Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
இஸ்ரோ, ஹேபிடட்-1, விண்வெளி நிலையம்

பட மூலாதாரம்,AAKA SPACE STUDIO

படக்குறிப்பு, லடாக்கில் உள்ள இந்தியாவின் ஹேப்-1 விண்வெளி அனலாக் திட்டம். கட்டுரை தகவல்
  • எழுதியவர், கீதா பாண்டே
  • பதவி, பிபிசி நியூஸ்

மேலே உள்ள படத்திலுள்ள முட்டை வடிவிலான இந்த அமைப்புகள், வருங்காலத்தில் இந்திய விண்வெளி வீரர்கள் விண்வெளியில் வாழும் வீடுகளாக இருக்க முடியுமா?

நிலத்தில் இருந்துகொண்டே விண்வெளியில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் ஹேப்-1 என்றழைக்கப்படும் ஹேபிடட்-1 என்ற சோதனைத் திட்டத்தை முதல் முறையாக இஸ்ரோ உருவாக்கியுள்ளது. லடாக்கில் உள்ள இமயமலைப் பகுதியில் மூன்று வாரங்களுக்கு இந்த சோதனை முயற்சி நடைபெற்றது.

விண்வெளி போன்ற ஒரு சூழலை உருவாக்கி இந்தச் சோதனைகள் நடத்தப்படும்போது, விண்வெளி வீரர்களுக்கும் மற்ற உபகரணங்களுக்கும் ஏற்படும் பிரச்னைகளைக் கண்டறிந்து சரி செய்ய முடியும் என்று குஜராத்தை சேர்ந்த விண்வெளி நிறுவனமான ஆகாவில் (Aaka), விண்வெளி பொறியாளராகப் பணிபுரியும் ஆஸ்தா கச்சா-ஜாலா பிபிசியிடம் தெரிவித்தார்.

ஹேப்-1, விண்வெளி தரத்திலான டெஃப்ளான் உலோகத்தால் தயாரிக்கப்பட்டது. இது தொழிற்சாலைகளில் பயன்படுத்தபடும் பாதுகாக்கப்பட்ட ஃபோம் (foam) அமைப்புடன் கட்டமைக்கப்பட்டுள்ளது.

 

இதில் ஒரு மெத்தை, வேலை செய்வதற்கான மடித்து வைக்கக்கூடிய ஒரு மேசை, தினசரி மற்றும் அவசரக்கால தேவைகளுக்கான பொருட்களை வைப்பதற்கான ஓர் இடம், சிறிய சமையலறை மற்றும் கழிவறை இருக்கின்றன. இந்தச் சோதனைக்காக மூன்று வாரங்கள் வரை விண்வெளி வீரர் ஒருவர் இங்கு தங்கியிருந்தார்.

"செவ்வாய் கிரகமோ, நிலவோ எதுவாக இருந்தாலும் அங்கிருக்கும் சுற்றுச்சூழலில் நிலவும் மிகக் குறைந்த அளவிலான வசதிகள் மற்றும் கட்டுமான சவால்களைக் கருத்தில் கொண்டே ஹேப்-1 கட்டமைக்கப்பட்டுள்ளது. விண்வெளியில் தண்ணீருக்கு சிக்கல் இருக்கும் என்பதால் நீர் இன்றி இயங்கும் கழிவரையை உருவாக்கியுள்ளோம். அதில் துர்நாற்றம் வெளிவராத வகையில் கழிவை வெளியேற்றும் அமைப்பைப் பயன்படுத்தியுள்ளோம்," என்கிறார் ஆஸ்தா கச்சா-ஜாலா.

இஸ்ரோவின் முதல் 'விண்வெளிக் குடியிருப்பை', அதாவது விண்வெளியில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தக்கூடிய மாதிரி குடியிருப்பை லடாக்கில் அமைப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஜாலா ஈடுபட்டுள்ளார்.

 

ககன்யான் திட்டத்தில் விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்ப இந்தியா தயாராகி வருகிறது. இந்தச் சூழலில் விண்வெளிக் குடியிருப்புகள் குறித்த இந்தத் திட்டத்திற்கான சோதனை முயற்சிகளும் தொடங்கியுள்ளன.

சுமார் 400 கி.மீ. உயரத்தில், பூமியின் குறைந்தபட்ச சுற்றுப்பாதையில் மூன்று நாட்களுக்கு விண்வெளியில் வீரர்களை நிலை நிறுத்துவதே இஸ்ரோவின் ககன்யான் திட்டம். இதற்கான அனைத்து செயல்முறையும் திட்டமிட்டபடி நடந்தால் இத்திட்டம் வரும் ஆண்டில் செயல்படுத்தப்படும்.

இந்தியா தனது முதல் விண்வெளி நிலையத்தை 2035ஆம் ஆண்டில் அமைக்கத் திட்டமிட்டுள்ளது. மேலும் 2040ஆம் ஆண்டிற்குள், மனிதனை நிலவுக்கு அனுப்பவும் இந்தியா திட்டமிட்டுள்ளது.

நாசா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், ரஷ்யா, சீனா போன்ற பல்வேறு நாடுகளும், விண்வெளி ஆய்வு நிறுவனங்களும் இதுபோன்ற பல 'விண்வெளி வாழ்க்கை' தொடர்பான மாதிரி வடிவமைப்புகளை சோதனை செய்யும் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றன.

இதற்கிடையில், ககன்யான் திட்டத்தில் பங்குபெறத் தேர்வாகியுள்ள நான்கு விண்வெளி வீரர்களில் இருவருக்கு தற்போது நாசாவில் அதற்கான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

இஸ்ரோ, ஹேபிடட்-1, விண்வெளி நிலையம்

பட மூலாதாரம்,AAKA SPACE STUDIO

படக்குறிப்பு, நிலாவிலோ செவ்வாயிலோ நிலவும் சுற்றுச்சூழலில், அங்கு கட்டுமானங்களை மேற்கொள்வதில் இருக்கும் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு ஹேப்-1 வடிவமைக்கப்பட்டதாகக் கூறுகிறார் ஆஸ்தா கச்சா-ஜாலா

"விண்வெளி வாழ்வனுபவம் தொடர்பாகத் தனது சொந்த திட்டங்களை இந்தியாவால் செயல்படுத்த முடியுமானால், நமது விண்வெளி வீரர்களின் பயிற்சிக்கு மற்ற நாடுகளின் விண்வெளி நிலையங்களைச் சார்ந்திருக்க வேண்டியதிலை," என்று லடாக் பல்கலைக்கழகத்தின் ஆய்வுப் படிப்புகளுக்கான துறைத் தலைவர் பேராசிரியர் சுப்ரத் ஷர்மா தெரிவித்துள்ளார். இத்திட்டத்தில் லடாக் பல்கலைக்கழகமும் கைகோர்த்துள்ளது.

லடாக் பாறைகள் நிறைந்த ஒரு தரிசு நிலம் எனக் கூறுகிறார் அவர். "செவ்வாய் மற்றும் நிலவின் நிலப்பரப்புடன் லடாக்கின் நிலவியல் ஒத்திருக்கிறது. அதனால், இந்தப் பகுதி விண்வெளி ஆய்வுக்கு உகந்ததாக இருக்கும் என்பதால் இங்கு சோதனை செய்யப்பட்டது," என்று பிபிசியிடம் சுப்ரத் ஷர்மா தெரிவித்தார்.

இந்தச் சோதனையின்போது சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளை பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்கின்றனர். இதன் மூலம் விண்வெளியில் அந்தந்த பகுதிகளிலேயே கிடைக்கும் பொருட்களைக் கொண்டு விண்வெளியில் வீடுகளை அமைக்க முடியுமா என்பதை ஆய்வு செய்கின்றனர்.

இஸ்ரோ, ஹேபிடட்-1, விண்வெளி நிலையம்

பட மூலாதாரம்,AAKA SPACE STUDIO

படக்குறிப்பு, இந்தியாவின் சோதனை விண்வெளி நிலையத்தில் மூன்று வாரங்களை செலவிட்ட விண்வெளி வீரர்.

இந்திய- சீனா எல்லையில் உள்ள இந்த இமயமலைப் பகுதி சுமார் 3,500 மீட்டர் உயரத்தில் உள்ளது. இங்கு வானிலை மிகவும் தீவிரமாக இருக்கும். அதாவது ஒரு நாளின் அதிகபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் முதல் குறைந்தபட்சம் -18 டிகிரி செல்சியஸ் வரை நிலவக்கூடும்.

இது செவ்வாயின் வெப்பநிலைக்கோ (-153 செல்சியஸைவிட குறையலாம்) அல்லது நிலவின் வெப்பநிலைக்கோ (ஆழமான பள்ளங்களில் -250 செல்சியஸ் வரை இருக்கும்) எந்த விதத்திலும் பொருந்தவில்லை. ஆனாலும் ஒரு மனிதரால் எந்த அளவு வரையிலான வெப்பநிலையைத் தாங்க முடியும் என்பதை அறிவதற்கான முயற்சியே இந்தச் சோதனை.

"ஒவ்வொரு முறையும் இதுபோன்ற சோதனைக்காக விண்வெளிக்குச் செல்ல முடியாது என்பதால், விண்வெளி போன்ற அம்சங்களைக் கொண்ட ஒரு சோதனை நிலையம் அவசியமாகத் தேவைப்படும்," என்றார் பேராசிரியர் ஷர்மா.

மேலும், "லடாக்கில் தரிசு நிலங்கள் பறந்து விரிந்து கிடப்பதால், நீங்கள் விண்வெளியில் தனியாக இருப்பது போன்ற உணர்வு உங்களுக்குக் கிடைக்கும்," என்றார் அவர். தானும் இதே போலத்தான் உணர்ந்ததாக மூன்று வாரங்கள் இந்தக் கட்டமைப்பில் தங்கியிருந்த விண்வெளி வீரர் தெரிவித்துள்ளார்.

"மனித சுற்றுச்சூழல் அமைப்புகளில் இருந்து நான் முற்றிலுமாகத் தனிமைப்படுத்தப்பட்டேன். எனது அன்றாடப் பணிகள், எப்போது எழ வேண்டும், எப்போது என்ன செய்ய வேண்டும், தூங்க வேண்டும் என அனைத்துமே முன்கூட்டியே திட்டமிடப்பட்டது. நான் செய்யும் அனைத்து வேலைகளும் 24 மணிநேரமும் கேமரா மூலம் கண்காணிக்கப்படும். எனது செயல்பாடுகள் மற்றும் ஆரோக்கியம் குறித்த தரவுகள் சேகரிக்கப்படும்," என்று தனது பெயரைக் குறிப்பிட விரும்பாத, இந்தச் சோதனையில் பங்கெடுத்த 24 வயது நபர் ஒருவர் தெரிவித்தார்.

"ஆரம்பத்தில் எல்லாம் நன்றாக இருந்தது. ஆனால் போகப் போக செய்ததையே மீண்டும் மீண்டும் செய்வது போல் இருந்தது. இது எனது அன்றாடச் செயல்பாடுகளைப் பாதித்தது. நான் தூங்கும் முறையைப் பாதித்தது, எனக்கு கவனக் குறைப்பாட்டை ஏற்படுத்தியது."

விண்வெளி வீரரின் உடலில் பயோமெட்ரிக் சாதனங்கள் பொருத்தப்பட்டு அவரது தூக்க முறை, இதயத் துடிப்பு மற்றும் மன அழுத்தம் ஆகியவை கண்காணிக்கப்பட்டன. அவரது உடல் எந்த அளவிற்கு இந்த நிலையை ஏற்றுக்கொள்கிறது என்பதை அவரது ரத்தம் மற்றும் எச்சிலை தினமும் சோதனை செய்து கண்காணித்தனர்.

இஸ்ரோ, ஹேபிடட்-1, விண்வெளி நிலையம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கடந்த 1969ஆம் ஆண்டு பஸ் ஆல்ட்ரின் நிலவில் நடக்கும் புகைப்படம் இது.

விண்வெளியில் மனிதர்களைப் பாதிக்கும் உளவியல் காரணிகளைக் கண்டறிவதும் இந்தச் சோதனைத் திட்டத்தின் முக்கிய அம்சமாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

உலகம் முழுவதும் உள்ள விண்வெளி நிலையங்கள் தங்களுடைய விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்ப, அவர்களுக்கென நிரந்தரமான தங்குமிடத்தை இனி வரும் காலங்களில் அமைக்க முயன்று வருகின்றன. அதனால் இதுபோன்ற திட்டங்கள் விண்வெளிக்கான ஆய்வுகளிலும் பயிற்சிகளிலும் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் ஒரேகன் என்ற இடத்தில் நாசாவின் லாஸீ என்ற இயந்திர நாயை நிலவின் மேற்பரப்பில் நடக்க வைப்பதற்கான சோதனைத் திட்டத்தை மேற்கொண்டனர். கடந்த ஜூன் மாதம் நான்கு பேர், டெக்சாஸில் உள்ள விண்வெளியில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் வசதியில் தங்கியிருந்து வந்தனர். இந்தச் சோதனை பிரத்யேகமாக செவ்வாய் கிரகத்தில் இருப்பது போன்ற உணர்வை வழங்கும்.

எகனாமிஸ்ட் நாளிதழைப் பொருத்தவரை, நிலவின் மேற்பரப்பில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு 3D அடித்தளத்தை நாசா அமைக்கப் போகிறது. அதேநேரத்தில் சீனாவும் ரஷ்யாவும் இந்தத் திட்டத்தில் இணைந்து செயல்படுகின்றனர்.

விண்வெளித் திட்டங்களைப் பொறுத்தவரை இந்தியா பின்தங்கிய நிலையில் இருக்க விரும்பவில்லை. "லடாக்கில் சேமிக்கப்பட்ட தரவுகளை ஆய்வு செய்த பிறகு, நமது விண்வெளி வீரர்கள் விண்வெளியில் சிக்கலை எதிர்கொள்ளும்போது அவர்களுக்கு உதவ, சிக்கல்களைச் சமாளிக்க மருத்துவ தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கு இது உதவும்" என்று பேராசிரியர் ஷர்மா கூறுகிறார்.

"பூமியைவிட இரவும் பகலும் அதிகமாக இருக்கும் நிலவிலும் அதேபோல ஆக்சிஜன் இல்லாத விண்வெளியிலும் வாழ்ந்தால் நமது மனித உடல் எவ்வாறு செயல்படும் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்," என்று அவர் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.