Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ராஜஸ்தான்

பட மூலாதாரம்,MOHAR SINGH MEENA/BBC

படக்குறிப்பு, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் விவசாயி ஒருவரின் வயலில் ஆழ்துளைக் கிணறு தோண்டும்போது திடீரென வேகமாக நீர் வெளியேறியது. கட்டுரை தகவல்
  • எழுதியவர், திரிபுவன்
  • பதவி, மூத்த செய்தியாளர், பிபிசி ஹிந்தி

ராஜஸ்தானில் உள்ள ஜெய்சல்மரில் நடந்த ஒரு சம்பவம் கடந்த சில நாட்களாக ஊடகங்களின் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்துள்ளது.

ஜெய்சல்மரில் உள்ள மோகன்கரை சேர்ந்த விக்ரம் சிங் பதி என்பவரின் பண்ணையில் பாசன வசதி இல்லாததால், ஆழ்துளைக் கிணறு தோண்டத் தொடங்கினார். 800 அடி ஆழம் தோண்டியும் தண்ணீர் வராததால், மேலும் ஆழமாகத் தோண்ட முடிவு செய்தார்.

இதற்குப் பிறகு, அதிகாலையில் பூமியில் இருந்து பெரியளவில் நீர் வெளியேறியது, ஆனால் அது மூன்றாவது நாளில் நின்றுவிட்டது. வயல்களைச் சுற்றிலும் ஏழடி தண்ணீர் நிரம்பி அதில் இருந்த சீரகப் பயிர்கள் நாசமாயின.

 
படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இந்தச் சம்பவம் சமூக ஊடகங்களில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பரந்த தார் பாலைவனத்தில், பூமிக்குள் இருந்து இவ்வளவு தண்ணீர் வெளிவரும் என்று யாரும் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.

"நிலத்தைத் தோண்டியபோது, பூமியில் இருந்து ஒரு நீரோடையைப் போன்று தண்ணீர் வெளியேறியது. 22 டன் இயந்திரமும் தண்ணீரில் மூழ்கியது" என்கிறார் விக்ரம் சிங் பதி.

"போர்வெல் இயந்திரத்துடன் லாரியும் தண்ணீரில் மூழ்கியது. தண்ணீரின் ஓட்டம் மிகவும் வலுவாக இருந்ததால், நிலத்தின் மேல் அடுக்கு பத்து அடி ஆழத்திற்கு மூழ்கியது" என்று விளக்கினார்.

பூமிக்குள் இருந்து இவ்வளவு தண்ணீர் வந்தது எப்படி?

நிலத்தடி நீர்

பட மூலாதாரம்,MOHAR SINGH MEENA/BBC

படக்குறிப்பு,அதிகப்படியான தண்ணீர் வெளியேறியதால் தனது பயிர்கள் அழிந்துவிட்டதாக விக்ரம் சிங் பதி கூறுகிறார்

மூத்த நிலத்தடி நீர் விஞ்ஞானியும், ராஜஸ்தான் நிலத்தடி நீர் வாரியத்தின் பொறுப்பாளருமான முனைவர் .நாராயணதாஸ் இன்கையா தலைமையில், நிபுணர்கள் குழு சம்பவ இடத்துக்குச் சென்று தகவல்களைச் சேகரித்து, தொடர்ந்து மூன்று நாட்கள் ஆய்வு மேற்கொண்டது.

வழக்கமாக 300 முதல் 600 அடி ஆழத்தில் தண்ணீர் வெளியேறும் என்று அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

ஆனால், "850 அடி வரை தோண்டியதால் பாறைகள் உடைந்து நீர் ஊற்று வெடித்தது. இவை களிமண் பாறைகள் என்பதால் அதன் அடுக்கு மிகவும் வலுவானது. அந்த அடுக்கு உடைந்தபோதுதான் தண்ணீர் இவ்வளவு ஆற்றலுடன் அதிவேகமாக வெளியேறியுள்ளது" என்று இன்கையா விளக்கினார்.

இப்படி நடப்பது முதல் முறையா?

"பூமிக்குள் 850 அடி ஆழத்தில் பலமான களிமண் அடுக்குகள் உள்ளன. அவற்றுக்கிடையே நிறைய தண்ணீர் தேங்கியிருக்கும். பாறைகள் உடைந்தால் தண்ணீர் முழு வீச்சில் வெளியேறத் தொடங்கும்" என்று இன்கையா விளக்குகிறார்.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, ராஜஸ்தானின் நாச்சனாவிலுள்ள ஜலுவாலா என்னும் பகுதியில் இதேபோல் தண்ணீர் வெளியேறியது.

நிலத்தடி நீர்

பட மூலாதாரம்,MOHAR SINGH MEENA/BBC

படக்குறிப்பு,ஜெய்சல்மரின் இந்தப் பகுதியில் மழைப்பொழிவு குறைந்துவிட்டது.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் இதுபற்றி ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மத்திய வறண்ட மண்டல ஆராய்ச்சி நிறுவனத்தின் (CAZRI) முனைவர் வினோத் சங்கர், சுரேஷ் குமார் என்ற இரு மூத்த விஞ்ஞானிகள் 1982இல் அதுகுறித்த ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டனர். அதில் மோகன்கர் பகுதியில் நிலத்தடி நீர் அதிகம் இருப்பதற்கான சான்றுகள் சேகரிக்கப்பட்டன.

முனைவர். சுரேஷ் குமார் இப்போது கஜரியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார், அவர் இதுபற்றி விவரித்தார்.

இந்தப் பகுதியில், "176 முதல் 250 மி.மீ மழை மட்டுமே பெய்யும், சில குறிப்பிட்ட இடங்களில் முட்கள் நிறைந்த லானா புதர்கள் அதிகமாகக் காணப்படுகின்றன, சில இடங்களில் அதுகூட இல்லை" என்று விளக்கினார் அவர்.

மேலும், "இங்கு நாங்கள் பார்த்த விஷயங்கள் எங்களை ஆச்சர்யப்படுத்தின. நாங்கள் நான்கு முதல் ஐந்து மீட்டர் வரை தோண்டியபோது, இந்தப் புதர்களின் வேர்கள் மிகவும் ஆழமாகச் செல்வதைக் கண்டோம், அதேநேரம் மழைநீர் மூன்று முதல் நான்கு அடி வரை மட்டுமே செல்லும். சில நிலத்தடி நீர் ஆதாரங்கள் இருந்ததால் மட்டுமே, இந்தப் புதர்களுக்கு தண்ணீர் கிடைத்துள்ளது என்பதை இது குறிக்கிறது" என்றார்.

சரஸ்வதி நதியின் சுவடுகளா?

சரஸ்வதி நதி

பட மூலாதாரம்,MOHAR SINGH MEENA/BBC

படக்குறிப்பு,கடந்த 2006ஆம் ஆண்டு இந்தப் பகுதியில் அதிகபட்சமாக 12 மணிநேரத்திற்கு 550 மி.மீ. மழை மட்டுமே பதிவானது

தார் பகுதியில் காணப்படும் ஒரு பொதுவான தாவரம் `லானா' (Lana) என்றழைக்கப்படுகிறது. இது பாலைவனப் பகுதிகளில், ஆடு மற்றும் ஒட்டகங்களின் உயிர் காக்கும் தாவரம். இது வறண்ட மற்றும் தரிசுப் பகுதிகளில் வளரும் ஒரு புதர்த் தாவரம்.

ராஜஸ்தான், குஜராத், ஹரியாணா மற்றும் மத்திய ஆசியாவின் பாலைவனப் பகுதிகளில் இந்த லானா வளர்கிறது. இதன் அறிவியல் பெயர் ஹலோக்சின் சாலிகோர்னியம் (Haloxylon salicornicum). இது அமரன்தேசி (Amaranthaceae) என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது.

இந்தச் செடி மணல் மற்றும் தரிசு மண்ணில் வளரும், அப்பகுதிகளில் பொதுவாக ஈரப்பதம் மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு நிலவும். மேலும் இந்தச் செடி உப்புத்தன்மை மற்றும் உரம் குறைந்த மண்ணிலும் நன்றாக வளரும். 16 அடி ஆழம் வரை செல்லும் இதன் வேர்கள் மிகவும் ஆழமாகவும் வலிமையாகவும் இருக்கும்.

லானா தாவரம் வறண்ட பகுதிகளின் வாழ்க்கைச் சுழற்சியின் முக்கியப் பகுதியாக உள்ளது மற்றும் தரிசு நிலங்களைத் தக்கவைக்க உதவுகிறது.

முனைவர் சுரேஷ் குமார் இதை புராணங்களில் கூறப்பட்ட ஒரு நதியுடன் தொடர்புப்படுத்துகிறார். "தொன்ம நூல்களைப் படித்து, ரிமோட் சென்சிங் தரவுகளுடன் பொருத்திப் பார்த்த பிறகு, அழிந்துபோன சரஸ்வதி நதியின் பகுதி இது என்பதை உணர்ந்தோம்" என்றார்.

சுற்றியுள்ள தாவரங்களை ஒப்பிடும்போது, லானா செடி மற்ற இடங்களில் காணப்படவில்லை. பின்னர், ராணுவம் இந்தப் பகுதிகளில் ஆழமாகத் தோண்டியபோது, நீரோடை இருந்ததற்கான அறிகுறிகள் காணப்பட்டன.

சரஸ்வதி நதியின் விளக்கம் முக்கியமாக ரிக்வேதத்தில் காணப்படுகிறது, அதில் சரஸ்வதி "நதிகளின் தாய்" என்று அழைக்கப்படுகிறது. இதுதவிர, மகாபாரதம், புராணங்கள் (மத்ஸ்ய புராணம், விஷ்ணு புராணம்) மற்றும் பல நூல்களிலும் இதன் குறிப்புகள் உள்ளன.

தொல்பொருள் மற்றும் நிலவியல் ஆய்வுகளின்படி, சரஸ்வதி நதி ஹரியாணா, ராஜஸ்தான், குஜராத் ஆகிய பகுதிகள் வழியாகப் பாய்ந்ததாகவும் தற்போது அழிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நீரூற்று சரஸ்வதி நதியை சேர்ந்தது என்பது உண்மையா?

சரஸ்வதி நதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சித்தரிப்புப் படம்

கஜ்ரி ஜோத்பூர் விஞ்ஞானிகள் மற்றும் நிலத்தடி நீர் விஞ்ஞானிகளின் ஆய்வறிக்கைகளை ஆய்வு செய்தால், ஜெய்சல்மரில் உள்ள மோகன்கர் வயல்களில் வெளியான நீரோடை உண்மையில் அழிந்துபோன சரஸ்வதி நதியின் ஓடை என்று சொல்ல முடியாது.

இருப்பினும், பழங்கால நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள சரஸ்வதி நதிக்கான தேடல் பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது, இப்போது அது மீண்டும் தீவிரமடைய வாய்ப்புள்ளது.

இதுகுறித்து நிலத்தடி நீர் விஞ்ஞானி நாராயணதாஸ் இன்கையா விளக்கமளிக்கையில், "சரஸ்வதி நதியின் ஓடை அறுபது மீட்டர் கீழே மட்டுமே இருப்பதாகக் கருதப்படும் நிலையில், இப்போது வெடித்த நீரோடை 360 மீட்டருக்கும் மேலான ஆழத்தில் இருந்து வந்துள்ளது."

இருப்பினும், மூத்த நிலவியலாளர்கள், சுரங்க வல்லுநர்கள் மற்றும் சரஸ்வதி நதி தொடர்பான ஆய்வுகளில் ஈடுபடுபவர்களிடம் இருந்து நாங்கள் அறிய முயன்றபோது, ஜெய்சல்மரில் நடந்த சமீபத்திய சம்பவம் பற்றி எதுவும் கூற முடியாது என்று பெரும்பாலான நிபுணர்கள் தெரிவித்தனர். நீர், மண் ஆகியவற்றை ஆய்வு செய்த பின்னரே இப்போது சில உறுதியான கூற்றுகளை முன்வைக்க முடியும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானியும், சரஸ்வதி நதி குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்த குழுவின் தலைவருமான முனைவர்.ஜே.ஆர்.சர்மா, "ஜெய்சல்மரில் இப்போது வந்த தண்ணீர் சரஸ்வதி நதியில் இருந்து வந்ததா இல்லையா என்பது அந்த நீரை கார்பன்டேட்டிங் மூலம் காலக் கண்டக்கிடல் செய்த பிறகுதான் தெரிய வரும்" என்றார்.

"கார்பன்டேட்டிங் இந்த நீரின் வயதை வெளிப்படுத்தும். இது சரஸ்வதி நதியின் நீர் என்றால், குறைந்தது மூவாயிரம் ஆண்டுகள் பழமையானதாக இருக்க வேண்டும்" என்று விவரித்தார்.

"இந்தத் தண்ணீர் பழைமையானதாக இருந்தால், இந்த பாலைவனத்திற்கு முன்பு இங்கிருந்த கடல் நீராக இருக்க வாய்ப்புள்ளது. இந்த நீரின் கார்பன்டேட்டிங் மும்பையிலுள்ள பாபா ஆராய்ச்சி நிறுவனம் அல்லது ஆமதாபாத்தில் உள்ள இஸ்ரோவின் இயற்பியல் ஆய்வகத்தில் இருந்து செய்யப்படலாம்" என்றார் ஜே.ஆர்.சர்மா.

சரஸ்வதி நதியைக் கண்டறியும் முயற்சி

சரஸ்வதி நதி

பட மூலாதாரம்,MOHAR SINGH MEENA/BBC

படக்குறிப்பு,இந்தப் பகுதியில் நிலத்தடியில் சரஸ்வதி நதி புதைந்திருக்கலாம் எனப் பல அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இது ஜூன் 15, 2002 முதல், சரஸ்வதி நதியின் வழித்தடத்தைக் கண்டறிய அகழாய்வு நடத்த அப்போதைய மத்திய கலாசாரத்துறை அமைச்சர் ஜக்மோகன் அறிவித்திருந்தார்.

இந்தப் பணிக்காக அவர் ஒரு நிபுணர் குழுவை உருவாக்கினார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO), ஆமதாபாத்தின் பல்தேவ் சஹாய், தொல்பொருள் ஆய்வாளர் எஸ் கல்யாண் ராமன், பனிப்பாறை நிபுணர் ஒய்.கே. பூரி, நீர் ஆலோசகர் மாதவ் சித்தலே ஆகியோர் அந்தக் குழுவில் இருந்தனர்.

ஹரியாணா மாநிலம் அதிபத்ரியில் இருந்து பகவான்புரா வரை முதல் கட்ட அகழாய்வு முடிவடையும் என்றும், அதன் பிறகு ராஜஸ்தான் எல்லையில் உள்ள பகவான்புரா முதல் கலிபங்கா வரை இரண்டாம் கட்ட அகழாய்வு முடிவடையும் என்றும் அப்போது அறிவிக்கப்பட்டது.

ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி, எல்லையோர மாநிலங்களிலும் இந்தக் குழுவினர் சென்று தகவல்களைச் சேகரித்தனர். இந்த முதல்கட்ட தகவலின் அடிப்படையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் குழு சரஸ்வதி நதி குறித்த அறிக்கையை நவம்பர் 28, 2015 அன்று வெளியிட்டது.

மூத்த விஞ்ஞானிகளான முனைவர் ஜே.ஆர் சர்மா, முனைவர். பிசி பத்ரா, முனைவர். ஏகே குப்தா, முனைவர். ஜி ஸ்ரீனிவாஸ் ஆகியோரின் அறிக்கை 'சரஸ்வதி நதி: ரிமோட் சென்சிங் மற்றும் ஜிஐஎஸ் தொழில்நுட்பங்கள் அடிப்படையிலான ஒருங்கிணைந்த ஆய்வு' என்ற தலைப்பில் வெளியானது.

இஸ்ரோவின் விண்வெளித் துறையின் ஜோத்பூரைச் சேர்ந்த பிராந்திய தொலை உணர் மையத்தால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டது. கடந்த காலங்களில் துணைக் கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் பல பெரிய ஆறுகள் ஓடியதாக இந்த அறிக்கை கூறுகிறது.

தற்போதைய சிந்து நதி அமைப்பைப் போலவே, வேத இலக்கியங்களில் கூறப்படும் சரஸ்வதி நதிக்கு இணையான நதி அமைப்பு இருந்தது, இது கிமு ஆறாயிரம் (அதாவது சுமார் எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு) ஒரு பெரிய நதியாக ஓடியது.

சரஸ்வதி நதி அமைப்பு இமாச்சல பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், ஹரியாணா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்கள் வழியாகச் சென்று இறுதியாக குஜராத்தில் உள்ள ரான் ஆஃப் கட்சில் கலந்தது. இமயமலைப் பகுதியில் தட்பவெப்ப நிலை மற்றும் கண்டத்தட்டுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக, கி.மு.3000 வாக்கிலேயே, இந்த நதி வறண்டு முற்றிலும் மறைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.