Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கடலூர் கன்னரதேவன் கல்வெட்டு கூறும் செய்தி என்ன?
கட்டுரை தகவல்
  • எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

ராஷ்டிரகூட மன்னர் மூன்றாம் கிருஷ்ணன் எனப்படும் கன்னரதேவனின் கல்வெட்டு ஒன்று, கடந்த சில வாரங்களுக்கு முன்பாக கடலூர் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்தக் கல்வெட்டு சொல்லும் புதிய செய்தி என்ன?

கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் அருகே உள்ள எஸ். நரையூர் கிராமத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள முற்றிலும் சிதிலம் அடைந்த சிவன் கோவிலில் சில வாரங்களுக்கு முன்பாக புதிய கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

 

சிதிலமைடந்து கிடந்த இந்த சிவன் கோவிலைப் புதுப்பிக்க சில வாரங்களுக்கு முன்பாக கோவில் நிர்வாகத்தினர் முடிவு செய்தனர். கடந்த மாதம் அதற்கான வேலைகளைத் தொடங்கியுள்ளனர். அப்பொழுது, அங்கு சில கல்வெட்டுகள் இருந்ததை உள்ளூர் மக்கள் பார்த்தனர்.

இந்தக் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட செய்தி கிடைத்ததும் அங்கு சென்ற விழுப்புரம் பேரறிஞர் அண்ணா கலைக் கல்லூரியின் வரலாற்றுத் துறை பேராசிரியர் ரமேஷ் உள்ளிட்டோர் அதனைப் படித்தனர்.

இதுவரை ஆய்வு செய்யப்படாத ஆறு கல்வெட்டுகள்

இந்தக் கோவிலில் ஆறு கல்வெட்டுகள் கண்டறியப்பட்டதாகக் குறிப்பிடும் பேராசிரியர் ரமேஷ், அவை இதுவரை படிக்கப்படாத புதிய கல்வெட்டுகள் என்கிறார்.

இந்தக் கோவிலின் மூலவரின் பெயர் பிரஹமீஸ்வரமுடையார் அல்லது பிரஹமீஸ்வரமுடைய நாயனார் என்றும் அம்பாளின் பெயர் 'தாயிலும் நல்ல நாயகியார்' என்றும் வருகிறது என்று குறிப்பிடுகிறார் ரமேஷ். இங்கு கிடைத்த கல்வெட்டுகளில் ஒன்று, ராஷ்டிரகூட மன்னர் கன்னரதேவனின் கல்வெட்டு எனத் தெரிவித்தார்.

"ஸ்வஸ்தி ஸ்ரீ கச்சியுந் தஞ்சையும் கொண்ட ஸ்ரீ கண்ணர தேவர்க்கு யாண்டு பதிமூன்றாவது மிலாட்டு கூற்றத்து நரையூருந்து வாழும் கங்க பள்ள சதனென் புத் தரை யடுத்து ப்ரஹமீஸ்வரமுடையார்க்கு வைத்து நொந்தா விளக்கு ஒன்று இது இறக்குவான் ஏழானூழியும் மறுபன் இது பன்மஹெஸ்வரரக்ஷை" என்கிறது அந்தக் கல்வெட்டு.

வரலாற்றில் ராஷ்டிரகூட மன்னர் மூன்றாம் கிருஷ்ணரே கன்னரதேவன் எனக் குறிப்பிடப்படுகிறார். ஆகவே, இந்தக் கல்வெட்டின் காலம் கி.பி. 949 முதல் 967ஆக இருக்கலாம் என்று குறிப்பிடும் ரமேஷ், கி.பி. 949ல் நடந்த தக்கோலப் போருக்குப் பிறகு இந்த பகுதி ராஷ்டிரகூடர் ஆட்சியின் கீழ் இருந்துள்ளது என்பதற்கு இந்தக் கல்வெட்டு மேலும் ஒரு முக்கிய ஆதாரம் என்கிறார்.

கடலூர் கன்னரதேவன் கல்வெட்டு கூறும் செய்தி என்ன?
படக்குறிப்பு, கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் அருகே உள்ள எஸ். நரையூர் பகுதியில் முற்றிலும் சிதிலம் அடைந்த சிவன் கோவில்

ராஷ்டிரகூடர்களின் ஆட்சி

முதல் பராந்தகச் சோழனின் ஆட்சிக் காலத்தில் வடக்கில் திருக்காளகஸ்தி முதல் தொண்டை மண்டலம் வரை சோழர் ஆட்சி பரவி இருந்தது என்ற போதிலும் தக்கோலப் போருக்குப் பிறகு ராஷ்டிரகூடர்களின் ஆட்சி நடு நாடு முழுவதும் பரவியது.

கி.பி. 949க்கும் கி.பி. 967க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் கன்னரதேவன் என்று அழைக்கப்பட்ட இந்த மூன்றாம் கிருஷ்ணன் சோழர் நாட்டின் பல பகுதிகளைக் கைப்பற்றினார். தக்கோலப் போரில் சோழ இளவரசர் ராஜாதித்தனை வீழ்த்திய கன்னரதேவன் தொடர்ந்து சோழர்களின் எல்லைப் பரப்பை சுருங்கச் செய்தார்.

"இதுவரை திருவதிகை வீரட்டானம் கோவிலுக்குத் தெற்கே கன்னரதேவன் பற்றிய கல்வெட்டானது அறியப்படவில்லை. ஆனால், தற்போது இந்தக் கல்வெட்டு கிடைத்திருக்கிறது. இந்தக் கல்வெட்டின் மூலம் எஸ். நரையூர் வரை கன்னரதேவனின் ஆட்சி நீண்டுள்ளதை அறியலாம். பிறகு மீண்டும் சோழர்கள் வசம் இந்த பகுதி வந்தது என்பதை இங்கு கிடைக்கும் பிற கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன" என்கிறார் ரமேஷ்.

இதே கோவிலில் கிடைக்கும் உத்தம சோழன் கால கல்வெட்டு நிலம் தானம் வழங்கப்பட்ட செய்தியை தெரிவிக்கிறது. உத்தமசோழனின் ஒன்பதாம் ஆட்சி ஆண்டில் நிலம் தானம் வழங்கப்பட்டது பற்றி தெரிவிக்கும் அந்தக் கல்வெட்டு "(உத்தம சோ)ழரைத் திருவயிரு வாய்த்த செம்பியன் மஹாதேவியார்" என்று தொடங்குகிறது.

கடலூர் கன்னரதேவன் கல்வெட்டு கூறும் செய்தி என்ன?
படக்குறிப்பு, தக்கோலப் போரில் சோழ இளவரசர் ராஜாதித்தனை வீழ்த்திய கன்னரதேவன் தொடர்ந்து சோழர்களின் எல்லைப் பரப்பை சுருங்கச் செய்தார்

விளக்கு எரிக்க தானம்

இங்குள்ள ராஜராஜ சோழன் காலத்துக் கல்வெட்டு குறித்தும் விளக்கினார் ரமேஷ். ராஜராஜசோழன் காலத்தில் சண்டையில் இறந்த வணிகக் குழுவின் வீரன் நினைவாக விளக்கு எரிக்க தானம் வழங்கப்பட்ட செய்தியை அந்தக் கல்வெட்டு அளிக்கிறது.

"காந்தளூர் சாலை கலமறுத்த கோ ராசகேசரி பந்மர்க்கு....'' என்று தொடங்கும் இந்தக் கல்வெட்டு ராஜராஜசோழரின் பத்தாவது ஆட்சியாண்டில் ஐந்நூற்றுவர் வணிகக் குழுவைச் சேரந்த வீர செட்டி என்பவர் 'பூசலில் பட்டதுக்கு நரையூர் பிரமீஸ்வரமுடையார் நொந்தா விளக்கு எரிக்க 10 கழஞ்சு பொன் குடுத்த பிரம்மதேயத்துக்கு நிலம்விட்ட' செய்தியை சொல்கிறது" என்கிறார் ரமேஷ்.

இதே கோவிலில் மூன்றாம் ராஜேந்திர சோழன் கால கல்வெட்டு ஒன்றும் இருக்கிறது. "இங்குள்ள அவரது 25ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டில், 'தொழுவூருடையான் மாதுயாந்தித்தன் எழுந்தருளி வித்த திருக்காமக் கொட்டமுடைய தாயிலுந் நல்ல நாயகி" என்று அம்பாளுக்கு சந்நிதி எழுப்பியது பற்றிய செய்தியும் இறையிலியாக நிலம்விட்ட செய்தியும் இந்தக் கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது.

இங்கு கிடைக்கும் மற்றொரு கல்வெட்டு 17 அல்லது 18ம் நூற்றாண்டைச் சார்ந்தது. அதில் "அதிருங்கழல் பெருமாள் கண்ட திருப்பணி இடிஞ்சு சரிஞ்சு போகையில் மகன் சொக்கப்பெருமாள் சேதிராயன் கண்ட திருப்பணி" என, அந்தக் கோவிலுக்கு தந்தை செய்த திருப்பணி இடிந்து போகவே அதனை மகன் புதுப்பித்ததைக் கூறுகிறது என்கிறார் ரமேஷ்.

மிகப்பெரிய வேலைப்பாடுடன் கூடிய அந்தச் சிவன் கோவில் இடிந்து, சிதைந்துபோன நிலையில் இருந்துவந்தது. சில தூண்கள் மட்டுமே கோவில் மேற்கூரையைத் தாங்கிக் கண்டிருந்தன. தற்போது சிலைகள் அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டுள்ளன.

மிகுந்த சிதிலமடைந்த நிலையில் இந்த கோவில் தற்போது இருந்தாலும் வரலாற்றில் மிக முக்கியமான செய்திகளை தந்துள்ளது எனக் குறிப்பிடும் ரமேஷ், இதன் அருகில் உள்ள கிராமப் பகுதிகளில் மேலும் சில கல்வெட்டுகள் இருக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தக்கோலப் போர்: சோழர்களின் தோல்விக்கு வித்திட்ட ராஜாதித்த சோழன் வீரமரணம் - யானை மீதிருந்தவருக்கு என்ன நேர்ந்தது?

ராஜாதித்த சோழன், தக்கோலப் போர்

பட மூலாதாரம்,BJP TAMILNADU / INSTAGRAM

கட்டுரை தகவல்

  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  • பதவி, பிபிசி செய்தியாளர்

  • 11 மார்ச் 2025, 01:50 GMT

தக்கோலத்தில் உள்ள மத்திய தொழிற் பாதுகாப்புப் படையின் பிராந்திய பயிற்சி மையத்துக்கு ராஜாதித்த சோழனின் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. தக்கோலத்துக்கும் ராஜாதித்த சோழனுக்கும் என்ன தொடர்பு? அந்தப் போரில் நடந்தது என்ன?

மார்ச் ஏழாம் தேதியன்று ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தில் உள்ள மத்திய தொழிற் பாதுகாப்புப் படையின் பிராந்திய பயிற்சி மையத்தில் நடைபெற்ற 56வது நிறுவன நாள் விழாவில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அந்த மையத்துக்கு ராஜாதித்த சோழனின் பெயர் சூட்டப்படுவதாக அறிவித்தார். தக்கோலத்துக்கும் ராஜாதித்த சோழனுக்கும் இடையிலான தொடர்பை மனதில் வைத்தே இந்தப் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

பிற்காலச் சோழ மரபைச் சேர்ந்தவரான ராஜாதித்த சோழன் ஒருபோதும் மன்னராக இருந்ததில்லை. இருந்த போதும், சோழ வரலாற்றில் ஒரு முக்கியமான இடம் இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

தக்கோல யுத்தத்தின் முக்கியத்துவம்

பிற்காலச் சோழ மன்னர்களின் வரிசையில் மூன்றாவதாக வருபவர் முதலாம் பராந்தகச் சோழன். கி.பி. 955ல் இவர் மரணமடைந்தார். சோழ மன்னர்களிலேயே மிகவும் புகழ்பெற்ற மன்னராக இருந்த ராஜராஜ சோழன் கி.பி. 985ல் மன்னராக முடிசூடினார். இந்த இரு மன்னர்களுக்கும் இடையிலான காலகட்டம் 30 ஆண்டுகள்.

ஆனால், 'இந்த முப்பது ஆண்டுகள் சோழ வரலாற்றின் மிகக் கடுமையான பகுதி' எனக் குறிப்பிடுகிறார், சோழர்களின் வரலாற்றை எழுதிய பேராசிரியர் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி. அப்படி ஒரு கடுமையான சூழலை சோழ அரசுக்கு ஏற்படுத்திய யுத்தம்தான் தக்கோல யுத்தம்.

முதலாம் பராந்தகச் சோழன் இரண்டு சேர இளவரசிகளை மணந்திருந்தார். அவர்களில் கோ கிழான் அடிகளுக்குப் பிறந்தவர்தான் ராஜாதித்தன். பராந்தகச் சோழனுக்கு கண்டராதித்தன், அரிஞ்சயன் என வேறு இரு மகன்களும் உண்டு.

ராஜாதித்த சோழன், தக்கோலப் போர்

பட மூலாதாரம்,PIB

படக்குறிப்பு,தக்கோலத்தில் உள்ள மத்திய தொழிற் பாதுகாப்புப் படையின் பிராந்திய பயிற்சி மையத்திற்கு ராஜாதித்திய சோழனின் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது

ராஜாதித்தன் கொல்லப்பட்ட போர்

ராஷ்டிரகூட (ஏறக்குறைய தற்போதைய கர்நாடகப் பகுதி) மன்னனான மூன்றாம் கிருஷ்ண தேவன், கி.பி. 949-இல் சோழ நாட்டின் மீது படையெடுத்து வந்தார். கங்க நாட்டின் மன்னனான இரண்டாம் பூதுகனும் பெரும் படையுடன் அவருக்கு துணையாக சேர்ந்துகொண்டார்.

இந்த இரு படைகளும் ஒன்றாகச் சேர்ந்து, சோழ நாட்டின் ஒரு பகுதியான தொண்டை நாட்டைத் தாக்கின. அந்தத் தருணத்தில் திருநாவலூரில் தன் படையுடன் சோழ இளவரசனான ராஜாதித்தன் தங்கியிருந்தார். ராஷ்டிரகூட படைகளை எதிர்கொள்வதற்காக தக்கோலத்துக்குச் சென்றார் ராஜாதித்தன். இந்தப் போரில்தான் அவர் கொல்லப்பட்டார்.

இந்தப் போர் திடீரெனத் துவங்கியதில்லை. இந்தப் போருக்கு ஒரு நீண்ட காலப் பின்னணி இருந்தது. இந்தப் பின்னணியை தனது 'லார்ட்ஸ் ஆஃப் எர்த் அண்ட் சீ' (Lords of Earth and Sea) நூலில் சுவாரஸ்யமாக விவரிக்கிறார் அனிருத் கனிசெட்டி.

தக்கோலப் போருக்கான விதை

கி.பி. 930களின் பிற்பகுதி.

பராந்தகச் சோழனின் அரசவையில் வந்து நின்ற அந்த இளைஞன், எல்லாவற்றையும் இழந்திருந்தாலும் அவனுடைய ஆடைகள் சிறப்பாகவே இருந்தன. அந்த இளைஞன் வேறு யாருமல்ல, சில மாதங்களுக்கு முன்புவரை ராஷ்டிரகூட ராஜ்ஜியத்தின் மன்னனாக இருந்தவன்.

தன்னுடைய தளபதிகளே தனக்கு எதிராக சூழ்ச்சி செய்து, தன்னைத் தூக்கியெறிந்துவிட்டு தனது வயதான சித்தப்பாவை மன்னராக்கியிருப்பதாகவும் தனக்கு ஆதரவாகப் படையெடுத்து வந்து நாட்டை மீட்டுத்தர வேண்டுமென்றும் பராந்தகச் சோழனிடம் சொன்னான் அந்த இளைஞன் (இவரது பெயரை கெனிசெட்டி குறிப்பிடவில்லை. ஆனால், இந்த மன்னன் கி.பி. 930 முதல் கி.பி. 936வரை ராஷ்டிரகூட நாட்டை ஆண்ட நான்காம் கோவிந்தன் என்கிறார், வரலாற்றாசிரியரான சதாசிவ பண்டாரத்தார்).

ராஜாதித்த சோழன், தக்கோலப் போர்

பட மூலாதாரம்,JUGGERNAUT

தொடர்ந்து வெற்றிகளைச் சந்தித்து வந்த பராந்தகச் சோழன் அந்த இளைஞனை ஆதரிக்க முடிவுசெய்தார். அவனுக்கு தன் மகளையும் திருமணம் செய்துவைத்தார். தன் கணவருக்கு சோழ நாடு ஆதரவு அளித்திருப்பதை தெரிவித்ததைக் குறிக்கும் வகையில், தக்கோலத்தில் இருந்த ஒரு கோவிலுக்கு அணையா விளக்கு ஒன்றை பரிசளித்தாள் பராந்தகச் சோழனின் மகள். ஆனால், அதே தக்கோலத்தில் எதிர்பாராத சம்பவங்கள் நடக்கக் காத்திருந்தன.

கி.பி. 939ஆம் ஆண்டு. சோழ தேசத்திலிருந்து வெகு தூரத்தில் இருந்த மான்யகேதா நகரம் அன்றைக்கு விழாக் கோலம் சூடியிருந்தது. 30 வயது மதிக்கத்தக்க இளைஞனின் தலையில் தங்கக் கிரீடத்தை வைத்து, அவனை ராஷ்டிரகூட நாட்டின் மன்னனாக அறிவித்தார்கள் அந்நாட்டின் தளபதிகள். அந்தப் புதிய மன்னனின் பெயர் மூன்றாம் கிருஷ்ணன்.

உண்மையில், ராஷ்டிரகூட நாட்டின் சிம்மாசனத்துக்கான வரிசையில் மூன்றாம் கிருஷ்ணன் இருக்கவில்லை. ஆனால், மோசமான ஆட்சியின் காரணமாக கோவிந்தன் நாட்டை விட்டு துரத்தப்பட்ட பிறகு, மூன்றாம் கிருஷ்ணின் தந்தை அரசராக்கப்பட்டார்.

தந்தை மன்னனாக இருந்த காலத்திலேயே, மூன்றாம் கிருஷ்ணன், தனது அதிகாரத்தை வலுப்படுத்திக் கொள்ளத் துவங்கினார். தான் அரசனாக முடிசூடிய பிறகு மத்திய இந்தியாவில் பல இடங்களைப் பிடித்த அவர், கங்க நாட்டில் இருந்த அரசனைத் தூக்கியெறிந்துவிட்டு இரண்டாம் பூதுகன் என்பவருக்கு முடிசூடினார்.

இந்நிலையில்தான், தன் மருமகனுக்கு ஆதரவாக கங்க நாட்டின் மீது படையெடுத்தார் பராந்தகச் சோழன். இந்தப் போரில் வெற்றி கிடைக்கவில்லை. இந்தப் போரில், முன்னாள் ராஷ்டிரகூட மன்னனான பராந்தகச் சோழனின் மருமகனும் கொல்லப்பட்டான். இதற்குப் பிறகு, பராந்தகச் சோழன் ராஷ்டிரகூடர்களின் மீது படையெடுக்கவில்லையென்றாலும், மூன்றாம் கிருஷ்ணன் விடுவதாயில்லை. கி.பி. 949ல் சோழ நாட்டை நோக்கி தன் படைகளைத் திருப்பினான் மூன்றாம் கிருஷ்ணன்.

ராஷ்டிரகூடர்களை எதிர்கொள்ள தஞ்சையிலிருந்தபடியே மிகப் பெரிய படையை தனது வட எல்லைக்கு அனுப்பினார் பராந்தகச் சோழன். அந்தப் படைகளுக்கு ராஜாதித்தன் தலைமை தாங்கினார். கிட்டத்தட்ட நடு வயதை எட்டியிருந்த ராஜாதித்தன் இன்னமும் பட்டத்து இளவரசனாக முடிசூட்டப்பட்டிருக்கவில்லை. இவருக்கு ஏற்கனவே நல்ல பெயர் இருந்தாலும், இந்தப் போரில் வெற்றிபெற்றால், அடுத்த மன்னர் அவர்தான் என்பதில் சந்தேகமில்லை. இந்த யுத்தத்தில் அவருக்குத் துணையாக இருந்தவர் சேர நாட்டைச் சேர்ந்த வெள்ளன் குமரன்.

ராஜாதித்த சோழன், தக்கோலப் போர்

பட மூலாதாரம்,BJP TAMILNADU/INSTAGRAM

அணையா விளக்கும் கிருஷ்ணனின் படைகளும்

கிருஷ்ணனின் படைகள் தக்கோலத்தில் வந்து இறங்கின. 11 ஆண்டுகளுக்கு முன்பாக, தன் கணவனுக்காக சோழ இளவரசி எந்த ஊரில் அணையா விளக்கை ஏற்றினாரோ, அதே தக்கோலத்தில் கிருஷ்ணனின் படைகள் நின்றுகொண்டிருந்தன. மிகப் பெரிய படை. கிருஷ்ணனின் யானைக்கு முன்பாக மிகப் பெரிய கொடி மரத்தை பிடித்திருந்தார்கள். அதில் ராஷ்டிரகூடர்களின் கொடிக்குக் கீழே, அவனிடம் தோற்ற மன்னர்களின் கொடிகள் கட்டப்பட்டிருந்தன.

திடீரென துந்துபிகள் முழங்கின. நிலம் அதிர படைகள் இரு திசைகளிலும் முன்னேறின. கத்திகள் மோதும் ஒலியும் அம்புகள் பறக்கும் ஒலியும் அந்த இடத்தை நிறைத்தன. அடுத்த சில விநாடிகளில் மனிதக் கூக்குரல்களும் எழுந்தன.

ராஜாதித்தனின் தளபதியான வெள்ளன் குமரன் ஒரு பக்கம் சண்டையிட்டுக் கொண்டிருக்க, யானை மீதிருந்து கங்க மன்னன் பூதுகனுடன் போரிட்டுக் கொண்டிருந்தார் ராஜாதித்தர். அவருடைய யானைக்கு அருகே பயிற்சி பெற்ற வாள் வீரர்கள், வேல் வீரர்கள் இருந்தனர். அவர்களும் கங்க மன்னனின் யானையை வீழ்த்த முயன்றனர். அதேபோல, எதிர்த் தரப்பும் முயன்று கொண்டிருந்தது. இந்த யுத்தம் மிகக் கொடூரமானதாக இருந்தது. யுத்தத்தின் ஆரம்பத்தில், ராஷ்டிரகூட - கங்கர் கூட்டணியை கிட்டத்தட்ட பின்னுக்குத் தள்ளினார் ராஜாதித்தர்.

சோழர்கள் தோல்விக்கு வித்திட்ட திருப்புமுனை நிகழ்வு

ஒரு தருணத்தில் திடீரென பூதுகனின் யானை, ராஜாதித்தரின் யானைக்கு அருகில் வந்தது. சட்டென தனது கத்தியை உருவியபடி ராஜாதித்தனின் யானை மீது ஏறிய பூதுகன், ராஜாதித்தனை வீழ்த்தினார். யானை மீதே இறந்து போனார் ராஜாதித்தன். இதற்குப் பிறகு சோழப் படைகள் சிதற ஆரம்பித்தன.

வெள்ளன் குமரனுக்கு இந்தச் செய்தி வந்து சேர்ந்த போது, திகைத்துப் போனான். போர்க்களத்தில் எந்த இடத்தில் ராஜாதித்தர் விழுந்து கிடக்கிறார், யார் கொன்றது என்பதுகூட அவனுக்குத் தெரியவில்லை.

ராஜாதித்தன் இறந்த பிறகு, கிருஷ்ணன் தஞ்சையையும் மதுரையையும் சூறையாடினான் என்கிறார், அனிருத் கனிசெட்டி. சில கல்வெட்டுகள் மூன்றாம் கிருஷ்ண தேவனை 'கச்சியும் தஞ்சையும் கொண்ட கன்னர தேவன்' என குறிப்பிடுகின்றன.

கார்காட் செப்பேடுகள் மூன்றாம் கிருஷ்ணன் சோழ நாட்டை வென்று அதனை தனது தளபதிகளுக்கு பிரித்துக் கொடுத்ததாகவும் இலங்கை உள்ளிட்ட அரசர்களிடமிருந்து கப்பம் பெற்று, ராமேஸ்வரத்தில் ஒரு வெற்றித் தூணை நிறுவியதாகவும் கூறுகின்றன.

சதாசிவ பண்டாரத்தார், பிற்காலச் சோழர்கள்

ஆனால், அவன் தஞ்சையை வெற்றி கொண்டதாகச் சொல்ல முடியாது என்கிறார், பிற்காலச் சோழர்கள் நூலை எழுதிய சதாசிவ பண்டாரத்தார். தற்போதைய பண்ருட்டிக்கு அருகில் உள்ள திருவதிகை வீரட்டானத்துக்கு தெற்கே மூன்றாம் கிருஷ்ணனின் கல்வெட்டுகள் எதுவும் கிடைக்கவில்லை.

ஆகவே, சோழர்களின் கீழிருந்த தொண்டை நாட்டையும் திருமுனைப்பாடி நாட்டையும் வென்று, தனது கூட்டாளிகளுக்குப் பிரித்துக் கொடுத்ததையே மிகைப்படுத்தி கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் கூறியிருக்க வேண்டும் என்கிறார் அவர்.

ராஜாதித்தர் கொலை குறித்த மாற்று கருத்து

ஆனால், ராஜாதித்தர் கொல்லப்பட்டது குறித்து வேறு விதமான கருத்தும் இருக்கிறது. இரண்டாம் பூதுகன் விடுத்த அம்பு, ராஜாதித்தரின் மார்பைத் துளைத்ததால் அவர் கொல்லப்பட்டதாக லெய்டன் செப்பேடுகளை அடிப்படையாக வைத்து குறிப்பிடுகிறார் சதாசிவ பண்டாரத்தார்.

பூதுகனின் செயலைப் பாராட்டி அவனுக்கு மிகப் பெரிய அளவிலான பிரதேசங்களை மூன்றாம் கிருஷ்ணன் வழங்கியதாகவும் (மாண்டியாவுக்கு அருகில் உள்ள) ஆதக்கூர் கல்வெட்டு குறிப்பிடுகிறது. கும்பகோணம், திருவிடைமருதூர், திருவெள்ளறை ஆகிய ஊர்களில் உள்ள கல்வெட்டுகள் 'ஆனைமேற்றுஞ்சினார்' என ராஜாதித்தனைக் குறிப்பிடுகின்றன.

ராஜாதித்தனின் மரணம் முதலாம் பராந்தகச் சோழனைக் கடுமையாக பாதித்தது. அடுத்த ஆண்டே, அதாவது கி.பி. 950ஆம் ஆண்டே தனது இரண்டாவது மகனான கண்டராதித்தனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டினார். அடுத்த சில ஆண்டுகளிலேயே அதாவது கி.பி. 953- 55க்குள் இறந்தும் போனார் பராந்தகச் சோழன்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c4gm73563evo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.