Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தமிழ்நாடு, தேங்காய் விலை உயர்வு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கோப்புப் படம் கட்டுரை தகவல்
  • எழுதியவர், சேவியர் செல்வக்குமார்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 4 ஜனவரி 2025

தமிழகத்தில் தேங்காய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது; கடந்த கோடையில் நிலவிய கடும் வெப்பத்தால் தேங்காய் உற்பத்தி குறைந்ததே இதற்குக் காரணம் என்று விவசாயிகள் கூறுகின்றனர். தற்போது விலை உயர்ந்தாலும் தங்களுக்கு எந்த வகையிலும் பயன் இல்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.

பதுக்கலும் மற்றொரு முக்கியக் காரணமென்று இவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால் அதுபோன்ற எந்தப் புகாரும் தங்களுக்கு வரவில்லை என்று தமிழக அரசின் வேளாண் துறை செயலர் அபூர்வா மறுத்துள்ளார்.

உற்பத்தி குறைவா? பதுக்கலா? இவை இரண்டில் தமிழ்நாட்டின் தேங்காய் விலை அதிகரிக்க என்ன காரணம்?

 

தேங்காய் விலை மூன்றே மாதங்களில் 50% உயர்வு

தமிழ்நாடு, தேங்காய் விலை உயர்வு

மத்திய அரசின் வேளாண் துறை புள்ளி விபரங்களின்படி, தேங்காய் உற்பத்தியில் கேரளா, கர்நாடகாவுக்கு அடுத்தபடியாக தமிழகம் மூன்றாமிடத்தில் உள்ளது.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையம் பிபிசி தமிழிடம் பகிர்ந்த புள்ளி விபரங்களின்படி, தமிழகத்தில் 4.72 லட்சம் ஹெக்டேர் (11.66 லட்சம் ஏக்கர்) தென்னை பயிரிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 8 கோடியே 26 லட்சம் தென்னை மரங்கள் உள்ளன.

தமிழகத்தில் தென்னை பயிரிடும் பரப்பும், தேங்காய் உற்பத்தியும் அதிகமாக இருந்தாலும், தேங்காயின் விலை கடந்த சில மாதங்களாக கடுமையாக உயர்ந்து வருகிறது. உதாரணமாக, கோவை உழவர் சந்தையில் கடந்த செப்டம்பர் மாதத்தில் 20 ரூபாயாக இருந்த சிறிய தேங்காயின் விலை டிசம்பர் கடைசி வாரத்தில் 30 ரூபாயாகவும், 35 ரூபாயாக இருந்த பெரிய தேங்காயின் விலை டிசம்பர் கடைசியில் 50 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. வெளிச்சந்தையில் இந்த விலை இன்னும் அதிகம்.

தேங்காய் விலை நிர்ணயம் எப்படி?

தமிழ்நாடு, தேங்காய் விலை உயர்வு

பட மூலாதாரம்,THANGAVEL

படக்குறிப்பு,கொப்பரை வர்த்தகத்தில் நீண்ட கால அனுபவம் உடைய கப்பளாங்கரை தங்கவேல்

கொப்பரை விலை (எண்ணெய் எடுப்பதற்கான தேங்காய்), எண்ணெய் விலையை அடிப்படையாக வைத்தே தேங்காய்க்கான விலையும் சந்தையில் நிர்ணயிக்கப்படுகிறது. மத்திய அரசின் தேசிய வேளாண் விற்பனை நிலையம் (NAFED-National Agricultural Cooperative Marketing Federation of India Ltd) ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட அளவிலான கொப்பரையை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து விற்பனை செய்கிறது.

இவற்றைத் தவிர்த்து தமிழக அரசின் கூட்டுறவுத்துறையின் கீழ் இயங்கும் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகளின் தேங்காய்கள் கொள்முதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படுகின்றன. சந்தை நிலவரத்தைப் பொருத்தே, இவற்றின் விலையும் நிர்ணயிக்கப்படுகிறது.

''நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரை, தமிழகத்தில் விளையும் தேங்காயில் 20 சதவீதம் ஏற்றுமதி செய்யப்பட்டது. உள்ளூர்ச் சந்தையில் 10 சதவீதம் விற்கப்பட்டது; மீதி 70 சதவீதம் கொப்பரை (தேங்காய் எண்ணெய்) உற்பத்திக்குப் போனது. சமீப காலமாக அரபு நாடுகளுக்கு தேங்காய் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. சமையலுக்கு தேவை அதிகரிப்பு, சபரிமலை சீசன் போன்றவற்றால் தேங்காய் தேவை இப்போது அதிகமாகியுள்ளது. தற்போதைய நிலையில், ஒரு டன் பச்சைத் தேங்காய் ரூ.55 ஆயிரம், கருப்புத் தேங்காய் (கொப்பரைக்கான தேங்காய்) ரூ.61 ஆயிரம், கொப்பரை கிலோ ரூ.148 என்று விலை உள்ளது.'' என்றார் கப்பளாங்கரை தங்கவேல். தென்னை உற்பத்தியாளர் சங்க மாநிலப் பிரதிநிதியாக உள்ள இவர், கொப்பரை வர்த்தகத்தில் நீண்ட கால அனுபவம் உடையவர்.

''பொதுவாக ஒரு தேங்காயின் எடை 500 கிராம் இருக்கும். அதன்படி இன்று நிர்ணயிக்கப்படும் ஒரு கிலோ 61 ரூபாய் விலைக்கு விவசாயிக்கு ஒரு தேங்காய்க்கு 30 ரூபாய் 50 பைசா கிடைக்க வேண்டும். ஆனால் அந்த விலை கிடைப்பதில்லை. இப்போது விளையும் தேங்காய் எதுவுமே அதிகபட்சம் 350 கிராம் எடைக்குள்ளாகவே இருப்பதே அதற்குக் காரணம்.'' என்கிறார் பரம்பிக்குளம்–ஆழியார் பாசனத் திட்டத்தின் திருமூர்த்தி நீர்த்தேக்க திட்டக்குழுத் தலைவர் மெடிக்கல் பரமசிவம்.

இவ்வாறு தேங்காய் எடை குறைந்ததற்கும், விவசாயிகளுக்கு விலை குறைவாகக் கிடைப்பதற்கும் வெவ்வேறு விவசாயிகளும் பல்வேறு காரணங்களைத் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டில் கோடையில் ஏற்பட்ட கடும் வெப்பம் என்பதே, இவர்களில் பலரும் கூறும் ஒருமித்த கருத்தாகவுள்ளது.

''தென்னைக்கு 37 டிகிரி செல்சியஸ் வெப்பத்தைத் தாண்டினால் பல பாதிப்புகள் ஏற்படும். கடந்த கோடையில் 40 டிகிரிக்கும் அதிகமாகவே வெப்பநிலை பதிவானது. அதனால் பாளைகள் வெடித்து குரும்புகள் உதிர்ந்துவிட்டன. காய்ப்புத் திறன் குறைந்து விட்டது. இதனால் வழக்கமான விளைச்சலில் 60 சதவீதம்தான் விளைச்சல் கொடுத்தது. தேவைக்கேற்ற வரத்து இல்லாததே இப்போதைய விலையேற்றத்துக்கு மிக முக்கியக் காரணமாகவுள்ளது.'' என்றார் தங்கவேல்.

தமிழ்நாடு, தேங்காய் விலை உயர்வு

பட மூலாதாரம்,KALI PRAKASH

படக்குறிப்பு,விவசாயி காளி பிரகாஷ்

கோடையில் பதிவான அதிகப்படியான வெப்பம் தவிர, கேரளா வாடல் நோயும் தேங்காய் உற்பத்தி குறைய முக்கியக் காரணம் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

கேரளா வாடல் நோய் காரணமாக, தமிழக–கேரள எல்லையில் உள்ள தென்னந்தோப்புகளுக்கு அதிகமான பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகச் சொல்கிறார் பொள்ளாச்சி அருகேயுள்ள தா.கி.புதுாரைச் சேர்ந்த விவசாயி காளி பிரகாஷ். கேரளாவிலிருந்து அரை கி.மீ. துாரத்தில் இவரது தோட்டம் உள்ளது.

''ஏழாண்டுகளுக்கு முன்பே, எனது தோட்டத்தில் கேரளா வேர் வாடல் நோயின் தாக்கம் துவங்கிவிட்டது. அந்த பாதிப்பால் 50 வண்டி தேங்காய் எடுத்த தோப்பில் இப்போது 5 வண்டி தேங்காய் மட்டுமே கிடைக்கிறது.'' என்றார் காளி பிரகாஷ்.

விவசாயிகள் ஆதங்கம்

தமிழ்நாடு, தேங்காய் விலை உயர்வு
படக்குறிப்பு,பரம்பிக்குளம்–ஆழியார் பாசனத் திட்டத்தின் திருமூர்த்தி நீர்த்தேக்க திட்டக்குழுத் தலைவர் மெடிக்கல் பரமசிவம்

கேரளா வாடல் நோய்க்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுத்த தமிழக அரசு முயற்சி எடுக்காமல், அவற்றை வெட்டுவது மட்டுமே இதற்குத் தீர்வு என்று ஆலோசனை தருவதாக விவசாயிகள் பலரும் குற்றம்சாட்டுகின்றனர். பாதிப்பைக் கணக்கிடுகையில், தமிழக அரசு தரும் இழப்பீடும் மிகமிகக் குறைவு என்பது விவசாயிகள் பலருடைய ஆதங்கமாகத் தெரிகிறது.

''ஒரு தென்னை மரத்தை வெட்டி அகற்றுவதற்கு ஆயிரம் ரூபாய் தமிழக அரசு தருகிறது. அதிலும் எத்தனை மரங்களை அகற்றினாலும் ஒரு விவசாயிக்கு அதிகபட்சம் ரூ.32 ஆயிரம் மட்டுமே தருவது எந்த விதத்திலும் விவசாயிக்கு உதவுவதாக இல்லை.'' என்றார் பரமசிவம்.

கேரளா வாடல் நோய்க்கு தீர்வு காண்பதற்கு தென்னை ஆராய்ச்சி நிலையம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து பிபிசி தமிழ் கேட்டதற்கு, இதன் தலைவர் சுதா லட்சுமி சில விளக்கங்களை அனுப்பியுள்ளார்.

அதில், ''நோய் பாதிப்புள்ள பகுதிகளில், செயல் விளக்கத்திடல் அமைத்து, விவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். உயிரி இடுபொருட்களான பேசில்லஸ் சப்டிலிஸ், டிரைக்கோடெர்மா விரிடி, வேப்பம்புண்ணாக்கு மற்றும் உயிர் உரங்கள் வழங்குகிறோம்.'' என்று தகவல் தெரிவித்துள்ளார்.

தீவிரமாக நோய் தாக்குதலுக்குள்ளான மரங்களை, தென்னை வளர்ச்சி வாரியத்தின் பங்களிப்புடன் முற்றிலும் அகற்றுவதற்கு விவசாயிகளுக்கு துணை நிற்பதாகவும், மாற்றுப் பயிர் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு உரிய ஆலோசனை வழங்கி வருவதாகவும் அவர் பதிலளித்துள்ளார்.

கேரளா வாடல் நோயால் தென்னை மரங்களை விவசாயிகள் வெட்டி அகற்றி வருவதால் தென்னை பயிரிடும் பரப்பு குறைந்து வருவதாக விவசாயிகள் பலரும் தகவல் தெரிவித்தனர்.

அதுபற்றிய கேள்விக்கு பிபிசி தமிழுக்கு பதிலளித்துள்ள தென்னை ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் சுதா லட்சுமி, ''இந்திய அளவில் கடந்த 20 ஆண்டுகளில், தென்னை சாகுபடி பரப்பு 17.9 சதவீதம் அதிகரித்துள்ளது; அதே காலகட்டத்தில் தமிழகத்தில் 35.27 சதவீதம் அதிகரித்துள்ளது; கேரளா வாடலால் மரத்தை வெட்டி அகற்றினாலும் மறுநடவு செய்வதால் குறிப்பிடத்தக்க அளவு சாகுபடி பரப்பு குறையவில்லை.'' என்று கூறியுள்ளார்.

தமிழ்நாடு, தேங்காய் விலை உயர்வு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கோப்புப் படம்

எண்ணெய் நிறுவனங்கள் தேங்காய்களை பதுக்குகின்றனவா?

வெயிலின் தாக்கம், கேரளா வாடல் நோய் பாதிப்பால் தேங்காய் உற்பத்தி குறைந்திருப்பதுடன், சில எண்ணெய் நிறுவனங்கள் தேங்காய்களை பதுக்கி வைத்திருப்பதுமே தற்போதைய விலையேற்றத்துக்குக் காரணம் என்றும் விவசாயிகள் பலரும் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய தென்னை உற்பத்தியாளர் சங்க மாநிலப் பிரதிநிதி தங்கவேல், ''கடந்த ஆண்டில் தேசிய வேளாண் விற்பனை நிலையம் மூலமாக 8 லட்சம் மூட்டைகள் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டன. அவற்றை ஜனவரி, பிப்ரவரியில் விற்பனை செய்யுமாறு விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுத்தோம். ஆனால் சிலர் அவசரமாக தனியார் நிறுவனம் மூலமாக விற்று விட்டனர். கோவை, திருப்பூரில் மட்டும் 6 லட்சம் மூட்டைகள் தனியார் குடோன்களில் தேங்கியுள்ளன. தற்போதைய விலையேற்றத்துக்கு இதுவும் முக்கியக் காரணம். இதைத் தடுக்க வேண்டும்.'' என்றார் அவர்.

விவசாயிகளின் குற்றச்சாட்டு குறித்து, தமிழக அரசின் வேளாண் துறை செயலாளர் அபூர்வாவிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, ''கொப்பரைக்கு மத்திய அரசின் தேசிய வேளாண் விற்பனை நிலையம்தான் விலை நிர்ணயிக்கிறது.

தமிழகத்தில் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் (TANFED) மூலமாக தேங்காய் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால் விவசாயிகளுக்கு எங்கு விலை அதிகம் கிடைக்கிறதோ அங்குதான் அவர்கள் விற்பனை செய்வார்கள். தேங்காய்களை மொத்தமாக கொள்முதல் செய்து பதுக்கி விற்பனை செய்வதாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை. இருந்தாலும் அதுகுறித்து ஆய்வு செய்வோம்.'' என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.