Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்டவன் சன்னதியில்  ஆடையை கழற்ற நிர்பந்திப்பதா?

 

-குருசாமி மயில்வாகனன்

 

Suchindram-Thanumalayan-Perumal-Temple-1

சில பிரபல கோவில்களில் ஆண்கள் சட்டை இல்லாமல் திறந்த மார்புடன் வர நிர்பந்தம் தரப்படுகிறது. இன்றைய தலைமுறையினர் பலர் இதில் மாற்றம் வேண்டுகின்றனர். ”இதில் மாற்றம் அவசியம் தான்” என நாராயணகுரு சச்சிதானந்தாவும், அய்யா வைகுண்டர் கோவில் பிரஜாபதியும் ஆதரிக்கின்றனர். என்ன செய்யலாம் ஒரு விவாதம்;

நாராயணகுரு நிறுவிய சிவகிரி மடத்தின் தலைவரான ஆன்மீகவாதியான சுவாமி சச்சிதானந்தாவே  சட்டையைக் கழற்றும் விதமான ஆடை கட்டுப்பாடுகளை கைவிடலாம் எனக் கூறி இருப்பது பலத்த வரவேற்பை பெற்று, கேரள அரசு இது குறித்து ஆன்மீக பெரியோர்களிடம் ஆலோசித்து வருகிறது.

வழக்கம் போல பழமைவாதிகள் கச்சை கட்டிக் கொண்டு பாரம்பரிய வழக்கத்தில் அரசாங்கம் தலையிடலாமா? என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

hq720-5.jpg

சுவாமி சச்சிதானந்தா தனது பேச்சில், சட்டையைக் கழற்றும் இந்த நீண்டகால நடைமுறைக்கு முடிவு கட்ட வேண்டும். இது இரு சமூகத் தீமை. நாராயணகுருவின் நோக்கங்களுக்கு எதிரானது. சமூக சீர்திருத்ததை வலியுறுத்திய நாராயண குரு தொடர்புள்ள கோவில்களிலேயே சட்டையைக் கழற்றும் நடை முறை இருப்பது வருத்தமளிக்கிறது. பிறமதத்தினர் விரும்பி வரும் போது தடுத்து அனுமதி மறுப்பதைக் கண்டு வருத்தமடைகிறேன். கோவில்களின் புனிதம் காக்கிறோம் என்ற பெயரால் மனிதாபிமானத்தை தொலைக்கிறோம். கோவில்களை அனைத்து மக்களுக்கானதாகவும் மாற்றிக் காட்டியவர் நாராயணகுரு என்றார். இவர் சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என ஏற்கனவே கூறியுள்ளார்.

maxresdefault-4.jpg

சுவாமி சச்சிதானந்தாவின் பேச்சை கேரள முதல்வர் பினராய் விஜயனும், கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் ஆதரித்துள்ளனர். தமிழ் நாட்டில் இதன் எதிர்வினையாக கன்னியாகுமரி சாமித் தோப்பு அய்யா வைகுண்டர் கோவிலில் ஆண்கள் சட்டை இல்லாமல் வர நிர்பந்திக்கும் வழிமுறை கைவிடப்படும் எனபாலபிரஜாபதி அடிகளார் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் உள்ள குருவாயூர், கரிக்ககம் சாமுண்டிதேவி கோவில், கோட்டயம் ஏற்றமானூர் கோவில் , தென் கர்நாடகத்தின் கோவில்கள் மட்டுமின்றி, திருச்செந்தூர், சுசீந்திரம், கன்னியாகுமரி, மற்றும் சில தென் தமிழகக் கோவில்களில் ஆண்கள் மேல் ஆடையின்றி திறந்த மார்புடன் தான் போக வேண்டும். சிதம்பரம் நடராசர் கோவிலில் ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு மேல் சட்டை அணியக் கூடாது என்ற கட்டுப்பாடுகள் உள்ளன.

ஆடைக் கட்டுப்பாடுகள் மாற்றவே முடியாதவையா..?

மதம் சார்ந்த வழிபாட்டுச் சடங்குகள் மிகத் தீவிரமான, கடுங் கட்டுப்பாடுகளை வலியுறுத்துவதாகவே இன்றளவும் உள்ளன. இவற்றில் வைதீக சமயச் சடங்குகளின் வலியுறுத்தல்கள் வெளிப்படையானவை. ஆயினும், அச்சடங்குகளும், கட்டுப்பாடுகளும் காலந்தோறும் மாறி வந்து கொண்டிருக்கின்றன.

உதாரணத்திற்கு சபரி மலை செல்வதற்கு  நாற்பது நாட்கள்  விரதம் இருப்பதும், கடுமையான, கரடு,முரடான பாதையில் நடந்து சென்று தான் ஐய்யப்பனை தரிசிக்க வேண்டும் என்பதும் இன்றைக்கு இல்லை. ஒறிரு நாட்கள் விரதம் இருந்துவிட்டு, காரில் நேராக சன்னிதானத்தில் இறங்கும் வசதியானவர்கள் அனுமதிக்கபடுகிறார்கள்.

8888kerala.jpg

தற்போது சட்டை  கழட்டும் கட்டுப்பாடுகள் வேண்டாம் என்றால், மதம் சார்ந்த விசயங்களில் அரசு தலையிடக்கூடாதென்றும் ,நாத்திகர்கள் கருத்தே சொல்லக்கூடாதென்றும் ஒலிக்கும் குரல்கள் சற்று ஓங்கியே ஒலிக்கின்றன.

மதச்சார்பற்றதாகத் தன்னை அறிவித்துக் கொண்டுள்ள அரசானது மதம் சார்ந்த விசயங்களில் தலையிடக்கூடாதென்பது சரியானதே. ஆனால், அதை எல்லாவிதமான பிரச்சினைக்கும் பொருத்த முடியாது.  இன்றைய இளம் பக்தர்கள் தான் சட்டை கழட்டி வரச் சொல்வதை ஏற்க மறுத்து குரல் எழுப்புகிறார்கள்.

எத்தனையோ பல மாற்றங்களை எல்லாம் ஏற்பவர்கள் கூட ஆகம விதிகள் என அவர்கள் கூறிக் கொள்கின்ற வழிபாடு உள்ளிட்ட வைதீக நெறிமுறைகளில் அரசு தலையிடுவதைக் கடுமையாக எதிர்க்கிறார்கள். தற்போது பேசப்படுகின்ற ஆண்கள் மேல்சட்டை அணிந்து வருவது, உள்ளிட்ட பெண்களுக்கு அனுமதி மறுப்பது போன்ற விசயங்களுக்கும் ஆகம விதிகளுக்கும் சம்பந்தமில்லை

இது போன்ற விசயங்களில் இதுவரை ஏராளமான மாற்றங்களை அவர்கள் தாமாகவே செய்து வந்துள்ளார்கள் என்பதைப் புகழ்பெற்ற வழிபாட்டிடங்களின் அது தேவாலயமாகவோ அல்லது பள்ளிவாசலாகவோ இருந்தாலும் அவைகளுக்கு முன்பாக நின்று கொண்டு அங்கு வருகின்ற வழிப்பாட்டாளர்களைக் கேட்டால், அவர்கள் பலவிதமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதைக் கூறுவார்கள்.

2-6.jpg பாலபிரஜாபதி அடிகளார்

கர்பகிரகத்தில் உள்ள கடவுள் சிலைகளின் அருகில் பக்தர்கள் செல்வதற்கு ஆகம விதிகள் பல கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. ஆனால், பக்தர்கள் தரும் கட்டணத்திற்கேற்ப  உள்ளே செல்லவும்,சில நேரங்களில் தொடவும் வாய்ப்பு வழங்கப்படுவதை நாம் பல சமயங்களில் பார்க்கலாம்.

பிரபலங்கள் வருகின்ற நேரங்களிலும், கூட்டமே இல்லாமல் காத்தாடுகின்ற நேரங்களில் அந்த விதிகளெல்லாம் காற்றில் பறப்பது கண்கூடு. இதற்கான காரணம் என்னவெனில், அதன் மூலமாகக் கிடைக்கின்ற வருமானம் தான். பிரதமர் நரேந்திரமோடி குருவாயூர் கோவில் வந்த போது அவர் மேல் சட்டைக்கு பதிலாக மேலுடலை முழுவதுமாக மறைத்துக் கொள்ளும்படி பெரிய அங்கவஸ்திரத்தை போட்டுக் கொள்ள அனுமதித்தார்களே..எப்படி?

gebbxp7bgaajaiy.jpg

வழிபாட்டிடங்கள் சார்ந்த சடங்குகள் மட்டுமல்லாது, திருமணங்கள், புதுமனை புகுதல், திவசம், மற்றும் பலவகையான ஹோமங்கள் உள்ளிட்ட வீடுகளில் செய்யப்படுகின்ற சடங்குகளில் கூடப் பலவிதமான மாற்றங்கள் உருவாகிவிட்டன. இது தவிர, தனிப்பட்ட வாழ்க்கையிலுங் கூட குறிப்பிட்ட சாதிகளுக்கான சடங்குகளில்  கால ஓட்டத்தில் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதையும் நாம் காணலாம்.

உதாரணமாக, பிராமணன் கடல் கடந்து  வெளிநாடு செல்லக் கூடாது என அன்றைய தினம் சொல்லப்பட்டது. இன்று அவர்களே அதிகமாக வெளிநாடு செல்கின்றனர். பிராமணக் குடும்பங்களில் சில வகுப்பாரில் கணவர் இறந்ததும் விதவைக் கோலம் பூணுகின்ற பெண்கள் தலைமழிக்கப்பட்டு வீட்டின் மூலையில் தங் கவைக்கப்பட்டு முடக்கப்பட்டிருந்த நிலை மாறியிருக்கிறது. இன்று விதவைப் பெண்கள் குங்கும், பூ, பட்டுப்புடவையுடன் சர்வசாதரணமாக மகிழ்ச்சியுடன் பொது இடங்களில் நடமாடுவதைக் காண்கிறோம்.

மத ஆச்சாரங்களில் சீர்திருத்தங்கள் வேண்டி எந்த ஒரு தலைவரோ, ஒரு இயக்கமோ போராட்டாத நிலையில், கொடுமையான அப் பழக்கங்கள் வெகு சுலபமாக மறைந்துள்ளன. இதுபோலவே பெண்கல்வி, உணவு வகைகள், பழக்க வழக்கங்கள், உடையணிதல், தொழில் போன்ற பல அம்சங்களில் தலைகீழான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பதை யாரும் மறுக்க முடியாது. அம் மாதிரியான மாற்றங்கள் வரவேற்கப்பட வேண்டும்.

சமஸ்கிருத மந்திரங்கள் மட்டுமே ஓதப்பட்ட  வைணவ சமயத்தின் பெருமாள் கோவில்களில் ஆழ்வார்களின் தீந்தமிழ் பாசுரங்கள் பாடும் வழக்கத்தை இராமனுஜர் அறிமுகம் செய்யவில்லையா?

நாகரீகம் வளராத காலகட்டத்தில் ஆண்கள் வெறும் வேட்டியையும், மேல்துண்டையும் மட்டுமே அணிந்தனர். இறை வழிபாட்டு இடங்களில் தோளில் உள்ள துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டனர். தற்போதும் அதை தொடரச் சொன்னால் சரியாக இருக்குமா?

ஆக, ஆகமம் போன்ற விதிகள் வலியுறுத்துகின்ற பழக்கங்களும் அல்லது மரபாகக் கடைப்பிடித்து வந்துள்ள பழக்கங்களும் மாறியிருப்பதையும் மாறக் கூடியவை என்பதையும் மறுப்பவர்கள் உணர வேண்டும்.

அடுத்து மதம் சார்ந்த விசயங்களில் அரசு தலையிடக்கூடாதென்கிற  கோரிக்கை சில நிபந்தனைகளின் அடிப்படையில் ஏற்கக் கூடியதே. வழிபாட்டிடங்களின் உள்பிரச்சினைகளில் அங்கு கடைப்பிடிக்கப்படுகின்ற விதிமுறைகளுக்குள் அரசு தலையிடக் கூடாது…என்றாலும்< பிரச்சினைகள் வரும் போது தலையிட வேண்டும் என்பது மக்கள் எதிர்பார்ப்பே!

இதன் தொடக்கமாக மத நிறுவனங்களுக்கு அரசு வழங்கிவருகின்ற சலுகைகள் மற்றும் உதவிகள் அனைத்தும் முழுமுற்றாக நிறுத்தப்பட்டு அவற்றை லாபமீட்டுகின்ற தனியார் நிறுவனங்களாகக் கருதி, வகைப்படுத்தி நடத்தப்பட வேண்டும். இவ்வாறு செய்ய வேண்டிய பல விசயங்கள் உள்ளன. இதில் சிறுபான்மை, பெரும்பான்மை மதப் பாகுபாடுகளும் சிறிய மற்றும் பெரிய போன்ற அளவுகளும்  காட்டப்படவே கூடாது.

கட்டுரையாளர்; குருசாமி மயில்வாகனன்

 

https://aramonline.in/20560/men-enter-temple-without-shirt/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.