Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
பதியப்பட்டது (edited)

ஓயாத அலைகள் மூன்று வடபகுதி நோக்கி திருப்பப்பட்ட போது அதன் கட்டம் மூன்று தொடங்கப்பட்டது. கட்டம் மூன்றின் ஒரு பகுதியாக யாழ்ப்பாணத்தில் புதிய கேந்திர சமர்முனை ஒன்றைத் திறப்பதற்கான திட்டத்தை தேசியத் தலைவர் அவர்கள் கேணல் வீமன் அவர்களிடத்தில் வழங்கியிருந்தார்.

தலைவரின் திட்டத்தை கேணல் வீமன் (அப்போது லெப். கேணல் தரநிலையுடையவர்) போராளிகளுக்கு தெளிவாக விளக்கப்படுத்தி தயார்ப்படுத்தினார்.

Keeratheevu-ArukuveLi Landing during the operation Unceasing Waves - 3 Phase 3 under Col. Veeman.jpg

தனங்கிளப்பிலிருந்த தளம் ஒன்றின் மீதான அதிரடித்தாக்குதலுக்கான திட்டத்தை கேணல் வீமன் அவர்கள் போராளிகளுக்கு விளங்கப்படுத்துகிறார். அருகில் தினேஸ் மாஸ்டர் நிற்கின்றார்

 

keeratheevu - kizhakku ariyaalai landing (3).jpg

தரையிறக்கத்திற்கு முன்னர் இறுதியாக அறிவுரைகள் புலற்றுகிறார் கேணல் வீமன் | படிமப்புரவு: தவிபு - இன் ஆவண நிகழ்படமொன்றிலிருந்து

இத்தாக்குதலின் முக்கிய நோக்கமானது வன்னி-யாழ்ப்பாணத்‌ தொடர்பை துண்டித்திருந்த சங்குப்பிட்டி-கேரதீவு களப்பைக் கடந்து கேரதீவு கடற்தளத்தை கைப்பற்றிப்‌ பாதுகாப்பதாகும். இப்பரப்பை மீட்பதன்‌ மூலம்‌ சங்குப்பிட்டி - கேரதீவு தொடர்பும் பேணப்படுவதோடு யாழ்ப்பாணம் நோக்கிய பின்னாளைய நகர்விற்கான ஒரு முன்கூட்டிய சமர்முனையையும் திறந்து வைத்திருத்தலாகும்.

அதன் படி 12/12/1999 அன்று காலை பத்துமணியளவில் கேணல் வீமனின் தலைமையில் (இறுதிப் போரில் சரணடைந்து காணாமலாக்கப்பட்டார்) கேரதீவு-கிழக்கரியாலையில் தரையிறக்கமொன்று இருவேறு பிரிவுகளாக மேற்கொள்ளப்பட்டது.

இத்தரையிறக்கத்தில் ஜெயந்தன் படையணியின் (Regiment) கொம்பனிகள் (Company) சில, மாலதி படையணியின் கொம்பனிகள் சில, இம்ரான்-பாண்டியன் படையிணியின் சில பிரிவுகள் (Units) என்பவற்றைக் கொண்ட படைத்தொகுதியொன்று (Brigade) ஈடுபடுத்தப்பட்டது. மொத்தம் 600 போராளிகள் இதில் களமிறக்கப்பட்டனர்.

தரையிறங்கப் போகும் தமிழரின் படைகளிற்கான கடல்வழி நகர்விற்கான பாதுகாப்பை கடற்புலிகள் வழங்கினர். அவர்களோடு இதில் தமிழீழத்தின் அதிரடிப்படையான சிறுத்தைப்படையின் கடற்சிறுத்தை அணியினர் லெப். கேணல் சேரமான் தலைமையில் முக்கிய பங்காற்றினர். 

விடுதலைப்புலிகளின் கிட்டு பீரங்கிப் படையணியின் சேணேவித் தொகுதி (Artillery battery) ஒன்றின் கட்டளையாளரான மேஜர் பாலனின்‌ தலைமையில் தரையிறங்கப் போகும் இடத்திலிருந்த சிறிலங்கா படைநிலைகள் மீது செறிவான சேணேவி சூட்டாதரவு நடாத்தப்பட கடற்புலிகள் தரையிறக்கத்தை வெற்றிகரமாக மேற்கொண்டனர். 

keeratheevu - kizhakku ariyaalai landing (4).jpg

தரையிறக்கத்திற்காக ஆளணி காவி கட்டைப்படகொன்றில் களப்பில் பயணிக்கும் போராளிகள் | படிமப்புரவு: தவிபு - இன் ஆவண நிகழ்படமொன்றிலிருந்து

 

keeratheevu - kizhakku ariyaalai landing (10)  - Small Boats.jpg

கரையை அண்மிக்கும் ஆளணி காவி கட்டைப்படகுகள் (Dhingies) | படிமப்புரவு: தவிபு - இன் ஆவண நிகழ்படமொன்றிலிருந்து

 

keeratheevu - kizhakku ariyaalai landing (8).jpg

கரையை அண்மித்து ஆளணியை தரையிறக்கும் கட்டைப்படகுகள் | படிமப்புரவு: தவிபு - இன் ஆவண நிகழ்படமொன்றிலிருந்து

 

keeratheevu - kizhakku ariyaalai landing (9).jpg

தரையிறங்கியோர் கரையைக் கடக்கும் காட்சி | படிமப்புரவு: தவிபு - இன் ஆவண நிகழ்படமொன்றிலிருந்து

 

keeratheevu - kizhakku ariyaalai landing (1).jpg

மாலதி படையணிப் போராளிகள் தத்தமக்கென ஒதுக்கப்பட்ட குறித்த இடங்கள் நோக்கி நகர்ந்து செல்லும் காட்சி | படிமப்புரவு: தவிபு - இன் ஆவண நிகழ்படமொன்றிலிருந்து

சில படகுகள், குறிப்பாக மாலதி படையணியினரைக் காவிச் சென்றவை படையினரின் இரு முகாம்களுக்கு இடையில் தான் கொண்டுசெல்லப்பட்டு தரையிறக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இத்தாக்குதலை சிங்களம் கிஞ்சித்தும் எதிர்பார்த்திருக்கவில்லை. புலிகளால் களப்பை கடக்க முடியாதென்றே சிங்களம் நம்பியிருந்தது. அந்தளவிற்கு சிங்களக் கடற்படை வலிமையாக கிளாலி, கேரதீவு, கோயிலாக்கண்டி, குருநகர்‌ ஆகிய இடங்களில் தமது கடற்தள கதுவீ ஏந்தனங்களை நிறுவியிருந்தது. இவற்றின் கண்களில் படாமல் எம்மவரால் எதுவித களப்புக் கடப்புகளை மேற்கொள்ளமுடியாது என்றே சிங்களம் உறுதியாகயிருந்தது.

இவற்றையும் மீறு நகர்ந்தால் அதனை முறியடிப்பதற்கென்று சிங்களக் கடற்படையின் சிறப்பு படகுச் சதளம் (Special Boat Squadron) நிலைநிறுத்தப்பட்டிந்தது. மீறி தமிழர் சேனை ஒரு தரையிறக்கத்தை செய்துவிடின், அதனை முறியடிப்பதற்கான அரணத்தையும் தரையிறங்கியோர் பின்வாங்கிடாதபடி கடற்படையின்‌ தடுப்பு இருக்குமாறும் ஒரு பாரிய ஏற்பாட்டை சிங்களம் செய்திருந்தது.

தரையிறங்கிய எமது படைகள் தாக்குதல் திட்டத்திற்கு ஏற்றவாறு வேகமாகவும் பாணித்தும் (சமற். நிதான) தாக்குதலை மேற்கொண்டபடி முன்னகர்ந்தன. 

இதில் குறிப்பிடத்தக்க மோதல் ஒன்று; முன்னர் குறிப்பிட்ட இரு முகாம்களுக்கு நடுவில் தரையிறக்கப்பட்ட புலிகளின் அணிகளின் இரு நிலைகளுக்கு நடுவால் ஊடறுத்து அவர்களுக்குப் பின்பக்கமாக சென்ற சிறிலங்காப் படையினர் பின்னருந்து முன்னோக்கி புலிகள் மேல் தாக்குதல் மேற்கொண்டனர். இதற்கு புலிகளுக்கு சூட்டாதரவு வர வேண்டுமெனில் கடல்வழியாகத் தான் வர வேண்டும். எனினும் கடலிலும் கடற்புலிகளுடன் சிங்களக் கடற்படை சமராடிக்கொண்டிருந்தது. இருப்பினும் மனம்தளராது புலிகள் தமது நிலைகளையும் அணிகளையும் மீளொழுங்குபடுத்தி மீண்டும் முயற்சித்து படையினரை விரட்டியடித்தனர். அத்துடன் தமது நிலைகளையும் மீட்டனர். இம்மோதலில் கொல்லப்பட்ட படையினரில் ஐந்திற்கும் மேற்பட்ட படையினரின் சடலங்களும் பல படைக்கலன்களும் புலிகளால் கைப்பற்றப்பட்டிருந்தன.

keeratheevu - kizhakku ariyaalai landing (2).jpg

சமரின் நடுவே நடைபேசியில் கட்டளை வழங்கும் புலிகளின் அதிகாரி ஒருவர் | படிமப்புரவு: தவிபு - இன் ஆவண நிகழ்படமொன்றிலிருந்து

தரையிறங்கிய போராளிகளின் அடிபாட்டு உருவாக்கமொன்று தரைவழியாக நகர்ந்து அறுகுவெளியிலிருந்த தளமொன்றைத் தாக்கிப் பரம்பியது (overrun). 

இன்னொரு அடிபாட்டு உருவாக்கம் கடற்புலிகளின் கடல்வழித் தாக்குதலின் துணையோடு கேரதீவிலிருந்த கடற்தளத்தை தாக்கிக் கைப்பற்றினர். அத்துடன் இங்கிருந்த கதுவீ (RADAR) மற்றும் பல படைக்கலன்களையும் புலிகள் கைப்பற்றியிருந்தனர். 

keeratheevu - kizhakku ariyaalai landing (10)  - Suudai Class boat.jpg

சூடை வகுப்புப் படகிலிருந்து கேரதீவு கடற்தளம் நோக்கிச் சுடும் கடற்புலிப் போராளி ஒருவர் | படிமப்புரவு: தவிபு - இன் ஆவண நிகழ்படமொன்றிலிருந்து

 

keeratheevu - kizhakku ariyaalai landing (5)- Kfir Class boat - special attack team.jpg

கடற்சிறுத்தை அணியின் அதிரடிக்காரனொருவன் கவிர் வகுப்பு படகிலிருந்து கேரதீவு கடற்தளம் மீது ஆர்.பி.ஜி உந்துகணை செலுத்தும் காட்சி | படிமப்புரவு: தவிபு - இன் ஆவண நிகழ்படமொன்றிலிருந்து

 

keeratheevu - kizhakku ariyaalai landing (6).jpg

சிங்களக் கடற்படையின் கேரதீவு கடற்தளம் | படிமப்புரவு: தவிபு - இன் ஆவண நிகழ்படமொன்றிலிருந்து

அற்றைநாள் மாலைக்குள் விடுதலைப்புலிகள் கேரதீவிலிருந்து அறுகுவெளி வரையிலான நிலப்பரப்பை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். 

அடுத்த நாளும் தொடர்ந்த சமரில் அறுகுவெளி படைத்தளம் விடுதலைப்புலிகளால் பரம்பப்பட்டு அறுகுவெளியும் மீட்கப்பட்டது. அதே நேரம் கிழக்கரியாலையிலிருந்து முன்னகர்ந்து சில பரப்புகளை மீட்டிருந்தனர்.

keeratheevu - kizhakku ariyaalai landing (7).jpg

சமரின் நடுவே சேதமடைந்திருக்கும் கோவிலினூடே முன்னகர்ந்து செல்லும் போராளிகள் | படிமப்புரவு: தவிபு - இன் ஆவண நிகழ்படமொன்றிலிருந்து


உசாத்துணை:

  • 'விடுதலைப்புலிகள்', தை-மாசி, 2000, பக்கம்: 4-5 & 8-10
  • ஓயாத அலைகள்- 3 கட்டம்- 1,2,3 நிகழ்பட ஆவணத்தின் 54:50 - 57:30 நிமிடங்கள் வரை

ஆக்கம் & வெளியீடு:
நன்னிச் சோழன்

 

Edited by நன்னிச் சோழன்


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.