Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
நாம் மகிழ்ச்சியாக இருக்க அறிவியல் கூறும் 7 எளிய வழிகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஒரு சிலர் மற்றவர்களைக்காட்டிலும் மகிழ்ச்சியாக இருப்பதை நாம் பார்க்கிறோம். ஆனால் அதிக மகிழ்ச்சியாக இருக்க வழிகள் இல்லை என்பது இதற்கு அர்த்தமல்ல கட்டுரை தகவல்
  • எழுதியவர், பிபிசி ஃப்யூச்சர்
  • பதவி,

மகிழ்ச்சி என்றால் என்ன?

இது பலமுறை நம்மை நாமே கேட்டுக்கொள்ளும் கேள்வி... இதற்கு பெரும்பாலும் நம்மிடம் தெளிவான பதில் இருப்பதில்லை.

இதன் பொருள் கவலையின்றி வாழ்வதா அல்லது அன்றாடம் நம்மை ஆட்டிப்படைக்கும் பிரச்னைகள் இருந்தாலும் கூட நிம்மதியாக வாழ்வதா?

உண்மை என்னவென்றால் சிலர் மற்றவர்களைவிட மகிழ்ச்சியாக இருப்பது முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டுள்ளது போலத் தெரிகிறது.

ஆனால், நீங்கள் குளிக்கும்போது பாடுபவராக இருந்தாலும், மழையில் நடனமாடும் நபராக இருந்தாலும் அல்லது சற்று கடினமான மனமும் அவநம்பிக்கையான ஆளுமை கொண்டவராக இருந்தாலும், 'மகிழ்ச்சி' என்ற எண்ணம் ஏற்படும் என்று சொல்லமுடியாது.

நம் வாழ்வில் மகிழ்ச்சியைக் கொண்டுவர நாம் அனைவரும் நம் பழக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கலாம்.

எனவே, 2025 இல் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க பயனுள்ள சில குறிப்புகளை இங்கே பெறமுடியும்.

1. வயது ஏறும்போது புதிய நட்பை நாடுங்கள்

நட்பு எல்லா வயதினருக்கும் பயனளிக்கிறது. ஆனால், முதிர்வயதில் அது மகிழ்ச்சியின் முக்கிய ஆதாரமாக மாறக்கூடும்.

வயதானவர்கள் தங்களுக்கு நன்கு தெரிந்தவர்களுடன் நேரத்தை செலவிடுவதற்காக தங்கள் சமூக உறவுகளை மட்டுப்படுத்த முனைகிறார்கள். புதிய நட்பை உருவாக்கிக்கொள்ள தயாராக இருப்பது ஒரு நல்ல யோசனை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஏனென்றால், உறவுடன் கூடவே வேறு நன்மைகளும் இதன்மூலம் கிடைக்கும்.

நட்புகள் நாமாக தேடிக்கொள்வதாகவே இருக்கின்றன. இந்த கட்டாயமற்ற உறவுகள் எந்த நேரத்திலும் தொடங்கலாம் அல்லது முடிவடையலாம். அதனால் அவை அதிக சுவாரசியமாகவும் குறைவான மன அழுத்தம் கொண்டதாகவும் இருக்கின்றன.

சுவாரசியமான நிகழ்வுகளை தொடர்ந்து எதிர்நோக்குவது நமக்கு அதிக நம்பிக்கையான கண்ணோட்டத்தை அளிக்கும் என்று நம்பப்படுகிறது.

 

புதிய நபர்களை சந்திப்பது வயதானவர்களுக்கு கடினமாக இருக்கக்கூடும். ஆனாலும் நண்பர்களை உருவாக்கிக்கொள்வது அவர்களுக்கு எளிதாகவும் இருக்கலாம். ஏனெனில் வயது கூடும்போது ஆளுமை முதிர்ச்சியடைந்திருப்பதால் சமூக ரீதியாக எளிதில் இணையும் திறனை அவர்கள் பெற்றுள்ளனர். வாழ்க்கையைப் பற்றிய கண்ணோட்டம் விரிந்துள்ளது. எனவே, அதிக மகிழ்ச்சி கிடைக்கிறது.

வயதாகும்போது தரமான நட்பைப் பேணும் முயற்சி சிறந்தது. ஏனெனில், இதன் நன்மைகள் உளவியல் நல்வாழ்வைத் தாண்டியதாக உள்ளன.

இது, நமது அறிவாற்றல் செயல்பாடு மற்றும் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

நாம் மகிழ்ச்சியாக இருக்க அறிவியல் கூறும் 7 எளிய வழிகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

உண்மையில் நமக்கு வயதாகும்போது நல்ல மன ஆரோக்கியத்தை பராமரிப்பதில், குடும்பத்தைப் போலவே நட்பும் ஒரு முக்கிய காரணியாக இருப்பதை ஆராய்ச்சிகள் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டுகின்றன.

நீங்கள் நண்பர்களை உருவாக்கிக்கொள்வதில் சிரமத்தை எதிர்கொள்பவராக இருந்தால் அதில் உதவக்கூடிய சில ஆலோசனைகள் இதோ. கடந்த ஆண்டு அமெரிக்கா முழுவதும் முழு சூரிய கிரகணத்தைப் பார்த்து மகிழ்ந்தது போன்ற அர்த்தமுள்ள தருணங்களை நீங்கள் பகிர்ந்துகொள்ளலாம். உங்களைச் சுற்றியுள்ளவர்களுடன் நெருக்கமாக உணரவும், நேர்மறையான உணர்ச்சிகளைப் பகிர்ந்துகொள்ளவும் இது ஒரு வழியாகும்.

2. மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ளுங்கள்

இரக்கம் என்பது உண்மையான நட்பின் நன்கு நிறுவப்பட்ட தூண்.

"பகிரப்பட்ட வலி" என்ற பொருள்படும் லத்தீன் வார்த்தையிலிருந்து வந்த இந்த வார்த்தை, நம் நண்பர்களுக்கு உதவி தேவைப்படும்போது வலுவான தொடர்புகளை உருவாக்க இரக்க குணம் உதவுகிறது என்பதைக் காட்டுகிறது.

ஆனால், அதற்கு நேர்மாறான உணர்ச்சி நிலை ஒன்று உள்ளது. அனைவராலும் குறைவாக அறியப்பட்ட ஆனால் முக்கியமான ஒன்று அது. அதுதான் "பகிரப்பட்ட மகிழ்ச்சி".

இது நல்லுறவுகளில் குறைத்து மதிப்பிடப்படும் அம்சமாகும். இது நட்பைப் பேணுவதற்கு இரக்கத்தைப் போலவே முக்கியமானதாக இருக்கலாம் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நமது நண்பர்களின் நல்ல செய்தியை ஆர்வத்துடன் ஆதரிப்பதும், அதைப் பற்றி கேட்பதும், ஒரு நல்ல நண்பராக இருப்பதற்கான அடித்தளமாகும். உங்கள் நண்பரின் வெற்றியை உற்சாகமாக வரவேற்காமல் இருப்பது அல்லது பாராட்டாமல் இருப்பது அந்த உறவுகளை ஆபத்தில் ஆழ்த்தக்கூடும்.

நாம் மகிழ்ச்சியாக இருக்க அறிவியல் கூறும் 7 எளிய வழிகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, நம் நண்பர்களின் அதிர்ஷ்டத்தை வரவேற்று அவர்களுடன் நல்ல உறவைப் பேணுவது மிகவும் முக்கியமானது

3. தன்னார்வ தொண்டு செய்யுங்கள்

வேறொருவருக்காக ஏதாவது செய்வது உங்களை மகிழ்ச்சியாக உணர வைக்கும் என்று சொல்வது நாம் அடிக்கடி கேட்கும் வார்த்தைகள். ஆனால், பரோபகாரத்தைப் பற்றி நாம் அதிகமாக அறிய அறிய இந்த வார்த்தைகளில் உண்மை இருப்பதை உணர்கிறோம்.

உண்மையில், நாள்பட்ட வலி மற்றும் மனச்சோர்வு போன்ற பல நிலைமைகளில் தன்னார்வத் தொண்டு உதவிகரமாக உள்ளது என்று அறிவியல் ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

மற்றவர்களுக்கு உதவ நியமிக்கப்பட்ட, நாள்பட்ட வலியால் பாதிக்கப்பட்ட தன்னார்வலர்கள் தன்னார்வத் தொண்டு செய்யும்போது குறைவான வலியை அனுபவித்ததாக 2002 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட இரு ஆய்வு கண்டறிந்தது.

விலங்குகளை பராமரிப்பது நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்றும், செடிகளை பராமரிப்பது நமக்கு, குறிப்பாக வயதானவர்களுக்கு நல்வாழ்வைத் தரும் என்றும் மற்ற ஆய்வுகள் காட்டுகின்றன,

சில மருத்துவர்கள் இப்போது தன்னார்வத் தொண்டை "சமூக பரிந்துரை"யின் ஒரு பயனுள்ள வடிவமாகப் பார்க்கின்றனர். மக்களை அவர்கள் வாழும் சமூகத்தின் வளங்கள் மற்றும் செயல்பாடுகளுடன் இணைக்கும் மருத்துவப் பரிந்துரை இது.

கலை வகுப்புகள் முதல் சைக்கிள் ஓட்டும் குழுக்கள் வரை அனைத்தையும் செய்ய மக்களை வெளியே அனுப்புவது அல்லது தேவைப்படும் மற்றவர்களுக்கு உதவும் நடவடிக்கைகளில் பங்கேற்க அவர்களை ஊக்குவிப்பது ஆகியவை சுகாதார சேவைகளின் மீதான அழுத்தத்தைக் குறைக்க உதவும் சிறந்த வழிகள் என நிரூபணமாகியுள்ளன.

4. உங்கள் மூதாதையர்களுடன் இணையுங்கள்

கடந்த காலமானது நிகழ்காலத்தில் உங்களுக்கு உதவக்கூடிய மற்றொரு வழியாக உள்ளது.

நமது மூதாதையர்களுடன் இணைவது, ஆழ்ந்த உளவியல் நன்மைகளை ஏற்படுத்தும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உதாரணமாக தலைமுறைகள் வழியாக கதைகள் கடத்தப்படும்போது, துன்ப சூழல்களை சமாளிப்பது பற்றிய குடும்பக் கதைகளை அறிந்துகொள்வது நன்மை அளிக்கும்.

ஆஸ்திரேலியாவில் உள்ள ஸ்வின்பர்ன் பல்கலைக்கழகத்தின் உளவியல் துறையின் முன்னாள் பேராசிரியர் சூசன் எம். மூர், தங்கள் குடும்ப வரலாற்றை அறிந்தவர்கள், அதிக அளவு திருப்தி மற்றும் மன நலனைக் கொண்டிருப்பதை கண்டறிந்துள்ளார்.

உங்கள் 'ஃபேமிலி ட்ரீ' ( பரம்பரையை குறிக்கும் அட்டவணை) பற்றி ஆராய்ச்சி செய்யும் பணியை மேற்கொள்வது, உங்கள் வாழ்க்கையின் கட்டுப்பாடு உங்கள் கையில் இருப்பதை உணரவும், உலகில் உங்கள் நிலை பற்றிய சிறந்த புரிதலை வளர்க்கவும் உதவும்.

உங்கள் முன்னோர்களின் போராட்டங்கள் மற்றும் சாதனைகளால் உங்கள் தற்போதைய வாழ்க்கை சாத்தியமாகியுள்ளது என்பதை அறிந்துகொள்வது உங்களுக்கு வாழ்க்கை பற்றிய கண்ணோட்டத்தையும் நன்றியுணர்வையும் அளிக்கும்.

நாம் மகிழ்ச்சியாக இருக்க அறிவியல் கூறும் 7 எளிய வழிகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஒரு அழகிய நிலப்பரப்பில் வாகனம் ஓட்டுவதில் உள்ள இன்பம்

5. ஒரு பட்டியல் தயார் செய்யுங்கள்

கிடைத்த அதிர்ஷ்டங்கள் மற்றும் உதவிகளை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது ஒரு பழைய அறிவுரை. ஆனால், இது ஒரு எளிய, ஆனால் நன்கு நிரூபணமான வழியாகும்.

நமக்கு நடந்த மூன்று விஷயங்களின் பட்டியலை எழுதும்போது அது நம் மனநிலையை மேம்படுத்த உதவும்.

அது ஒரு முக்கியமான தேர்வில் தேர்ச்சி பெறுவது அல்லது ஒரு குழந்தையைப் பெறுவது போன்ற வாழ்க்கையை மாற்றும் நிகழ்வாக இருந்தாலும் சரி அல்லது ஒரு பழைய நண்பரை சந்தித்தது அல்லது சூரிய அஸ்தமனத்தின் ஒளி போன்ற ஒரு அழகான தருணத்தை அனுபவிப்பது போன்ற நிகழ்வாகவும் இருக்கலாம்.

இந்த வகையான விஷயங்களின் பட்டியலை உருவாக்குவது நமது வாழ்வை மேம்படுத்தும் என்று பல ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன.

6. குதூகலம் தரும் செயல்பாடுகளைத் தேடுங்கள்

ஒரு அழகிய சூழலில் வாகனம் ஓட்டுவதை விட சிறந்தது எதுவுமில்லை என்று சொல்வார்கள். உங்கள் தலைமுடியை வருடும் சுகமான காற்று, ரேடியோவில் மனதை மயக்கும் இசை, உங்களுக்கு முன்னால் உள்ள சாலையின் சுதந்திரம்.

எலிகள்கூட வாகனத்தில் போகும் சுகத்தை அனுபவிக்க முடியும் என்பதை இப்போது நாம் அறிவோம். வர்ஜீனியாவில் உள்ள ரிச்மண்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வகத்தில் சிறிய பிளாஸ்டிக் கார் போன்ற வாகனங்களை ஓட்ட எலிகளுக்கு கற்றுக் கொடுத்தனர்.

எலிகள் இந்தப் புதிய திறமையை கற்றுக்கொண்டன. விரைவில் அடுத்த பயணத்துக்குத் தயாராக இருப்பது போல் மிகுந்த ஆர்வத்துடன் கார்களில் ஏறத்தொடங்கின.

இறுதியில் சில எலிகள் பயணத்தின் மகிழ்ச்சியை முன்கூட்டியே காட்டுவதைப்போல, உற்சாகத்தில் மேலும் கீழும் குதித்ததை ஆராய்ச்சியாளர்கள் கவனித்தனர்.

இது ஒரு புதிய ஆராய்ச்சிக்கு வழிவகுத்தது. மகிழ்ச்சியின் எதிர்பார்ப்பும் அந்த குறிப்பிட்ட செயலைப் போலவே திருப்திகரமாக இருக்க முடியுமா?

மற்றொரு பரிசோதனையில் விஞ்ஞானிகள் சில எலிகளுக்கு வெகுமதிகளுக்காக காத்திருக்க பயிற்சி அளித்தனர். மற்ற சில எலிகளுக்கு உடனடியாக வெகுமதி வழங்கப்பட்டது.

பின்னர் அவர்கள் எலிகளின் மனநிலையை சோதித்தனர். வெகுமதிகளுக்காக காத்திருக்கப் பயிற்சி பெற்றவை அதிக நம்பிக்கையான மனநிலையுடன் இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர்.

மனிதர்களிடமும் இது இப்படித்தான் இருக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் ஊகித்தனர். மகிழ்ச்சிகரமான செயல்பாடுகள் அல்லது நிகழ்வுகளை எதிர்பார்ப்பதன் மூலம் நம் மூளையை மிகவும் நம்பிக்கையுடன் இருக்கச் செய்யலாம்.

நாம் மகிழ்ச்சியாக இருக்க அறிவியல் கூறும் 7 எளிய வழிகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,'எதுவும் செய்ய வேண்டாம்' என்பது மகிழ்ச்சியை கண்டறிய ஒரு நல்ல அறிவுரை

7. எதுவும் செய்யாமல் இருப்பது

இப்போது அளிக்கப்படும் அடுத்த அறிவுரை உங்களுக்கு சற்று ஆச்சரியமாக இருக்கலாம்.

ஆனால், மகிழ்ச்சியாக இருப்பதைப் பற்றி அதிகமாக கவலைப்படுவது உண்மையில் மகிழ்ச்சிக்குத் தடையாக இருக்கலாம் என்று ஆராய்ச்சி கூறுகிறது.

ஒரு உற்சாகமான அல்லது நம்பிக்கை தரும் திரைப்படத்தை பார்ப்பதற்கு முன்பு, அதிக மகிழ்ச்சியை விரும்ப மக்களைத் தூண்டும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், படம் பார்த்த பிறகு அவர்கள் மகிழ்ச்சியை விட ஏமாற்றத்தையே உணர்ந்தனர்.

எனவே, எதிர்பார்ப்புகளை உயர்த்துவதன் மூலமும், மகிழ்ச்சியின் முக்கியத்துவத்தைப் பற்றி படித்துத் தங்களைப் பயிற்றுவிப்பதில் நேரத்தைச் செலவிடுவதன் மூலமும் மக்கள் உண்மையில் எதிர் விளைவை அனுபவித்து மனச்சோர்வை உணரக்கூடும்.

நீங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஒரு பெரிய நிகழ்வு அல்லது விருந்தின்போது அந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும்விதமாக அவை இருக்கவில்லையென்றால், இந்த உணர்வை நீங்கள் அனுபவித்திருக்கலாம்.

கலிஃபோர்னியாவின் பெர்க்லி பல்கலைக்கழகத்தின் உளவியலாளர் ஐரிஸ் மாஸ், மகிழ்ச்சியை விரும்புவதும் தேடுவதும், தனிமை மற்றும் பிறரிடமிருந்து துண்டிக்கப்பட்ட உணர்வுகளை அதிகரிக்கும் என்பதை ஏற்கனவே காட்டியுள்ளார்.

உண்மையில் வாழ்க்கை என்பது ஏற்ற தாழ்வுகள் நிறைந்தது என்பதை ஏற்றுக்கொள்வதையும், ஒரு திடமான அணுகுமுறையை பின்பற்றுவதையும் அவர் பரிந்துரைக்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.