Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம்: மத்திய அரசின் அனுமதிக்கு எதிர்ப்பு வலுப்பது ஏன்? அரிட்டாபட்டிக்கு ஆபத்தா?

பட மூலாதாரம்,HANDOUT

படக்குறிப்பு, அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்
  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
  • பதவி, பிபிசி தமிழ்

மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு இந்துஸ்தான் ஜிங்க் (Hindustan Zinc) நிறுவனத்திற்கு மத்திய சுரங்கத் துறை வழங்கிய ஏலத்தை ரத்து செய்யுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அப்பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனம் தான் இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.

'சுரங்கத்துக்கு அனுமதி கோரி விண்ணப்பம் வந்தால் ஏற்க மாட்டோம்' என தமிழ்நாடு அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது.

டங்ஸ்டன் கனிமத்திற்கான தேவை இருந்தாலும் தமிழ்நாட்டில் அவை போதுமானதாக இல்லை என கூறுகின்றனர், விஞ்ஞானிகள்.

தமிழ்நாட்டில் எதிர்ப்புகள் கிளம்பிய பின்னரும் மத்திய சுரங்கத் துறை அமைச்சகத்திடம் இருந்து விளக்கம் எதுவும் வரவில்லை. இந்நிலையில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகனிடம் பேச பிபிசி தமிழ் முயன்றபோது, அவர் இதுகுறித்துப் பிறகு பேசுவார் என அவருடைய தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது.

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு எழுவது ஏன்? சுரங்கம் அமைவதால் என்ன பாதிப்பு?

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கத் திட்டம்

மதுரை மாவட்டம் மேலூரில் டங்ஸ்டன் கனிமம் எடுப்பதற்கு ஆய்வுடன் இணைந்த சுரங்க குத்தகை உரிமம் வழங்குவதற்கு கடந்த ஜூலை 24ஆம் தேதி, மத்திய சுரங்கத் துறை அமைச்சகம் ஏல அறிவிப்பை வெளியிட்டது.

கடந்த நவம்பர் 7ஆம் தேதி வேதாந்தாவின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் (Hindustan Zinc) நிறுவனத்தைத் தகுதியான நிறுவனமாக மத்திய சுரங்க அமைச்சகம் தேர்வு செய்தது.

இதுதொடர்பாக, மத்திய சுரங்க அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சுரங்கம், கனிம மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை சட்டம் 1957-ன் படி ஏலம் நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

ஆந்திரா மாநிலம் பாலேபாளையம் மற்றும் தமிழ்நாட்டில் மதுரை நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் கனிமம் எடுக்கப்பட உள்ளதாகவும் மத்திய அரசின் அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

அதன்படி, மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் உள்ள நாயக்கர்பட்டி கிராமத்தில் 2,015.51 ஹெக்டேர் பரப்பில் டங்கஸ்டன் சுரங்கம் அமைய உள்ளதாக சுரங்க அமைச்சகத்தின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்திய நிலவியல் ஆய்வு நிறுவனத்தின் தமிழ்நாடு-புதுச்சேரி அலுவலகம், கடந்த 2018-19ஆம் ஆண்டில் மேலூர் தாலுகாவில் உள்ள எட்டிமங்கலம், அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டி ஆகிய இடங்களில் ஆய்வு நடத்தியதாகவும் அதை அடிப்படையாகக் கொண்டு ஏலம் விடப்பட்டதாகவும் மத்திய அரசின் அறிக்கை கூறுகிறது.

 

அரிட்டாபட்டிக்கு ஆபத்தா?

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம்: மத்திய அரசின் அனுமதிக்கு எதிர்ப்பு வலுப்பது ஏன்? அரிட்டாபட்டிக்கு ஆபத்தா?

பட மூலாதாரம்,HANDOUT

படக்குறிப்பு, "டங்ஸ்டன் சுரங்கம் அமைந்தால் பல்லுயிர்ப் பெருக்க மண்டலமாக உள்ள அரிட்டாபட்டி அழியும்" என பல்வேறு தரப்பினரும் எதிர்த்து வருகின்றனர்

மத்திய அரசின் ஏல அறிவிப்புக்கு தமிழ்நாட்டில் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 'டங்ஸ்டன் சுரங்கம் அமைந்தால் பல்லுயிர்ப் பெருக்க மண்டலமாக உள்ள அரிட்டாபட்டி அழியும்' என்றொரு கருத்து முன்வைக்கப்படுகிறது.

கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம், மேலூரில் அரிட்டாபட்டியை உள்ளடக்கிய பகுதிகளை தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர்ப் பெருக்க பாரம்பரிய தலமாக (Biodiversity Heritage Site) மாநில அரசு அறிவித்தது.

தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் இந்த அரசாணையை வெளியிட்டுள்ளது. அதில், 'தமிழில் கல்வெட்டுகள், சமணர் படுக்கைகள், 2,200 ஆண்டுகள் பழமையான குடைவரைக் கோவில்கள், ஏழு சிறு குன்றுகளைத் தொடர்ச்சியாக இப்பகுதி கொண்டுள்ளதாக” கூறப்பட்டுள்ளது.

இப்பகுதிகளில் 72 ஏரிகள், 200 இயற்கை நீரூற்றுக் குளங்கள் மற்றும் 3 தடுப்பணைகள் உள்ளதாகவும் வெள்ளை வல்லூறு, செம்மார்பு வல்லூறு, பாம்புண்ணிக் கழுகு உள்பட 250 பறவைகளும், அலங்கு, மலைப் பாம்பு, தேவாங்கு போன்ற உயிரினங்களும் வாழ்வதாக அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

சுரங்க அமைச்சகத்தின் அறிவிப்புப்படி, இங்குள்ள கழிஞ்ச மலை, நாட்டார் மலை, ராமாயி மலை, அகப்பட்டான் மலை, கழுகு மலை, தேன்கூடு மலை ஆகியவை டங்ஸ்டன் கனிமத் தொகுதிக்குள் வருவதாகக் கூறுகிறார், 'பூவுலகின் நண்பர்கள்' எனும் சுற்றுச்சூழல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோ.சுந்தர்ராஜன்.

"சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பகுதியில் சுரங்கம் அமைக்கப்பட்டால் இயற்கை நீர் சுனைகள் அழிந்து போகும்' என அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார், ஆளும் திமுகவின் கூட்டணியில் உள்ள ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ.

மத்திய சுரங்க அமைச்கத்தின் அறிவிப்பு வெளியான நாளில் இருந்தே டங்ஸ்டன் கனிமத் திட்டத்துக்கு எதிராக சூழல் அமைப்புகள் போராட்டத்தை அறிவித்தன.

 

தமிழ்நாடு அரசின் விளக்கம்

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம்: மத்திய அரசின் அனுமதிக்கு எதிர்ப்பு வலுப்பது ஏன்? அரிட்டாபட்டிக்கு ஆபத்தா?

பட மூலாதாரம்,HANDOUT

படக்குறிப்பு, டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதற்கு அனுமதி அளிக்கவில்லை என, தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது

இந்த நிலையில், 'டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதற்கு மாநில அரசு அனுமதி அளிக்கவில்லை' என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'மத்திய அரசால் மதுரை, மேலூர் வட்டம், நாயக்கர்பட்டி கிராமத்தில் டங்ஸ்டன் கனிமத்திற்கு ஆய்வுடன் இணைந்த சுரங்கக் குத்தகை உரிமம் வழங்க ஏல அறிவிப்பு செய்யப்பட்டது.

கடந்த நவம்பர் 7ஆம் தேதி, இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்தைத் தகுதியான நிறுவனமாக சுரங்க அமைச்சகம் தேர்வு செய்துள்ளது. இதுதொடர்பாக, அந்நிறுவனத்திடம் இருந்து தமிழ்நாடு அரசு எந்த விண்ணப்பமும் பெறவில்லை; அனுமதி ஏதும் வழங்கப்படவில்லை' எனத் தெரிவித்துள்ளது.

இதே கருத்தைக் கடந்த 21ஆம் தேதி செய்தியாளர்களிடம் கூறிய வனத்துறை அமைச்சர் பொன்முடி, "டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பம் வரவில்லை. அப்படியே அனுமதி கேட்டு வந்தாலும் அதை நிராகரிப்போம்," என்றார்.

மத்திய அரசு அனுமதி அளித்திருந்தால் அதை ரத்து செய்வதற்கு அரசு வலியுறுத்தும் எனவும் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

 

கிராமங்களில் எதிர்ப்பு

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம்: மத்திய அரசின் அனுமதிக்கு எதிர்ப்பு வலுப்பது ஏன்? அரிட்டாபட்டிக்கு ஆபத்தா?

பட மூலாதாரம்,HANDOUT

படக்குறிப்பு, டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதற்கு மேலூர் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்

மாநில அரசு விளக்கம் கொடுத்தாலும் மதுரையில் கள நிலவரம் வேறாக உள்ளது. டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதற்கு மேலூர் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

செவ்வாயன்று (நவம்பர் 26) மதுரை அழகர் கோவிலில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று கூடி, இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

தொடர்ந்து, வெள்ளியன்று (நவம்பர் 29) மேலூரில் கடை அடைப்புப் போராட்டத்தை நடத்த உள்ளதாகவும், முல்லைப் பெரியாறு ஒருபோக பாசன விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

சுரங்க ஏலத்துக்கு எதிராக, 30 கிராம சபைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பிபிசி தமிழிடம் கூறினார், டங்ஸ்டன் கனிமத் திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கம்பூர் செல்வராஜ்.

இதுதொடர்பாக, கம்பூர் ஊராட்சி மன்றம் நிறைவேற்றியுள்ள தீர்மானத்தில், 'டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு எந்த அனுமதியும் அளிக்கக் கூடாது. இதுதொடர்பாக சட்டப் பேரவையில் சிறப்புக் கொள்கை முடிவெடுத்து அறிவிக்க வேண்டும்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் என்னென்ன கனிமம் உள்ளது என்பதை மத்திய சுரங்கத்துறை ஆவணப்படுத்தியுள்ளதாகக் கூறும் செல்வராஜ், "மதுரை மாவட்டத்தில் இரண்டு பகுதிகளை டங்ஸ்டன் சுரங்கத்துக்காகத் தேர்வு செய்துள்ளதாக" கூறுகிறார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "மீனாட்சிபுரத்தில் இருந்து சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வரை உள்ள 200 சதுர கி.மீட்டரில் பல்வேறு காலகட்டங்களில் சுரங்கத்துறை ஆய்வு நடத்தியுள்ளது. இதற்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்" என்றார்.

 

எதிர்ப்பை மீறி அமையுமா டங்ஸ்டன் சுரங்கம்?

டங்ஸ்டன் சுரங்கத் திட்டம்

பட மூலாதாரம்,HANDOUT

படக்குறிப்பு, தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் என்னென்ன கனிமம் உள்ளது என்பதை மத்திய சுரங்கத்துறை ஆவணப்படுத்தியுள்ளதாகக் கூறுகிறார், செல்வராஜ்.

அதேநேரம், தமிழ்நாடு அரசின் எதிர்ப்பை மீறி டங்ஸ்டன் சுரங்கம் அமையுமா என்ற கேள்வியும் மேலூர் பகுதி மக்களிடையே எழுந்துள்ளது.

"மாநில அரசின் அனுமதியில்லாமல் கனிம சுரங்கத்தை அமைக்க முடியாது. டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை" என்கிறார், கோ.சுந்தர்ராஜன்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "சுரங்கம் அமைப்பதற்கு பொதுமக்கள் கருத்தைக் கேட்பதை மாநில அரசு செயல்படுத்த வேண்டும். இதற்கு தமிழ்நாடு அரசு மறுத்துவிட்டால் கட்டாயப்படுத்த முடியாது" என்கிறார்.

தேனியில் நியூட்ரினோ திட்டம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்ததையும் ஸ்டெர்லைட் சுரங்கத்தைத் திறப்பதற்கும் தற்போது வரை மாநில அரசு அனுமதி மறுப்பதையும் சுந்தர்ராஜன் மேற்கோள் காட்டினார்.

 

தமிழ்நாட்டில் டங்ஸ்டன் உள்ளதா?

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம்: மத்திய அரசின் அனுமதிக்கு எதிர்ப்பு வலுப்பது ஏன்? அரிட்டாபட்டிக்கு ஆபத்தா?

பட மூலாதாரம்,HANDOUT

படக்குறிப்பு, தமிழ்நாட்டில் சேலம் மற்றும் திருச்சியில் டங்ஸ்டனுக்கான மூலப்பொருள் கிடைக்கிறது என்கிறார் பொன்ராஜ்

இந்த விவகாரத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் முன்னாள் விஞ்ஞானி வெ.பொன்ராஜின் கருத்து வேறாக உள்ளது.

"தமிழ்நாட்டில் சேலம் மற்றும் திருச்சியில் டங்ஸ்டனுக்கான மூலப்பொருள் கிடைக்கிறது. ஆனால், அவை வணிகரீதியாகப் பயன்படுவதற்கேற்ற வகையில் கிடைப்பதில்லை" என்கிறார்,

பிபிசி தமிழிடம் பேசிய வெ.பொன்ராஜ், "சீலைட் (scheelite) மற்றும் வால்ஃபிரமைட் (Wolframite) ஆகியவற்றின் தாதுக்களில் இருந்து டங்ஸ்டன் பிரித்தெடுக்கப்படுகிறது. எரிமலைக் குழம்பு மூலமாகவோ, நிலவியல்ரீதியாக பாறைகள் உருவான இடத்திலோ இவை அதிகமாக கிடைக்கும்" என்கிறார்.

"இந்தியாவில் ராஜஸ்தானில் அதிகளவு டங்ஸ்டன் உள்ளது. மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் டங்ஸ்டன் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது" என்கிறார் வெ.பொன்ராஜ்.

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்படுவது குறித்துப் பேசும் பொன்ராஜ், "கிரானைட் இருக்கும் பகுதிகளில் டங்ஸ்டன் இருக்கலாம் என்றொரு கருத்து உள்ளது. மதுரை மேலூரில் கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதை வைத்து இந்த முடிவுக்கு வந்திருக்க வாய்ப்புகள் அதிகம்" என்கிறார்.

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம்: மத்திய அரசின் அனுமதிக்கு எதிர்ப்பு வலுப்பது ஏன்? அரிட்டாபட்டிக்கு ஆபத்தா?

பட மூலாதாரம்,HANDOUT

படக்குறிப்பு, 'சுரங்க ஏலத்துக்கு எதிராக, 30 கிராம சபைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது'

"உலகளவில் டங்ஸ்டன் உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு என்பது மிக சொற்பமான அளவிலேயே உள்ளது. ஆனால், அதற்கான தேவை அதிகமாக உள்ளது" என்கிறார் வெ.பொன்ராஜ்.

தொடர்ந்து பேசிய அவர், "உலக அளவில் சீனாவில் இருந்து சுமார் 80 சதவிகித டங்ஸ்டன் உற்பத்தி ஆகிறது. கடந்த 2023ஆம் ஆண்டு சீனாவில் இருந்து 63.76 மெட்ரிக் டன் டங்ஸ்டனை இந்தியா இறக்குமதி செய்துள்ளது.

இதன் மதிப்பு என்பது சுமார் 1.6 மில்லியன் டாலர்கள். அதாவது இந்திய மதிப்பில் 13 கோடி ரூபாய்க்கும் மேல் விலை கொடுத்து டங்ஸ்டனை வாங்கியுள்ளனர்.

இவ்வளவு குறைவான விலையில் டங்ஸ்டன் கிடைக்கும்போது, மதுரையில் ஐந்தாயிரம் ஏக்கர் நிலங்களையும் மக்களையும் இடையூறுக்கு ஆட்படுத்த வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது" என்கிறார்.

ஆத்ம நிர்பார் திட்டத்தின்கீழ் இந்தியாவில் டங்ஸ்டனை தயாரிப்பதற்காக இவை ஊக்குவிக்கப்படுவதாகவும் கூறுகிறார், வெ.பொன்ராஜ்.

 

அரசியல் காரணங்களுக்காகத் தடுக்கப்படுகிறதா?

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம்: மத்திய அரசின் அனுமதிக்கு எதிர்ப்பு வலுப்பது ஏன்? அரிட்டாபட்டிக்கு ஆபத்தா?

பட மூலாதாரம்,HANDOUT

படக்குறிப்பு, அரசியல் காரணங்களுக்காக இதுபோன்ற திட்டங்கள் தடுத்து நிறுத்தப்படுவதாகக் கூறுகிறார், இணை பேராசிரியர் ஸ்டீபன்

ஆனால், அரசியல் காரணங்களுக்காக இதுபோன்ற திட்டங்கள் தடுத்து நிறுத்தப்படுவதாகக் கூறுகிறார், மதுரை அமெரிக்கன் கல்லூரியின் இயற்பியல் துறை இணை பேராசிரியரான ஸ்டீபன்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "அதிக வெப்பநிலையைத் தாங்கக்கூடிய உலோகமாக டங்ஸ்டன் உள்ளது. பூமியில் உள்ள அரிதான மூலப் பொருள்களில் ஒன்றான, இதன் கழிவுகளை சூழலுக்குக் கேடின்றி மறுசுத்திகரிப்பு செய்வதற்கான தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்டன" என்கிறார்.

டங்ஸ்டன் திட்டம் நிறுத்தப்பட்டால் மதுரையைச் சுற்றியுள்ள மாவட்டங்களின் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறும் ஸ்டீபன், "கனிம சுரங்கம் தோண்டும்போது தமிழரின் தொன்மை அடையாளங்கள் கிடைத்தால் அப்போது இத்திட்டம் குறித்து மறுபரிசீலனை செய்யலாம்" என்கிறார்.

தமிழ்நாட்டில் எதிர்ப்புகள் கிளம்பிய பின்னரும் மத்திய சுரங்கத் துறை அமைச்சகத்திடம் இருந்து விளக்கம் எதுவும் வரவில்லை. சென்னையில் உள்ள மத்திய சுரங்க அமைச்சக அலுவலக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க பிபிசி தமிழ் தொடர்பு கொண்டபோது, அவர்களிடம் பேச முடியவில்லை.

இதையடுத்து, மத்திய இணை அமைச்சர் எல்.முருகனிடம் பிபிசி தமிழ் விளக்கம் கேட்க முயன்றது. "நாடாளுமன்றக் கூட்டத்தில் இருப்பதால் இதுதொடர்பாகப் பிறகு பேசுவார்" என அவரது உதவியாளர் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.