர்கார்ஹ் எனும் பகுதியில் பிரெஞ்சு ஆய்வாளர் ஜூன்பிரன்சிஸ்ஜரிஜ் என்பவர் தலைமையில் நடந்த அகழ்வாய்வு முக்கியமானது. இங்கு கண்டுபிடிக்கப் பட்ட தொன்மையான குடியிருப்பு கி.மு. 7000 த்தைச் சார்ந்தது. மொகஞ்சதாரோவுக்கு 3000 ஆண்டுகளுக்கு முன்பு. அதாவது இன்றிலிருந்து 9000 ஆண்டுகளுக்கு முந்தையது.

சாலைகள், பொதுக்குளம்,பாதாளச் சாக்கடைகள், தானியக்கிடங்குகள், வாணிப வில்லைகள், எழுத்துகள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டன.

இங்கு கிடைத்தவற்றை மொழியியல் ஒப்பீட்டு மூலம் ஆய்வு செய்து கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டன.

மெகர்கார்ஹ், மொகஞ்சதாரோ,ஹரப்பா ஆகிய சிந்துசமவெளி நாகரீகங்கள் எப்படி அழிந்தது என்ற கேள்வி எழுந்தது.

வேதங்களில் இந்திரனுக்கு “புரம்தாரா” என்று பெயர் உண்டு.புரம் என்பது கோட்டையைக் குறிக்கும். புரம்தாரா என்றால் கோட்டையைத் தகர்த்தவன் என்று பொருள்தரும் என ஆய்வாளர் வீலர் 1946 ல் கருத்து வெளியிட்டார். வரலாற்று அறிஞர் டி.டி.கோசாம்பி 1956 ல், இந்திரனை விர்ட்ராஹனா என்று விர்ட்டை தகர்ப்பவன் என வேதம் குறிப்பிடுகிறது. எனவே சிந்து நாகரிகம் ஏற்படுத்திய தடுப்பு அல்லது அணையை தகர்த்து அழித்தவன் இந்திரன் என்று கருத்து கூறினார்.

1947 வரை 37 சிந்துநாகரிக குடியிருப்புகள் மட்டுமே இனம் காணப்பட்டது. ஆனால் இன்று 2500 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அகழ்வாராயப்பட்டுள்ளன. மேற்கே சுட்காகேன்டோர் முதல் கிழக்கே யமுனையின் கிளை நதியான ஹந்தானில் உள்ள ஆலம்சீர்பூர் வரையிலும், வடக்கே ஜம்முக்கு அருகே 28 கி.மீ தொலைவில் உள்ள மன்டாவிலிருந்து கட்ச்,சௌராஷ்டிரா வரை தெற்கிலும் விரிந்திருந்தது சிந்து நாகரீகம்.

சிந்து நாகரிகத்தை ஆராயும் போது மூன்று கட்டங்களாக அவை வளர்ந்துள்ளது அறியப்பட்டது. முதற்கட்டம் வடமேற்கேயுள்ள பகுதிகளில் காணப்பட்ட முற்கால சிந்து நாகரிகம். இடைக்கால சிந்து நாகரீகம் ஐந்து நதிக்கரைகளிலும் காணப்பட்டது. இக்கட்டத்தில் மைய ஆளுமை இருந்ததாக கருதப்பட்டது. பிற்கால சிந்து நாகரீகம் வட்டாரப் போக்குகளில் வேறுபாடுகளுடன் இருந்து யமுனை வரை பரவி இருந்தது. எனவே கி.மு. 2000 த்தில் தான் ஆரிய கலாச்சார வருகை குடியிருப்புகளில் காணப்படுகிறது. அவற்றில் தான் வேதங்களில் குறிப்பிடப்படும் பசுபதி போன்ற அம்சங்கள் காணப்பட்டன. இதுவே தொல்லியல் ஆய்வுகளாக நம்மிடம் இருக்கிறது.

b44c6-godsfromindus5-tif-300x122.webp

இதிலிருந்து வேதங்கள் இந்தியாவில் தோன்றியதல்ல என்ற முடிவுக்கு வந்தார்கள்.சங்பரிவார் அமைப்புகளுக்கு வேதபூமி இந்தியா இல்லை என்பது பெரிய சிக்கலாக ஆனது. நவீன தேசக் கொள்கை யாதெனில், ஒரு தேச எல்லைக் கோட்டிற்குள் வாழ்பவர்கள் அத்தேசத்தின் குடிமக்கள் என்பதே. இப்போது அதில் மதத்தை நுழைத்திருக்கிறார்கள். மெக்காவை வழிபடுபவர்கள் இந்தியர்கள் இல்லை என்ற மதவெறி போக்கில் இருக்கிறார்கள்.

அவர்களுக்கு பாரதம் பித்ருபூமி என்கிறார்கள். வேதங்களே இந்தியாவில் எழுதப்படவில்லையென்று ஆய்வுகள் நிரூபித்துவிட்டபடியால் இது புனிதபூமியாக அவர்களுக்கு இருக்காது. வேதம் காட்டும் புனிதபூமி இரான், ஆப்கானிஸ்தானில் உள்ள நதிகள் என்றாகிறது. எனவே தான் இல்லாத ஒரு நதியை சரஸ்வதி நதி என வாதிடத் தொடங்குகிறார்கள். சிந்து சரஸ்வதி நாகரிகம் என்று சொல்லத் துணிகிறார்கள். ஆப்கானிஸ்தானை குடியுரிமையில் இணைத்ததும் தங்களின் பித்ருபூமி என்ற தொட்டுத்தொடரும் பட்டுப்பாரம்பரியம் போலத்தான்.

சிந்து நாகரிகமும், வேத நாகரிகமும் வெவ்வேறானவை என்பதற்கு ஆய்வாளர்கள் தரும் விளக்கங்கள் எவை? வரலாறை படிக்கிற போது புவியியலோடு இணைந்து படித்திட வேண்டும்.இல்லையேல் கதைகளில் லயித்துப் போகும் பேராபத்தை உருவாக்குவார்கள்.

பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முடிவுற்ற உறைபனிக் காலத்திற்குப் பிறகு ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவில் காட்டுக்குதிரை பரிணமித்தது என்பதே விஞ்ஞான வரையறை. இந்தக் குதிரை தான் பழக்கப்படுத்தப்பட்டு வீட்டு விலங்காக ஆக்கப்பட்டது. இந்திய துணைக்கண்டத்தில் இயற்கையான குதிரை பரிணாமம் இல்லை. குதிரை போன்ற உருவமுடைய ஒருவகை கழுதையே இராஜஸ்தான் பகுதிகளில் இருந்தது. இந்தக் கழுதைகளைப் பயன்படுத்தி தேர் போன்ற வண்டிகளில் பூட்டி ஓட்ட முடியாது. சிந்து சமவெளி ஆய்வுகளில் குதிரை கண்டறியப்படவில்லை.

ஆனால் ரிக் வேதத்தில் ஆரியர்கள் அஸ்வம் என்று அழைக்கும் குதிரை பற்றி பல செய்திகள் உண்டு.குதிரை உயர்வாகப் போற்றப்படுகிறது. அசுவமேதயாகம் என்பதும் குதிரை சார்ந்ததே. ரிக் வேதத்தின் பல பாடல்களில் இதனைக் காணலாம். எனவே குதிரையை மையமாக வைத்து எழுதப்பட்ட ரிக்வேதம், குதிரைகள் பரவியிருந்த பாரசீக சமவெளியிலும், இந்துகுஷ் மலைப்பகுதியிலுமே எழுதப்படிருக்க வேண்டும் என்பதே தொல்லியல் ஆய்வாளர்கள் முடிவு.

சங்பரிவார்களின் அரசியல் பிரச்சாரங்கள் கூட குதிரை பூட்டிய ரத வடிவில் இன்றும் இருப்பது அவர்களின் வரலாற்றுத் தொடர்ச்சி தான்.விளிம்பு நிலை மக்களுக்கு நிராகரிக்கப்பட்டும், உடல் உழைப்பை அருவருப்பானதாகவும், தங்களை மேட்டுக்குடியாகவும் கருதிக் கொண்ட மனநோயாளிகளின் விளையாட்டாக உருவாக்கப்பட்டதே குதிரையேற்றம்.

குதிரையேற்றம் நி்ராகரிப்பட்ட மக்கள் உருவாக்கிய விளையாட்டே கால்பந்து. ஆதிக்க வர்க்கம் பொதுவாக இந்த விளையாட்டை ரசிப்பதில்லை.இதில் ஈடுபடுவதும் இல்லை.ஏனெனில் சூது சார்ந்த கோட்பாடுகளைக் கொண்டாடும் கூட்டம் அது. நவீன விஞ்ஞானத்தின் வளர்ச்சியில் முதல் பங்காளிகள் கோடிக்கணக்கான உழைக்கும் கூட்டத்தினரே.

கிராமத்துக் கோவில் திருவிழாக்களில் குதிரையெடுப்பு என்ற நிகழ்வு இன்றும் உள்ளது. குதிரையில் வந்தவர்கள் நம்மை அழிக்கிறார்கள் என்பதன் எதிர்வினை பண்பாட்டு மரபே புரவியெடுப்பு. குதிரைகளில் நாட்டுப்புற தெய்வங்களை அமர வைத்து, கையில் ஆயுதங்களோடு நிறுத்தியதும் பார்ப்பனிய எதிர்சமய மரபே.

வேதங்களில் மிகவும் பேசப்படும் ஒன்று சோமபானம். சோமபானம் எபித்திரா எனும் தாவரத்திலிருந்து தயாரிப்பதாக இனம் காணப்பட்டது. இந்த தாவரம் இந்தியாவில் விளைவதில்லை. இந்துகுஷ் மலைப்பகுதிகளில் அதிகமாக கிடைக்கும் தாவரமே எபித்திரா.

வேதத்தில் பனி மூடிய மலைமுகடுகள் குறித்தும்,காடுகள் பற்றியும் கூறப்படுகிறது. மலைப்பாங்கான பகுதிகளில் வாழ்ந்ததாகக் குறிப்புகள் ஏராளமாய் காணக்கிடக்கிறது. ஆனால் சிந்துசமவெளி நாகரீகங்கள் முற்றிலும் சமவெளிப் பகுதிகள் சார்ந்தது. இங்கு காடுகளோ,பனி மூடிய பகுதிகளோ முற்றிலும் கிடையாது. ஹரப்பன் பகுதி நிலங்கள் கூட பாலைப் பகுதியைச் சார்ந்தது.

ரிக்வேதத்தில் கூறப்படும் வாழ்விடப் பகுதிகள் நீண்ட பகலுக்கும், குறைவான இரவுக்கும் உள்ள விகிதம் 3:2 என்கிறது. 35 டிகிரி வடக்கில் அமைவதே 3:2 என்ற விகிதம். இந்தியப்பகுதியில் ஸ்ரீநகர், ஆப்கானிஸ்தானின் காபூல் முதலிய பகுதிகள் தான் 35 டிகிரி வடக்கில் வரும். நிலநடுக்கோட்டிற்கு அருகே உள்ளவர்களுக்கு இரவும் பகலும் சமமாக அமையும்.  எனவே ரிக்வேத வேதாங்க ஜோதிஷத்தின் படியும் இது ஆரியர்களின் பூமியல்ல.

காலத்தால் மூத்த குடியிருப்புகள் இந்தியாவின் வடமேற்கில் தான் உள்ளன. இளைய குடியிருப்புகள் யமுனையில் காணப்படுகிறது. இதுபோல முற்கால ரிக் வேதத்தில் கங்கை நதி குறித்து எவ்வித குறிப்புகளும் இல்லை. எனவே வடமேற்கிலிருந்து பரவி வந்தனர் என்பதே ஆய்வாக இருக்கிறது.

வேதம் இந்தியாவின் தொன்மம் என்று இவர்கள் கூறுவதைப் போல, ஈரான் பகுதியில் பரவியிருந்த பார்சி மதத்தின் மையநூல் அவெஸ்த்தா ஆகும். அவெஸ்த்தாவிற்கும், வேதத்திற்கும் பல ஒப்புமைகள் இருக்கிறது. சோமபானம் குறித்து இரண்டிலும் குறிப்புகள் உண்டு. மித்ரா, அசுரா முதலியவைகள் அவெஸ்தாவிலும் உண்டு.

இரண்டிலும் பொதுவான பெயர் ஒப்புமைகள் இருந்தாலும், அதன் பொருள் சில இடங்களில் மாறுபட்ட தன்மையுடனும் உள்ளது. வடமொழியின் தேவா என்பது தேவன்,கடவுள் என்று பொருள்.

ஆனால் அவெஸ்தாவில் தேய்வா என்பது அசுரனாக பொருள் கொள்கிறது. நாஸத்யா என்பது அவெஸ்த்தாவில் பேய்த்தன்மை. ஆனால் வடமொழியில் தெய்வத்தன்மை. உதாரணமாக இதுபோல பல ஒப்புமைகளை இரண்டிலும் காணலாம்.

வேதநாகரிகத்திற்கும், இன்றைய ஈரான், துருக்கி பகுதிகளில் வாழ்ந்தவர்களுக்கும் கலாச்சாரத் தொடர்ச்சி இருந்ததற்கு மேலும் ஒரு வலுவான ஆதாரம் உண்டு. கி.மு.1350 ல் மிட்டானியின் அரசனான மட்டிவாஸாவை, ஹிட்டிடிஸின் அரசன் ஸீப்பில்லுலியும்மா தோற்கடித்த போது எழுதப்பட்ட ஒப்பந்தமே அந்த ஆதாரம்.

கியூனிபார்ம் எனப்படும் களிமண்ணில் இந்த ஒப்பந்தம் பொறிக்கப்பட்டுள்ளது. ஒபந்தத்தின் அடியில் கடவுள் பெயர்கள் எழுதப்பட்டு, இக்கடவுளின் மீது ஆணையாக ஒப்பந்தம் நிறைவேற்றப்படும் என ஆவணம் கூறுகிறது.

முதலில் வென்றவர்கள் கடவுள் பட்டியலிடப்பட்டுள்ளது. இரண்டாவதாக தோற்ற மிட்டானி கடவுள்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. இதில் வேதத்தில் உள்ள மித்ரா, வருண,இந்திர, இரண்டு நாஸத்தியர்கள் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

ஆகவே இன்றைய ஈரான் பகுதியில் இந்தக் கடவுள்கள் இட்டுக்கட்டப்பட்டு, பின்னர் இந்தியா நோக்கி பரவிய கலாச்சாரம் அதை உள்வாங்கி புதிய வேதமதமாக உருவாகியது என்று ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.

சிந்துசமவெளி நாகரீகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மிருகத்தின் படத்தைக்காட்டி இதுதான் குதிரை என சங்பரிவார் கும்பல் இன்றுவரை வாதிடுவார்கள். அது ஒற்றைக் கொம்புள்ள காண்டா மிருகத்தின் சாயல் என்றும், யூனிகார்ன் எனும் கற்பனை மிருகம் என்றும் ஆய்வாளர்கள் மெய்ப்பித்தனர்.

புலி, காளை, மான்,யானை என பல விலங்குகள் வில்லைகளாக சிந்துசமவெளியில் கண்டறியப்பட்டாலும் குதிரை மட்டும் இல்லை. எனவே வேதங்கள் உருவானது இந்தியாவில் அள்ள என்றும், ஆரியர்களின் பித்ருபூமி இதுவல்ல என்றும் ஐராவதம் மகாதேவன் உள்ளிட்ட தொல்லியல் அறிஞர்கள் போட்டு உடைத்தனர்.

எனவே தான் தங்களுக்கான ஆதாரங்கள் ஏதுமற்ற நிலையில் இல்லாத, ஓடாத ஒன்றை இருப்பதாகக் கூறி, அதுதான் இது என்ற செந்தில்-கவுண்டமணியின் வாழைப்பழக் கதையை நிர்மலா சீத்தாராமன் பாராளுமன்றத்தில் பேச முயல்கிறார். அதுவே சரஸ்வதி நதி.

இது ஏறக்குறைய தெனாலிராமன் வரைந்த குதிரைக்கதையைப் போலவே உள்ளது. குதிரையை தத்ரூபமாக வரைபவருக்கு பரிசு என மன்னன் அறிவிப்பான்.

தெனாலிராமன் படம் வரைந்து மன்னனுக்காக காத்திருப்பான்.

அரசன் பார்வையிட வருவான்.

தெனாலியின் படத்தைக் கண்டு திகைத்துவிடுவான் மன்னன்.

இது என்ன என்று தெனாலியிடம் கேட்பான் மன்னன். ஒரு கோட்டை வரைந்து வைத்து, இது குதிரையின் வால் என்பான் தெனாலி.

அதுசரி குதிரை எங்கே என்பான் அரசன்.அதுவா.?

சித்திரத்திற்கு அந்தப்புறம் இருக்கிறது என்பான் தெனாலி.

இதுதான் இங்கு பாஜக சொல்கிறது.

mohenjodaro-1964-deep-sounding-226x300.j
 

சிந்து சமவெளி நாகரீகத்தை சிந்து-சரஸ்வதி நாகரீகம் என்றும், வேதப்பண்பாட்டின் முன்னோடியாக முன்னிறுத்துவதற்கு சங்கத்துவக் கூட்டம் செய்து வரும் தொடர் முயற்சிகளுக்கு எதிரான கண்டுபிடிப்பு ஒன்றை புதிய ஆய்வு முடிவுகள் முன்வைக்கின்றன.

பூனாவின் டெக்கான் கல்லூரி, பனாரஸ் இந்து பல்கலைக் கழகம் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் அண்மையில் உத்திரப் பிரதேசம் மற்றும் அரியானா மாநிலத்தில் உள்ள ஹரப்பா நாகரீகத் தொடர்புடைய ஐந்து கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

இப்பகுதிகள் கி.மு. 2600 மற்றும் கி.மு 1900 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் குறிப்பிடத்தக்க நகர வசிப்பிடங்களாக இருந்தன. இங்கு கண்டெடுக்கப்பட்ட பானைகளில் உள்ள உணவுத் துணுக்குகளை (lipid residue analysis) ஆய்வு செய்த அவர்கள், சிந்து சமவெளி மக்கள் ஆட்டு இறைச்சி மட்டுமின்றி, மாட்டிறைச்சியும், பன்றி இறைச்சியும் கூட உட்கொண்டனர் என்பதை உறுதி செய்துள்ளார்கள்.

பசுக்கள் புனிதமானவை, மாட்டிறைச்சி என்பது இந்துக்களால் வெறுக்கப்பட்ட ஒன்றாக இருந்தது, இந்து கலாச்சாரம் தொடக்கம் முதலே அவற்றை ஒதுக்கி வைத்தது போன்ற வாதங்களை இந்த ஆய்வுகள் நிராகரிக்கிறது.

சிந்து சமவெளி நாகரீகத்தை, சிந்து-சரஸ்வதி நாகரீகம் என்று சங்கத்துவத்தினர் உரிமை கொண்டாடினால், மாட்டிறைச்சியும் பன்றி இறைச்சியும் உட்கொண்ட ஒரு நாகரீகத்திற்குத் தான் உரிமை கொண்டாடுகிறார்களா என்று எதிர்க் கேள்வி கேட்க வேண்டும்.

நிஜங்கள் வெளிவரும்போது

அவர்கள் நிர்வாணமாக நிற்க வேண்டி வருகிறது. சிந்து சமவெளி மக்கள் சுத்த அசைவத்தினர் என்பதே ஆய்வு மெய்ப்பிக்கும் உண்மை.

(சூர்யா சேவியர் வெளியிட இருக்கும்

“பண்பாட்டின் அரசியல்” என்ற நூலிலிருந்து ஒரு பகுதி)
 

 

https://uyirmmai.com/article/uyirmmai-magazine-october-2024-surya-xavier-article-01/

  • கருத்துக்கள உறவுகள்

ஓ.. திராவிட பண்பாடா. நான் எதோ புத்தகமும்  தொல்திராவிட மொழியில வரப்போகுதாக்கும் என்று நினைச்சன். 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.