Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தூக்கமின்மை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, வாழ்வின் சில சமயங்களில் நம்மில் பலரைப் பாதிக்கும் ஒரு பிரச்னை, தூக்கமின்மை
4 மணி நேரங்களுக்கு முன்னர்

ஒருவேளை உங்களால் தூங்க முடியாமல் இருக்கலாம், அல்லது நடு இரவில் எழ நேர்ந்து, அதன் பிறகு உங்களுக்கு தூக்கம் வராமல் இருக்கலாம்.

வாழ்வின் சில சமயங்களில் நம்மில் பலரைப் பாதிக்கும் ஒரு பிரச்னை, தூக்கமின்மை (இன்சோம்னியா). ஆனால், சிலருக்கு இது ஒரு குறுகிய காலப் பிரச்னையாகத் தொடங்கி, பின்னர் தீவிரமான ஒன்றாக மாறலாம்.

நமக்கு ஏன் தூக்கமின்மை ஏற்படுகிறது? எப்பொழுது உதவியை நாட வேண்டும்?

வயது முதிர்வு, இரவில் சிறுநீர் கழித்தல், மெனோபாஸ் (பெண்களுக்கு மாதவிடாய் நிரந்தரமாக நின்றுவிடுவது) அல்லது இரவு நேரப் பணிச்சூழல் போன்ற விஷயங்கள், நமது தூக்கமின்மைக்கு காரணமாக இருக்கலாம்.

இதற்காக, பிபிசி இன்சைட் ஹெல்த் குழு சில ஆச்சரியமான ஆலோசனைகளைத் தரும் நிபுணர்கள் குழுவை ஒன்றிணைத்தது.

பிபிசி ரேடியோ 4 இன்சைட் ஹெல்த் நிகழ்ச்சியில், தூக்கமின்மை சார்ந்து நிபுணர்கள் அளித்த முக்கியக் குறிப்புகளை விவரிக்கின்றது இத்தொகுப்பு.

தூக்கமின்மை ஏற்படுவது ஏன்?

"என் மூளை சற்று சோர்வாக இருந்தால், அல்லது நான் அதிகமாக யோசித்தால் எனக்கு தூக்கம் வராது.

அதனால் தூக்கத்துக்கு தயாராவதற்காக, நான் ஒரு புத்தகத்தை எடுத்துப் படிப்பேன்," என்று தனது அனுபவத்தைப் பகிர்கிறார் சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் உளவியல் விரிவுரையாளராக உள்ள டாக்டர் ஃபெய்த் ஆர்ச்சர்ட்.

"என் கணவர் படுக்கையில் புரண்டு புரண்டு குறட்டை விடுவதால் எனக்கு தூக்கம் வராது. அப்போது, 'ஸ்லீப் டிவோர்ஸ் (தம்பதிகள் தனித்தனி அறைகளில் உறங்குவது) செய்ய வேண்டியிருக்கும். மற்றொரு அறைக்கு நான் தூங்கச் செல்வேன்" என்கிறார் பிரிட்டிஷ் ஸ்லீப் சொசைட்டியின் தலைவர் மற்றும் லண்டனில் உள்ள ராயல் ப்ரோம்ப்டன் மருத்துவமனையின் தூக்க மருத்துவ ஆலோசகர், மருத்துவர் அல்லி ஹேர்.

"எனக்கு நன்றாக தூக்கம் வராதபோது, எழுந்துவிடுவேன். பிறகு சற்று நேரம் கழித்து, தூக்கத்தை வரவழைப்பதற்காக மீண்டும் படுக்கைக்குச் செல்வது என் வழக்கம். பெரும்பாலும் மனதில் ஏதோவொன்றை யோசித்துக்கொண்டே இருப்பதால், இவ்வாறு நடக்கலாம்."

"அது மட்டுமல்ல, பலருக்கும் இப்படி நடப்பது பொதுவானது தான் என நான் நினைக்கிறேன்," என்கிறார் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் தூக்க மருத்துவத்தின் பேராசிரியராக உள்ள கொலின் எஸ்பி.

தூக்கமின்மை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, தூக்கமின்மையின் அறிகுறிகள் மிகவும் பொதுவானவை, இது 50 சதவீத நபர்களை பாதிக்கிறது என்று மருத்துவர் ஹரே கூறுகிறார்

தூக்கமின்மைக்கு ஒரு வரையறை உள்ளது. அதாவது, "ஒருநாள் தூங்காமல் இருப்பதால், அடுத்த பல நாட்களுக்கு தூக்கம் வராமல் இருக்கலாம். அதன் பின்னர், பல வாரங்களுக்கு அதுவே தொடரலாம். அதனால் மூன்று மாதங்கள் அல்லது அதற்கும் மேலாக தூங்குவதில் சிரமம் ஏற்பட்டால், அதனை தூக்கமின்மை என்கிறோம்." என்று தூக்கமின்மை குறித்து விளக்குகிறார் பேராசிரியர் எஸ்பி.

தூக்கமின்மை சில வித்தியாசமான வழிகளில் வெளிப்படுகிறது என்று டாக்டர் ஆர்ச்சர்ட் கூறுகிறார்.

"தூங்குவதில் சிரமம் இருப்பதாக நாம் அடிக்கடி நினைக்கும் அதே வேளையில், தூக்கம் தொடர்பான வேறு சில சிக்கல்களும் இதில் உள்ளன. அதாவது, சிலர் நள்ளிரவில் எழுந்து மீண்டும் தூங்க முடியாமல் சிரமப்படுவார்கள் அல்லது சிலருக்கு அதிகாலையில் விழிப்பு வந்தபிறகு, தூங்க முடியாமல் போகலாம்" என்று விவரிக்கிறார்.

அதனைத் தொடர்ந்து, தூக்கமின்மையின் அறிகுறிகள் மிகவும் பொதுவானவை, இது 50 சதவிகித நபர்களை பாதிக்கிறது என்று மருத்துவர் ஹரே கூறுகிறார்.

"மூன்று மாதங்களுக்கும் மேலாக வாரத்தில் மூன்று இரவுகளுக்கு மேல் தூங்குவதில் சிக்கல் இருந்தால், அது உங்கள் அன்றாட வாழ்க்கையை பாதித்தால், மருத்துவ உதவியைப் பெற வேண்டியது அவசியம்.

நீங்கள், உங்கள் உள்ளூர் மருந்தாளரிடம் பேசுவதில் தொடங்கி, பின்னர் உங்கள் மருத்துவரை அணுகலாம். தேவைப்பட்டால், உறக்கம் குறித்து இணையத்தில் கிடைக்கும் உதவிகளையும் பெறலாம்" என்று அறிவுறுத்துகிறார் மருத்துவர் ஹரே.

மூளையில் என்ன நடக்கிறது? தூக்கமின்மை ஏன் ஏற்படுகின்றது?

தூக்கமின்மை, மூளை

பட மூலாதாரம்,GETTY IMAGES

டாக்டர் ஆர்ச்சர்ட் தூங்குவதற்கும், எழுவதற்கும் இரண்டு செயல்முறைகள் உதவுகின்றன என்று விளக்குகிறார்.

"ஒன்று தூக்கத்தைத் தூண்டும் ஹார்மோன்கள். மற்றொன்று, நாள் முழுவதும் நாம் செய்யும் வேலை. இந்த செயல்முறைகள் இரண்டும் ஒன்றிணைய வேண்டும்."

ஆனால், இவை இரண்டும் ஒன்றிணையவில்லை என்றால், உதாரணமாக, "மதியம் அல்லது மாலையில் நாம் நன்றாக தூங்கிவிட்டால், இரவில் நமக்கு தூக்கம் வருவதற்கு சிக்கல் ஏற்படலாம்" என்கிறார்.

அது மட்டுமின்றி, "மன அழுத்தம் போன்ற வெளிப்புற காரணிகளாலும் தூக்கமின்மை ஏற்படலாம்" என்றும் டாக்டர் ஆர்ச்சர்ட் குறிப்பிடுகிறார்.

மறுபுறம், தூக்கமின்மைக்கு ஒரு பரிணாமக் காரணம் இருப்பதாக பேராசிரியர் எஸ்பி குறிப்பிடுகிறார்.

"நாம் இன்னும் தூக்கத்தை பெரியளவில் சார்ந்து இருக்கிறோம் என்றும், பரிணாமம் தூக்கத்தின் தேவையை நீக்கவில்லை" என்றும் அவர் விளக்குகிறார்.

"உண்மையில், நமக்கு நிறைய தூக்கம் தேவை, ஏனெனில் நீண்ட நேரம் இயங்கும் நமது மூளைக்கு அதிகளவிலான உதவி தேவைப்படுகிறது" என்று தூக்கத்துக்கும் பரிமாணத்துக்கும் உள்ள உறவை விவரிக்கிறார் பேராசிரியர் எஸ்பி.

தொடர்ந்து பேசிய அவர், "ஆனால் நமக்கு அதிகமான தூக்கம் தேவைப்பட்டாலும், அச்சுறுத்தல் உணர்வை நாம் இன்னும் இழக்கவில்லை" என்று விளக்குகிறார்.

"அதாவது, உங்கள் மனதில் ஏதாவது இருந்தால், அது தீவிரமானதாகவோ அல்லது அச்சுறுத்தலாகவோ இருக்கலாம் என்பதால், விழித்திருந்து அதைப் பற்றி சிந்திக்கும்படி உங்கள் மூளை உங்களிடம் சொல்லலாம்" என்று குறிப்பிடுகிறார் பேராசிரியர் எஸ்பி.

அதனைத் தொடர்ந்து, தூக்கமின்மையின் நுணுக்கங்களை விவரிக்கிறார் மருத்துவர் ஹரே.

"தூக்கமின்மை பல்வேறு வகையான மக்களை பாதிக்கும். பொதுவாக தூக்கமின்மை ஒரு குறிப்பிட்ட வகை நபருக்கு மட்டும் ஏற்படுவது இல்லை. நாள்பட்ட உடல்நலக் குறைபாடுகள் மற்றும் நாள்பட்ட வலி உள்ளவர்களுக்கு தூங்குவதில் சிக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்" என்றும் மருத்துவர் ஹரே விளக்குகிறார்.

"தூக்கமின்மை பெரும்பாலும் கவலை, மனச்சோர்வு மற்றும் பிற மனநலப் பிரச்னைகளுடன் இணைந்து ஏற்படுகிறது" என்றும் அவர் தெளிவுபடுத்துகிறார்.

மன அழுத்தம், தூக்கமின்மை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மன அழுத்தம் போன்ற வெளிப்புற காரணிகளாலும் தூக்கமின்மை ஏற்படலாம் என்று டாக்டர் ஆர்ச்சர்ட் குறிப்பிடுகிறார்

மறுபுறம், வயதும் தூக்கத்தைப் பாதிக்கும் என்று பேராசிரியர் எஸ்பி விளக்குகிறார். உங்களுக்கு வயதாகும்போது, உங்களது தூக்க அமைப்புக்கும், உடலின் கடிகார அமைப்புக்கும் வயதாகத் தொடங்கும்.

தூக்க அமைப்பு உங்களது தூக்கத்தின் அளவு மற்றும் அதன் ஆழத்தை கட்டுப்படுத்துகிறது, அதே நேரத்தில் உடலின் கடிகார அமைப்பு உங்கள் தூக்கத்தின் நேரத்தைத் தீர்மானிக்கிறது.

"அதனால், உங்களுக்கு வயதாகும்போது, தூக்கத்தில் அடிக்கடி முழிப்பு வரலாம்" என்கிறார்.

அதாவது, "இளம் வயதுடையோர், தாமதமாக தூங்கி தாமதமாக எழுந்திருப்பார்கள், அதே சமயம் வயதானவர்கள் முன்னதாகவே தூங்கி காலையிலும் விரைவாகவே எழுந்துவிடுவார்கள். மேலும், முதியவர்கள் பெரும்பாலும் அதிகாலையில் எழுந்துவிட்டு, பிறகு மீண்டும் தூங்குவதற்குப் போராடுகிறார்கள்" என்று அதன் சிக்கல்களை சுட்டிக்காட்டுகிறார்.

பேராசிரியர் எஸ்பி, மரபியலும் தூக்கமின்மையை பாதிக்கும் என்று கூறுகிறார்.

"மன அழுத்தத்தால் எளிதில் பாதிப்படைவது மற்றும் அதிக எச்சரிக்கையுடன் இருப்பது போன்ற பண்புகள் பல குடும்பங்களில் பரம்பரையாகக் காணப்படுகின்றன. காலையில் சுறுசுறுப்பாக இருப்பது (ஒரு வானம்பாடி பறவை போல) அல்லது மாலையில் சுறுசுறுப்பாக இருப்பது (ஒரு ஆந்தையை போல) நமது மரபில் தொடரலாம் என்பதற்கான சான்றுகள் உள்ளன."

"ஆனால், இந்த பண்புகளால் மட்டுமல்லாமல், தூக்கமின்மை பல்வேறு காரணிகளால் ஏற்படுகிறது" என்பதையும் குறிப்பிடுகிறார் பேராசிரியர் எஸ்பி.

தூங்க முடியாவிட்டால் என்ன செய்ய வேண்டும்?

தூக்கமின்மை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, காலை நேரம் நெருங்க நெருங்க, தூங்குவதற்கான நமது உந்துதல் குறைகிறது

நள்ளிரவில் எழுந்தவுடன் மீண்டும் தூங்குவதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்? நாம் தூங்க முயற்சிக்கும்போது அதில் ஒரு முரண்பாடு இருப்பதாக பேராசிரியர் எஸ்பி விளக்குகிறார்.

"காலை நெருங்க நெருங்க, தூங்குவதற்கான நமது உந்துதல் குறைகிறது. 'என்னால் மீண்டும் தூங்க முடியவில்லையே' என்ற கவலையில் அதிகமாக சிந்திக்க ஆரம்பித்தால், அது தூக்கத்திற்கு எதிரியாகிவிடும். உறங்கும்படி உங்களை நீங்களே கட்டாயப்படுத்த முடியாது."

"நீங்கள் நிம்மதியாக இருக்கும்போது, இயற்கையாகவே உங்களுக்குத் தூக்கம் வரும். மேலும், நீங்கள் தூங்க முயற்சிக்கும்போது, விழித்திருப்பீர்கள். அதுவே, தூக்கமின்மை பிரச்னையின் ஒரு பகுதியாக இருக்கலாம் என நான் சந்தேகிக்கிறேன்," என்று தூக்கமின்மையில் உள்ள சிக்கல்களை விவரிக்கிறார் பேராசிரியர் எஸ்பி.

எனவே, நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும், விழித்துக்கொண்டே இருக்க முடிவெடுப்பதே சிறந்த தீர்வு என்கிறார் அவர்.

ஏனென்றால், தூக்கத்தை எதிர்ப்பதன் மூலம், அதனை இயற்கையாக வர அனுமதிக்கிறீர்கள் என்ற காரணத்தையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

டாக்டர் ஆர்ச்சர்ட், சில எளிய நடைமுறைகளை பின்தொடர்வதன் மூலம், நமக்கு நன்றாக தூக்கம் வரலாம் என்று குறிப்பிடுகிறார்.

என்னென்ன சிகிச்சைகள் உள்ளன?

உறக்கம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, உறக்கம் கலைந்து, விழிப்பு வந்துவிட்டது உங்களுக்குத் தெரிந்தால், படுக்கையை விட்டு எழுந்துவிடுங்கள் என்று பரிந்துரைக்கிறார் மருத்துவர் ஹரே

தூக்கத்துக்கு, நிலைத்தன்மை முக்கியம் என்கிறார் டாக்டர் ஆர்ச்சர்ட். ஒரே நேரத்தில் படுக்கைக்குச் செல்வதற்கும், விழிப்பதற்கும் நம்மைப் பழக்கப்படுத்துவன் மூலம், நமக்கு நன்றாக தூக்கம் வரலாம் என்றும் அவர் கூறுகிறார்.

மேலும், தூங்கும் இடத்துடன் நாம் ஒத்துப்போக வேண்டுமென டாக்டர் ஆர்ச்சர்ட் பரிந்துரைக்கிறார்.

"எந்த படுக்கையில் தூங்கப் போகிறோம் என்பதை மூளைக்கு பழக்கப்படுத்துவதும் அதற்கு உதவலாம். அதேபோல், சோஃபாவில் தூங்குவதையும் படுக்கையில் வேலை செய்வதையும் தவிர்ப்பது நல்லது" என்று அறிவுறுத்துகிறார் டாக்டர் ஆர்ச்சர்ட் .

நீங்கள் விழித்திருந்து, மீண்டும் தூங்கப் போவதாக உணரவில்லை என்றால், படுக்கைக்குத் திரும்புவதற்கு முன், நீங்கள் எழுந்து சுமார் அரை மணிநேரம் வேறு ஏதாவது செய்ய வேண்டும்.

"உறக்கம் கலைந்து, முழிப்பு வந்துவிட்டது உங்களுக்குத் தெரிந்தால், படுக்கையைவிட்டு எழுந்துவிடுங்கள்." என்று மருத்துவர் ஹரே பரிந்துரைக்கிறார்.

மறுபுறம், மருத்துவர் ஹரே மற்றும் பேராசிரியர் எஸ்பி ஆகிய இருவருமே தூக்கமின்மைக்கு மருந்துகளைப் பயன்படுத்துவதற்கு ஆதரவாக இல்லை.

மேலும், புலனுணர்வு சார்ந்த நடத்தை சிகிச்சை (CBT) மேற்கொள்வது இதற்கு உதவலாம் என்கிறார்கள்.

தங்கள் சிந்தனை மற்றும் நடத்தையை மாற்றுவதன் மூலமும், சிக்கல்களை நிர்வகிக்க உதவும் ஒரு வகையான உளவியல் சிகிச்சையை மக்கள் எடுத்துக்கொள்வதன் மூலமும், தூக்கமின்மை சார்ந்த சிக்கல்களைத் தீர்க்கலாம் என்று அவர்கள் இருவரும் ஆலோசனை கூறுகிறார்கள்.

சான்றுகளின் அடிப்படையில், தூக்கமின்மைக்கான சிறந்த சிகிச்சையாக புலனுணர்வு சார்ந்த நடத்தை சிகிச்சை உள்ளது (CBT) என்று மருத்துவர் ஹரே கூறுகிறார்.

இது 70-80 சதவிகித மக்களுக்கு வேலை செய்கிறது, மேலும் இவர்களில் 50 சதவிகித மக்கள் தூக்கமின்மையிலிருந்து முழுமையாக நலமடைகிறார்கள் என்கிறார் அவர்.

மறுபுறம், மருந்துகளை விட உளவியல் சிகிச்சை தூக்கமின்மைக்கு சிறப்பாக உதவி செய்யும் என சில நோயாளிகள் நம்புவதில்லை என்பதையும் பேராசிரியர் எஸ்பி தெரிவிக்கிறார்.

சிலர் தூக்கம் வருவதற்காக மெக்னீசியத்தை எடுத்துக்கொள்கிறார்கள், ஆனால் இது குறித்து அதிகளவில் ஆராய்ச்சிகள் இல்லை, சிறிய அளவிலான ஆய்வுகள் மட்டுமே உள்ளன என்று டாக்டர் ஆர்ச்சர்ட் சுட்டிக்காட்டுகிறார்.

பல நாடுகளில் மருத்துவரின் பரிந்துரையின்றி, மெலடோனினை வாங்கமுடியும். ஆனால் மற்ற நாடுகளில் அது மருத்துவரால் பரிந்துரைக்கப்பட வேண்டும். ஏன் அப்படி என்ற கேள்விக்கு விடையளித்தார் மருத்துவர் ஹரே.

"தூக்கத்தில் எளிதான தாக்கத்தை ஏற்படுத்த முடியும். அதாவது, மெக்னீசியம் மற்றும் பிற மருந்துகள் தூக்கத்தில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும் கூட, அது தூங்குவதற்கு உதவுகிறது என்று மக்கள் அவற்றை நம்பலாம்" என்று விளக்குகிறார்.

தூக்கத்தை பாதிக்கும் பிற காரணிகள் யாவை?

தூக்கமின்மை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, நீலத் திரைகளும் மின்னணு சாதனங்களின் திரையில் இருந்து வரும் ஒளியும் நம்மை விழித்திருக்கச் செய்யும் என்கிறார் டாக்டர் ஆர்ச்சர்ட்

மெனோபாஸ், மது அருந்துவது அல்லது இரவு நேரப் பணிச்சூழல் போன்ற விஷயங்கள் தூக்கத்தை எவ்வாறு பாதிக்கின்றன? என்ற கேள்விக்கு மருத்துவர் ஹரே விளக்கம் தருகிறார்.

மெனோபாஸ் என்பது பெண்களுக்கு மிகவும் கடினமான காலகட்டம் என்றும் அது அவர்களின் தூக்கத்தை பாதிக்கும் என்றும் மருத்துவர் ஹரே குறிப்பிடுகிறார்.

அவர்களால் இரவில் எவ்வளவு நேரம் தூங்க முடிகிறது என்பதையும், இரவில் எவ்வளவு நேரம் விழித்திருக்கிறார்கள் என்பதையும், அதனால் அவர்களின் தூக்கம் எவ்வளவு தடைபடுகிறது என்பதையும் மெனோபாஸ் பாதிக்கலாம் என்கிறார்.

"தூக்கத்தை சீர்குலைக்கும் திடீர் விளைவுகள், ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் மனநிலை மாற்றங்களின் காரணமாக தூக்கம் கெடலாம். ஆனால், மாதவிடாய் தொடர்பான ஹார்மோன் மற்றும் மனநிலை மாற்றங்கள் காரணமாக, நமக்கு இன்னும் அதிகமான மன அழுத்தம் ஏற்படலாம்."

"கூடுதலாக, சிறு குழந்தைகள் மற்றும் வயதான பெற்றோர்கள் இருவரையும் கவனிக்கும் பொறுப்புகளையும் பார்த்துக்கொள்வதால் ஏற்படும் மன அழுத்தமும் தூக்கத்தை பாதிக்கலாம்" என்று அதன் காரணங்களை பட்டியலிடுகிறார் மருத்துவர் ஹரே.

மது அருந்துவது, நாம் தூங்கும் விதத்தை, குறிப்பாக தூக்கத்தின் வெவ்வேறு நிலைகளில் நாம் செலவிடும் நேரத்தை மாற்றியமைக்கும் என்கிறார் டாக்டர் ஆர்ச்சர்ட்.

"ஆனால் மது அருந்துவது, நமது உடலின் மற்ற பகுதிகளையும் பாதிக்கலாம், எடுத்துக்காட்டாக, மது அருந்துவதால் தூக்கத்தின்போது அடிக்கடி கழிப்பறைக்குச் செல்ல நேரிடலாம், இது தசைகளை தளர்த்தும்.

மது அருந்துவதால் நாம் குறட்டை விடக்கூடும், அது மட்டுமின்றி நமது ஹார்மோன்களையும் மது பாதிக்கலாம்.

ஏனென்றால், தூக்கம் வருவதற்கும், நீண்ட நேரம் தூங்குவதற்கும் உதவும் முக்கியமான செயல்முறையின் அங்கம் அந்த ஹார்மோன்கள்" என்பதை அவர் நினைவுறுத்துகிறார்.

மது அருந்துவது, தூக்கமின்மை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மது அருந்துவது, நாம் தூங்கும் விதத்தை, குறிப்பாக தூக்கத்தின் வெவ்வேறு நிலைகளில் நாம் செலவிடும் நேரத்தை மாற்றியமைக்கும்

இரவு நேரப் பணிச்சூழல் மற்றும் பிற நேரங்களில் வேலை செய்தால் தூக்கத்தை நிர்வகிப்பதற்கான ஆரோக்கியமான வழிகள் யாவை என்ற கேள்விக்கு, மருத்துவர். ஹரே 'உறக்கத்தை மேம்படுத்த' சில வழிகளை முயற்சிக்குமாறு பரிந்துரைக்கிறார்.

"நீங்கள் இரவு நேரத்தில் வேலை செய்யாதபோது, உங்களால் சாதாரண நேரத்தில் தூங்க முடியும் அல்லவா. எனவே, அதை மேம்படுத்த முயற்சிப்பது, தூங்கும்போது இடையூறின்றி நன்றாகத் தூங்குவது ஆகியவற்றை நாங்கள் வழக்கமாக பரிந்துரைப்போம்" என்கிறார்.

நீலத் திரைகளும் மின்னணு சாதனங்களின் திரையில் இருந்து வரும் ஒளியும் நம்மை விழித்திருக்கச் செய்யும் என்கிறார் டாக்டர் ஆர்ச்சர்ட்.

"நாம் பயன்படுத்தும் சாதனங்களின் திரைகளில் உள்ள முக்கிய பிரச்சனை, வெளிச்சம் அல்ல. மாறாக அவற்றில் நாம் என்ன செய்கிறோம் என்பது தான்."

"தூக்கத்தைக் கெடுக்காத வகையில், உங்கள் கைப்பேசியை அமைதியாகவும் நிதானமாகவும் பயன்படுத்தினால், உற்சாகமான அல்லது ஊக்கமளிக்கும் ஒன்றைச் செய்தால் அது உங்கள் தூக்கத்தைப் பாதிக்காது" என்று விவரிக்கிறார் மருத்துவர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரவில் வாயை ஒட்டி வைத்துக்கொண்டு தூங்கினால் ஆழ்ந்து உறங்க முடியுமா? எப்படி?

இரவில் நிம்மதியாக உறங்குவது எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், சோபியா பெட்டிசா

  • பதவி, பிபிசி உலக சேவை

  • 23 ஏப்ரல் 2025

    புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்

சமூக ஊடகங்களில் பரவும் ஸ்லீப்மேக்ஸிங் (உறக்கத்தை அதிகப்படுத்துதல்) உத்தி, சிறந்த இரவு உறக்கம் தரும் எனக் கூறப்படுகிறது.

நன்றாக உறங்குவதற்கு, தங்களது வாயை ஒட்டி வைப்பது முதல் படுக்கைக்கு செல்லும் முன்பு கிவி பழம் உண்பது வரை, இளைஞர்கள் முறையாக பின்பற்றும் பல்வேறு நுணுக்கமான செயல்முறைகளை கொண்ட மில்லியன் கணக்கான வீடியோக்கள் டிக் டாக்கில் பரவி வருகின்றன.

ஆனால், தேவையான உறக்கத்தைப் பெறுவதற்கான தேடல் அளவுக்கு மீறிச் செல்லுமா?

சில முறைகள் பாதிப்பில்லாதவையாக தோன்றினாலும், அனைத்தும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. மேலும்,சில முறைகள் நல்ல முறையில் பயனளிப்பதற்குப் பதிலாக அதிகமான தீங்கையும் ஏற்படுத்தக்கூடும்.

உறக்க நிபுணர்கள் மற்றும் மருத்துவர்களிடம் பேசி, நடைமுறையில் எந்தெந்த முறைகள் பயனளிக்கின்றன என்பதை நிறுவுவதற்கு பிபிசி முயல்கிறது.

தூக்கம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,மெக்னீசியம் தூக்கத்திற்கு உதவும் - ஆனால் அதிகப்படியாக இதனை சாப்பிட்டால் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.

நல்ல உறக்கத்தைப் பெற மெக்னீசியம் உதவுமா?

மிகவும் பிரபலமான ஸ்லீப்மேக்ஸிங் குறிப்புகளில் ஒன்று மெக்னீசியத்தை உள்ளடக்கியது.

குறிப்பாக வைரஸ் "ஸ்லீப்பி கேர்ள் மாக்டெயில்" எனப்படும் புளிப்பு செர்ரி சாறு மற்றும் கார்பனேற்றப்பட்ட தண்ணீரின் கலவையில் மெக்னீசியம் ஒரு முக்கிய மூலப்பொருளாகும்.

மது அல்லாத இந்தப் பானம், 2024 ஆம் ஆண்டில் உறக்கத்தைத் தூண்டும் அதன் நன்மைகளுக்காக சமூக ஊடகங்களில் பிரபலமடைந்தது.

"மெக்னீசியம் உட்பொருள்கள் (சப்ளிமெண்ட்ஸ்) உறக்கத்தை மேம்படுத்த உதவக்கூடும் என்பதற்கான சில ஆதாரங்கள் உள்ளன, ஆனால் அது மெக்னீசியம் குறைபாடு உள்ளவர்களுக்கே பயன்படும்," என பிரிட்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தூக்கமின்மை குறித்த முனைவர் பட்டம் பெற்ற தூக்க நிபுணர் மருத்துவர் லிண்ட்சே பிரவுனிங் கூறுகிறார்.

மேலும், அதிகப்படியான மெக்னீசியத்தை உட்கொள்வது செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் அல்லது சில மருந்துகளுடன் இணைந்து எதிர்மறையான பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்று மருத்துவர் பிரவுனிங் எச்சரிக்கிறார்.

"இந்த பானங்களில் மெக்னீசியத்தின் அளவு சில நேரங்களில் மிகவும் அதிகமாக இருக்கலாம், என்றும் இது வயிற்றுப்போக்கை ஏற்படுத்தக்கூடும். இது நிச்சயமாக எந்த விதத்திலும் உங்களது உறக்கத்துக்கு உதவாது" என்றும் அவர் பிபிசியிடம் கூறுகிறார்.

அதற்கு மாறாக, சூடான பால் அல்லது புளிப்பான செர்ரி சாறு போன்ற, இயற்கையாகவே மெலடோனின் கூறுகளை உள்ளடக்கி, உறக்கத்தைத் தூண்டும் மாற்று பானங்களை அவர் பரிந்துரைக்கிறார்.

தூக்கம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,மவுத் டேப்பிங்

மவுத் டேப்பிங்: ஆபத்தான போக்கா?

டிக் டாக்கில் பரவியுள்ள மிகவும் சர்ச்சைக்குரிய ஸ்லீப்மேக்ஸிங் முறைகளில் ஒன்று, நாசி மூலம் சுவாசத்தை ஊக்குவிக்க, வாயை மூடிக்கொண்டு, உதடுகளை பிரிக்க இயலாதவாறு ஒட்டிக்கொள்ளும் முறையாகும்.

லண்டனில் உள்ள உடல்நலப் பயிற்சியாளரான லிசா டீ மற்றும் நியூயார்க்கில் உள்ள சமூக வலைதளப் பிரபலமான டெவோன் கெல்லி ஆகிய இருவரும் தங்கள் உறங்குவதற்கு முன்பு தாங்கள் கடைபிடிக்கும் நடைமுறைகளின் ஒரு பகுதியாக இதை பின்பற்றுகிறார்கள்.

"பல வருடங்களாக பற்களை இறுக்கிப் பிடிப்பதால் ஏற்படும் தாடை வலியுடன் போராடி, இரவில் வாயை பிரிக்க இயலாதவாறு ஒட்டிக்கொள்ளும் பழக்கத்தை நான் கடைபிடிக்கத் தொடங்கினேன்" என்று தனது அனுபவங்களை, தன்னைப் பின்தொடரும் ஆயிரக்கணக்கான மக்களுடன் வீடியோக்கள் மூலம் பகிர்ந்து கொள்கிறார் கெல்லி.

"இது எனக்கு பெரிதும் உதவியது, இப்போது ஐந்து வருடங்களாக எனக்கு எந்த வலியும் இல்லை" என்கிறார் கெல்லி.

'ஹெல்தி ஹேப்பி ஏடிஹெச்டி' என்ற புத்தகத்தை எழுதிய லிசா, அவர் ஸ்லீப்மேக்ஸிங் முறைகளை பின்பற்றத் தொடங்கியதிலிருந்து, அவரது ஏடிஎச்டி அறிகுறிகள் குறையத் தொடங்கியதாகக் கூறுகிறார்.

அவரது டிக்டாக் வீடியோக்களில் அக்குபிரஷர் தலையணை மற்றும் பெரிய எடையுள்ள முகமூடியும் காட்டப்படுகின்றன.

"நான் அதிகமாக கவனம் செலுத்துபவராகவும், குறைவான அழுத்தத்தையும் உணர்கிறேன்."

தூக்கம்

பட மூலாதாரம்,DEVON KELLEY

படக்குறிப்பு,கடந்த ஐந்து ஆண்டுகளில் 'ஸ்லீப்மேக்ஸிங்' தனது தூக்கத்தை மேம்படுத்தியுள்ளதாக டெவன் கெல்லி கூறுகிறார்.

ஆனால் இந்த முறை குறித்த சில கவலைகள் இருப்பதாக பிபிசியிடம் பேசிய நிபுணர்கள் கூறியுள்ளனர்.

"இது மிகவும் ஆபத்தானது," எனக் கூறும் மருத்துவர் பிரவுனிங்,

"நீங்கள் இரவில் சுவாசிக்க சிரமப்படும்போது, உங்கள் வாயை மூடிக்கொண்டிருந்தால், உங்களால் முழுமையாக மூச்சை உள்ளிழுக்க முடியாது.

இது உங்கள் இதயத்தை அழுத்தலாம் அல்லது மாரடைப்பைத் தூண்டலாம்" என்றும் குறிப்பிடுகிறார்.

மேலும், இரவு உறக்கத்தில் சுவாசம் அவ்வப்போது நின்றுவிடும் ஒரு வகையான மூச்சுத்திணறல் பலருக்கும் கண்டறியப்படாமல் இருப்பதாகவும், மருத்துவர் பிரவுனிங் சுட்டிக்காட்டுகிறார்.

அவர்கள் வாயை மூடிக்கொண்டு உறங்குவது தீவிரமான ஆபத்துகளை உருவாக்கக்கூடும்.

தொடர்ந்து பேசும் அவர், இந்த நடைமுறையானது வாய் பகுதியில் ஒவ்வாமை அல்லது எரிச்சலை ஏற்படுத்தக்கூடும் என்றும் குறிப்பிடுகிறார்.

"நன்றாக உறங்குவதற்கு உங்களது வாயை மூடிக்கொள்ள வேண்டும் என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை" என்று மருத்துவர் கார்லியாரா வெயிஸ் கூறுகிறார்.

அவரது முனைவர் பட்ட ஆராய்ச்சி நடத்தை தூக்க மருத்துவத்தில் கவனம் செலுத்துகிறது.

டிக் டாக்கில் இந்த விஷயம் வைரலாக இருப்பதால் அதைப் பின்பற்ற வேண்டாம் என்று அவர் எச்சரிக்கிறார்.

நாசியை விரிவாக்கும் பொருட்களைப் பயன்படுத்துதல்

நாசி குழாய்களை விரிவுபடுத்தும் சாதனங்கள், இரவில் சுவாசத்தை எளிதாக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டவை. சில சமூக ஊடக பயனர்கள் அவற்றை குறட்டைக்கு ஒரு நல்ல தீர்வாக பரிந்துரைக்கின்றனர்.

மூக்கடைப்பு காரணமாக தூங்குவதில் சிக்கல் உள்ள சிலருக்கு, நாசியை விரிவாக்கும் இந்தப் பொருட்கள் குறிப்பிட்ட நிவாரணத்தை அளிக்கலாம்.

இருப்பினும், மருத்துவர் பிரவுனிங் கூறுகையில், பெரும்பாலான மக்களுக்கு, கவலை, மன அழுத்தம் அல்லது சரியான படுக்கை நேர ஓய்வு இல்லாததால் உறக்கம் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுகின்றன என்கிறார்.

எடுத்துக்காட்டாக, புளோரிடா மாநில பல்கலைக்கழகத்தின் 2022ம் ஆண்டு ஆய்வில், கவலை அல்லது மனச்சோர்வு உள்ளவர்களுக்கு தூக்கமின்மை ஏற்படுவதற்கான அதிக ஆபத்து உள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

"நாசியை விரிவாக்கும் பொருட்கள் அந்த சிக்கல்கள் எதற்கும் உதவப் போவதில்லை," என்று மருத்துவர் பிரவுனிங் கூறுகிறார்.

நாசி துவாரத்தை விரிவாக்கும் பொருட்களைப் பயன்படுத்துவது, தூக்கத்தை மேம்படுத்துவதற்கோ அல்லது குறட்டையை குறைப்பதற்கோ உதவும் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லையென மருத்துவர் வெயிஸ் கூறுகிறார்.

மேலும் குறட்டை விடுவது உறக்கத்தில் ஏற்படும் மூச்சுத்திணறல் அல்லது விரிவாக்கப்பட்ட டான்சில்ஸின் அறிகுறியாக இருக்கலாம் என்று அவர் எச்சரிக்கிறார்.

தொடர்ந்து பேசும் அவர், "கண்டறியப்படாத தூக்கக் கோளாறு இருப்பது ஆபத்து. நீங்கள் ஒரு தூக்க நிபுணரை அணுக வேண்டும்" " என்றும் கூறுகிறார்.

கிவி பழங்களை உண்ணுங்கள்

தூக்கம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கிவி பழம்

கிவி பழங்களை உண்பது உறக்கத்தை மேம்படுத்தும் என்று பரிந்துரைக்கும் வீடியோக்களால் டிக் டாக் நிரம்பியுள்ளது.

தைவானில் உள்ள தைபே மருத்துவப் பல்கலைக்கழகத்தின் சார்பாக நடத்தப்பட்ட ஒரு சிறிய ஆய்வில், படுக்கைக்கு செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு இரண்டு கிவி பழங்களை, நான்கு வாரங்களாக உண்டவர்கள் சிறந்த உறக்கத்தைப் பெற்று, எளிதாக உறங்க முடியும் என்று கூறியுள்ளனர்.

கிவியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் செரோடோனின் அளவு அதிகம்.

மூளையில் உள்ள செரோடோனின் என்ற வேதிப்பொருள், மனநிலை, உறக்கம் மற்றும் பிற செயல்பாடுகளை பாதிக்கிறது.

ஆய்வின் படி, இது தூக்கக் கோளாறுகளுக்கு சிகிச்சை அளிப்பதில் பயனுள்ளதாக இருக்கக்கூடும்.

இருப்பினும், கிவி பழங்களை உண்பதன் மூலம் நன்றான உறக்கத்தைப் பெற முடியும் என்பதை நிரூபிப்பதற்கு இன்னும் அதிகமான ஆராய்ச்சி தேவை என்று மருத்துவர் பிரவுனிங் சுட்டிக்காட்டுகிறார்.

குளிர்ந்த அறையில் உறங்குவது

நன்றாக உறங்குவதற்காக, சமூக ஊடகப் பிரபலங்களின் வீடியோக்களால் பரவலாகப் பகிரப்பட்ட இந்த உதவிக் குறிப்பு அறிவியலால் ஆதரிக்கப்படுகிறது.

நாம் தூங்கும்போது, நமது உடல் வெப்பநிலை சுமார் ஒரு டிகிரி குறைகிறது, இது தூக்கத்தை ஒழுங்குபடுத்த உதவும் மெலடோனின் என்ற ஹார்மோனை உடல் உற்பத்தி செய்ய சமிக்ஞை அளிக்கிறது.

நாம் உறங்கும் அறை மிகவும் சூடாக இருந்தால், நமது உடல்கள் சரியாக குளிர்ச்சியடையாது.

குளிரான அறை, உறக்கத்துக்கு நன்மை பயக்கும் அதே வேளையில், மிகவும் குளிரான அறையில் உறங்குவதும் உறக்கத்துக்கு எதிர்மறையான மற்றும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம்.

ஓய்வெடுக்கும்போது அசௌகரியம் ஏற்படுவது, உறக்கத்துக்கு இடையூறு விளைவிப்பதால், அது தூக்கத்தை கடினமாக்கும் என்று மருத்துவர் பிரவுனிங் எச்சரிக்கிறார்.

"முக்கியமானது "உகந்த" வெப்பநிலையை பராமரிப்பது, அதாவது சிறந்த உறக்கத்தைப் பெறுவதற்கு சுமார் 18 ° செல்ஸியஸை பராமரிப்பது " என்று அவர் கூறுகிறார்.

மெலடோனின் எடுத்துக்கொள்வது

மெலடோனின் கூறு உள்ள பொருட்கள், குறிப்பாக பளிச்சென்ற நிறத்தில் சிறிய கரடி வடிவத்தில் உள்ள மிட்டாய்கள், உறக்கத்துக்கு உதவுவதாக சமூக ஊடகங்களில் பிரபலமடைந்துள்ளன.

இவற்றில் நாம் இயற்கையாக உற்பத்தி செய்யும் ஹார்மோன் உள்ளது.

இவை நமது உடலிடம், இது உறங்குவதற்கான நேரம் என்று சுட்டிக்காட்டும்.

அவை பல நாடுகளில் விற்பனைக்கு கிடைக்கின்றன மற்றும் பெரும்பாலும் விமானப் பயணத்தால் ஏற்படும் உடல் சோர்வை சரி செய்ய பயன்படுத்தப்படுகின்றன.

ஆனால், மெலடோனின் உறக்கம் சார்ந்த பிரச்னைகளுக்கு விரைவான தீர்வாக மாறினாலும், அது தூக்கமின்மைக்கான மூல காரணத்தை நிவர்த்தி செய்யாது என்று மருத்துவர் பிரவுனிங் எச்சரிக்கிறார்.

"உங்களுக்கு விமானப் பயணத்தினால் அயர்ச்சி ஏற்படவில்லை என்றால் அல்லது உங்களது சர்க்காடியன் ரிதம் சரியான நேர மண்டலத்தில் இருந்தால், உங்களது உடலே படுக்கைக்கு முன்பு மெலடோனினை உற்பத்தி செய்கிறது" என்று மருத்துவர் பிரவுனிங் கூறுகிறார்.

அதனை அதிக அளவு எடுத்துக்கொள்வது மற்றும் மெலடோனினை அதிகம் பயன்படுத்துவது ஆகியவை அடுத்த நாள் உடல் நலக்குறைவை ஏற்படுத்தலாம், நீங்கள் உட்கொள்ளும் மற்ற மருந்துப் பொருட்களுடன் இணைந்து எதிர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தலாம் மற்றும் உங்கள் ஹார்மோன்களை சீர்குலைக்கலாம் என்று அவர் மேலும் கூறுகிறார்.

படுக்கைக்கு முன்பு திரை செல்போன் பயன்பாட்டை கட்டுப்படுத்துதல்

உறக்கத்தை மேம்படுத்துவதற்காக சொல்லப்படும் மிகவும் பிரபலமான உதவிக் குறிப்புகளில் ஒன்று படுக்கைக்கு செல்வதற்கு முன்பு (மின்னனு சாதனங்களின்) திரைகளில் செலவிடும் நேரத்தைக் கட்டுப்படுத்துவதாகும்.

ஏனெனில், திரைகளின் மூலம் வெளியாகும் பிரகாசமான நீல ஒளி மெலடோனின் உற்பத்தியில் தலையிடக்கூடும்.

ஆனால், இந்த வகை ஒளியானது முன்பு நினைத்தது போல் பிரச்னைக்குரியதாக இல்லாமல் இருக்கலாம் என்று சமீபத்திய ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

குறிப்பாக, மக்கள் மாலை நேரங்களில் தங்கள் சாதனங்களின் பிரகாசத்தை மங்கச் செய்தல் மற்றும் அவர்கள் திட்டமிட்ட நேரத்திற்குப் பிறகு அவற்றை பயன்படுத்தாமல் இருக்கும்போது, இது குறைவான பாதிப்பையே ஏற்படுத்தும்.

"உறக்கத்தை மேம்படுத்துவதற்கு ஒரு மந்திர தீர்வாக, படுக்கைக்கு முன்பு திரைகளை முற்றிலுமாக அகற்றும் இந்த யோசனை தற்போது கேள்விக்குள்ளாக்கப்படுகிறது," என்கிறார் மருத்துவர் பிரவுனிங்.

ஸ்வீடனில் உள்ள ஓரெப்ரோ பல்கலைக்கழகத்தின் 2024ம் ஆண்டின் ஆய்வை அவர் சுட்டிக்காட்டுகிறார், இது படுக்கைக்கு செல்வதற்கு முன் திரைகளைப் பயன்படுத்துபவர்கள், தூங்குவதற்கு ஒன்று முதல் ஒன்பது நிமிடங்களை மட்டுமே கூடுதலாக எடுத்ததாகக் வெளிப்படுத்துகிறது.

உங்கள் திரையின் பிரகாசத்தை மங்கச் செய்யவும், இரவுப் நேரத்தில் பயன்படுத்துவதற்கென்று பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட முறைகளை பயன்படுத்தவும், உறக்க நேரத்துக்கான நினைவூட்டலை உருவாக்கி வைத்துக்கொள்ளவும் அவர் பரிந்துரைக்கிறார்.

எடையுள்ள முகக் கவசம் அல்லது போர்வையைப் பயன்படுத்துதல்

தூக்கம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

உடல்நலப் பயிற்சியாளர் லிசா டீ அத்தகைய பொருட்களில் முதலீடு செய்வது மதிப்புக்குரியது என்று நம்புகிறார்.

"எடை அதிகமுள்ள எனது போர்வையை எனக்கு மிகவும் பிடிக்கும். அது இப்போது எனது படுக்கையின் முக்கியப் பகுதியாக உள்ளது.

ஏடிஹெய்ச்டி மற்றும் மன அழுத்தம் உள்ள பலர் இரவில் அமைதியின்மையுடன் போராடுகிறார்கள், மேலும் எடையுள்ள போர்வையின் மென்மையான, அழுத்தமும் கூட உடலை நிதானமாகவும் பாதுகாப்பாகவும் உணர உதவும். இது ஒரு அணைப்பு போன்றது"என்கிறார் லிசா.

பொதுவாக உங்கள் உடல் எடையில் 10 சதவீதம் போன்ற அளவில், இவ்வகையான போர்வைகளை சரியான எடையுடன் தேர்ந்தெடுப்பது முக்கியமானது.

எனவே இது உடலை கட்டுப்படுத்துவதை விட ஆறுதல் அளிக்கிறது.

ஆனால் அவை ஏதேனும் வித்யாசத்தை ஏற்படுத்துகிறதா என்பதில் மருத்துவர் பிரவுனிங் சந்தேகம் கொண்டுள்ளார்.

"அதிக எடை உங்கள் மீது அழுத்துவது உங்களது சுவாசத்தைத் தடுக்கலாம் அல்லது ரத்த ஓட்டப் பிரச்னைகளை ஏற்படுத்தலாம்" மேலும் "அவை மிகவும் தடிமனாக இருப்பதால், உடல் அதிக வெப்பமடைவதற்கும் வழிவகுக்கும்."என்று அவர் கூறுகிறார்.

அதிக எடையுள்ள முககவசங்களைக் குறித்து, பல டிக் டாக் பயனர்கள், உடலை அமைதிப்படுத்தும் அவற்றின் விளைவுகள் பற்றி ஆவலுடன் கூறினாலும், அவற்றின் பயன்பாட்டை ஆதரிக்கும் அறிவியல் சான்றுகள் குறைவாகவே உள்ளன.

இது "உறக்கத்தை ஒரு பொருளாக வணிகமயமாக்குவதுடன் தொடர்புடையது" எனக் கூறும் மருத்துவர் வெயிஸ்,

"நல்ல உறக்கத்தை பெறுவதற்கு அதிகமான பொருட்களை வாங்க வேண்டும் என நாம் மக்களை தள்ளக்கூடாது." என்றும் குறிப்பிடுகிறார்.

ஸ்லீப்மேக்ஸிங் இளைஞர்களிடையே ஏன் மிகவும் பிரபலமானது?

ஜென் ஸி தலைமுறையைச் சேர்ந்தவர்கள், முந்தைய தலைமுறைகளைச் சேர்ந்தவர்களை விட சுய-கவனிப்பில் அதிக கவனம் செலுத்துகிறது, மோசமான தூக்கத்துடன் தொடர்புடைய மனச்சோர்வு, உடல் பருமன் மற்றும் டிமென்ஷியா போன்ற கடுமையான உடல் நல அபாயங்களைப் பற்றி நன்கு புரிந்து வைத்துள்ளார்கள்.

தூக்கத்தை மேம்படுத்துவதற்கான தெளிவான, கட்டமைக்கப்பட்ட திட்டத்தை வழங்குவதால், ஸ்லீப்மேக்ஸ்சிங் மக்களை ஈர்க்கிறது என்று டாக்டர் வெயிஸ் விளக்குகிறார், ஆனால் சிலர் அதை வெகுதூரம் எடுத்துச் செல்லக்கூடும் என்று எச்சரிக்கிறார்.

" உறங்குவதற்கு முன்னர் செய்ய வேண்டிய பணிகள் என்று ஒரு பெரிய பட்டியலை வைத்திருந்து, அவை அனைத்தையும் செய்ய வேண்டும் என்ற உணர்வு உண்மையில் மன அழுத்தத்தை உருவாக்கி, தூக்கத்தின் தரத்தை எதிர்மறையாக பாதிக்கலாம்."

லிசா இதனை ஏற்கவில்லை.

அவரின் பார்வையில், "களைப்பாகவும், உணர்ச்சி ரீதியில் நிலையற்றவராகவும், எரிச்சலாகவும் உணர்வதைக் காட்டிலும்" ஸ்லீப்மேக்ஸ்சிங் நடைமுறைகளைப் பின்பற்றுவது மக்களை ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் உணர உதவுமானால், அதனைப் பயன்படுத்துங்கள் என்கிறார் அவர்.

"இது அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும் செயல்முறை என்பதாலும் அதற்காக நிறைய பொருட்களை வாங்க வேண்டும்" என்பதாலும் இந்த ஸ்லீப்மேக்சிங் மோகம் நீடிக்குமா என்பதில் மருத்துவர் வெயிஸுக்கு சந்தேகம் உள்ளது.

அதே சமயம், ஸ்லீப்மேக்ஸ்சிங் மோகம் நீடிக்குமா என்று மருத்துவர் வெயிஸ் சந்தேகிக்கும் அதே வேளையில், தூக்கத்தை முன்னிலைப்படுத்துவதற்கும், மேம்படுத்துவதற்கும் முக்கியத்துவம் தொடர்ந்து அளிக்கப்படும் என்று அவர் உறுதியாக நம்புகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/c0rzljdpe55o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.