Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தமிழ்-ஜப்பானிய மொழி இலக்கணத் தொடர்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சாரதா வி
  • பதவி, பிபிசி தமிழ்
  • 2 பிப்ரவரி 2025, 08:01 GMT
    புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர்

தமிழ் மொழியையும் ஜப்பானிய மொழியையும் புதிதாகக் கேட்கும் ஒருவருக்கு அவை முற்றிலும் வேறுபட்டதாகத் தோன்றலாம். ஆனால், இரு மொழிகளுக்கும் இடையே சில ஒற்றுமைகள் இருப்பதாக, அதுகுறித்து ஆய்வு செய்து வரும் மொழி அறிஞர்கள் கூறுகின்றனர்.

கடந்த 1970களில் இரு மொழிகளுக்கான ஒலி ஒற்றுமை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. பிறகு தமிழ் அறிஞர்களும், ஜப்பானிய அறிஞர்களும் இரு மொழிகளின் ஒப்பீட்டு ஆய்வுகளை அவ்வப்போது செய்து வந்துள்ளனர். எனினும் பெருமளவில் ஆய்வுகள் நடத்தப்படவில்லை. தற்போது இரு மொழிகளுக்கும் இடையிலான இலக்கண ஒற்றுமையை ஆராய்ந்து வருகிறார் ஜப்பானில் வசிக்கும் தமிழர் கமலகண்ணன் சண்முகம்.

"தமிழ் மொழிக்கும் கொரிய மொழிக்கும் இடையில் இருக்கும் ஒற்றுமைகள் குறித்து நிறைய ஒப்பீட்டு ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் ஜப்பானிய மொழியுடன் ஒப்பிடும் ஆய்வுகள் நிறைய இல்லை. மூன்று மொழிகளையும் தெரிந்த அறிஞர்கள் இருந்தால், மேலும் சுவாரஸ்யமான ஒப்புமைகள் கிடைக்கும்," என்கிறார் கமலகணணன்.

 

தமிழ்நாட்டில் கோபிச்செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த அவர், ஜப்பானில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். மொழியின் மீது கொண்ட ஆர்வத்தால் ஜப்பான் மொழியைக் கற்றுக்கொண்டு, பெரியாரின் வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட தமிழ் நூல்களை ஜப்பானிய மொழியில் மொழிபெயர்த்துள்ளார்.

ஆறாம் நூற்றாண்டு முதல் பன்னிரண்டாம் நூற்றாண்டு வரையிலான ஜப்பானின் அரசர்கள் எழுதிய 100 செய்யுள்களை தமிழில் மொழிபெயர்த்து 'பழங்குறுநூறு' என்ற நூலாக வெளியிட்டுள்ளார். தமிழக அரசின் புலம்பெயர் தமிழர்களுக்கான விருதையும் அவர் சமீபத்தில் பெற்றுள்ளார்.

ஜப்பானிய மற்றும் தமிழ் மொழிகளைப் படிக்கும் போதே அவற்றின் ஒற்றுமை தெரியும் என்கிறார் பிபிசி தமிழிடம் பேசிய கமலகண்ணன்.

"தமிழ் மற்றும் ஜப்பானிய மொழிகளுக்கான இலக்கணம் 90% ஒரே மாதிரியாக இருக்கும். இரு மொழிகளையும் படிக்கும்போதே நாம் அதை உணர முடியும். இரு மொழிகளின் வாக்கிய அமைப்பு ஒரே மாதிரியானதாக இருக்கும்" என்கிறார் அவர்.

தமிழுக்கும் ஜப்பானிய மொழிக்குமான இலக்கண ஒற்றுமை

தமிழ் மொழிக்கும் ஜப்பானிய மொழிக்குமான இலக்கணத் தொடர்புகளில் முக்கியமான சிலவற்றைப் பற்றி கமலகண்ணன் பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார்.

தமிழுக்கும் ஜப்பானிய மொழிக்கும் இருக்கும் ஒற்றுமைகள் தெரியுமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

வாக்கிய அமைப்பு

வாக்கிய அமைப்பு இரு மொழிகளிலும் ஒரே மாதிரியானதாக இருக்கும், வாக்கியங்கள் வினைச் சொற்களில் முடியும்.

ஆங்கிலத்தில் I am eating an apple என்ற வாக்கியத்தை அதே வரிசையில் தமிழில் மொழிபெயர்த்தால், "நான் சாப்பிடுகிறேன் ஆப்பிள்" என்று எழுத வேண்டும். ஆனால், தமிழில் இந்த வாக்கியத்தை "நான் ஆப்பிளை சாப்பிடுகிறேன்" என்ற எழுதுவதே சரியாகும். இந்த வாக்கியம் "சாப்பிடுகிறேன்" என்ற வினைச் சொல்லுடன் முடிகிறது.

ஜப்பானிய மொழியில் இந்த வாக்கியத்தை "வத்தாஷி வா ரிங்கோ ஒ தபேத்தே இமாசு (Watashi wa ringo o tabete imasu)" என்று மொழிபெயர்க்கலாம். இந்த வாக்கியத்தைப் பகுத்து பார்த்தால், தமிழை போன்று இருப்பதைக் காணலாம்.

நான் – watashi wa

ஆப்பிள் - ringo

ஐ - o

சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் – tabete imasu

வார்த்தைக் கட்டமைப்பு

தமிழ்-ஜப்பானிய மொழி இலக்கணத் தொடர்பு
படக்குறிப்பு, கமலகண்ணன் சண்முகம்

தமிழில் 'செலுத்தப்படாததா' என்ற வார்த்தையைப் பிரித்து பார்த்தால், அது வினை, பிறவினை, செயபாட்டு வினை, எதிர்மறை, வினாவெழுத்து ஆகிய ஐந்து இலக்கணக் கூறுகளைக் கொண்டிருக்கும்.

ஜப்பானிய மொழியிலும் இதே கூறுகள் கொண்டதாக இந்த வார்த்தை உள்ளது. இது, இந்த வார்த்தைக்கு மட்டுமானது அல்ல. இரு மொழிகளின் வார்த்தைக் கட்டமைப்பில் உள்ள ஒற்றுமையைக் குறிக்கிறது.

  • செல்(தமிழில்) – வினை – இகு(ஜப்பானிய மொழி)
  • செலுத்த(தமிழில்) - பிறவினை (அதாவது விஷயம் அல்லது ஒருவரை வேறொரு விஷயம் அல்லது ஒருவர் செய்யச் செய்தல் என்று பொருள்) – இக சே(ஜப்பானிய மொழி)
  • செலுத்தப்பட(தமிழில்) - செயபாட்டு வினை – இக சே ராரே(ஜப்பானிய மொழி)
  • செலுத்தப்படாத(தமிழில்) – எதிர்மறை – இக சே ராரே நய்(ஜப்பானிய மொழி)
  • செலுத்தப்படாததா?(தமிழில்) – வினாவெழுத்து- இக சே ராரே நய் கா(ஜப்பானிய மொழி)

தமிழில் கேள்வியைக் குறிக்கும் வினா எழுத்து கடைசியில் வருவது போலவே ஜப்பானிய மொழியிலும் கடைசியில் வருகிறது.

பயன்பாட்டு ஒற்றுமை

தமிழுக்கும் ஜப்பானிய மொழிக்கும் இருக்கும் ஒற்றுமைகள் தெரியுமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரு வார்த்தையை நாம் தமிழில் எப்படிப் பயன்படுத்துகிறோமோ அதே போல ஜப்பானிய மொழியிலும் பயன்படுத்தப்படுவதைக் காணலாம். உதாரணமாக 'பார்' என்ற வார்த்தை எந்தெந்த பொருள்களில் தமிழில் பயன்படுத்தப்படுகிறதோ அதே போலவே 'மிரு' என்ற சொல் ஜப்பானிய மொழியில் பயன்படுத்தப்படுகிறது.

'கேள்' என்ற சொல்லுக்கு தமிழில் கேள்வி கேட்பது, பாடல் கேட்பது, ஒருவரின் வார்த்தைகளின்படி நடப்பது எனப் பல்வேறு பயன்பாடுகள் உள்ளன. இவற்றுக்கு ஆங்கிலத்தில் ask , listen, hear என வெவ்வேறு வார்த்தைகள் உள்ளன. ஆனால் ஜப்பானிய மொழியில் தமிழ் போலவே 'கிகு' என்ற ஒரே சொல் பயன்படுத்தப்படுகிறது.

  • கேள்வி கேள்(தமிழில்) – ask – கிகு(ஜப்பானிய மொழி)
  • உரையைக் கேள்(தமிழில்) –listen – கிகு(ஜப்பானிய மொழி)
  • ஒலியைக் கேள்(தமிழில்)-hear- கிகு(ஜப்பானிய மொழி)

அதே போன்று 'பார்' என்ற தமிழ் சொல்லுக்கு இணையாக 'மிரு' என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.

  • பூவைப் பார்(தமிழில்) – see – மிரு(ஜப்பானிய மொழி)
  • படத்தைப் பார்(தமிழில்) - watch – மிரு(ஜப்பானிய மொழி)

எண்களைக் குறிப்பதிலும் ஒற்றுமை

சென்னையில் ஜப்பானிய மொழியைக் கற்றுக்கொள்ளும் ஆர்வம் அதிகரித்து வருவதாக மொழியியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சென்னையில் ஜப்பானிய மொழியைக் கற்றுக்கொள்ளும் ஆர்வம் அதிகரித்து வருவதாக மொழியியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்

தமிழிலும் ஜப்பானிய மொழியிலும் எண்களைக் குறிக்கும் விதத்திலும் ஒற்றுமைகள் உள்ளன.

உதாரணமாக பதினொன்று என்பது பத்து + ஒன்று ஆகும். அதேபோல ஜப்பானிய மொழியில் ஜூ (பத்து) + இச்சி (ஒன்று) எனப்படும்.

அதே மாதிரி பன்னிரண்டு – பத்து + இரண்டு என்று எழுதுவது போல, ஜப்பானிய மொழியில் ஜூ (பத்து) + நி (இரண்டு) எனப்படும்.

இதே ஆங்கிலத்திலும் வட மொழியிலும் வெவ்வேறாக இருக்கும்.

வேற்றுமை உருபுகளைப் பொறுத்தவரையிலும்கூட, தமிழில் இருக்கும் ஐ, ஆல், கு, இன், அது, கண் ஆகியவற்றுக்கு இணையாக ஜப்பானிய மொழியில் வேற்றுமை உருபுகள் உள்ளன.

தமிழ் மூலம் ஜப்பானிய மொழியை அறியலாம்

"தமிழில் ஒரு வாக்கியத்தை எப்படி எழுதுகிறோமா, அதே மாதிரி ஜப்பானிய மொழியிலும் எழுதிவிடலாம். உதாரணமாக 'கண்ணன் கடைக்குச் சென்றான்' என்ற வாக்கியத்தை ஜப்பானிய மொழியில் உள்ள 'க்கு' இணையான வேற்றுமை உருபைப் பயன்படுத்தி அதேபோல எழுதிவிடலாம். எனவே தமிழர்களுக்கு ஜப்பானிய மொழி கற்றுக் கொள்வது எளிதாக இருக்கிறது" என்கிறார் தமிழ் மொழியை ஜப்பானிய மொழி மூலமும், ஜப்பானிய மொழியை தமிழ் மொழி மூலமும் 25 ஆண்டுகளாக கற்றுக் கொடுத்து வரும் சென்னையில் வசிக்கும் டாக்டர் வி.கணேசன்.

"நான் கடைக்குப் போகிறேன்' என்ற வாக்கியத்தில் அப்படியே ஜப்பானிய சொற்களைக் கொண்டு மாற்றி எழுதினாலே அது சரியாக இருக்கும். இதுவே ஆங்கிலத்தில் அப்படி எழுத முடியாது" என்கிறார் அவர்.

"பல வார்த்தைகள் தமிழிலும் ஜப்பானிய மொழியிலும் ஒரே மாதிரியானதாக இருக்கின்றன. தமிழ் தெரிந்தவர்களுக்கு ஜப்பானிய மொழி கற்றுக் கொள்வது மிகவும் எளிதாக இருக்கும். உதாரணத்துக்கு தமிழில் 'காரம்' என்பதற்கு ஜப்பானிய மொழியில் 'கராய்' என்று சொல்லப்படுகிறது.

அதே போன்று 'அண்ணன்' என்பதற்கு 'அனி' என்று சொல்லப்படுகிறது. இது போன்று நூற்றுக்கணக்கான வார்த்தைகள் உள்ளன," என்று விளக்கும் கணேசன், ஜப்பானிய மொழியைப் பொறுத்தவரை அதன் எழுத்துகளைக் கற்றுக் கொள்வதே கடினமாக இருக்கும் என்கிறார்.

தமிழ்-ஜப்பானிய மொழி இலக்கணத் தொடர்பு
படக்குறிப்பு, டாக்டர் வி கணேசகணேசன்

"ஜப்பானிய மொழியில் மூன்று விதமான எழுத்துகள் இருப்பதால், அதன் எழுத்துகளை அறிந்துகொள்வது சற்று கடினமாக இருக்கலாம். ஜப்பானிய மொழி வேற்று மொழிகளில் இருந்து பெறப்பட்ட வார்த்தைகளை எழுதத் தனியாக எழுத்துகளைக் கொண்டுள்ளது." என்கிறார்.

ஜப்பானிய நாட்டுப்புறக் கதைகளை தமிழில் மொழிபெயர்த்துள்ள அவர், தமிழின் கதைகளிலும் ஜப்பானிய கதைகளிலும் கருப்பொருள்கள் ஒன்று போலவே இருப்பதாகக் கூறுகிறார்.

"தமிழ்நாடு, ஜப்பான் இடையே கலாசார ஒற்றுமைகளும் காணப்படுகின்றன. நாட்டுப்புறக் கதைகள் மக்களின் வாழ்க்கை முறை, நீதி ஆகியவற்றைச் சொல்லும் கதைகளாக இருக்கின்றன. காஞ்சிபுரத்தை மிகவும் முக்கியமான ஆன்மீக தலமாகக் கருதும் ஜப்பானியர்கள் உள்ளனர்."

ஜப்பான் மொழி கற்றுக் கொள்வதற்கான ஆர்வம் தமிழர்களிடம் அதிகமாக இருப்பதாக டாக்டர் கணேசன் தெரிவிக்கிறார்.

"ஜப்பானில் வேலை வாய்ப்புகள் அதிகமாக உருவாகி வருகின்றன. சென்னையைச் சுற்றி 450 ஜப்பானிய நிறுவனங்கள் உள்ளன. ஏனெனில், ஜப்பான் நாட்டவர் சென்னையில் வந்து வசிக்கும்போது அவர்களுக்கும் தமிழ் மொழி கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது" என்கிறார்.

தமிழ்-ஜப்பானிய மொழிகளின் ஒப்பீடு குறித்த ஆய்வுகள்

'தமிழ் மொழிக்கும் ஜப்பானிய மொழிக்குமான ஒலி ஒற்றுமை (Sound correspondences between Tamil and Japanese)' என்ற நூலை டாக்டர் சுசுமு ஒஹ்னோ எழுதியுள்ளார்.

கடந்த 1979ஆம் ஆண்டு ஜப்பானில் வெளிவந்த இந்த நூலை உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் மறுபதிப்பு செய்திருந்தது. ஜப்பானிய மொழி அறிஞரான அவர், சென்னை பல்கலைகழகத்தில் 1979ஆம் ஆண்டு முதல் 1981ஆம் ஆண்டு வரை தமிழ் மொழி, அதன் மொழியியல், திராவிட மொழியியல் ஆகியவற்றைப் பயின்றார். அவரது ஆய்வுகளில், தமிழ் - ஜப்பானிய மொழி ஒப்புமையில் முக்கிய ஆய்வாகக் கருதப்படுகிறது.

சென்னை பல்கலைகழகத்தின் முன்னாள் துணை வேந்தர் டாக்டர் பொன்.கோதண்டராமன் இரு மொழிகளின் ஒப்பீட்டு ஆய்வை வெளியிட்டுள்ளார். இலங்கை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக இருந்த மனோன்மணி சண்முகதாஸ் இரு மொழிகளுக்கும் இடையிலான இலக்கணத் தொடர்புகள் குறித்து ஆய்வு செய்துள்ளார்.

தமிழ்-ஜப்பானிய மொழி இலக்கணத் தொடர்பு

தமிழுக்கும் ஜப்பானிய மொழிக்குமான தொடர்புகளுக்கு காரணம் என்ன?

புத்த மத பரவல் தமிழ் மொழிக்கும் ஜப்பானிய மொழிக்குமான தொடர்புகளுக்குக் காரணமாக இருப்பதாகக் கூறுகிறார் கமலகண்ணன்.

"தமிழ்நாட்டில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியிலும் ஜப்பானில் கண்டறியப்பட்ட முதுமக்கள் தாழியிலும் உள்ள பொருட்கள் ஒரே மாதிரியானவையாக இருந்தன. டம்ளர், ஈமச் சடங்குப் பொருட்கள் போன்றவை இரண்டிலும் கிடைத்தன. பேராசிரியர் சுசுமு ஒஹ்னோ தமிழின் சங்க இலக்கியங்களுக்கும் அதே காலகட்டத்தில் ஜப்பானிய மொழியில் வெளிவந்த இலக்கியங்களுக்கும் ஒற்றுமை இருப்பதை சுட்டிக் காட்டியுள்ளார்" என்கிறார் அவர்.

ஜப்பானிய மொழி, சீன மொழியைப் போல சித்திரங்களைக் கொண்டு எழுதப்பட்டாலும் இரண்டு மொழிகளும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை அல்ல என்று இரு மொழிகளுக்கும் இடையிலான ஒப்பீட்டு ஆய்வைச் செய்துள்ள, சென்னைப் பல்கலைகழக முன்னாள் துணை வேந்தர் டாக்டர் பொன். கோதண்டராமன் கூறுகிறார்.

அவர் எழுதிய நூலில், "சீன மொழியும் ஜப்பானிய மொழியும் ஒரே மூலத்தைக் கொண்டவை அல்ல. ஜப்பானிய மொழி வகைப்படுத்தப்படாத மொழியாகக் கருதப்பட்டது. ஜப்பானிய மொழியில் ஆறாம் அல்லது ஏழாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஆவணங்கள் உள்ளன. ஜப்பானிய மொழியில் உள்ள 'மான்யோஷு' என்ற தொன்மையான பாடல் தொகுப்பு, தமிழில் உள்ள சங்க இலக்கியத்துடன் நெருங்கிய ஒற்றுமைகளைக் கொண்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "தமிழுக்கும் ஜப்பானிய மொழிக்குமான ஒப்பீட்டு ஆய்வின் மூலம், திராவிட மொழிகளும் ஜப்பானிய மொழியும் ஒரே மூலத்தில் இருந்து வந்தவை என்று கூற முடியும். இரு மொழிகளுக்கும் இடையிலான தொடர்பு என்பது, ஒரு மொழி பிற மொழியிலிருந்து பெற்றுக்கொண்ட அம்சங்கள் எனக் கருத முடியாது. அதேபோன்று, அவை தற்செயலானவை என்றும் கருதிவிட முடியாது. அதற்குக் காரணம் இரு மொழிகளும் ஒரே மூலத்தில் இருந்து பிறந்தவை என்ப்தே" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கட்டுரை  ஏராளன். பகிர்வுக்கு நன்றி.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.